Wednesday, July 14, 2010

உத்தப்புரம் தரும் பாடம்.

உத்தப்புரத்தில் இடிக்கப்பட்ட சுவரின் பாதை வழியே நடமாட்டத்தை தடை செய்வதை கண்டித்தும், அரச மரத்தில் வழிபாடு நடத்த அனுமதி கோரியும், வேண்டுமென்றே குற்றம் சுமத்தப்ப்ட்டு சிறையில் அடைக்கப்பட்ட 16 தலித்துகளை விடுவிக்க கோரியும் மதுரையில் சுமார் 500-1000 பேர் கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர் சிபிஎம் தோழர்கள். டி.கே.ரங்கராஜன் எம்.பி, நன்மாறன் எம்.எல்.ஏ போன்ற தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தான் போலிஸ் தடியடி நடத்தி, தலைவர்களை தரதரவென்று இழுத்துச் சென்று தான் யார் என்று நிறுவியது.

இடதுசாரி நண்பர்கள் இந்நிகழ்வில் நிறைய விஷயங்களை கவனிக்கவேண்டும். முதலாவது, இடதுசாரிகள் தாக்கப்பட்டதற்கு எந்தக் கட்சியும் பெரிதாக கண்டனம் செய்யவில்லை. இரண்டாவது, எம்.எல்.ஏ. எம்.பி என்றும் பாராது இருவரும் அடித்து நொறுக்கப்பட்டிருப்பது. மூன்றாவது, அடித்ததை 'தள்ளு முள்ளு' என்று எளிய வார்த்தைகளில் மீடியாக்கள் முடித்துக் கொண்டது. வைகோ, த.பாண்டியன் போன்றோர் இன்று கண்டன அறிக்கைகள் விட்டுள்ளனர்.


உத்தப்புரம் விஷயத்தில் ஜனநாயக முறையில் சிபிஎம் தோழர்கள் வழக்கம்போல் இரண்டுமணி நேரம் ஆர்ப்பாட்டம் என்று, பிள்ளைப்பூச்சியாக உட்கார்ந்துவிட்டுப் போயிருந்தால் இந்தத் தாக்குதல் நடந்திருக்காது. ஆனால் பேச்சுவார்த்தைக்குப் பின் நீங்கள் முடிவெடுத்து முடியுங்கள் 'அதுவரை' நாங்கள் இங்கேயே உட்கார்ந்திருப்போம் என்று போராட்டத்தை தொடர்ந்ததை கண்டிக்கவே இந்தத் தாக்குதல். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் போலீஸ் மாலை 6 மணிக்கே விட்டுவிட்டதை வைத்துப் பார்த்தால் தோழர்களின் 'தொடர்ந்த போராட்டம்' என்ற எண்ணத்திற்கு லேசாக கலைஞர் வைத்த குட்டுதான் இந்தத் தடியடி என்று தோன்றுகிறது.


தாக்கப்படுவதற்கு சற்று முன், டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டியை டி.வி.யில் காட்டினார்கள். அதில் அவர் "உத்தப்புரத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கவேண்டும் என்று கலைஞர் உத்தரவிட்டதன் பின்னும் காவல்துறை உத்தபுரத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தி பலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.." என்று சொன்னார். அவர் பேசியதன் தொனி 'கலைஞர் சரியாகத்தான் நடந்துள்ளார் ஆனால் அவரது கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை தான் இவ்வாறு நடந்துகொள்கிறது' என்பது போன்று இருந்தது. கலைஞரை குற்றமே சொல்லாமல் காவல்துறையை மட்டும் குற்றம் சொல்லவேண்டிய அவசியம் என்ன ? கலைஞர் சொல்லாமலா அவர்களைப் போட்டு அடித்தார்கள் ? ஏன் கலைஞரை நயந்து பேசவேண்டும்? பின்னால் தேர்தல் கூட்டு சேரமாட்டார்கள் என்று பயமா ? டி.கே.ரங்கராஜன் அப்படிப் பேசியது தவறு.


இத்தாக்குதலிலிருந்து இடதுசாரித் தோழர்கள் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், கலகம் இன்றி நன்மை பிறக்காது. அஹிம்சை வழியில் உண்ணாவிரதம், போராட்டம் என்று 'யாருக்கும் வலிக்காமல்' போராடினாலோ, 'வலியுறுத்தினாலோ' ஆளும் வர்க்கங்கள் 'கண்டுக்காமல்' சரி சரி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு, மரியாதையா கலைஞ்சு போங்க என்று இருப்பார்கள். மீறி நீங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தீர்களாயின் அதன் விளைவு இதுதான். மீறும் போது தான் கலகம் உருவாகும். எனவே நீங்கள் அரசை எவ்வளவு மீறுகிறீர்களோ அவ்வளவு நல்லது.


மாறாக நீங்கள் அரசிடமும், கலைஞரிடமும் பம்முகிறீர்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடாமல் பம்மும் திருமா, கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களின் மத்தியில் சி.பிஎம் தலித் மக்களை தம்மிடம் ஈர்ப்பதற்காக இந்தப் போராட்டத்தை நடத்தினாலும் அதில் உண்மை இருப்பதால் நாம் அதை ஆதரிக்கவேண்டும். ஆனால் இதைப் போல மற்ற விஷயங்களிலும் இலங்கைப் பிரச்சனை உட்பட தீவிரமாகப் போராடாத வரை, அத்து மீறாதவரை, அது பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ இருக்கட்டும், சாதாரண கீழ்த்தட்டு, கீழ்நடுத்தர மக்களை சிபிஎம் மின் பால் ஈர்ப்பது கடினம்.


இதே போல் அங்கே ‘ஈழப் பிரச்சனை ஐநாவுக்கு அனுமதியில்லை’ என்ற விஷயம் பெரிதாகிய போது நம் தோழர்கள் கருத்து சொல்லவேயில்லை. செந்தமிழ் மாநாட்டின் “அரசியலைப்’ புரிந்துகொள்ளவே தெரியாதவர்கள் போல அங்கு நடந்த கருத்தரங்கில் காரத் பங்கேற்று கலைஞரை வாழ்த்துகிறார். இவையனைத்தும் சிபிஎம் மின் கூட்டணி அரசியல் எண்ணங்களின் அடிப்படையில் செய்யப்பட்டவையன்றி வேறு என்ன ? இது போலத்தான் பெட்ரோலிய விலை உயர்வுக்கு எதிரான போராட்டமும். ‘அமைதியாக’ பந்த் நடத்திவிட்டால் அது ஆளுங்கட்சிக்கு வெற்றி. ஏனென்றால் அமைதியான பந்த்தில் அரசு இயந்திரம் பாதிக்கப்படுவதில்லை. அதன் ‘இமேஜ்’ம் பாதிக்கப்படுவதில்லை. பந்த் நடத்தியதால் அரசு பணிந்திருந்தால் பந்த் வெற்றியடைந்தது என்று பொருள். ஆனால் அரசு பணியவில்லை. இந்நிலையில் இப்போது சிபிஎம்மின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?


இதற்கு சிபிஎம்மிடம் சரியான பதில் இல்லை. பந்த் போன்றதொரு மக்கள் இணைந்த போராட்டத்திற்கே அரசு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த தீவிரமான போராட்டம் என்ன ? போராட்ட வடிவம் என்ன ? அப்படியொரு வடிவம் சிபிஎம் வசம் இல்லாத போது மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற விஷயங்களை நடத்தினால் அரசு வழக்கம் போல் இதையும் கண்டுகொள்ளாது விட்டுவிடும். மக்களும் சிறு சிறு சலுகைகளில் மனத்திருப்தி அடைபவர்களாகிவிட்டதால் இந்தவிதப் போராட்டங்களின் மேல் சலிப்பு அடைவர். இந்தக் குறைகளை சிபிஎம் எப்போது களைந்து போராட்டங்களை பல கட்டங்களாக உறுதியாகவும், தொடர்ச்சியாகவும் கொண்டு செல்ல முற்படுமோ, நடத்தும் போராட்டத்தின் வடிவத்தின் மூலம் அரசை கோபப்படுத்த, நெருக்கடிக்கு உள்ளாக்க முடியுமோ, அன்று மக்களும் சிபிஎம்ன் பின் திரள்வார்கள். அன்று தீவிர, அதிதீவிர இடதுசாரிகளும், வலதுசாரிகளும் கூட ஆதரவளிக்கக் கூடும். இடதுசாரிகள் தீவிர கம்யூனிஸ்டுகள் போல் குண்டுகள் வைக்க வேண்டாம். ஆனால் அது போன்ற அதிர்ச்சியை, செயலிழந்த நிலையை அரசு அடையுமாறு செய்ய வேண்டும். ஒரு சிறு அதிர்ச்சி கூட ஏற்படுத்த இயலாத ‘போராட்டம்’ ஒரு கண்துடைப்பு நாடகமாகும்.

இக்கட்டுரை எழுதிய அடுத்த நாள் காலை செய்தி ஊடகங்களில் மற்றொரு செய்தி. அது சிதம்பரம் கோவிலில் 'நந்தன் பாதை' யை திறக்க வலியுறுத்தி சிபிஎம் தீண்டாமை ஒழிப்பு முண்ணணியின் சார்பாக அதன் தலைவர் பி.சம்பத்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நந்தன் பாதையை இடித்தே தீருவோம் என்ற முழக்கத்துடன் சென்ற தோழர்களை காவல் துறை கோயில் வாயிலில் தடுத்து நிறுத்தியது. மீற முயன்ற தோழர்கள் 'தள்ளு முள்ளு'க்கு ஆளாயினர். அதாவது அடித்து விரட்டப்பட்டனர். பின்னர் நடந்தது தான் கவனிக்கப்பட வேண்டியது. காவல்துறை சிபிஎம் தலைவர்களுடன் 'பேச்சுவார்த்தை' நடத்தியபின் தோழர்கள் வழக்கம் போல தெற்குவாயில் தெருவில் 'சாலை மறியல்' செய்து கைதாகி வழக்கம் போல் மாலையில் வீடு திரும்பினர். சாயங்காலமே கலைஞர் அறிக்கை விடுகிறார். "கோயிலை தீட்சிதர்களிடமிருந்து அரசு மீட்ட போது தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அரசை கோயிலை தொடர்ந்து பராமரிக்கும் பணியை மேற்கொள்ள அனுமதித்ததுடன், கோவிலில் வேறு எதுவும் புதிய கட்டுமானங்களோ அல்லது பழைய கட்டுமானங்களை இடித்தலோ செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது" என்று.


இதில் உண்மையில் நடந்தது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஒன்று சிபிஎம் தோழர்கள் தடையை மீறி நந்தன் சுவரை உடைத்து, அதற்கு போலிஸ் அவர்களை உதைத்து கைது செய்து, அதற்கு தீட்சிதர்கள் ஒருபக்கமும் மறுபக்கம் தோழர்களுக்காக தமிழ்நாடேயும் கொந்தளித்து எழுந்திருந்தால் அது ஒரு சரியான போராட்டம். இல்லை 'கோர்ட் தீர்ப்பை நாங்கள் சரியாக கவனிக்காமல் விட்டு விட்டோம் எனவே கலைஞர் சுட்டிக்காட்டிய கோர்ட்டின் தீர்ப்பை மதித்து நாங்கள் எங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம்' என்று சிபிஎம் போராட்டத்தை வாபஸ் வாங்கியிருந்தால் அது வேறு வகை. ஆனால் இரண்டும் இன்றி சுவரை உடைத்துவிட்டுதான் மறுவேலை என்று போனவர்கள் காவல்துறையின் ஆலோசனையின் பேரில் சுவரை விட்டுவிட்டு தெருவில் வந்து நின்று வழக்கம் போல் ஆர்ப்பாட்டம் செய்து, வழக்கம் போல் கைதாகி, டிவிக்கு போஸ் கொடுத்தபடி காவல்துறை வேனில் ஏறி, பின் வழக்கம் போல் மாலையில் விடுதலையானார்கள் என்றால் இதன் பொருள் என்ன ? முந்திய நாள் மதுரையில் 'அத்துமீறினால்' என்ன நடக்கும் என்று பாடம் கத்துக்கொண்டதன் விளைவா ? நாம் திருந்த முடியுமா ?

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.