Sunday, November 17, 2019

தேசிய பாதுகாப்பும், இராணுவ மேலாண்மையும் , இன ஒடுக்குமுறையும்.

17/11/2019
தேசிய பாதுகாப்பும், இராணுவ மேலாண்மையும் ,  இன ஒடுக்குமுறையும்.

மு . திருநாவுக்கரசு.


தேசிய பாதுகாப்பு என்பதன் மறுபக்கம் இராணுவ மேலாண்மை.    இலங்கையில் தேசிய பாதுகாப்பு ,  இராணுவ மேலான்மை என்பதன் உள்ளடக்கம் இன ஒடுக்குமுறை.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின்  பேசுபொருள் தேசிய பாதுகாப்பு என்பதே தவிர இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது அல்ல.   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும் இனப்பிரச்சினைக்கான தீர்வு  பற்றியதல்ல   ஒருவகை சப்பைக்கட்டு அரசியல்தான்.

இவ்வாண்டு இலங்கையில் நடந்தேறிய தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் என்பது செயற்கையாக நடந்தேறிய ஒரு விவகாரமாகும்.    இராணுவ மேலாண்மையை உருவாக்குவதற்கும் இன ஒடுக்குமுறையை மேற்கொள்வதற்குமேற்ற  ஒரு  கருவியாக இந்த குண்டுவெடிப்புச் சம்பவம்   அரங்கேற்றப்பட்டது.  இக்குண்டு வெடிப்பின் உடலாய்   சஹ்ரான் குழு  காணப்பட்ட  போதிலும் இதன் மூளைமாய் பௌத்த இனவாத அரசியல் தலைவர்களும் இராணுவ  சக்திகளும்  செயற்பட்டனவென்று  தெரிகிறது.

இலங்கை ஒரு தீவு.  இலங்கையில் முஸ்லிம்கள் ஒருபோதும் ஓர் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. ஈழத் தமிழர்களின்   ஆயுதப் போராட்டத்திற்கு   தமிழகத்தின் பின்புலம் ஓர் அடிப்படை  பலமாய் அமைந்தது.  தமிழகம்    புகலிடமாய் இருக்கவல்ல பின்னணியைக் கொண்டு இருந்தது. ஒரு சிறு கடலை தாண்டி தமிழகத்தில் ஆயுதப் போராளிகள்  புகலிடம் கொள்வது இலகுவாக இருந்தது.  இத்தகைய பின்னணி முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு கிடையாது. அவர்கள் பெருங்கடலைத் தாண்டி செல்ல வேண்டும்.  அது  அவர்களுக்கு சாத்தியமான   விடயமல்ல.
 

உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட  வெடி  பொருட்களெல்லாம்     சாஹ்ரான் குழுவிற்கு எங்கிருந்து கிடைத்ததன  என்ற கேள்விக்கான விடை முக்கியமானது.   இவை   இலங்கை இராணுவத்தின்   வாயிலாக    பெறப்பட்டவை என்ற   யூகம் பலமாக உண்டு . 

இலங்கைபில்   உள்ள முஸ்லிம்   தீவிரவாதிகளைப் பொறுத்தவரையில்  அவர்களுக்கு உதவக்கூடிய  அண்டை நாடுகள் தொலைவிலுள்ளன. அதாவது பாகிஸ்தான்,  பங்களாதேஷ்   ஆகிய முஸ்லிம் நாடுகள்  தொலைவில்  காணப்படுகின்றன.  இந்தியாவில் கேரளாவில் முஸ்லிம் குடியிருப்புக்கள் கடலோரத்தை  அண்டி  இருந்தாலும்  மொழிரீதியாக   இலங்கை முஸ்லிம்கள் இலகுவில்  பிரித்து அடையாளம் காணப்பட கூடியவர்களாவர். ஆதலால்   இலங்கை முஸ்லிம்கள்  கேரளாவை பின்புலமாகக் கொள்வதற்கான  வாய்ப்பும் மிகவும் அரிதானது.

இப்பின்னணியில்  இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பது என்பது  மிகவும் கடினமானது.   எனவே இலங்கையில் இராணுவ மேலாதிக்கத்தை மேம்படுத்துவதற்காகவும் இன ஒடுக்குமுறையை முன்னெடுப்பதற்காக வும்   சாஹ்ரான் குழுவிற்கு பின்னால் சிங்கள பௌத்த தீவிரவாத அரசியல் சக்திகளும் இராணுவ சக்திகளும் ஒளிந்து உள்ளனர்  என்ற சந்தேகம் கவனத்துக்குரியது.

முள்ளிவாய்க்காலும் அதற்கு முற்பட்டதுமான  யுத்த காலத்தில்  தமிழருக்கு எதிராக சாஹ்ரான்  குழுப்  போன்ற முஸ்லிம் தீவிரவாத குழுக்களை  சிங்கள ஆட்சியாளர்களும் இராணுவமும் பயன்படுத்தியது போல  தமக்கு பழக்கப்பட்டுப்போன அதே  முஸ்லிம் தீவிரவாதிகளை  பயன்படுத்தி  இலங்கையில்  முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அரசியலை முன்னெடுப்பதற்கான களமாகவும் உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்புகள்  வடிவமைக்கப்பட்டனவெனத்  தெரிகிறது.  அத்துடன் கூடவே   இதே  முஸ்லிம் தீவிரவாதிகளைப் பயன்படுத்தி  இந்தியாவிலும் குண்டுவெடிப்புகளை மேற்கொள்வதற்கான சதியையும் இத்துடன் பின்னிப்பிணைத்து  வடிவமைத்துள்ளனரெனத்  தெரிகிறது. சாஹ்ரான் குழுவிற்கு சென்னையிலுள்ள மண்ணடி  மற்றும் கோவை  , கேரளா போன்ற இடங்களில் உள்ள தீவிரவாத தொடர்புகள் இதனை நிரூபிக்கின்றன.

2001 செப்டம்பரில் அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீது பின்லேடன் நடத்திய விமானத் தாக்குதலை  உடனடுத்து  அம்மாதமே   ஐநா பாதுகாப்பு சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட  ""சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு  சட்டமே "" இன்று உலகளாவிய அனைத்து சட்டங்களிற்கும் தாயாக விளங்குகிறது.  பின்லேடனின் தாக்குதல்   முழு  உலகளாவிய அளவில்  ஒவ்வொரு நாட்டையும் உள்நாட்டு ரீதியாகவும்  சர்வதேச ரீதியாகவும்  "" தேசியப் பாதுகாப்பு ""என்ற கொள்கைக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் நிலையை உருவாக்கியது .  அது உலகளாவிய ரீதியில் நிகழ்ந்துவந்த அனைத்து  ஆயுத போராட்டங்களுக்கும் தடைபோடும் சட்டமாகவும் அமைந்தது.  அது  உலகளாவிய  அனைத்து மனிதர்களையும்  இராணுவ - பொலீஸ் - புலனாய்வு அழுங்குப் பிடிகளுக்குள்  இறுக்கிப் பிடிக்க வைத்தது.

இதனைப் புரிந்துகொண்டால்  உயிர்த்த ஞாயிறு கதாநாயகனாகிய   சாஹ்ரான்  இலங்கைக்கான ஒரு   பின்லேடனாய்  காட்சியளிக்கிறார்.    இதன் பின்னணியில்   மக்களின் பூரண ஆதரவுடன்   இராணுவத்தை   பலப்படுத்தவும்   இன ஒடுக்குமுறையை  முன்னெடுக்கவும்  தேவையான வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இலங்கையில் சிங்கள பௌத்த இராணுவமானது  வெளிநாடுகளுடன்  யுத்தம் புரிவதற்காக வடிவமைக்கப்பட்டதல்ல.   அது தமிழ் இனத்திற்கு எதிராக வடிவமைக்கப்பட்ட     பௌத்த சிங்கள  இனவாத இராணுவ கட்டமைப்பாகும். ஆதலால் அவர்கள் களத்தில் செயற்படும்போது    இயல்பாகவே தமிழின எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் இன எதிர்ப்புத்தன்மையுடன்   செயல்படுவர்.

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த  போர்க்குற்றங்களுக்கான  சர்வதேச விசாரணைகளை  முன்னெடுக்க வேண்டுமென்று தமிழ் மக்களும் மனித உரிமை அமைப்புக்களும்   குரல் கொடுத்துவரும் நிலையில்  ,   இதில்  ஒரு முக்கிய போர் குற்றவாளியாக  தளபதி சவேந்திர சில்வாவை   மனித உரிமை அமைப்புக்களும் , தமிழ் மக்களும்  பெயர் குறித்து  கைகாட்டி பேசும் போது  அவரை இலங்கையின் இராணுவத் தலைமைத் தளபதியாக அரசு நியமித்திருக்கிறதானது   சிங்கள   பௌத்த பேரினவாதம் எதிர் புரட்சிகர வளர்ச்சி அடைந்திருப்பதற்கு  மேலும் ஒரு சிறந்த  உதாரணமாகும்.

  ஓய்வுபெற்ற முன்னாள் படை அதிகாரியும் ,   முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில்  பெயர்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டு வருபவருமான கோத்தபாய  ராஜபக்ச  பிரதான ஜனாதிபதி வேட்பாளராக  காணப்படுவதும் ,  மேலும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ்  சேனநாயக்க  ஒரு ஜனாதிபதி வேட்பாளராக காணப்படுவதும்  ,  முன்னாள்  படைத் துறையினர்  வெளிநாட்டு தூதர்களாக நியமிக்கப்படுவதும்   இலங்கை அரசியலில் இராணுவம் மேலாண்மை பெற்று வருவதை துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.  மேலும்  கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகுமிடத்து  முன்னாள் இராணுவ தலைமை தளபதி கமல் குணரட்ன பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்ற செய்தி  ஒன்று வெளியாகியுள்ளமையும் கவனிக்கத்தக்கது.


கடத்திச் செல்லப்பட்ட தமிழர்கள் 300 பேரை முதலைகளுக்கு   கோத்தபாய   ராஜபக்ச  இரையாக்கினார்  என்ற தகவலை  அதில் நேரடியாக ஈடுபட்ட  வாகன சாரதி ஒருவர்  சிரேஷ்ட அமைச்சர் ஒருவர்  முன்னிலையில்  அண்மையில் நிகழ்ந்த பத்திரிக்கையாளர் மாநாட்டில் பகிரங்கமாக தெரிவித்தார். இது இருபத்தோராம் நூற்றாண்டில்  நடந்துள்ள,   மனிதகுல நாகரிகம் தலைகுனியதக்க   ஓர் அரசியல் விவகாரமாக   தமிழருக்கு எதிராக  இலங்கையில்  அரங்கேறியுள்ளதைக்  காட்டுகிறது.

   இவ்வாறு   இதற்கு கட்டளையிட்டு தலைமை தாங்கிய ஒருவரே   ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன  சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார் .  இப்பின்னணியில்  பௌத்த சிங்கள   இனவாதம் மேலும் மேலும்  எதிர் புரட்சிகர வளர்ச்சியை அடைந்து செல்லப் போகிறது.


ஏற்கனவே முள்ளிவாய்க்கால்  யுத்தத்தோடு  இலங்கையில் எதிர்ப்புரட்சி புரட்சிகர வளர்ச்சி அடைந்துவிட்ட   நிலையில்  அது மேலும் புதிய பரிமாணங்களை எடுத்துவருவதைக் காணலாம்.

காலம் சென்ற பௌத்த பிக்கு ஒருவரின்   உடலத்தை அண்மையில் பௌத்த மகா சங்கத்தினர் செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில்   தகனம் செய்ய முற்பட்டபோது ,  அதற்கெதிராக  முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  ஆனால் அந்தத் தீர்ப்பை முற்றிலும் புறந்தள்ளி  பொலிஸாரின் அனுசரணையுடன்  இந்துமத விதிமுறைகளுக்கு  மாறாக   பௌத்த மகா சங்கத்தினர் இந்து ஆலய வளாகத்தில்  அந்த உடலை தகனம் செய்தனர்.   இது அரசியல் அமைபைப்பையும் ,  சட்டம்-ஒழுங்கு விவகாரங்களையும் முற்றிலும்     மீறுகின்ற ஒரு விடயமாகும்.  இதனை அனைத்து சிங்கள கட்சிகளும்,   இரு  பிரதான   சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களும்,  சிங்கள ஊடகங்களும்  நாடாளுமன்றத்திற்கு   உள்ளேயும் வெளியேயும் ஆதரித்தன.  சிங்கள மக்கள் மத்தியில்  காணப்படும்   மகாவம்ச மனப்பாங்கின் பின்னணியில்  இது   பரந்த சிங்கள மக்கள்  மத்தியில்  ஏற்றுக் கொள்ளப்பட்ட  நீதியாகவும் தர்மமாகவும் காட்சியளிக்கின்றது . பௌத்த சிங்களப் பேரினவாதம் எதிர்ப்புரட்சிகர வளர்ச்சி அடைந்திருந்திருக்கின்றமைக்கு  இது ஒரு தெளிவான இலகுவான சான்றாகும் .

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச   வெற்றி  ஈட்டுவதற்கான அதிக வாய்ப்புகள்   உள்ளன என்று  ""ராய்ட்டர் "" செய்தி  நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு  கூறுகிறது.       களநிலைமைகளை பார்க்குமிடத்து கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு போல் தெரிகிறது.

  அவ்வாறு கோத்தபாய  வெற்றி பெறுமிடத்து  17 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மகிந்த  ராஜபக்ச பக்கம் நோக்கி கட்சி மாறினால்  நாடாளுமன்றத்தைக் கலைக்காமலே மகிந்ந  ராஜபக்ச பிரதமராக முடியும். ஜனாதிபதியும் பிரதமரும் நாடாளுமன்றமும்  ஒரே கட்சியைச்  சேர்ந்தவர்களாக    அமையுமிடத்து  அரசியலமைப்பு சர்வாதிகாரம் ஒன்றை இலகுவாகவே அரங்கேற்ற முடியும்.  ஜனாதிபதி நாற்காலியில் ஒரு கட்சியும் நாடாளுமன்ற அதிகாரத்தில் இன்னொரு கட்சியும் மேலாண்மை பெற்றிருக்கும் போதுதான் 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு பயன்பாடு உண்டு.  அவ்வாறு அல்லாதவிடத்து  இரண்டிலும் ஒரு ஒரே கட்சியே ஆதிக்கம் செலுத்தும் போது  அரசியல் யாப்பு சர்வாதிகாரம் இலகுவாக செயற்பட முடியும்.
சிங்கள பௌத்த பேரினவாதம் எதிர் புரட்சிகர வளர்ச்சி அடங்கியிருக்கும் பின்னணியில் திட்டவட்டமாக இலங்கை  ஓர் அரசியல் யாப்பு சர்வாதிகாரத்திற்கு தயாராகி விட்டதென்றே கூறலாம்.  யார் ஜனாதிபதியாக வந்தாலென்ன நாடாளுமன்றமும் ஜனாதிபதியும்  ஒரே கட்சியைச் சேர்ந்தவராக அமையும் போது அரசியல் யாப்பு சர்வாதிகாரத்திற்கேற்ற  வகையிலான  முன்நிபந்தனைகள்   இனப்பிரச்சினையின் பெயரால்  இலங்கையில்   ஸ்தாபிதம் அடைந்துவிட்டன.

  திட்டவட்டமாக இலங்கையின் எதிர்காலம் அரசியல் யாப்புச் சர்வாதிகாரத்துக்கு உரியதாகவே  அமையும்.  அதாவது  தமிழருக்கு  எதிரான  எந்த அநியாயத்தையும்   அரசியல் யாப்பின் பெயராலேயே  நிறைவேற்ற முடியும் என்பதே இதன் பொருளாகும் .  இந்த அரசியல் யாப்பு சர்வாதிகாரம் தமிழரின் முதுகில்  குதிரை ஓடுவதன் மூலமே அதற்கான களத்தை அமைத்துக் கொள்ளும் . ""நாய்க்கு எங்கு அடித்தாலும் அது காலைத் தூக்குவது "" போல  இலங்கை அரசியலில் ஏற்படக்கூடிய அரசியல் - பொருளாதார- சமூகரீதியிலான வீக்கதூக்கங்கள் எதுவாக இருந்தாலும்  அது தமிழரின் மீது திசை திருப்பப்பட்டு முன்னெடுக்கப்படும்.

கடந்த ஆண்டின் இறுதியிலும் இவ்வாண்டின் முற்பகுதியிலுமாக இரண்டு மாதங்கள் இடம்பெற்ற   இரு பெரும் சிங்கள  கட்சிகளுக்கு இடையேயான ஆட்சிமாற்றப்  பிரச்சனையின் போது  இறுதியில் இருபெரும் சிங்களக் கட்சிகளும் தப்பித்துக் கொண்டனவாயினும் அதில் தலையிட்டு பிரச்சனையை தீர்த்து வைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி    பறிபோனதைக் காணலாம் . அதாவது தமிழரான சம்பந்தரின் தலை அதில் உருண்டது. இதில்  '"ஆப்பிழுத்த குரங்கின் நிலைகக்கு"" தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் சம்பந்தனும் ஆளாகினர்  என்பது ஒரு வினோதமான காட்சியாய் அமைந்தது.

ஆதலால் மொத்தத்தில்   தற்போது காணப்படும் அரசியல் அமைப்பின் பிரகாரம்  ஜனாதிபதி பதவியிலும் ,பிரதமர் பதவியிலும் , நாடாளுமன்றத்திலும் ஒரே கட்சியே   கோலோச்சும் போது அது தமிழின அழிப்பை முதன்மையானதாகவும்,  களமாகவும்  கொண்ட வகையிலான  அரசியல் யாப்பு சர்வாதிகாரம்  மேலோங்கும்

""இரண்டு  யானைகள் புணர்ந்தாலும் புல்லுக்குத்தான்  சேதம்;  அவை  இரண்டும்  சண்டையிட்டாலும் புல்லுக்குத்தான்  சேதம்.""  என்பதற்கிணங்க  இரு பெரும் சிங்களக் கட்சிகளும்  கூடிக்குலவினாலும் அவை  தமிழின அழிப்பைத்தான்   அரங்கேற்றும்;  அவை  இரண்டுக்குமிடையே  சண்டை ஏற்பட்டாலும்  அவை    தமிழின அழிப்பைத்தான்  அரங்கேற்றும்.

Wednesday, November 6, 2019

டிராகனின் தலையில் தாமரை மொட்டு - மு .திருநாவுக்கரசு.

6/11/2019
(சிங்கள) டிராகனின் தலையில் தாமரை மொட்டு
--- மு .திருநாவுக்கரசு


""  இறைமை,  சிங்கள நாடு""  இதுவே தாமரை மொட்டின் கொள்கையும், கோட்பாடும் தேர்தல் கோசமுமாகும்.


இலங்கையின்  தேர்தல்    அரங்கில் தூணேறிய சிங்கம் -  டிராகன் - கழுகு   என்பன களமாடுகின்றன. 


நெருப்பை சுவாசிக்கும் டிராகன் இலங்கையின் அரசியல் தடாகத்திலுள்ள தாமரை மொட்டைச்  சூட  விரும்புகிறது.


அதனைத் தடுத்து நிறுத்த தூணேறிய சிங்கமும், கழுகும் அன்னத்தின் பின்னால் நிலை எடுக்கின்றன. இது ஒன்றும் பஞ்சதந்திரக் கதையல்ல; இலங்கை அரசியலின்  உண்மையான நிலை இதுதான்.


கார்த்திகைப் பூவை வாளேந்திய சிங்கம் வெட்டி வீழ்த்திய பின்பு அந்த சிங்கத்தின்   எஜமான்கள்  தற்போது  தாமரை மொட்டைக்  கையிலெடுத்து நெருப்பை சுவாசிக்கும்  டிராகனின் தலையிற்  சூடி   இலங்கை அரசியல் அரங்கில் சாகசம் புரிய முயற்சிக்கின்றார்கள்.


கார்த்திகைப் பூவை  வாளேந்தி  வெட்டி  வீழ்த்தியவர்கள்  இப்போது தாமரைப்  பூவேந்தி   அரசியற்  சாகசம் புரியப்  புறப்பட்டுள்ளார்கள்.


தாமரை  மொட்டை அன்னப்பறவையால் கொத்தி விழுங்க முடியுமென தமிழரசுக் கட்சி நம்புகிறது.


 அதேவேளை தாமரைப் மொட்டைப் புடைசூழ்ந்து பௌத்த  மகா சங்கமும், இராணுவமும் , நெருப்பை சுவாசிக்கும்  டிராகனும்    பலமாக நிலையெடுத்துள்ளன  என்பதும் கவனத்துக்குரியது.


தற்போதய   தேர்தல்  இடாப்பின்படி   ஒரு கோடியே 60 லட்சம் வாக்காளர்கள்  பதிவாகியுள்ளனர்.


 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்   81% இற்கு மேல் வாக்களிக்கப்பட்டதனால் அதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் சுமாராக 82 % வாக்காளர்கள் வாக்களிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  இத்தேர்தலில் சுமாராக  ஒரு கோடியே 31  லட்சம் வாக்காளர்கள்  வாக்களிக்கக் கூடும் என கணிக்கலாம்.


 அப்படியாயின் 65 இலட்சத்திற்கும்   66 லட்சத்துக்கும் இடைப்பட்ட  வாக்குகளைப் பெறக்கூடிய ஒரு வேட்பாளர்  ஜனாதிபதியாகத் தெரிவாக முடியும்.


2018 ஆம் ஆண்டு நாடு தழுவிய ரீதியில் நிகழ்ந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு   40.47 % வாக்குகள்  கிடைத்தன.


 அதேவேளை தற்போது தாமரை மொட்டுடன் தோழமை பூண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அப்போது 12.10%  வாக்குகள்  கிடைத்தன.


இதன்படி  தற்போது  52.57% வாக்குகளைப் பெறலாம்  என்பதற்கான முதலாவது ஏதுநிலை  உண்டு.


அதேவேளை இறுதியாக கடந்த அக்டோபர் மாதம் 10 திகதி நிகழ்ந்த  எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலின்  போது மொட்டு சின்னத்தின் கீழான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 57 %  வாக்குகள் கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 12%  வாக்குகள் கிடைத்துள்ளன.


இதன்படி தனிச்சிங்கள   வாக்குகளில்  மொத்தம் 69% வீதமான வாக்குகளை மேற்படி இரு கட்சிகளாலும் இணைந்து   பெறமுடிந்துள்ளது.


 இதனை நாடுதழுவிய மொத்த வாக்குகளினோடு பொருத்திப் பார்க்கையில்  இது 52 % வீதத்திற்கு மேலான வாக்குகளை   காட்டுகிறது.


இலங்கையின் மொத்த சனத்தொகையில் சிங்கள மக்கள் சுமாராக 75%  ஆவார். எனவே அளிக்கப்படக்கூடிய மொத்த வாக்குகளில் 98 லட்சத்துக்கு மேல் சிங்கள மக்களின் வாக்குகள்   மட்டும்  அமைய முடியும்.


 இதன்படி சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் 52%   வாக்குகளை மேற்படி கணக்கின்படி  தாமரை  மொட்டால் நிலைநாட்ட முடிந்தால்  அவர்களால் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மட்டும் 68 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற முடியும்.


இதன்படி ஜனாதிபதியாகுவதற்கு தேவையான மொத்த வாக்குகளின் தொகையில்  சுமாராக இரண்டரை  லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர்களால் பெறமுடியும்  என்பதும் ஒரு கணிப்பு.


அளிக்கப்படக்கூடிய ஈழத் தமிழர்களின் மொத்த வாக்குகள் சுமாராக 14 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல்.


அவ்வாறே அளிக்கப்படக்கூடிய முஸ்லீம் மக்களின் மொத்த வாக்குகள்  சுமாராக 12 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் .


அதேபோல் அளிக்கப்படக்கூடிய மலையக மக்களின் மொத்த வாக்குகள் சுமாராக 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல்.


இங்கு முஸ்லிம்களின் மொத்த வாக்குகளில் 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் தென்  இலங்கையிலும்  சுமார் 6 லட்சம் வரை  கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும்  உள்ளன.


தென் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிங்கள மக்கள் தொகையுடன் கலந்து பின்னிப்பிணைந்தும், அவர்களில் தங்கியும் வாழ்பவர்கள்.


அவர்களின் வர்த்தகமும், வியாபாரமும் பெரிதும் சிங்கள மக்கள் தொகையின் மீதே தங்கியுள்ளது.  இவ்வாண்டு நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தாக்குதல்களின்  பின்னணியில் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் வெடித்திருந்தன.


 இந்நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முஸ்லிம் மக்களின்  வாக்குகள் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக அளிக்கப்பட்டது போல் இம்முறை அமைவது கடினம்.


தமது சொந்த பாதுகாப்பை கருதி இருபெரும்  கட்சிகளில் ஒன்றை மட்டும் சாராது இரு கட்சிகளுக்கும் சரிக்கு சரி வாக்களிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் முஸ்லீம் மக்களுக்கு உண்டு.


எனவே தென்பகுதியில் வாழும் முஸ்லிம்களிடமிருந்து  சுமாராக  மூன்று லட்சம் வாக்குகளாவது கோட்டாபயவுக்கு கிடைக்க வாய்ப்புண்டு.


கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு உண்டு. ஆதலால் கிழக்கில் நிலை வேறு.  எப்படியோ கிழக்கிலும்  முஸ்லிம்கள் மத்தியில் இருந்து ராஜபக்சக்களுக்கு ஒரு குறைந்தபட்ச  வாக்குகளாவது நிச்சயம் கிடைக்கும்.


குத்துமதிப்பாக கூறுமிடத்து முஸ்லிம் மக்களின் 12 லட்சத்து  50 ஆயிரம் வாக்குகளில் இருந்து மூன்றில் ஒரு பங்கு வாக்குகளாவது  ராஜபக்சக்களுக்கு கிடைக்க முடியும் என்று கணித்தால் நான்கு லட்சம் வரையிலான வாக்குகளை ராஜபக்சக்கள் பெறமுடியும்.


தென்னிலங்கை தவிர்ந்த வடக்கு கிழக்கிலுள்ள ஈழத்தமிழர்களின் வாக்குகளில் ஒரு இலட்சத்திற்கும்,  ஒன்றரை லட்சத்திற்கும் இடையிலான வாக்குகளை ராஜபக்சக்கள் பெறக்கூடிய  ஏதுநிலை  உண்டு.


அதேவேளை மலையக  மக்கள் மத்தியில் இருந்தது  சுமாராக  1  லட்சம் வாக்குகளையாவது ராஜபக்சக்களால் பெறமுடியும் என்று கூறப்படுகிறது.


இவை அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது  சுமாராக 74 லட்சத்திற்கும்  குறையாதளவு  வாக்குகளை (56.5%) ராஜபக்சக்களால் பெறமுடியும் என்ற அபாயகரமான புள்ளிவிவரம் கண்முன் தோன்றுகிறது.


பொதுவாக ஜே.வி.பி கட்சியானது  சிங்களமக்கள் மத்தியிலுள்ள ""கரவா""  சாதிச்  சமூகத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற கணிப்புண்டு.


 நாட்டின் மொத்த சனத்தொகையில் சிங்கள ""கரவா ""சமூகத்தின் மக்கள் தொகை   10%.   இதற்கிணங்க அளிக்கப் படக்கூடிய  ""கரவா"" சமூகத்தின்   மொத்த வாக்குகள்

13 இலட்சத்திற்கு மேல்.


 ஆனால் இதில் கத்தோலிக்க"" கரவா""சமூகத்தினரின் தொகை 5 லட்சம் வரை என்று கூறப்படுவதால் அவர்கள் அனேகமாக   ஐதேகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற கணிப்பு உண்டு.


இதன்படி மிச்சமுள்ள    பௌத்த சிங்கள  கரவா சமூகத்தின் எட்டு லட்சம் வாக்குகளில்  பெருமளவு  வாக்குகள் ஜேவிபியை சென்றடையும்  என்று கருதப்படுகிறது.


அத்துடன் கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில்  ஜேவிபி   சுமாராக 7 லட்சத்து 11 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தது .


அதன்படி சிங்கள மக்கள் மத்தியில் உள்ள புதுமை விரும்பும் இளைஞர்கள் மத்தியில் சாதி கடந்து வாக்களிக்க கூடிய ஒரு லட்சத்துக்கு குறையாத இளைஞர்களின் வாக்குகள் ஜேவிபிக்கு  கிடைக்க வாய்ப்புண்டு   என்பதும் இங்கு  கவனத்துக்குரியது.


 எது எப்படியோ சுமாராக  ஏழரை லட்சத்திற்கு   குறையாத வாக்குகளைப்  பெறக்கூடியதற்கான  அடிப்படை வாக்கு வங்கி  ஜேவிபிக்கு  உண்டு.


இங்கு ஜேவிபியுடைய  இரண்டாவது விருப்பத் தேர்வு  வாக்குகள் அளிக்கப்படுமா இல்லையா என்ற வாதம் ஒருபுறமிருக்க., மக்கள் விரும்பினால் இரண்டாவது வாக்கை தாம்  விரும்பும் வேட்பாளருக்கு அளிக்கலாம் என்று  ஜேவிபி கூறுவதாக இன்னொரு செய்தியும்   வெளியாகியுள்ள நிலையில் இந்த இரண்டாவது வாக்கு  யாருக்கு  அளிக்கப்படும் என்பதிலேயே   இதன் தாக்கம் பற்றிய அளவு தங்கியுள்ளது.


அத்துடன் ராஜபக்சக்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள  சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால்  சுதந்திரக் கட்சியிலிருந்து எவ்வளவு வாக்கை பிரித்து  சஜித் பிரேமதாசவின்  வாக்குப் பெட்டிக்குள் சேர்க்க முடியும் என்பதும்   கணித்திடக்  கடினமான இன்னொரு பிரச்சினையாகும்.


மேலும் சஜித் பிரேமதாஸவிற்கு  தமிழரசுக்  கட்சி வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளதை  ஆதாரமாகக் கொண்டு    தெற்கில்  தீவிர பௌத்த சிங்களப் பேரலையை  ராஜபக்சக்கள்  தட்டியெழுப்பத் தொடங்கியுள்ளனர் .


 இப்பின்னணியில்   சஜித் பிரேமதாசாவுக் கான தமிழரசு கட்சியின் ஆதரவு "வரமா,சாபமா" என்ற கேள்வி பெரிதாக உண்டு.


 எது எப்படியோ ஒட்டுமொத்த  பௌத்த சிங்கள  மகாவம்ச   மனோநிலையின் பின்னணியில்   பௌத்த  மகா சங்கம்,  இராணுவம்,  டிராகன்   என்பனவற்றால்  புடைசூழப்பட்ட   சூழலில்  தாமரை மொட்டுக்கு  அண்மைக்காலங்களில் கிடைத்திருக்கக்கூடிய தேர்தல் புள்ளிவிபரங்களும் இணைந்து  தாமரை மொட்டை தூக்கலாக வைத்துள்ளன என்பது மட்டும் தெரிகிறது.

Wednesday, May 1, 2019

தமிழரின் முதுகில் தொடரும் சிலுவைப் போர்

24-4-19
மு.திருநாவுக்கரசு
தமிழரின் முதுகில் தொடரும் சிலுவைப் போர்

மட்டக்களப்பிலும், கொழும்பு, நீர்கொழும்பு பகுதிகளிலும் 8 வெவ்வேறு
இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், உல்லாச விடுதிகள் மீதும்
நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் போது உயிர்த்த ஞாயிறு தினம் இரத்தம் தோய்ந்த துயர்மிகு ஞாயிறாய் மாறியது. இத்தாக்குதல் மனிதாபிமானமற்ற, மிலேச்சத்தனமான தாக்குதல் என்று பலரது கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
250 பேருக்கு மேல் இதுவரை குண்டுவெடிப்புகளுக்கு பலியாகியுள்ளனர்.

இந்த இரத்தம் தோய்ந்த துயர் அளிக்கவல்ல குண்டுத் தாக்குதலை
இலங்கையில்  காணப்படும் உள்நாட்டு அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்
அமைப்பு மேற்கொண்டிருப்பதாகவும் தற்போது இதற்கு சர்வதேச அமைப்பான
ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு உரிமை கோரியும் செய்திகள்
வெளியாகியுள்ளன.
அதேவேளை இக்குண்டுத் தாக்குதல்கள் நடைபெற இருந்ததைப்பற்றி
இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி (NIA) முன்கூட்டியே தகவல்களை
அறிந்து அதனை இந்திய அரசு இராஜதந்திர வழிமுறைக்கு ஊடாக இலங்கை
அரசிற்கு அனுப்பி வைத்ததாகவும் அந்த எச ;சரிக்கை இலங்கை அரசு
கண்டுகொள்ளாமல் இருந்தன ; விளைவாக இத்தாக்குதல் நடைபெற முடிந்தது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதில் சர்வதேச அமைப்பான ஐஎஸ் மற்றும் உள்நாட்டு அமைப்பான தேசிய
தவ்ஹீத் ஜமாத் அமைப்பும் மட்டுமின்றி இலங்கை அரசின் பொறுப்பற்ற
பாராமுகமான செயலும் இத்தாக்குதலில் சம்பந்தப்படும் 3 அம்சங்களாக
உள்ளன.
லண்டனில் உள்ள எனது மாணவர் ஒருவர் தொலைபேசி வாயிலாக
இப்பிரச்சினை பற்றி என்னுடன் உரையாடுகையில் பின்வருமாறு கூறினார். இக்
குண்டுத் தாக்குதல் தொடர்பாக தமிழரின் நோக்குநிலையில் நின்று எதிர்கால
கண்ணோட்டத்துடன் இப்பிரச்சினையைப் பார்க்க வேண்டியது அவசியம்.

 இது தொடர்பாக தமிழர் நோக்கில் ஒரு சரியான "View" வும் அத்துடன்
எதிர்காலத்திற்கான 'Vision' உம் அவசியம் என்று கூறினார். அவர் அரசற்ற,
பாதுகாப்பற்ற தமிழர்களின் கதியற்ற நிலையை உணர்ந்து அவர்களின் நோக்கு
நிலையில் இருந்து மேற்படி இரண்டு ஆங்கிலப் பதங்களுக்கு ஊடாகவும் தமிழர் பற்றிய தலைவிதியை நிர்ணயிக்கவல்ல முன்னறிவை உருவாக்க வேண்டுமென்று சிந்திப்பது சரியானது.

ஈழத் தமிழர்கள் பற்றிய படைப்பிலக்கியப் பணியில் ஈடுபட்டிருக்கும்
எழுத்தாளர் அகரமுதல்வன் தனது முகநூலில் பின்வருமாறு ஒரு பதிவை
செய்துள்ளார். அதாவது இரட்டைக் கோபுரங்கள் மீதான விமானத் தாக்குதல்கள் உலக அரசியல் ஒழுங்கை பெரிதும் மாற்றி அமைத்தது போல உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்களும் இலங்கை அரசியலில் பெரிய மாற்றங்களை உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுவும் சரியானதே.
இத்தாக்குதல்களைச் செய்தவர்களை விடவும் இத்தாக்குதல்களுக்கான பின்னணி என்ன? இதற்குப் பின்னால் இருக்கும் மறைகரங்கள் யாவை?
இத்தாக்குதல்களுக்கான உள்நோக்கம் என்ன? இத்தாக்குதல்களால் நன்மை
அடையப் போவது யார்? இவற்றால் அதிகம் பாதிக்கப்படப் போவது யார்? என்ற
கேள்விகள் அனைத்தும் பிரதானமானவை. இச்சிறிய கட்டுரையில் இவற்றிற்கு விரிவான அல்லது முழுமையான பதிலைக் காணமுடியாது. ஆனாலும் இத்தாக்குதலால் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகப் போகின்றவர்கள் ஈழத் தமிழர்கள்தான் என்பது தெளிவு. இதனால் நேரடியாக நன்மை அடையப் போவது சிங்களபௌத்த ஆதிக்கமும், அவர்களது இராணுவமுந்தான். அதேவேளை இவற்றிற்குப் பின்னால் நலன் அடையப் போகின்ற பெரும்போக்கான வெளிநாட்டுச் சக்திகள் உள்ளன.

முதலில் இந்த குண்டுத் தாக்குதல்களை சிலுவைப் போர்களின் தொடர்ச்சியாக வரலாற்றில் இணைத்துப் பார்ப்போம்.

கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே
1095ஆம் ஆண்டு சிலுவை யுத்தம் ஆரம்பமானது. இது சிலுவைக்கும்,
பிறைக்கும் இடையேயான யுத்தமாக வடிவம் பெற்றது. இதனை நவீன அரசியல் நிலையில் வெள்ளைக்கும்-பச்சைக்கும் இடையேயான போராகக் குறிப்பிடலாம்.
"வெள்ளை" என்பது கிறிஸ்தவத்தைத் தாங்கி நிற்கும் மேற்குலகம், "பச்சை‟
என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் பாரசீகம், அரபு நாடுகள் உட்பட்ட
மேற்காசியாவும் அதன் ஏனயை விளிம்பு நாடுகளுமாகும்.

மத அடிப்படையில் இந்த சிலுவைப் போர்கள் 11ஆம் நூற்றாண்டின் இறுதியில்
ஆரம்பித்தாலும் புவிசார் அரசியல் அடிப்படையில் கிமு 5ஆம் நூற்றாண்டில்
பாரசீகத்திற்கும் கிரேக்கத்திற்கும் இடையேயான யுத்தத்தின் மூலம்
ஆரம்பமாகியது. ஆயினும் இதன் வேர் „ட்ராய் யுத்தம்‟ வரை மேலும் பல
நூற்றாண்டுகள் பின்நோக்கிச் செல்கிறது.
துருக்கிய ட்ராய் அரச இளவரசனான பாரீஸ் என்பரால் கிரேக்கத்தில் இருந்து
கடத்திவரப்பட்ட கிரேக்க ஸ்பார்ட்டா அரசி ஹெலனை மீட்பதற்காக
கிரேக்கர்களுக்கும், துருக்கியர்களுக்கும் இடையில் கிமு 12ஆம்
நூற்றாண்டளவில் நடந்த யுத்தமே இதற்கான முதல் வேராக அமைந்தது.
புவியியல் ரீதியில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் நடுவே அமைந்திருந்த
அராபிய – பாரசீகப் பிரதேசம் மத்திய கிழக்கு என மேற்குலகத்தவர்களால்
அழைக்கப்படலாயிற்று. மத்திய கிழக்கு எனப்படும் இந்த மேற்காசியப் பகுதி
அரசியல் ஆதிக்கப் படர்ச்சிக்கு ஒரு மையப் புள்ளியாக உள்ளது. ஆதலால்
இந்தப் புள்ளியை மையமாகக் கொண்டு புவிசார் அரசியல் அடிப்படையில்
யுத்தம் நிகழ்வது இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று.
ஆதிக்கம் மதமாக வடிவம் பெற்றது. மதம் ஆக்கிரமிப்பின் சின்னமானது.
மதவடிவிலான இந்த யுத்தங்கள் ஆதிக்க சக்திகளுக்கு சுகபோக நலன்களைப்
பரிசாக்கின. மக்களுக்கு துயர்தோய்ந்த இரத்தத்தைப் பரிசாக்கின. இரு பெரும்
மதங்களுக்கு இடையேயான யுத்தம், ஒரு மதத்தின் உட்பிரிவுகளுக்கு
இடையேயான யுத்தம் என இந்த இரத்தம் தோய்ந்த யுத்தங்கள் நீண்டு
செல்கின்றன.
வெள்ளைக்கும் - பச்சைக்கும் இடையே உலகளாவிய யுத்தம் 21ஆம்
நூற்றாண்டிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வெள்ளைக்கும் - பச்சைக்கும்
இடையேயான பெருவெட்டான யுத்தம் ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்கும்
போது பச்சைக்குள் உட்பிரிவுகளுக்கு இடையேயான யுத்தங்களும்
காணப்படுகின்றன. பச்சைக்குள் இடம்பெறும் இந்த உட்பிரிவுகளுக்கு
இடையேயான யுத்தத்தை வெள்ளை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி
பச்சைக்கும் - பச்சைக்கும் இடையேயான யுத்தத்தை வளர்ப்பதன் மூலம்
வெள்ளைக்கும் - பச்சைக்கும் இடையேயான ஒரு பெரும் பகுதி யுத்தத்தை
வெள்ளை தனது இரத்தத்தைச் சிந்தாது வெற்றிகரமாக நிறைவேற்றிவிடுகிறது.

இந்த வகையில் ஐஎஸ் என்பது வெள்ளைக்குச் சாதகமாக பச்சைக்குள்
பச்சையாக யுத்தத்தை முன்னெடுக்கும் ஒரு சக்தியாக வரலாற்றில் பாத்திரம்
வகிக்கின்றது.

அதிதீவிரவாதிகள் சாத்தானின் நண்பர்கள். இவர்கள் இலட்சியத்தின் பேரால்
எத்தகைய தீய செயல்களுக்கும் தயாராக இருக்கிறார்கள். இவர்களை யாரும்
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இலகுவாகக் கையாளலாம்.
ஏவிவிட்டால் பேயைப் போல் கூரையைப் பிடுங்கக்கூடியவர்கள். மந்திரிக்கப்பட்ட வார்த்தைகளை இலட்சியமாக உச்சரிக்கும் இத்தகைய அதிதீவிரவாதிகளை இலகுவில் கொம்பு சீவி தாய்ப்பசுவின் மீதுகூட பாயவைக்க முடியும். தாம் செய்வதை நன்மை என்று நினைத்துக் கொண்டு செய்யும் அவர்களது செயல்கள் இறுதியில் ஒட்டுமொத்த தீமையில்; போய் முடிவடையும். இறுதி கணக்கெடுப்பில் இவர்கள் எதிரிக்கு சேவை செய்தவர்களாக காட்சியளிப்பார்கள். ஒளியை நோக்கிப் பாய்வதாக நினைத்து நெருப்பை நோக்கிப் பாய்ந்து சாம்பல்
மேடாகும் விட்டில் பூச்சிகள் போல இலட்சியத்தின் பேரால் பாயும் இவர்களின்
செயல்கள் தியாகங்களாக அன்றி சாம்பல் மேடுகளாகிவிடுகின்றன. இந்த
துயர்தோய்ந்த வரலாற்று உண்மையை கருத்தில் எடுத்து இத்தகைய குண்டுத்
தாக்குதல்களின் தலைவிதியை ஆராய வேண்டும்.

ஐஎஸ் எனப்படும் இஸ்லாமிய அரசிடம் மேற்குலக கிறிஸ்தவ எதிர்ப்பு
முதன்மையானது. அந்த மூலோபாயத்தின் கீழ் நின்று அதனுடன்
தொடர்புறக்கூடிய சக்திகள் மீது தாக்குதல் நிகழ்த்தக் கிடைக்கும் அனைத்து
வாய்ப்புக்களையும் அவர்கள் புனிதப் போராகக் கருதி பயன்படுத்துவார்கள்.
இந்நிலையில் அவர்களிடம் யாராவது ஒரு வாய்ப்பை இலக்காக ஏவிவிடும்
போது இலக்குத் தவறாது விட்டில் பூச்சியாய் பாய்வார்கள். அதுதான் ஐஎஸ்-இன் கோணத்தில் இருந்து உயிர்த்த ஞாயிறு இரத்த ஆற்றை புரிந்து
கொள்வதற்கான வழி.

அதேவேளை இலங்கை உள்நாட்டு நிலையில் காணப்படும் சக்திகள் தத்தமக்கு கிடைக்கவல்ல வாய்ப்புக்களைப் பயன்படுத்த தயங்கமாட்டாது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நிகழ்ந்த சில மணி நேரத்தில் அதுபற்றி
கருத்து தெரிவித்திருந்த பாதுகாப்பு துணை அமைச்சர் ரூபன் விஜெவர்த்தன
பின்வருமாறு கூறினார்.

2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம்; முடிந்த பின் கலைக்கப்பட்ட ஓர்
இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் இத்தாக்குதலை நடத்தியதாக அவர் கூறினார். "விடுதலைப் புலிகளுக்கு‟ எதிராக அரசால் பயன்படுத்தப்பட்ட துணைப்படையான இஸ்லாமிய அமைப்புக்களைச் சுட்டும் வகையிலேயே அதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் இத்தாக்குதலில் ஈடுபட்டதாக 2009ஆம் ஆண்டின் பின் உருவான தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தைக் குறிப்பிட்டார். கலைக்கப்பட்ட இயக்கத்தவர்கள் தாக்குதல்களில் ஈடுபட்டதாகக்
குறிப்பிட்டுவிட்டு அதன் பின் உருவான மேற்குறிப்பிட்ட அமைப்பு இத்தாக்குதல்களை நடத்தியது என்று அவர்
விபரிப்பதன் மூலம் 2009ஆம் ஆண்டு அரசால் கலைக்கப்பட்ட அமைப்பில்
இருந்து மேற்குறிப்பிடப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு தோன்றியது
என்பது புலப்படுகிறது. அப்படியென்றால் இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஏற்கனவே இராணுவத்துடனோ அல்லது இராணுவப் புலனாய்வுடனோ தொடர்புடையவர்கள் என்பதில் சந்தேகமில்லை.

எனவே இவர்களுடைய ஆளுமையையும் இவர்களுக்கு
இருக்கக்கூடிய வல்லமைகளையும், சர்வதேசத் தொடர்புகளையும்
ஆட்சியாளர்கள் அறிவார்கள். இவர்களைச் சம்பந்தப்படுத்தியும் இவர்களது
பெயர்கள் மற்றும் விபரங்கள் குறித்தும் தாக்குதல்களுக்கான இலக்குக்கள்
குறித்தும், தாக்குதல்கள் நடக்க இருப்பதான உளவுத்துறைத் தகவல்களை
இந்திய அரசு முன்னெச்சரிக்கையாக இலங்கை அரசிற்கு உத்தியோகபூர்வமாக முன்கூட்டியே அறிவித்த போது அதனை போலியானது என்று இலங்கை அரசு உதாசீனம் செய்திருக்க முடியாது. ஏனெனில் தாக்குதல் நடத்தப் போவதாக குறிப்பிடப்பட்டவர்களின் ஆளுமைகளை இலங்கை அரசிற்குத் தெரியும். அப்படி இருந்தும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு முன்னேற்பாடான நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டதற்குப் பின்னால் பெரும் சந்தேகங்கள் எழுவது நியாயமானது.

முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் பற்றி தனக்கோ அல்லது தனது
அமைச்சர்களுக்கோ ஜனாதிபதி அறிவிக்கவில்லை என்று பிரதமர் ரணில்
விக்ரமசிங்க திரும்பத் திரும்பக் கூறும் குற்றச்சாட்டும் கவனத்திற்குரியது.
அரசிற்கும் புலிகளுக்கும் இடையேயான யுத்த காலத்தில் யுத்தத்தை
எதிர்கொள்வதற்கு சிங்கள-பௌத்த ஆட்சியாளர்கள் ஒருபுறம் முஸ்லிம்
அரசியல் சக்திகளையும், சிங்கள கிறிஸ்தவர்களையும் பெரிதும் அணைத்துக்
கொண்டனர்.

சிங்கள-பௌத்தர்களின் உடனடிப் பாரம்பரிய எதிரியாக கிறிஸ்தவர்களை
அவர்கள் கருதினர். முதலாவது மதக்கலவரம் 1883ஆம் ஆண்டு உயிர்த்த
ஞாயிறு தினத்தன்று சிங்கள பௌத்தர்களுக்கும் - சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையே கொட்டாஞ்சேனையில் வெடித்தது.

புலிகளுடனான யுத்தத்தில் சிங்கள கிறிஸ்தவர்களை பெரிதும் அணைக்க வேண்டி ஏற்பட்ட நிலையில் கடற்படை - இராணுவம், நிர்வாக அமைப்புக்கள் என்பனவற்றிலும், சமூக மட்டத்திலும் சிங்கள கத்தோலிக்க கரவா சமூகத்தினர் பெரிதும் முன்னணிக்கு வந்தனர்.

யுத்தத்தின் பின் இவர்களை பின்தள்ள வேண்டிய அவசியம் பௌத்த
மேலாதிக்கத்திற்கு இப்போது உண்டு. இலங்கை வரலாற்றில் இரண்டாவதாக வெடித்த மதக் கலவரம் 1915ஆம் ஆண்டு பௌத்தர்களுக்கும் - முஸ்லிம்களுக்கும் இடையேயான 'கம்பளை' கலகமாகும்.

யுத்த காலத்தில் புலிகளுக்கு எதிராக முஸ்லிம்களைப் பயன்படுத்திய
நிலையில் முஸ்லிம்கள் அடைந்திருக்கும் மேல்நிலையை மட்டுப்படுத்த
வேண்டும் என்ற சிந்தனை பௌத்தர்கள் மத்தியில் தலையெடுத்தது. கடந்த
ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்கள் மேற்கொண்ட கலவரங்களை
இந்தவகையிற்தான் புரிந்துகொள்ளலாம்.

தாக்குதல் பற்றிய எச்சரிக்கைத் தகவல்கள் அனைத்தும் பௌத்தர்கள் அல்லாத தமிழ்க் கிறிஸ்தவர்களையும், சிங்களக் கிறிஸ்தவர்களையும ; நோக்கியிருப்பதை அரசு தெளிவாக அறிந்திருந்தது. இந்நிலையில் இஸ்லாமிய – கிறிஸ்தவ மோதல், தமிழ் - முஸ்லிம் மோதல் என்பவற்றிற்கு தூபமிட வல்லவையாய் மேற்படிக் குண்டுத் தாக்குதல்கள் அமைய முடியும் என்ற வகையில் இத்தாக்குதலை தடுக்க அரசதரப்பு முனையவில்லை எனத் தெரிகிறது.

“இரண்டு புலிகள் சண்டையிடும் போது மலை உச்சியில் இருந்து அவற்றைப்
பார்த்துக்கொண்டிரு” [When two tigers are fighting, sit on a hill and watch them]
என்ற இக்கூற்றிற்கு இணங்க தனது எதிரிகளான இஸ்லாமியர்களுக்கும் -
கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான சண்டையை அரசாங்கம் கையாண்டு
இருக்கிறது. இது மேலும் தமிழ் - முஸ்லிம் உறவை சீரழிக்கும் என்பதாலும்
அரசாங்கம் மேலும் இதனை விரும்பி இருக்கிறது.

இலங்கை இராணுவமும், பொலீசும், புலனாய்வுத்துறையும் சர்வதேச உதவியுடன் புலிகளுக்கு எதிரானது என்று கூறப்பட்ட யுத்த காலத்தில் பெரிதும் பலமடைந்திருக்கும் பின்னணியில் இத்தகைய பலம்வாய்ந்த இவர்களை மீறி எப்படி இவ்வாறான குண்டுத் தாக்குதல் நடக்க முடிந்தது?
இத்தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் யார்? இதில் நன்மை
அடைபவர்கள் யார்? என்பன தெளிவாகப் புலப்படுகிறது.
“This 'who benefits' question has even led some to speculate that Gotabhaya himself may have had a hand in Sunday's bombings” என்று "Morning Star" ஈ-பத்திரிகையில்(e-magazine) பத்திரிகையாளர்  Phil Miller எழுதியிருப்பது கவனத்திற்குரியது.
அதாவது இந்த குண்டு வெடிப்புக்களுக்குப் பின்னால் கோத்தபாயாவின் கை
இருக்க முடியும் என்று ஊகிக்க இடமுண்டு என்றும் இராணுவத்திலும்,
புலனாய்விலும் அவருக்கு விசுவாசமானவர்கள் உண்டு என்றும் அவர் தொடர்ந்து கூறியுள்ளார்.

இத்தாக்குதலால் சிங்கள-பௌத்த மேலாதிக்கமும், இராணுவமும், அவை சார்ந்த அரசியல்வாதிகளும் மேலோங்கும் நிலைதான் பலாபலனாகத் தெரிகிறது.
அதேவேளை இதுவரை பெரிதும் ஒடுக்கப்பட்டு வந்த தமிழர்கள் எத்தகைய
அரசியல் தீர்வுகளுமின்றி மீண்டும்  இராணுவ கெடுபிடிக்கும் , ஒடுக்குமுறைக்கும் உட்படப் போகும் பரிதாபம் கண்முன் விரிகிறது. இலங்கைத் தீவில் சிங்கள இனவாத ஒடுக்கு முறையில் தமிழர்களுடன் இப்போது கிறித்தவர்கள் மற்றும் முஸ்லீம்களும் சேர்க்கப்படுகின்றனர்.  பொறுப்புள்ள தமிழ்த்தலைவர்களும், பொறுப்புள்ள அறிஞர்களும் இதுபற்றி சிந்திப்பார்களா?

நிகழ்ந்த குண்டுத்தாக்குதல் படுகொலையில் 360 பேருக்கும் மேல்
மாண்டுள்ளனர். அதில் மூன்றில் இரண்டு பகுதிக்கும் மேல் தமிழ்க்
கிறிஸ்தவர்களாவர். மேலும் தமிழ் - முஸ்லிம் உறவு சீரழிந்திருக்கும் ;
மட்டக்களப்பில் கொல்லப்பட்ட 40 பேரும் தமிழ்க் கிறிஸ்தவர்களாவர்.

எப்படியோ சிலுவைப் போர் தமிழ் மக்களின் முதுகில் குதிரை ஓடத் தொடங்கியுள்ளது.

தமிழரை யார்தான் பாதுகாப்பர். அரசற்ற தமிழர் கதியற்று, கைவிடப்பட்ட
பரிதாபம் மேலும் ஓர் அத்தியாயமாய் விரிகிறது.
தமிழர்களின் உரிமைகளை மறுத்து ஒடுக்குமுறைகளை மேற்கொண்டால்
இலங்கை வல்லரசுகளின் வேட்டைக்காடாக மாறும் என்று 1955ஆம் ஆண்டு
டாக்டர் என்.எம்.பெரேரா நாடாளுமன்றத்தில் பேசியமை தற்போது நிதர்சனமாய்த் தெரிகிறது.