Monday, July 29, 2013

கோத்ராவில் அடிபட்டு இறந்த நாய்க்குட்டிகள்


ஏற்கனவே சுமார் பத்தாண்டுகள் போன்மோகன் சிங்கை வைத்து இந்தியாவை நன்றாக வெளிநாடுகளுக்குத் திறந்து விட்டு விட்டாயிற்று.. இங்கிருக்கும் மிடில் கிளாஸ் மக்கள் முதல் கீழ்த்தட்டு மக்களை இன்னும் நடுரோட்டிற்குத் தள்ளிவிட்டாயிற்று.. இப்போது போங்கிரஸ் மேல் மக்களுக்கு நம்பிக்கையே சுத்தமாகப் போய்விட்டிருக்கிறது.. போனியா, ராகுகால பூந்தி,  த்ரியங்கா போன்ற முகங்கள் ஸ்டார் கதா பாத்திரங்களாகவே இருந்தாலும் போங்கிரஸின் கதை போணியாகாது என்று ஒரு சம்சயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது அம்பானி, பிர்லா முதலான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மாற்றுக் கடவுளாகத் தெரிந்துகொண்டிருப்பவர் நம்ம பரேந்திர மூடி. போன் மோகன் சிங்குக்கு மவுசு போய்விட்டதால் அடுத்து புதிதாக ஹீரோவாக அறிமுகமாகிறார் இவர். எல்லாம் எதுக்கு ?அடுத்து இவரை பிரதமராக்கவும் செய்யலாம் ஒருவேளை வாய்ப்பிருந்தால்.. அடுத்த பத்து வருஷத்துக்கு மிச்சமிருக்கும் இந்தியாவின் கோவணத்தையும் அவுத்து அவுங்க கையில் கொடுக்க அடுத்த ஆள் ரெடி. இவரை சுமார் ஒரு இரண்டு வருடங்களாகவே குஜராத்தை சொர்க்கபுரியாக மாற்றிவிட்டார். அங்கு இருக்கும் விவசாயிகளெல்லாம் தங்கத் தட்டில் தான் சாப்பிடுகிறார்கள். வெள்ளித் தம்ளரில் தான் பால் குடிக்கிறார்கள் என்று சொல்லாத குறையாக விளம்பரங்கள் செய்துவருகிறார்கள்.

சாம்பிளுக்கு சில. உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கின் போது அதில் சிக்கிக் கொண்ட தனது குஜராத் மாநிலத்தவர்கள் 7500 பேரை நரேந்திர மோடி எப்படி காப்பாற்றினார் என்று நம்ம அம்மா அங்கு சிக்கிய நூறு தமிழர்களை எப்படி 'வீரசாகசம் புரிந்து' காப்பாற்றினார் என்று செயா டி.வி. விளம்பரப்படுத்துகிறதோ அதே போல பல மடங்கு திறமையாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். ஒரு கார்ட்டூன் படம் அதில் மோடி ஒரு சோட்டா பீம் போல நிற்கிறார். அவரது ஒரு கையில் 7500 பேர் இன்னொரு கையில் இன்னொரு 7500 பேர். அவர்களை அப்படியே அனுமார் போலப் பறந்து அவர்களைத் தூக்கி வந்து குஜராத்தில் இறக்கி விடுகிறார்.

இது மட்டுமல்ல. சீனாவின் பேருந்து நிலையம் ஒன்றின் புகைப்படத்தை எடுத்துப் போட்டுவிட்டு பேஸ்புக்கிலும், ஈமெயிலிலும் 'இங்கே பாருங்கள் அகமதாபாத் பேருந்து நிலையத்தை. மோடி எப்படி  மாற்றிவிட்டார்  பாருங்கள்' என்று ஃபார்வர்டுகள் செய்துவிட்டார்கள். இது போல மோடி குஜராத்தின் எல்லா கடன்களையும் அடைத்துவிட்டதோடு மேலும் வேர்ல்டு பேங்க்கில் கொஞ்சம் ஃபிக்ஸ்ட் டெபாஸிட்டும் போட்டுவைத்திருக்கிறார் என்று ஒரு கதை.  எல்லா கிராமத்துக்கும் கரண்ட் குடுத்தார். குழந்தைகள் மரணத்தை குறைத்தார். பெண்குழந்தைக் கொலையைத் தடுத்தார். மதிய உணவு கொடுத்தார்..  இப்படி எல்லாம் சொல்வார்கள். இவை எல்லாவற்றிற்கும் யோஜனா என்கிற பெயரில் எல்லா முதலமைச்சர்கள் போலவே அவரும் மக்கள் நலத் திட்டங்களை ஆரம்பித்திருக்கிறார் என்பதுதான் உண்மை. ஆனால் அதுக்குள்ளேயே எல்லாம் செய்து முடித்துவிட்டதாக பில்ட் அப். (நம்ம அம்மா ஆரம்பிக்கும் அதிரடி திட்டங்கள் முன்னால் இதெல்லாம் ஜூஜூபி). இவரை இப்படி விளம்பரப்படுத்தி 'மோடி பிராண்ட்'ஐ விற்கவென்றே 'ஆப்கோ வேர்ல்ட்வைட்' என்கிற அமெரிக்க விளம்பரக் கம்பெனியை வேறு மாதம் 12லட்ச ரூபாய் பணம் கொடுத்து வேலைக்கு வைத்திருக்கிறார் நம்ம மோடி.

இத்தகைய விளம்பரங்கள் அவருக்கு ஏன் தேவைப்படுகின்றன? 2002ல் நடந்த குஜராத் கலவரங்கள், சோராபுதீன் என்கவுண்டர் வழக்கு போன்ற விஷயங்களில் அவரின் இந்துத்துவ நச்சுப் பல்லின் விஷத்தால் இறந்து போன முஸ்லீம்கள் பல்லாயிரம், வீடிழந்தவர்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேல். அவர் குஜராத்தில் பண்ணிய ரத்தக் களரிக்கு தமிழ்நாட்டில் கூட அவர் வந்தால் பயந்து மிரள்கிறார்கள். அவரை எப்படி அடுத்த பிரதமராக்குவது ? அவரைப் பற்றி தெரிந்த எல்லோருக்கும் அவருடைய இந்துத்துவ வெறியும், ரத்தம் குடித்த கோரப்பற்களும் தான் தெரிகிறது இல்லையா ? அதை மறக்கடிக்கத் தான் இந்த விளம்பரங்கள்.


இவர் பிரதமராவதில் யாருக்கு என்ன லாபம் ?  இதற்குப் பதில் தெரிய மீண்டும் முதல் பாராவைப் படியுங்கள்.

குஜராத் கலவரத்தின் போது குல்பர்கா சொஸைட்டி என்கிற முஸ்லீம்கள் பகுதியில் வசித்து வந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான ஈஷான் ஜாப்ரியின் வீட்டில் அண்டை வீடுகளைச் சேர்ந்த சுமார் 150 முஸ்லீம்கள் அடைக்கலம் புகுந்து கொண்டனர். அவர் வீட்டைச் சூழ்ந்து கொண்ட இந்துத்துவா பயங்கரவாதிகள் அவரை வீட்டை விட்டு வெளியே வரச்சொல்லி மிரட்டியுள்ளனர். இல்லாவிட்டால் வீட்டுக்குள் கொளுத்தப்பட்ட சமையல் சிலிண்டர் வந்து விழும் என்று எச்சரித்தனர். முன்னாள் காங்கிரஸ் எம்பியாதலால் ஜாப்ரி தனது வீட்டு போனில் இருந்து நகரின் போலீஸ் கமிஷனர், பிஜேபி அமைச்சர்கள் என்று பலரையும் தொடர்பு கொண்டு உடனே வந்து கலவரக்காரர்களை விரட்டி விட்டு தங்களைக் காப்பாற்றும் படி கேட்டிருக்கிறார்.  மோடியின் ஆபீஸூக்கும் போன் செய்திருக்கிறார். ஆனால் யாரும் எடுக்கவில்லை (நான் இல்லன்னு சொல்லிடு - மணிரத்னத்தின் தளபதி பட டயலாக் ).  வேறு வழியின்றி தான் வெளியே வந்தால் வீட்டில் இருக்கும் யாரையும் எதுவும் செய்து விடவேண்டாம் என்று கேட்டபடி வீட்டிற்கு வெளியே சென்றார் ஜாப்ரி. அவருடைய உடல் இன்று வரை கிடைக்கவேயில்லை.

இதை மறக்கடிக்கத் தான் இந்த விளம்பரங்கள்.
  அப்போது வீராவேசமாகப் பேசிய மோடி இப்போதுபிரதம வேட்பாளராகப் போவதால் பம்மி பம்மி பேசுகிறார். இப்படிப் பம்மலாக அமுக்கிப் பேசியும் இப்போது நரேந்திர மோடிக்கு வந்திருப்பது புதுப் பிரச்சனை.  ஒரு பேட்டியின் போது 'கோத்ரா கலவரம் குறித்து வருத்தப்படுகிறீர்களா?' என்று கேட்கப்பட்டது. "அது மிக மோசமானதொரு நிகழ்வு. என் ஆட்சியில் இது நடந்தது என்பதற்காக நான் மிகவும் வெட்கித் தலைகுனிகிறேன். அதில் வாழ்விழந்த மக்களின் வாழ்வை மீட்டுத்தருவதையே என் லட்சியமாகக் கொண்டிருக்கிறேன்." இப்படியெல்லாம் அவர் பேசியிருப்பார் என்று நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு. அவர் என்ன சொன்னார் தெரியுமா ? "நாம் காரில் பயணம் செய்யும் போது அந்தக் காரில் ஒரு நாய்க்குட்டி அடிபட்டால் வருத்தப்படமாட்டோமா" என்று பேசியிருக்கிறார்.

இப்படி இறந்து போன மக்களை ஒரு நாய்க்குட்டியோடு ஒப்பிட்டுப் பேசியதற்காக அவர் மீது பாட்னா பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மோடி மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளாராம். இவர் உண்மையிலேயே மோடியின் இந்து மத வெறி முகத்தை வெளிக்கொண்டு வர இதைச் செய்தாரா இல்லை இதுவும் 'ஆப்கோ வேர்ல்ட்வைட்'ன் மோடி பிராண்ட்  விளம்பர யுத்திகளில் ஒன்றா ? அந்த குஜராத்தியம்மனுக்கே வெளிச்சம்.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.