ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேறியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அத்தீர்மானத்தில்,
- இலங்கையுடன் இணைந்து விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
- அத்துடன், காமன்வெல்த் அமைப்பு மற்றும் சர்வதேச நீதிபதிகள் இணைந்த விசாரணை அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தலைப்பில் போர்க்குற்றம் என்கிற வார்த்தையே இல்லை. இந்த தீர்மானம் கடந்த வியாழக்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டது.
இந்த தீர்மானத்துக்கு அல்பேனியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கிரீஸ், லுத்வியா, மான்டினிக்ரோ, போலந்து. ருமேனியா, மாசிடோனியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கியிருந்தன. நாடு கடந்த ஈழ அரசும், இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அமைச்சரவையும், தமிழ் நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு அமைப்புகளும் இத்தீர்மானத்தை கடுமையாக எதிர்த்துள்ளன.
இத்தீர்மானத்தைப் பற்றி ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கெய்த் ஹாப்பர், சீனா, ஸ்ரீலங்கா, தென்னாப்பிரிக்கா, கானா, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா, பிரிட்டன் போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினார். இதை ஓட்டெடுக்கக்கூடத் தேவையில்லாமல் நிறைவேற்றியபின் இந்தியாவின் பிரதிநிதி பேசினார்.
பன்முகத் தன்மையுள்ள நாடாக இலங்கை இருக்க இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், 13வது சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் இந்தியப் பிரதிநிதி 1980களில் பாடிய பல்லவியையே திரும்பப் பாடினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சிம்பிளாக கதையை முடித்து விட்டார்கள். அப்படியென்றால் கொல்லப்பட்ட லட்சம் தமிழர்களும் பயங்கரவாதிகளா?
இலங்கையின் மீதான போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இலங்கையே முன்மொழிகிறது. நீதி எந்த அளவிற்கு வெளிவரும் என்பது இதிலிருந்தே தெரிகிறது.
இலங்கையை கழுவும் மீனில் நழுவும் மீனாக தப்பிக்க வைக்க புத்திசாலித்தனமான வார்த்தைகளைப் போட்டு இயற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தின் முக்கியமான தகிடுதத்தங்கள்.
காமன்வெல்த் - காமன் வெல்த் நாடுகள் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், சீனா போன்ற ஈழப் போரில் சிங்கள அரசுடன் கைகோர்த்து நின்ற அரசுகள் கொண்ட அமைப்பு. இந்த காமன்வெல்த்திலிருந்து நீதிபதிகளை அனுப்பி அவர்களை 'சர்வதேச நீதிபதிகள்'என்று கண்துடைப்பு விசாரணை செய்யவே காமன்வெல்த் அமைப்பு இதில் சேர்க்கப்பட்டுள்ளது.
சிறிசேனா அரசு - அமெரிக்க அரசு முந்தைய ராஜபக்சே அரசை போர் புரிந்த அரசாகவும் தற்போதைய சிறிசேனா அரசை மக்கள் நலப் பணிகளைச் செய்யும் அரசாகவும் தந்திரமாகக் குறித்து தீர்மானத்தில் பேசுகிறது. ராஜபக்சே புலிகளுடன் போர் என்று எல்லாத் தமிழர்களையும் கொன்ற போது அவரிடம் ராணுவ அமைச்சராக இருந்தவர் தான் தற்போதைய இலங்கை அரசின் அதிபர் சிறிசேனா. பின் எப்படி சிறிசேனா அரசு நியாயமாக விசாரணை நடத்தும் என்று நம்புவது ?
இலங்கையுடன் இணைந்து - அனைத்து உலகத் தமிழ் அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வந்த இந்த ஆலோசனையை இந்தத் தீர்மானம் முன்மொழிந்திருக்கிறது. அதாவது திருடனைக் கூப்பிட்டு 'அவனே அவனை விசாரித்து அவனை தண்டித்துக் கொள்ளவேண்டும்' என்று தீர்ப்பு வழங்குவது போன்றது இது. திருடன் தன்னையே தான் ஒழுங்காக விசாரிக்கிறானா என்று மொழி தெரியாத ஊரிலிருந்து நான்கு பெருசுகள் வந்து இதைக் கண்காணிக்கும்.
இவ்வளவு மோசமான நிலைமை தமிழர்களுக்கு உலகில் ஏற்ப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இந்த நிலையை அவர்களை ஆளும் இந்தியாவே அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சிங்கள ராணுவத்துடன் இந்தியா இணைந்து போர்ப் பயிற்சி செய்தது. போன மாதம் ஒரு போர்க்கப்பலை இலங்கை கடற்படைக்கு தானமாக வழங்கியது இந்தியா தான். இப்படி தமிழருக்கு பச்சைத் துரோகம் செய்யும் இந்தியாவும் மோடியும் ஒரு நாளில் இதற்குப் பதில் சொல்லியே தீரவேண்டும்.
No comments:
Post a Comment
Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.