Wednesday, December 31, 2014

தெற்காசிய அரசியலில் இந்தியாவின் பின்னடைவு - பேரா. மணிவண்ணன்

மே 2009 ஆம் அண்டு அரசியல் இராணுவ சூழலில் இருந்து ஈழ மக்களின் விடுதலைப் போராட்டம் குறித்து புவிசார் ரீதியான அரசியலாக முன்வைக்க வேண்டும் என்று நாங்கள் நீண்ட காலமாக கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.  பிறகு கடந்த 65 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஈழ விடுதலைப் போராட்டத்தில், குறிப்பாக மே ஆயுதமேந்திய போர் மெளனிக்கப்பட்ட பிறகான சூழலில், அரசியல் இராசதந்திர மற்றும் புவிசார் அரசியல் பார்வையில் இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்றும் பலர் அறிவுறுத்துகிறார்கள்..

தெற்காசியப் பிராந்திய அரசியலிலும், ஆசியா மற்றும் மேற்குலக நாடுகளிலும் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களையும்  இந்த நேரத்தில் கருத்தில் கொள்ள வேண்டும்.. அரசியல் ரீதியிலான முன்னெடுப்புகள் பன்னாட்டு தளத்தில் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றம் உள்ளிட்ட இடங்களில் மனித உரிமைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் சூழலில் பன்னாட்டு விசாரனைக்கான முக்கியமான ஒரு காலகட்டத்தில் தற்பொழுது இயங்கிக் கொண்டிருக்கின்றோம். அதேவேளை தெற்காசியப் பிராந்தியத்தில் ஏற்படும் புவிசார் மாற்றங்களையும் பார்வைக்கு உட்படுத்த வேண்டும்.

இந்தியா 2005 – 2006 ஆண்டு காலகட்டத்தில் இருந்து இலங்கை அரசுடன் நெருக்கமான ஒரு உறவை மேற்கொண்டு வருகின்றது. இலங்கை அரசு இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு தேடியதில் இந்தியாவின் பங்காற்றல் மிகப் பெரியளவில் இருக்கின்றது. இதில் இந்தியாவின் பங்காற்றல் என்பதை விட இந்தியாவின் வீழ்ச்சியும் இருக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் இந்தியா வலியுறுத்தி வந்தது அரசியல் தீர்வுக்காகத்தான். ஆனால் 2009 ல் நடைபெற்றது அரசியல் தீர்வு அல்ல இராணுவ ரீதியான தீர்வு தான். அது இந்தியா வலியுறுத்தி வந்ததன் நேர்மாறான விளைவு. அதற்கு இந்தியாவே துணை போயுள்ளது. அதனால் தான் இப்பொழுது அடுத்த கட்டமான அரசியல் தீர்வை நோக்கி நாம் கொண்டிருக்கின்றோம். குறிப்பாக வரலாற்றில் நீதிக்கான எந்த ஒரு போராட்டத்தில் இராணுவ தீர்வில் முடிவு ஏற்பட்டதே கிடையாது. நீதிக்கான போராட்டத்தில் அரசியல் தீர்வுகள் தான் இறுதித் தீர்வாக இருக்க முடியும்.

தெற்காசியப் பிராந்தியத்தில் மிகப்பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கை அரசை மையப்பபடுத்தி இரண்டு விதமான மாற்றங்கள் நடந்துள்ளன. இலங்கை அரசு தமிழர் பிரச்சனைக்கு இராணுவ தீர்வு கொண்டுவந்த பின்னணியில் இலங்கையில் தமிழர் பிரச்சனையை தம்மால் ஒரு முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்றால் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தைக் கூட தம்மால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று சிங்களர்கள் நம்புகின்றனர். இந்த உளவியல் நம்பிக்கையில்தான் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் சீனாவுடன் இராணுவ, புவிசார் அரசியல் உறவை மேம்படுத்தி வருகின்றனர். அந்த உறவின் தாக்கத்தில் தான் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இலங்கையில் சீனாவின் நீர் மூழ்கி கப்பல்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாக வந்து சென்று கொண்டிருக்கின்றன.

இது இந்திய அரசாங்கத்திற்கு அதிர்ச்சியாக இருந்தாலும் கூட இது குறித்து எதிர் வெளிப்பாடுகளை இந்தியா முழுமையாக தெரிவிக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால் இந்திய அரசாங்கம் இதுவரை தமது அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட பின்னடைவுகளை முழுமையாக விளங்கிக் கொள்ளவில்லை. குறிப்பாக 1954 ஆம் ஆண்டு சீனாவுடன் பஞ்சசீலக் கொள்கை கையொப்பமிட்ட இரண்டு மாதங்களில் திபத் என்றொரு நாடு இராணுவ ரீதியாக முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அதன் அரசியல் விளைவை இந்திய அரசு உணரவில்லை. பின்னர் 1959 ஆம் ஆண்டு திபத் தலைவர் தலாய்லாமா தன் தாய் நாட்டை விட்டு இந்தியாவிற்கு புகலிடம் தேடி வந்த பொழுது திபத் என்ற அண்டை நாட்டை நாம் முழுமையாக இழந்து விட்டோம்.  திபத் என்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் இல்லாமல் போனதற்கான பொறுப்பை இந்தியா இதுவரை ஏற்கவில்லை. இந்த விடயம் இராசதந்திர அரசியலில் இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரு பெரும் பின்னடைவு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியில் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்து செல்லும் சீனாவின் நீர் மூழ்கிக் கப்பல்கள் நாளை திருகோணமலைக்கு வந்து செல்லும் என்றால் இந்தியா புதிதாக ஒரு எதிர்ப்பை வெளிப்படுத்தக் கூடும். இந்தியாவிடமிருந்து அத்தகைய எதிர்ப்புகள் எழும் பட்சத்தில் சீனாவும் இலங்கையும் தங்களுக்குள் இருக்கும் நல்லுறவு மூலமாகத்தான் சீனாவின் இராணுவ கட்டமைப்புகளையும், நீர்மூழ்கி கப்பல்களின் வருகையை தாம் அனுமதிப்பதை பார்க்க வேண்டும் என்று பதில் கூறுவர் என்பதும் தெளிவு.

ஆனால் இலங்கையின் இந்தப் போக்குக்கு இரண்டு முதன்மைக் காரணங்கள் உண்டு. ஒன்று இந்தியாவின் புவிசார் அரசியல் சார்ந்த பார்வை எப்பொழுதுமே முனைப்புடன் இருந்தது கிடையாது 1959 ஆம் ஆண்டு திபத் விடயத்தில் இந்தியாவின் இராசதந்திர அரசியலுக்கு ஏறபட்ட பின்னடைவை இது வரை இந்தியா முழுமையாக மீளாய்வுக்கு உட்படுத்தவில்லை.  இரண்டாவது தமிழ் மக்கள் இலங்கையில் இவ்வளவு பெரிய இனப்படுகொலையை எதிர்கொண்ட பொழுது அதனை இந்தியா தடுக்கவில்லை என்பதை விட அந்த இனப்படுகொலை இந்தியாவின் மேற்பார்வையில் தான் நடந்தது என்பதை முழுமையாக நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இன்றைக்கு இலங்கை அரசாங்கம் இந்தியாவையே விலக்கி வைத்து ஒரு அரசியலை முன்னெடுக்கும் பொழுது இந்தியா இதனை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது ஒரு கேள்விக்குறியான நிலைமையாக மாறியுள்ளது.

இந்த சூழலில் அமெரிக்கா அரசு தரப்பில் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் மாற்றத்தையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு 1970 காலகட்டத்தில் திருகோணமலையில் ஒரு வானொலி அமைக்க இலங்கையிடம் கேட்ட பொழுது அந்த வானொலி நிலையத்தை கொண்டுவர வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டிருந்த இலங்கை அரசு இந்தியா அதனை எதிர்க்கும் என்ற காரணத்தினால் அதனை அனுமதிக்கவில்லை. ஆனால் இன்று அமெரிக்காவும் திருகோணமலையில் ஒரு வானொலி நிலையம் அமைக்கும் கோரிக்கை வைக்கும் இடத்தில் இல்லை அவ்வாறு ஒரு கோரிக்கையை அமெரிக்கா வைத்தால் அதை எதிர்க்கும் இடத்தில் இந்தியாவும் இல்லை. இதைத்தான் இந்தியப் பெருங்கடலில் நடைபெற்றுள்ள புவிசார் அரசியலில் ஏற்ப்பட்டுள்ள மாற்றமாக நாம் பார்கக் வேண்டும்.

இந்த மாற்றத்திற்கு இரண்டு காரணங்கள், பனிப்போர் காலத்தில் இந்தியப் பெருங்கடலில் இருந்த அமெரிக்காவின் கொள்கை நிலைப்பாடு தற்பொழுது முழுமையாக மாறிவிட்டது. மேற்காசியா நாடுகளில் அமெரிகக அரசு இராணுவ அரசியல் செயல்பாடுளில் ஈடுபட்டிருப்பதில் அங்கு தீர்வில்லாத ஒரு இராணுவத் தாக்குதல் சூழலை அமெரிக்க எதிர் கொண்டிருப்பதால் இந்திய அரசு இந்தியப் பெருங்கடல் பகுதியில் புவிசார் அரசியலை முன்னெடுக்கும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் இந்திய அரசால் கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பாக காங்கிரசு தலைமையிலான அரசாங்கம் இந்தியாவின் நலன் எனபதை விட, காங்கிரசின் நலனில் இருந்து, வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் நலனில் இருந்து, அமெரிக்காவின் அரசியலில் ஏற்பட்டுள்ள பின்னடவை ஆய்வு செய்யும் பொழுது, இந்தியாவின் வடகிழக்கில் சீனா ஒரு ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் பொழுதும் அதனால் நமக்கு எதுவும் பின்னடைவு இல்லை என்று இந்தியா கூறி வருகின்றது. அதேபோல் இலங்கையில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் தாயகப் பகுதிகளை இலங்கை அரசு ஆக்கிரமிப்பை மேற்கொண்டு ‘முத்துமாலை’ திட்டம் என்ற முற்றுகைக்குள் சீனா, இந்தியாவை கொண்டு பொழுதும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இந்தப் போக்கு இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என்கின்றனர்.

சீனாவிற்கு, தொலைதூர இராணுவ கட்டமைப்புக்கான தேவைஇந்தியப் பெருங்கடலில் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இது ஒரு தவறான பார்வை. சீனா ஆப்ரிக்காவில் உள்ள இயற்கை வளங்களிலும் எண்ணெய் வளங்களிலும் பெரியளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. அந்த முதலீடுகளை பாதுகாக்கவும் அக்கடல் பாதையை பாதுகாக்கவும் சீனாவுக்கு  தளம் தேவைப்படுகின்றது. பசிபிக் கடற்பரப்பில் இருந்து தற்பொழுது இந்தியப் பெருங்கடலில் ஒரு இராணுவத் தளத்தை அமைக்கும் வேலைகளை மேற்கொண்டு வருகின்றது சீனா.  அந்தத் தளத்தை இலங்கையின் ஆதரவுடன் சீனா உருவாக்கியிருக்கின்றது.
இந்த மாற்றங்களில் இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்தை புவிசார் அரசியல் பின்னனியில் இருந்து ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பன்னாட்டு களத்தில்  எத்தகைய முறையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கருதவேண்டிய ஒரு கட்டாயத்தில் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவ்வாறான போராட்டத்தை பன்னாட்டுத் தளத்தில் எடுத்துச் சொல்லும் பொழுது, நடைபெற்று வரும் பன்னாட்டு விசாரனையின் வளர்ச்சிப் போக்கில் ஒரு அரசியல் தீர்வை தேடவேண்டிய தேவை உள்ளது. அத்தகைய சூழலில் ஈழத் தமிழருக்கான எந்தத் தீர்வையும் யாரும், இந்தியா உட்பட, பரிசாக அளிக்கப்போவதில்லை.

இந்தியப் பெருங்க்டலில் நடக்கும் அரசியல் மாற்றங்களையும், இங்கு சீனாவின் ஆதிக்கத்தையும் ஒரு முதன்மையான அச்சுறுத்தலாக முன்வைக்கும் பொழுது, இங்கு நடைபெறும் மாற்றங்கள் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தொடர்பில்லாதது என்று பார்பப்தைவிட, இலங்கையில் தமிழரின் தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கில் தமிழர்கள் அரசியல் உரிமையுடன் வாழந்த காலகட்டத்தில் தான் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் பாதுகாப்பும் உறுதி செய்ப்பட்டிருக்கின்றது என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.. திருகோணமலையை இலங்கை அரசு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருபப்தை விட ,தமிழர்கள் தங்கள் ஆட்சி அமைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பொழது இந்தியாவிற்கு கூடுதல் பாதுகாப்பு இருந்தது. எனவே புவிசார் அரசியல் ரீதியாக நடந்து வரும் மாற்றங்களை கவனமாக கண்க்கிட்டு. பன்னாட்டு தளத்தில் , புவிசார் அரசியல் பார்வையில் இருந்து இந்தியா ஈழப் பிரச்சனையை அனுகவேண்டும். 

நன்றி - பேரா. மணிவண்ணன்

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.