Monday, March 23, 2015

காலம் தாழ்த்தும் தந்திரம் வாளேந்திய சிங்கள சிங்கத்தின் அரசியல் போர்வாள்! - ஜெயந்தரன்

காலம் தாழ்த்தும் தந்திரம்
அரசியலில் காலம் தாழ்த்தும் தந்திரம் (Delaying Tactics) என்பது ஒருவகை யுத்தமுறையாக பின்பற்றப்படுகிறது. கால தாமதப்படுத்தப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும். (Justice delayed is justice denied) என்பதற்கு அப்பால் அது நீதி நியாயம் உரிமை என்பனவற்றிற்கான கட்டமைப்பையே சல்லடையாக்கி விடுகிறது. பின்போடுதல் என்பதன் பொருள் இல்லை என்பதாகும். அதிக தாமதம் அதிக தீங்கானதாகும். சிங்களத் தலைவர்கள் தமிழரின் உரிமைகள் தொடர்பான விடயங்களை பின்போடுவதன் மூலம் அதனை தனித்து பின்பு பையவே இல்லாது அழித்துவிடுகிறார்கள். ஒன்றை அதிகம் தாமதப்படுத்துவதன் மூலம் அதனை அதற்குரியவர்களுக்கு தீங்கானதாக்கிவிடுகிறார்கள்.

காலதாமதப்படுத்தல் என்பது எப்போதும் அளவால் பெரிய இனத்திற்கு சாதகமானதாகவும் அளவால் சிறிய இனத்திற்கு பாதகமானதாகவும்
அமைந்துவிடுகிறது. ஆதலால் ஈழத்தமிழர் விவகாரத்தில் சிங்களத் தலைவர்கள் எப்போதும் காலதாமதப்படுத்தல் தந்திரத்தை ஈழத்தமிழருக்கு
எதிரான ஒரு முக்கிய ஆயுதமாக எப்போதும் வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் சிங்கள தலைவர்களிடமும் ஆட்சியாளர்களிடமும்
அரச இயந்திரம் அவர்களது கையில் இருப்பதினால் அதனை அவர்கள் ஒரு முக்கிய கருவியாக்கொண்டு அரச இயந்திரமற்ற தமிழ்மக்களை
காலதாமத்தால் இலகுவாக தோற்கடித்திட முடியும். அதாவது அரச இயந்திரத்தின் கூரிய வாளுக்கு தமிழர்கள் கொடுக்கும் காலதாமத வாய்ப்பு
இலக்காகி வெட்டுண்டு அந்த அரச இயந்திரத்தின் பாரத்துக்குள் அது நசிந்து அழிந்துபோய்விடும். ஆதலால் அரச இயந்திரம் உள்ளவர்களுக்கு
காலதாமதம் செய்யும் வாய்ப்பு ஏற்படும்போது அது இயல்பாகவே தமிழரின் இலக்கை அழித்துவிடும்.

இனவெறுப்பை தூண்ட  பௌத்தமதத்தை உபயோகப்படுத்துதல்
சிங்கள அரச இயந்திரம் தெளிவான சித்தாந்தங்களாலும் கோட்பாடுகளாலும் அதற்கு பொருத்தமான நடைமுறைகளினாலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 1972ஆம் ஆண்டு இலங்கை குடியரசின் அரசியல் யாப்பானது பின்வரும் மூன்று விடயங்களை அப்படியே உள்வாங்கி அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. 1956ஆம் ஆண்டு வெளியான பௌத்த ஆணைக்குழுவின் அறிக்கையை அப்படியே நிறைவேற்றிய யாப்பாக
இந்த யாப்பு காணப்படுகின்றது. அதாவது பௌத்தத்திற்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது (Betrayal of Buddhism) என்ற தலைப்புடைய இந்த
அறிக்கையானது எதிர்காலத்தில் இலங்கை அரசியலில் பௌத்தத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை
வற்புறுத்தியிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பௌத்தத்தை அரச மதமாக்கவேண்டும் என்றும் பௌத்த சாசன அமைச்சை உருவாக்க
வேண்டும் என்றும் பௌத்த நிறுவனங்களும் அமைப்புக்களும் ஓங்கி குரல் ஒலித்தன. இந்த அறிக்கை 1956ஆம் ஆண்டு தேர்தலை நிர்ணயிப்பதில்
பெரும் பங்கு வகித்தது. இவ்வறிக்கையின் அபிலாசையை அரசியல் யாப்பு ரீதியாக 1972ஆம் ஆண்டு யாப்பு உட்கொண்டிருந்தது. இதனை 1978ஆம்
ஆண்டு அரசியல் யாப்பு மேலும் வலுவுடன் முன்னெடுத்தது.

பௌத்தம் இலங்கையின் முதன்மையான மதம் என்றும் அதனை பேணிப்பாதுகாப்பதும் கட்டிவளர்ப்பதும் அரசின் பொறுப்பும் கடமையும் என்று
இந்த யாப்பு கூறுகிறது. இதன் மூலம் ஏறக்குறைய பௌத்தம் அரச மதம் என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டது என்பதே உண்மை.1953ஆம் ஆண்டு டி.சி.விஜயவர்த்தன எழுதிய விகாரையில் புரட்சி (Revolt in the Temple) என்ற நூலும் அதே ஆண்டு வெளியான ஆதர் விஜயவர்த்தன தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்க பாஷை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையும் 1956ஆம் வெளியான மேற்படி பௌத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இணைந்து சிங்கள மக்களினதும் சிங்கள தலைவர்களினதும் அரசியல் மனப்பாங்கை தீவிர வலுவுடன் வடிவமைத்தனர். இம்மூன்று நூல்களும் இன மத விரோதங்களையும் சகிப்புத்தன்மையின்மையையும் பரந்து பட்ட சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்குவதில் பெரும் பங்குவகித்தன.

மஹாவம்சத்தின் பங்கு
ஏற்கனவே நீண்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றுப் பகை உணர்வை சுமந்த ஒரு நூலாக மகாவம்சம் காணப்படுகிறது. அந்த நூலில்
இருந்து இன மத பகைமையும் விரோதமும் கருவாக பெறப்பட்டு நவீன இனவிரோத வரலாற்றுக்கு ஏற்ப வடிவமைப்பட்டன. சிங்கள அறிஞர்களினதும் ஆராய்ச்சியாளர்களினதும் எழுத்தாளர்களினதும் தீவிர பங்களிப்புடன் இனவாத அரச இயந்திரம் கட்டமைக்கப்பட்டது.
ஆதலால் இந்த அரச இயந்திரமானது தமிழின வெறுப்பையும் அழிப்பையும் தமது இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்ற வகையில் தமிழின பகைமையும் தமிழினத்தை அழிக்கும் மனப்போக்கும் சிங்கள மக்களின் மனங்களில் ஒரு தர்மமாக நியாயமாக கடமையாக வளர்ந்துள்ளது. இதனை பிரதிப்பலிப்பதும் நிறைவேற்றுவதும்தான் எந்த ஒரு சிங்களத் தலைவர்களினதும் எந்த ஒரு சிங்கள அரசாங்கத்தினதும் பணியாகிறது. அதலால் சிங்கள அரச இயந்திரம் அந்த அரச இயந்திரத்திற்கு பின்னால் உள்ள மூளைகள் அதற்கு இசைவான நிர்வாக கட்டமைப்புக்கள் இவற்றை முன்னெடுக்கவல்ல தலைவர்கள் அதன் வழி அரசாங்கங்கள் என்ற அனைத்தையும் ஒன்றில் இருந்து இன்னொன்றை பிரித்துப்பார்க்காது அனைத்தையும் ஒரு திசை வழி இலக்கென பார்க்க வேண்டும்.

அரசியலை மேடையில் காட்சியளிக்கும் தலைவர்களின் சந்தர்ப்பவாத வார்த்தைகளுக்கு உள்ளால் அரசியலை பார்க்காது அதனை அரச இயந்திர
கட்டமைப்புக்கு உள்ளாலும் அந்தக் கட்டமைபுக்குரிய மூலச் சித்தாந்தம் கோட்பாடு என்பனவற்றிற்கு ஊடாகவும் அது வரலாற்று நடைமுறையில்
ஈட்டியிருக்கும் வெற்றி அடைந்திருக்கும் ஸ்தானம் என்பவற்றிற்கு ஊடாகவும் எடைபோடவேண்டும். அப்படி எடை போட்டால் நுனிப்புல் மேயும்
அரசியல் கண்ணோட்டத்திற்கு உட்படாமல் வெறும் சலசலப்பு தளம்பல் அரசியலுக்கு பலியாகாமல் ஏமாற்று வித்தைகளுக்குள்ளும் காலம் தாழ்த்தல்களுக்கு உள்ளும் சிக்குண்டு அழியாமல் ஈழத்தமிழரை பாதுகாப்பதற்கான வழிகளைத் தேட முடியும்.

ராஜபஷ எனும் சுனாமி
ராஜபக்ஷ அரசாங்கம் ஓர் அகால தோல்வி அடைந்துவிட்டது. இந்த தோல்வி ஒரு பெரும் அதிசயம் போல் தோன்றுகிறது. ஆனால் சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் இந்த தோல்வியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதேவேளை சிங்களமக்கள் மத்தியில் இருந்து ராஜபக்ஷவுக்கு 60 வீத வாக்குகள் கிடைத்துள்ளன. ராஜபக்ஷ தோல்வியடைந்தது அதிசயம் போல் தோன்றுவதை விடவும் உண்மையான அதிசயம் இனிமேல்தான் நடக்க இருக்கிறது.

இதுபற்றி முதுபெரும் ஆங்கில பத்திரிகையாளரான டி.மஹிந்தபாலா The Birth and Rise of the Nugegoda Man என்ற ஆங்கில கட்டுரையில் மகிந்த ராஜபக்ஷ ஓரு சுனாமியாய் அதாவது ஆழிப்பேரலையாய் இப்பொழுது இருக்கும் அரசாங்கத்தை நடைபெறவுள்ளதாக கூறப்படும் எதிர்வரும் சூலை நாடாளுமன்றத் தேர்தலில் அடித்துச் சென்றுவிடுவார் என்று கூறுவதன் மூலம் நிகழவிருக்கும் அதிசயத்தை இப்போதே ஆருடம் கூறுகிறார்.

சிங்கள மக்களின் மனப்பாங்கை புரிந்துகொண்ட அனுபவம் வாய்ந்த ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் இவர் கூறும் ஆருடத்தை நாம் புறந்தள்ள முடியாது. அதாவது பிப்ரவரி 18ஆம் தேதி நுகேகோடவில் நடந்த மாபெரும் பேரணியில் லட்சக்கணக்கில் சிங்கள மக்கள் பெரு வெள்ளமென திரண்டதாகவும் இது ஆழிப்பேரலையாய் இப்போது இருக்கும் அரசாங்கத்தை சூலை மாதத்தில் அடித்துச் சென்றுவிடும் என சிங்கள பேரினவாத மனப்பாங்கிற்கு ஊடாக அவர் அதனை விளக்குகிறார்.

47 வேறுபட்ட கட்சிகளும் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யும் இந்திய உளவு அமைப்பான றோவும் சர்வதேச தொண்டர் ஸ்தாபனங்களும் இணைந்து மக்கள் எதிர்பாராத விதமாக இரகசிய சதிகாரத்தனமாக ராஜபக்ஷாவை வீழ்த்தி விட்டதாகவும் ஆனால் ராஜபக்ஷாவோ வெளிப்படையான மக்கள் வெள்ளத்தொடர் எழுச்சிபெற தொடங்கிவிட்டதாகவும் அக்கட்டுரையில் அவர் விவரிக்கிறார். மேலும் ஜனவரி மாதம் நிகழ்ந்த ஜனாதிபதித் தேர்தல் 1960ஆம் அண்டு மார்ச் மாதம் நிகழ்ந்த நாடாளுமன்ற தேர்தல் மூலம் டட்லி செனநாயக அரசாங்கம் அமைத்ததுடன் ஒப்பிட்டு பின் அதே ஆண்டு சூலை மாதம் நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தலில் டட்லி தோற்கடிக்கப்பட்டு ஸ்ரீமாவோ பண்டாரநாயக வெற்றிபெற்று அரசு அமைத்தது போல ராஜபக்ஷவின் ஜனவரி தோல்வியையும் சூலையில் வெற்றி பெறக்கூடும் என்பதையும் அக்கட்டுரை விவரித்தது. இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில் சிங்கள இனவாத அரசியல் மனப்பாங்கை பற்றி மேற்படி மஹிந்தபால கொண்டிருக்கும் கண்ணோட்டமும் அது மேலும் வீரியத்துடன் எழுச்சிபெறும் என்ற அவரது கருத்தான அடிப்படைகள் புறந்தள்ளப்பட முடியாதவை என்பதுதான்.

இன அழிப்புத் தன்மையோடு வடிவமைக்கப்பட்டு வலுப்பெற்று ஸ்தாபிதம் அடைந்திருக்கும் சிங்கள அரச இயந்திரம் பற்றிய அரசியல் உடற்கூற்றினை (Poitical Anatomy) புரிந்துகொள்ளாமல் அதுபற்றிய அரசியல் பார்வை இல்லாமல் எழுமாத்திரத்தில் அரசியல் அணுகுமுறைகளை மேற்கொண்டால் அது தமிழ்மக்களுக்கு புதைகுழி தோண்டுவதாகவே அமையமுடியும்.

போர்க்குற்ற விசாரணையை நீர்த்துப் போகச்செய்ததில் சிங்களம் அடைந்த வெற்றி
‘போர்குற்ற விசாரணையை’ ஒத்திபோட்டமை என்பது இனவாத சிங்கள அரசுக்கு கிடைத்த வெற்றியும் அதன்பொருட்டு தற்போதைய சிறிசேன அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியும் இறுதியில் இராஜபக்ஷவுக்கு கிடைத்த வெற்றியும் ஒட்டுமொத்தத்தில் சிங்கள இனப் படுகொலையாளர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியுமாகும்.

இனப்படுகொலை ஒரு தனிநபருடையதல்ல. அது சகல சிங்கள இனத்தவருடையதுமான ஆதரவுடனும் விருப்பத்துடனும் வரவேற்புடனும் அரங்கேறிய ஒரு கூட்டுமன இனப்படுகொலையாகும். அதற்கான விசாரணையை இல்லாமல் செய்வதில் சிங்கள அரசும் சிங்கள இனவாதமும்
வெற்றி பெற்றுவிட்டன என்பதே உண்மையாகும்.

இங்கு சந்திரிகா-சிறிசேன-ரணில் அரசாங்கம் பதவியில் இருக்கின்றதோ அல்லது இல்லையோ என்பதல்ல பிரச்சனைமீண்டும் ராஜபக்ஷ பதவிக்கு வருவாரா இல்லையா என்பதல்ல பிரச்சனை. யார் பதவியில் இருந்தாலும் ‘போர்க்குற்ற விசாரணையை’ பின்போடுவதில் வெற்றி பெற்றுவிட்டனர் என்பதே தந்திரம். இது ஒட்டுமொத்த சிங்கள இனப்படுகொலை கலாச்சாரத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

அரசற்ற படுகொலைக்கு உள்ளான அப்பாவி தமிழ் மக்களை உலக அரங்கில் உள்ள அனைத்து அரசுகளும் சிங்கள அரசு சார்ந்த தத்தம் அரச நலன் கருதி கைவிட்டுவிட்டன. இந்தவகையில் நீதி நியாயங்களுக்கு அப்பாலான அரச நலன் சார்ந்த சர்வதேச உறவு நிலையைப் புரிந்து கொண்டு ஈழத்தமிழரின் உரிமைகளை நிலைநாட்டவல்ல அரசியல் ராஜதந்திர வியூகங்களுக்கு ஊடாக ஈழத்தமிழர்களின் உரிமைகளையும் நியாயங்களையும் நிலைநாட்டுவதற்குரிய வழிவகைகளை கண்டறிய வேண்டும். இதில் அதிக பொறுப்புணர்வுடனும் புதிய சிந்தனையுடனும் புத்திக்கூர்மையுடனும் ஆழ்ந்த அரசியல் ஞானத்துடனும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு ஈழத்தமிழர் செயற்பட வேண்டும். கரையான் புற்றெடுத்ததுபோல சிங்கள மேலாத்திக்க அரசியல் தமிழ்மக்கள் மீது புற்றெடுத்து தமிழ்மக்களின் தேசிய தன்மையையும் வாழ்வையும் சல்லறையாக்கிவிட்டது. உரிமை, பண்பாடு , அடிமைநிலை என்பனவற்றை புரிந்து கொள்ளவதற்கென ஒரு மனமும் அதற்கான பார்வையும் வேண்டும். ‘ஒருவன் தான் அடிமையாய் இருக்கின்றேன் என்பதை புரிந்துகொண்டாலே அவர் அரைவாசி விடுதலையடைந்துவிடுகிறான்’.

இந்தவகையில் தமிழ்மக்கள் காலதாமதப்படுத்தும் அரசியல் மூலம் மேலும் மேலும் அடிமையாக்கப்படுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் சிந்தனை தேவைப்படுகிறது. இந்த ‘போர்க்குற்ற விசாரணையை’ தாமதப்படுத்துவதன்மூலம் மட்டுமன்றி கடந்த 75 ஆண்டுகாலப் பகுதியில் இதேபோல எல்லா வகைகளிலும் அனைத்து துறைகளிலும் காலதாமதப் படுத்தும் தந்திரத்தை பிரயோகித்து தமிழ் மக்களை கருவறுப்பதை சிங்கள இனவாதம் தொடர் வெற்றிகளை ஈட்டிவருகிறது. அதிக தாமதம் அதிக ஆபத்தானதும் அதிக தீங்கானதுமாகும். இனி அடுத்தது என்ன என்ற கேள்வியை தமிழ்த்தரப்பு தன் நெஞ்சில் நிறுத்தி புதிய வழியில்; சிந்திக்க வேண்டும்.
 - ஜெயந்தரன்

Monday, March 2, 2015

இராஜபக்ஷவின் இராணுவ வெற்றியை அரசியல் வெற்றியாக்கும் சிறிசேன! -- ஜெயந்தரன்

அரசியல் அழிப்புக்கு வழிகோலும் இராணுவ அழிப்பு; இராணுவ அழிப்பை பின்தொடரும் அரசியல் அழிப்பு; இராணுவ அழிப்பின் மறுபக்கம் அரசியல்
அழிப்பு; இராணுவ வெற்றித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்படும் அரசியல் மாளிகை. இதுதான் இன்றைய ஈழத்தமிழர் அரசியல் நிலைகுறித்து
சொல்லப்படக்கூடிய கருத்தோட்டமாகும்.

அரசியலை சம்பவங்களுக்கு ஊடாக அன்றி அதன் தர்க்கபூர்வ வளர்ச்சிப்போக்குக்கு ஊடாக அடையாளம் காணவேண்டும்.
சிங்கள உயர்குழாத்தின் அரசியல் அகராதியில் மிகத்தெளிவான ஒற்றை இலக்கு மட்டுமே உள்ளது. அதாவது தமிழினத்தை எவ்வாறேனும்
அழித்தொழித்துவிடுவது என்பதாகும். இதில் காலகட்ட சூழலுக்கு ஏற்ப சிங்களத் தலைமைகள் ஐக்கிய தேசிய கட்சியோ அல்லது சுதந்திர கட்சியோ
ஜனதா விமுக்தி பெரமுனவோ இடதுசாரிகளோ வலதுசாரிகளோ எக்கட்சியினராயினும் தமிழினத்தை அழித்தொழிப்பதில் ஒரே இலக்கை
கொண்டுள்ளனர். பயங்கரவாத ஒழிப்பு என்பதன் பேரில் மேற்படி அனைத்துத்தரப்பினரும் ஒருமுகமாக நின்று ஒத்த கருத்துடன் கைகோர்த்து நின்று இராணுவ ரீதியாக தமிழினத்தை அழித்ததில் முழுப்பங்கு வகித்தனர். இங்கு அரசியலை அதன் செயல்பூர்வ வளர்ச்சி நிலையில் வைத்து நாம்
புரிந்துகொள்ள வேண்டும்.

சிங்களத் தரப்பில் ஈ எறும்பு கூட மிச்சமின்றி அனைவரும் கட்சிவேறுபாடுகளைக் கடந்து சித்தாந்த வேறுபாடுகளைக் கடந்து முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு செயல்பூர்வமாக ஆதரவளித்தனர். சிங்கள பௌத்த மத நிறுவனங்கள் சமூக நிறுவனங்கள் அரசாங்க நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் பல்கலைக்கழங்கள் பாடசாலைகள் பத்திரிகைகள் வானொலிகள் தொலைக்காட்சிகள் என அனைத்தும் ஒன்றுகூட மிச்சமின்றி
ஏகோபித்த குரலில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு ஆதரவளித்தன.

தமிழனத்தை ஒடுக்குவது என்பது சிங்கள மக்களின் ஒரு கூட்டுமன முடிவாகும். இது அரசியல், வரலாற்று மற்றும் அறிவியல் அர்த்தத்தில் அதிகம் ஸ்தாபிதம் அடைந்துள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூலம் தான் அடைய விரும்பிய இலக்கை இராணுவ அர்த்ததில் சிங்கள அரசு
அடைந்துள்ளது. ஆனால் அது அரசியல் அர்த்ததில் முன்னெடுக்கப்பட்டு முழுமைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.தமிழினத்தை அழிப்பது பற்றிய சிங்கள இனவாத்தின் இலக்கை 100 புள்ளிகள் என எடுத்துக்கொண்டால் இராஜபக்ஷ தான் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் அதில் 49 புள்ளிகளை அடைந்துவிட்டார். அதாவது 49ஆவது படியில் ஏறிவிட்டார். அந்த இடத்தில் இருந்து 50ஆவது புள்ளியை அல்லது 50ஆவது படியில் ஏறவேண்டிய தேவை அரசியல் அர்த்தம் கொண்டதாக இருந்தது. ஆனால் இராஜபக்ஷவின் கரங்கள் இனப்படுகொலையால் இரத்தம் தோய்ந்திருந்த நிலையில் அதன் அடுத்தகட்ட தேவையான அரசியல் வெற்றியை அதாவது சிங்கள இனவாத தேரோட்டத்தை நடத்த முடியாதவாறு இருந்தது. இந்நிலையில் சிங்கள இனவாதம் அரசியல் தளத்தில் முன்னேறவேண்டிய தேவையை பூர்த்தி செய்வதற்கு பார்வைக்கு முள்ளிவாய்க்கால் படுகொலையில் இரத்தம் தோயாத ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா, சிறிசேன போன்றவர்களின் அரசியல் வருகை அவசியப்பட்டது. அது இப்போது அவர்களுக்கு கைகூடியிருக்கிறது என்பதை அரசியல் ரீதியாக புரிந்துகொள்வதே சரியானதாகும்.

அதாவது இனப்படுகொலைக்கான இராணுவ நடவடிக்கை இனவாதம் வீறுநடைபோடுவதற்கு எதிராக இருந்த அனைத்து தடைகளையும்
நீக்கிவிட்டது. இதனை விரிவாக கூறுவது என்றால் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு, பிரதேசம், மக்கள் செறிவு, குடியடர்த்தி மற்றும் சமூக
நிறுவனங்கள், அரசியல் கட்டுமானங்கள் என்பனவற்றை அழிப்பதற்கு அவர்கள் மத்தியில் எழுந்த பல்வகைப் போராட்டங்கள் மற்றும்
ஆயுதப்போராட்டம் என்பன தடையாக இருந்தன. இத்தகைய தடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைக்குப் பெயரே இராணுவ நடவடிக்கையாகும். இத்தகைய இராணுவ ரீதியான இனப்படுகொலையின் மூலம் சிங்கள இனவாதம் தமிழ்மக்கள் மத்தியில் இருந்த அனைத்துவகையான சமூக அரசியல் போராட்ட கட்டுமானங்களையும் கூடவே மக்களையும் அழித்தொழித்து உளவியல் ரீதியான ஒரு யுத்தப் பீதியையும் தோல்வி மனப்பாங்கையும் ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் இவ்வாறு இராணுவ ரீதியாக திறக்கப்பட்ட இவ்வினவாத தளத்தின் மீது அரசியல் ரீதியாக மேற்கொண்டு இனவாதத்தை முன்னெடுக்கவேண்டிய அவசியம் சிங்கள இனவாதத்திற்கு உண்டு.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையால் சிங்கள இனவாதம் களங்கப்பட்டுள்ளது. உலக அரங்கில் அது அவமானப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தகைய களங்கம் ஒரு சிலரின் செயல்தான் என்று காட்டி அக்களங்கத்தை சிங்கள இனத்தி;ற்கு உரியதல்லாததாக்க வேண்டிய தேவை சிங்கள இனவாத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜபக்ஷ, கோத்தபாய போன்ற ஒருசிலரின் மீதுமட்டும் விரலைச் சுட்டிக்காட்டி இவ்வின அழிப்புக்
குற்றத்தில் ஈடுபட்ட சிங்கள அரச இயந்திரத்தையும் அதன் பின்னால் இருந்த அனைத்துவகை மூளைகளையும்ää ஊடகங்களையும், அமைப்புக்களையும் இனவாத சிங்கள வெகுஜன மனப்பாங்கையும் மற்றும் இனவாத தலைவர்களையும் விடுவித்து காப்பாற்றும் செயலில் சந்திரிகா,
ரணில், சிறிசேன, ஜேவிபி, ஹெலஉறுமய போன்றவர்கள் தேர்தல் களத்தில் ஈடுபட்டனர்.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை படுகொலையை ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் கனகச்சிதமாய்
நிறைவேற்றியது. அதில் அமைச்சராக இருந்த ஒருவர் ரணில் விக்கரமசிங்க. அந்த கறுப்பு ஜுலை படுகொலைக்காக ஐக்கிய தேசிய கட்சியினர்
கவலைப்பட்டதோ அல்லது மன்னிப்புக்கேட்டதோ அல்லது அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ அன்றி நிவாரணமோ வழங்கியது இதுவரையிலும் கிடையாது.அதன்பின்பு சந்திரிகா தலைமையில் பதவிக்கு வந்த சுதந்திர கட்சி அரசாங்கம் மேற்படி கறுப்பு ஜுலை படுகொலைக்காக மனிப்புக்கோரியதோ, நீதி வழங்கியதோ அன்றி நிவாரணம் வழங்கியதோ கிடையாது. ஆனால் அதற்கு மேலாக சந்திரிகா அரசாங்கம் இராணுவ ரீதியாக செம்மணி படுகொலையை அரங்கேற்றியது. 600 அப்பாவி தமிழ்மக்கள் செம்மணியில் ஆண், பெண் வேறுபாடின்றி இராணுவத்தால் படுகொலை செய்து புதைக்கப்பட்டனர்.
இதில் ஒன்று கிருசாந்தி எனும் பள்ளி மாணவி பாடசாலை சென்று திரும்பும் வழியில் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு குழு பாலியியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் கூடவே அவரது தாயும் சகோதரனும் அயலவரும் படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர். இப்படி கிழக்கு மாகாணத்திலும் கோணேஸ்வரி என்னும் அப்பாவி இளம்பெண் இராணுவத்தால் பிடிக்கப்பட்டு பாலியியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின் அவரது பெண்ணுறுப்பில் கைக்குண்டு வெடிக்க வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பதும் சந்திரிகாவின் ஆட்சியில் நிகழ்ந்தது.

சந்திரிகாவின் பின் பதவிக்கு வந்த அவரது அதே சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த ராஜபக்ஷ சிங்கள மக்களினதும் அனைத்து சிங்கள கட்சிகளினதும்
ஒட்டுமொத்த மனஅபிலாசையான இனப்படுகொலையை முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றினார். இதில் சுமாராக ஒன்றரைலட்சம் தமிழ் மக்களை கொன்றொழிப்பதன் மூலம் இவ்வினப்படுகொலை நிறைவேற்றப்பட்டது. ஆனால் இவ்வினப்படுகொலையை ராஜபக்ஷதான் தொடக்கி நிறைவேற்றினார் என்றில்லை. இதற்கு முன் மேற்படி பலகட்சிகளினாலும், ஆட்சியாளர்களாலும் தொடக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்ததை ராஜபக்ஷ நிறைவேற்றி வைத்தார் என்பது மட்டுமே உண்மை.இதனை சற்று தெளிவாக நோக்குவோம்.

1945ஆம் ஆண்டு இராண்டாம் உலக மகாயுத்தம் முடிந்ததைத் தொடர்ந்து மலேசியாவில் கம்யூனிஸ்டுக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மலேசியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமாராக 20 வீதத்தினர் சீன இனத்தவராவர். இந்த சீன இனத்தவர் மத்தியில்தான் கம்யூனிஸ்டுக்களின்
ஆயுதப்போராட்டம் பெரிதும் வளர்ந்திருந்தது. அப்போது அங்கு ஆட்சியிலிருந்த பிரித்தானியர் இதற்கு எதிராக கடுமையான இராணுவ
நடவடிக்கையில் ஈடுபட்டனர். பிரித்தானிய தளபதிகளான டெம்பளர், பிரிஜ் என்பவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் கம்யூனிஸ்டுக்கள் முற்றாக தோற்கடிக்கப்பட்டதுடன் கூடவே சீன இனமும் ஒடுக்கப்பட்டுவிட்டது. இந்த இராணுவ நடவடிக்கையை பிரிஜ் என்ற தளபதியின் பெயரால் பிரிஜ் திட்டம்  என அழைப்பர். பிரிஜ், டெம்பளர் போன்ற தளபதிகளின் இராணுவ நடவடிக்கையை பிரதிபண்ணி தமிழினத்தை அழித்தொழிப்பதற்கான ஒரு இராணுவ திட்டத்தை அப்போது இலங்கையின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அதுலத்முதலி 1987ஆம் ஆண்டு ஆப்பரேஷன் லிபரேஷன் என்றதன் பேரில் முன்னெடுத்தார். இதனை மூன்று கட்டங்களாகப் பிரித்து முதலாவது கட்டமாக ஆப்பரேஷன் வடமராச்சி என்ற இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டார்.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என அப்போது இந்திய அரசு எதிர்த்தது.இப்பின்னணியில் முதலாம் கட்டத்திற்கு அப்பால் இவ் இராணுவ நடவடிக்கையை சிங்கள அரசால் தொடரமுடியாமல் போனது. வடமராட்சியில் தமிழ்மக்களின் இரத்தம் ஆறாக ஓடியது. இலட்சக்கணக்கில் மக்கள் அகதிகளாயினர். ஒருவகையில் வடமராட்சி சுடுகாடானது. ஆனால் இந்த இராணுவ நடவடிக்கையை வடமராட்சியோடு நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அப்போது ஜே.ஆர் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதால் அதனை அவர்களால் அடுத்த அடுத்த கட்டங்களுக்கு தொடரமுடியாது போனது. இது இனவாதம் தன் இறுதி இலக்கை அடையமுடியாது போன ஒரு காலகட்ட நிலை. ஆனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழல் தனக்கு சாதமாக இருந்த நிலையில் ஜே.ஆர்.அரசாங்கத்தால் வடமராட்சியில் முன்னெடுக்கப்பட்ட
மலேசிய பாணி பிரிஜ் இராணுவ திட்டத்தை ராஜபக்ஷ முள்ளிவாய்க்காலில் நிறைவேற்றி வைத்தார் என்பதே உண்மை. அப்போது 1987ஆம் ஆண்டு

ஜே.ஆர். அரசாங்கத்தில் லலித் அதுலத்முதலியால் இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்பு 2009ஆம் ஆண்டு ராஜபக்ஷ
அரசாங்கத்தில் கோட்பயாவால் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலைக்கான இராணு நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திரகட்சியும் இதில் ஒரேமாதியாக செயல்பட்டுள்ளதுடன் கூடவே இடதுசாரி என தம்மை கூறிக்கொள்ளும் தீவிர
இனவாதிகளான ஜே.வி.பி.யினர் ராஜபக்ஷவுடன் மேற்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் தம்மையும் இத்தகைய இனப்படுகொலை
வரலாற்றில் ஒரு பங்குதாராக தவறவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் ரணில், சுதந்திர கட்சியின் சந்திரிகா, சிறிசேன, ஜே.வி.பி. என ஆகிய அனைவருமே ராஜபக்ஷவிடம் இருந்து பிரித்து
வேறுபடுத்தி பார்க்கக்கூடியவர்கள் அல்லர். மேற்படி அனைவரும், அனைத்துக் கட்சியினரும் ஒரு தமிழருக்கு எதிரான ஒரு முழுநீள இனவாதத்தின் தொண்டர்களாய் அவ்வப்போதைக்கு உரிய காலகட்ட பங்குகளை ஆற்றியுள்னர். தற்போது முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூலம் சிங்களப் பேரினவாதம் தெளிவாக களங்கபபட்டு அம்பலப்பட்டிருக்கும் போது அதற்கான பொறுப்பு ராஜபக்ஷவை மட்டுமே சாரும் என்பதுபோல ராஜபக்ஷவை கறுப்பு பூனையாக சுட்டிக்காட்டி தாம் அனைவரும் வெள்ளைப்பூனைகள் என மேற்படி நபர்களும் கட்சிகளும் காட்சியளிக்கும் ஒரு நாடகம் இப்போது அரங்கேறியிருக்கிறது. உண்மையான அர்த்தத்தில் இனவாதமானது முள்ளிவாய்க்கால் படுகொலை சாதித்த ஏற்படுத்திய வெற்றித்தளத்தை அடுத்த கட்டத்திற்கு அரசியல் ரீதியில் நகர்த்துவதற்கான இன்னொரு பரிணாம வளர்ச்சியாக தன்னை இனி மேலும் முன்னெடுக்கப்போகிறது என்ற ஆபாயத்தை தமிழ் மக்களும் சர்வதேச சமூகத்தினரும் புரிந்தாகவேண்டும்.

அரசியலை மேலெழுந்தவாரியாக் பார்க்காது அரசியலின் அரசியலையம் (Politics of Politics) அரசியலின் மறுபக்கத்தையும் (Other side of Politics) நாம்
பார்க்க கற்றுக்கொள்ள வேண்டும். அரசியலானது ஒரு சிறப்பு தேர்ச்சி மிக்க வித்தை; அது ஒரு கலை; அது ஒரு முறைமை. இயந்திரமானது தனக்கென
ஒரு இயங்கும் முறைமையை கொண்டிருக்கிறது. ஒரு வண்டி தனக்குரிய இயங்கும் முறையை கொண்டிருக்கிறது. அந்த வண்டியின் முறைமைக்கு
உட்பட்டுத்தான் அந்த வண்டியை ஓட்ட முடியும். எழுமாத்திரத்தில் அந்த வண்டியை ஓட்ட முற்படுவது அல்லது மனம்போன போக்கில் ஓட்ட
முற்படுவது என்பது தற்கொலைக்கு ஒப்பான செயல்.
அரசியல் ஒரு முறைமைப்படி இயங்குவதால் அதனை எழுமாத்திரத்திலோ அல்லது மனம்போன போக்கில் இயக்கினால் அந்த இயந்திரத்தின்
முறைமைக்குள் சிக்குண்டு அதற்கு நாம் இரையாக நேரும் அல்லது பலியாக நேரும். ஈழத்தமிழர் அரசியலில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக
இத்தகைய எழுமாத்திர அரசியல் போக்கே மேலோங்கியிருக்கிறது. பொதுவாக ஈழத்தமிழர் தரப்பில் அரசியலை வாழ்வாக கொண்ட முழுநேர
அரசியல் தலைமைகள் இருந்ததில்லை. பகுதிநேர தலைவர்களின் தலைமையில் அரசியல் முன்னெடுக்கப்பட்ட வரலாறே பெரிதும் இருந்ததால்
அத்தகைய தலைவர்களால் ஆழ்ந்த அறிந்த அரசியலில் ஈடுபடுவதற்கான நேரமோ வாய்ப்போ அவர்களுக்கு இருக்கவில்லை. குறிப்பாக 1977ஆம்
ஆண்டுவரை இதனைக் காணலாம். அறிவுசார் அரசியலும் அர்ப்பணிப்பான செயல்பாடுகளும் இன்றி ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவிதியை
வெற்றியில் இட்டுச்செல்ல யாராலும் முடியாது.

தமிழ்த்தலைவர்கள் கல்விமான்களாகவும், சட்ட வல்லுநர்களாகவும் இருந்த போதிலும் அவர்கள் முழுநேர தொழிலாக வழக்காடலைச் சார்ந்ததுடன்
பகுதிநேர தலைவர்களாக இருந்த நிலையில் அரசியலை அறிவுசார்ந்து அணுகக்கூடிய நெளிவுசுளிவான பாதையில் வழிநடத்தக்கூடிய இராஜதந்திர
நகர்வுகளுக்கான ஈடுபாட்டை காட்டக்கூடியதற்கான நேரமும் அதற்கான அர்ப்பணிப்பும் அற்ற தலைவர்களாக இருந்த நிலையில் தமிழ்மக்களின்
தோல்வி எழுதப்பட்ட தலைவிதியென பெருமூச்சுடன் நீண்டுசெல்லும் துர்ப்பாக்கியத்திற்கு உள்ளானது. கூடவே தமிழ் அறிஞர்கள் அரச உத்தியோகம் சார்ந்த நலனைக் கொண்டிருந்ததால் அவர்களின் மூளை தமிழ்மக்களின் நலன்கருதி சிந்திக்க மறுத்தது. உத்தியோக வாய்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் என்பன சிங்கள அரசின் கையில் இருந்ததால் அந்த அரசு இயந்திரத்தின் நலனுக்கு வெளியே தமிழ் அறிஞர்களால் சிந்திக்க முடியாது
போனது மட்டுமல்ல அந்த அரசு இயந்திரத்திற்கு உரிய உத்தியோகத்தர்கள் என்ற வகையில் தமிழ் அறிஞர்களும் தமிழருக்கு எதிரான சிங்கள அரசு
இயந்திரத்தின் சேவகர்களாய் நடைமுறையில் செயற்படும் துர்ப்பாக்கியமே காணப்பட்டது. அதாவது தமிழ்த்தலைவர்களும் சரி, தமிழ் அறிஞர்களும்
சரி ஈழத்தமிழர்களின் அரசியலை அறிவுசார் அரசியலாக முன்னெடுக்க முடியாத ஒரு அரசியல் கலாச்சாரத்தையே தமிழ்ச்சமூகம் கொண்டிருக்க
நேர்ந்தது. இத்தகைய அறிவுசாரா அரசியல் கலாச்சாரத்தினதும், அறிவுசாரா அரசியல் பழக்கதோஷத்தினதும் களத்தில்தான் ஆயுதப்போராட்டம்
1970களின் பிற்பகுதயில் எழுச்சிபெறத் தொடங்கியது. ஆதலால் ஆயுதப்போராட்ட இளைஞர்கள் முழுநேர அரசியலில் ஈடுபடத்தொடங்கிய போதிலும் சமூகத்தில் காணப்பட்ட அறிவுசாரா அரசியல் கலாச்சார விளைநிலத்தில்தான் இவர்களும் முளைவிட நேர்ந்தது. இதனால் தமிழ்மக்களின் அரசியலில் அறிவுசார் அரசியல் வறண்ட நிலத்து பயிராக நீடிக்க நேர்ந்தது என்ற உண்மை நாம் தெளிவாக புரிந்தாக வேண்டும். அதனை புரிந்து கொள்ள தவறினால் இனிமேலும் நாம் அதை நிவர்;த்தி செய்து முன்னேற வழியிருக்காது. விருப்பு வெறுப்புக்களை கடந்து நோயை நோயாக
அடையாளம் கண்டு அதற்காக மருத்துவத்தை மேற்கொண்டு நாம் முன்னேற தயாராக வேண்டும்.இந்தவகையில் நாம் நடந்து முடிந்த தேர்தலையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் நாம் பரிசீலித்து அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தமிழர்கள் தயாராகவேண்டும்.

வெளிப்படையாக பார்க்கும் போது ராஜபக்ஷ இனப்படுகொலை செய்தமை எம் கண்முன் நிற்பதினால் ஒருவகை பழிவாங்கும் உணர்வோடு அவருக்கு
எதிராக மக்கள் விரலை நீட்டுவது இயல்பு. அது தவிர்க்க முடியாததும் கூட. ஆனால் இங்கு நாம் இலாப நட்ட கணக்கை சரிவர போட்டாகவேண்டும்.
ராஜபக்ஷவுக்கு எதிராக நிற்கும் சந்திரிகாவுக்கு இப்போதுதான் ஞானம் திறபட்டுவிட்டது என்றில்லை. பண்டாரநாயக்க குடும்பத்திற்கு எதிராக
ராஜபக்ஷ குடும்பம் தலையெடுத்தபோது அதை தாங்கமுடியாத பண்டாரநாயக்க குடும்பத் தலைவி முதலைக் கண்ணீர்விட்டு தமிழ் மக்களின்
வாக்குகளை பெற முற்பட்டதை நாம் மறக்கக்கூடாது. ரணிலும் சேனநாயக்க குடும்பத்தின் இறுதி வாரிசு ஆவார். அவரும் தனது குடும்ப ஆதிக்கத்திற்கும் தமது கட்சி நலனுக்குமாக ராஜபக்ஷவை எதிர்க்க வேண்டிய தேவை இருந்தது. தமிழரை ஒடுக்கிய சந்திரிகாவும், ரணிலும் தமிழரின் வாக்குகளால் ராஜபக்ஷவை வீழ்த்தும் தந்திரத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இவர்கள் இனவாதிகளாகவும், இனப்படுகொலையாளர்களாகவும் கடந்தகால வரலாற்றில் தம்மை தம்செயற்பாடுகளால் நிருபித்துள்ளனர்.
ஆனாலும் இப்போது அவர்கள் தமிழ்மக்களின் வாக்குக்களினால் தமது எதிரியான ராஜபக்ஷவை வீழ்த்த முடிந்தது என்ற வகையில் தம்
முதலைக்கண்ணீருக்கு பதிலாக குறைந்தபட்சம் செயற்படக்கூடிய உடனடியான அரசியல் வெளி அரசியல் அரங்கில் உள்ளது. அதாவது
வடக்கு-கிழக்கு மாகாணசபையை இரண்டாக பிரித்து ஒரு அரசியல் பிரச்சனை மூலம் அல்ல வெறும் சட்டநுணுக்கப் பிரச்சனையின் மூலமே.

அதாவது வடக்கு-கிழக்கு மாகாணங்களை நாடாளுமன்றத்திற்கூடாக இணைக்கவேண்டும் என்பதற்கு பதிலாக அன்றைய ஜனாதிபதி ஜெயவர்த்தன
அதனை அரச இதழ் வாயிலான அறிவித்தல் மூலம் இணைத்ததுதான் தவறே தவிர இணைப்பு தவறு என்று தீர்ப்பில் கூறப்படவில்லை. ஆனால்
தீர்ப்பை வைத்துக்கொண்டு ராஜபக்ஷ வடக்கு-கிழக்கு இணைப்பை துண்டாடினார். ஆனால் தற்போது ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கூடான
அறிவித்தல் மூலம் இவ்விணைப்பை சில நிமிடங்களில் செய்திடமுடியும். ராஜபக்ஷவின் அநீதிகளுக்கு எதிராக நீதிக்கொடி தூக்கும் சந்திரிகா, ரணில்,
சிறிசேன, ஜே.வி.பி.யினர் வடக்கு-கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட அநீதியை இப்போது தமக்கிருக்கும் அரசியல் சட்ட வாய்ப்பைக்கொண்டு
சிலநிமிடங்களிலேயே வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்துவிடக்கூடிய இந்த நடவடிக்கையை முதலில் மேற்கொள்வார்களா!?

இந்த கேள்வியை மனதில் நிறுத்திக்கொண்டு தற்போது தற்காலிகமாக கிடைத்திருக்கக்கூடிய ஒரு போலி ஜனநாயக அரங்கில் குறைந்தபட்சம்
தமிழ்த்தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் செயற்படக்கூடிய ஒரு வெளி இருக்கவே செய்கிறது. இலங்கையில் செயற்படும் பெரும்பான்மையின
சர்வாதிகாரத்தைத்தான் ஜனநாயகம் என்று சொல்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் (யதழசவையசயைnளைஅ) என அழைப்பர். அதாவது இதனை
தெளிவாக சொல்வதென்றால் பெரும்பான்மையின ஜனநாயக சர்வாதிகாரமாகும். சிங்கள இனத்திடம் காணப்படுகின்ற இத்தகைய கூட்டுமன கட்டமைப்பான கருத்தமைவு எத்தகைய சிதைவும் இன்றி அப்படியே இருக்கின்றது. சிங்கள இனத்தவர்களிடம் காணப்படுகின்ற தமக்கிடையேயான குடும்ப ஆதிக்கப் போட்டியில் தமிழரை தமக்கு சாதகமான துருப்புச்சீட்டாக கையாண்ட அளவுக்கு தமிழரின் உரிமைக்கு எதிராகவும் சிங்கள அரச இராணுவத்தால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் சிங்கள கூட்டுமனத்தை மனமாற்றத்திற்கு உள்ளாக்குவார்கள் என்றில்லை. ஆனாலும் தமிழ்மக்களின் வாக்குக்களால் பதவிக்கு வந்தவர்கள் தற்காலிகமாவேனும் நேரடி அர்த்தத்தில் தமிழருக்கு எதிராக செயல்படமுடியாத ஒரு சூழல் உண்டு. அதேவேளை தமிழருக்கு எதிராக வடிவமைக்கப்பட்டிருக்கும் அரச இயந்திரம் மொழி, பண்பாடு, அரசியல், பொருளாதாரம், குடியமைவு என அனைத்துத்துறைகளிலும் தன் திசைநோக்கிய செயற்பாட்டிலிருந்து பின்வாங்கமாட்டாது. இதனை ஸ்தாபிதம் அடைந்திருக்கும் அரச இயந்திர அமைப்பு முறைக்கூடாக சிந்திக்க வேண்டுமே தவிர நபர்களுக்கு ஊடாக அல்ல. சர்வதேச அரசியிலிலும் உள்நாட்டு அரசியலிலும் காணப்படும் வாய்ப்புக்களை கண்டறிந்து அறிவுசார் அரிசியல் அணுமுறையில் நின்று அர்ப்பணிப்புடனான முழுநேர அரசியல் தலைவர்களாகவும் அரசியல் அறிஞர்களாகவும் செயற்படவேண்டிய பொறுப்பு தமிழ்ச்சமூகத்தின் முன்னோடிகள் முன் உண்டு.

அநீதி என்பது இராணுவ நடவடிக்கையிலான இனப்படுகொலை மட்டுமல்ல. தமிழரின் சுயநிர்ண உரிமையை மற்றும் உரிமைகளை மறுக்கும்
அனைத்து செயல்களும் அநீதிதான். ஆதலால் ராஜபக்ஷவின் இராணுவ நடவடிக்கையின் மூலமான படுகொலையை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு
ஏனைய அநீதிகளை அப்படியே செயற்பட விடமுடியாது. கொல்லப்பட்டவர்களை உயிர்ப்பிக்க முடியாது என்று சொல்லி கொல்லப்பட்டதோடு கதை முடிந்துவிட்டது என்பதல்ல. கொல்லப்பட்டதற்கு நீதியின் பெயரால் தண்டனையும் வேண்டும் நிவராணமும் வேண்டும். அதேவேளை பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கை இணைப்பது என்பது கொல்லப்பட்டவனை உயிர்ப்பிக்க முடியாது என்பது போன்றதல்ல. ஆதலால் பிரிக்கப்பட்ட வடக்கு-கிழக்கை மீண்டும் இணைத்துக்காட்டுவதுதான் நீதி. அத்துடன் தமிழ்மக்கள் இந்த வடக்கு-கிழக்கு இணைப்பைக் கொண்ட மாகாணத்தீர்வை கூட அவர்கள் தமது உரிமைக்கான தேவையை பூர்த்தி செய்ததாக சொல்லவில்லை. அவர்களின் தேவை அதற்கும் மேலானது. எனவே அவர்கள் நீதி என கருதும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அதற்கான தீர்வை கண்டாகவேண்டும். குறைந்தபட்சம் இன்றைய சிங்களத்தலைவர்கள் உடனடியாக இணைப்பை அறிவிப்பார்களா என்று கேட்டால் அவர்களது ‘ஆம்’இ அல்லது ‘இல்லை’ என்ற பதிலில் இருந்து அடுத்த கட்டத்தைப்பற்றி சிந்திக்க முடியும்.

இந்தியாவில் இந்துக்களை நோக்கி முஸ்லிம்களின் உரிமைக்காகவும் உயிர்களை காப்பதற்காகவும் 1947ஆம் ஆண்டு மகாத்மா காந்தி
உண்ணாவிரதத்தை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றார். இந்துக்கள் காந்தியின் போராட்டத்திற்கு பணிந்தனர். இப்போது சிங்களத் தலைவர்கள்
சிங்கள இனவாதத்திற்கு எதிராக குறைந்தபட்சம் இப்படி காந்தி இருந்ததுபோன்ற உண்ணாவிரதங்களை மேற்கொண்டு சிங்கள மனப்பாங்கை
மாற்றவும் தமிழர்களின் உரிமை நிலைநாட்டவும் பாடுபடுபட்டால் குறைந்தபட்சம் அவர்கள் மீது நாம் நம்பிக்கை வைக்க வாய்ப்பு இருக்கும். இதற்கு முன்னோடியாக தமிழ்மக்களின் வாக்குக்களால் பதவிக்கு வந்த இன்றைய ஜனாதிபதியும், பிரதமரும், இன்றைய புதிய அரசாங்கத்தின்
சூத்திரதாரியான சந்திரிகாவும் இணைந்து இன்றைய அரசாங்கத்தின் பெயரால் சிங்கள இராணுவத்தாலும் அரச இயந்திரத்தாலும் படுகொலைக்கு
உள்ளான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முதலில் மன்னிப்பு கோருவார்களா? இவ்வாறு கோரவைக்கவேண்டிய பொறுப்பும், கடமையும்
தமிழ்த்தலைவர்களும் தமிழ்அறிஞர்களுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் முதற்கண் உண்டு.
---------------------------------------------------------------------------