Thursday, August 11, 2016

ஒரு காஷ்மீரியின் கடிதம்.

டியர் விராத் கோலி,
   நானும் கடந்த வாரம் கிரிக்கெட் பயிற்சி முடித்து வரும்போது இந்திய ராணுவத்தால் இடது கண்ணில் சுடப்பட்டேன். ஆனால் இந்தியா கூறியது கவலைப்படாதீர்கள் என்று. இந்திய ராணுவமோ சொல்கிறது ரப்பர் தோட்டாக்கள் ஆபத்தானவையல்ல என்று.
 
  எனக்காகப் பேசுவதற்கு யாருமேயில்லை. ஒரு காஷ்மீரியாக எனக்கு அமைதியாய் இருப்பதைத் தவிர வேறு பலமில்லை. கோலி, நீங்களும் விரைவில் உடல் தேறிவருவீர்கள் என்று நம்புகிறேன். நீங்களும் நானும் பாய்ந்து வரும் கிரிக்கெட் பந்தை இனிமேல் பார்க்கவே முடியாமல் போகலாம்.
  ஆனால் ராணுவம் கூறுவது போல் நாம் ஒன்றும் செத்துப் போய்விடவில்லை தானே?!

 ஷாஹீல் சாஹூர்.
 காஷ்மீர்.
 
காஷ்மீரில் கடந்த வாரம் புர்கன்வானி என்கிற இளைஞரை தீவிரவாதி என்று சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம். அமைதியான வழியில் கருத்துக்களை எடுத்துச் சென்ற அவரை என்கவுண்டர் செய்த இந்தியாவை எதிர்த்து காஷ்மீரெங்கும் மக்கள் போராடவே ராணுவத்தை அனுப்பி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த இந்தியா, ஆயுதமின்றித் தெருவில் இறங்கிப் போராடிய மக்களை ரப்பர் குண்டுகளைக் கொண்டு கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளியது. ஆபத்தில்லாத புல்லட் என்று சொல்லப்பட்டாலும் அவை கோரமாக மக்களின் உருவத்தைச் சிதைத்தன. கண்களைக் குருடாக்கின. உயிரையும் குடித்தன.

அதைக் கண்டித்து நாடெங்கும் கண்டனக்குரல்கள் எழுந்த நிலையில் பேஸ்புக்கில் தளம் ஒன்று இவ்வாறு அமிதாப், ஷாருக்கான், ஹ்ரிதிக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் பிரபலங்களின் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து கீழே உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு எழுதிய கடிதம் போல செய்தி வெளியிட்டிருந்தது.

நிஜம் தானே. சாதாரண மக்களுக்கு ஏதாவது என்றால் நாம் கவனிக்கிறோமா ?