Wednesday, May 1, 2019

தமிழரின் முதுகில் தொடரும் சிலுவைப் போர்

24-4-19
மு.திருநாவுக்கரசு
தமிழரின் முதுகில் தொடரும் சிலுவைப் போர்

மட்டக்களப்பிலும், கொழும்பு, நீர்கொழும்பு பகுதிகளிலும் 8 வெவ்வேறு
இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், உல்லாச விடுதிகள் மீதும்
நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் போது உயிர்த்த ஞாயிறு தினம் இரத்தம் தோய்ந்த துயர்மிகு ஞாயிறாய் மாறியது. இத்தாக்குதல் மனிதாபிமானமற்ற, மிலேச்சத்தனமான தாக்குதல் என்று பலரது கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
250 பேருக்கு மேல் இதுவரை குண்டுவெடிப்புகளுக்கு பலியாகியுள்ளனர்.

இந்த இரத்தம் தோய்ந்த துயர் அளிக்கவல்ல குண்டுத் தாக்குதலை
இலங்கையில்  காணப்படும் உள்நாட்டு அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்
அமைப்பு மேற்கொண்டிருப்பதாகவும் தற்போது இதற்கு சர்வதேச அமைப்பான
ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு உரிமை கோரியும் செய்திகள்
வெளியாகியுள்ளன.
அதேவேளை இக்குண்டுத் தாக்குதல்கள் நடைபெற இருந்ததைப்பற்றி
இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) முன்கூட்டியே தகவல்களை
அறிந்து அதனை இந்திய அரசு இராஜதந்திர வழிமுறைக்கு ஊடாக இலங்கை
அரசிற்கு அனுப்பி வைத்ததாகவும் அந்த எச ;சரிக்கை இலங்கை அரசு
கண்டுகொள்ளாமல் இருந்தன ; விளைவாக இத்தாக்குதல் நடைபெற முடிந்தது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதில் சர்வதேச அமைப்பான ஐஎஸ் மற்றும் உள்நாட்டு அமைப்பான தேசிய
தவ்ஹீத் ஜமாத் அமைப்பும் மட்டுமின்றி இலங்கை அரசின் பொறுப்பற்ற
பாராமுகமான செயலும் இத்தாக்குதலில் சம்பந்தப்படும் 3 அம்சங்களாக
உள்ளன.
லண்டனில் உள்ள எனது மாணவர் ஒருவர் தொலைபேசி வாயிலாக
இப்பிரச்சினை பற்றி என்னுடன் உரையாடுகையில் பின்வருமாறு கூறினார். இக்
குண்டுத் தாக்குதல் தொடர்பாக தமிழரின் நோக்குநிலையில் நின்று எதிர்கால
கண்ணோட்டத்துடன் இப்பிரச்சினையைப் பார்க்க வேண்டியது அவசியம்.

 இது தொடர்பாக தமிழர் நோக்கில் ஒரு சரியான "View" வும் அத்துடன்
எதிர்காலத்திற்கான 'Vision' உம் அவசியம் என்று கூறினார். அவர் அரசற்ற,
பாதுகாப்பற்ற தமிழர்களின் கதியற்ற நிலையை உணர்ந்து அவர்களின் நோக்கு
நிலையில் இருந்து மேற்படி இரண்டு ஆங்கிலப் பதங்களுக்கு ஊடாகவும் தமிழர் பற்றிய தலைவிதியை நிர்ணயிக்கவல்ல முன்னறிவை உருவாக்க வேண்டுமென்று சிந்திப்பது சரியானது.

ஈழத் தமிழர்கள் பற்றிய படைப்பிலக்கியப் பணியில் ஈடுபட்டிருக்கும்
எழுத்தாளர் அகரமுதல்வன் தனது முகநூலில் பின்வருமாறு ஒரு பதிவை
செய்துள்ளார். அதாவது இரட்டைக் கோபுரங்கள் மீதான விமானத் தாக்குதல்கள் உலக அரசியல் ஒழுங்கை பெரிதும் மாற்றி அமைத்தது போல உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களும் இலங்கை அரசியலில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவும் சரியானதே.
இத்தாக்குதல்களைச் செய்தவர்களை விடவும் இத்தாக்குதல்களுக்கான பின்னணி என்ன? இதற்குப் பின்னால் இருக்கும் மறைகரங்கள் யாவை?
இத்தாக்குதல்களுக்கான உள்நோக்கம் என்ன? இத்தாக்குதல்களால் நன்மை
அடையப் போவது யார்? இவற்றால் அதிகம் பாதிக்கப்படப் போவது யார்? என்ற
கேள்விகள் அனைத்தும் பிரதானமானவை. இச்சிறிய கட்டுரையில் இவற்றிற்கு விரிவான அல்லது முழுமையான பதிலைக் காணமுடியாது. ஆனாலும் இத்தாக்குதலால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகப் போகின்றவர்கள் ஈழத் தமிழர்கள்தான் என்பது தெளிவு. இதனால் நேரடியாக நன்மை அடையப் போவது சிங்களபௌத்த ஆதிக்கமும், அவர்களது இராணுவமுந்தான். அதேவேளை இவற்றிற்குப் பின்னால் நலன் அடையப் போகின்ற பெரும்போக்கான வெளிநாட்டுச் சக்திகள் உள்ளன.

முதலில் இந்த குண்டுத் தாக்குதல்களை சிலுவைப் போர்களின் தொடர்ச்சியாக வரலாற்றில் இணைத்துப் பார்ப்போம்.

கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே
1095ஆம் ஆண்டு சிலுவை யுத்தம் ஆரம்பமானது. இது சிலுவைக்கும்,
பிறைக்கும் இடையேயான யுத்தமாக வடிவம் பெற்றது. இதனை நவீன அரசியல் நிலையில் வெள்ளைக்கும்-பச்சைக்கும் இடையேயான போராகக் குறிப்பிடலாம்.
"வெள்ளை" என்பது கிறிஸ்தவத்தைத் தாங்கி நிற்கும் மேற்குலகம், "பச்சை‟
என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் பாரசீகம், அரபு நாடுகள் உட்பட்ட
மேற்காசியாவும் அதன் ஏனயை விளிம்பு நாடுகளுமாகும்.

மத அடிப்படையில் இந்த சிலுவைப் போர்கள் 11ஆம் நூற்றாண்டின் இறுதியில்
ஆரம்பித்தாலும் புவிசார் அரசியல் அடிப்படையில் கிமு 5ஆம் நூற்றாண்டில்
பாரசீகத்திற்கும் கிரேக்கத்திற்கும் இடையேயான யுத்தத்தின் மூலம்
ஆரம்பமாகியது. ஆயினும் இதன் வேர் „ட்ராய் யுத்தம்‟ வரை மேலும் பல
நூற்றாண்டுகள் பின்நோக்கிச் செல்கிறது.
துருக்கிய ட்ராய் அரச இளவரசனான பாரீஸ் என்பரால் கிரேக்கத்தில் இருந்து
கடத்திவரப்பட்ட கிரேக்க ஸ்பார்ட்டா அரசி ஹெலனை மீட்பதற்காக
கிரேக்கர்களுக்கும், துருக்கியர்களுக்கும் இடையில் கிமு 12ஆம்
நூற்றாண்டளவில் நடந்த யுத்தமே இதற்கான முதல் வேராக அமைந்தது.
புவியியல் ரீதியில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் நடுவே அமைந்திருந்த
அராபிய – பாரசீகப் பிரதேசம் மத்திய கிழக்கு என மேற்குலகத்தவர்களால்
அழைக்கப்படலாயிற்று. மத்திய கிழக்கு எனப்படும் இந்த மேற்காசியப் பகுதி
அரசியல் ஆதிக்கப் படர்ச்சிக்கு ஒரு மையப் புள்ளியாக உள்ளது. ஆதலால்
இந்தப் புள்ளியை மையமாகக் கொண்டு புவிசார் அரசியல் அடிப்படையில்
யுத்தம் நிகழ்வது இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று.
ஆதிக்கம் மதமாக வடிவம் பெற்றது. மதம் ஆக்கிரமிப்பின் சின்னமானது.
மதவடிவிலான இந்த யுத்தங்கள் ஆதிக்க சக்திகளுக்கு சுகபோக நலன்களைப்
பரிசாக்கின. மக்களுக்கு துயர்தோய்ந்த இரத்தத்தைப் பரிசாக்கின. இரு பெரும்
மதங்களுக்கு இடையேயான யுத்தம், ஒரு மதத்தின் உட்பிரிவுகளுக்கு
இடையேயான யுத்தம் என இந்த இரத்தம் தோய்ந்த யுத்தங்கள் நீண்டு
செல்கின்றன.
வெள்ளைக்கும் - பச்சைக்கும் இடையே உலகளாவிய யுத்தம் 21ஆம்
நூற்றாண்டிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளைக்கும் - பச்சைக்கும்
இடையேயான பெருவெட்டான யுத்தம் ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்கும்
போது பச்சைக்குள் உட்பிரிவுகளுக்கு இடையேயான யுத்தங்களும்
காணப்படுகின்றன. பச்சைக்குள் இடம்பெறும் இந்த உட்பிரிவுகளுக்கு
இடையேயான யுத்தத்தை வெள்ளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி
பச்சைக்கும் - பச்சைக்கும் இடையேயான யுத்தத்தை வளர்ப்பதன் மூலம்
வெள்ளைக்கும் - பச்சைக்கும் இடையேயான ஒரு பெரும் பகுதி யுத்தத்தை
வெள்ளை தனது இரத்தத்தைச் சிந்தாது வெற்றிகரமாக நிறைவேற்றிவிடுகிறது.

இந்த வகையில் ஐஎஸ் என்பது வெள்ளைக்குச் சாதகமாக பச்சைக்குள்
பச்சையாக யுத்தத்தை முன்னெடுக்கும் ஒரு சக்தியாக வரலாற்றில் பாத்திரம்
வகிக்கின்றது.

அதிதீவிரவாதிகள் சாத்தானின் நண்பர்கள். இவர்கள் இலட்சியத்தின் பேரால்
எத்தகைய தீய செயல்களுக்கும் தயாராக இருக்கிறார்கள். இவர்களை யாரும்
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இலகுவாகக் கையாளலாம்.
ஏவிவிட்டால் பேயைப் போல் கூரையைப் பிடுங்கக்கூடியவர்கள். மந்திரிக்கப்பட்ட வார்த்தைகளை இலட்சியமாக உச்சரிக்கும் இத்தகைய அதிதீவிரவாதிகளை இலகுவில் கொம்பு சீவி தாய்ப்பசுவின் மீதுகூட பாயவைக்க முடியும். தாம் செய்வதை நன்மை என்று நினைத்துக் கொண்டு செய்யும் அவர்களது செயல்கள் இறுதியில் ஒட்டுமொத்த தீமையில்; போய் முடிவடையும். இறுதி கணக்கெடுப்பில் இவர்கள் எதிரிக்கு சேவை செய்தவர்களாக காட்சியளிப்பார்கள். ஒளியை நோக்கிப் பாய்வதாக நினைத்து நெருப்பை நோக்கிப் பாய்ந்து சாம்பல்
மேடாகும் விட்டில் பூச்சிகள் போல இலட்சியத்தின் பேரால் பாயும் இவர்களின்
செயல்கள் தியாகங்களாக அன்றி சாம்பல் மேடுகளாகிவிடுகின்றன. இந்த
துயர்தோய்ந்த வரலாற்று உண்மையை கருத்தில் எடுத்து இத்தகைய குண்டுத்
தாக்குதல்களின் தலைவிதியை ஆராய வேண்டும்.

ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசிடம் மேற்குலக கிறிஸ்தவ எதிர்ப்பு
முதன்மையானது. அந்த மூலோபாயத்தின் கீழ் நின்று அதனுடன்
தொடர்புறக்கூடிய சக்திகள் மீது தாக்குதல் நிகழ்த்தக் கிடைக்கும் அனைத்து
வாய்ப்புக்களையும் அவர்கள் புனிதப் போராகக் கருதி பயன்படுத்துவார்கள்.
இந்நிலையில் அவர்களிடம் யாராவது ஒரு வாய்ப்பை இலக்காக ஏவிவிடும்
போது இலக்குத் தவறாது விட்டில் பூச்சியாய் பாய்வார்கள். அதுதான் ஐஎஸ்-இன் கோணத்தில் இருந்து உயிர்த்த ஞாயிறு இரத்த ஆற்றை புரிந்து
கொள்வதற்கான வழி.

அதேவேளை இலங்கை உள்நாட்டு நிலையில் காணப்படும் சக்திகள் தத்தமக்கு கிடைக்கவல்ல வாய்ப்புக்களைப் பயன்படுத்த தயங்கமாட்டாது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரத்தில் அதுபற்றி
கருத்து தெரிவித்திருந்த பாதுகாப்பு துணை அமைச்சர் ரூபன் விஜெவர்த்தன
பின்வருமாறு கூறினார்.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம்; முடிந்த பின் கலைக்கப்பட்ட ஓர்
இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் இத்தாக்குதலை நடத்தியதாக அவர் கூறினார். "விடுதலைப் புலிகளுக்கு‟ எதிராக அரசால் பயன்படுத்தப்பட்ட துணைப்படையான இஸ்லாமிய அமைப்புக்களைச் சுட்டும் வகையிலேயே அதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக 2009ஆம் ஆண்டின் பின் உருவான தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தைக் குறிப்பிட்டார். கலைக்கப்பட்ட இயக்கத்தவர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டதாகக்
குறிப்பிட்டுவிட்டு அதன் பின் உருவான மேற்குறிப்பிட்ட அமைப்பு இத்தாக்குதல்களை நடத்தியது என்று அவர்
விபரிப்பதன் மூலம் 2009ஆம் ஆண்டு அரசால் கலைக்கப்பட்ட அமைப்பில்
இருந்து மேற்குறிப்பிடப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தோன்றியது
என்பது புலப்படுகிறது. அப்படியென்றால் இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஏற்கனவே இராணுவத்துடனோ அல்லது இராணுவப் புலனாய்வுடனோ தொடர்புடையவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

எனவே இவர்களுடைய ஆளுமையையும் இவர்களுக்கு
இருக்கக்கூடிய வல்லமைகளையும், சர்வதேசத் தொடர்புகளையும்
ஆட்சியாளர்கள் அறிவார்கள். இவர்களைச் சம்பந்தப்படுத்தியும் இவர்களது
பெயர்கள் மற்றும் விபரங்கள் குறித்தும் தாக்குதல்களுக்கான இலக்குக்கள்
குறித்தும், தாக்குதல்கள் நடக்க இருப்பதான உளவுத்துறைத் தகவல்களை
இந்திய அரசு முன்னெச்சரிக்கையாக இலங்கை அரசிற்கு உத்தியோகபூர்வமாக முன்கூட்டியே அறிவித்த போது அதனை போலியானது என்று இலங்கை அரசு உதாசீனம் செய்திருக்க முடியாது. ஏனெனில் தாக்குதல் நடத்தப் போவதாக குறிப்பிடப்பட்டவர்களின் ஆளுமைகளை இலங்கை அரசிற்குத் தெரியும். அப்படி இருந்தும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு முன்னேற்பாடான நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டதற்குப் பின்னால் பெரும் சந்தேகங்கள் எழுவது நியாயமானது.

முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் பற்றி தனக்கோ அல்லது தனது
அமைச்சர்களுக்கோ ஜனாதிபதி அறிவிக்கவில்லை என்று பிரதமர் ரணில்
விக்ரமசிங்க திரும்பத் திரும்பக் கூறும் குற்றச்சாட்டும் கவனத்திற்குரியது.
அரசிற்கும் புலிகளுக்கும் இடையேயான யுத்த காலத்தில் யுத்தத்தை
எதிர்கொள்வதற்கு சிங்கள-பௌத்த ஆட்சியாளர்கள் ஒருபுறம் முஸ்லிம்
அரசியல் சக்திகளையும், சிங்கள கிறிஸ்தவர்களையும் பெரிதும் அணைத்துக்
கொண்டனர்.

சிங்கள-பௌத்தர்களின் உடனடிப் பாரம்பரிய எதிரியாக கிறிஸ்தவர்களை
அவர்கள் கருதினர். முதலாவது மதக்கலவரம் 1883ஆம் ஆண்டு உயிர்த்த
ஞாயிறு தினத்தன்று சிங்கள பௌத்தர்களுக்கும் - சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையே கொட்டாஞ்சேனையில் வெடித்தது.

புலிகளுடனான யுத்தத்தில் சிங்கள கிறிஸ்தவர்களை பெரிதும் அணைக்க வேண்டி ஏற்பட்ட நிலையில் கடற்படை - இராணுவம், நிர்வாக அமைப்புக்கள் என்பனவற்றிலும், சமூக மட்டத்திலும் சிங்கள கத்தோலிக்க கரவா சமூகத்தினர் பெரிதும் முன்னணிக்கு வந்தனர்.

யுத்தத்தின் பின் இவர்களை பின்தள்ள வேண்டிய அவசியம் பௌத்த
மேலாதிக்கத்திற்கு இப்போது உண்டு. இலங்கை வரலாற்றில் இரண்டாவதாக வெடித்த மதக் கலவரம் 1915ஆம் ஆண்டு பௌத்தர்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் இடையேயான 'கம்பளை' கலகமாகும்.

யுத்த காலத்தில் புலிகளுக்கு எதிராக முஸ்லிம்களைப் பயன்படுத்திய
நிலையில் முஸ்லிம்கள் அடைந்திருக்கும் மேல்நிலையை மட்டுப்படுத்த
வேண்டும் என்ற சிந்தனை பௌத்தர்கள் மத்தியில் தலையெடுத்தது. கடந்த
ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்கள் மேற்கொண்ட கலவரங்களை
இந்தவகையிற்தான் புரிந்துகொள்ளலாம்.

தாக்குதல் பற்றிய எச்சரிக்கைத் தகவல்கள் அனைத்தும் பௌத்தர்கள் அல்லாத தமிழ்க் கிறிஸ்தவர்களையும், சிங்களக் கிறிஸ்தவர்களையும ; நோக்கியிருப்பதை அரசு தெளிவாக அறிந்திருந்தது. இந்நிலையில் இஸ்லாமிய – கிறிஸ்தவ மோதல், தமிழ் - முஸ்லிம் மோதல் என்பவற்றிற்கு தூபமிட வல்லவையாய் மேற்படிக் குண்டுத் தாக்குதல்கள் அமைய முடியும் என்ற வகையில் இத்தாக்குதலை தடுக்க அரசதரப்பு முனையவில்லை எனத் தெரிகிறது.

“இரண்டு புலிகள் சண்டையிடும் போது மலை உச்சியில் இருந்து அவற்றைப்
பார்த்துக்கொண்டிரு” [When two tigers are fighting, sit on a hill and watch them]
என்ற இக்கூற்றிற்கு இணங்க தனது எதிரிகளான இஸ்லாமியர்களுக்கும் -
கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான சண்டையை அரசாங்கம் கையாண்டு
இருக்கிறது. இது மேலும் தமிழ் - முஸ்லிம் உறவை சீரழிக்கும் என்பதாலும்
அரசாங்கம் மேலும் இதனை விரும்பி இருக்கிறது.

இலங்கை இராணுவமும், பொலீசும், புலனாய்வுத்துறையும் சர்வதேச உதவியுடன் புலிகளுக்கு எதிரானது என்று கூறப்பட்ட யுத்த காலத்தில் பெரிதும் பலமடைந்திருக்கும் பின்னணியில் இத்தகைய பலம்வாய்ந்த இவர்களை மீறி எப்படி இவ்வாறான குண்டுத் தாக்குதல் நடக்க முடிந்தது?
இத்தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் யார்? இதில் நன்மை
அடைபவர்கள் யார்? என்பன தெளிவாகப் புலப்படுகிறது.
“This 'who benefits' question has even led some to speculate that Gotabhaya himself may have had a hand in Sunday's bombings” என்று "Morning Star" ஈ-பத்திரிகையில்(e-magazine) பத்திரிகையாளர்  Phil Miller எழுதியிருப்பது கவனத்திற்குரியது.
அதாவது இந்த குண்டு வெடிப்புக்களுக்குப் பின்னால் கோத்தபாயாவின் கை
இருக்க முடியும் என்று ஊகிக்க இடமுண்டு என்றும் இராணுவத்திலும்,
புலனாய்விலும் அவருக்கு விசுவாசமானவர்கள் உண்டு என்றும் அவர் தொடர்ந்து கூறியுள்ளார்.

இத்தாக்குதலால் சிங்கள-பௌத்த மேலாதிக்கமும், இராணுவமும், அவை சார்ந்த அரசியல்வாதிகளும் மேலோங்கும் நிலைதான் பலாபலனாகத் தெரிகிறது.
அதேவேளை இதுவரை பெரிதும் ஒடுக்கப்பட்டு வந்த தமிழர்கள் எத்தகைய
அரசியல் தீர்வுகளுமின்றி மீண்டும்  இராணுவ கெடுபிடிக்கும் , ஒடுக்குமுறைக்கும் உட்படப் போகும் பரிதாபம் கண்முன் விரிகிறது. இலங்கைத் தீவில் சிங்கள இனவாத ஒடுக்கு முறையில் தமிழர்களுடன் இப்போது கிறித்தவர்கள் மற்றும் முஸ்லீம்களும் சேர்க்கப்படுகின்றனர்.  பொறுப்புள்ள தமிழ்த்தலைவர்களும், பொறுப்புள்ள அறிஞர்களும் இதுபற்றி சிந்திப்பார்களா?

நிகழ்ந்த குண்டுத்தாக்குதல் படுகொலையில் 360 பேருக்கும் மேல்
மாண்டுள்ளனர். அதில் மூன்றில் இரண்டு பகுதிக்கும் மேல் தமிழ்க்
கிறிஸ்தவர்களாவர். மேலும் தமிழ் - முஸ்லிம் உறவு சீரழிந்திருக்கும் ;
மட்டக்களப்பில் கொல்லப்பட்ட 40 பேரும் தமிழ்க் கிறிஸ்தவர்களாவர்.

எப்படியோ சிலுவைப் போர் தமிழ் மக்களின் முதுகில் குதிரை ஓடத் தொடங்கியுள்ளது.

தமிழரை யார்தான் பாதுகாப்பர். அரசற்ற தமிழர் கதியற்று, கைவிடப்பட்ட
பரிதாபம் மேலும் ஓர் அத்தியாயமாய் விரிகிறது.
தமிழர்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறைகளை மேற்கொண்டால்
இலங்கை வல்லரசுகளின் வேட்டைக்காடாக மாறும் என்று 1955ஆம் ஆண்டு
டாக்டர் என்.எம்.பெரேரா நாடாளுமன்றத்தில் பேசியமை தற்போது நிதர்சனமாய்த் தெரிகிறது.