Sunday, May 30, 2010

ஈழத் தமிழருக்கு சி.பி.எம் தரும் ‘சாரிடான்’ மாத்திரை.

ஈழத் தமிழருக்கு சி.பி.எம் தரும் ‘சாரிடான்’ மாத்திரை.

மே 28, வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி.
இடம்– சென்னை, பூந்தமல்லி ஹை ரோடு, ஆர்யசமாஜம்.

‘இலங்கைத் தமிழர்ப் பிரச்சனைக்கு தீர்வு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் சி.பி.எம்.மின் இந்தியப் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் பேசப்போகிறார் என்ற விளம்பரம் தீக்கதிரில் படித்ததும் வந்து சரியாக 6 மணிக்கு ஆஜராகி நின்றோம்.

ஆர்யசமாஜம் இருந்த தெருவில் இருபுறமும் மார்கசிஸ்ட் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. தோழர்கள் ஆறுமணியிலிருந்தே வரத் தொடங்கிவிட்டனர். பத்திரிக்கையாளர் கூட்டமும் நின்றது. சுமார் ஆயிரம் பேர் கொள்ளளவு கொண்ட உள்ளரங்கில் இருக்கைகள் போடப்பட்டு பழங்காலத்து காதல் பாடல்கள் ஸ்பீக்கரில் மெலிதாக ஒலித்துக்கொண்டிருந்தன. தோழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து வணக்கம் சொல்லுதலும், அளவளாவுதலும் ஆங்காங்கே நடந்துகொண்டேயிருந்தது. எங்களுடன் வந்த கல்லூரி நண்பர் ஒருவர் பிரபாகரன் படம் போட்ட டி.சர்ட் அணிந்திருந்தார். அவ்விடத்தில் அவரை கடந்து சென்ற எல்லாரும் லேசாக திரும்பிப் பார்த்தபடி சென்றனர். அப்போது ஒரு சி.பி.எம் தோழர் அவரிடம் வந்து சட்டையில் இருந்த பிரபாகரனின் போட்டோவைக் காட்டி “யார் இவர்?” என்று நக்கலாகக் கேட்டார்.

6.30 மணியளவில் பிரகாஷ் காரத் (சிறப்புரை), சத்தியமூர்த்தி(இலங்கை பத்திரிக்கையாளர்), டி.கே.ரங்கராஜன் (தலைமை) என்று அனைவரும் ஒன்றாக ஹாலுக்குள் நுழைந்தனர். கூட்டம் ஆரம்பமானது.

முதலில் பேசியவர் டி.கே.ரங்கராஜன். ஆரம்பித்தவர் “ஈழப் பிரச்சனை முடிவடைந்து ஒரு வருடம் ஆகியும்” என்றவர் பின் கொஞ்சம் சுதாரித்து “போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் அங்கிருக்கும் தமிழ் மக்கள் முகாம்களில் சிறைப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசு உடனே ஆவண செய்து அவர்களை மீள்குடியமர்த்தி ‘ஒன்றுபட்ட இலங்கை’யில் அவர்களின் வாழ்வுரிமைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” என்றார். இரண்டாவது முறையும் 'ஈழப் பிரச்சனை முடிவடைந்து' என்று கூறிவிட்டு பின் திருத்திக் கொண்டார். விடுதலைப்புலிகள் செத்தவுடன் ‘பிரச்சனை’யும் முடிந்துவிட்டதாகக் கருதுவது தான் இவர் போன்ற தலைவர்களின் கருத்து என்றால் மற்றவர்களின் கதி ? இனவாதப் போரில் ஈடுபட்ட கடைசி 3 மாதங்களில் மட்டும் 30 ஆயிரம் மக்களை கொன்று குவித்த இலங்கை அரசை ‘போர்க்குற்றவாளி’ எனத் தீர்ப்பளித்த மனித உரிமை தீர்ப்பாணயம் இவர்கள் கண்ணிலே எப்படிப் படாமலே போனது. மாலைக்கண் வியாதியோ ?

அடுத்ததாகப் பேசியவர் சத்தியமூர்த்தி என்கிற ஈழத்துப் பத்திரிக்கையாளர். இவர் ‘வடக்கு வசந்தம்’ என்கிற இலங்கை அரசின் புதிய திட்டத்தை ஆதரித்தவர் என்கிறார்கள். அவர் சொன்ன முதல் விஷயம் இலங்கையின் 235 எம்.பி.க்களில் 46 பேர் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்கள், ஒருவர் மட்டும் சிங்களர். இந்த 46 பேர்களிடையே ஒருமித்த கருத்து என்ற ஒன்று இல்லை. எல்லாம் 16 பிரிவுகளாக பிரிந்து ஒற்றுமையில்லாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இருந்தால் தமிழருக்கு என்ன நீதி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது ? இரண்டாவது விஷயம் இங்கிருக்கும் அரசியல் சக்திகள் இடது சாரிகளும் சேர்த்து அங்கிருக்கும் முற்போக்கு சக்திகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்களா ? இருந்தார்களா ? இனிமேலாவது இருப்பார்களா?. அவர் வேறு எதுவும் விரிவாகப் பேசவில்லை. தமிழ்ச் சக்திகள் வேறு வேறாக நின்றால் கூட அனைவரும் ஒருவரை ஒருவர் ஆதரித்துக்கொள்ள வேண்டுமே தவிர உள்ளுக்குள் அடித்துக் கொண்டு எதிராளியை பலமானவனாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தினார்.



முதலில் பேசிய டி.கே.ரங்கராஜனும், சத்தியமூர்த்தியும் ஆளுக்கு பதினைந்து, பதினைந்து நிமிடங்கள் பேசி அமர்ந்து விட இறுதியாக பேச வந்தார் பிரகாஷ் காரத். அவர் பேச்சை உடனுக்குடன் மொழிபெயர்ப்பு செய்ய ஒருவரும் உடன் நின்றார். சரிதான் அக்குவேறாக் ஆணிவேராக பிரச்சனையை அலசப் போகிறாரோ என்று நினைத்தபடி கேட்டால் பிரகாஷ் காரத் பேசியது மேலும் அபத்தமானதாக இருந்தது. முதலில் முன்னர் பேசிய சத்தியமூர்த்திக்கு பதில் கொடுக்கும் வகையில் நாங்கள் 1980களிலிருந்து இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளுடன் JVP உட்பட பேசிக்கொண்டுதான் இருந்தோம். 2004ல் இலங்கையில் சிங்கள மக்களின் முன் நடத்தப்பட்ட ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசிய போது இந்தியாவில் இருந்த சமஷ்டி முறை (Federal Setup) இலங்கைக்கு நன்கு பொருந்தும் என்று எடுத்துரைத்தாகவும் தெரிவித்தார். JVP கட்சியுடன் தொடர்ந்து பேசினாலும் அவர்கள் தங்களது இனவாதப் பார்வையை விடாதிருந்ததால் அவர்களுடனான தொடர்பு அறுந்துவிட்டது என்றார். அதைத் தவிர மற்றைய தமிழ்க் கட்சித் தலைவர்களுடனும் பேசியதாகவும், ஜனநாயக ரீதியாக போராட அவர்களும் இசைந்ததாகவும், ஆனால் அவர்கள் எல்லாம் புலிகளால் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். சிங்கள அரசு பெரும்பான்மை இனவாதமும், புலிகள் சிறுபான்மை பிரிவினைவாதமும் பேசியதால் நடைபெற்ற இந்தப் போரில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்றார். அதாவது சுருக்கமாக சத்தியமூர்த்தி குற்றம் சாட்டியது போல் சி.பி.எம் நிலைப்பாட்டிலும், செயல்பாட்டிலும் பிறழ்வதே இல்லை: தவறே செய்யவில்லை என்று நிரூபித்தார். அதுதானே முக்கியம் முன்னால் உடகார்ந்திருக்கும் சி.பி.எம் பாமரத் தோழர்களுக்கு. 'கட்சி நிலைப்பாட்டில் தவறிழைத்ததில்லை..தவறிழைக்காது' என்று அவர்கள் பரிபூரணமாக நம்ப வேண்டும். அது மிக முக்கியம்.

அடுத்து காரத் இந்தப் போர் நடைபெற்று முடிந்தவுடன் போரில் இடம்பெயர்ந்த மக்களின் புனர் வாழ்விற்கு உடனடியாக இலங்கை அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்தோடு முடித்திருந்தால் பரவாயில்லை. “இந்தியா ஒரு இறையாண்மை மிக்க நாடு. இலங்கையும் இறையாண்மை மிக்க நாடு. இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்தியா உதவியது. எனவே இந்நிலையில் வரும் ஜூன் 8ஆம் தேதி பிரதமரை சந்திக்க வரும் ராஜபக்சேவை மக்களின் புனரமைப்புப் பணிகளை உடனே செய்யும் படி வற்புறுத்தவேண்டியது இந்தியாவின் உரிமை கூட” என்றார். போரே மிகக் கொடூரமான இன அழிப்புப் போர் என்று எல்லோரும் கூக்குரலிட்டுக்கொண்டிருக்க நம்ம தோழர் காரத் அதற்கு உதவி செய்தது இந்தியாவின் சட்டபூர்வ உரிமை(Legal Right) என்கிறார். நாம் எங்கே போய் முட்டிக்கொள்வது ? செத்துப் போன பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான நியாயம் என்ன ? சி.பி.எம்முக்கு கவலையில்லை என்பது தான் உண்மை. அதன் மேல்மட்டத் தோழர்களிடம் பேசுங்கள். இந்த மனப்பான்மை அப்படியே மாறாமல் தெறிக்கும். பின்னர் வழக்கமான பொத்தாம் பொதுவான வார்த்தைகள். "இலங்கையில் இருக்கும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளை ஒன்று சேர்த்து தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராட முயற்சிகள் செய்யவேண்டும்".

அவ்வளவுதான் முடிந்தது காரத்தின் உரை. முப்பது நிமிடங்களில். அதில் சரிபாதி நேரம் அதை மொழிபெயர்ப்பவர் எடுத்துக் கொண்டார். என்றால் வெறும் பதினைந்து நிமிடங்களில் பிரகாஷ் காரத் இலங்கைத் தமிழருக்கான தீர்வை வழங்கிவிட்டார். தலைவலியோ, மூக்கடைப்போ, ஈழத் தமிழர் பிரச்சனையோ, ஒரு சாரிடான் போடுங்கள்; பதினைந்தே நிமிடங்களில் வலி பறந்துவிடும். காரத் பறக்கடித்துவிடுவார்.

பின் வரும் கேள்விகள் எனக்கு எழுகின்றன.

1. உத்தப்புரத்தில் சாதிக் சுவர் கட்டி, கொடுமைப் படுத்தி, அங்கு வாழ்ந்த இருநூறு தலித் மக்களை ஓடஓட விரட்டி அடித்தது காவல்துறை என்று சாடி ஆர்ப்பாட்டம் செய்யும், காரத்தை நேரடியாக அழைக்கும், கோர்ட்டில் போராடி வந்த தீர்ப்பு வரை ‘ஆவணப்படம்’ எடுக்கும் சி.பி.எம்மின் ‘மனித நேயம்’ தமிழ் மக்கள் அங்கே பல்லாயிரக் கணக்கில் இலங்கையில் கொத்துக் கொத்தாக செத்தபோது, கற்பழிக்கப்பட்ட போது,ரசாயனக் குண்டுகளால் கருகிய போது, அதைத் தடுத்து நிறுத்த என்ன என்னவெல்லாம் செய்தது ?

2. அமெரிக்காவே போ..போ.. கியூபாவை நசுக்காதே.. இந்தியாவுடன் ஒப்பந்தம் போடாதே என்று அமெரிக்காவை, புஷ்ஷை எதிர்த்து அமிஞ்சிக்கரையில் கூட்டம் போட்டு நேருக்கு நேர் ஒபாமாவையே மேடையில் 'தில்'லாகக் கேட்க முடிந்த உங்களுக்கு, பாலஸ்தீனத்திற்கு உதவிப் பொருட்கள் ஏற்றிச் சென்ற கப்பலை மறித்துப் பிடித்த இஸ்ரேலை அடுத்த நாளே அத்தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி கண்டிக்க முடிந்த உங்களுக்கு, இலங்கையையும், ராஜபக்சேவையும் வலியுறுத்த மட்டும் ‘இறையாண்மை’ வெட்கம் வந்து தடுப்பதன் ரகசியம் என்ன ? அதற்கு மட்டும் இந்திய அரசையும், மன்மோகனையும் நீங்கள் தூதனுப்பி கேட்டுக் கொள்வதன் அர்த்தம் என்ன ? இங்கிருந்து சற்று உரக்கக் கத்தினாலே கூட ராஜபக்சேவுக்கு நம் குரல் கேட்குமே ? ஏன் இதே போல ஈழத்தமிழர்களுக்கு தாய்மண் என்கிற பெயரில் கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் இலங்கையால் திருப்பி அனுப்பப்பட்டு சென்னை துறைமுகத்தில் அல்லாடியதே அப்போது எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தீர்களா ?

3. ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் ஊற்றுவது முதல் ஊழல் பல புரிந்த, திமுக ரவுடிகளை தட்டிக் கேட்டதற்கு, அரசியல் பகையால் வெட்டிக் கொல்லப்பட்ட கவுன்சிலர் லீலாவதியின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தி உருக முடிந்த உங்களுக்கு, பல்லாயிரக்கணக்கில் கொல்லப்படும் மக்களையும், அதற்கு நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் போடும் சோனியாவையும், மேனன்களையும், நம்பியார்களையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தி தமிழ் மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்ப தன் உயிரை எரித்துக்கொண்டானே முத்துக்குமரன், அவனது தியாகம் எந்த விதத்தில் குறைந்தது ? அவனுக்கு அஞ்சலி என்று ஒரு அறிக்கை விடமுடியாத அளவுக்கு இளம் DYFI தோழர்கள் கூட சொரணையற்றுப் போனார்களா ?

4. விடுதலைப் புலிகளுடன் சி.பி.எம் சார்பாக என்றாவது பேசினீர்களா ? அதன் பலன் என்ன என்று வெளியே அறிக்கை விட்டீர்களா ? அட்லீஸ்ட் மாவோயிஸ்ட்டுகளிடமாவது பேசுவீர்களா ? ப.சிதம்பரம் தான் பேசவேண்டும் என்று என்ன தலையெழுத்து ? இல்லையில்லை ஆயுதத்தை வைத்திருப்பவன் கூடவெல்லாம் பேசமாட்டோம் என்றால் CRPFம் இலங்கை-இந்திய ராணுவங்களும் கையில் பூச்செண்டுகளோடா லால்காரிலும், யாழ்ப்பாணத்திலும் நடந்து போனார்கள் ?

5. ஈழப்பிரச்சனையில் 'ஈழம்' என்கிற வார்த்தை கூட அவர்களுக்கு தனிநாடு கேட்பதாக அமையும் என்று அந்த வார்த்தையைக் கூட பயன்படுத்தாமல் 'இலங்கை' என்று கவனமாகக் கூறும் நீங்கள், கேட்டால், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றிப் பலவாறாக வியாக்கியானங்கள் கூறுகிறீர்கள். இஸ்ரேலை தனி நாடாக்கியது அமெரிக்காதான். அப்படி இல்லாவிட்டால் அது பாலஸ்தீனத்தின் ஒரு பகுதிதான். அமெரிக்கா இஸ்ரேலைப் பிரித்தால் அது உங்களுக்குப் பிரச்சனையில்லை. ஆனால் புலிகள் தனிநாடு அட அட்லீஸ்ட் சுயநிர்ணய உரிமையுள்ள பிரதேசம் அந்தஸ்து கேட்டால் உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை? பிரபாகரன் எத்தனையோ பேரை கொன்றவர் தான். ஸ்டாலின் கொல்லாமல் இருந்தாரா ? ஸ்டாலினை பயங்கரவாதி என்று நீங்கள் சொல்வீர்களா ?

இதற்கு சி.பி.எம் நண்பர்களின் பதில் 'சிறு நாடுகளாய் பிரிந்தால் ஏகாதிபத்தியம் எளிதில் வசப்படுத்தி அடிமையாக்கிவிடும். எனவே, நாடுகளைப் பிரிக்காமலிருப்பது முக்கியம்'. இலங்கை மொத்தமாகவே ஏற்கனவே அமெரிக்கா, சீனா, ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் அடிமைதான். இதில் தமிழ் ஈழம் என்பது உயிர் போகும் பிரச்சனை அல்லவா ? என்றைக்கோ வந்து அடிமைப்படுத்தப் போகும் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதா ? இல்லை இந்தக் கணத்தில் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து வெடித்துக் கொல்லும் சிங்களவனை எதிர்ப்பதா ? எது சாத்தியம் ? எது முக்கியம் தோழர்களே ?

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு நேரடியாக வந்து டயோட்டா கார் கம்பெனிக்காரன் கலைஞரிடம் MOU போட்டு ஏரியாவை வளைத்துப் பிடிக்கிறான். இதை எதிர்க்க தமிழ்நாட்டு சி.பி.எம் என்ன செய்தது ? (ஹுயூண்டாய் கம்பெனிக்காரன் தொழிலாளர்களை சுரண்டுவதைத் தடுக்க போராடி தொழிற்சங்கம் வைத்தது பெரிய முயற்சி .. எனினும்) தமிழ்நாடு தனிநாடாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் டயோட்டாக்காரனும், நோக்கியாக்காரனும் வராமலா இருப்பான் ? ஈழத்துப் பிரச்சனையில் மட்டும் 1983ன் பின் உங்கள் நிலைப்பாடு மாறவேயில்லையே ஏன் ? இந்த 30 ஆண்டுகள் நடைபெற்ற ஈழப்போராட்டத்தை வெறும் 'புலிகள் பயங்கரவாதிகள்' என இந்திய-சிங்கள அரசுகள் போல் சொல்லி நீங்களும் முகத்தைத் திருப்பிக் கொண்டால் நீங்கள் உண்மையில் யார் பக்கம் ?

சிந்தியுங்கள் தோழர்களே. உங்கள் போக்கில் மாற்றம் வேண்டுமா ? அல்லது உங்கள் தலைமைகள் உங்களை வேண்டுமென்றே திசை திருப்புகிறார்களா ? ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை (Genocide) என்று இந்தக் கூட்டத்தில் பிரகாஷ் காரத் உட்பட எல்லா சி.பி.எம் தோழர்களும் கவனமாக ஒரு இடத்தில் கூட வார்த்தை உபயோகிக்காதது ஏன் ? (நீங்கள் அழைத்த விருந்தினர் சத்தியமூர்த்தி கூட இனப்படுகொலை தான் என்று உறுதியாக பலமுறை சொன்னபோதும்..)

2 comments:

  1. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, மாதவராஜ் போல பம்முற வாத்துங்க இதுக்கு என்ன சொல்றானுவ

    ReplyDelete
  2. தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.