Friday, December 4, 2009

குழந்தைப் போராளி (Child Soldier) : -சைனா கெய்டெட்சி (China Keitetsi) - நூல் மதிப்புரை

குழந்தைப் போராளி (Child Soldier) : எனது வாழ்க்கைக்கான போராட்டம்
-சைனா கெய்டெட்சி (China Keitetsi)

டச்சு மொழியிலிருந்து (2004) தமிழாக்கம் (2007) : தேவா.
286 பக்கங்கள்.
வெளியீடு : கருப்புப் பிரதிகள், சென்னை.

உகாண்டா:
தென்னாப்பிரிக்க கண்டத்தில் வடக்கில் எத்தியோப்பியாவும், சூடானும், கிழக்கே கென்யாவும், மேற்கே காங்கோவும், தெற்கே ருவாண்டாவும், டான்சானியாவும் சூழ இருக்கும் சிறிய நாடுதான் உகாண்டா. மக்கள் தொகை மூன்று கோடி (2009 கணக்கெடுப்பு). 1888ல் ஆங்கிலேயரின் வசமான உகாண்டா 1962ல் விடுதலை கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து 1990கள் வரை நிலையற்ற அரசியல் தன்மையும் உள்நாட்டுக் குழப்பங்களும் உகாண்டாவில் மிகுந்து காணப்பட்டன. உகாண்டாவில் மக்கள் காங்கிரஸ் கட்சி (Uganda People’s Congress), உகாண்டா ஜனநாயகக் கட்சி(Democratic Party) என்ற இரு பெரும் கட்சிகள் அரசியலில் முக்கியப் பங்காற்றின. சுதந்திரத்திற்குப் பின் மன்னராக இருந்தவரை மில்டன் ஒபாட்டே பதவியிறக்கம் செய்து ஆட்சியைக் கைப்பற்றினார். ஒபாடேவை சோவியத் யூனியன் ஆதரித்தது. உகாண்டாவின் பக்கத்திலிருந்த டான்சானியாவை தனது கைக்குள் வைத்திருந்த சீனாவின் ஆதிக்கத்தை கட்டுக்குள் வைக்க சோவியத் யூனியன் உகாண்டாவைப் பயன்படுத்தியது.

1971ல் இடி அமீன் அதிகாரத்தைக் கைப்பற்றி உகாண்டாவின் அதிபரானார். அவரது கொடுங்கோலாட்சியில் 3 லட்சம் உகாண்டாவினர் கொல்லப்பட்டனர். சிறுபான்மை இந்தியர்களுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டி இந்தியர்களே அங்கு இல்லாதவாறு செய்தார். இவருக்கு லிபியாவின் கடாபியும், சோவியத் யூனியனும் ஆதரவளித்தன. 1979ல் நடந்த உகாண்டா-டான்சானியா போரில் இவர் பதவியிழந்தார். மில்டன் ஒபாடே மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 1985ல் அவரைப் பதவியிறக்கம் செய்தார் ஜெனரல் டிட்டோ ஒக்கல்லோ. யோவேரி முசவேனியின் தலைமையிலான NRA (National Resistance Army) அரச எதிர்ப்புப் படை புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றியது. முசவேனி புதிய அதிபரானார். அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து முசவேனி ஜனாதிபதியாக உள்ளார். இங்கு பல கட்சி முறை நசுக்கப்பட்டுள்ளது. முசவேனி புதிய தலைமுறை ஆப்பிரிக்கத் தலைவர்களில் ஒருவராக மேற்குலகால் பார்க்கப்படுகிறார். இவரை எதிர்த்த, எதிர்க்கிற படையான அரசரின் எதிர்ப்புப் படை (Lords Resistance Army) குழந்தைப் போராளிகளை ஈடுபடுத்துதல், மக்கள்திரள் படுகொலைகள் என போர்க்குற்றங்களை செய்த இயக்கம் என குற்றம் சாட்டப்படுகிறது.

மேற்குலகு இங்கு கவனம் செலுத்தக் காரணம் இங்கிருக்கும் கனிம வளங்களான தாமிரமும், கோபால்ட்டும் மற்றும் இயற்கைச் செல்வங்கள் ஆகும். மேலும் இயற்கை வாயுவும், பெட்ரோலியமும் ஏராளமான அளவில் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை உறிஞ்சிக் கொண்டு கட்டுமானத்தை உருவாக்கித் தரும் ‘பணியை’ மேற்கத்திய உலகம் செய்கிறது. இங்குள்ள மக்கள் வறுமையின் கோரப்பிடியில் தான் இன்னும் வாழ்கிறார்கள். உகாண்டாவில் இருக்கும் உள்நாட்டுக் குழப்பங்களும், அரசியல் பிரச்சனைகளும் மேற்கத்திய நாடுகள் உகாண்டாவைக் கைக்குள் வைத்திருக்க உதவுகின்றன. உகாண்டாவில் 80 சதவீதம் பேர் கிறித்துவர்களாவர். அரசு மொழியாக ஆங்கிலமும், சுவாஹிலி என்னும் உள்நாட்டு மொழியும் உள்ளன.


சைனா கெய்டெட்சி:
சைனா கெய்டெட்சி 1976ல் உகாண்டாவில் டூட்சி (Tutsi) இனக்குழுவில் பிறந்தார். தனது ஒன்பதாவது வயதில் அரசை எதிர்த்துப் போராடிய யோவேரி முசவேனி(Yoweri Museveni) ன் தலைமையிலான NRA (National Resistance Army) அரச எதிர்ப்புப் படையில் குழந்தைப் போராளியாக சேர்க்கப்பட்டார். அப்போது முதல் 1995 வரை அப்படையில் பணியாற்றிய அவர் பின்னர் உகாண்டாவிலிருந்து தென்னாப்பிரிக்காவிற்குத் தப்பியோடினார். அங்கும் உகாண்டாவின் உளவுப் படையினரால் வேட்டையாடப்பட்ட அவர் 1999ல் டென்மார்க் நாட்டில் அகதியாகத் தஞ்சம் புகுந்தார். தற்போது உகாண்டாவில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் குழந்தைப் போராளிகளுக்கான மறுவாழ்வு இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இப்புத்தகம் இவரது இளம் குழந்தைப் போராளி வாழ்க்கையை அவரே சொல்லும் சுயசரிதை வடிவத்தில் உள்ளது. மிகுந்த மனநெருக்கடிக்குள்ளாகி இளம் வயதிலேயே ஒரு 60 வருட போராட்ட வாழ்வின் மிக உக்கிரமான தருணங்களை கண்ட ஒரு வீரப் பெண்ணாக இவர் இருக்கிறார்.
இவரது வலைத்தளம் : http://www.chinakeitetsi.info

குழந்தைப் போராளி – நூல் மதிப்புரை
சைனா கெய்டெட்சி 2001ல் தனது 24வது வயதில் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் மூன்று பாகங்கள் உள்ளன. சைனாவின் 9 வயது வரையிலான பிஞ்சு வயதுப் பருவம் முதல் பாகத்திலும், குழந்தைப் போராளியாக 19 வயது வரை NRA படையில் இருந்த அவரது அனுபவங்கள் இரண்டாம் பாகத்திலும், அரசியல் கைதியாக தென்னாப்பிரிக்காவிற்கு தப்பித்து ஓடி டென்மார்க்கில் அகதியாக புகுந்த கணம் வரையிலான பகுதி மூன்றாம் பாகத்திலும் விவரிக்கப் பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தைப் படித்ததும் எனது மனதில் மிக அழுந்தியது முதல் பாகமாகும். இம் முதல் பாகத்தில் தனது கலாச்சார வேர்களை தொலைத்துவிட்டு, மேற்கத்திய காலாச்சார வாழ்க்கைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும், வறுமைக்குட்பட்ட ஒரு சமூகத்தில், குடும்பம் கூட வன்முறை தலைவிரித்தாடும், வன்மங்கள் மிகுந்த போர்க்களமாக மாறிவிடும் தன்மை தென்பட்டது. கனவில் கூட நாம் எண்ணியிராத பாட்டியும், தந்தையும், சித்தியும் கொடும் சூனியக்காரர்களாய் சைனாவின் பிஞ்சு மனதை கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு எடுக்கிறார்கள். 7 வயதில் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு கிழவனால் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். ஒரு நாள் இரவில் தந்தை இவள் செய்யாத ஒரு தவறுக்காக கண்மண் தெரியாமல் தாக்குகிறான். இவளது சுண்டு விரல் முறிந்து போகிறது. அதை அடுத்த நாள் காலையில் பார்க்கும் போது தான் தந்தைக்குத் தெரிகிறது. சைனாவின் ஆடுகளுக்கு இதுபோல எத்தனையோ குழந்தைகள் நண்பர்களாயிருக்கக் கூடும். ஒன்பதாவது வயதில் தனது உண்மையான தாயைச் சென்று அடையும் சைனா தாயின் மிதமிஞ்சிய அன்பை முதன் முறையாகக் கண்டபோது பயந்து வெளியேறி ஓடிப் போய் மாட்டிக்கொள்ளும் இடம் தான் NRA போராளிக் கூட்டம்.

இங்கு குழந்தைப் போராளியாக மாற்றப்பட்ட சைனா, குழந்தைகள் போர்ச் சூழ்நிலையில் அடையும் மனப் பிறழ்வை உணர்கின்ற அளவிற்கு முதிர்ச்சியுள்ளவராக இருக்கிறார். இவருடைய சைனா என்கின்ற பெயர், தளபதி ஒருவர் ‘சைனாக்காரி மாதிரி இருக்கிறாள்’ என்று பட்டப் பெயராக அழைத்ததால் ஒட்டிக்கொண்ட செல்லப் பெயரே. புரட்சி செய்யும் ராணுவமான NRA மிக ஆழ்ந்த கோட்பாடுகள் எதுவும் இல்லாத வெறும் ஆட்சிக் கவிழ்க்கும் ராணுவமாக மட்டுமே வளர்ந்திருக்கிறது. அது அதன் நிறுவனர் முசவேனியை பெரும் வீரராக புகழ் பாடி போலியாக மக்களை கவர்ந்திழுத்துள்ளது. வீரர்களும், அதிகாரிகளும் போர் என்றால் மிருகத்தனமான வெறியுடனும், குடி, கூத்து என்று ஒழுங்கற்ற, லட்சியமற்ற வெறும் நாடு பிடிக்கிற ஆட்களாகவே இருக்கின்றனர். அதன் அதிகார அமைப்புகள் ஒரு சர்வாதிகார ராணுவ அரசின் அதிகார அமைப்பையே ஒத்திருக்கிறது. பெண்கள் பாலியல் பொருட்களாகவும், குழந்தை பெறும் ஆட்களாகவும் உபயோகப்படுத்தப் படுகிறார்கள். சைனாவும் பாலியல் வன்முறைகளுக்கும், அதிகாரத்தின் கொடூரங்களுக்கும் ஆட்படுகிறார். அவற்றிலிருந்து உறுதியுடன் போரிட்டு விடுபடுகிறார்.

இந்நிலையில் இலங்கையில் விடுதலைப் புலிகள் குழந்தைப் போராளிகளை பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டையும் அதன் தாக்கத்தையும் இத்துடன் வைத்து எண்ணிப் பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகளையும், NRA இயக்கத்தையும் அவற்றின் நோக்கங்கள், அவை வளர்ந்த விதங்கள், கலாச்சாரப் பின்புலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது இவ்வியக்கங்களுக்கிடையேயான கூர்மையான வேறுபாடுகள் தெரிய வரும். விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் தேசியக் கட்டுமானத்தில் வளர்க்கப்பட்டிருந்தாலும், அதன் கலாச்சாரப் பின்புலம் அக்கட்டமைப்பை உறுதியாகவும், தூய்மையானதாகவும் உருவாக்கிக் கொள்ள உதவியிருக்கிறது எனலாம். NRA வைப் போல ‘குழந்தைகள் பலமில்லாத அப்பாவிகள்’ என்ற போர்க்கருத்தை நயவஞ்சகமாகக் கையாளும் தன்மை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரதான கொள்கையாகவோ, நோக்கமாகவோ வைக்கப்படவில்லை. புலிகள் இயக்கத்தில் குழந்தைகள் பாடம் பயிற்றுவிக்கப் பட்டதோடு, ராணுவக் கல்வியும் அளிக்கப்பட்டனர். தகுந்த வயதையடைந்ததும் அவர்கள் விரும்பினால் மட்டுமே ராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். நடைமுறையில் குழந்தைப் போராளிகளாக வளர்க்கப்பட்ட யாரும் ராணுவத்தில் இணையாமலிருந்திருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. விடுதலைப் புலிகள் குழந்தைகளை கடத்தியதில்லை. போரில் அனாதவராய் விடப்பட்ட குழந்தைகளை அரவணைத்து புகலிடம் தந்து கல்வி பயிற்றுவித்தனர். விடுதலை இயக்கம் மிசனரிகள் போல் நடந்துகொள்ளும் என்று நாம் எதிர்பார்த்தல் தவறானது இல்லையா.

சைனா கெய்டெட்சியின் இப் புத்தகம் எவ்வளவு அப்பட்டமாக அரச எதிர்ப்புப் படையின் உண்மையை வெளியிட்டிருந்தாலும் அரச அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை பலவீனமானவாக, கேவலமானவையாகச் சித்தரிக்கும் ஒரு ஆளும் வர்க்க வேலையையும் சேர்த்து செய்வதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழில் இன்னும் சற்று காலங்களில் இது போல தலைப்பில் ஒரு விடுதலைப் போராளி புத்தகம் வெளியிடும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது எனக்கு. அப்புத்தகம் இந்தியா, இலங்கை மற்றும் சீன அரசுகளுக்கு சாதகமாக விடுதலைப் புலிகளை குழந்தைகள் கையில் துப்பாக்கியைக் கொடுத்த கொடூர இயக்கமாகச் சித்தரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எல்லோரும் வசதியாக மறந்துவிடும் ஒரு உண்மை இது தான். ‘குடும்பங்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை முறைக்கு பாதுகாப்பில்லாத ஒரு சூழலை அரச பயங்கரவாதங்கள் உருவாக்கியதும், குழந்தைகள் போராளிகளாக உருமாறின சமூகச் சூழலுக்கு ஒரு அடிப்படைக் காரணம்’ என்பதே அது.

சைனா கெய்டெட்சியின் புத்தகத்தின் மூன்றாவது பாகத்தில் குவேனி அதிபராக பதவியேற்ற பின்னர் அரசு பயங்கரவாதம் தலைதூக்கி அதில் சைனா அகப்படாமல் நைரோபிக்குத் தப்பிச் சென்று, அங்கிருந்து தென்னாப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க்கில் நான்கு வருடம் அமெரிக்காவிற்குச் செல்லும் கனவோடு உயிர் வாழ்கிறார். இறுதியில் UNHC (United Nations High Commission) அவரைக் காப்பாற்றும் ஆபாத்பாந்தவனாக வருகிறது. அவர் டென்மார்க்கில் அகதியாகக் குடியேறுகிறார். இப்புத்தகத்தின் இறுதியில் உகாண்டாவின் அதிபர் முசவேனிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியுள்ளார்.

இப்புத்தகம் வாசிக்கப் படவேண்டிய ஒரு புத்தகம். இது முற்றுப் பெறாத ஒரு கைப்பிரதி போல ஆங்காங்கே தென்பட்டாலும், சைனா கெய்டெட்சி இன்னும் பல புத்தகங்கள் எழுதி அதில் ஆழமான குழந்தைப் போராளிகள் பிரச்சனையைப் பற்றி விடுபட்டவற்றை மேலும் விரிவாகப் பேசுவார் என நம்பலாம். இப்புத்தகம் மூன்றாம் பாகத்தைப் பொறுத்தவரை UNHC ஐ ஒரு கைவிடப்பட்டோரின் ஆதரவாளராகக் காட்டி நிற்கிறது. சைனா கெய்டெட்சியின் வாழ்வில் அது உண்மையிலேயே பெரிய உயிர்காப்பு நிகழ்வு, எனினும் UNHC இப்புத்தகத்தின் வாயிலாக அணிந்துகொள்ளும் முகமூடியாக அது மாறிவிடுகிறது. சைனா கெய்டெட்சி இதை ஒரு காலத்தில் உணர்வார் என நம்புகிறேன். அந்த வீர மங்கைக்கு எனது வணக்கங்கள்.

Monday, October 26, 2009

சீனாவின் இந்திய பொதுஜனத் தொடர்பாளர்.

by - டென்சிங் சோனம்(Tenzing Sonam). புதன் 26 டிசம்பர் 2007.

ரஷ்யப் புரட்சியின் ஆரம்பநாட்களில் புரட்சியை கண்கள் விரியப் பார்த்த மேற்கத்திய புரட்சி அனுதாபிகள் மாஸ்கோவிற்குத் தேனீக்களைப் போல் பறந்து சென்று ‘சோவியத் சொர்க்கம்’ பற்றி அறிக்கைகள் வெளியிட்டனர். லெனின் அவர்களை ‘பயனுள்ள முட்டாள்கள்’ என்று வருணித்ததுடன், அவர்களின் அப்பாவித்தனத்தை மேற்கத்திய நாடுகளுக்கு கம்யூனிஸக் கருத்துருவாக்கத்தைப் பரப்பவும் உபயோகப்படுத்திக்கொண்டார். அப்படிச் சென்ற ஒரு ‘முட்டாள்’ப் பத்திரிக்கையாளர் லிங்கன் ஸ்டீவன்ஸ்(Lincoln Steffans). ரஷ்யாவின் விருந்தினராக 1919ல் டூர் அடித்த ஸ்டீவன்ஸ்
“நான் எதிர்காலத்திற்குள் சென்றிருந்தேன்.. அது வேலை செய்கிறது” என்று கண்மூடித்தனமாகப் புகழ்ந்து எழுதியிருந்தார். அந்த ‘எதிர்காலத்திற்கு’ என்னவானது என்று நமக்குத் தெரியும்.

இந்த மேற்கத்திய புத்திஜீவிகள் ஸ்டாலினுடைய அதீதமான செயல்பாடுகளில் மனமுடைந்ததற்குப் பின் தோன்றிய, ஒரு புதிய தலைமுறை இடது சாரிக் கருத்தியலாளர்கள் மாவோ மற்றும் சீனப் புரட்சியை ரஷ்யாவில் உடைந்துபோன தங்கள் இடதுசாரிக் கருத்தியலின் ஊன்றுகோலாகக் கொண்டனர். லெனினைப் போலவே மாவோவும் இந்த அப்பாவிகளின் குருட்டுத்தனமான போக்கை தனக்குச் சாதகமாக உபயோகப் படுத்திக் கொண்டார். உண்மையுடன் சம்பந்தமில்லாத சீனப் பெருமை கட்டுக்கதைகளும் பரப்பப்பட்டன. மாவோவுடைய புகழ் செறிந்த ‘நீண்ட பயணம்’ பற்றிய எட்கர் ஸ்னோ (Edgar Snow) வின் குறிப்புகள் எல்லாம் புனைவுக்கதைகள் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இப்போது திபெத்தும் சீனாவால் பொருக்கியெடுக்கப்பட்ட மேற்கத்திய கைக்கூலிகளின் மூலம் சிதைக்கப்பட்ட உண்மைகளால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. 1960களில் தவறான கம்யூனிசக் கொள்கைகளின் விளைவாக திபெத் முதன்முறையாக பஞ்சத்தில் சுருண்டு விழுந்த காலத்தில்தான், ரோமா(Roma) மற்றும் ஸ்டூவர்ட் ஜெல்டர் (Stuart Gelder)ன் ‘சரியான நேரத்து மழை’(Timely Rain) என்கிற சீனப் பயண புத்தகம் வெளிவந்தது. 1975ல் வெளிவந்த ஹான் சுயின்(Han Suyin)ன் நம்பிக்கையூட்டும் தலைப்புகொண்ட புத்தகம் ‘லஹாசா : ஒரு திறந்த நகரம்’ (Lhasa: The open City) வெளிவந்த காலத்தில்தான் திபெத் தற்போதைய வடகொரியாவைப் போல் வெளி உலகத்தின் பார்வை பட அனுமதிக்காத மூடப்பட்ட நாடாக இருந்தது. இம்மாதிரி விருந்தினர்களின் எழுத்துக்களெல்லாம் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே காலாவதியாகிப்போனதோடு, மாவோவின் ‘பொதுவுடைமைப்’ பரிசோதனைகளில் நிகழ்ந்த பயங்கரமான மனித இழப்புகளும் தற்போது வெளிப்படுத்தப்பட்ட நிலையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரைத் தவிர மற்ற எல்லா அம்சங்களிலும் முதலாளித்துவம் நிரம்பியிருக்கிறது.

இவற்றின் பின் தற்போது நாம் காண்பது என். ராமின் (N. Ram) சமீபத்திய எழுத்துக்களை. இந்தியாவின் பெருமளவில் தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தேசிய நாளிதழ் ‘இந்து’(The Hindu)ப் பத்திரிக்கையின் பதிப்பாசிரியரான ராமின் வெட்கமில்லாத ஒரு பக்கச் சாய்வுடைய எழுத்துக்கள் சீனாவின் ஆட்சி பற்றிய அதே உணர்வுபூர்வமான வியப்புடனும் நம்பகத்தன்மையின்றியும் உள்ளன. திபெத்தின் மீது செயற்படும் சீனாவின் கொள்கைகளின் நேர்மை பற்றி முகஸ்துதி செய்யும் ஆர்வத்தில் அவர் அச்சமூட்டும் வகையில் ஸ்டீவன்ஸை அப்படியே எதிரொலிக்கிறார். இந்தக் கோடையில் திபெத்திற்கு சீனாவின் அதிகாரபூர்வ விருந்தினராக ஒரு வாரம் வழிகாட்டப்பட்ட சுற்றுலா சுற்றி வந்ததும் அவர் நம்பிக்கையோடு அறிவித்தது இது :
“இன்னும் ஒரு கால் நூற்றாண்டுகளிலோ அல்லது அதற்கு முன்போ திபெத் ஒரு முழுவளர்ச்சியடைந்த சமூகம் என்ற நிலையை அடைந்திருக்கும்”.
தன்னுடைய முன்னறிவிப்பை உறுதிப்படுத்த ‘இந்து’வில் இரு நீள கருத்துக் கட்டுரைகளும்(opinion piece) அதன் குழுமப் பத்திரிக்கையான ப்ரன்ட்லைனில் (Frontline) ஒரு நீண்ட கட்டுரையும் ஜூலையில் ராம் வெளியிட்டார். இந்தக் கட்டுரைகளுக்கு அவர் திரட்டிக் கொண்ட ஆதாரங்கள், அந்த ஒரு வாரச் சுற்றுலா போக ராம் மந்திரங்கள் போன்று கருதிய சீன அரசின் புள்ளிவிவரங்கள் மட்டுமே. இப்புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மைகள் குறைவு என்பதற்காக சில உதாரணங்கள்:
“[திபெத்தின்] பொருளாதாரம்...13.2% க்கும் அதிகமாக வளர்ந்தது”; “மொத்த தேசிய உற்பத்தி(GDP) 29 பில்லியன் யென்கள்(Yuan) அளவு உயர்ந்தது” ; “உணவுதானிய உற்பத்தி 9,20,000 டன்கள்” ; “96.5% குழந்தைகள் பள்ளியில் பயிலுகின்றனர்” ; “இதுவரை காணாத அளவிற்கு, 1.5 பில்லியன் யென்கள் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளால் வந்துள்ளது”…
இப்படிப் பல. இவ்வளவிற்கும் ராம் பேட்டிகண்ட திபெத்தியர் ஒரே ஒருவர்தான் எனத் தெரிகிறது. அவர் திபெத்திய அரசின் அவைத் தலைவர்(Vice-Chairman) மட்டுமே.

ராம் தோற்றமளிப்பது போல் அவ்வளவு அப்பாவியா? தனது திபெத்தினூடான கார்ப் பயணத்தைப் பற்றிஅவர் இதமாக இவ்வாறு எழுதுகிறார் :
“நீங்கள் வெளியுலகுடன் எவ்வளவு எளிதில் தொடர்புகொள்ளமுடியும் என்பது ஒரு ஆச்சரியம். உங்கள் கைபேசியில்(mobile) அல்லது பி.டி.ஏ (PDA)யில் உள்ள GPRS லகாசா-சிகாஸ்(Lhasa-Xigaze) நெடுஞ்சாலை முழுதும் வேலை செய்கிறது. இணையதளத்தில் உலாவி செய்திகள் படித்தபடியும் உங்கள் மின்னஞ்சலில் பதில் அனுப்பியபடியும் பயணிக்கும் நீங்கள் திபெத்தியர்களின் வாழ்க்கை முறையை சிறுகுறிப்பாக உணரலாம்”.
ஆனால் ‘டியனான்மென்’, ‘தலாய் லாமா’ என்பது போன்ற, சீன அதிகாரிகளால் அரசுக்கு விரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இன்னும் பல வார்த்தைகளை அவர் இணையதளத்தில் தேடிப்பார்த்திருக்க வேண்டும் அங்கே. அப்போது உலகின் மிகச் சிறந்த, வலிமையான ‘சீனப் பெரும் இணையதளச் சுவர்’(Great Firewall of China) என்கிற இணையதள தணிக்கை மென்பொருள் பற்றி அறிந்திருக்கமுடியும். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது ராம் தனது வாசகர்களை வேண்டுமென்றே ஏமாற்றுகிறாரா என்ற கேள்வி எழுகிறது.

சமரசத்துக்குள்ளான புறநிலைநோக்கு(Objectivity)
திபெத்தைப் பொறுத்தவரை ராம் தனது ஒருபக்கச் சார்பில் வெளிப்படையாகவே உள்ளார். தலாய் லாமாவை தாக்கும் அவர் தலாய் லாமாவை அயதுல்லா கொமைனியுடன் (Ayatollah Khomeini) ஒப்பிடுகிறார். பனிப்போர்காலத்திய வார்த்தைப் பிரயோகங்களுடன், ‘தலாய் லாமா காலனியாதிக்க நோக்கங்களுடன் மற்றும் மேற்கத்திய சக்திகளுடன் கைகோர்த்திருப்பதற்கு’ எதிராக தலாய் லாமாவைத் தாக்குகிறார் ; “தலைசிறந்த திபெத்தை ஒரு இயக்கத்தின் மூலம் தாய்நாட்டிலிருந்து பிரித்து எடுத்துச் செல்ல விரும்புகிற தகுதியில்லாத ஒரு அரசியல்வாதி” என விமர்சிக்கிறார். இந்த விமர்சனத்தை நாம் சீனாவின் கைகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ள, சீனாவின் பொருளாதாராத்தையே உயர்த்தி நிற்கும், அமெரிக்க அரசின் பங்குப் பத்திரங்களையும் சேர்த்துப் பார்க்கும்போது, இந்த மேற்கத்திய சக்திகளுடன் கைகோர்த்திருப்பது சீன அரசா அல்லது தலாய் லாமாவா என்ற கேள்வி எழாமலில்லை. சீனா, திபெத்தை வன்முறையாகக் கைப்பற்றியதானது வல்லரசுகளின் காலனியாக்கத்தின் அம்சமாக இருப்பதை நாம் சுட்டிக் காட்ட முடியும்.

ராம் கூற்றின் படி,
“மறுபிறவி சம்பந்தமான திபெத்திய புத்தமத நம்பிக்கைகள் இறைத்தன்மை-மதம் சம்பந்தப்பட்டவையாகவும் 21ம் நூற்றாண்டு ஆத்திகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பனவாகவும் இருக்கும், அதேசமயம் தலாய்லாமாவின் மறுபிறவி சம்பந்தமான அனுகுமுறை கூட அரசியல்-கருத்தியலாகவும் இருக்கிறது”.
மேலும் அவர்,
“பீஜிங் அரசு நூறாண்டுகள் பழைய சம்பிரதாயங்கள் மற்றும் மரபுகளை ” தொடர்ந்து பின்பற்றி வருவதனால், “தலாய் லாமா மற்றும் பன்ச்சென் லாமா(Panchen Lama)க்களை அங்கீகரிக்கவும், நியமிக்கவும் அதிகாரம் பெற்ற அரசாகிறது”.
இக்கூற்றிலுள்ள வரலாற்றுத் துல்லியம் கேள்விக்குரியது என்பதுடன் பின்வரும் கேள்வியையும் எழுப்புகிறது. தம்மை நாத்திகராக வெளிப்படையாக இனங்காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த 21ம் நூற்றாண்டில், இறைத்தன்மை-மதம் சார்ந்த அரசுக்குள் தலையிட வேண்டிய அவசியம் என்ன ?

“சைனாவின் அரசியலமைப்பு எல்லா குடிமக்களுக்கும் மதரீதியான சுதந்திரத்தையும், இனச்சிறுபான்மையிருக்கு பிரதேச சுயாட்சியையும் பரந்த சீனாவின் பெரும்பான்மையான பகுதிகளில் அளித்துள்ளது”
என்று ராம் உறுதியளிக்கிறார். ஒரு சட்டம் இருப்பதைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே அதன்படி எல்லாம் நன்றாக நடக்கிறது என்பதை நிரூபிக்குமா ? ராம் போன்ற மேன்மை தாங்கிய பத்திரிக்கையாளர்கள் திபெத்தில் மட்டுமின்றி சீனா முழுதும் பரவி இருக்கும் மதரீதியான ஒடுக்குமுறைகளைப் பற்றி அறியாதவர்களல்லர். திபெத்தில் தலாய் லாமாவின் படத்தை வைத்திருப்பது இன்றும் கூட குற்றம் தான். அம்னெஸ்டி இன்டர்நேஷனல்(Amnesty International)ன் 2006 அறிக்கையின் படி,
“திபெத்தில் மதம், கருத்து மற்றும் சங்கம் சம்பந்தமான சுதந்திரங்கள் தொடர்ந்து மறுக்கப்பட்டுக் கொண்டிருப்பதோடு, தன்னிச்சையான கைதுகளும் நேர்மையில்லாத வழக்குகளும் தொடர்கின்றன”.

தவிரவும், ராம் தனது பழைய கருத்துக்களான “சீனாவின் முன்னெப்போதுமில்லாத பொருளாதார வளர்ச்சி” மற்றும் “உள்ளடக்கும் மற்றும் நெகிழ்ந்து கொடுக்கும் சமூக-அரசியல் மற்றும் பண்பாட்டுக் கொள்கைகள்” என்பன திபெத்தின் விஷயத்தில் அது காட்டும் “அளவுகடந்த பொறுமை”யின் குறியீடுகளாகக் காட்டுகிறார். நாட்டில் ஏழை பணக்காரர் இடையேயான பிரிவு வளர்ந்திருப்பதை சீனாவே ஒப்புக்கொண்டிருக்க ராமின் கூற்று ஒரு மிகைப்படுத்தப்பட்ட புகழ்ச்சி. இதில் கவனம் ஈர்க்கும் விஷயம் ராம் இன்னும் சீனாவின் மார்க்சியப் பாதையில் நம்பிக்கையோடு இருப்பது தான்.
“நாட்டின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க மார்க்சிய-லெனினிய வழியில் சட்டம் தேசிய பிரதேச சுயாட்சியை அடிப்படை அரசியல் அமைப்பாகக் கொண்டிருக்கிறது” என்கிறார்.
சீனக் கட்சியானது தற்போது ஜனநாயகச் சுதந்திரம் அல்லது சங்க உரிமைகள் போன்றவற்றால் கட்டுப்படுத்த இயலாத “லெனினிய முதலாளித்துவ” த்தைத் தொடங்கியுள்ளது நாம் நன்கறிந்ததே. இந்தப் புள்ளியில் பீஜிங்கின் ஆட்சியாளர்களின் தற்போதைய ஒரே கோட்பாடு எவ்வளவு விலைகொடுத்தும் சர்வாதிகாரத்தைக் கையில் வைத்திருப்பது தான்.

திபெத்தின் தலையெழுத்தை கேள்விக்கிடமின்றி சீன ஆட்சியாளர்களிடம் கையளித்த ராம் இதில் இந்தியாவின் பங்கை மறந்துவிடுகிறார்.
“திபெத்தானது பகை நாடுகளுக்கிடையேயான முரண்பாடுகளைத் தாங்கும் இடைநிலை அரசாக ஆசியாவில் பல நூற்றாண்டுகளாக கருதப்பட்டு வந்திருக்கிறது”
என்கிற தலாய் லாமாவின் கூற்றை மறுக்கிறார். ஆனால் உண்மையில் 1960ல் மக்கள் விடுதலைப் படை(People’s Liberation Army) திபெத்தைக் கைப்பற்றும் வரை இநதியாவிற்கும் சீனாவிற்குமிடையே பொதுவான எல்லைகள் இருந்ததில்லை. சென்ற ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் யக்சிய்(Sun Yuxi)ன்
“அருணாச்சலப் பிரதேச மாநிலம் முழுவதும் சீனாவுக்குச் சொந்தமானது”
என்று கூறியதற்கு ராமின் பதில் என்ன ? திபெத்தின் இறையாண்மை வன்முறையாக ஒடுக்கப்படாமல் இருந்திருந்தால் சீனா தற்போது இம்மாதிரி வாக்கியங்களை உதிர்த்திருக்கமுடியுமா என்பது இந்து நாளிதழின் பதிப்பாசிரியருக்கு உறுதியாகத் தெரியும். தற்போது இந்துவும், ப்ரன்ட்லைனும் சீனாவின் திபெத்திய ஆக்கிரமிப்பை முழு ஆதரவுகொடுத்து எழுதுவது போல, எந்த சீனப் பத்திரிக்கையாவது இந்தியாவின் இறையாண்மைக்காக அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் பகுதி என்று ஆதரித்து எழுதுமா ? அல்லது ராமின் வெவ்வேறு நாடுகளின் ஜனநாயகச் சுதந்திரத்திற்கான அளவுகோல் நாட்டுக்கு நாடு மாறுபடுமா ?

உலகின் தலைசிறந்த பத்து பத்திரிக்கைகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்ட இந்துப் பத்திரிக்கைக்கு ஜூன் 2003ல் பிரதம பதிப்பாசிரியராக ராம் பொறுப்பேற்றது முதலே, அவருடைய தீவிர சீனச் சார்பு நிலையானது பத்திரிக்கையின் புறநிலை நோக்கைச் சமரசம் செய்ய வைத்துள்ளது என்று பொதுவாகக் கருதப்படுகிறது.
உலகின் அனைத்துத் தரப்பு நிருபர்களாலும் “உலகின் மிகப்பெரிய பொய்ப் பிரச்சார நிறுவனம்” என்று அழைக்கப்படும் சீன அரசுச் செய்தி நிறுவனமான சின்ஹூவா(Xinhua)வின் செய்திகளை அப்படியே வரி பிசகாமல் வெளியிடும் ஒரே பிரபல இந்தியப் பத்திரிக்கை இந்து நாளிதழ் தான். இந்துப் பத்திரிக்கையின் செய்தியாளர்கள் தங்களுக்கு திபெத், தலாய் லாமா மற்றும் பாலுன் கோங்(Falun Gong) பற்றிய கதைகள் எழுதும் போது அவை சீன அரசுக்கு எதிராக இருந்தால் எழுதவேண்டாம் என உத்தரவுகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். ராம் பதவியேற்றது முதல் இந்து நாளேட்டில் வெளிவந்த செய்திகளை மேம்போக்காகப் பார்த்தாலே இந்த உண்மை விளங்கும்.

நம் முன் எழும் முக்கியக் கேள்வி என்னவெனில், இவ்வளவு பிரபலமும், முக்கியத்துவமும் உடைய பத்திரிக்கையாளர் தனது சுய வளர்ச்சியையே பணயமாக ஏன் வைக்கவேண்டும் ? பத்திரிக்கையின் முழுமையையும் சேர்த்துப் பணயம் வைத்து சீனாவின் ‘பயனுள்ள முட்டாளாக’ ஏன் மாற வேண்டும் ? அவருடைய பயண நண்பர்களைப் போல கம்யூனிஸக் கருத்தியலையோ அல்லது தனது அறியாமையையோ பீஜீங்கின் சர்வாதிகார ஆளுகையையும் மற்றும் திபெத்தின் மீதான காலனிய ஆதிக்கத்தையும் தான் முன்னிலைப் படுத்துவதற்கு காரணமாக அவர் சொல்ல இயலாது.

(ஹிமல் தெற்காசியப் பத்திரிக்கை(Himal Southasian Magazine)யில் செப்டம்பர் 2007 இதழில் வெளியிடப்பட்ட டென்சிங் சோனம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்)

Friday, October 16, 2009

இலங்கைக்குச் சென்ற தூதுக்குழு

இலங்கைக்கு சென்ற தூதுக்குழு திரும்பி வந்திருக்கிறது. அங்கே போய் ராஜபக்சே வீட்டில் விருந்து சாப்பிட்டுவிட்டு முகாம்களில் போய்க் 'கைகழுவி' விட்டு வந்திருக்கிறார்கள். இந்தியாவின் கபட நாடகம் என்று எதிர்கட்சிகள் எல்லோரும் வருணிக்க, டெல்லி காங்கிரஸ்காரர்கள் இயக்கத்தில் நடந்த இந்த கபடநாடகத்தில் 'தர்மராய்' நம் கலைஞர்.

தூதுக்குழுவை அனுப்பச்சொல்லி ராஜபக்சே லட்டர் போட்டுத்தான் நம்ம ஆட்கள் போனார்கள் என்று கலைஞர் சொல்கிறார். போனவர்கள் அவங்கவங்க சொந்தக் காசுல தான் போனாங்க; நீங்களும் வேணும்னா போகவேண்டியதுதானே என்று கலைஞர் பொறுப்பை எதிர்கட்சிகளிடம் தள்ளுகிறார். எதிர்கட்சிகள் 'அப்படியா..சரி..இதோ எங்க குழு ரெடி.. அவங்களை பத்திரிக்கையாளர்கள் கூட அனுப்ப முடியுமா ?' என்று பதிலுக்கு வரிந்துகட்டிக்கொண்டு நிற்காமல் நெடுமாறன் ஐயா முதல் சி.பி.எம் வரை கபடநாடகம் என்கிற அறிக்கைகளோடு நின்று கொண்டார்கள். இதில் கேப்டன் கூடுதலாய் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி. விசாரணையிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்த தூதுக் குழுவை வரவைத்து உலகை ஏமாற்ற முயல்கிறார் என்கிறார். ஒருவேளை எதிர்க் கட்சிகள் எல்லாம் வரிந்து கட்டியிருந்தால் 'ஹி..ஹி.. சென்டர்ல இறையாண்மை குறையுதான்னு பார்த்து பெர்மிசன் குடுப்பாங்க'...'ஹி..ஹி.. ராஜபக்சேவோட இறையாண்மை குறையுதான்னு பார்த்துட்டு அவர் பெர்மிசன் குடுப்பாரு' என்று மக்கள் முன் மத்திய மாநில ஆளும் முகங்கள் இன்னும் அம்பலப்பட்டிருக்கக்கூடும்.

இப்படித்தான் போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் போகும் safety zoneக்குள் குண்டு போடுகிறார்கள் என்று இங்கிருந்து எதிர்கட்சிகள் குரலெழுப்ப ராஜபக்சே "அப்படியா..வந்து தான் பாருங்களேன்"னு ஜெயலலிதாவுக்கு அழைப்பு விட அப்போதும் அம்மையார் உட்பட எல்லோரும் இங்கேயே பங்க் குழிகளுக்குள் பதுங்கினார்கள்.

இப்போது போய்விட்டு வந்த சிறுத்தை திருமாவோ 'பிராபாகரனோடு போர்க்களத்தில் நீங்க இருந்திருந்தால் உங்களையும் கொன்றிருப்பேன்' என்று ராஜபக்சே சொன்னதை 'நகைச்சுவை'யாகப் பேசினார் என்கிறார்(சபை நாகரிகமாம்). இதைவிட அசிங்கம், ராஜபக்சே கட்டின முகாம்கள் நல்லா வழுவழுன்னு இருந்தது.ஐ.நா. கட்டின முகாம்கள் தான் மோசமா கொஞ்ச நாள்தான் தங்கப்போற மாதிரி இருந்தது என்று இவர் கொடுக்கும் சேனிட்டரி இன்ஸ்பெக்டர் சர்டிபிகேட். ராஜபக்சே 10 வருஷம் மக்கள் முகாம்கள்ல சந்தோஷமா இருக்கட்டும்னு கக்கூஸ் வரைக்கும் ஏ.ஸி. வச்சு கட்டிட்டாராம்.. இந்த ஐ.நா. வெட்டிப் பசங்கதான் ஏதோ ஒரே மாசத்துல முகாமை காலி பண்ற மாதிரி டெம்பரவரியா முகாமைக் கட்டிட்டாங்களாம். அவரை முகாமில் சந்தித்த தம்பி சொன்னாராம் 'நீங்க(தமிழ் நாடு) கொடுத்த டிரெஸ் தான் இது. இது ஒன்னுதான் இருக்கு. அதைத்தான் மாசக்கணக்கா போட்டுகிட்டு இருக்கேன்' என்று சொன்னாராம். புரிந்ததா உங்களுக்கு..? திருமா அண்ணன் எதைப் பதிவு பண்றாருண்ணு ? நாலுமாசமா வணங்காமண் கப்பலை ராப்பிச்சக்காரன் ரேஞ்சுக்கு அலைக்கழிச்சு கடைசில கலைஞர் 'கருணையால்' கொழும்பு துறைமுகத்து வரைக்கும் அனுப்பப்பட்டு அங்க துறைமுகக் குடோன்ல நாறிக்கிட்டு கிடக்கிற உலகத்தமிழ் மற்றும் நம்ப தமிழ் மக்கள் அனுப்புன உணவு, மற்றும் துணிமணிகள் எல்லாம் அங்கிருந்து கால் முளைச்சு நேரா நடந்து முகாம்களுக்குப் போயிடுச்சின்னு சொல்றாரு.

இதில் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழீழ ஆதரவாளர்களுக்கு போராட்டத்தில் தங்களின் பங்கு பற்றி என்ன நிலைப்பாடு என்பது புரியவில்லை. ஈழ ஆதரவு மாநாடுகளும், தீர்மானங்களும், கண்டன ஆர்ப்பாட்டங்களும் மட்டுமல்ல தமிழ் ஈழஅழிப்பு அரசியலுக்கு எதிரான 'அரசியலும்' செய்யவேண்டுமா இல்லையா ? யாரும் இங்கு மாநில அரசு, மத்திய அரசுகள் நடத்தும் நாடகங்களை அம்பலப்படுத்தும் அரசியல் செய்யவேயில்லையே ஏன் ? இப்படி வேடதாரிகள், கபட நாடகம், என்று அறிக்கைகள் மட்டும் விடுவது அந்த அரசியலுக்கு எதிராக என்ன செய்யும் ? மக்களுக்கு உண்மையை யார்தான் விளக்குவார்கள் ?

தமிழ் நாட்டு மக்கள் விலைவாசி உயர்வுகள், சிறுதொழில் தேக்கங்கள், திடீரென வேலையின்றிப் போன குடும்பங்கள் கோடி என்று அல்லல்பட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு பருப்பு சாமான் என்று அம்பானிகளின், Fordகளின், சன் குடும்பங்களின் புறங்கைகளில் வடிந்து சொட்டும் துளியூண்டு தேனை.. வேண்டாம் என்னை நானே திட்டிக்கொள்ளவேண்டாம்..கணநேர தற்காலிக நிம்மதிகளில் தீபாவளியைக்(தமிழனை ஆரியன் கொன்ற நன்னாளை ?) கொண்டாடி ஏதோ வாழட்டும். இதற்கு நடுவில் அங்கே மூன்று லட்சம் பேர் முகாம்களில் வாடுகிறவர்கள் வாரத்தில் ஒரு முறைதான் குளிக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்..? டி.ஆர். பாலு போனாரே இங்கிருந்து கூலிங்கிளாஸ்லாம் போட்டுட்டு, அவர் இங்கிருக்கும் கும்பானிக்களுக்கு காண்ட்ராக்ட்டுகள் பிடித்துக் கொடுத்து அவர்கள் ஈழத்தமிழர் வாழ்வை புணரமைத்துவிடாமல் தூங்கமாட்டார்களே. பின் என்ன கவலை ?

Tuesday, October 6, 2009

உன்னைப் போல் ஒருவன் - சினிமா விமர்சனம்

ஹிந்தியில் வந்த 'wednesday' படம் பார்த்திருந்தேன். அதில் ஹிந்தி சரியாகப் புரியாததால் படம் முழுக்கப் புரியவில்லை. உ.போ.ஒ அதன் தமிழ் ஆக்கம். உலக நாயகன் கமல்ஹாசன் எடுத்திருக்கிறார். கமல் தமிழ்ச் சினிமாவின் முக்கியமான தூண்களில் ஒருவர். ஆனால் அந்தத் தூணே இந்துத்துவா தூண் என்பது தான் வேதனை. சுகுணா திவாகரின் வலைத்தளத்தில் இதைப் பற்றி விலாவரியாக எழுதியிருக்கிறார்.

படத்தின் கரு, தீவிரவாதிகள் ரயில்வே ஸ்டேஷன், பஸ்டாண்டு, தியேட்டர், மார்க்கெட் என்று பொது இடங்களில் குண்டு வைக்க, வெடித்துச் சாகும் சாதாரண பொதுஜனம் (common man) வெகுண்டெழுந்து தீவிரவாதிகளைக் குண்டுவைத்துக் கொன்றால்... என்கிற எதிர்வினை எண்ணத்தில் எழுந்த கதை. இந்த எண்ணத்தை அரசியல் கலக்காமல் அப்படியே தெளிவாக திரைக்கதையாக்கியுள்ளார்கள் ஹிந்தியில் என்றான் என் நண்பன். தமிழில் கமல் மணிரத்னம் பாதையில் தனது 'தேசபக்தி' கலந்து கொடுத்திருக்கிறார். தீவிரவாதிகள் உலகெங்கும் நடத்தும் (வி.புலிகள் அப்படிச் செய்வதை கொள்கை அடிப்படையாகக் கொண்டவர்களில்லை என்றாலும் கூட அப்படிக் கொன்றிருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது ) அரசுகளுக்கெதிரான போராட்டத்தில் இன்றும் வெடித்துச் சாகுபவர்களில் அப்பாவி மக்கள் பெரும்பான்மையினர். இது விடுதலைப் போராட்டத்தை மக்களிடமிருந்து அந்நியப்படுத்த எளிதில் பயன்படுகிறது; தீவிரவாதிகளுக்கு எதிரான உணர்வை, பயத்தை மக்களிடம் உருவாக்க அரசுகளால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கையறு நிலையில் ஆயுத பலங்களில் அரசுகள் முன் மண்டியிட வேண்டிய, பலமில்லாத தீவிரவாத விடுதலை இயக்கங்கள் இந்தத் தவறை உணர்ந்து கொள்வதில்லை. இத்தோடு தீவிரவாதிகள் தங்களது இலட்சியங்களை மறந்து சுயலாபங்களுக்காக பணலாபங்களுக்காக கொலைகள் புரியும் பயங்கரவாதிகளாக மாறிவிடுவதும் நடக்கிறது.

ஆனால் தியேட்டரில் பொதுஜனங்கள் கையைத்தட்டி இப்படத்தை ரசித்ததை சொல்லியாக வேண்டும். இஸ்லாமியர்கள் தவிர. ஏனென்றால் ஓர் R.S.S காரன் இஸ்லாமியர் எந்த 'மாதிரி' தேசபக்தியுடன் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறானோ அப்படியே படத்தில் எல்லா இஸ்லாமிய கதாபாத்திரங்களும் உள்ளன(எ.கா. ஆரிப்). கமல் படத்தில் இந்து, கிறித்துவ, இஸ்லாமிய அடையாளங்கள் கலந்து வருகிறார். அது தேவையே இல்லை; அவர் பக்கா இந்து என்று படத்தில் வரும் 'சம்பவாமி யுகேயுகே' வாசகங்கள் சொல்லிவிடுகிறது தெளிவாக. கமல் நாத்திகராம். நம்பமுடிகிறதா ?

படத்தின் அரசியல், தீவிரவாதிகள்=வில்லன்கள் என்கிற மக்கள் கொண்டுள்ள கருத்தைக் கொண்டே படத்தோடு மக்களை இணைக்கும் கருவியாகப் பயன்படுத்துகிறது. எடுத்தவுடனே கமல் ஒரு தீவிரவாதிபோல் சில வெடிகுண்டுகள் எனச் சந்தேகப்படும் 'பேக்'குகளை பஸ், போலிஸ் ஸ்டேஷன், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்று ஒரு ஆறு இடங்களில் வைக்கிறார். பின்னர் தனது லேப்டாப் மற்றும் ஹைடெக் சாதனங்களின் உதவியோடு காவல் துறை கமிஷனர் மோகன்லாலுக்குப் போன் செய்து இத்தகவலைச் சொல்லி சிறையில் இருக்கும் ஐந்து தீவிரவாதிகளை (அல்கொய்தா, அல்உம்மா.. போன்ற இஸ்லாமியத் தீவிரவாதிகள் அனைவரும்) விடுவித்து தான் சொல்லும் இடத்தில் வந்து ஒப்படைக்கச் சொல்கிறார். அவர்கள் ஒப்படைத்ததும் தான் படத்தின் கிளைமாக்ஸ், யாரும் எதிர்பாராத திருப்பம்..

இந்தக் கருவை மட்டும் கதையாக சொல்லியிருந்தால் கூட படம் நன்றாக இருந்திருக்கும். இந்திப்படம் இந்த ஜாக்கிரதை உணர்வோடு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழில் ஏற்கனவே குருதிப்புனலில் தீவிரவாதிகளை சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கேவலமானவர்களாகவும், RAW வுக்குப் போட்டியாக போலீஸ் உயர் அதிகாரிகள் வரை கைவசம் வைத்திருப்பவர்களாகவும் காட்டிய கமல் இப்படத்தில் இன்னும் கூடுதலாகவே தேசப் பற்றைப் பொழிந்திருக்கிறார். உண்மையில் கெட்டவார்த்தை சொல்லி திட்டவேண்டும் கமல் சாரை. ஆனால் திட்ட வாய் வரவில்லை. அவருடைய மனசாட்சியிடம் அப்பொறுப்பை விடுகிறேன்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக இன்னும் இருப்பதற்குக் காரணம் இங்கு பா.ஜ.க போன்ற வெறியர்களை திராவிட இயக்கங்கள் விரட்டியடித்து மக்கள் மனத்தில் மத வெறி எழாமல் பார்த்துக் கொண்டதுதான். இல்லாவிட்டால் இன்று கமல் சாரே பால் தாக்கரே போல் வசனம் பேசிக்கொண்டிருக்கக் கூடும். ஆனால் அவர் தமிழகம் ஏன் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று வயிரெறிகிறார். போதாக்குறைக்கு 'போராளிகள்' என்று தீவிரவாதிகளை வேண்டுமென்றே அழைக்கிறார். போராளிகள் என்று தமிழில் அழைக்கப்படும் தீவிரவாத இயக்கம் எது என்று நமக்குத் தெரியும். இஸ்லாமியத் தீவிரவாதிகள் மத்தியில் அப்பாவியாக வரும் ஆயுதம் விற்கும் ஒரு இந்து, சும்மா சப்பைக் கட்டுக்காக. ஒரு இஸ்லாமியத் தீவிரவாதி தனது (மூன்றாவது)மனைவி பெஸ்ட் பேக்கரியில் வைத்து எரிக்கப்பட்டாள் என்பதற்காக (காஷ்மீரில் கொல்லப்பட்டதற்காகவோ, கோத்ராவில் எரிக்கப்பட்டதற்காகவோ, பம்பாய் கலவரத்தில் அல்லது குஜராத் கலவரத்தில் விரட்டிக் கொல்லப்பட்டதற்காகவோ இல்லையாம்..) தீவிரவாதியானேன்(?) என்று சொல்லும் போது இந்த இந்து அப்பாவி 'அதான் மிச்ச ரெண்டு இருக்கில்லப்பா' என்று காமெடி பண்ணுகிறான். இஸ்லாமியனின் துயரம் காமெடியாகுமாம் 'மும்பை ரயில் குண்டுவெடிப்பு' 'தாஜ் ஹோட்டல் எரிப்பு' இவர்களுக்கு 'சீரியசாக' நாட்டுப் பற்றை ஊட்டுமாம். எப்படி கமல் சார் உங்கள் 'காமன் மேன்' இந்துவாக மட்டும் இருக்கிறான். அதுமட்டுமல்ல உங்கள் போலீசில் வேலை பார்க்கும் ஆரிப் கூட அப்படித்தான் இருக்கிறான். இஸ்லாம் தீவிரவாதிகள் பற்றி தகவல் சொல்லும் இஸ்லாமியனிடம் மட்டும் இணக்கமாகப் பேசுகிறான். அதாவது 'அரச பயங்கரவாதத்துக்கு' துணை போகும் ஆபீசராக இருந்தால், ஒரு இஸ்லாமியனே இஸ்லாமியனை சுட்டுக் கொன்று
என்கௌன்டர் செய்து திமிராக நெஞ்சு நிமிர்த்தி நடக்கலாம் என்று நிறுவுகிறான்.

இன்றைய முதலாளித்துவம் சோசலிஸம் பேசுவதுபோல் இப்படம் இந்துத்துவா விஷத்தை "நாட்டுப் பற்று" சோற்றில் கலந்துதான் வைக்கிறது. ஆரிப் செய்யும் சில விஷயங்களும் இஸ்லாமியருக்கு ஆதரவாயிருப்பது போல தோற்றம் தரச் செய்யும் கலப்படங்கள். இந்தக் கால அரசியல் நீக்கம் பெற்ற சூழலில் வளரும் இளம் தலைமுறையினர் இந்த விஷத்தை கவனிக்காமல் நாட்டுப் பற்று சாப்பாட்டை சாப்பிடுவதும் இப்படத்தில் நடக்கிறது. முந்தா நாள் விஜய் டி.வியில் கமலுடன் ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு கல்லூரிப் பெண் 'உங்களை கட்டிப் பிடிச்சி அழுதுடுவேன் சார்' என்று அழுதாள். ஆனால் அதே நிகழ்ச்சியில் பம்பாய் ரயில்வே ஸ்டேஷன் துப்பாக்கிச் சூட்டை நேராகப் பார்த்த ஒருவர் 'வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்று ஏன் சார் சொன்னீங்க' என்று பொட்டிலடித்தார் போலக் கேட்டார். என்கௌண்டர் கொலைகளை ஞாயப்படுத்தும், வன்முறையை ஞாயப்படுத்தும் கமல் 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்' என்கிற போர்வையில் புஷ் செய்த கொலைகளை தமிழில் செய்திருக்கிறார்.

சினிமா என்கிற ஊடகமாக இப்படம்:
படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே விறுவிறுப்பில் செல்வதால் திரைக்கதை வெற்றியானதுதான். அதற்கு படம் நிறுத்தும் இரு எதிர்நிலைகள் தீவிரவாதம் X அரசு. தீவிரவாதியின் பயங்கரம் அவன் வைக்கும் குண்டுகள் வெடிக்காமல் படம் முழுதும் துடிக்கும் துடிப்பில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தப் பயங்கரத்திற்கு அரசு சவாலாக என்ன எதிர்வினை செய்கிறது என்பதற்கான காட்சியமைப்புகளும் கதாபாத்திர அமைப்புகளும் உள்ளன. மோஹன்லால் தனது கீழதிகாரியை 'கல்யாணம் ஆகிடுச்சா' என்று கேட்டு "யெஸ் ஸார்" என்று அவன் சொன்னவுடன் "நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்ய தயாரா" என்று கேட்க, அதற்கு அந்தக் காக்கிச் சட்டை அதிகாரியின் பதிலில் தியேட்டரில் படம் பார்ப்பவர்கள் பரவச நிலையை அடைகிறார்கள். வேறு சில கட்டங்களில் இது வெறும் இரு ஈகோக்களுக்கிடையேயான சண்டையாகக் கூட மிளிர்கிறது (WWF ஸ்டைலில்).

ஆனால் கமல், மோஹன்லால், லஷ்மி, இரு கீழதிகாரிகள் போன்ற யாருடனும் பார்வையாளர்கள் ஒன்ற முடிவதில்லை. தீவிரவாதிகளுக்கோ முகமே இல்லை. 'Character development' என்பதே இல்லை. இந்திப் படத்திலும் இக்குறை உண்டு. மோஹன்லால், கமல் இருவரின் நடிப்பும் ஓ.கே. என்று கூட சொல்ல முடியாது. பிசிறு தட்டுகிறது. மற்றும் கமல் சார் ஊர் பூராவும் குண்டு வைத்து மிரட்ட, அதை ஒரே ஒரு டி.வி. மட்டும் கடைசி வரை படம் பிடிக்க மற்ற டி.வி.க்கள் இதைக் கவனிக்கவேயில்லை என்பது என்ன லாஜிக். பொதுமக்கள் இந்நிகழ்வுகளைப் பார்த்து என்ன உணர்வடைந்தார்கள் என்று படம் முழுவதிலும் ஒரு சின்ன ஷாட் கூட காண்பிக்கப்படவில்லை. இது வீடியோ கேம் விளையாடும் உணர்வை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்திவிடுகிறது. கமல் லேப்டாப் முன்னால் உட்கார்ந்து கொண்டு 'ரேஷன் கடையில் அரிசி வாங்க கியூவில் நிற்கும் காமன் மேன் நான்' என்று சொல்வது பொருத்தமில்லாமல் இருக்கிறது. photography, editing இரண்டும் அப்படியே இந்திப் படத்தின் சாயலை பிரதியெடுத்துள்ளன. ஸ்ருதி ஹாசனின் (கமலின் மகள் தான்) இசையில் தீம் பாடல் சம்பவாமி யுகேயுகே என்று ஆரம்பித்து உ.போல்.ஒ என்று புகழ்பாடியபடியும், MTV ல் போடுவதற்கு வசதியாக 'வானம் எல்லை'யில் ராப்,தவில் கலந்து ஸ்ருதிஹாசன் குரலில்(பரவாயில்லை) இனிமையாகவும், 'நிலை வருமா' பாடல் (போலி)மதச்சார்பின்மையை கமல் குரலில் பாடவும்.. அதே போன்ற தீம் இசை படம் முழுவதும் வருகிறது + வழக்கமான த்ரில்லர்களின் இசை. படம் முழுக்க அப்படி வாசிக்க வேண்டிய அளவுக்கு (கமல் சாரின்)தேசபக்தி அரிப்பைத் தவிர வேறு ஒன்றும் சொரிவதற்கு இல்லை. (western)இசை பெரிதாகக் குழப்பிவிடவில்லை. அடுத்த படங்களில் பார்க்கலாம்.

இன்றைய Consumerist உலகத்தில் இப்படம் நாட்டுப் பற்றைச் சொன்னதை விட எப்படி செல் போனில் பேசினாலும் இடம் கண்டுபிடிக்கமுடியாமல் இப்படிக் குழப்பினான் என்று டெக்னாலஜி ஆச்சர்யங்களிலும் சின்ன அரசியல் நையாண்டிகளிலும் தொய்வின்றி போனது என்றும் சொல்ல வேண்டும். பிராமணியம், இந்துத்துவம் இல்லை என்று இனி கமலே படம் எடுத்தால் கூட நம்ப முடியாது போங்கள்.

நான் அவன் இல்லை.
மதிப்பெண்: 10 க்கு 4.

Saturday, September 19, 2009

(காகித) அரண் - சினிமா விமர்சனம்.

டி.வி.யை ஆன் செய்தபோது வந்தது நியூஸ். இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவவில்லை. ஊடகங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று ராணுவ தளபதி தீபக் கபூர் சொன்ன ப்ளாஷ் நியூஸ். காலையில் செய்தித்தாளில் படித்த நியூஸ் ஞாபகம் வந்தது. 13 ஆயிரம் அடி உயரத்திலிருந்த இந்திய ராணுவ விமான தளத்தில் ஆயுதங்களுடன் போய் இறங்கியது என்ற நியூஸ் பத்திரிக்கையின் 7வது பக்கத்தில் வந்திருந்தது. சீனாவும் இந்தியாவும் நண்பர்கள் என்று வேறு எஸ்.எம்.கிருஷ்ணா ஸர்டிபிகேட் கொடுத்திருந்தார். சரி பார்க்கலாம் எத்தனை நாளைக்கு கண்ணாமூச்சி என்றுவிட்டு சேனலை மாற்றினேன்.

ஒரு படம் ஆரம்பித்துக்கொண்டிருந்தது ‘இனமான” டி.வி.யில். பெயர் அரண். பாதுகாப்புச் சுவர் என்கிற அர்த்தத்தில். தேசபக்தி இசை டைட்டிலிலேயே ஆரம்பித்தது. சரிதான் ரொம்ப தேசபக்தி என்று நெஞ்சை நக்குவார்களே என்று சேனலைத் திருப்புமுன் கதை ஆரம்பித்துவிட்டது. சரி கொஞ்சம் பார்ப்போமே என்று பார்த்தால்..

எடுத்தவுடன் கதை ஆப்கானிஸ்தான் காபூலுக்குத் தாவுகிறது. அங்கே நம் இந்திப்பட வில்லன் ஒருவன் பாகிஸ்தான் தீவிரவாதி. அவன் ஆப்கானிஸ்தானில் தலீபன்களால் கைது செய்யப்பட்டு கொல்லப்பட இருக்கும் தீவிரவாதிகளை விலைக்கு வாங்கி கூலிக்கொலையாளிகளாக காஷ்மீருக்கு கடத்தி வருகிறான். ஆயுதப் பயிற்சி கொடுக்கிறான். காஷ்மீரில் மசூதிகளுக்குள் ஆயுதங்களை ஒளித்து வைத்துக்கொண்டு சின்ன சின்ன குழந்தைகள் போகும் பஸ்களில் சரியாகக் குண்டு வைக்கிறான். இப்படி இஸ்லாமியத் தீவிரவாதிகள் காஷ்மீர் மக்களையும் கொடுமைப்படுத்த, இவர்கள் அக்கிரமத்தை தடுத்துக் கேட்கவேண்டாமா ?

அவர் தான் ஜீவா. கதாநாயகன். அவர் ஒரு ராணுவ கமாண்டோ. அவருடைய மேஜர் நம்ப மலையாள மோகன்லால்(இவருக்கு ஒரு சோக பேமிலி பிளாஷ்பேக்கும் உண்டு – பின்னே 21/2 மணி நேரம் எப்படி ஓட்டுறதாம்). அவர்களுடைய குழுவின் வேலை காஷ்மீரில் இயங்கும் தீவிரவாத குழுக்களைக் கண்டறிந்து அதிரடி ஆப்பரேஷன் செய்து ஒழித்துக்கட்டுவது தான் வேலை. ரொம்பக் கஷ்டமான வேலை தான். கதை ஒன்றும் குளுகுளுவென்றில்லையே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஹீரோவுக்கு கல்யாணம் பொள்ளாச்சியில். கோபிகாவைக் கண்டு, காப்பாற்றி (ரௌடிகளிடமிருந்து), டாவடித்து பின் கல்யாணமும் கட்டிக்கொண்டு மூன்று நாட்கள் தேனிலவு நாட்களை என்ஜாய் பண்ணிக்கொண்டிருக்கும் போது ராணுவத்திலிருந்து ‘அவசர’ அழைப்பு வர பறந்து வருகிறார் காஷ்மீருக்கு. கூடவே கஞ்சாக் கருப்பு காஷ்மீர் நாயர் ஹனீபா வைத்திருக்கும் டீகடைக்கு எடுபிடியாக வர, ரமேஷ்கண்ணா ‘ரகசியா’வின் பரம ரசிகராக மட்டும் வரும் ராணுவ வீரர் (காமெடி வேண்டாமா என்று நினைத்திருப்பார்கள் போல... மொத்த படமே முழுநீள நகைச்சுவைதான் போங்கள்). ரகசியாவின் நடன விருந்தும் ராணுவ வீரர்களுக்கு உண்டு. இந்த லட்சணத்தில் பிரகாஷ்ராஜ் வேறு ஒரு ராணுவ கமாண்டராக வந்து வீணடிக்கப்பட்டிருக்கிறார் (மோகன்லாலும் தான்).

இந்தப் படத்தை எப்படி அனுமதித்தார்கள் என்றே எனக்குப் புரியவில்லை. படம் முழுக்க இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கிறது. தலீபான்கள், காஷ்மீர் தீவிரவாதிகள் யார், அவர்களின் போராட்டம், வரலாறு என்ன என்கிற ஒரு சின்ன கேள்வி கூட எழுப்பாமல், தீவிரவாதி ஒரு முஸ்லீம் குடும்பத்தை சிறைப்பிடித்து சித்திரவதை செய்வதாகவும், அவர்களின் குடும்பத்துப் பெண்ணை கெடுப்பதாகவும் சித்தரிக்கும் குரூரம் செய்திருக்கிறார்கள்.

ஒரு இடத்தில் ஒரு தீவிரவாதிக் கூட்டத்தை வளைத்துப் பிடித்து எல்லோரையும் சுட்டுக் கொல்ல கடைசியில் அவர்களின் தலைவன் மெஷின் கன்னை எறிந்து விட்டு கூலாக ‘சரண்டர்’ ஆகிவிடுவான். அப்போது அவர்கள் சுடமாட்டார்களாம். அவன் தைரியமாகச் சொல்லுவான் ‘என்னை நீங்க ஜெயிலிலே அடைப்பீங்க. நாங்க சில மக்களைக் கடத்திட்டு, அவங்களைப் பணையமாக்கி பின்னர் நான் விடுதலையாகிடுவேன்’ என்கிறான். எவ்வளவு அப்பாவி காஷ்மீர் இன இளைஞர்களை ‘விசாரிக்க’ அழைத்துப் போய், வருஷக்கணக்கில் வைத்திருப்பதும், சுட்டுக் கொல்லப்பட்ட அவர்களின் உடல்களை சாலையோரத்தில் கொண்டுவந்து போட்டுவிட்டு, கூடவே இரண்டு ரைபிள்களையும் போட்டுவிட்டு ‘தீவிரவாதிகளைப்’ பிடித்ததாக போஸ் கொடுக்கும் இந்திய ராணுவம் பற்றி நமக்கு இவர்கள் படம் எடுப்பதில்லை. ஒரு ராணுவ வீரன் காயம் பட்ட தீவிரவாதியைச் சரியாகச் சுட்டுக் கொல்லவில்லை என்று மோகன்லால் அவனை மிரட்டி உருட்டி தேசபக்தியூட்டி(?) அவன் படபடவென காயம் பட்டுக் கிடப்பவனை சுட்டுக் கொல்கிறான். காயம் பட்டுக்கிடப்பது எதிரியென்றாலும் அவனைக் காப்பாற்றுவது தான் ராணுவ ஒழுங்கு என்கிற சின்ன மனிதாபிமானம் கூட இல்லை.

இத்துடன் படம் முழுக்க ‘இந்தியன்’, ‘இந்தியன்’ என்று மந்திரித்துக் கொண்டே இருக்கிறார்கள். அபத்தத்தின் உச்சகட்டமாக, கடைசியில் வழக்கம் போல் ஹீரோ நாட்டுக்காக உயிரையே கொடுக்க, செத்துப்போன தீவிரவாதிகளின் உடல்களின் மேல் ஏறி மிதித்தபடி அந்தத் துன்பப்பட்ட காஷ்மீரித் தாய் ‘ஏண்டா இங்க வந்து எங்க சுதந்திரத்தை கொல்றீங்க..உங்க நாட்டுக்கே திரும்பிப் போங்கடா.. இந்தியாவில் இஸ்லாமியர் நமக்கு இடமில்லைன்னு சொன்னீங்களேடா.. உண்மைதாண்டா.. ஏன்னா நாங்கல்லாம் இந்தியங்க..’ என்கிற பொருள்பட டயலாக் பேசி ‘இந்திய’ தேசியம் என்னும் பாசிசத்தின் கொள்கைபரப்புச் செயலாளராகி படத்தை முடித்துவைக்கிறார். படம் முழுக்க மலையாள முகங்கள். சம்பந்தமில்லாமல் எம்.கே.நாராயணன், மேனன், நம்பியார் என்று ஈழப் பிரச்சனையில் ‘தேசிய இறையாண்மை’ பேசிய முகங்கள் ஞாபகம் வருகின்றன.

இந்த மாதிரி ஒரு டப்பா படத்துக்கு விமரசனம் எழுத விருப்பமில்லை தான். ஆனால் இந்தக் கலாச்சாரப் புலிகளின் போக்கை யாராவது மக்களுக்கு காட்ட வேண்டும் இல்லையா? அரசுகள் கற்பிக்கும் தேசியம், அவை காட்டும் நாட்டுப்பற்று எல்லாம் போலியானது என்பது சாதாரண மக்களுக்குப் புரிவது இருக்கட்டும். ராணுவம் என்பது ஒரு அடக்குமுறைக் கருவி; அதன் நோக்கம் அரசுகளைக் காக்க அன்றி, மக்களைக் காக்க அல்ல. ஆனால் மக்களைக் காக்கத் தான் அது இருக்கிறது என்று நம்பவைக்கப்படுவதன் மூலமே அதன் அசுர வளர்ச்சியும், அதற்குத் தீனியும், செய்யும் செலவுகளும் ஞாயப்படுத்தப்படுகின்றன. ஐயா, குறைந்தபட்சம் யாராவது இந்த இந்திய தேசிய ராணுவப் புடுங்கிகளின் வண்டவாளங்களை வெளிப்படுத்த படம் எடுங்களேன்.

Friday, August 28, 2009

சமூகமும் ஓரினச்சேர்க்கையும்...

http://uraiyurkaran.blogspot.com/2009/07/blog-post.html
என்கிற வலைப்பதிவின் கட்டுரையைப் படித்ததும் எனக்குத் தோன்றியது இது..

incest ஒரு காலத்தில் இருந்திருந்து பிற்காலத்தில் கைவிடப்பட்டது. தற்போதைய ஆணாதிக்க சமுதாயம் தோன்றிய பின் incest முற்றிலும் மறைந்துபோனது. ஆனால் இன்னும் சரோஜாதேவி கதைகளில் இவற்றைப் பார்க்கலாம். சமூகத்தின் வளர்ச்சியில் தற்போது தாயின் நிலை வேறாக உள்ளது. Freud சொல்லியது போல தாயின் மீதான குழந்தையின் 'காதல்' அமுக்கப்பட்டு மனதில் அதனது identity உருவாவதற்கு அடிப்படையான காரணமாக உள்ளது. தாயின் மீதான பெண்குழந்தை கொள்ளும் காதல் ஒருவகை ஓரினக் கவர்ச்சியாகும். இப்போது incest சமூகத்தில் இல்லை என்று உறுதியாகச் சொல்லமுடியாது. ஆனால் அது உள்ளவர்கள் யாரும் வெளியில் வந்து பகிரங்கமாக எங்களை அங்கீகரியுங்கள் என்று ‘சமூக’ அடையாளத்துக்காக போராடுவதில்லை. அதற்கான தேவையும், அவசியமுமில்லை.

தற்போது ஒரினச் சேர்க்கையின் நிலையும் அப்படித்தான். ஓரினச் சேர்க்கை எல்லாக் காலங்களிலும் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் தண்டனைக்குரியதாக அமுக்கப்பட்டது. ஆனால் எல்லா சமூகங்களிலும் மறைமுகமாகப் படர்ந்திருந்துள்ளது. தற்போதைய சமூகத்தில் ஓரினச் சேர்க்கை சமூகத்தின் போக்கை, கலாச்சார ரீதியாக பெரிதும் பாதித்துவிடாது என்ற புரிதல் அறிவியலாளர்களால் முன்னிறுத்தப்படுகிறது.

இப்போது incest, homosexuality இவ்விரண்டு நிலைகளின் சமூக நிலைகளையும் கருதுவோம். Incest க்கு நேரடியான சமூக அங்கீகாரம் கிடையாது. ஆனால் அது தாயின் மீதான பாசப் பிணைப்பாக மறுவியிருக்கிறது. அதற்கான சமூக அங்கீகாரம் அளவுகடந்தது. தந்தையின் மீது முரட்டுத்தனமான பாசம் கொண்ட பெண் குழந்தைகளையும் பார்க்கிறோம். தந்தை-மகள் incest பெரும்பாலும் தந்தையின் வன்முறையாகவே வெளிப்படுகிறது. இவை சமூகத்தில் நிலவும் விதிவிலக்குகள். அதுபோல ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை குறைவு. மேலும் சமூகத்தின் அடிப்படைத் தேவையான, இனப்பெருக்கத்திற்கும் அதற்கும் தொடர்பில்லை. சமூகத்தில் அது மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெண்ணுக்கும் பெண்ணுக்குமான பாலுறவு தெரிந்தும் தெரியாததுபோல இருப்பு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தான் ஆண்களுக்கிடையேயான பாலியல் உறவும்.

சட்டத்தில் தற்போது ஓரினச்சேர்க்கையை ‘தண்டனைக்குள்ளாக்கும் குற்றமல்ல’ என்று சொன்னது வரவேற்கத்தக்கது. அது சமூகத்தின் யதார்த்தத்தை சட்டம் உணர்ந்துள்ளதைக் குறிக்கிறது. சட்டம் தனிமனிதர்களின் படுக்கையறைக்குள் எட்டிப்பார்க்கும் வகையான இத்தகைய சட்டங்களை கைவிடுதல் நல்லதுதான். குறிப்பிட்ட அளவிற்குமேல் சட்டம் தனிமனித விருப்பங்களை கட்டுப்படுத்தல் இயலாது. உதாரணமாக சட்டத்தில் 'குறி சுவைத்தல்' அனுமதிக்கப்பட்டதல்ல. ஆனால் இச்செயல் இன்பம் துய்ப்பதில் ஒரு பங்கு வகிக்கிறது. இது சமூகம் தரும் மறைமுக அங்கீகாரம் ஆகும்.

சமூகத்தின் பொதுவான வளர்ச்சிப் போக்கிற்கு ஓரினச்சேர்க்கை பங்களிப்பு செய்வதில்லை என்றாலும் அதன் இருப்பை சமூகம் மறைமுகமாவது அங்கீகாரம் செய்கிறது.
ஆனாலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் ‘தனிமனிதரீதியான’ கோட்பாட்டு சிந்தனை சமூகத்தின் எல்லா கூறுகளையும் பிய்த்து எறிய விரும்பும் போக்கைக் கொண்டுள்ளது. அது தனிமனித விடுதலை என்கிற போக்கில் சமூகமாய் வாழ்வதில் செய்யப்பட்டுள்ள சமரசங்களை உடைக்கிறது. ஆணகளையும், பெண்களையும் சமூக அளவில் தனித்தனியாக்க விரும்புகிறது. ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களின் தனிமனித விருப்பங்களை சத்தமாக வெளியிடச் செய்வதன் மூலம் இது சமூகத்தின் ‘குடும்பம்’ என்ற அமைப்பின் மேல் இன்னொரு தாக்குதல் தொடுக்கிறது. குடும்பம் என்ற அமைப்பு கட்டமைக்கப்பட்ட ஒன்று. அந்த ஒரு காரணத்துக்காகவே அது அழிக்கப்படவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அப்படிப் பார்த்தால் ஓரினச் சேர்க்கையின் ‘இயற்கைத்’ தன்மையும் கட்டமைக்கப்படுவதுதான். எல்லா ஓரினச் சேர்க்கையாளர்களும் இயற்கை உந்துதலால் ஓரினச்சேர்க்கையாளர்களானவர்களல்ல. சிறைகளில் நடைபெறும் ஓரினச்சேர்க்கை பாலியல் வன்முறைகளைப் பற்றிப் படித்திருக்கிறோம். இவ்வகையில் பார்க்கும் போது ஓரினச்சேர்க்கை எதிர்பால் சேர்க்கையாளர்களுக்கு எதிரான ஒரு மனப்போக்கை முன்னிறுத்துகிறது. இது ஓரினச்சேர்க்கையாளர் X எதிர்பால் சேர்க்கையாளர் என்ற இரு எதிர்போக்குகளாக உருவாக்கம் பெறுவதில் போய் முடிகிறது. இவ்வுருவாக்கம் இவற்றுக்கான அரசியலை சமூகத்தளத்தில் உண்டாக்குகிறது. இவ்விரண்டும் ஒன்றையொன்று மறுதலிப்பவைகளாக, எதிரிகளாக அடையாளம் காண்கின்றன. இது அரசியலாக்குவதின் ஒரு விளைவாகும். இந்த அரசியலில் இவ்விரண்டுக்குமிடையேயான சமரசப் பார்வைகளை முன்வைக்காமல் அடித்துக் கொண்டு சண்டையிடும் மனப்பான்மையை இரு பக்க ஆதரவாள அறிவுஜீவிகளும் போட்டிபோட்டுக் கொண்டு முன்வைப்பது தான் பிரச்சனை.

ஒரு ஆண் ஒரு பெண்ணை அடையாளம் காண்பதும், பெண் ஒரு ஆணை அடையாளம் காண்பதும் மிக வெளிப்படையான குறீயீடுகளான ஆடை போன்ற எளிய விஷயங்களாக உள்ளது. இதுபோல ஒரினச் சேர்க்கையாளர்களுக்கும் வெளிப்படையான குறியீடுகள் தோன்றலாம். அவற்றின் மூலம் ஒரு வகைச் சேர்க்கையாளர் இன்னொருவரின் சுயத் தேர்வில் குறுக்கிடாத தன்மை நிலவும் சூழல் ஏற்படலாம். அவ்வாறு குறுக்கீடற்ற நிலைமைகள் தோன்றும்போது இவ்விதமான ஓரினச்சேர்க்கைக்கு எதிரான கடுமையான மனநிலை இல்லாமல் போகும். மேற்கத்திய முறையிலான பிரித்தாளும் 'தனிமனித சுதந்திரம்' என்ற பார்வையை நான் அப்படியே ஆரோக்கியமானதாகக் கருதவில்லை. மனிதன் சமூகமாக வாழ்கிறோம் என்ற பிரக்ஞையுடன் வாழ, சிந்திக்க வேண்டும். தனிமனிதனுக்கும், சமூகத்திற்குமான தொடர்பு நெகிழ்வுத்தன்மையோடு இருக்கவேண்டும்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா முன்பு ஒருமுறை அவரது கோணல் பக்கங்களில் எழுதியதாக ஞாபகம். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்திலும் அதைச் சொல்லியிருந்தார். அந்நிகழ்ச்சி இதுதான்: அவரும் அவர் நண்பரும் (இவர் நண்பருடன் பயணித்தாரா என்பது சரியாக ஞாபகமில்லை) ஐரோப்பிய நாடொன்றில் சுற்றுப்பயணம் செய்தபோது காரில் போய்க்கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு காட்சி. சாலையோரத்தில் (பார்க்கில்?) வெளிநாட்டுத் தம்பதியினர் இரண்டுபேர் கொஞ்சிக் கொண்டிருந்திருக்கின்றனர். கொஞ்சல் முற்றிப் போய் கலவிக் கட்டத்திற்குப் போக ஆரம்பித்துவிட.. காரில் போன நண்பர் வாகனத்தை நிறுத்தி அதை ரசிக்க ஆரம்பித்துவிட்டார். கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு அவர் காரைக் கிளப்பிக்கொண்டு போக பாதிவழியில் போலீசு துரத்திப் பிடித்தது அவரை. அந்த வெளிநாட்டுத் தம்பதியினர் போலீசுக்கு "ஒருத்தன் எங்களை உத்துப் பார்க்குறான்" என்கிற ரீதியில் புகார் செய்ய போலீஸ் வந்து நண்பரைத் துரத்திப் பிடித்திருக்கிறது.

இந்நிகழ்ச்சியை அவர் குறிப்பிட்டு அங்கிருக்கும் பாலியல் சுதந்திரத்தையும், நாகரிகத்தையும்(?) நமது ஆசாமிகள் உற்றுப் பார்க்கும் செக்ஸ் வறட்சியையும்(?) ஒப்பிடுவார். இக்காட்சியை அவருடைய நண்பருக்குப் பதில் ஒரு ஐந்து வயதுக் குழந்தை பார்த்தால் என்ன ஆகும் ? ஐந்து வயதுக் குழந்தைக்கு உடலுறவு என்பது இயற்கையானது என்றாலும் மனரீதியாக பாதிப்பை உண்டாக்கவே செய்யும். அதனால் தான் 'எல்லாம் வளர்ந்த' மேலை நாடுகளில் கூட பொது இடங்களில் உடலுறவு கொள்வது மாதிரியான விஷயங்கள் தவறாகப் பார்க்கப்படுகின்றன. செக்ஸ் கல்வி என்ற விஷயத்திற்கு நான் எதிரி இல்லை. ஆனால் இந்தமாதிரி செக்ஸ் சுதந்திரங்கள் பற்றிப் பேசுவது, 'சமூகம் என்கிற கட்டமைப்பில் வாழ்கிறோம்' என்பதை மறந்துவிட்டு அல்லது சமூகம் என்பது ஒரு கட்டுமானம், அதை உடைக்கவே வேண்டும் என்கிற எண்ணங்களின் அடிப்படையில் எழும் வாதங்களாகும். நாம் வாழும் வாழ்க்கையில் சமூகம் உள்ளிட்ட நிறைய கட்டுமானங்கள் உள்ளன. அவற்றை 'சமூக அளவில்' நாம் அங்கீகரித்தே வாழ்கிறோம். தனிப்பட்ட மனித அளவில் நாம் அதை நிராகரிக்கலாம்; அதை சமூகம் ஒன்றும் சொல்வதில்லை. சமூகம் என்கிற போர்வையில் சில வலுக்கட்டாயமான, வன்முறையான விஷயங்கள் அதைக் கட்டமைக்கும் ஆதிக்க வர்க்கத்தால் திணிக்கப்படும்போது சமூகத்தை எதிர்த்து கிளர்ந்தெழுதல் என்பதும் நடைபெறும். நடைபெறுகிறது. இங்கு சமூகத்திற்கும், தனிமனித உரிமைக்குமான சமரசங்களும் இருபுறங்களிலும் நடைபெறல் வேண்டும் என்பது நான் வலியுறுத்த விரும்பிய விஷயமாகும். சமரசங்களும் சாத்தியமில்லாமல் போகும்போது தவிர்க்க இயலாமல் விலகல்கள் நிகழும். அப்போது அதை நாம் நினைத்தாலும் தடுத்து நிறுத்த இயலாது.

'எல்லாமே உடைதல் தான். உடைத்தல் தான் வாழ்க்கை' என்பது மட்டுமே இயங்கியல் அல்ல. ஒன்றையொன்று ஈர்த்தல், உள்வாங்குதல், முரண்படுதல், சமரசம் செய்தல், விலகிப்போதல், வெடித்தல் போன்ற எல்லாமும் நிகழ்வதுதான் சமூகம். மற்ற விஷயங்களைப் பார்க்காமல் உடைத்தல், வெடித்தல் இரண்டில் மட்டுமே விஷயங்களை கொண்டுபோய் நிறுத்துவது சரியான பார்வையாகாது. ஓரினச் சேர்க்கையாளர்களின் இயல்பான சமூக வாழ்க்கைக்கு சமூகத்தில் செய்யவேண்டிய விஷயங்களை விடுத்து அதன் அரசியலை எதிர்பால் சேர்க்கையாளர்களுக்கு எதிரானதாகத் தோன்றவைக்கும் அரசியல்கள் தவறாக நம் சமூகத்தை வழிநடத்தும்.

Saturday, August 8, 2009

தி மன்ஹட்டன் ப்ராஜக்ட்



மே 11, 1945. இலக்குக் கமிட்டி, விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹீமர்(RobertOppenheimer) தலைமையில் அமெரிக்காவில் லாஸ்அலோமோஸில் (Los Alomos)கூடுகிறது. தங்களது முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பால் உருவான அதிக ஆற்றலுள்ள ஒரு நவீன ஆயுதம் அது; அதன் ஆற்றல் அவர்களுக்கே இன்னும் தெரியாது. அதன் ஆற்றலை, அழிவுசக்தியை ஆய்வகத்தில் சோதிப்பது சாத்தியமில்லை. எனவே ஒரு சோதனைக் களம் வேண்டும். இலக்கு வேண்டும். அதைத் தீர்மானிக்கத் தான் இந்த இலக்குக் கமிட்டி கூடியிருக்கிறது.

அவ்வாயுதத்தின் அளவிடப்படாத வீரியத்தால், அதன் அழிவு சக்தி எவ்வளவு என்று சரியாக அவர்களுக்கே தெரியாத காரணத்தால், தாக்குதல் இலக்கை பின்வரும் அளவுக் காரணிகளைக் கொண்டு அந்த அறிவு சார்ந்த பெரும் விஞ்ஞானிகள் தீர்மானிக்கிறார்கள்.

 1. இலக்கு 3 சதுர மைல்களை விட பெரிதாயிருக்கவேண்டும்.       பரிசோதனையின் படி ஆயுதத்தின் வீரியம் 3 சதுர மைல்களையும் தாண்டும்.
 2. இலக்கில் ஏற்படும் அழிவு பெரிதாய், முழுமையாய் தெரிய குண்டு வீசப்படும் பகுதி மக்கள் செறிவானதாய் இருக்கவேண்டும். எனவே இலக்கு மக்கள் தொகை மிகுந்த நகரமாயிருந்தால் நல்லது.
 3. தாக்குதல் தீர்மானிக்கப்படும் நாள் வரை இலக்கு வேரெதுவும் தாக்குதல்களுக்கு உட்படாதிருக்கவேண்டும். இது அதன் அழிவுசக்தியை மட்டும் தனியாக தனித்து அளக்க உதவும்.

அவர்கள் நாள் முழுவதும் உட்கார்ந்து விவாதித்து நான்கு இலக்குகளை தேர்ந்தெடுத்தார்கள். அவை க்யோட்டோ, ஹிரோஷிமா, யோகஹாமா மற்றும் கோகுரா. இந்நகர இலக்குகளை தாக்குதல் தினம் வரை நேசப்படைகளின் சாதாரண வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களிலிருந்து 'பத்திரமாக' விலக்கி வைக்க உத்தரவிடப்பட்டது.

 ஜூலை 26 1945. அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், மற்றும் சில நேசநாடுகளின் தலைவர்கள் கூட்டாக சேர்ந்து ஜப்பானுக்கு சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் அவர்களின் புதிய ஆயுதம் பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை. ஜப்பான் சரணடைய மறுத்தது; பாவம் விவரம் புரியாமல்.

ஆகஸ்ட் 6 1945. விடியற்காலை 2 மணிக்கு டினியன்(Tinian) தீவு ராணுவ தளத்திலிருந்து கிளம்புகிறது ஒரு அமெரிக்கப் போர் விமானம்.

பால் திபெத் (Paul Tibbet) என்கிற அமெரிக்க கமாண்டர் விமானத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். கடல்படை காப்டன் வில்லியம் பார்சன்ஸ் கூடவே மாரீஸ் ஜாப்ஸன் என்கிற துணை கமாண்டெர். இருவரும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் செயது கொண்டிருக்கும் பணியின் கணத்தால் அமைதியாக இயங்குகின்றனர். சின்னப் பையன்(Little Boy) பக்கத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறான். இவோ ஜிமா தீவை அடைந்து அதை மேலிருந்து சுற்றிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஜப்பானை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது. காலை 8.00 மணியளவில் ஜப்பானின் ரேடார்கள் அத்துமீறி நுழைந்த அந்த அமெரிக்க விமானத்தை இனங்கண்டு கொண்டன. மூன்று விமானங்கள் தானே ஏதாவது உளவு பார்த்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள்.

அப்படியே அவை தாக்கினாலும் பெரிய சேதம் ஒன்றும் நிகழ்ந்துவிடாது. போரில் ஏற்கனவே தோல்விமுகம் கொண்டிருந்த ஜப்பான் ராணுவம், எரிபொருள் மற்றும் விமானங்களை மிச்சம் பிடிக்க இதுபோன்ற சிறு தாக்குதல்களை எதிர்த்துத் தாக்கத் தீர்மானிக்கவில்லை. காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமாவை வட்டமடித்த விமானம் யுரேனியம்-235 ல் செய்யப்பட்ட வெறும் 60 கிலோ எடை கொண்ட, 10 அடியே உயரமுள்ள சின்னப்பையன் என்கிற அந்த அணுகுண்டை வானில் 9 கி.மீட்டர் உயரத்திலிருந்து கீழே விடுவித்தது.

புவிஈர்ப்பு விசையால் கீழிறங்கிய 'சின்னப் பையன்', சரியாக ஷிமா அறுவைசிகிச்சை மருத்துவமனையின் மேல் தரைக்கு மேலே 600 மீட்டர் உயரத்தில் வெடித்தது. அந்த அணுகுண்டு வெடித்ததும் 13 ஆயிரம் டன் டி.என்.டியை வெடித்ததற்கு இணையான மாபெரும் தொடர் வெடிப்பை அது உண்டாக்கியது. அந்த ஆற்றல் பக்கவாட்டில் பரவாமல் கீழ்நோக்கி பரவியதால் சுற்றியிருந்த 5 சதுர கி.மீ பரப்பளவில் இருந்த அனைத்தையும்; சாதாரண செடிமுதல் உறுதியான இரும்புத் தூண்கள் வரை அது உருக்கி கருக்கி, சாம்பலாக்கி அழித்தது. கூடவே மனித உயிர்களையும்..

குண்டு வெடித்த இடத்திலிருந்து 45000 அடி உயரத்திற்கு வானில் குடைக் காளான் வடிவில் கரும் புகை வானைச் சூழ்ந்தது. இந்த நிகழ்வை, கூட பறந்து வந்த விமானங்களிலொன்று பல்வேறு அளவீடுகள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது.

4000 டிகிரி வெப்பம்; சுற்றிலும் அனல்.வெடித்த இடத்தைச் சுற்றியிருந்த அனைவரும் அலறியடித்து ஓடினார்கள். ஆனால் ஒருவரை மற்றவருக்கு அடையாளம் தெரியவில்லை. ஏனென்றால் அனைவரின் முகங்களும், கைகால்களும், உடல்களும் வெப்பத்தில் கருகிப் போய், தோல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அனைவரும் சிறிது நேரத்தில் இறந்து போனார்கள். நகரத்தின் சுமார் 30% மக்கள், அதாவது எழுபதாயிரம் பேர் உடனே மரணமடைந்தார்கள். இன்னும் 30% பேர் சில வருடங்களில் சாவார்கள்.

டோக்கியோவிலிருந்து ஜப்பான் அதிகாரிகள் ஹிரோஷிமாவில் இருந்த ஒரு சிறிய ராணுவத் தளத்தைத் தொடர்பு கொள்ள முயன்று தகவில்லாமல் போகவே காரணம் அறிந்துகொள்ள ஒரு சிறிய விமானத்தில் ஒரு இளம் வீரரை அனுப்பினர். 3 மணிநேரம் விமானத்தில் பறந்து அந்த வீரர் ஹிரோஷிமாவுக்கு 100 கி.மீ தூரத்தில் வந்தபோது வானத்தில் தெரிந்தது காளான் புகைமண்டலம்.

ஆகஸ்ட் 7,8, 1945
. ஜப்பானிய அரசு செயலிழந்தது. ஒரு சின்ன விமானத்திலிருந்து வீசப்பட்ட ஒரேயொரு குண்டால் ஒரு நகரமே அழிந்தது என்ற அதிர்ச்சியிலிருந்து அவர்களால் எளிதில் விடுபட முடியவில்லை. சேதத்தின் அளவீட்டைக் கூட அவர்களால் சரியாக எடுக்க வழியில்லை. அவர்கள் அந்த ஆயுதம் பற்றி இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

ஆகஸ்ட் 9, 1945. அன்று காலை புறப்பட்ட மற்றொரு அமெரிக்க போர் விமானத்தில் 6 கிலோ எடையுள்ள, புளுட்டோனியம்-239 த்தால் ஆன, 'குண்டு மனிதன்'(Fat Man) இருந்தான். கோக்குராவை இலக்காகக் கொண்டு பயணித்த அவ்விமானம் கோக்குராவை காலையில் அடைந்தபோது, கோக்குரா மக்களின் அதிர்ஷ்டம், அங்கு வானில் ஒரே மேகமூட்டமாயிருந்தது. எனவே அக்குழு அங்கிருந்து துணை இலக்காக லிஸ்ட்டில் இருந்த 'நாஹாசாகி'யை நோக்கிப் பறந்தது.

அங்கும் மேகமூட்டமாயிருந்ததால் இலக்கு 'clear' ஆகவில்லை. ஆனால் அவர்கள் நம்பிக்கையைக் கைவிடவில்லை. பொறுமையாக வானில் சுற்றியபடியே இருந்தனர். கொஞ்ச நேரத்தில் மேகம் சிறிது விலகி இலக்கு தெரிய ஆரம்பித்தது. சரியாக காலை 11.00 மணிக்கு நாஹாசாகியின் மேல் குண்டு மனிதன் குதித்தான். இது குதித்த வேகத்தில் 12 ஆயிரம் டன் எடையுள்ள டி.என்.டியை வெடிக்கச் செய்த விளைவு உண்டானது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த குண்டைப் போடுவதற்கு சற்று முன்னால் ஜப்பானின் அணு விஞ்ஞானிக்கு இக்குண்டின் தீமைகள் பற்றிய கடிதம் ஒன்றையும் இதே விமானத்திலிருந்து வீசி எறிந்திருக்கின்றனர் இந்தக் குண்டை எறிந்தவர்கள். அந்த எச்சரிக்கைக் கடிதம், எல்லாம் முடிந்து போய், செத்தவர்களுக்கு பால் வார்த்து திவசம் செய்து ஒரு மாதம் கழித்து கண்டெடுக்கப்பட்டு, அந்த விஞ்ஞானியிடம் 'பத்திரமாக' வழங்கப்பட்டது. நாஹாசாகியில் ஐம்பதாயிரம் பேர் குண்டு விழுந்த உடன் சிலமணி நேரங்களில் மாண்டுபோயினர்.

ஆகஸ்ட் 6, 2009
.இன்று. நாஹாசாகியில் குண்டு வெடிப்பில் மாண்டுபோனவர்களின் புதைக்கப்பட்ட எலும்புகளிலிருந்தும், பாதுகாக்கப்பட்ட உடற்பாகங்களிலிருந்தும் உட்கதிர்வீச்சு எனப்படும் ஆல்பா கதிர்வீச்சு வெளிப்படுகிறது என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குண்டுவீச்சின் போது வெளியான புளூட்டோனியக் கதிர்வீச்சை அளவிலும் பண்பிலும் ஒத்துள்ளது என்கிற அதிர்ச்சியான தகவலும் வெளிப்படுகிறது. இவ்வளவு வருடங்களாக இந்த உட்கதிர்வீச்சு பற்றி விஞ்ஞானிகள் பெரிதாக எண்ணவில்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்து 64 வருடங்கள் கழித்தும் கதிர்வீச்சு இவ்வாறு வெளிப்படுவதைக் கொண்டு நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன ?

ஒரு மாபெரும் அழிவைக் கூட அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்வது போல படிப்படியாக, குறிப்புக்கள் எடுத்து, புகைப்படங்கள் எடுத்து, அதன் கோரத்தை பதிந்து வைப்பது தான் இந்த கார்ப்பரேட் உலகில் அறிவியலின் வேலையாக இருக்கிறது. அதில் மனிதனும், மனிதாபிமானமும் இருப்பதில்லை. அணுவைப் பிளப்பது பற்றி மனிதன் கற்றுக்கொண்டது ஒரு கடலில் மிதக்கும் பனிப்பாறையைக் கண்டுபிடிப்பது போல் தான்; மேம்போக்கானது; அந்தப் பனிப்பாறை கடலின் அடியில், பெரும் மலையாக, மனிதகுலம் என்கிற டைட்டானிக் கப்பலையே கவிழ்க்கும் அளவிற்கு பெரிதாய்  இருக்கும் என்பதை நாம் இன்னும் உணரவில்லை.

அணு உலைக் கழிவுகளை கையாளுவதில் நாடுகள் காட்டும் அலட்சிய மனப்பான்மையைப் பார்த்தால் இது உங்களுக்குப் புரியும். சமீபத்தில் டெல்லி அருகே பயிற்சியில் ஈடுபட்ட ஒரு போர் விமானத்திலிருந்து தவறுதலாக பாய்ந்த குண்டு ஒன்று கிராமம் ஒன்றில் வயற்காட்டில் விழுந்து ஒரு ஏக்கர் நிலம் கரிந்து போனது. நல்லவேளையாக மனிதர்கள் யாரும் அருகிலில்லை.

இதுவே ஒரு அணு ஏவுகணையாக இருந்திருந்தால்...

Thursday, August 6, 2009

உத்தபுரம் – தடைச் சுவற்றில் ஒரு சிறிய காற்று இடைவெளி

மீள் பதிப்பு : 28 அக்டோபர் 2009.
5 ஆகஸ்ட் 2009.
உத்தபுரத்தில் 1989 ல் மேல் சாதியினரான பிள்ளைமார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது, தங்கள் கோயிலில் வழிபாடு செய்யக்கூடாது என 600 மீட்டர் நீளச் சுவரை ஊரின் குறுக்கே கட்டியிருந்தனர். தீண்டாமையின் கோரப்பிடியில் அடிக்கடித் தாக்கப்பட்ட தலித்களிடம் ஒரு மிரட்டல் ஒப்பந்தம் செய்து இதுபோன்ற ஒரு சுவரை ஊரின் குறுக்கே கட்டியிருந்தனர் ஆதிக்க சாதியினர். தனி பள்ளிக்கூடம், தனி பாதை, எல்லாம் தனி. தலித் மக்கள் பிள்ளைமாரிடமிருந்து தள்ளி நிற்க, விலகி வாழ கற்றுக்கொண்டிருந்தனர். அரசு இயந்திரமும் இதற்கு வழி செய்வது போல தனிப் பள்ளிக் கூடம், தனி டீக்கடை என்று ‘எல்லாம் நல்லாத் தான் போய்கிட்டிருந்தது..’ 18 வருஷங்களாக, சி.பி.எம்காரர்கள் 2008 ல் தீண்டாமை பற்றி சர்வே எடுக்கும்வரை. அப்புறம் பிடித்தது தலித்துகளுக்குச் சனி. சி.பி.எம் இதை ஊடகங்களில் கொண்டு வர முயற்சித்தபோது ஊடகவியலாளர்கள் போட்டோ ஆதாரம் கேட்டுள்ளனர். சுவரை இவர்கள் போட்டோ எடுத்து வெளியிட பெரிய சலனம் ஏதுமில்லை. பின்னர் வட இந்தியப் பத்திரிக்கைகளும் இதை எழுத, சுவரில் மின்சாரம் பாய்ச்சி வைத்திருப்பதாக எழுந்த தகவலால் விஷயம் சூடானது.

இச்சுவற்றைப் பற்றி கண்டு வெளிப்படுத்தியது சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு. ஆனால் மாநில அரசோ, தலித் தலைவர்களோ இதுபற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆதிக்க சாதிக்காரர்கள் அவர்களின் சொந்த இடத்தில் கட்டிக்கொண்ட சுவர் அது. தீண்டாமைச் சுவரல்ல என்று அரசு விளக்கம் வேறு கொடுத்தது. கலைஞரைச் சந்தித்துவிட்டு நேரே உத்தபுரம் போன புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உத்தபுரத்து மக்களிடம் பிள்ளைமார் சார்பில் தன்னை சந்தித்துப் பேசி கிருஷ்ணசாமி சொன்ன தீர்வை ஏற்றுக் கொண்டதாகவும் அதை நிறைவேற்றும் வரை பொறுத்திருங்கள் எனவும் வேண்டிக்கொண்டார். இதற்கிடையில் பிரகாஷ் காரத்தை அழைத்து வந்து அவர் முன்னிலையில் சுவரை இடித்து தேசிய அளவில் இப்பிரச்சனையை கவன ஈர்ப்பு செய்ய சி.பி.எம்மின் குழு முடிவு செய்தது. சி.பி.எம் மின் பங்கு இப்போராட்டத்தில் முக்கியமானது. தேசிய அளவில் இது கவன ஈர்ப்புப் பெற ஆரம்பித்ததை உணர்ந்த தமிழக முதல்வர் கலைஞர் 600 மீ சுவற்றில் 150 மீட்டர் நீளச் சுவர்ப் பகுதியை காவல்துறையினர் கொண்டு இடித்துவிட்டார்.

சுவர் சிறிது இடிந்தது. தீண்டாமைப் பிரச்சனை வெளிச்சமானது.

அதைத் தொடர்ந்து பிள்ளைமார்களும், தலித்துகளும் மோதிக்கொண்டனர். பிள்ளைமார்களுக்கு பக்கத்து கிராமங்களிலிருந்தும் தேவர் போன்ற ‘சம’ சாதியினரின் ஆதரவு கிடைத்தது. கூடவே காவல் துறையின் அதிகாரம் பிள்ளைமார்களின் பக்கம். (காவல் நிலையம் இருப்பதே பிள்ளைமார்கள் பகுதியில்தான்; இடத்தில்தான்.). பிரச்சனையை பெரிதுபடுத்த விரும்பிய பிள்ளைமார்களும் அவர்களுக்குத் துணைநின்ற சுத்துப்பட்டு முக்குலத்தோரும் வியூகங்கள் வகுத்தனர். முதலில் சற்றுத் தள்ளியிருந்த கிராமத்திலிருந்த முத்துராமலிங்கத்தேவர் சிலை மீது முக்குலத்தோர் ஆட்களே செருப்பு மாலை போட்டு விட்டு தலித்துகள் மீது பழிபோட முயல (அந்த ஊரில் இருந்ததே ஒரே ஒரு தலித் தான்) அங்கிருந்த எஸ்.பி அன்பு சமயோசிதமாக மோப்பநாய் கொண்டு மாலை போட்டவனை பிடித்துவிடுவேன் என்று மிரட்ட, அவர்களே தங்கள் ஆட்களைப் பிடித்து பஞ்சாயத்தில் அபராதம் கட்டவைத்து, சிலையை கழுவிவிட்டுவிட்டார்கள்.

பின்னர் ஒரு நாள் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் மகள் திருமண போஸ்டர் பிரச்சனைக்குரிய உத்தபுரம் அம்மன் கோயில் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது. இந்தக் கோயில் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் பிள்ளைமார்களால் உரிமை நிலைநாட்டப்பட்டு தலித்துகள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தலித்துகள், தலித் குழந்தைகள் தவறி உள்ளே நுழைந்துவிடாமல் இருக்க கோயிலையொட்டி கோயில் மதிற்சுவர் போல் ஒரு சுவர் கட்டப்பட்டிருந்தது. இச்சுவர் தலித் பகுதியிலிருந்து தலித்துகள் கோயிலுக்குள் வருவதை தடுத்தது. கோயில் கும்பாபிஷேகம் நடக்கவிருந்த சமயத்தில் இந்தச் சுவற்றின் மீது வெள்ளையடிக்கப் பட, இதைத் தொடர்ந்து தலித்துகள் கோயிலினுள் புகுந்துவிடுவார்களோ என பிள்ளைமார்கள் பயப்பட்டனர். இருபக்கமும் கற்கள் பறந்தன.

இதை தினமலர் போன்ற பத்திரிக்கைகள் ஆதிதிராவிடர்கள் பிள்ளைமார்கள் தெருவை நோக்கி பெட்ரோல் குண்டு எறிந்தார்கள் அதனால் சண்டை மூண்டது என திரித்து எழுதின. ஆனால் தலித்துகள் கம்யூனிஸ்ட்டுகளின் அறிவுரையால் தற்காப்புக்கு ஆயுதங்களை வாங்காமல் தவிர்த்திருந்தனர். தலித் ஆண்கள் பலரின் மீதும் வழக்குகள் போடப்பட்டு போலீசால் ‘தேடப்பட’ தலித் ஆண்கள் மொத்தமும் தலைமறைவாயினர். ஆனால் காவல் துறையால் எந்த குண்டுகளோ, ஆயுதங்களோ உத்தபுர தலித்துகளிடமிருந்து கைப்பற்ற இயலவில்லை. காவல் துறையின் வழக்கம் எந்த இடத்தில் போராட்டம் தீவிரமடையுமோ, அவ்விடத்தில் தலித்துகளை ‘போட்டுப் பார்ப்பது’ என்பது. அப்படி உத்தபுரம் தலித்துகளை போட்டுப் பார்க்க காவல் துறை ரகசியமாய் முடிவுசெய்துகொண்டது. இதற்கிடையில் தலித் பெண்மணி ஒருவர் இறந்துவிட ஊரில் ஆண்கள் எல்லோரும் தலைமறைவாய் இருந்ததால் பெண்கள் மட்டுமே சேர்ந்து இறந்தவரை அடக்கம் செய்திருக்கிறார்கள்.

அக்டோபர் 2ம் தேதி மீண்டும் கலவரம் வெடித்து, இம்முறை காவல் துறையினர் தலித்துகளின் குடியிருப்புகளுள் நுழைந்து வீடுகளில் இருந்த பெண்களையும், குழந்தைகளையும் வயதானவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கினர். அவர்கள் வீடுகளிலிருந்த கொஞ்ச நஞ்ச பொருட்களையும் நொறுக்கினர்.

சி.பி.எம் மற்றும் மார்க்ஸ் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் போன்றோர் இதற்காகப் போராடினர். கிருஷ்ணசாமி மற்றும் திருமாவளவன் போன்றோர் ஆர்வமாக வந்து சேர்ந்து போராடவில்லை. இவர்களுக்கு சேர்ந்து போராட அழைப்பு விடுத்ததாக சி.பி.எம் தரப்பு சொல்கிறார்கள். திருமாவளவன் போராட்டத்தை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதோடு மட்டும் நிறுத்திக் கொண்டார் (ஏன் சார்?). சி.பி.எம் போன்ற கட்சிகளுடன் சாதிக் கட்சிகள் இணைந்து போராடுவதில் உள்ள சிக்கல்களைக் களைந்து ஒரு பொதுவான புரிதல்களுக்குள் வரவேண்டும். சி.பி.எம்மோ நாங்கள் கூப்பிட்டும் அவர்கள் வரத் தயங்குகிறார்கள் என்கின்றனர்.

கிருஷ்ணசாமியோ பிள்ளைமார்கள் வம்பு தும்புக்குப் போகாதவர்கள் என்கிற ரீதியில் ஸர்டிபிகேட் கொடுத்தார். பின்னர் பக்கத்து கிராமம் ஒன்றில் அவர் காரசாரமாகப் பேசிச் செல்ல அவரின் கார் தாக்கப்பட்டது. சில நாட்கள் கழித்து கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதைக் கண்டித்து எழுமலை கிராமத்தில் அமைதியான முறையில் சாலைமறியல் செய்த தலித் மக்களின் மீது ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி துப்பாக்கிச் சூடு நடத்தி சுரேஷ் என்கிற 25 வயது தலித் இளைஞரை சுட்டுக் கொன்றார். இதற்கு தனியாக அரசு திருப்பதி கமிஷன் நியமித்தது. அந்தக் கமிஷனின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 மாதங்களாகியும் அரசு அதை இன்னும் வெளியிடவில்லை. கிருஷ்ணசாமி இறந்த சுரேஷின் குடும்பத்தினருக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்கினார். ஆனால் வேறு எந்தக் கட்சியுடனும் சேர்ந்து இது பற்றி இனிமேல் பேசக்கூடாது என்று சுரேஷின் குடும்பத்தினர் வாயை அடைத்ததாக சி.பி.எம் தரப்பில் கூறப்படுகிறது.

அ.மார்கஸ் போன்றோர் அடங்கிய உண்மை அறியும் குழு உத்தபுரத்தில் நிலவிவரும் தீண்டாமையின் ரத்தக் கீறலை உறுதி செய்தது. உண்மைப் பிரச்சனையான தீண்டாமைப் பிரச்சனையின் மீது இன்னும் ஒரு விவாதமோ, கேஸோ நடக்கவில்லை. ஊரில் இருந்த ஒரு ஆதிக்கசாதியினன் கூட வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைதாகவில்லை.

இந்நிலையில், சி.பி.எம் சார்பாக, காவல்துறையினரின் அத்துமீறல் தாக்குதல்களுக்கு எதிராக உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் இடைக்கால தீர்ப்பாக காவல் துறையின் தாக்குதலில் காயம் அடைந்த தலித்துகளுக்கு மருத்துவ இழப்பீட்டுத் தொகையாக 15 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. வழக்கானது திசை திரும்பி பிள்ளைமார்கள் X தலித்துகள் என்பது போய், காவல்துறை X தலித்துகள் என நிறுத்தப்பட்டிருக்கிறது. இவ் வழக்கின் இறுதியில் காவல்துறை மேல் ஏதாவது எச்சரிக்கைகள் விடப்படலாம். காக்கிச் சட்டைகள் சில சஸ்பெண்ட் பண்ண்ப்படலாம். இதைத் தவிர பெரிதாக எதுவும் செய்ய வாய்ப்பில்லை. பிள்ளைமார்களும், கோயிலும், தலித்துகளுக்காக திறக்க வழியில்லை. தலித்துகளைத் தாக்கியவர்கள் மீது சட்டங்கள் இதுவரை பாயவில்லை.

ஆனாலும் காற்றுப் புகாத கான்கிரீட் சுவற்றில் இந்தத் தீர்ப்பு ஒரு சின்ன ஓட்டை என்று நினைத்து ஆறுதலடையலாம். இந்தச் சின்ன வெற்றிக்குப் பெருங்காரணம் சி.பி.எம் தான். இந்த ஓட்டை விரிந்து என்று சுவர் முழுதும் இடியும் ?

கண்ணுக்கெட்டிய தூரம் வரை காட்சி எதுவும் தெரியவில்லை.

பின்குறிப்பு:
சி.பி.எம்மின் தீண்டாமை ஒழிப்பு ஆர்வங்களின் காரணங்கள் என்ன என்று ஆராய்ச்சியை நாம் பிறகு தனியே செய்து கொள்ளலாம். தீண்டாமை ஒழிப்புப் பிரச்சனையை முப்பது வருடங்களுக்கு முன் கேலி செய்து அசட்டை செய்த சி.பி.எம் இன்று காலங்கடந்து அப்பிரச்சனையைக் கையிலெடுத்துள்ளது. இதனால் முப்பது வருடங்கள் அதன் வளர்ச்சி தேங்கி நின்றது.

தீண்டாமைக்காக இவ்வளவு ஆழமாக இறங்கிப் போராடிய சி.பி.எம் இந்த நூற்றாண்டில் கண்முன்னே நடந்த கொடூரமான இலங்கை இனப் படுகொலைக்கு ஏன் எச்சில் கையால் காக்கை கூட விரட்டவில்லை ? முத்துக்குமாரின் மகத்தான தியாகத்தை மறுதலித்ததன் மூலம் சி.பி.எம் ஆளும் வர்க்கத்திற்குத் துணையாய்ப் போயிற்றே என்பது எங்கள் வேதனை. அதே போல் இலங்கைப் பிரச்சனையிலும் இன்று சி.பி.எம் தேசிய இனங்களின் போராட்டத்திற்கு எதிரான நிலை எடுக்கிறது. அதை இப்போதாவது உணருமா ?
- அம்பேதன்

Monday, June 1, 2009

A Tamilian's letter to a racistic Sinhalese.

Following is a reply to Rdeaerandra, I believe he is a Sinhaelese, who commented on a YouTube Video showing Tamil people suffering on the Sri Lankan Govts camps, and the hospital shelling in the recent April 2009 genocidal war against LTTE and Tamils. His comment was similar to .."It was a nicely shot movie by LTTE. Instead of taking such movies those f...ers can run away."..
Through this letter I also ask the Sinhalese people to find out what is the 'real' problem..
----------------------------------------------------
Rdeaerandra,
I hope you must be very happy now.
Becos your Rajapksha wiped out LTTE. Isn't it ?

I even saw the photographs and videos those demeaning a great rebel leader Prabhakaran. Earlier I have seen the video of Sinhalese Soldiers raping two dead bodies of the LTTE women soldiers. Compared to that, this is nothing. But do you think you can ever live peacefully after this ? After killing 30,000 Tamil people and driving 2 lakh people homeless, do you think you can live peacefully ? No my friend. When there is no hope to live then there will be only bloodshed. Be ready. If you think 'Only Sinhala and No Tamils' then this war will never end, until you wipe out the entire Tamils from Sri lanka and from TamilNadu or Tamils wipe out your entire parliament rulers.(They won't kill you mud-heads. They will kill only your rulers). Read about the genocides happened all over the world. Compare it with what your government is doing to Tamils.

I don't expect a humanitarian outcry from people like you because as I said your minds were already thick headed. You don't know anything about the politics goes there. You just have hatred. That blinds all your eyes. Let me give you some awareness.

The Sinhala Government's war against LTTE and Tamils costed around 200 billion US dollars. If you are a thick head you will ask "So what ?".
Rajapaksha Govt borrowed all these money from India, China, Russia, Pakistan etc. All these money just to kill some native people who asked 'self-determination' rights. How do you think Sinhala Govt of yours will pay it back ? Guys like you who live in abroad will pay off this 200 billion dollars for your govt ? No. Sri Lanka has already given way to multinational companies to use its natural oil resources as a pay off, contract deals. For e.g. Tea plantation and oil-petrol industries are entirely taken in by Indian companies. China is building a port for Srilanka (is it for free ?). China gave all the arms to the Sinhala Govt. In return they will get all the profitable resources from Sri Lanka. "Weapons for you..Profit for them". China is a well known country that was supporting terrorism / genocidal governments world wide in weaker countries so that they can slowly empower their economy and their people. India has a stupid foreign policy. To prevent China, US, Pakistan and Russia entering inside Srilanka (for a military base) it is supporting all the genocidal activities of Sri lanka. Now, In your country day by day prices are increasing incredibly. Unemployment increases.
Sinhalalese journalists too (about 14 until journalist Lasantha ) were being killed becos they wanted to make you people aware.

LTTE and Tamils asked only one. Self-determination, i.e. the right to govern their area on their own, the right to use the lands in their area on their own, the right to collect taxes and use them for their own and the right to choose their MPs and Chief Minister on their own. In short, a system similar to that is in USA. In USA all 52 states are independent(own laws, own rules, own taxes, own land, own governor, own language etc) but one as a country. But your Sinhala race continued this racistic attitude and genocide and the demand has changed to indepedent 'Tamil Nation' instead of confederate 'Tamil State'. You have crossed the boundary of 'Tamil State' long time back.

Because every single Sinhala Political Party that came to power used the short cut 'Sinhala-majority' way by telling 'Tamils are evils.. Srilanka is only for Sinhalese'. A natural way to win over 'Sinhala' people was a simple 'racist' view. Simply telling that 'Tamil is your enemy and drive him out' they made you forget about your problems and life and made you people believe that Tamils are your only problem. This what Hitler said to Nazis about Jews to drive out Jews out of Germany. This what BJP in India says to Hindus about Muslims to 'ask Muslims silent otherwise you will be killed'. Indians do not trust BJP; they drove BJP out of power. But you thick heads do believe all your racist parties. That is why every Sinhalese Party in Srilanka is dying to claim that the 'war against Tamils and LTTE' was won by them. That much 'racism' is in your bloods; In all your parties' bloods; In all your leader's bloods.
This racist attitude is not just happening today or last month or last year. It started 40 years before your Independence. Exists almost about for the past 100 years or more. If you want to learn or realize what they taught you in schools about Mahavamsa and other twisted things about history, then read history not from your Sri Lankan historians but from the international historians. If you don't believe Tamils then don't read their version of Srilankan history. But read international true scholars about Srilanka and its history and the freedom struggle and the post independence racial genocides.

I see this race problem sustained due to the lack of selfless, great leaders in India as well as Sri Lanka. VP Singh, an Indian prime minister was a good leader. He withdrew the IPKF but he was in power for 12 -1 5 months only and was thrown out. Otherwise all Indian Prime ministers including Rajiv and Manmohan Singh see Sri Lanka as a 'strategic military base' which should not be given hold to enemies. And Sinhala leaderships were also not great but selfish leaders. I hope someday some great leader will emerge either in India or Srilanka and bring peace in Srilanka.

Otherwise we all will see more blood. You (Sinhalese) and Me(Tamils). Both of us. That is for sure. The Tamils in Srilanka will live either as a separate independent state or independent nation some day either with blood shed or not. That is all up to you Sinhalese people.

Thursday, May 28, 2009

Double standards of the Easts !

In Jakarata.com website they have posted a page titled 'Double standards of West: UN resolution on Sri Lankan humantarian crisis has been defeated on 27May09'. Those views pained me hard and my comments to that article on that website, I replicate it here.

28 June 2009.
'War on terrorism' was a catchy word for Bush. Now it has become 'catchy' in Sri Lanka and has gone up the UN Human Rights Council. West's double standards ? Come on.. what about your standards 'asian guys'(China, Russia, India, Pak and Sri Lanka)?

Do you think people reading this article are idiots enough to not understand the simple reason behind every asian country's interest in Sri Lanka ? Simple. The strategic military control center over the 'Indian ocean'. That's why China, Pakistan, Russia and Vietnam are luring around Sri Lanka, giving arms, constructing ports, pouring monatary support etc. Funny thing is these countries talk about 'Double standards' of west. US wanted to set foot in Sri Lanka and you guys wanted to eliminate US, and set foot yourselves. And in this race for 'footing in Sri Lanka', India, China, Russia and Pakistan are running now. I don't subscribe to US invasion in Asia like in Afghanistan but that does not mean 'native asian countries' group together to 'kill their own people' and suppress their 'freedom thoughts'.

It's a pain in the heart to see that countries like Indonesia, Cuba and Bolivia were standing for the 'asian group' they were supporting instead of looking into the ethnical genocide the Sinhala Govt doing against the Tamils in Srilanka.

It is true that US and some other western 'powers' try to intrude in Asian region. But the main issue here now is not their intrusion in Srilanka but the dyeing people of racial discrimination. It is the "Sinhala only in Srilanka.. Tamils must go away" attitude of Sinhala Govt for the past 60 years that fuelled this conflict. The Sinhala Govt's presidents systematically denied all the basic 'equal' rights of Tamil people who were also native of the land but minority.

I just warn these Lankan supporting countries.. Don't have stupid blind foreign policies in the name 'soverignity' and integrity. Apart from fighting against USA and other invasions it is also important to see what your fellow country is doing to its own people.

My greatest shock was Cuba, the country of socialist revolution, ruled by Fidel Castro who was one of the guiding-heroes of LTTE the rebel movement in Sri Lanka. I was shocked that Cuba just dumped this freedom movement as a mere 'terrorism' act. What a historical stupidity.

The Sinhala Govt in the name of erasing LTTE killed about 3 lakh Tamil civilian people in the 25 years of War. The Sinhala Government's brutality and racistic attitude made LTTE, the liberal movement more lethal and do you think 'suicide bombers' came out of thin air ? No. If you drive people to their ends, and they will turn loose on to you. LTTE became lethal and suicidal because of Sinhala Govt's racistic and ruthless attitude. The role of Indian Govt especially its former Prime Minister Rajiv Gandhi is no less in the killings of Tamils in Sri Lanka.

I urge China, India, Russia, Cuba, Bolivia, Indonesia and Vietnam countries to analyse the issue and then decide on supporting it. If an ally country is doing wrong on its own people then it is the neighbour country's responsibility to condemn its actions and set things right within the region itself. Instead if you support in the name of 'fighting terrorism' that W.George Bush did against Iraq and killed lakhs of civilians and 'soverignity' then there is no difference between You and the West.

Think about your double standards. Your hands are full of blood.

Thursday, April 23, 2009

தமிழ்ப்பெண்களின் உண்ணாவிரதப் போராட்டம் – 9 வது நாள்

ஏப்ரல் 21, 2009. செவ்வாய்க்கிழமை.
சென்னை மார்ஷல் சாலையில் உள்ள ம.தி.மு.க அலுவலக கட்டிடம்.

அமைதியான வழியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த இடம் வழங்கக் கூட போலீஸ் மறுத்த ‘சனநாயக’ நிலையில் அரசியல் சார்பற்ற பெண்கள் இயக்கங்கள் போராட வை.கோ தனது சென்னை எழும்பூர் கட்சி அலுவலகத்தின் முன்புறத்தை வழங்கினார். இருபது பேர் பங்கேற்றுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இதுவரை 5 பேர் கவலைக்கிடமாகப் போயுள்ளனர். அவர்கள் ஜெயமணி(34) - திருச்சி; பழனியம்மாள்(28) – மதுரை, செல்வி(40)-கொடைக்கானல், லோகநாயகி(44) – வேலூர், சாந்தி(35) – திண்டுக்கல் ஆவர். இதில் ஜெயமணி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும் சிகிச்சையை மறுத்து திரும்பி வந்து போராட்டத்தைத் தொடர்கிறார்.

அந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 9வது நாளாக நீடிக்கிறது.
இன்று காலையில் விவேக் மற்றும் பல சினிமா பிரமுகர்கள் வந்து உண்ணாவிரதம் இருக்கிறவர்களை வாழ்த்திச் சென்றனர்.

முன்னதாக, நேற்று, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் பெண்கள் சோனியா காந்தி தங்களிடம் போரை நிறுத்த உறுதியளிக்க வேண்டும் எனப் போராடி வருவதால் கனிமொழி, தி.மு.க சார்பான வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டனர்.

மாலை ஆறு மணியளவில் ஈழக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வந்திருந்து உரையாற்றினார். ஈழப் போராட்டம் இன்று உலகெங்கும் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதற்காக பெருமிதம் அடைந்தார். தென்னாப்பிரிக்காவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த இலங்கைப் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் (வயது 75) தென்னாப்பிரிக்க தகவல் தொடர்புத்துரை அமைச்சரின் உறுதிமொழிக்குப் பின் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அடுத்த சில நாட்களில் நடந்த நெல்சன் மண்டெலாவின் ஆளும் கட்சி மாநாட்டில் ஈழப் போராட்டத்தை அங்கீகரிப்பதாக தீர்மானம் இயற்றியுள்ளனர் என்ற தகவலை காசி ஆனந்தன் கூறினார்.

அதைத் தொடர்ந்து நடந்த மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் அங்கு வந்திருந்த 100 பேர் கலந்து கொண்டனர். எழும்பூர் ரயில் நிலையம் வரை சென்று திரும்பியது ஊர்வலம். மெழுகு வர்த்தி ஏந்தி சாலையோரம் நின்று குழுவினர் தொண்டை வலிக்க “ சோனியாவே போரை நிறுத்து” என்று கோஷம் போட சாலையில் இங்குமங்கும் வாகனங்களில் எனக்கென்ன வந்தது என்று ‘பறந்து’கொண்டிருந்தனர் பொது சனங்கள்.
ஊர்வலம் முடிந்ததும் உண்ணாவிரதத்தை நடத்தி வரும் விஜயலஷ்மி வடஇந்தியாவிலிருக்கும் சில சமூக அமைப்புகள் மற்றும் மேதா பட்கரிடமிருந்து, இப்போராட்டத்தை ஆதரித்து வந்த கடிதங்களை வாசித்தார். பின்னர் பேசிய மருத்துவர் அம்மா பெண்கள் அனைவரும் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு போரை நிறுத்திவிட இயலும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர்கள் அனைவரையும் மீண்டும் நாளை சந்திக்கலாம் என்று எண்ணியபடி கிளம்பி வீடு வந்து விழுந்து டி.வி.யை ஆன் செய்தால், கலைஞர் மேலும் இரண்டு ‘தந்திகள்’ கொடுத்திருந்தார் மத்திய அரசுக்கு. அத்தோடு நாளை மறுநாள்(23ம் தேதி) வேலை நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
நாளை மறுநாளுக்குள் ராணுவம் மொத்த புத்துமாத்தளம் பகுதியையும் தரைமட்டமாக்கியிருக்கும்.

அப்புறம் போர் தன்னாலேயே நின்றுவிடும்.

உடனை கலைஞர் ‘வேலை நிறுத்தம் வெற்றி!! மத்திய அரசு பணிந்தது !!’ என்று அறிக்கை விட, அதை ஜெயலலிதாவும், ராமதாஸும் ‘நாடகம்’ என்று வருணிக்க, பிரணாப், ‘அன்னை’ சோனியா முதல் பான் கி மூன், ஹில்லாரி வரை அனைவரும் ‘தீவிரவாதத்தை’ ஒழித்த நிம்மதியோடு தூங்கப் போவார்கள். ராஜபக்சேவும், சகோதரர்களும் தமிழர்களின் வாழ்க்கையை எப்படி வதை முகாம்களில் ‘சீரமைப்பது’ என்று அவர்களின் அடுத்த ஐந்தாண்டு திட்டங்களில் இறங்க, நம்ம ஊர்த் தன்மானத் தமிழ் மக்கள் IPL ஒரு 25-25 மேட்ச் நடத்த அதை டி.வி.யின் முன்னால் உட்கார்ந்து வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருக்கப் போகிறார்கள்.

ஏப்ரல் 22, 2009. செவ்வாய்க்கிழமை. உண்ணாவிரதத்தின் 10வது நாள்
அதிகாலை 5 மணி.

சத்தமில்லாமல் மார்ஷல் சாலையின் இருமுனைகளையும் தடுப்புகள் போடப்பட்டன. சாலையோடு இணையும் மற்ற சந்துபொந்துகளில் போலீசார் வந்து நின்றனர். பத்திரிக்கை, டி.விக்காரர்கள் ரோட்டின் முனையிலேயே நிறுத்தப்பட்டனர். இரண்டு வேன்களில் வந்த சுமார் 150 போலீசார் உண்ணாவிரதமிருந்தவர்களில் கவலைக்கிடமாக இருந்த 5 பெண்களை கைது செய்து வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தனர். மற்ற பெண்களை கைது செய்யவில்லை. அவர்கள் அடுத்து கவலைக்கிடமான நிலையை அடையும் போது கைது செய்யலாமென்று விட்டுவைத்திருக்கிறார்கள் போல.

வாழ்க சனநாயகம்.

ஏப்ரல் 25, 2009. வெள்ளிக்கிழமை. உண்ணாவிரதத்தின் 13வது நாள்
திடீர் ஈழ வீராங்கனையாய் அவதரித்த ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரதம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. உண்மையில் அரசின் கெடுபிடிகளினாலும், ஊடக இருட்டடிப்புகளாலும் வாடியிருந்த பெண்கள் மக்களின் 'எனக்கென்ன வந்தது' என்ற பார்வையால் மனம் வெறுத்து போராட்டத்தை நிறுத்தியிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

Friday, April 17, 2009

வாழ்க்கையின் விளையாட்டு.

புதுதில்லி:

வாழ்க்கை :

ஜனவரி 2009, ஒரு அதிகாலை 5 மணி.


பாத்திமா பேகம். வயது 65. டில்லி (குடிசை)வாசி.

வழக்கம் போல் சீக்கிரமே எழுந்து குடிசையை விட்டு தன் சாக்குப் பையுடன் வேலைக்குக் கிளம்புகிறார்.


20 வருட வேலை. அலுக்காத, சளைக்காத வேலை. குப்பை பொறுக்கும் வேலை.

நேரே விறுவிறுவென நடந்து அருகிலிருக்கிற கார்ப்பரேஷன் குப்பைக்கிடங்கு வந்து சேர்கிறார். இதுதான் அவருடைய ஆபீஸ். 60 மீட்டர் உயர குப்பை மலை அது. 3 4 சதுர கி.மீட்டர் பரப்பளவு இருக்கும். அதன் நாற்றம் அரை கிலோமீட்டர். டில்லியின் மூன்று பெரிய குப்பைக்களங்களில் இதுவும் ஒன்று.


இன்னும் விடியவில்லை. டீ குடிக்கவும் தற்போது முடியாது.


கையிலிருக்கும் குச்சியைக் கொண்டு காலடியில் மிதிபடும் குப்பையை கவனமாகக் கிளறுகிறார்.


என்ன கிடைக்கும் ? பழைய பாட்டில்கள், உடைந்த பழைய பல்புகள், இரும்பு, அலுமினியம், பிளாஸ்டிக் இன்னும் உங்கள் வீட்டில் எதெது வேண்டாமோ அவற்றையெல்லாம் இங்கே சேர்த்துக்கொள்ளவும்.


குப்பை சேகரிப்பும், பிரிப்பும் எவ்வாறு நடக்கிறது ? முதுகில் ஒரு பெரிய கோணியும், கையில் ஒரு குச்சியுமாகத் தெருக்களில் நாம் பார்க்கிறோமே. இவர்கள் பேரிவாலாக்கள்என்றும்போரிவாலாக்கள்என்றும் (ஹிந்தியில்) அழைக்கப்படுகிறார்கள். இவர்களின் பணி.. தெருக்களிலும், தெருக்குப்பைகளிலும் இருந்து மறுசுழற்சி’(recycling) செய்யப்படக்கூடிய இரும்பு, பிளாஸ்டிக் முதலான பொருட்களைப் பிரிப்பது. அதுதான் அவர்களின் மால்’.


பேகம் போன்றவர்கள் பின்னிவாலாஎன்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பெரிய குப்பைக்களங்களில் இறங்கி குப்பை பிரிப்பவர்கள். காடிவாலாக்கள் ஆபீஸ்களிலிருந்து வேஸ்ட் வாங்குபவர்கள். கபாரிகள்வீடுகளில் பழைய பொருட்களை வாங்குபவர்கள். நம்ம ஊரில் குப்பை பொறுக்குபவன், பழைய பேப்பர்க்காரன் என்ற இரண்டே பெயர்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளது.


இவர்கள் அனைவரும் குப்பைகளை கொண்டு சேர்க்கும்(விற்கும்) இடம் குடோன்’ (godown) எனப்படும் குப்பைப் பிரிப்பறை. இதை நடத்துபவர்கள் சிறுசிறு முதலாளிகள். இங்குதான் குப்பைகள் தொழிற்சாலை, ரசாயன மற்றும் வீட்டுக்கழிவுகளாகவும், மற்றும் எளிதில் உயிர்ச்சிதையக்கூடிய, உயிர்ச்சிதைவடைய இயலாத மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.


இங்கிருந்து அந்தந்த சுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுகின்றன.

பேகம், இந்தப் பரந்த குப்பைச்சந்தையில் தான் ஓர் முக்கிய அங்கம் என்ற உணர்வேயின்றி பரபரவென்று குப்பைகளிலிருந்து பொறுக்கி தன் சாக்குப் பையில் போட்டுக்கொண்டே முன்னேறுகிறார். சுற்றுமுற்றும். அந்த அழுகிய நாற்றத்தினால் எள்ளளவும் பாதிக்கப்படாதவர்கள் போல மேலும் பல தலைகள் குனிந்தவாறே ஆங்காங்கே தென்பட்டன. யாரும் யாரையும் பார்த்து ஹாய் குட்மார்னிங் சொல்லவில்லை. ரொம்பவும் நெருங்கி தன் தேடுதல் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் விரட்டவும் இல்லை. அவரவர் குப்பை அவரவருக்கு.


பேகம் குப்பைகளுக்குள் ஏதோ பளீரென்று தட்டுப்பட, கூர்ந்து பார்க்க குனிந்தபோது, மட்டென்று பின் மண்டையில் ஓர் அடி விழுந்தது. நிலைகுலைந்து விழுந்தவரின் முகம் நசநசவென்ற எதையோ உணர்ந்தது. நிமிர்ந்து பார்க்க, எதிரே நின்ற ஆள் யூனிபாரம் அணிந்திருந்தான். கோபமாகப் பேசினான்.


இங்கேயெல்லாம் வந்து இனிமேல் குப்பை பொறுக்கக்கூடாது...எங்க கம்பெனி காண்ட்ராக்ட் எடுத்திருக்கு.. புரிஞ்சதா.. போ போ.. பேகம் அவன் சொல்வதன் அர்த்தம் புரியாமல் வலியைத் தாங்கியபடி ஏன் பொறுக்கக்கூடாது என்றதற்கு மீண்டும் பிரம்படியும், உதையும்தான் பதிலாகக் கிடைத்தன பேகத்திற்கு.


ஏதோ தவறாக நடந்துவிட்டது என்று புரிகிறது பேகத்திற்கு. ஆனால், என்னவென்றுதான் புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். நாளை முதல் பேகம் இங்கு குப்பை பொறுக்கமுடியாது.


------ ****** ----------------

விளையாட்டு :

இங்கிலாந்தின் அடிமை நாடுகளாக இருந்த காலனி நாடுகளுக்கிடையே (அடிமை)நல்லுணர்வை வளர்த்துக் கொள்வதற்காக 1921ல்ஆரம்பிக்கப்பட்டது காமென்வெல்த்’. இதன் தலைவர் இங்கிலாந்து ராணி எலிசபெத் ஆவார்.


பிற்காலத்தில் விடுதலையடைந்த பின் இவை காமென்வெல்த் குடும்பங்களாயின. காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இதன் தற்போதைய 54 உறுப்பினர் நாடுகளுக்கிடையே நல்லுணர்வை வளர்க்க நடத்தப்படும் போட்டிகளாகும். வரும் 2010 அக்டோபரில் இப்போட்டிகளை நடத்தும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது.


தலைநகர் தில்லியில் நடைபெற இருக்கும் இப்போட்டிகளுக்கான விளையாட்டுக்கிராமம் (sports village) யமுனையாற்றின் கரையில் எழிழுடன் கட்டப்பட ஆயிரத்து நூற்று ஐம்பத்தியொரு(1151) கோடி ரூபாய்ச் செலவில் 160 ஏக்கர் இடத்தில் பிரம்மாண்டமாய்த் தயாராகிக்கொண்டிருக்கிறது.

54 நாடுகளிலிருந்தும் வரவிருக்கும் வீரர்களும் தங்க, விளையாட, சுற்றிப் பார்க்க வசதிகள் செய்யப்படும். பெரிய பெரிய தலைவர்கள் விருந்தினராய் வருகை தருவார்கள். இப்படிப்பட்ட முக்கியமானநிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் தில்லி மாநகரம் மட்டும் அழுக்காகத் தெரியலாமா ? பளபளக்க வேண்டாமா ?


நல்ல விஷயந்தானே. இந்தியா மிளிரவேண்டாமா ?’


யோசித்தது தில்லி கார்ப்பரேஷன்’. விளைவு. தில்லியின் குப்பைகளை அள்ளும் பொறுப்பை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது. இதனால் குறைந்த செலவில் நிறைந்த குப்பையை அள்ள முடிகிறது. கார்ப்பரேஷன் இதில் மிச்சம் பிடிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா ?


நாற்பது ( ௪௦ ) கோடி ரூபாய். அடேங்கப்பா.


நல்ல விஷயந்தானே. எந்தக் கார்ப்பரேஷன் தான் லாபத்தில் ஓடியிருக்கிறது ? 40 கோடி ரூபாய் அரசுக்கு லாபம் தானே ?


----------- ************ --------------------------------------------------------


வாழ்க்கையின் விளையாட்டு:

இவ்வளவு நாளும், தில்லி கார்ப்பரேஷனின் அரசு ஊழியர்கள் வாறிய 80 சதவீத குப்பைகள் போக மீதி 20 சதவீத குப்பைகளை அள்ளி சுதந்திரமாய்பிழைத்த பேகம் போன்ற ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர்(1,50,000) இனிமேல் நடு குப்பையில்தான் நிற்க வேண்டும்.


ஒரு நாளில் 150 200 ரூபாய்கள் சம்பாதித்து ராஜபோகவாழ்க்கை வாழ்ந்தவர்கள் இவர்கள்.


இதில் சில ஆயிரம் பேர் தங்கள் வருமானத்தில் பாதிக்கும் குறைவான சம்பளத்திற்கு இந்தத் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளிடமே கொத்தடிமை வேலை பார்க்க நேரிடும்.

ஒரு லட்சம் பேர் அள்ளிய குப்பையை இந்த சில ஆயிரம் பேரே அள்ளிவிடவேண்டும்.


ஒருவேளை கார்ப்பரேட்டுகளுக்காக குப்பை அள்ளும்போது கழுத்தில் டைகட்டி அள்ள வேண்டிவருமாயிருக்கும். பாவம், இந்த வாழ்நாள் ஒப்பந்தஅடிமைகளுக்கு அது தான் தூக்குக் கயிறு.


இந்த (கொடுமையான) வேலைகூட கிடைக்கப்பெறாத மற்றவர்கள் ? இருக்கவே இருக்கிறது திக்கற்றவர்களின் பழம்பெரும் பாரம்பரியத் தொழில், பாலியல் தொழில்.


காமன்வெல்த் போட்டிகளை
DDயில் காட்டுவார்களா ? இல்லை டிஷ்ஷில் மட்டும் தான் காட்டுவார்களா ? அதுதானே நம் கவலை.

சரி. நம்ம ஊர்க்கதை என்ன எனகிறீர்களா ? 'ஓனிக்ஸ்'காரனிடம்தான் கேட்கவேண்டும்.
- அம்பேதன்.