Thursday, September 17, 2015

போர்க்குற்றம் நடந்தது உண்மையே !- ஐ.நா. அறிக்கையின் நோக்கம் என்ன?

சுவிட்சர்லாந்தில் ஜெனீவா நகரில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் 3 வார கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை 16ம் தேதி புதன்கிழமை ஐநா மனித உரிமைகள் ஆணையர் சையத் அல் உசைன் ஆல் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன் முக்கிய அம்சம் உள்நாட்டு விசாரணையை மறுதலித்து, மாறாக பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் மூலம் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதாகும். இது இலங்கைக்கு வைக்கப்படும் நெருக்கடியாகும். ஆனால் இதில் எவ்வளவு தூரம் விஷயங்கள் வெளிவரும் என்பது கேள்விக்குறியே.

இதுதவிர அறிக்கையிலுள்ள மேலும் சில முக்கிய அம்சங்கள்:
இறுதிகட்ட போரின்போதும், போருக்கு முன்பாகவும், அப்பாவி மக்கள், இலங்கை ராணுவத்தாலும், விடுதலை புலிகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்தவர்களையும் இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. தங்களுக்கு எதிராக செயல்பட்டோரை விடுதலை புலிகள் கொன்றுள்ளனர். இதில் தமிழ் அரசியல் தலைவர்களும் அடங்குவர். இரு தரப்பிலுமே மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. போர் முடிந்து இத்தனை வருடங்கள் ஆகியும், ஒருவர் கூட போர்க்குற்றத்திற்காக இலங்கையில் தண்டிக்கப்படவில்லை.

இலங்கை ராணுவ வீரர்கள், தங்களால் கைது செய்யப்படும், பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக பலாத்காரங்களில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, இறுதி போர் முடிந்த பிறகு, இலங்கை ராணுவத்தினர் அதிக பாலியல் குற்றங்களில் ஈடுட்டுள்ளனர். இந்த பாலியல் பலாத்காரங்களை, ஒரு தண்டனை முறையாக செய்திருக்கின்றனர். விடுதலை புலிகளோடு தொடர்புள்ளவர்கள் என்று தெரிந்தால் அவர்களை இழிவுபடுத்தும் செயலாகவும் ராணுவம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அச்சம், வெட்கம் போன்ற காரணங்களால், பாதிக்கப்பட்டோர் தங்களது பாதிப்பு குறித்த முழு விவரத்தையும் தெரிவிக்காததால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை முழுமையாக கண்டறிய முடியவில்லை. ஆனால் பெருமளவில் இக்குற்றங்கள் நடந்துள்ளன. இசைப்பிரியா, பாலச்சந்திரன், நடேசன் போன்றோரை சிங்கள ராணுவம் படுகொலை செய்தது தெளிவாகியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களை மீறி, இலங்கை ராணுவத்தினர் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டுள்ளனர். சில பலாத்காரங்களும், அதையொட்டிய டார்ச்சர்களும், மனித குலத்திற்கே எதிரான அளவுக்கு மோசமாக இருந்துள்ளன.

'வெள்ளை வேன்' கலாசாரம் என்று அந்த நாட்டில் அழைக்கப்படும், ஆள் கடத்தலும், அதைத்தொடர்ந்த சித்திரவதைகளும் நின்றபாடில்லை. உலக அளவில் அதிக பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ள நாடு இலங்கை. ஐ.நா. ஆய்வாளர்கள் நேரில் சென்று விசாரணை நடத்த இலங்கை அனுமதிப்பதில்லை. இவ்வாறு அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இதையொட்டி தமிழக சட்டசபையில் ஈழப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை கோரி ஏகமனதாக அனைத்துக் கட்சிகளின் ஆதரவில் தீர்மானம் இயற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அமெரிக்காவின் இந்த அறிக்கை மிகுந்த நேர்மையோடு விஷயங்களைப் பட்டியலிடுவது போலத் தோன்றினாலும் இதன் உண்மையான போக்கை அனுமானிக்க வசதியாக உள்ளது.

இந்த அறிக்கையில் அமெரிக்கா தற்போதை சிரிசேனாவின் அரசை பாராட்டியிருக்கிறது. அதே சமயம் முந்தைய அரசு போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டது எனக்குறிப்பிடுகிறது. இது ஈழப்படுகொலைகள் அத்தனைக்கும் ராஜபக்சேவை மட்டும் கட்டம் கட்டி காட்டிவிட்டு பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் தமிழர் X சிங்களர் இனப்பிரச்சனையை வெறும் போர்க்குற்றமாகச் சுருக்கி முடிக்கிறது. விடுதலைப் புலிகள் விடுதலைப் போராளிகளாகக் கருதப்படாமல் போர்க்குற்றம் புரிந்த ஒரு தீவிரவாதக் குழுவாகவே காட்டப்படுகிறார்கள். ஜெயவர்த்தனேயிலிருந்து தற்போதைய ரணில் வரை அனைவரும் தமிழனத்திற்கு எதிராக அநீதியாகச் செயல்பட்டவர்களே !

இந்த விசாரணையில் தமிழர்களை அழித்ததில் இந்தியாவின், அமெரிக்காவின் மற்றும் சீனாவின் பங்கும் மறைக்கப்படும். இதில் நிலைநாட்டப்படுவது அமெரிக்காவின் நீதியாக மட்டுமே இருக்கும். தமிழர்கள் கிடைத்த நீதியை வைத்து சந்தோஷப் பட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். தமிழினம் இலங்கையில் அமைப்பு ரீதியாக அழிக்கப்படுவதை இந்த அறிக்கையும் அதன் விளைவுகளும் கண்டுகொள்ளவே போவதில்லை.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.