இந்தியாவே கொரோனா பற்றி அவ்வளவு அலட்டிக் கொள்ளாமல் போக ஆரம்பித்த இந்த 2020 ன் கடைசி மாதமான டிசம்பரில் தான் கொரோனா என்னைத் தாக்கியது.
முதல் 2 நாட்களுக்கு அது சாதாரணக் காய்ச்சல் போலத் தான் தெரிந்தது. பகல் நேரங்களில் காய்ச்சல் அடிப்பது போலவே தெரியவில்லை. குளிர்காலம் என்பதால் இரவு நேரங்களில் காய்ச்சல் அடிப்பது நன்கு தெரிந்தது. மூன்றாம் நாள் முதல் மூச்சு விடுவதில் சிரமம் எற்பட ஆரம்பித்தது. அருகிலிருக்கும் க்ளினிக்கிற்கு சென்று மருத்துவரைப் பார்த்தேன். மருத்துவர் அலட்டிக் கொள்ளவேயில்லை. தொட்டுப் பார்க்கக் கூட இல்லை. அவருடைய நோக்கம் நேரடியாக அவருக்குத் தெரிந்த ஒரு லேப்பில் 'சீப்பாக' எனக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க வைப்பதாகவே இருந்தது. நான் அதை ஏற்கவில்லை. இரவு மட்டுமே காய்ச்சல் அடிப்பதாக நான் நினைத்துக் கொண்டிருந்ததால் கொரோனாவாக இருக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாக நம்பிவிட்டேன். மேலும் வாரம் ஒரு முறை கபசுரக் குடிநீர் வேறு குடித்து வந்ததால் தொற்று வராது என்று உறுதியாக இருந்தேன்.
கொரோனா நோய் நுரையீரலைத் தாக்கும் ஒரு வைரஸ் கிருமி. அது தொற்றிய 3-4 வது நாளில் அதன் அறிகுறிகள் தெரியும். காய்ச்சலின் தீவிரம் தெரிய பலருக்கு 10 நாட்களுக்கு மேல் வரை ஆகலாம். அதனால் தான் மருத்துவர்கள் 14 நாட்கள் என்று தனிமைப்படுத்தல் விதியை வைத்திருக்கிறார்கள். தொடர்ந்த காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், உடலுக்கு தேவையான ஆக்சிசன் கிடைக்காமல் போவதால் ஏற்படும் மயக்க நிலை, அசதி, சுவையுணர்வு தெரியாமல் போகுதல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். கொரோனாவுக்கு நான் நீ என்று போட்டி போட்டு தடுப்பு மருந்து கண்டு பிடித்த எந்த நாட்டுக் கம்பெனிகளும் , கொரோனா வந்தவரைக் குணப்படுத்த ஒரு மருந்தை ஏன் இதுவரை கண்டுபிடிக்க முயலவேயில்லை என்பது விடை தெரியாத ஒரு கேள்வி.
மலேரியா, டைபாய்டு, டி.பி போன்ற பாக்டீரியா கிருமிகளால் ஏற்படும் காய்ச்சல் மட்டுமே இரவு நேரங்களில் வரும். எனவே இவற்றில் ஏதோ ஒன்று தான் என்னைத் தாக்கியுள்ளது என்று நினைத்திருந்தேன். மூன்று நாட்களுக்குப் பிறகு நான் தொலைபேசியில் ஆலோசனை கேட்ட ஒரு ஹோமியோபதி மருத்துவரும் இதே கருத்தைச் சொன்னதும் என் மனம் அதை உறுதி செய்தது. நிமோனியா காய்ச்சல் கூட இது போன்ற கொரோனா அறிகுறிகள் கொண்டது தான். ஹோமியோபதி மருத்துவர் ஆர்சனிகம் ஆல்பிகம் நோய் எதிர்ப்பு சக்திக்கும் , காய்ச்சலுக்கும், மூச்சுத் திணறலுக்கும் ஆர்சனிக் அயோடா 200, ஸ்பான்ஜியா 200, ப்ரையோனியா 30 போன்ற மருந்துகளை வாங்கி சாப்பிடும்படி சொன்னார். உடல் நிலை சீராகவில்லை என்றால் கொரோனா பரிசோதனையும் செய்து பார்த்துவிடும்படி அறிவுறுத்தினார்.
ஹோமியோபதி மருந்துகளை வாங்கி இரண்டு நாள்கள் உட்கொண்டேன். காய்ச்சல் மட்டுப்பட்டது. மூச்சுத் திணறல் குறைந்தது. ஆனால் எனது உடல் நிலை மிகவும் பலவீனமானது. தலை சுற்றல், தலை வலி, வயிற்றுப் போக்கு, கடுமையான உடல் வலி, அசதி என்று மேலும் மோசமானது. வயிற்றுப் போக்கினால் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க நீர் அதிகம் உள்ள உணவுகளான கஞ்சி, சூப் வகைகள் மற்றும் ஓ.ஆர்.எஸ் சொல்யூஷன் எனப்படும் ஊட்டச்சத்து பானம் ஆகியவற்றை வாங்கிப் பருகி வரவேண்டும். வயிற்றுப் போக்கினால் ஏற்படும் நீரிழப்பை முறையாக கவனிக்கத் தவறினாலும் உடல் நிலை மிகவும் மோசமாக நேரிடும். என்னுடைய உடல் நிலை மோசமானதற்கு நீரிழப்பை ஈடு செய்ய முடியாததும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது.
ஹோமியோபதி மருத்துவர் வெளியூர் என்பதால் நேரில் சென்று பார்க்கவும் முடியாத நிலை. பின்னால் தெரிந்தது இதே மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டே பலர் கொரோனாவிலிருந்து குணமாகியுள்ளனர் என்று. ஆர்சனிக் ஆல்பிகம் மருந்தை கேரளா, நம் தமிழ்நாடு போனற மாநிலங்களில் நோய்த் தடுப்பு சக்தியை அதிகப்படுத்த அரசுகளே வீடு வீடாக இலவசமாக வழங்கினார்கள். ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடும் போது நிறைய உணவுகளை, இஞ்சி, மிளகு, பூண்டு, போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். அதுவும் எனக்கு சிரமமாக இருந்தது.

வேறு வழியின்றி, வேறொரு ஆங்கில மருத்துவரை சென்று பார்த்த போது பகலில் காய்ச்சல் இல்லை என்று நான் சொன்னதை வைத்து அவரும் மலேரியாவாக இருக்கலாம் என்று சொன்னார். மருந்துகள் எழுதி 3 நாட்கள் சாப்பிட்டுவிட்டு வரச் சொன்னார். இருந்தாலும் டெஸ்ட்டுகள் எழதிக் கொடுத்தார். டெஸ்ட்டுகளை செய்து விட்டு ரிப்போர்ட்டுடன் போனால் மலேரியா, டைபாய்டு, டி.பி அறிகுறிகள் இல்லை, நெகட்டிவ் என்று ரிப்போரட்டில் வந்துவிட்டது. ஆனாலும் காய்ச்சல் விடவில்லை. ரிப்போர்ட்டைப் பார்த்துவிட்டு உடனே மருத்துவர் சொன்னது கொரோனா பிசிஆர் டெஸ்ட் மற்றும் நெஞ்சு சி.டி. ஸ்கேன் எடுத்துவிடுங்கள் என்று. எனக்கு காய்ச்சல் வந்து 8-9 நாட்கள் கழித்து பிசிஆர் டெஸ்ட்டும், சி.டி. ஸ்கேனும் எடுத்துக் கொண்டேன்.
கொரோனாவை உறுதி செய்ய எடுக்கப்படும் பிசிஆர் டெஸ்ட் நெகட்டிவ்வாக வர நிறைய (30 சதவீதம் வரை) வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் பிசிஆர் டெஸ்ட் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டிய பரிசோதனை. சாம்பிள் எடுக்கும் போது செய்யும் சிறு தவறுகளில் ரிசல்ட் நெகட்டிவ்வாக காட்டும். எனவே குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் இரண்டு மூன்று முறை பிசிஆர் டெஸ்ட் எடுக்கச் சொல்வார்கள். சி.டி ஸ்கேன் மூலம் கொரோனாவை உறுதி செய்வது 89 சதவீதம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே மருத்துவர்கள் பிசிஆர் மற்றும் நெஞ்சக சி.டி.ஸ்கேன் என இரண்டையும் சேர்த்தே கொரோனா பாதிப்பை உறுதிப்படுத்துகிறார்கள். எனது பி.சி.ஆர் டெஸ்ட் நெகட்டிவ் என வந்து இருந்தாலும், சி.டி.ஸ்கேனைப் பார்த்து கொரோனாவை உறுதி செய்தார் மருத்துவர்.
கொரோனா எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை சி.டி. ஸ்கேனில் மருத்துவ ரீதியாக அளவிட 0-25 வரை ஒரு அளவுக் குறியீடு வைத்துள்ளனர். 0 - 8 வரை குறியீட்டு எண் இருந்தால் கொரோனாவா என்பது சந்தேகமே. 10- 14 வரை குறியீட்டு எண் இருந்தால் கொரோனா ஆரம்ப நிலை என்று அர்த்தம். 14 - 18 கொஞ்சம் நடுத்தரமான பாதிப்பு நிலை. 18 - 25ம் 25க்கு மேலும் தீவிரமான கொரோனா பாதிப்பு நிலை என்று அர்த்தம். தீவிர நிலையில் கண்டிப்பாக மருத்துவ மனையில் கண்காணிப்பு, ஆக்சிசன் சிலிண்டர்கள் தேவைப்படும். ஆரம்ப நிலை, நடுத்தர நிலைக்காரர்களைத் தான் அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் மொத்தமாக வைத்து கபசுரக் குடிநீர் கொடுத்து பத்து பதினைந்து நாள் வைத்திருந்து அனுப்பி விடுகிறார்கள்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்கள் 4 -5 நாட்களில் கொரோனாவிலிருந்து சரியாகி நார்மலாகி விடுகிறார்கள். 7 நாட்களுக்குப் பின் அவர்களிடமிருந்து கொரோனா மற்றவருக்குப் பரவும் வாய்ப்பே இல்லை. எனக்கு வந்த தொற்று என் மனைவிக்கும் பரவி, மூன்று நாட்கள் அவளுக்கும் காய்ச்சல் இருந்தது. ஆனால் நோயெதிப்பு சக்தி அதிகம் அவளுக்கு இருந்ததால் அதன் பின்னர் உடனேயே சரியாகி விட்டது. காய்ச்சலோடும், காய்ச்சல் அவளுக்கு சரியான பின்பும் 15 நாட்கள் எனக்கு உணவு முதல் அனைத்து பணிவிடைகளையும் செய்தாள் என்றால் பாருங்கள். இப்படித்தான் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் பலருக்கும் கொரோனா ஒரு சாதாரண காய்ச்சலாக வந்து மூன்றே நாட்களில் சரியாகி விடுகிறது. எங்களுக்கு வேறு யாரும் ,கூட உதவிக்கும் இல்லை. உறவினர்களை உதவிக்கு வரச் சொல்லி அவர்களுக்கும் நோயைப் பரப்பி விடவும் விருப்பமில்லை. அக்கம் பக்கம் பிறரிடம் சொல்லி பீதியை உண்டாக்காமல் நாங்களே எங்களை தனிமைப் படுத்திக் கொண்டு இருந்தோம்.
கொரோனா வந்தால் மிகவும் எச்சரிக்கையாயிருக்க வேண்டியவர்கள் யார் என்றால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு ஏற்கனவே உள்ளவர்கள், கிட்னி, இதயம், கல்லீரல் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் வேறு ஏதாவது நாள்ப்பட்ட தீவிர நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்கள். நோயெதிர்ப்பு குறைந்து போன வயதானவர்களும், கொரோனா ஒரு நிமோனியா காய்ச்சல் போல நுரையீரலைப் பாதிக்கிறது. அதனால் உடலுக்கு கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்து ஏற்கனவே பாதிப்பில் உள்ளவர்கள் மேலும் பல சிக்கல்களுக்கு உள்ளாகி மரணமடைய நேர்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO ) கணிப்புப்படி (Dec 2020), கொரோனா வந்தாலே ஆளைக் கொல்லும் ஒரு வியாதியல்ல. சார்ஸ், மெர்ஸ், எய்ட்ஸ், கேன்ஸர் போன்ற கொடிய நோய்கள் லிஸ்ட்டில் இதைச் சேர்க்கவில்லை WHO. கீழேயுள்ள இணைப்பில் கொரோனா பற்றி உலக சுகாதார நிறுவனம் கொடுத்துள்ள குறிப்புக்கள் ஆங்கிலத்தில் கீழே.
Among those who develop symptoms, most (about 80%) recover from the disease without needing hospital treatment. About 15% become seriously ill and require oxygen and 5% become critically ill and need intensive care.
Complications leading to death may include respiratory failure, acute respiratory distress syndrome (ARDS), sepsis and septic shock, thromboembolism, and/or multiorgan failure, including injury of the heart, liver or kidneys.
In rare situations, children can develop a severe inflammatory syndrome a few weeks after infection.
https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/question-and-answers-hub/q-a-detail/coronavirus-disease-covid-19
எனக்கு கொரோனாவை உறுதி செய்த அலோபதி மருத்துவர் மருந்து எதுவும் எழுதித் தரவில்லை. அரசு மருத்துவமனையில் சேர்வதற்கான கடிதம் ஒன்று தந்தார். நான் ஏற்கனவே அரசு மருத்துவமனை கொரோனா வார்டுகளின் மோசமான சூழல் பற்றி கேள்விப் பட்டிருந்ததாலும், எனக்கு ஆரம்ப நிலை தான் என்பதாலும் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்கிறேன் என்று விட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அக்கம் பக்கம் வீட்டுக்காரர்களுடன் பேசவில்லை. வெளியே எங்கும் செல்லவில்லை மருத்துவரைப் பார்க்கப் போவதைத் தவிர. முகக்கவசம் மூக்கை மூடி நன்றாக அணிந்து முடிந்த அளவு யாரையும் நெருங்காமல் பயணித்தேன். நெருங்கிய நண்பர்கள் தனியார் மருத்துவமனைகளில் சேரச் சொல்லி அறிவுறுத்தினர். தனியார் மருத்துவமனைகளில் குறைந்தது ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை கூசாமல் வசூலிக்கிறார்கள் என்பதை பல நண்பர்கள் விஷயங்களில் கடந்த 6 மாதங்களில் பார்த்திருந்ததால் அதையும் தவிர்த்தேன். இத்தனைக்கும் அலோபதியில் கொரோனாவை தீர்க்க மருந்து இல்லை. ரெமிடெஸ்வீர் போன்ற வேறு சில நுரையீரல் தொற்றுக்களுக்கான மருந்தை பல மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். அவை திட்டமான மருந்துகள் அல்ல.
அலோபதி மருத்துவர் மலேரியா இல்லை , கொரோனா பரிசோதனை செய்யுங்கள் என்று சொன்ன அன்றிலிருந்தே உஷாராகி நான் காலையும் மாலையும் கபசுரக் குடிநீர் குடிக்க ஆரம்பித்துவிட்டேன். அத்துடன் என் நண்பர் நுரையீரல் பாதிப்பைப் போக்க ஆவி பிடிக்கச் சொன்னதையும் தினமும் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டேன்.
ஆவி பிடிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது வூஹானில் முதன் முதலில் கொரோனா பரவிய போது சீன மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. ஆவி பிடிக்கும் போது டர்பன்டைன் ஆயில் வென்னீரில் சேர்ப்பதுடன், ஒரு ஸ்பூன் கெமிக்கல் கலக்கப்படாத தூய மஞ்சள் பொடியையும் சேர்த்துக் கொண்டேன். காய்ச்சல் தொடர்ந்து கட்டுப்பட ஆரம்பித்தது. மூச்சுத் திணறலும் குறைய ஆரம்பித்தது. மஞ்சள் வைரஸ் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது. நுரையீரலின் உள்ளே ஆவியாகச் செல்வதன் மூலம் நுரையீரல் காற்று அறைகளில் தங்கியிருக்கும் வைரஸையும் அது கொன்றுவிடும். எனவே பொதுமக்கள் கூடும் இடங்களுக்கோ, நோய்த் தொற்று எளிதில் பரவும் வாய்ப்புள்ள இடங்களுக்கோ போய் விட்டு வந்தால் முன்னெச்சரிக்கையாக இப்படி ஆவி பிடித்துக் கொள்வது நுரையீரல், தொண்டை, மூக்கு போன்ற கொரோனா தங்கிப் பரவும் இடங்களை தூய்மைப்படுத்தும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நீங்களும் வெளியே மக்கள் கூட்டமுள்ள இடங்களுக்குப் போய்விட்டு வந்தால் கடைபிடியுங்கள்.
அலோபதியில் தான் இன்னும் கொரோனாவிற்கு மருந்து இல்லை. வேறு நோய்களுக்குத் தரப்படும் சில பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கொடுத்து, வைட்டமின், சத்து மாத்திரைகள் சாப்பிட்டு, தேவைப்பட்டால் ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற முதலுதவிகளுடன், மருத்துவமனையில் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்தால் 10 நாட்களில் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நோயுடன் போராடி கொரோனா குணமாகி விடும். தனியார் மருத்துவமனைகளில் இதற்கான செலவும் ஒரு லட்சத்தில் ஆரம்பித்து 6 லட்சம் வரை ஆகிவிடக்கூடும். வேறு சில நாட்பட்ட, பலவருடங்களாக இருக்கும் சர்க்கரை வியாதி, இதயக் கோளாறு, கிட்னி கோளாரு நோய்கள் ஏதாவது உங்களுக்கு ஏற்கனவே இருந்திருந்தால் மருத்துவமனையை நாடவேண்டிய நிலை கண்டிப்பாக ஏற்படும். எனவே கவனம்.
மாற்று மருத்துவத்தில் நிறைய மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு வெற்றிகரமாக நோயைக் குணப்படுத்தவும் செய்திருக்கின்றன. எனவே, ஆங்கில மருத்துவ முறையில் நோயைக் கண்டறிந்த பின், மேற்சொன்ன கைவைத்திய சித்த மருந்துகளுடன் நின்றுவிடாமல் சித்த மருத்துவரை(யும்) அனுகினேன். நகரின் பிரபலமான சித்த மருத்துவர்களில் ஒருவரான அவர் எனது அனைத்து டெஸ்ட் ரிப்போர்ட்டுகளையும் படித்துவிட்டு, நான்கைந்து நாட்களாக கபசுரக் குடிநீர் சாப்பிட்டு ஆவி பிடிப்பதையும், காய்ச்சல் குறைந்திருப்பதையும் சொன்னதும், கொரோனா காய்ச்சல் கிட்டத்தட்ட இப்போது சரியாகி விட்டிருக்கும் என்று சொன்னார். கொரோனா காய்ச்சல் நின்று விட்டாலும் பலருக்கும் அதன் பின்விளைவுகள் இரண்டு மாதங்களுக்குள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி் நான் கேட்டதும், அவர் கொரோனாவிற்கான சில சித்த மருந்துகளைப் பரிந்துரைத்து, 15 நாட்கள் தொடர்ந்து சாப்பிடும்படி அறிவுறுத்தினார். இந்த சித்த மருந்துகளை இதுவரை ஒரு ஆயிரம் பேருக்காவது பரிந்துரை செய்திருப்பதாகவும், மிக நன்றாக நோயைக் குணப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். என் மனைவிக்கு நிலவேம்பு + கபசுரக் குடிநீரும், பிரம்மானந்த பைரவ மாத்திரையும் மட்டும் தொடர்ந்து பதினைந்து நாள் சாப்பிடும்படி அறிவுறுத்தினார்.

சித்த மருத்துவர் பரிந்துரைத்த ஆயுர்வேத மருந்துகள் இவை. பிரம்மானந்த பைரவ மாத்திரை. காலை 2. மாலை 2. மாத்திரைகளைப் பொடி செய்து, அமுக்கரா சூரணம் ஒரு ஸ்பூன், தேவையான அளவு தேன் கலந்து குழப்பி சாப்பிட வேண்டும். அடுத்தாக வசந்தக் குசுமாரக சூரண மாத்திரை. காலை 2. மாலை 2. வெற்றிலையில் மாத்திரைகளை வைத்து, உடன் 2 மிளகு, 2 கிராம்பு சேர்த்து வெற்றிலையை சவைத்து உண்டு விட வேண்டும். இந்த இரண்டு மாத்திரைகளும் உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும். இது போக நிலவேம்புக் குடிநீர் பொடி 2 ஸ்பூன், கபசுரக் குடிநீர் பொடி 1 ஸ்பூன் கலந்து வெந்நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி கஷாயத்தை வடிகட்டி குடிக்க வேண்டும். தினமும் காலையும் மாலையும். இவை தான் நோய்க்கான மருந்துகள். இந்த மருந்துகள் தவிர நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்ற தூதுவளை லேகியமும், நுரையீரல் புண்ணாகி இருப்பதால் அதைப் பலப்படுத்த ஆடாதோடை மணப்பாகும் தினமும் இருவேளை சாப்பிட்டு வரச் சொன்னார்.
கொரோனாவில் பெரும்பாலோர் கவனிக்கத் தவறிய ஒரு விஷயம் அது பாதிப்பவருக்கு மனோரீதியான பாதிப்புக்களையும் ஏற்படுத்தும் என்பது. இது எதனால் என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஒரு வேளை சுற்றுப்புறத்தில் அனைவரும் ஒதுக்கி வைப்பார்கள் என்பதாலோ, தீட்டுபோல கருதி இழிவாக பார்ப்பார்களோ அல்லது மிரண்டு போய் தனக்கும் தொற்றிவிடும் என்ற பயத்தில் நம்மை ஏதாவது கடுமையாக நடத்திவிடுவார்களோ என்கிற எண்ணத்திலோ அல்லது உலகம் முழுவதும் பலரை கொன்ற ஆட்கொல்லி நம்மையும் கொன்று விடுமோ என்கிற அச்சத்திலோ இருக்கலாம். அல்லது நோயின் பாதிப்பால் உடல் பலமிழக்கும் போது ஏற்படும் மனப்பாதிப்பாக இருக்கலாம்.
அப்படி மனம் குழம்பிய ஒரு மனோநிலையை கொரோனா பாதித்த முதல் பத்து நாட்களில் என்னால் உணரமுடிந்தது. மரணம் பற்றிய சிந்தனை தொடர்ந்து உண்டாகியது. சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் மனம் சஞ்சலமடைந்தது. கொரோனா நோயாளிகளுக்கு ஆதரவாக, இதமாக ஒருவரேனும் கூடவே உடன் இருப்பது அவசியமானது என்றே தோன்றுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா கடையின் உரிமையாளர் கொரோனா பாதிக்கப்பட்டு கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார். அப்போது அவரது சொந்தங்கள் யாருமே அவரைப் பார்க்க வராததால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்திகள் வந்தது. அப்போது கொரோனா பற்றி மக்களிடையே பரவியிருந்த பீதியான சூழலையும் சேர்த்து வைத்துப் பார்த்தால் அவருடைய கடுமையான மன நெருக்கடியை நாம் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். எனவே, கொரோனா பாதிப்படைபவர்கள் இத்தகைய மன உளைச்சல்களைப் பற்றியும் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.
தொடர்ந்த சித்த மருந்துகளாலும், ஆவிபிடித்தல், கபசுரக் குடிநீர் போன்றவற்றாலும் மெது மெதுவாக நோயிலிருந்தும் , நுரையீரல் பலமிழந்து நெஞ்சில் பாரம்போல இருந்த நிலையும், மூச்சை இழுத்து நெஞ்சில் தேக்கி வைப்பது சிரமமாக இருந்த நிலையும் சரியாகி, சளி இருமல் இல்லாமல் போய் உடல் தேறி வர ஆரம்பித்துவிட்டது. கொரோனா பாதித்த காலத்தில் புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளான சிக்கன், நிலக்கடலை, கொண்டக் கடலை சாப்பிட்டு உடல் பலம் பெற முடிந்தது.
கொரோனாவின் உருமாறிய வகைத் தொற்று தற்போது மீண்டும் வேகமாகப் பரவி வரும் சூழலில் எனது இந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வது பலருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் பயன்படும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் மருத்துவ சேவை குறிப்பிட்ட நேரத்தில் கிடைப்பது சிரமமாகி வரும் சூழலில் நாமும் நோயை எதிர்த்த இந்தப் போராட்டத்தில் நம்மை ஓரளவிற்கு தெளிவு படுத்தி வைத்துக் கொள்வோம்.
கொரோனாவை வெல்வோம்.
https://www.cochrane.org/CD013639/INFECTN_how-accurate-chest-imaging-diagnosing-covid-19
https://www.ziotamil.in/hot-water-steam-for-corona-virus-remedies/
https://timesofindia.indiatimes.com/life-style/health-fitness/home-remedies/homeopathy-for-coronavirus-treatment-does-it-work/photostory/76176772.cms?picid=76176808