Thursday, August 20, 2015

சேஷசமுத்திரம் ஜாதிக் கலவரம் நடந்தது என்ன? : எவிடன்ஸ் அமைப்பு ஆய்வறிக்கை!




சேஷசமுத்திரம் கிராமத்தில் வன்னியர் மற்றும் தலித் மக்களிடையே கோவில் தேர் இழுப்பது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது வன்முறையாக மாறி அங்குள்ள வன்னிய சாதியினர் தலித் மக்கள் மீது கொடூர தாக்குதல் நிகழ்த்தியதில் போய் முடிந்துள்ளது.  தலித்துகளின் குடிசைகள், கோவில் தேர் எரிக்கப்பட்டு, தலித் பெண்கள் ஆடைகள் உருவப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. போலீசாரின் அலட்சியமும் ஜாதிய சக்திகளின் சதியும் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் என உண்மையறியும் குழு ஒன்றின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மதுரையில் உள்ள எவிடன்ஸ் என்கிற தன்னார்வ அமைப்பின் உண்மை அறியும் குழு சேஷசமுத்திரத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து நடந்த நிகழ்வுகள் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. எவிடன்ஸ் அமைப்பின் உண்மை அறியும் குழுவின் அறிக்கை விவரம் பின்வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் கடந்த 15.08.2015 அன்று சுமார் 500க்கும் மேற்பட்ட ஜாதி இந்துக்கள் பெட்ரோல் குண்டு, அரிவாள், கடப்பாறை, உருட்டுக்கட்டை, கருங்கல், பீர்பாட்டில்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தலித் குடியிருப்பில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 7 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. தலித் பெண்களின் சேலையை உருவி ஆபாசமாக பேசி தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட எஸ்பி நரேந்திர நாயர் உள்ளிட்ட 11 போலீசார் காயமடைந்துள்ளனர். தலித் சமூக மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் தேர் முற்றிலும் எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சங்கராபுரம் காவல்நிலையத்தில் குற்றஎண்.329/2015 பிரிவுகள் 147, 148, 341, 323, 324, 506(2), 307, 436 இ.த.ச. மற்றும் பட்டியல் ஜாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த அவசரச் சட்டம் 2014 பிரிவு 3(2)(a) உள்ளிட்ட 3 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு 7 பெண்கள் உட்பட 82 ஜாதி இந்துக்கள் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு 17.08.2015 அன்று நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.

சேஷசமுத்திரம் கிராமத்தில் ஜாதி இந்துக்களான வன்னியர் சமூகத்து மக்கள் சுமார் 2000 குடும்பங்களாகவும், தலித் தரப்பில் பறையர் சமூகத்து மக்கள் சுமார் 80 குடும்பங்களாகவும் வசித்து வருகின்றனர்.

தலித் தரப்பில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இக்கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழா தோறும் இதுவரை டயர் வண்டியில் மாரியம்மன் உருவ சிலையை வைத்து தலித்துகள் தங்கள் குடியிருப்பில் பவனி வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத் தேர்தலில் சேஷசமுத்திரம் பஞ்சாயத்து தலைவராக ஜாதி இந்துவான சுப்பிரமணியன் என்பவர் தலித் மக்களிடம் ஊராட்சி மன்றத் தேர்தலில் நீங்கள் எனக்கு வாக்கு அளித்தால் உங்களுக்கு தேர் வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். அதனடிப்படையில் தலித் மக்கள் சுப்பிரமணியனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.

இதனடிப்படையில் ரூ.1,50,000 தலித் தரப்பில் வரி வசூலிக்கப்பட்டும், ரூ.3 இலட்ச ரூபாய் சுப்பிரமணியன் நன்கொடையாக கொடுத்தும் தேர் செய்யப்பட்டுள்ளது. ஆக தேரின் மதிப்பு 4,50,000 ரூபாய்.

இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பொதுப்பாதையில் தேர் பவனிக்கு தலித் மக்கள் ஆயத்தமாக இருக்கிறபோது ஜாதி இந்து தரப்பில் பொதுப்பாதையில் தலித்துகள் தேர் பவனி வர அனுமதிக்க முடியாது என்று தடுத்துள்ளனர். ஜாதி இந்துக்கள் தரப்பில் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணியன், கவுன்சிலர் அண்ணாமலை ஆகிய இருவரின் தலைமையில் தான் இந்த தடுப்பு நடவடிக்கை நடந்துள்ளது. அதுமுதல் சேஷசமுத்திரம் தலித் மக்களின் மாரியம்மன் கோவில் திருவிழா சமயத்தில் மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போட்டு வந்துள்ளது.

இந்த வருடம் தலித் சமூகத்து மக்கள் எப்படியாவது தேர்பவனியை நடத்திவிட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தனர். இதனைத் தெரிந்து கொண்ட சேஷசமுத்தரம் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் கடந்த 14.08.2015 அன்று சங்கராபுரம் காவல்நிலையம் சென்று தேர் பவனி நடந்தால் உயிர்சேதம் ஏற்படும் என்று புகார் கொடுத்துள்ளார். இது புகார் என்பதை விட அப்பட்டமான மிரட்டலாகவே தெரிகிறது. இதனடிப்படையில் அன்று மாலை சுமார் 3.00 மணியளவில் சங்கராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலித் தரப்பில் அருணாச்சலம், ஐயப்பன், ராமர் உள்ளிட்ட 5 நபர்களும் ஜாதி இந்து தரப்பில் 200 நபர்களும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது நாங்கள் எந்த தகராறிலும் ஈடுபடமாட்டோம் என்று ஜாதி இந்து தரப்பில் உறுதிமொழி அளித்துள்ளனர்.

இந்நிலையில் 15.08.2015 அன்று மாலை சுமார் 7.00 மணியளவில் சுமார் 100 பேர் கொண்ட ஜாதி இந்து இளைஞர்கள் கற்களையும் உருட்டுக்கட்டையும் எடுத்து வந்து தலித் தரப்பில் அம்மன் கோவில் பகுதியில் கட்டப்பட்டிருந்த டியூப்லைட்டுகளை உடைத்துள்ளனர். டிரான்ஸ்பார்ம் மீது பெரிய கற்களை கொண்டு செயலிழக்க வைக்கின்றனர். இவையெல்லாம் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த 40 போலீசார் முன்னிலையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் லெட்சுமி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் மாலதி ஆகியோர் தேர் பவனி நடத்த அனுமதி கொடுத்திருந்ததனால் தலித்துகள் தங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்பியிருந்தனர். ஆனால் போலீசார் அமைதியாக இருப்பதைப்பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த தலித்துகள் போலீசாரிடம் சென்று, அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறியதற்கு, தாக்குதலா நடத்துகிறார்கள் டியூப்லைட்டைத்தானே உடைக்கிறார்கள். ஒன்றும் நடக்காது தைரியமாக இருங்கள் என்று கூறியுள்ளனர்.

இதனிடையே 30 நிமிடம் கடந்து மேலும் ஜாதி இந்து தரப்பில் சுமார் 400 பேர் அப்பகுதிக்கு வருகை தந்து 500 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு, அரிவாள், கடப்பாறை, உருட்டுக்கட்டை, கருங்கல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து தலித் தரப்பில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பகுதிக்கு வந்திருந்த விழுப்புரம் மாவட்ட எஸ்பி நரேந்திர நாயர் அவர்களை அக்கும்பல் சூழ்ந்து கொண்டு சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த கும்பல் தலித்துகளை பார்த்து ஜாதி ரீதியாக இழிவாகப்பேசி, உங்களுக்கெல்லாம் தேர் கேட்குதோ, நீங்க எப்படிடா தேர் விடலாம் என்று கூறிக்கொண்டே பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தலித் குடியிருப்பில் வீசத் தொடங்கியுள்ளனர்.

• மகேந்திரன் என்கிற 22 வயது தலித் இளைஞர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த லாவண்யா என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த கும்பல் மகேந்திரன் வீட்டிற்கு வந்து, இந்த கீழ்ஜாதியில் பிறந்த நாய் தான் நம்ம பெண்ணை திருமணம் செய்திருக்கிறது என்று கூறிக்கொண்டே முதல் பெட்ரோல் குண்டை மகேந்திரன் வீட்டில் வீசி எரித்துள்ளனர்.

• ஜாதி இந்துக்களின் கொடூர தாக்குதலால் பயந்து போன தலித்துகள் 4 - 5 வீடுகளுக்குள் உள்ளே சென்று பூட்டுப் போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்துள்ளனர்.

• சில பெண்கள் அங்கிருந்து தப்பித்து வருகிற போது அவர்களின் சேலையை உருவி பாவாடை மற்றும் ஜாக்கெட்டுடன் நிற்க வைத்து ஆபாசமாக பேசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார்.

• இந்த தாக்குதலில் ஜாதி இந்து தரப்பில் 100 பெண்கள் உட்பட 400 பேர் ஈடுபட்டுள்ளனர். 12 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் பெரும்பாலானோர் கடுமையான வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். ஜாதி இந்து பெண்கள் மடியில் புடவையில் கற்களை சுமந்து வந்து தலித் குடியிருப்பில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன்முறையில் குழந்தைகள் ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஜாதியம் தலைமுறையை எப்படியெல்லாம் நச்சாக்கிக் கொண்டிருக்கிறது என்பது வேதனையாக இருக்கிறது. குழந்தைகளும் பெண்களும் இந்த வன்கொடுமையில் ஈடுபட்டாலும் அவர்கள் கருவிகளாக இயக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வருகிறது.

• தலித்துகளுக்கு சொந்தமான அம்மன் கோவில் தேர் முற்றிலும் எரித்து சாம்பலாக்கப்பட்டது. கொளஞ்சியப்பன், சுரேந்திரன், சரவணன், கருப்பன், கோவிந்தன், ஆனந்தன், தனபால் ஆகிய தலித்துகளின் வீடுகள் எரிக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் தலித்துகளுக்கு சொந்தமான 7 இருசக்கர வாகனங்கள், 2 ஜெனரேட்டர்கள் எரிக்கப்பட்டுள்ளன.

• நெடுமானூர், சங்கராபுரம், கரடிசித்தூர், தாவடிப்பட்டு, கொசப்பாடி போன்ற பல்வேறு கிராமங்களில் தலித்துகள் உயிருக்கு பயந்து தஞ்சமடைந்துள்ளனர். தற்போது இந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

• போலீசார் 82 ஜாதி இந்துக்களை கைது செய்த நடவடிக்கையை வரவேற்றாலும் இது தலித்துகள் மீது நடந்த தாக்குதலுக்கான கைதாக தெரியவில்லை. போலீசார் மீது நடந்த தாக்குதலுக்காக இக்கைது படலம் நடந்துள்ளது.

• பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் தேர் பவனி நடந்தால் உயிர் சேதம் ஏற்படும் என்று காவல்நிலையத்தில் மிரட்டல் புகார் கொடுத்திருந்தும் போலீசார் அலட்சியமாக பாதுகாப்பினை பலப்படுத்தாமல் இருந்தது கடும் கண்டனத்திற்குரியது. இந்த புகாரை கொடுத்தவுடன் சுப்பிரமணியனை கைது செய்து அந்த பகுதியில் பெருமளவில் போலீசார் பாதுகாப்பிற்கு அமர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

• ஜாதி இந்துக்கள் 15.08.2015 அன்று இரவு 7.00 மணியளவில் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். ஆனால் ஆயுதப்படை போலீசார் மறுநாள் 16.08.2015 அன்று காலை 5.00 மணியளவில் தான் அப்பகுதிக்கு பெருமளவில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் 10 மணி நேரம் இரவு முழுவதும் தலித்துகள் உயிருக்கு பயந்து கொண்டு அழுதுகொண்டே கிராமத்தில் பாதுகாப்பற்று இருந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தப்பித்துபோன பலரையும் தாக்கியுள்ளனர். ஒருவேளை சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில் அப்பகுதிக்கு போலீசார் வந்திருந்தால் இதுபோன்ற கொடுமையை நடக்காமல் தடுத்திருக்க முடியும்.

• தலித் பெண்கள் கழிப்பறைக்கு சென்றால் அவர்கள் மீது கற்களை வீசுவது, மின்சாரத்தை துண்டிப்பது, ஜாதி ரீதியாக பேசுவது, பெண்களை கிண்டல் செய்வது போன்ற வன்கொடுமைகள் அப்பகுதியில் தினந்தோறும் நடந்து கொண்டிருக்கக்கூடிய நிகழ்வாக இருந்து வந்திருக்கிறது.

• தலித் தரப்பில் எமது குழுவினரிடத்தில், சம்பவம் நடப்பதற்கு முன்பு சேஷசமுத்திரம் பகுதியில் முக்கிய ஜாதி கட்சியைச் சேர்ந்த ஒருவர் வந்து சென்றிருக்கிறார். அவரின் தூண்டுதலில் தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று தலித் தரப்பில் கூறுகின்றனர்.

• எமது குழுவினரை அப்பகுதிக்கு உள்ளே செல்ல மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் கோட்டாட்சியரும் அனுமதி மறுத்தனர். தற்போது இப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என்றும் நீங்கள் செல்ல முடியாது என்றும் எஸ்பி தெரிவித்தார். நாங்கள் வன்முறையை தூண்டுவதற்காக இப்பகுதிக்கு வரவில்லை தகவல் சேகரிக்க வந்திருக்கிறோம். 144 தடை உத்தரவு நோக்கம் என்பது முன்எச்சரிக்கை நடவடிக்கையே தவிர தகவல் பெறுவதை தடுப்பது அல்ல என்பதை விளக்கியும் எஸ்பி அமைதியாக இருந்தார். மாவட்ட ஆட்சியர் லெட்சுமி அவர்களை தொடர்பு கொண்டு, நீங்கள் கோவில் திருவிழா நடப்பதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை எடுக்காமல் தற்போது 144 தடை உத்தரவு போட்டு உண்மையை மூடி மறைப்பது ஏற்புடையதல்ல. உங்களது கடமையிலிருந்து நீங்கள் தவறியிருக்கிறீர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினோம்.

• காயமடைந்த போலீசாருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட தலித்துகளை இதுவரை மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நேரடியாக சென்று சந்திக்கவில்லை. அந்த மக்களுக்கு எவ்விதமான நிவாரணமும் அளிக்கவில்லை. குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இதையெல்லாம் அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.

• தலித்துகளுக்கு சாமி இருக்கலாம், தேர் இருக்கலாம். அது அவர்களிடத்தில் மட்டும்தான் இருக்க வேண்டும். பொது இடத்திற்கு வருவது தீட்டு என்கிற தீண்டாமையின் உச்சகட்ட கொடுமை நிகழ்வாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனடிப்படையில் எமது எவிடன்ஸ் அமைப்பு கீழ்கண்ட பரிந்துரைகளை அரசுக்கு முன்வைக்க விரும்புகிறது.

பரிந்துரைகள்:

• இத்தகைய கொடிய வன்கொடுமையில் ஈடுபட்ட திரு.சுப்பிரமணியன், திரு.அண்ணாலை உள்ளிட்ட அனைத்து குற்றவாளிகளும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

• தலித் பெண்களின் சேலையை உருவி அவமானப்படுத்திய வன்கொடுமை கும்பல் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

• எரிக்கப்பட்ட 7 வீடுகளும் உடனடியாக கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இதுமட்டுமல்லாமல் பொருட்சேதங்களுக்கான நஷ்டஈடு வழங்க வேண்டும். இதுபோக ஒவ்வொரு தலித் குடும்பத்தினருக்கும் ரூ. 3 இலட்சம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

• இந்த கொடிய வன்முறையில் ஈடுபட்ட ஜாதி இந்துக்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ரூ. 3 இலட்சம் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

நன்றி: A.கதிர், செயல் இயக்குனர்
எவிடன்ஸ் அமைப்பு, மதுரை.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.