Friday, April 29, 2011

தெருநாய்களும் கோடீஸ்வரர்களும் - பி.சாய்நாத் - பாகம் 2


தெருநாய்களும் கோடீஸ்வரர்களும் பி.சாய்நாத் - பாகம் 2.

பின் வருவது பத்திரிக்கையாளரும், இடது சாரி பொருளியலாளரும், பேராசிரியருமான பி.சாய்நாத் அவர்கள் கடந்த நவம்பர் 2010ல், சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய ஆங்கில உரையின் தமிழாக்கம். (இரண்டு பாகங்களாக பதிவிடப்பட்டுள்ளது.)

பாகம் 1 ஐ படிக்க : http://ambedhan.blogspot.com/2011/03/1.html 

பாகம் 2:
நான் கிராமங்களின் வறுமை பற்றி ஆராய்ந்த பிபிஎல் நிபுணர் குழுவில் இருந்தேன் என்று முன்பே சொன்னேனில்லையா. அப்போது அரசின் திட்டக்குழு (Planning Commission) எங்களுக்கு ஒரு குறியீடு நிர்ணயித்தது. அவர்கள் சொன்னார்கள் நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள். உங்களுடைய ஆய்வை நீங்கள் செய்யுங்கள். ஆனால் வறுமை பற்றிய உங்கள் ஆய்வின் முடிவுகள் எங்கள் முடிவிலிருந்து 20%த்துக்கு மேல் போகாமால் பார்த்துக் கொள்ளுங்கள். பசியை அளவிடும் வழிமுறை இந்தியாவில் எப்படி இருக்கிறது ? இந்திய அரசு எங்களிடம் சொல்கிறது, நாட்டில் பட்டினி கிடக்கும் எல்லா மக்களுக்கும் நம்மால் உணவு வழங்க முடியாது. எனவே நாம் எவ்வளவு பேருக்கு உணவு வழங்குவோமோ அவ்வளவு பேர் தான் பசித்தவர்கள் எண்ணிக்கை. அதாவது பசி என்பது பசித்திருக்கும் மக்களின் எண்ணிக்கை அல்ல. பசி என்பது எவ்வளவு பேருக்கு நாம் உணவு வழங்கத் தயாராயிருக்கிறோமோ அவ்வளவு மட்டுமே. ஏனென்றால் 9% வீதத்தில் வளர்ந்து வரும் நம் பொருளாதாரத்தில் பசித்தவருக்கு உணவிட மட்டும் பணமில்லை. ஆனால் 500 ஆயிரம் கோடிகள் தனியார் நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடிகள் செய்ய, போர்ப்ஸ் பத்திரிக்கையின்(Forbes magazine) கோடீசுவரர்கள் பட்டியலில் உள்ள 4 12 பேருக்கு வரித் தள்ளுபடி(tax write off) என்று அரசுக்கு வரவேண்டிய வரியை வேண்டாம் என்று சொல்ல மனமிருக்கிறது இந்த அரசுக்கு. இந்த 4 பேர் யார் ? இவர்கள் போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பெரிய மனிதர்கள். தவிரவும் பொழுதுபோக்கு வரித் தள்ளுபடியும் இந்த 4 பேர் பெறுகிறார்கள் : முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, ஜி.எம். ராவ் மற்றும் டி.என்.எப் ஐச் சார்ந்த டி.கே. சிங். என்ன பொழுதுபோக்கிற்காக் இவர்கள் வரித் தள்ளுபடி பெறுகிறார்கள்? ஐபிஎல். இந்திய முதன்மை கழகம்(IPL). ஐபிஎல் மகாராஷ்டிர அரசிடமிருந்து உதவித் தொகைகள் பெறுகிறது. மேற்கு வங்கத்தைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் அவர்கள் கேளிக்கை வரித் தள்ளுபடி பெற்றிருக்கிறார்கள். மஹாரஷ்டிராவில் இத்தள்ளுபடி பணம் 12 கோடி ரூபாய். சலுகை விலையில் மின்சாரம் பெற்றார்கள். பொது அரங்க மைதானங்களை கிள்ளுக்கீரை வாடகைகளில் பெற்றார்கள். காவல்துறை பாதுகாப்பை சலுகையாகப் பெற்றார்கள். மஹாராஷ்ட்டிராவின் முன்னாள் டி.ஜி.பி யைக் கேளுங்கள். பாதுகாப்பிற்குச் சென்ற ஒவ்வொரு போலீசுக்காரரின் தினப்படி(பேட்டா) அவரது ஒரு நாள் சம்பளத்தை விடக் குறைவு. இந்தச் சலுகைகள் எல்லாமே போர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியலில் உள்ள நான்கு பேருக்காக. ஆனால் நமக்கு பசித்தவர்களுக்குச் செலவிட பணமில்லை; விவசாயத்திற்குக் கடன்பட்டுச் சீரழிந்து மணிக்கு 2பேர் வீதம் செத்துப்போய்க்கொண்டிருக்கும் (இவ்வருடத்தில் இதுவரை 16500 பேர்) விவசாயிகளுக்கு கடன் தரப் பணமில்லை.

பசியை அளவிட இன்னொரு வழிமுறையும் இருக்கிறது. முத்தாய்ப்பாக அதைப் பற்றிச் சொல்லி பசிப் பிரச்சனை விவாதத்தை முடிக்கிறேன். புதிய திறந்த பொருளாதாரக் கொள்கைப் படி, பழைய பொருளாதாரக் கொள்கைப்படி பசி என்பது என்ன? உணவு மற்றும் விவசாயத்துறை அமைச்சர் மாண்டேகு அலுவாலியாவின் இடத்தில் என்னை வைத்துப் பார்க்கிறபோது, இது ரொம்ப குரூரமானது என்றாலும், பசியும் தாகமும் உலகெங்கும் தினமும் உற்பத்தியாகும் இரண்டு மிகப்பெரிய பணப்பயிர்கள் எனலாம். இவற்றில் ஈடுபட்டிருப்பவை உலகின் மிகப் பணக்காரக் கம்பெனிகள்; ஆறு கம்பெனிகள் உலகின் உணவு வினியோகத்தையும், 4 கம்பெனிகள் உலகின் தனியார் தண்ணீர் வினியோகத்தையும் கையில் வைத்துள்ளன. பசியிலிருந்து எவ்வளவு அறுவடைகள் செய்யப்பட்டிருக்கின்றன தெரியுமா? நாம் ஆபத்தை விதைத்து பசியை அறுவடை செய்திருக்கிறோம். பசி என்பது ஏற்கனவே கவர்ச்சிகரமான இன்னும் லாபம் தரும் பயிராக உலகெங்கும் ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாம் எப்போதும் உணவு வினியோகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் உணவு உற்பத்தியை யார் கைக்குள் வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்பதில்லை. அரை டஜன் பன்னாட்டு நிறுவனங்களே அவை; அதில் 4 கம்பெனிகள் உலகின் விதை உற்பத்தியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன (அதாவது விவசாயத்திற்குத் தேவையான விதையை இவர்களிடமிருந்து தான் விவசாயிகள் வாங்க வேண்டும்). இது தான் பசி. பசியும் தாகமும் தான் இந்தக் கிரகத்தில் இன்று வருமானம் கொழிக்கும் மிகப்பெரிய தொழில்கள்.

இப்போது வேறு என்ன இருக்கிறது பேச? பேசப்பட்டது உணவு நெருக்கடி. விவசாய நெருக்கடி என்னவானது 1997க்கும் 2008க்கும் இடையே 2 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள். சரியாகச் சொன்னால் 1,99,132. இந்தப் புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லாததால் நான் குறைந்த பட்சம் 2 லட்சம் பேர் என்று தான் கூறுவேன். மிக நம்பகமான புள்ளிவிவரம் தரும் அமைப்பு தேசிய குற்றவியல் ஆவண மையம் (National Crime Records Bureau –NCRB) தான். ஆனால் அரசு இவ்வமைப்பிடமிருந்து தகவல்கள் பெறுவதை நிறுத்திவிட்டது. ஏனென்றால் இந்தப் புள்ளிவிவரங்கள் நம்மை வெட்கப்பட வைக்கும் அளவு மோசமானது எனவே அரசு தானே சில எண்களை நாடாளுமன்றத்தில் தரகிறது. 2007 வரை நாடாளுமன்றத்தில் ஏதாவது கேள்விகள் எழுப்பப்பட்டால் ஷரத் பவார் ஐயா அவர்கள் தே.கு.ஆ.மை (NCRB) யின் ஆவணங்களிலிருந்து தான் விவரங்கள் குறிப்பிடுவார். 2008லிருந்து அவர் NCRBயிலிருந்து புள்ளிவிவரங்கள் குறிப்பிடுவதை தவிர்க்க ஆரம்பித்து விட்டார். தனது சொந்த அரசில் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு பிரிவாயிருந்தாலும் கூட. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விட நீங்கள் சரியாக புள்ளி விவரங்களைச் சொல்லமுடியாது. ஆனால் சிதம்பரத்தின் கீழ் வரும் இந்த அமைப்பு சொல்கிறது இவ்வளவுதான் சாவு எண்ணிக்கை என்று. ஆனால் நான் சொல்கிறேன் அது இதை விட மோசமான அளவிற்கு அதிகம். ஆனால் அத்தற்கொலைகளை கணக்கிட நமக்கு வழி இல்லை.
ஏன் என்று பார்ப்போம். தற்கொலைகளில் மூன்றில் இரண்டு பங்கு நல்ல நிலைமையிலிருக்கும் என்று சொல்லப்படும் 5 மாநிலங்களில் உள்ள ஏழ்மையான பகுதிகளில் நிகழ்ந்திருக்கிறது. ஏனெனில் நெருக்கடி நிலையானது எப்போதும் ஏழைகளை நோக்கியே நகர்கிறது. எது மிகப் பணக்கார மாநிலம் ? எங்கே பங்குச் சந்தை இருக்கிறது ? எங்கே முதலீட்டாளர்களின் சொத்து குவிந்திருக்கிறது ? மும்பை, மகாராஷ்ட்ரா மாநிலம். இந்த 2 லட்சம் தற்கொலைகளில் 41,044 மஹாரஷ்ட்ராவில், திரு முகேஷ் அம்பானியின் வீடு இருக்கும் மாநிலத்தில் நடந்துள்ளது. இங்கு தான் இந்தியாவின் 49 கோடிசுவரர்களில் 21 பேரின் விலாசம் உள்ளது. அவர்கள் உண்மையில் ஜெனிவாவில் கூட இருக்கலாம் ஆனால் அவர்களது விலாசம் மற்றும் குடியிருப்புகள் மும்பையில் இருக்கின்றன. மும்பை மாநகர் இருக்கும் அதே மஹாராஷ்ட்டிரா மாநிலம். 41,4040 தற்கொலைகள்..

ஒவ்வொரு மாநிலத்திலும் சில நூறு தற்கொலைகள் வருடந்தோறும் நடக்கின்றன. நீங்கள் மாநிலங்களை மஹாராஷ்ட்டிராவுடன் ஒப்பிட விரும்பினால் அடுத்து எண்ணிக்கையில் நிற்பது மே.வங்க மாநிலம் தான்.
மக்கள் தொகை மஹாராஷ்ட்டிரா 10 கோடி, மே.வங்கம் 9 கோடி. ஆனாலும் மே.வங்கத்தின் விவசாயிகளின் எண்ணிக்கை மஹாராஷ்ட்டிராவை விட மிக அதிகம். மே.வங்கம் அதிகப்படியான கிராமிய மாநிலம். நிலச் சீர்திருத்தங்கள் செய்து விவசாயிகளுக்கு நிலங்கள் பங்கிட்டுக் கொடுத்திருப்பதால் விவசாய மக்கள் தொகை அங்கு அதிகம். மஹாராஷ்ட்டிராவில் 43% ஏற்கனவே நகர்ப்புறமாகிவிட்டது. ஆனால் விவசாய தற்கொலைகள் மே.வங்கத்தை விட 3.5 மடங்கு அதிகம். எனவே எதுவோ மஹாரஷ்ட்டிரா விவசாயிகளை முழுதாக அழித்துக்கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது. என்ன அது ? மஹாராஷ்ட்டிராவின் விவசாயிகள் மே.வங்க விவசாயிகளை விட வசதியானவர்களாக இருந்தும் ஏன் நிறையச் சாகிறார்கள் ? மஹாராஷ்ட்டிராவினுள் விதர்பா, மாரத்வாடா மற்றும் அவினாள் பகுதிகள். ஆந்திராவில் ராயலசீமா, தெலங்கானாவின் சில பகுதிகள் மற்றும் கோசலம் போன்ற பகுதிகளிலும் இத் தற்கொலைகள் இருக்கின்றன. தற்கொலை நடைபெறும் இந்த எல்லாப் பகுதிகளிலும் பொதுவாக இருப்பது எது இவ்வெல்லாப் பகுதிகளிலும் வர்த்தகமயமான விவசாயம் இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளிலும் பணப்பயிர்களே(cash crops - (எள், ஆமணக்கு, சூரியகாந்தி போன்றவை) விளைவிக்கப்படுகின்றன. உணவுப் பயிர் விளைவிக்கும் சில விவசாயிகளே தற்கொலை செய்து கொள்கின்றனர். விதர்பாவை எடுத்துக்கொண்டால் 7 வருடங்களில் நான் பார்த்தது ஒரே ஒரு நெல் விவசாயியின் தற்கொலை. ஒன்றே ஒன்று.

5 மாநிலங்களில் உள்ள 750 விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்றுள்ளேன். உணவுப் பயிர் விளைவிக்கும் விவசாயிகளின் எண்ணிக்கை மிக மிகச் சொற்பமே. எனது கணக்கீட்டின் படி இது 1% கூட வராது. ஏன் பணப்பயிர் விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொள்கின்றனர் ?  விவசாயம் சுமாராய் இருக்கும் போது நீங்கள் ஒரு பிழைப்பு விவசாயி, சிறு விவசாயி, நடுத்தர விவசாயி. சுமாராய் இருந்த விவசாயம் மோசமாகி படுத்துவிட்டால் குறைந்த பட்சம் நீங்கள் உங்கள் வயலில் விளைந்த உணவுப் பொருளையாவது சாப்பிட்டு தப்பித்துக் கொள்ளலாமில்லையா ? தமிழ்நாடு கூட கவலைக்கிடமான இடத்தில் இருக்கிறது. உங்களின்(தமிழ்நாட்டின்) விளைச்சல் முறைகளில், பயிர்களில் மற்றும் விவசாய முறைகளில் தமிழ்நாடு மிகக் கவலைக்கிடமாக இருக்கிறது. மஹாராஷ்ட்டிராவைக் காட்டிலும் நல்ல மக்கள் நல அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது. எனவே அதனால் கொஞ்சம் பாதிப்பு குறையலாம். ஆனால் உங்களது விவசாயத்தின் தற்போதைய போக்கு மகிழ்ச்சிக்குரியதோ அல்லது ஆரோக்கியமானதோ அல்ல. உணவுப் பாதுகாப்பு விஷயத்தில் பார்த்தால் இன்னும் தெளிவாகும்.

எது இதை நிகழ்த்தியது ? ஏன் பணப்பயிர் விவசாயிகள் தற்கொலை செய்ய ஆரம்பித்தார்கள்?  10-15 வருடங்களுக்கு முன் இவர்கள் எல்லோரும் உணவுப் பயிர் விவசாயிகளாக இருந்தார்கள். திறந்த சந்தைப் பொருளாதாரமும், பொருளாதார சீர்திருத்தங்களும் அவர்களை நயந்து பேசி, வற்புறுத்தி, துன்புறுத்தி படிப்படியாக பணப்பயிர்களை விளைவிக்கச் செய்யும் வரை. ஏனெனில் ஐ.எம்.எப் (IMF)ன் தாரக மந்திரம்விவசாயப் பயிர் ஏற்றுமதிக்கே. அதில் தான் பெரும் பணம் இருக்கிறது என்பதே. இந்தப் பயிர் மாற்றத்தில் நாம் வாழ்க்கைப் பாதுகாப்பில்லாத எளிதில் அழிந்து போகும் ஆபத்தில் உள்ள விவசாயிகளை ஈடுபடுத்தி அவர்களை அரை டஜன் பல்தேசிய கம்பெனிகள் (Multinationals) கட்டுப்படுத்தும் உலகளாவிய சந்தை விலையின் சட் சட்டென்று மாறும் நிலையில்லா தன்மையை நோக்கி தள்ளிவிட்டு விட்டோம்..

மே.வங்கத்தைப் பார்த்தீர்களென்றால் உச்சபட்ச விவசாய தற்கொலைகளின் காரணம் தேயிலைத் தோட்டங்கள் தான். டாடா குழுமத்தினர் திடீரென்று ஒரு நாள் உள்ளே வந்து நுழைந்தனர். தேயிலைத் தோட்டங்கள் முழுதும் அவர்கள் வசம் இப்போது. கேரளாவிலும் அவர்கள் தேயிலைத் தோட்டங்களுக்குள் நுழைந்தனர். கேரளாவில், குறைந்த பட்சம் தொழிற்சங்கங்கள், அதாங்க நீங்கள் அசூயையாகப் பார்க்கும் யூனியன்கள், சிஐடியூ தேயிலைத் தோட்டங்களைக் கையில் எடுத்துக் கொண்டது. ஆனால் அவர்களிடம் விநியோக அமைப்பும், சந்தை விற்பனை அமைப்பும் இல்லை. அதனால் மாலிக்குகள் போன்றவர்களுக்குக் கிடைக்கும் தேயிலை விலையில் 4இல் அல்லது 3இல் ஒரு பங்கு தான் கிடைக்கிறது. உலகளாவிய தேயிலை விலை மோசமடைந்த போது கார்ப்பரேட்டுகள் தங்கள் தொழிலாளிகளை நட்டாற்றில் விட்டுவிட்டு போய்விட்டன. தொழிலாளிகளும் மக்களும் சாகிறார்கள் எனவே நீங்கள் திரும்பவேண்டும் என்று இடது சாரி அரசுகள் இந்த முதலாளிகளிடம் போய்க் கெஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டதை நாம் பார்த்தோம்.
எங்கு பார்த்தாலும் பணப்பயிர்கள். புதிய திறந்த பொருளாதாரத்தின் அடிச்சுவட்டில் பணப்பயிர் ஏற்றுமதி - நிறைய பணம் மேலும் பணம். நீங்கள் ஒரு உணவுப் பயிர் விவசாயி எனில் எல்லாம் மோசமாகிப் போகும் போது குறைந்த பட்சம் நீங்கள் உங்கள் உணவுப் பயிரையாவது தின்று வாழ்ந்து விடலாம். என்ன நடந்தாலும் உங்கள் நெல்லை நீங்கள் சாப்பிட்டுக் கொள்ள முடியும். ஆனால் உங்களது பருத்தி பயிரை நீங்கள் சாப்பிட முடியாது. அது செரிமானத்திற்கு மிகக் கடினம். எனவே மக்கள் பூச்சிக் கொல்லி மருந்தை சாப்பிடுகிறார்கள்.

இத்தற்கொலைகள் பற்றிய இந்திய அரசின் ஏன் அரசு புள்ளிவிவர நிறுவனமான NCRBன் புள்ளி விவரங்கள் எல்லாம் போலியானவை என்று நான் காட்ட முடியும். நான் NCRBயை மதிக்கிறேன். அவர்கள் போலி மதிப்பீடுகளைத் தருவதில்லை தான். ஆனால் போலி மதிப்பீடுகள் மாநில அரசிடம் நுழைந்திருப்பதைக் காட்டுகிறேன். அதன் புள்ளிவிவரப்படி விவசாயிகள் தற்கொலைகளின் எண்ணிக்கை 1,99,132. பூச்சிக் கொல்லி மருந்து உண்டு இறந்த தற்கொலைகள் எண்ணிக்கை 2,60,000. பூச்சிக் கொல்லி மருந்து சாப்பிட்டுச் சாவது எப்போதுமே ஒரு விவசாயிதான். ஏனென்றால் அவனிடமிருக்கும் மிக எளிதான ஆயுதம் அதுதான். சரி கூடுதலாக உள்ள 70 ஆயிரம் பேர் யார்? அவர்களில் பெரும்பான்மையோர் பெண் விவசாயிகள். அவர்கள் விவசாயத் தற்கொலைக் கணக்கீட்டின் கீழ் சேர்க்கப்படுவதில்லை. ஏனென்றால் பெண்கள் விவசாயிகளாகக் கணக்கிடப்படுவதில்லை. ஏனென்றால் இச்சமூகம் பெண்களுக்கு நில உடமையாளர், விவசாயி என்ற அந்தஸ்தை அளிப்பதில்லை. அவர்களுக்கு நில உரிமைகள் கிடையாது. அவர்கள் விவசாயிகளாக எண்ணப்படுவதில்லை ஆகையால் அவர்களின் தற்கொலைகள் 70 ஆயிரம் தனியாக கணக்கிடப்பட்டிருக்கிறது. உண்மையில் விவசாயத் தற்கொலைகளுக்கும், பூச்சிக் கொல்லி தற்கொலைகளுக்குமிடைப்பட்ட வித்தியாசம் மிக மிகக் குறைவு. மாணவர்கள் எங்காவது தங்களது அறைகளில் பூச்சிக் கொல்லி மருந்து வைத்திருப்பார்களா ?  ஒரு ஆட்டோ மொபைல் எஞ்சினியர் பூச்சிக் கொல்லி மருந்தை அறையில் வைத்திருப்பாரா? ஒரு தொழிலதிபர் தனது அறையில் பூச்சிக் கொல்லி மருந்து வைத்திருப்பாரா? தயவு செய்து கவனியுங்கள். அதிக எண்ணிக்கையிலான விவசாயத் தற்கொலைகள் நடக்கும் காலம் பூச்சி மருந்து அடிக்கும் காலம் ஏனெனில் பூச்சிமருந்து பாட்டில் விவசாயியின் கையில் இருக்கும். ஒரு கணத்தில் தோன்றும் மன அழுத்தம், அவன் செத்துப் போவான். பூச்சிமருந்து அடிக்கும் காலமே நிறைய தற்கொலைகளை சந்திக்கிறது.

அதற்கடுத்தாற் போல் அதிக அளவு தற்கொலைகள் நடப்பது விளைச்சலை சந்தையில் விற்கும் போது வியாபாரிகளும், தரகர்களும் பேசி வைத்துக் கொண்டு சதி செய்து விலையைக் குறைக்கும் சமயங்களில். அது இந்தியாவோ, அமெரிக்காவோ, அல்லது ஆப்பிரிக்காவோ எங்கென்றாலும் விவசாய உற்பத்திப் பொருட்கள் விவசாயியிடம் இருக்கும் வரை விலைகள் எல்லாம் மிகக் குறைவு. அதே பொருட்கள் பணியா எனப்படும் தரகு வியாபாரிகளிடமும், இடைத் தரகர்களிடமும் போகும் போது விலை அதிகமாகிவிடும். அமெரிக்காவின்(United States) மேற்குப் பகுதிக்குப் போனால் நீங்கள் அதிக அளவு விவசாயத் தற்கொலைகளைப் பார்க்க முடியும். அதே நிலை தான் இங்கும். இன்று இங்கு பணியாக்களும் தற்கொலை செய்து கொள்ள ஆரம்பித்து விட்டனர் ஏனெனில் அவரகளின் வேலையையும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பறித்துக் கொண்டுவிட்டன. ரிலையன்ஸ் ப்ரெஷ், கோத்ரஜ் நியூட்ரல். இப்போது பணத்தரகர் சூட், கோட், டை அணிந்து நிற்கிறார். இவர்கள் நவீன பணத் தரகர்கள். க்ரிஷி கேந்த்ராவை நடத்தி வருபவர் ஒரு புதிய பணத் தரகர். அவர் தான் விவசாயிக்கு விதைகளை விற்பவர். இவர்கள் எல்லாம் சேர்ந்து விலையை பன்மடங்கு உயர்த்தி விட, விவசாயி பட்ட கடனுக்கான வட்டி நாளுக்கு நாள் ஏறுகிறது.

இந்த விவசாயத் தற்கொலைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. தற்கொலை என்பது எந்த சமூகத்திலும் எப்போதாவது நடந்து கொண்டே இருக்கும். அது மாணவர்களோ அல்லது வேறு இனமோ. ஆனால் விவசாயிகளின் தற்கொலை விகிதமானது விவசாயி அல்லாதாரின் தற்கொலை விகிதத்தைப் போல் இருமடங்கு அதிகம். இது முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விஷயம். குறிப்பாக அந்த 5 மாநிலங்களில். இதைப் பற்றி நான் எவ்வாறு ஆணித்தரமாகப் பேசுகிறேன் ? இது பற்றிய நம்பகமான ஆய்வு செய்தவர் உங்களில் (தமிழர்) ஒருவர் என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் பெயர் டாக்டர். கே.நாகராஜ். முன்பு MIDS உடன் இருந்தார்; தற்போது ஆசியன் இதழியல் கல்லூரியில்(Asian College of Journalism) இருக்கிறார். மஹாராஷ்ட்டிர மாநிலம் 13 ஆய்வுகள் செய்துள்ளது. அவர்கள்(அரசு) ஆய்வுகள் செய்து கொண்டேயிருக்கிறார்கள் ஏனென்றால் நீதிமன்றங்கள் அவர்களை சதா திட்டிக்கொண்டே இருக்கின்றன. இதில் 13வது ஆய்வுக்கு தலைமை தாங்கியவர் திரு விலாஸ்ராவ் தேஷ்முக். இந்த ஆய்வு முற்றிலும் என்னை புறக்கணிப்பதற்காகவே செய்யப்பட்டது. மும்பை மிர்ரர் பத்திரிக்கை முதல் பக்கத்தில்  இவ்வாறு எழுதியிருந்தது சாய்நாத் மஹாரஷ்ட்டிராவை இழிவு படுத்துகிறார். புரபசர் நரேந்திர ஜாதவ் அவருடைய செயல்களுக்காக பாராட்டப்பட்டு திட்டக்குழுவின் (Planning Commission) உறுப்பினராக்கப்படுகிறார்.  NACயில் அருணா ராய் மற்றும் ஜான் ட்ரேஸை சமர்ப்பித்த பகுதியளவாவது ஒருங்கிணைக்கப்பட்ட பொதுவிநியோக முறையைக் கூட எதிர்ப்பது யார் என்று நினைக்கிறீர்கள் ? இவர் தான். ஒரு விவசாய வீட்டைக்கூட சென்று பாராமல் அறிக்கைகள் எழுதக் கூடியவர்.  நாகராஜனினிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டு நம்மைத் தாக்குகிறார், நமது புள்ளிவிவரங்களைக் கொண்டே. இதன் மூலம் நமது தகவல்கள் நமக்கு உரியவைதான் என்பதை அங்கீகரித்துவிடுகிறார்.

இருந்தும் அரசு ஏன் வறுமை, பசி, தற்கொலைகள் பற்றிய இந்த அறிக்கைகளை தயாரிக்கச் செய்கிறது? 12 அறிக்கைகள் முன்பு. TIS (Tata Institute of Socical Sciences) சமூக அறிவியலுக்கான டாடா கழகம் அங்கே(கிராமங்களுக்கு) சென்றுவிட்டு சூழ்நிலை மிக மோசமாக இருக்கிறது என்றது. அவர்களை அங்கே போகவைத்தது மும்பை உயர்நீதி மன்றம். டி.ஐ.எஸ் இன் அறிக்கையைப் பார்த்த மஹாராஷ்ட்டிர அரசு அது முழுக்க முழுக்க தாராளவாதிகளைக் கொண்டது என்று நினைத்தது. சரி இன்னும் வலது சாரி சார்புடைய நிறுவனத்தை அனுப்பலாமே என்று நினைத்தது. எனவே அடுத்ததாக இந்திரா காந்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் அனுப்பப்பட்டது. இதன் தலைவராக இருந்த கிரித் பாரிக் என்பவர், ஒரு அறிவு ஜீவி, என்ரான் ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தவர் திடீரென ஒருநாள் காலை ஆதரவாளராக மாறினார். என்ன காரணம் என்பது நீங்கள் ஊகிப்பது தான். அப்படிப்பட்ட இந்திரா காந்தி ஆராய்ச்சிக் கழகம் சிரீஜித் மிஸ்ரா என்ற இளைஞரை அனுப்பியது. சிரீஜித் மிஸ்ராவோ டி.ஐ.எஸ் இன் ஆய்வுக் காலத்தை விட நிலைமை இன்னும் மோசமாக உள்ளது என்று அறிக்கை தந்துவிட்டார். அவர்கள் வேறு ஒரு கழகத்தை அனுப்ப அவர்களும் நிலைமை இன்னும் மோசம் என்றே அறிக்கை தந்தார்கள். இப்போது என்ன செய்ய ? மஹாராஷ்ட்டிர அரசு வேறுவழியின்றி நடந்த தற்கொலைகளை, பட்டினிச் சாவுகளை 'ஆம் இருக்கிறது' ஒப்புக் கொண்ட செய்தியை சென்னையிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிக்கைக்கு அளித்தது. இதில் வேடிக்கை என்னவெனில் இந்தப் பத்திரிக்கை மராத்தியில் வெளிவருவதில்லை எனவே மஹாராஷ்ட்டிராவில் இந்தக் கணம் வரை எந்த மராத்தி ஊடகத்திற்கும் இது பற்றித் தெரியவே தெரியாது அல்லது தெரிந்தும் இதைப் பற்றி எழுதவே இல்லை.

எப்போது தற்கொலைகளை ஊடகங்கள் கண்டுகொண்டன?  டாக்டர் எம்.எஸ். சாமிநாதன் விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக வரும்போது. அவர் அங்கே வருகை தந்தார். அவர் வந்து இருப்பதால் அவருக்கு காபினெட் அமைச்சருக்கான அந்தஸ்து அளிக்கப்பட்டது. டாக்டரை அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைய அமைச்சர் வரவேற்க வருகிறார். உடனே ஊடகம் அதைக் காட்டுகிறது. இந்த கேபினட் அமைச்சர் கூட நாம் அழைத்ததால் தான் இங்கு வந்தார். மராத்தி ஊடகங்கள் இதைக் காட்ட ஆரம்பித்தன. பின்னர் மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. பின்னர் பிரதமரே வந்தார். இது அவர்களை மிகவும் கோபத்துக்குள்ளாக்கியது. 2008ல் என்ன காரணத்தாலோ ராகுல் காந்தியும் வருகை தந்தார். அதன் பின்னர் யாதவ் கமிட்டியை நீங்கள் ஆராய்ந்தவரை போதும் என்று போகச்சொல்லிவிட்டார். பின்னர் வந்த அசோக் சவான் பதவியேற்ற போது என்னைப் பற்றிச் சொன்னது இது யார் இந்த ஆள் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வந்துகொண்டு ?”. நான் ஆந்திராவிலிருந்து வந்தவனல்ல. நான் சென்னை மாநகரில் வசிக்கும் ஒரு தெலுங்குக் காரன்.
அவர் யார் இந்த ஆள் ஆந்திராவிலிருந்து வந்து கொண்டு நம்முடைய மராத்தி விவசாயிகள் பற்றி ஆராய்வது..?” என்று கூறிய போது நான் சந்தோஷமடைந்தேன். ஏனெனில் மார்ச் 2003இல் ஆந்திர சட்டசபையில் சந்திரபாபு நாயுடு யார் இந்த ஆள் பம்பாயிலிருந்து வந்து கொண்டு ஆந்திர விவசாயிகளைப் பற்றி நமக்கே பாடம் எடுப்பவர் ?” என்றார். இனிமேல்  நான் சத்தீஷகருக்குத் தான் செல்ல வேண்டும்.

இது தான் இந்தத் தற்கொலைகள் நிகழ்வதன் தீவிரம். நூற்றுக் கணக்கான அறிக்கைகள். விதர்பாவிற்கு குறும்பட(documentary) இயக்குநர்கள் வர ஆரம்பித்ததும் பின்னர் பிரதமர் வந்ததும் அவர் பின்னாலேயே டி.வி சேனல்கள் வந்ததும் இப்போது விதர்பா விவசாயிகள் சங்கத் தலைவர் கிஷோர் திவாரி சொல்கிறார் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று. விதர்பாவில் இப்போது விவசாயிகளை விட அதிகமாக சினிமா எடுப்பவர்கள் தான் நிரம்பியிருக்கிறார்கள். விளைநிலத்தில் வேலை செய்பவர்களை விட அதிகமான எண்ணிக்கையில் கமிஷன்கள் போடப்பட்டிருக்கின்றன. இது இத்துடன் நின்றுவிடாது. இது நமக்கு தேவைப்படுகிறது ஏனெனில் இந்த அறிக்கைகளை அடிப்படையாக வைத்து தான் நீதிமன்றங்கள் அரசை விமர்சிக்கின்றன. நான் வலியுறுத்த விரும்புவதெல்லாம் இந்த துர்நிகழ்வுகள் அனைத்திற்கும் காரணம் மத்திய மாநிலஅரசுகளின் விவசாயக் கொள்கையே என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது என்பதை.

உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். 50% விவசாயக் கடன்கள் நகரங்களிலேயே கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லியிருக்கிறேன். மாநகர் வங்கிக் கிளைகளிலும், நகர வங்கிக் கிளைகளிலும் மட்டும். இப்போது வேறு ஒரு விஷயமும் சொல்கிறேன். TISS ஐச் சார்ந்த டாக்டர் டி.ராமக்குமார் மற்றும் பல்லவி சவான் ஆகியோரின் EPW பற்றிய அருமையான ஆய்வு அது. அதில் தரவுகள்(Data) 2006-07 வரை உள்ளன. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தினமும் சொல்வார் நாங்கள் விவசாயக் கடனை இருமடங்காக உயர்த்தியுள்ளோம்; மும்மடங்காக உயர்த்தியுள்ளோம் என்று. பிறகு சொல்வார் 300 ரூபாயாக இருந்ததை 900 ரூபாயாக உயர்த்தியுள்ளோம் என்று. அவர் ஏன் சதவீதங்களாகத் தராமல் எண்களாகத் தருகிறார்? அவர்கள் ஒரு போதும் சதவீதங்களாகச் சொல்லமாட்டார்கள் ஏனென்றால் சதவீதங்களில் பார்த்தால் விவசாயக் கடன்கள் குறைந்து கொண்டே வருகின்றன. 600 ரூபாய் அதிகப்படுத்தியது என்பது 9% வீதத்தில் வளரும் பொருளாதாரத்தில் பார்த்தால் ஒரு தொகையேயில்லை. நீங்கள் அந்த கடன் அதிகரிப்பு வீதத்தை சதவீதத்தில் பொருளாதார வளர்ச்சி வீதத்துடன் ஒப்புமைப்படுத்தி அதிகரித்திருக்க வேண்டும். இல்லையா ? இல்லை. ஆனால் பிரணாப் சொல்கிறார் நான் 2003ல் அவர்களுக்கு 1000 ரூபாய் கொடுத்தேன். இப்போது 3500 ரூபாய் கொடுக்கிறேன் என்று. நீங்கள் யார் மக்கள் பணத்தை மக்களுக்குக் கொடுப்பதற்கு இவ்வளவு சலித்துக் கொள்ள?

ராமக்குமாரும் பல்லவி சவானும் தங்கள் ஆய்வில் இதை நிரூபிக்கிறார்கள். 2001க்கும் 2006க்கும் இடையே தொகை 25000 ரூபாய்க்கும் குறைவான கடன்கள் வழங்கியது சரிபாதியாகக் குறைந்துள்ளது. யார் 25000க்கும் கீழே கடன் வாங்குவார் ? ஏழை விவசாயி; விளிம்பு நிலை விவசாயி; சிறு விவசாயி. எனவே அதிகரிக்கப்பட்ட கடன் தொகை இவர்களைச் சென்று சேரவில்லை என்றாகிறது. 25000க்கும் கீழே கடன் தொகையாக பெறப்பட்ட கடன்கள் 50% க்கு மேல் குறைந்திருக்கிறது. தலித்துகள், ஆதிவாசிகள், விளிம்புநிலை விவசாயிகள், நில உடமையல்லாத விவசாயிகள் (தலித்துகளுக்கும் ஆதிவாசிகளுக்கும் எப்போதும் நிலப்பட்டாக்கள் வழங்கப்பட்டதில்லை); இவர்கள் எல்லாரும் பெறும் கடன்கள் மிகக் குறைவு. எந்தக் கடன்கள் அதிகரித்திருக்கின்றன ?  உங்களால் ஊகிக்கமுடியுமா ? 25000 மேற்பட்ட கடன்களோ, 50000க்கு மேற்பட்ட கடன்களோ அல்ல. 10 கோடி மற்றும் 25 கோடி ரூபாயைத் தாண்டிய கடன்களே உயர்ந்திருக்கின்றன. 25 கோடி ரூபாய் கடன் வாங்கும் எந்த விவசாயியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள் ?  நீங்கள் சொல்லலாம் அமிதாப் பச்சன் என்று. ஏனென்றால் அவர் தான் தாம் ஒரு விவசாயி என்று நிரூபித்து மேலும் இடங்கள் வாங்க இருக்கிறார். மஹாராஷ்ட்டிராவிலும் அவர் நிலங்கள் வாங்கி வைத்திருக்க நீதிமன்றத்தில் உத்திரப் பிரதேசத்திலிருந்து தான் விவசாயி என்று ஆவணங்கள் சமர்ப்பித்து போராடிக் கொண்டிருக்கிறார். முகேஷ் அம்பானியும், அமிதாப் பச்சனும் விவசாயிகள் என்றால் 25 கோடிக்கு மேல் வாங்கும் கடன்களின் எண்ணிக்கை கூடுவது நியாயமே. எந்த விளிம்பு நிலை விவசாயி 10 கோடியும், 25 கோடியும் கடன் வாங்குகிறார். இப்போது உங்களுக்குப் புரியும் பணம் எங்கே போகிறது என்று. அது திரும்பவும் கார்ப்பரேட் உலகிற்கே செல்கிறது.

இந்த அத்தியாயத்தை நிறைவு செய்யுமுன் விவசாய நெருக்கடி என்றால் என்ன விவசாய நெருக்கடி என்றால் என்ன ?’ என்பதை ஐந்தே வார்த்தைகளில் விளக்குகிறேன். இந்தத் தற்கொலைகள் விவசாய நெருக்கடி அல்ல. தற்கொலைகள் விவசாய நெருக்கடியின் விளைவுகள் மட்டுமே;  ‘காரணங்கள் அல்ல. விவசாய நெருக்கடியின் பின் விளைவுகளே தற்கொலைகள். ஐந்து வார்த்தைகளில் விவசாய நெருக்கடி பற்றிச் சொன்னால் கார்ப்பரேட்டுகளால் நயவஞ்சகமாக கடத்தப்பட்ட விவசாயம். கார்ப்பரேட்டுகள் விவசாயத்தை கடத்தி தங்கள் மயமாக்கியதன் விளைவே விவசாய நெருக்கடி.

உங்களுக்கு சில கேள்விகள். விவசாயி என்றதும் உங்கள் நினைவில் தோன்றும் உருவம் எது?  உங்களுக்குத் தெரிந்து எந்த விவசாயி விவசாயத்தின் எல்லா விஷயங்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார் ? விதைகளை தன் கட்டுக்குள் இன்னும் வைத்திருக்கிறாரா? யார் விதைகளை கட்டுப்படுத்துகிறார்கள் ? மாண்சான்டோ விதைகளை கட்டுப்படுத்துகிறது. நுயி வகிமோ கட்டுப்படுத்துகிறது. இந்தியன் விதை நிறுவனம் விதைகளை கட்டுப்படுத்துகிறது. பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள் விதைகளை கட்டுப்படுத்துகின்றன. பூச்சிக் கொல்லி மருந்துகளை விவசாயியா உற்பத்தி செய்கிறார் ? முன்னொரு காலத்தில் விவசாயியே வேப்ப மரத்திலிருந்தும் பிற இயற்கை வளங்களிலிருந்தும் பூச்சிக் கொல்லிகளை தயாரித்து பயன்படுத்தினார். இன்று பூச்சிக் கொல்லி உற்பத்தியில் நான்கு பெரிய கார்ப்பரேட்டுகள் தான் இந்தியச் சந்தையை ஆளுகின்றன. சரி. தான் விளைவிக்கும் பொருளையாவது விவசாயி தேர்ந்தெடுக்கிறாரா? இல்லை. குத்தகை விவசாயத்தின் கீழ் கார்ப்பரேட்டுகள் அரிதான பிரேஸிலியன் தக்காளிகளை வளர்க்க விரும்பினால் அதை அவர் வளர்த்தாக வேண்டும். விவசாயி தான் என்ன உரம் பயன்படுத்தவேண்டும் என்று முடிவு செய்கிறாரா?  அல்லது தயாரிக்கிறாரா ? இல்லை. டாடா, பிர்லா, அம்பானி போன்றவர்களே உரங்கள் தயாரிக்கிறார்கள். விவசாயி தண்ணீர் மற்றும் மின்சாரத்தின் பயன்பாட்டு விலையையாவது கட்டுப்படுத்துகிறாராசந்திரபாபு நாயுடு ஒரே நாளில் விவசாயத் தண்ணீர் உபயோகத்தின் விலையை 70% உயர்த்தியவுடன் ஆந்திர கிஸான் சபா’ (விவசாயிகள் சங்கம்) சென்று எல்லா தண்ணீர் மீட்டர்களையும் உடைத்து நொறுக்கி விலை உயர்வை தடுத்தனர். ஆனால் விலை 70% வரை உயர்ந்தது. மின்சாரமும் அதே நிலை தான். 1991 உடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் அது 100% சதவீதம் உயர்ந்திருக்கிறது. தயவு செய்து சொல்லுங்கள் விவசாயத்தில் எதைத் தான் விவசாயி கட்டுப்படுத்துகிறார் ?

நிலம்? அதையும் அவர்கள் ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கோ(SEZ – Special Economic Zones) அல்லது ஒரு திட்டத்திற்கோ விவசாயியிடமிருந்து பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு விவசாயி தான் விவசாயி என்று சொல்லிக் கொள்ளும்படி எதையாவது தன் கட்டுக்குள் வைத்திருக்கிறாரா ? இது தான் விவசாய நெருக்கடி. இந்த விவசாய நெருக்கடியின் பின் விளைவுகள் என்ன? வரலாற்றின் மிகப் பெரிய மனித இடம் பெயர்வுகள். SEZ- ஐ விட மிகப் பெரியது. இதைப் புரிந்து கொள்ளுங்கள். SEZ கள் நம்பமுடியாத மனித அவலங்களுக்கு காரணமாயுள்ளன. அவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஏனென்றால் லட்சக்கணக்கான மக்களின் வாழ்விடங்களுக்கு அவை அச்சுறுத்தல்களாக மாறுகின்றன. உணவு உற்பத்தியின் படி பார்த்தால், SEZ-களின் நில ஆர்ஜித முறையானது, இது ஒரு கார்ப்பரேட் ஆக்கிரமிப்பு, பலவிதங்களில் உணவுப் பாதுகாப்பை, பாரிய அளவில் பணப் பயிருக்கு மாறியதன் மூலம், உணவு உற்பத்தியைக் காட்டிலும் மோசமாக சேதப்படுத்தியுள்ளது. விவசாயி தனது கையில் என்ன வைத்திருக்கிறார் அவரை விவசாயி என்று நாம் சொல்ல ?

1991லிருந்து என்ன நடந்து கொண்டிருக்கிறது ? எல்லா புள்ளிவிவர எண்களும் மோசமான நிலைக்குச் செல்லப் போகின்றன பின் அவையே நல்ல நிலைக்கு மாறப் போகின்றன. அடுத்த எண்கள் சுற்றில் நிகழப்போகும் ஒரு விஷயத்துக்கான பழியை நான் ஏற்றுக் கொள்கிறேன். 2011 ஜனவரியில் விவசாயத் தற்கொலைகளின் எண்கள் வெளிவரும். நிறைய மாநிலங்கள், நான் மேலே குறிப்பிட்ட மாநிலங்கள் அனைத்திலும் விவசாயிகளின் தற்கொலைக் கணக்கீட்டு எண்கள் பெரிய அளவில் குறைந்திருக்கும். ஏனென்றால் அரசு எண்களை மசக்கி விட்டுக்கொண்டிருக்கிறது. அப்போதும் கூட அந்த எண்கள் மிக மோசமான நிலையையே காட்டும் ஏனென்றால் நாகராஜின் கணக்கீடுகள் 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் விவசாயிகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. 2011ல் புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் லட்சக்கணக்கான விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும். அதாவது விவசாய தற்கொலை விகிதமானது, அதாவது ஒரு லட்சம் பேரில் தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை என்பது நாகராஜின் ஆய்வறிக்கையை விட இன்னும் மோசமாக இருக்கும். எனக்கு இது எப்படித் தெரியும் ? 91 மக்கள் தொகை கணக்கீட்டிற்கும் 2001 கணக்கீட்டிற்குமிடையே 80 (எண்பது) லட்சம் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறியிருக்கின்றனர். 80 லட்சம் விவசாயிகள். உண்மையான பிரச்சனை 2000 வருடத்துக்குப் பின் தான் ஆரம்பம். அதாவது பிரச்சனை இன்னும் பூதாகாரமானது 2000த்துக்குப் பின் தான். 2001 க்கும் 2011க்குமிடையே எவ்வளவு பேர் விவசாயத்தை விட்டு வெளியேறினார்கள் என்று நாம் பார்க்கப் போகிறோம்.

மஹாரஷ்ட்டிராவில் 100 விவசாயப் பண்ணைகளுக்கு 41000 விவசாயத் தற்கொலைகள் முந்தைய பத்து வருடத்தில் என்றால் இப்போது அதே 41000 தற்கொலைகள் 60 விவசாயப் பண்ணைகளிலேயே நடந்திருக்கும். எனவே புள்ளிவிவர எண்கள் படு மோசமாய் இருக்கும். நாம் இதற்கு என்ன செய்யப் போகிறோம் ? நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா அரசு, மாநில அரசு, ஊடகங்கள் மட்டுமல்ல மாறியது. நம் எல்லோருள்ளும் மிக அடிப்படையான ஏதோ ஒன்று மாறியிருக்கிறது. நான் நினைக்கிறேன் நமது ஒழுக்க உலகமும் மாறியிருக்கிறது. நான் மிக விரும்பும் கேரள மாநிலம் சென்றிருந்தேன். அங்கு எல்லா தொழிற்சங்க தலைவர்களும் சொன்னார்கள்; கூடியிருந்த பார்வையாளர்களிடமும் பார்த்தேன். அவர்கள் எல்லோருடைய பேச்சுக்களும் செல் போன்கள் பற்றி, புதிய வாகனங்கள் பற்றி இருந்தது. எங்கோ இந்திய அறிவுலகம் மக்களுடனான அதன் உயிர்த்துடிப்புள்ள, வரலாற்றுத் தொடர்பை தொலைத்து விட்டிருக்கிறது.

கவுதம புத்தர் காலத்திலிருந்து வந்திருக்கிற இந்திய அறிவுலகின் ஒரு பெரிய பண்பு என்னவென்றால் பெரும்பான்மையான இந்திய அறிவுலகம் மத்தியிலிருந்து இடது புறமாக உள்ளது (இடது சாரிச் சார்புள்ளது). ஒவ்வொரு மனிதனைப் போல அவர்களின் இதயம் இடப்புறமாக உள்ளது. இந்திய கலாச்சாரம் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து எவ்வளவு மாறுபட்டது என்பதைப் பாருங்கள். மேற்குலகில் கையில் பணமேயில்லாமல் பின்னால் பெரிய கதாநாயகர்களாக ஆனவர்கள் தான் வெற்றியாளர்கள். இந்தியாவில், புத்தர், அசோகர், காந்தி போன்ற பெரும் செல்வந்தர்களாயிருந்துவிட்டு அனைத்தையும் விட்டு விட்டவர்கள் தான் கதாநாயகர்கள். 1913ல் 15000 பவுண்டுகள் சம்பளம் பெற்ற காந்தி ஒரு பாரிஸ்டர் பட்டம் பெற்ற வழக்கறிஞர். அக்காலத்தில் அது ஒரு மிகப் பெரிய தொகை. புத்தர் அரண்மனையை விட்டு வெளியேறி மக்களிடம் போனார்; தலாய் லாமா போல மக்களை விட்டு விலகி ஒரு அரண்மனைக்குள் செல்லவில்லை. இந்திய அறிவுலகிற்கு இப்படிப்பட்ட பெருமையான வரலாறு உள்ளது. இந்த வரலாறு 90களிலும் 2000களிலும் காலவதியாகிப் போனது. நமக்கு முன் மிகப் பெரிய சவால் உள்ளது. எப்படி நாம் 60களையும் 70களையும் திரும்பப் பெறுவது ? எப்படி ஜனநாயக அரசை தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்குமான ஜனநாயக அரசாக மாற்றுவது. அது ஜனநாயக அரசாய் இருக்க வேண்டும். தன்னச்சையான, ஜனநாயகமற்ற எதுவும் இந்த வர்க்கங்களை துன்புறுத்தும்.

வருமானச் சமமின்மை (income inequality)ஐப் பாருங்கள். ADR என்கிற தேர்தல் கண்காணிப்புக் குழுவின் கூற்றுப்படி 2004 தேர்தல்களுக்கும், 2009 தேர்தல்களுக்கும் இடையே ஒரு எம்.பி. அவரே பட்டியலிடும் சொத்துக் கணக்கின் அளவு 349% அதிகரித்திருக்கிறது. மஹாராஷ்ட்டிராவில் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவான ஒரு மனிதரின் சொத்து மதிப்பு 52 கோடி ரூபாய் அதிகமாயிருக்கிறது. இதில் சாதிய, வர்க்க படிநிலையும் உண்டு. 2004ல், சராசரியாக ஒரு எம்.எல்.ஏவின் மதிப்பு 1.5 2 கோடி. 2009ல் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட 3 3.5 கோடி மதிப்புள்ளவராக அவர் இருக்க வேண்டும். இன்று மஹாராஷ்ட்டிராவில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு எம்.பி.யின் சராசரி மதிப்பு 5 கோடி. உங்கள் மாநிலத்தில்(தமிழ்நாடு) எம்.பி.யின் மதிப்பு 5.1 கோடி.
மத்திய மந்திரியின் சராசரி சொத்து மதிப்பு 7.6 கோடி. பதவி ஏணியில் மேலே வளர வளர என்ன விதைக்கிறீர்களோ அதையே நீங்கள் அனுபவிப்பீர்கள். இப்படித் தான் இது நடக்கிறது.

இப்போது தேர்தல்களினால் நாம் முற்றிலும் விலை பேசப்படுகிறோம். இடது சாரிகள் தான் இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள். ஊடகங்களின் விற்கப்பட்ட செய்தி என்பது ஊடகங்களை பெரிதும் மாசுபடுத்தி நிற்கிறது. இந்த விஷயத்திற்குள் போவதற்கு நமக்கு நேரமில்லை. நான் இது பற்றி பேசலாம் என்றிருந்தேன் ஆனால் நாம் கூட்டத்தை தாமதமாகத் தொடங்கி விட்டோம். எனவே இது பற்றி நான் பேசப் போவதில்லை. ஆனால் ஊடகங்கள், அரசியல் வர்க்கம், நாம் எல்லாம், அறிவு ஜீவிகள் மற்றும் மக்கள் இவை எல்லாவற்றுக்குமிடையேயான தொடர்பறுந்த நிலையை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டங்களை மீட்டு எடுப்பது எப்போது? அரசு மாறுவதென்பது அரசின் ஆட்சிமுறை மாறுவதல்ல. அரசின் அடிப்படை அடுக்குகள் நகர்வதாகும். அரசானது(State) வர்க்கங்களுக்கிடைப்பட்ட தரகர் என்ற நிலையிலிருந்து நான் கார்ப்பரேட் வர்க்கத்துடன் தான் நிற்கிறேன் நீங்கள் போய் கிணற்றில் குதியுங்கள் என்று சொல்லும் நிலைக்கு வந்திருக்கிறது. இதை எப்படி மாற்றுவது ? இவை தான் சவால்கள்.

நம்மால் நிறைய விஷயங்கள் செய்ய முடியும். முதலில் உங்களது அறிவுப் பூர்வமான பாதுகாப்பு. அர்த்தமேயில்லாத, வெற்று பொய்யுரைகளையும், நுகர்வுக் கலாச்சார சித்தாந்தங்களையும் கண்டு பிசகிவிடாத மனநிலை. உங்களது சக மனிதர்களின் சூழ்நிலைக்கு இளகாத மனநிலை கொள்ளாமை. இந்த நாட்டில் காணப்படும் சமமின்மையை இது தான் யதார்த்தம் என்று ஏற்றுக் கொள்ளாத மனநிலை. நமது நாடு உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் 5வதாக இருக்கும் அதே நேரத்தில் தான் ஐ.நா.வின் வளர்ச்சி அறிக்கையில் 134வது இடத்தில், லாவோஸூக்கு 1 படி கீழே, பூடானுக்கு 2 படி கீழே, மனித வளர்ச்சிக் குறீயீட்டு எண்ணில் எல்லா லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் கீழே இருக்கிறது. நமக்கு மேலே இருக்கும் இந்த நாடுகள் எதுவும் மென்பொருள் அசுரசக்தி‘(Software Superpower) இல்லை. எதுவும் அணு சக்தி மிக்க நாடு இல்லை. எதுவும் இந்தியாவைப் போல விஞ்ஞான அறிவு ஜீவிகள் நிரம்பிய நாடு இல்லை. எந்த நாடும் இந்தியாவைப் போல் 9% வளர்ச்சி வீதம் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவர்கள் பசியை நம்மை விட நன்றாக போக்கியிருக்கிறார்கள். எதுவோ அடிப்படையில் மாறியிருக்கிறது. எப்படி ஒரு காபோன், ஒரு போட்ஸ்வானா நம் இந்தியாவை விட மனித வளர்ச்சியில் முன்னேறி இருக்கிறது என்று.

இதைச் சொல்லி இந்தக் கதையை முடிக்கிறேன். ஏனெனில் இது மெட்ராசும் மைசூரும் சம்பந்தப்பட்டது. ராணி விக்டோரியா தன்னை ராணி என்று அழைத்து களைத்துப் போனதால் தன்னை (இந்தியாவின்-உலகின்)மகாராணி’(The Imperial Majesty Queen-Empress) என்று அழைத்துக் கொள்ள விரும்பினார். அதன் காரணம் சமீபத்தில் அவர் வாங்கிய மிகப் பெரிய ரியல் எஸ்டேட் சொத்தான இந்தியா என்று இப்போது அழைக்கப்படுகிற பகுதியாகவும் இருக்கலாம். எனவே அவர் நினைத்தார் இது தான் மகாராணியாக மகுடம் சூடும் தருணமென்று. டெல்லியில் ஒரு தர்பார்’(Dharbar)ஐ கூட்டச் செய்தார். இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் ராஜாக்களும், நவாப்புகளும் விருந்தினர்களாக அழைக்கப்பட்டனர்.  நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். விக்டோரியாவின் மாபெரும் தர்பார் பற்றியும் அதில் அவர் மகாராணியாக மகுடம் சூட்டப்பட்டது பற்றியும். மகாராணியின் பிரதிநிதியாக இருந்து இதை நடத்திய லார்டு லிட்டன் இதில் விக்டோரியா மகாராணி பட்டம் பெறுவதை அறிவித்தார். இது நடந்த வருடம் 1876. மெட்ராசிலும் மைசூரிலும் கடும் பஞ்சம் தலைவிரித்தாடிய காலம். இந்தியா முழுதும் பஞ்சம் தலைவிரித்தாடிய இக்காலத்தில் தான் இந்த மாபெரும் தர்பார் நடத்தப்பட்டது. லட்சக் கணக்கானோர் இறந்தனர். அந்த காலகட்டத்தில், அந்த வாரத்தில், அந்த மாதத்தில்., மெட்ராசிலும் மைசூரிலும் மட்டும் 1 லட்சம் இன்னும் குறிப்பாக 1லட்சத்து 40 ஆயிரம் பேர் பசியால் இறந்து போனார்கள். இது பற்றிய அப்போதைய செய்திக் குறிப்புகளை படித்தால் போலீசின் வேலை பெரிதும் மாறிவிடவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். காவல் துறையினரின் (Police) வேலை நகரின் எல்லைப் புறங்களில் நின்று கொண்டு பசியாலும், பஞ்சத்தாலும் வாடிக் கொண்டிருக்கும் மக்கள் கொண்டாட்டம் நடக்கும் நகரினுள் நுழைய விடாமல் தடுப்பது தான். சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமாவென்று நகரினுள் நுழையப் பார்த்த விவசாயிகள் தடியால் அடித்துக் கொல்லப்பட்டார்கள். நீங்கள் தேடிப் பாருங்கள். பத்திரிக்கைகள் இதை செய்தியாக வெளியிட்டிருக்கின்றன அப்போது.
http://en.wikipedia.org/wiki/Delhi_Durbar - டெல்லி தர்பார்

அதே கணத்தில் தான் வரலாற்றிலேயே மிக அதிகம் செலவு செய்யப்பட்ட விருந்தை தனது தர்பாருக்கு வழங்கினார் ராணி. 68,000 விருந்தினர்கள். அதில் பெரும்பாலோர் பெரும் ராஜ பரம்பரையினர் எனவே அவர்களுடன் அவர்கள் பரிவாரங்களும் விருந்தில் கலந்து கொண்டனர். ஜெய்ப்பூர் ராஜா மட்டும் சும்மா வரவில்லை கூடவே அவருடைய பரிவாரங்கள் 500 பேர் வந்தனர். ஏனென்றால் அவருக்கு பாதுகாவலர்கள் உண்டு; குதிரைகள் உண்டு; குதிரையைக் கழுவ வேலைக்காரர்; குதிரைக்கு புல் வைக்கும் வேலையாள் ; என்று இப்படி எல்லோரும் சேர்ந்து அறுபத்தியெட்டாயிரம் பேர். இவர்களுக்கு சமைக்க எவ்வளவு சமையல்காரர்கள் தேவைப்பட்டார்கள் என்று தெரியவில்லை. விருந்தினரைக் கவனிக்கும் சமையல்காரர்களை கவனிக்க தனி சமையல்காரர்கள் இருந்திருக்க வேண்டும். இந்தக் கோலாகலம் நடைபெற்ற இதே நேரத்தில் இந்த இரண்டு பகுதிகளிலும் மெட்ராஸ் மற்றும் மைசூரில் மட்டும் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் பசியால் செத்துப் போனார்கள். பொட்டில் அடிக்கும் விஷயம் எது தெரியுமா ? பத்திரிக்கைகள் இதை அப்படியே (இன்று போலவே.. இன்று ஒரே விஷயத்திற்கு தான் பத்திரிக்கைகள் வளர்க்கப்படுகின்றன) வெளியிட்டன பத்திரிக்கைகள். அன்று கொஞ்சம் பரவாயில்லை. அவர்கள் அந்த இறப்புகளை தெரிவித்தார்கள். பஞ்சத்தைப் பற்றி எழுதினார்கள். போலீஸ் விவசாயிகளை லத்தியால் அடித்ததை எழுதினார்கள். இவை எல்லாவற்றையும் எழுதினார்கள் ஆனால் தர்பாருக்கும் இந்த எல்லா நிகழ்வுகளுக்கும் எந்தத் தொடர்பையும் அவர்கள் காணவேயில்லை. அவர்கள் தர்பாரை உலகிலேயே மிகச் சிறந்தது என்று கொண்டாடி எழுதினார்கள். மாட்சிமை பொருந்திய, மேதகு, உயர்திரு, என்று. தர்பார் ஒரு கலையின் வெளிப்பாடாகக் காட்டப்பட்டது. மிகச் சிலர், தேசியவாதிகள் இதை கண்டித்தாலும் அவர்களின் குரல்கள் கேட்கப்படவே இல்லை. தேசியவாதிகள் இதைக் கண்டித்தாலும் அவர்களின் குரல் கேட்கப்படவே இல்லை. ஏனெனில் பத்திரிக்கைகள் அவர்களுக்குச் சொந்தமானது அல்ல.

விதர்பாவில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் குற்றங்களில் ஒன்று பத்திரிக்கைகளை சொந்தமாக நடத்தாமலிருப்பது. அல்லது பத்திரிக்கை செய்தி வருவதில் சரியாக போட்டி போடத் தெரியாமை. ராணியின் காலத்துப் பத்திரிக்கைகள் பஞ்சத்தை பற்றியும் செய்தி வெளியிட்டன். தர்பாரைப் பற்றியும் செய்தி வெளியிட்டன. ஆனால் இரண்டிற்கும் உள்ள தொடர்பை பேசவே இல்லை. என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதிலிருந்து நம்மை துண்டித்துக் கொள்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது பாருங்கள். கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களில் சாலையோரங்களிலும், பிளாட்பாரங்களிலும் கூட. தேசிய உடல் நல கணக்கீடு 3வது சுற்று அறிக்கையைப் பார்த்தால் அதில் ஊட்டச் சத்தில்லாத குழந்தைகளின் எண்ணிக்கை மும்பாயில் மட்டும் மொத்த மஹாராஷ்டிர சராசரியை விட ஒரு சதவீதம் அதிகம். இதற்கு முக்கிய காரணம் வாழ்விழந்து பிழைப்பு நாடி நகரத்தை நோக்கி சாரை சாரையாகச் செல்லும் கிராம மக்களே. ஆனால் இதை சீர்தூக்கிப் பார்க்கும் நாம் இந்த சமமின்மையை கண்டு கொள்ளாமல் இருப்பதா அல்லது இதற்கு காரணம் ஒரு கொள்கையோ, ஒரு எண்ணமோ அல்ல; மாறாக நாம் போரிட வேண்டியது, தகர்க்கவேண்டியது மற்றும் மாற்றவேண்டியது அரசின் ஒட்டு மொத்த கொள்கைகளும் அரசின் கட்டுமானங்களுமே என்பதை ஏற்றுக் கொள்வதா ? சிந்தியுங்கள். நன்றி.

ஆங்கில உரையைப் படிக்க - http://ambedhan.blogspot.com/2010/11/slumdogs-vs-billionaires-p-sainath.html

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.