Thursday, March 7, 2013

ஹியூகோ சாவேஸ் - ஒரு மக்கள் தலைவனின் மரணம்


வெனிசூலா. தென்னமெரிக்காவின் வடக்குக் கடற்கரையில் இருக்கும் 3 கோடி மக்கள் கொண்ட ஒரு சிறிய நாடு. எண்ணெய் வளம் மிகுந்த இந்த நாட்டை வல்லரசுகளான அமெரிக்காவும், இங்கிலாந்தும் கபளீகரம் செய்ய தங்கள் நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலம் முயன்ற காலத்தில் அதை தடுத்து நிறுத்தி தன் நாட்டின் எண்ணெய் வளங்களைக் காப்பாற்றி, அரசுடைமையாக்கி, அதன் வருமானம் முழுதும் தனது நாட்டு மக்களுக்கே போய்ச் சேரும்படிச் செய்தவர் தான் அதிபர் ஹியூகோ சாவேஸ். 58ஏ வயதான சாவேஸ், செவ்வாய் அன்று வயிற்றில் ஏற்பட்ட புற்றுநோயால் மரணமடைந்தார்.

ராணுவ அதிகாரியாகப் பணிபுரிந்த சாவேஸ் 1992ல் அப்போதைய அதிபர் கார்லோஸை கவிழ்க்க முயற்சி செய்து அது தோல்வியில் முடிய கைது செய்யப்படுகிறார். பின்பு இரண்டு வருடங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர் சமூக ஜனநாயக கட்சியை ஆரம்பித்து 1998ல் வெனிசுலாவின் அதிபரானார். அதன் பின் தொடர்ந்து நான்கு முறை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசியாக கடந்த 2012 டிசம்பரில் நடந்த தேர்தலில் கூட அவர் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவரது உடல் நலம் குன்றிய நிலையில் பதிவி ஏற்காமலேயே மரணமடைந்தார்.

நமக்கு சாவேஸ் யார்?  நாம் ஏன் அவரைத் தெரிந்து கொள்ள வேண்டும் ? இதற்கு பதில் அவர் ஜனாதிபதியாக வெனிசுலா மக்களுக்கு என்ன செய்தார் என்பதைப் பார்த்தால் தெரிந்துவிடும்.

வெனிசூலாவில் இருந்த பன்னாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களை (அதாங்க நம்ப ஊர்ல ரிலையன்ஸ், ஷெல், மொபில் போன்ற கம்பெனிகளை) அரசுடைமையாக்கினார். அதனால் என்ன லாபம்? ரிலையன்ஸ் கம்பெனியின் எண்ணெய் வருமானம் பூராவும் அம்பானியின் பாக்கெட்டுக்குப் போகாமல் அரசுக்குப் போய்விடும் இல்லையா அது போல அங்கு எண்ணெய் வருமானங்கள் அனைத்தும் அரசுக்கே போய்ச் சேர்ந்தன. அந்தப் பணத்தை வைத்து குழந்தைகளுக்கு மூன்று வேளை சத்துணவுத் திட்டம், நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவம், குடும்பத்துக்கு உழைக்கும் பெண்களுக்கும் ஓய்வூதியம்-பென்சன் என்று பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்தார்.

வெனிசூலாவில் வாண்டையார் பரம்பரைகள் போல் பல்லாயிரம் ஏக்கர்கள் வைத்து ராஜாவாகத் திரிந்த பிரபுக்களை சரிக்கட்டி அவர்கள் நிலத்தை விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்து கூட்டுறவு விவசாயத்தை உருவாக்கினார். கூட்டுறவு விவசாயம் வந்தால் என்ன ஆகும் ? விவசாயம் பெருகும். விளைபொருட்கள் பெருகும். உணவுக்கு அடுத்த நாட்டை நாடவேண்டிய அவசியம் வராது. கிராமங்கள் செழிப்பாக இருக்கும். விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்ள மாட்டார்கள்.

அமெரிக்காவின் ஏகபோக நிறுவனங்களையும், அமெரிக்காவின் ஆதிக்கப் போக்கையும் வெளிப்படையாகவே சாடி வந்தார். ஆனாலும் அவரது நாட்டு எண்ணெய்யின் பெரும்பகுதியை அமெரிக்காவுக்கே விற்கும்படி நேரிட்டதால், அமெரிக்காவை முற்றிலும் ஒதுக்கிவிட முடியவில்லை. அதற்காகவே ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் சேர்ந்து புதிய எண்ணெய் வர்த்தக திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் போய்ச் சேர்ந்துவிட்டார்.

கியூபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நல்ல நண்பர். ஏதோ செத்தாரு எங்கள வுடுய்யா என்று நீங்கள் மனத்துள் பேசுவது கேட்கிறது. உலக வரைபடத்தில் அமெரிக்காவையும் அதன் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியையும் எதிர்த்து நின்று நாட்டின் பொருளாதாரம் மக்களையே போய்ச் சேரவேண்டும் என்று நினைக்கும் மிக மிகச் சில தலைவர்களில் சாவேஸூம் ஒருவர். சாவேஸின் மரணம் அப்படி ஒரு அமெரிக்க எதிர்ப்பாளத் தலைவரை நாம் இழக்க வைத்து விட்டது. நம்ம ஊர் போனியா, போன்மோகன்சிங், போரணாப்போகர்ஜி போன்றவர்களைப் பார்த்தே பழகிய நமக்கு இவர் இங்கிருந்தால் அண்ணா, பெரியார் ரேஞ்சுக்கு உயரே வைத்து போற்றப்படும் தலவைராக இருந்திருப்பார் என்பது புரிய வாய்ப்பு மிகவும் குறைவு.

அவர் ஒரு சிறந்த சோஸலிஸ்ட். அவருடைய முறைகள் இடது சிந்தனைகளையொட்டி இருந்தாலும் இடது சாரிகள் போல புரட்சி என்று வெளிப்படையாக உலகளாவியம்(Globalisation) போன்ற விஷயங்களை அவர் எதிர்க்கவில்லை. ஜனநாயக வழியிலேயே நாட்டைச் சீர்திருத்த முடியும் என்று நம்பினார். அவருடைய புதிய வழிமுறைக்கு பொலிவியனிசம் என்று பெயரும் சூட்டினார். அதன்படி வெனிசுலாவை அதன் மக்களை சமவாழ்வு மற்றும் தன்னிறைவு அடையச் செய்ய செயல்பட ஆரம்பித்திருந்தார். அதற்கு இன்னும் ஒரு 40 ஆண்டுகளாவது ஆகும் தான். ஆனால் அதற்குள்ளேயே இறந்து விட்டார்.

அவரே ஒரு முறை குற்றம் சாட்டியது போல அவருக்கு கேன்ஸர் வரும்படி செய்யவே ஏதோ வல்லரசு நாடுகள் சேர்ந்து ரகசியமாகத் திட்டம் நிறைவேற்றினர் என்றெல்லாம் கதைகள் உண்டு. அமெரிக்காவின் எதிரி அழிப்பு முறைகள் பலவிதம். பறக்கும் விமானங்கள் வெடித்து அதிபர்கள் இறப்பது, திடீரென்று முளைக்கும் புரட்சிப் படை லிபியாவில் கடாபியைக் கொன்றது போல தலைவர்களைக் கொல்வது இன்னொரு முறை, அல்லது நாட்டின் உள் அரசியலைப் பயன்படுத்தி உள்நாட்டு புரட்சி அமைப்புகளின் வழியாக வெடிவைத்துக் கொல்வது (நம் ராஜீவ் காந்தி போல) என்று பலவிதங்கள் உண்டு. அதில் இப்படி நோய்க்கிருமிகளை செலுத்தி தலைவர்களை சீக்கிரம் மேலே அனுப்புவது புது வழியாக இருக்கலாம். ஏற்கனவே சிஐஏ அவரைக் கவிழ்க்க முயற்சி செய்து தோற்றும் போயிருக்கிறது. ஆனால் மரணத்தின் குறி தப்பாததல்லவா?

சாவேஸ் போன்ற அற்புதமான மனித நேயமிக்க, மக்களின் வாழ்வு சிறக்கவேண்டும் என்று பாடுபட்ட தலைவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. புதிதாக அப்படிப்பட்ட நல்ல மனிதர்களை தலைவராக வர எந்த நாட்டின் ஆளும் வர்க்கமும் அனுமதித்துவிடுவதும் இல்லை.

உலகின் எதிர்காலம் படிப்படியாக மங்கிக் கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.