Friday, March 1, 2013

பிஸ்கெட் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள் பிரபாகரனின் மகனை !

கடந்த ஆண்டு இங்கிலாந்திலிருந்து வெளியாகும் சேனல் 4 என்கிற தொலைக்காட்சி ஈழப் போராளிகளை சிங்கள ராணுவம்
கைகளைப் பின்னால் கட்டி, கண்களையும் கட்டி உட்காரவைத்து வரிசையாக சுட்டுக் கொன்ற காட்சியை வெளியிட்டது.
உடனே நாடெங்கிலுமிருந்து கிளம்பிய எதிர்ப்புக்கு இது பொய்யான வீடியோ என்று சிங்கள அரசு சொல்ல இந்திய அரசு வாய் பேசாமல் கள்ள

மௌனம் சாதித்தது. போன வருடமே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் பிரபாகரனின் மகனின் உடலைக் காட்டும் புகைப்படமும் வெளியானது. அதையும் மறுத்தது சிங்கள அரசு.

சேனல்-4  "போரில்லா பகுதி: ஸ்ரீலங்காவின் கொலைக்களங்கள்" என்கிற டாக்குமெண்டரியை தயாரித்து வெளியிட்டது. இரண்டு பாகங்களாக வந்த இந்த டாக்குமெண்டரியில் போர்க்களத்தில் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள், அப்ரூவர்களாகி உண்மையைச் சொல்லிய சிங்கள அதிகாரிகளின் வாக்குமூலங்கள், தப்பித்த தமிழர்களின் சாட்சிகள் என்று அனைத்தையும் திரட்டித் தந்தது சேனல்-4. சிங்கள அரசு இதையும் பொய்ப்பிரச்சாரம் என்று மறுத்தது.

இந்த வருடம் அதே சேனல்-4 தொலைக்காட்சி டாக்குமெண்டரியின் 3வது பாகத்தை வெளியிட்டது. அதில் பிரபாகரனுடைய இரண்டாவது மகனான 12 வயது பாலச்சந்திரனை சிங்கள அரசின் பங்க்கரில் வெறும் உடம்புடன் உட்காரவைத்து பிஸ்கெட் சாப்பிடக் கொடுத்த புகைப்படம் எடுக்கப்படுகிறது. அதற்குப் பின் விசாரிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு இரண்டு மணி நேரம் கழித்து சுட்டுக் கொல்லப்பட்டு அதுவும் புகைப்படமாக எடுக்கப்படுகிறது.

12 வயதான பாலச்சந்திரனை ஐ.நா.வின் அறிவுரைப்படி சரணடைய அவனது 5 மெய்க்காப்பாளர்களுடன் அனுப்பினார் பிரபாகரன்.  முந்தைய நாள் சண்டையில் பாலசந்திரன் வந்து கொண்டிருந்த பகுதி முழுதும் சிங்கள ராணுவத்தால் குண்டு வீசப்பட்டு சின்னா பின்னமாகி இருந்தது. பதுங்கு குழிக்குள் பாதுகாவலர்களுடன் பதுங்கி இருந்திருக்கிறான் பாலச்சந்திரன். தப்பிக்க வேறு வழியின்றி அங்கேயே வீரர்களிடம் சரணடைந்து விடலாம் என்று மெய்க்காப்பாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

ஆனால் சரணடைந்த நடேசனையும் அவருடன் வந்தவர்களையும் கொன்றது போலவே பாலச்சந்திரனையும், அவனுடன் சரணடைந்த 5 மெய்க்காப்பாளர்களையும் கண்களில் துணியைக் கட்டி உட்காரவைத்து அவன் கண்முன்னாலேயே சுட்டுக் கொன்ற சிங்கள வெறியர்கள் அதற்குப் பின் பாலச்சந்திரனையும் சுட்டுக்கொன்றுள்ளார்கள். அவர்கள் சரணடைந்தது சிங்கள ராணுவத்தின் கொடூரமான 53ஆம் படைப்பிரிவு. இப்படைப் பிரிவினர் மிகப் பெரும் புலித் தலைவர்களை குறிவைத்து இயங்குபவர்கள். தங்களிடம் பிடிபடுபவர்களை சித்திரவதை செய்து உண்மைகளை வரவழைத்துப் பின் கொன்று விட்டு, தடயம் இல்லாமல் செய்வதற்காக உடல்களை எரித்தும் விடுவார்கள். அப்படித்தான் பாலச்சந்திரன் முதல் பிரபாகரன் வரை யாருடைய உடல்களும் கிடைக்கவே இல்லை. பாலச்சந்திரன் சரணடைந்த விஷயத்தை கோத்தபய ராஜபக்ஷேவுக்குச் சொல்லியிருக்கிறார்கள். அவர் கருணாவைத் தொடர்பு கொண்டு அது பாலச்சந்திரன் தானா என்று உறுதிப் படுத்தும் படி கூறியிருக்கிறார். பாலச்சந்திரன் தான் சரணடைந்தது என்று கருணா பார்த்து உறுதி செய்த பின் இவனை என்ன செய்வது என்று யோசிக்கும் போது கருணாவே பாலச்சந்திரனை கொன்று விடும்படி கூறியதாகத் தெரிகிறது.

ஏனென்றால் இவன் சிறுவன் என்பதால் ஐ.நாவிடம் இவனை ஒப்படைக்கும் பட்சத்தில் மைனர் சிறுவன் என்பதால் தீவிரவாதி என்று கருத முடியாது என்று கூறி பின்னாளில் விடுதலை செய்துவிடுவார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளின் தலைவனாக அவன் வந்து நிற்பான் என்பதாலேயே அவனை இப்போதே கொன்று விடவேண்டும் என்று கருணா கூறியதாகவும் அதன் பின்னரே அவர்கள் ஆலோசித்து அவனைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ள இந்து நாளிதழ் அவற்றை ஒரு நிபுணரின் உதவிகொண்டு ஆராய்ந்து அவரின் கருத்தினையும் வெளியிட்டுள்ளது. அதன்படி பாலச்சந்திரனை நெஞ்சில் சுட்ட முதல் குண்டு சுமார் 2 அல்லது 3 அடி தூரத்திலிருந்து நெருக்கமாக சுடப்பட்டிருக்கிறது. அதில் மல்லாந்து விழுந்த சிறுவனின் மேல் மேலும் மூன்று குண்டுகளைப் பாய்ச்சியிருக்கிறார்கள். இந்த மூன்று குண்டுகளும் கொஞ்சம் சாய்வான கோணத்தில் உடலில் புகுந்துள்ளதை வைத்து இதை உறுதி செய்யலாம். தன்னை நோக்கி துப்பாக்கி குறிபார்க்கப்பட்டபோது தான் சாகப் போகிறோம் என்று கூட அவன் புரிந்து கொள்ளவில்லை.  தனது வாழ்நாள் முழுதும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களின் பாதுகாப்பிலும், அரவணைப்பிலும் வாழ்ந்த அந்த சிறுவன் ஒரு துப்பாக்கி நிஜமாகவே அவனை நோக்கி நீட்டப்பட்ட போது எந்த வித சலனமும் அடையாமல் போனது ஆச்சரியமில்லை.

இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட அதே சமயத்திலேயே சிங்கள ராணுவ வீரர்களால் பெருமையுடனும், திமிருடனும் எடுக்கப்பட்டுள்ள வீடியோவையும் இந்தப் புகைப்படங்களையும் ஒப்பிட்டு இப்படி நடந்திருப்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

இன்னும் ஸ்ரீலங்கா நாங்கள் எல்லோரையும் சமமாக நடத்தினோம், யாரையும் அநியாயமாகக் கொல்லவில்லை என்று சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது. இந்தியா பக்கத்தில் உட்கார்ந்து ஆமாஞ்சாமி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் ஸ்ரீலங்கா இந்தியாவுக்கு காலம் பூராவும் உட்கார்ந்தே இரு என்று உச்சந்தலையில் சேர்த்து வைக்கும் ஆப்பு. அன்று இந்த ஹிந்தி-இந்தியன்களுக்கு தமிழனை இந்தியனாய் மதிக்காததன் விளைவு புரியும். கூடவே சேர்ந்து இக்குற்றங்களை கண்டிக்காததுடன் அவற்றுக்குத் துணையும் போன ஐ.நா.வையும் உலக நாடுகள் அனைத்தும் சேர்த்து வைத்து துவைத்துப் பந்தாடும் நாள் தூரத்தில் இல்லை.

நாட்டாமை நாட்டாமைத் தனம் பண்ணாமல் நரித்தனம் பண்ணினால் அப்புறம் மக்கள் நரிகளுக்கும் சேர்த்து நாட்டாமை செய்யும் சூழல் வரும். ஐ.நா. கொஞ்சம் இப்பவே கொஞ்சமா மரியாதைய காப்பாத்திக்க நைனா. (நாட்டாமையின் கைத்தடி இந்தியாவுக்கும் இது சேர்த்துத் தான்).

No comments: