Saturday, July 6, 2013

ஓநாய்களும் இரு ஆட்டுக்குட்டிகளும்...சாதிகள் ஒழிவதில்லை.

பா.ம.க கட்சியின் நிறுவனரான ராமதாஸ் 80களில் செய்த சாதி அரசியல் அப்போது மிகப் பிரபலமானது. தனது வன்னியசாதி இனமக்களுக்கு அதிக இடஒதுக்கீடு தரவேண்டும் என்று அவர் நடத்திய போராட்டத்தில் வன்னிய இன மக்கள் பெரும்வாரியாக சேர்ந்து குதித்து நடுரோட்டில் பெரிய மரங்களை வெட்டிப் போட்டு தமிழ்நாட்டையே சில வாரங்கள் ஸ்தம்பிக்கச் செய்தனர். அப்படி தமிழகத்தையே உலுக்கியதில் அந்தச் சாதியினருக்கு கர்வம் கூட இருந்தது (நாங்க யாரு தெரயும்ல..).

அப்போது சாதியவெறி பற்றிய விழிப்புணர்வும் அது தவறு என்கிற மனப்பான்மையும் பெரிதும் மக்களிடம் வளர்ந்துவிடவில்லைதான். ஏனெனில் அது ஊடகங்கள் வளர்ந்திராத காலம். அன்று மக்களின் உணர்வுகளை மாற்றும் வலிய ஊடகம், அதுவும் ஒன்றே ஒன்றுதான். அது தூர்தர்ஷன் மட்டுமே.

ஆனால் 30 வருடங்களுக்குப் பின் இன்றைய நவீன செல்போன்கள் மற்றும் தொலைதொடர்பு யுகத்தில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 200 டி.வி. சேனல்கள் இருக்கின்றன. குடும்பத் தொலைக்காட்சிகள், கட்சி தொலைக்காட்சிகள், மதத் தொலைக்காட்சிகள் என்று விஷயங்கள் 200 மடங்கு அதிகமாக மக்களைச் சென்று அடைகின்றன.

மக்கள் மாறியிருக்கிறார்களா? ஆம் மாறியிருக்கிறார்கள். சாதியின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்திருக்கிறது. பொருளாதார ஏற்றம் சாதியை மழுங்கடிக்கச் செய்யும் சக்தியை பெற்றிருப்பதால் சாதியை பொருட்படுத்தாமலிருக்க பழகியிருக்கிறார்கள். ஆனால் இந்த மாற்றங்களோடு சேர்ந்து சாதிய வெறித்தனமும் அதன் வடிவத்தைக் கூர்மையாக்கியிருக்கிறது.

தர்மபுரியில் அது அடையாளமாக வெடித்துக் கிளம்பி இன்று பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது. கடைசியாக காவு வாங்கப்பட்டது இளவரசன். நத்தம் காலனிப் பகுதியில் வன்னியசாதியைச் சேர்ந்த திவ்யாவும் தலித்சாதியைச் சேர்ந்த இளவரசனும் காதலித்து ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். திவ்யாவின் தந்தை போலீசில் பெண்ணை மீட்டுத் தரும்படி புகார் செய்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்து பா.ம.க கட்சி அரசியல் நிலையில் பலமிழந்து போனதாலும், கட்சி வன்னியருக்கு என்ன செய்து கிழித்துவிட்டது என்று பெரும்பாலான வன்னியர்கள் எண்ணிப் பார்த்து 'போங்கடா போய் புள்ளக் குட்டிகள படிக்க வைங்கடா.. வெட்டியா இவனுங்க பின்னாடி சுத்திக்கிட்டு அலையாம' என்று போய்விட்டதாலும் கட்சிக்கு வரும்படி குறைந்து விட்டது. தனது பலத்தை மீண்டும் நிலைநிறுத்த தனது பிரம்மாஸ்திரத்தை எடுத்தார் பா.ம.க ராமதாஸ்.

'ஜீன்ஸ் பேன்ட், கூலிங் க்ளாஸ் போட்டுக் கொண்டு எங்கள் பெண்களை மயக்கி காதல் திருமணம் செய்யும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பாடம் புகட்டுவோம்' என்பது போன்ற புரட்சி வசனங்களை ராமதாஸூம் அவரது அடிபொடி 'குரு'க்களும் சேர்த்துப் பேச ஆரம்பித்தனர். கீழே உள்ளது மருத்துவர் ஐயாவின் பொழிப்புரையிலிருந்து ஒரு சேம்பிள்..

இந்நிலையில்தான் இளவரசனும்-திவ்யாவும் ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். இதில் இளவரசன் 17 வயதேயான மைனர். திவ்யா இளவரசனை விட மூத்த பெண். அவரது குடும்பம் நடுத்தர சராசரிக் குடும்பம். இளவரசனின் குடும்பமோ கொஞ்சம் வசதியானது. அதற்காக பெரும்பணக்காரர்கள் இல்லை. அவனது அப்பா அரசு பிணமருத்துவக் கிடங்கில் அறைக் காப்பாளராக வேலை செய்கிறார். அரசு வேலை.

இப்போது தர்மபுரியில் இருக்கும் சாதீயப் பெருந்தலைகளுக்கு நம் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு தலித் பையன் ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டானே என்கிற வெறி. நேரே திவ்யாவின் அப்பாவைக் கூப்பிட்டு நாலு காய்ச்சு காய்ச்சி நீயெல்லாம் சாதிகெட்டவன் என்கிற ரீதியில் அவரை மிரட்டி, திட்டித் தீர்க்க அவர் வீட்டில் வந்து தூக்கில் தொங்கிவிட்டார்.

இதைச் சொல்லி வன்னிய சமூக மக்களிடையே வெறுப்பை ஊதியதில் தர்மபுரியில் நத்தம் காலனியில் 200 தலீத்துகளின் வீடுகள் தீக்கிரையாயின. இதையெல்லாம் தாண்டி திவ்யாவும் இளவரசனும் தங்களது திருமணத்தில் உறுதியாக நின்றார்கள்.

இந்தக் கலவரங்களுக்குக் காரணமாய் நம் மருத்துவர் ஐயா சொன்ன முத்துக்களில் சில கீழே..

"நம் வீட்டுப் பெண் பிள்ளைகளை 14 வயது பெண் குழந்தைகளை காதல் நாடகமாடி கடத்திச் சென்று கர்ப்பமாக்கி கை விட்டு விடுகிறார்கள். தருமபுரியில் நடந்தது அது தான். தருமபுரி கலவரத்தில் ஒரு உயிருக்கு சேதம் ஏற்பட்டதா? ஒரு பன்றிக் குட்டியைக் கூட கொல்லவில்லை. ஆனால் அந்தப் பெண்ணோட அப்பன் செத்துப் போனான். இழப்பு எங்களுக்குத்தான். காதல்-கலப்புத் திருமணம் இதையெல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிராமணர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முசுலீம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் பிரச்சனையில் பெற்றோர்கள் தலையிடக் கூடாது. உரிமை இல்லை என்று சொல்றான். பெற்றோர் தலையிடாமல் பின் யார் தலையிடுவது? காதலுக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. எங்கள் சாதி பெண்களிடம் அதை வைத்துக் கொள்ளக் கூடாது"  - மருத்துவர் ஐயா மேதகு ராமதாசு அவர்கள்.

திவ்யாவின் அம்மாவின் மூலம் போலீசுக்குப் போன பாமக தரப்பு திவ்யாவை அம்மாவிடம் திரும்பித் தர கோரியது. கோர்ட்டிற்கு அழைத்துவரப்பட்ட திவ்யா தான் விருப்பத்துடனேயே இளவரசனுடன் திருமணம் செய்து வாழ வந்ததாகக் கூறிவிட்டார். சாதிவெறியினர் முகத்தில் கரியைப் பூசிய அவரை விட்டுவிட்டு திவ்யாவின் அம்மாவை குறிவைத்தனர். திவ்யாவின் அம்மாவை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததில் கதறிக் கொண்டு திவ்யா ஓடிவந்தார்.

அம்மா செத்துப் போவாரோ என்று பயந்து போன திவ்யா இளவரசனை விட்டுவிட்டு அம்மாவிடம் திரும்பினார். இப்போது திவ்யாவுக்கு இளவரசனுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தால் என்ன விளைவுகள் வரும் என்று விளக்கிச் சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னதில் அவர் இளவரசனுடன் இனிச் சேர்ந்து வாழமாட்டேன். அவரைப் பார்த்தால் இறந்துபோன என் தந்தை ஞாபகம் வருகிறது. என்று இருநாட்கள் முன்பு பத்திரிக்கைகளைக் கூட்டி விரிவான அறிக்கை கொடுத்துவிட்டார்.

அதைப் பத்திரிக்கையில் படித்த இளவரசன் தனது மாமாவிடம் இப்படி பத்திரிக்கையில் சொல்லியிருக்கிறாளே அவள் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டுவிட்டு, தான் போலீஸ் வேலையில் சேர்வதற்கான பயிற்சிகளை எடுக்கப்போவதாயும், போலீஸ் வேலை வாங்கிய பின் திவ்யா மனம் மாறி மீண்டும் வந்துவிடுவாள், தான் அவளை வைத்துக் காப்பாற்றுவேன் என்றும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறான். பின்பு தனது தந்தையிடம் அவரது பைக்கை வாங்கிக் கொண்டு சற்றுத் தள்ளியுள்ள ஊரிலிருக்கும் தனது நண்பன் ஒருவனைப் பார்க்கச் செல்கிறேன் என்று கிளம்பியிருக்கிறான் இளவரசன். காலையில் தருமபுரி ரயில் நிலையத்தருகே நின்று கொண்டிருந்த அவனது பைக்கைத் தொடர்ந்து சென்று பார்த்ததில் ரயில்வே பாதையோரம் மூளை சிதைந்து இறந்து கிடந்திருக்கிறான் இளவரசன்.

ரயிலில் அடிபட்டு இறந்தானா அல்லது ரயிலில் தள்ளப்பட்டு இறந்தானா அல்லது கொல்லப்பட்டு தள்ளப்ப்ட்டானா ? இளவரசன் இறந்து கிடந்ததை காலை அத்தனை நேரம் வரை அப்பகுதியைக் கடந்து சென்ற எந்த ரயில்களின் டிரைவர்களும் பார்த்து ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுக்கவில்லை. இது ஏன் என்பது ஒரு கேள்வி.

இளவரசன் இறந்ததைக் கேள்விப்பட்ட தர்மபுரி பாமக கட்சியினர் பலர் ஊர்ஊராகச் சென்று அந்தச் செய்தியை வேட்டுக்கள் வெடித்து மகிழ்ச்சி பொங்க அறிவித்தபடியே சென்றார்களாம்.

இளவரசனும் அவரது அப்பாவும் கடைசியாக இன்று மீண்டும் சந்தித்துக் கொண்டார்கள். இம்முறை அப்பா வேலை செய்யும் பிணக்கிடங்கிலேயே பிணமாக வந்து கிடக்கிறான் மகன் இளவரசன்.

இந்தச் சாதீயப் பிரச்சனையில் தலித்துக்களுக்காக நின்று போராடும் சக்தி திருமாவளவனுக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. 15 வருடங்களுக்கு முன்பிருந்த திருமாவளவனாயிருந்தால் இந்நேரம் இளவரசனுடன் துணையாக நின்று அவனுக்குத் தோள் கொடுத்திருப்பார் திருமா. இப்போதோ கலைஞர் தாத்தாவின் செல்லப் பேரனாக அவர் தரும் பணத்தின் நிழலில் வாழ்ந்து பழகிவிட்டதால் வெறும் அறிக்கைகளோடே நின்றுவிட்டார். மற்ற கட்சிகள் இடதுசாரிகள் உட்பட இப்பிரச்சனையின் ஆழம் புரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் கோட்டை விட்டுவிட்டனர். ஜெ. அம்மாவிடம் கேட்டால் இவன் யார் மேல்சாதிப் பெண்ணை திருமணம் செய்ய ? இவனுக்கு இது வேண்டியதுதான் என்று சொன்னாலும் சொல்வார். அவருடைய எல்லைகள் பாமகவை இந்தப் பிரச்சனையை வைத்து ரவுண்ட் கட்டிவிடுவதோடு நின்றுவிடுகிறது.  இப்படி எல்லாரும் கைவிரித்து விட்ட நிலையில் அவன் கொல்லப்படுவதை தடுக்க ஆளேயில்லாமல் போய்விட்டது. இப்போது அது தற்கொலை என்று பிரச்சனையை மூடிவிடப் பார்க்கிறதாம் போலீசு.

சாதிகள் இல்லையடி பாப்பா - பாரதியார். குழந்தைகள் முதலே இந்த எண்ணம் வரவேண்டும் என்று நினைத்த அவர் ஒரு தீர்க்கதரிசி தான்.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.