Thursday, September 8, 2016

ஹரியானா சட்டசபையில் நிர்வாணச் சாமியார் உரை!


இந்தியாவில் மதவெறியை ஊட்டி பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தாலும் வந்தது. அன்றிலிருந்து தொடர்ந்து கோமாதா, குலக்கல்வி, சமஸ்கிருதத் திணிப்பு, திரைப்படத்துறை, வணிகத்துறை போன்ற சகல துறைகளிலும் இந்துத்துவாவின் ஊடுருவல் என இந்தியாவை 'இந்துயா'வாக்கப் பார்க்கிறார்கள்.

சமீபத்தில் ஹரியானா சட்டசபையில் உரையாற்ற ஜெயின் மதச் சாமியாரான தருண் சாகரை அழைத்திருந்தார் ஹரியானா கல்வியமைச்சர் ராம் பிலாஸ் சர்மா. வந்த ஜெயின் சாமியார் தருண் சாகர் கண்களில் கண்ணாடி அணிந்திருந்தார்; கையில் வாட்ச் கட்டியிருந்தார்; ஆனால் வேறு எதுவும் உடையே அணியாமல் அம்மணமாய் 'ஹாய்யாக..' வந்திருந்தார். வந்தவர் பெண்களை கோயிலுக்குள், மசூதிக்குள் அனுமதிப்பது தவறு என்கிற ரேஞ்சிலும், பாகிஸ்தான் எப்படி இந்தியாவுக்கு எதிரி என்பது பற்றியும், திருமணமான பெண் எப்படி கணவனுக்கு அடங்கி நடக்கவேண்டும் என்பது பற்றியும் சட்டசபைக்கு வீராவேசமாக லெக்சர் கொடுத்தார்.

இந்தச் செயல்கள் எதிலும் உங்களுக்குத் தவறே தென்படவில்லை என்றால் நீங்கள் பி.ஜே.பி ரத்தம் ஓடும் ஒரு இந்துத்துவாவாதி தான் என்பதில் சந்தேகமில்லை. முதலில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டமானது அனைத்து மதத்தினரையும் சமமாகப் பாவிக்கிறது. ஆகையால் சட்டசபையில் மதம் சார்ந்த ஒரு தலைவரை அழைத்துப் பேசவைப்பது முற்றிலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிப்பதாகும்.

வந்து பேசிய சாமியாரும் 'அன்பாயிருங்கள்..பண்பாயிருங்கள்' என்று ஜக்கி ஸ்டைலில் ஒரு உரையை நிகழ்த்திச் சென்றிருந்தால் பிரச்சனைக்குப் பெரிய வாய்ப்பில்லை. ஆனால் அவர் பேசியது அனைத்தும் இந்துத்துவா ரத்தம் ஏற்றிய மனிதர் பேசுவது போலவே வெறியேற்றியது சட்டசபையிலேயே மதவெறியைக் கிளப்பும் செயலாகும்.

22 மொழிவாரி மாநிலங்கள், பல நூறு இனங்கள், டஜன் கணக்கில் மதங்கள் கொண்ட கலவையான மனிதர்கள் வாழும் மதச்சார்பற்ற இந்தியாவுக்கு, ஒரே காவி வர்ணமடிக்கும் செயல்களில் மோடியின் மத்திய அரசும், பி.ஜே.பி ஆட்சியமைத்துள்ள குஜராத், ஒடிஸ்ஸா, கர்நாடகா உட்பட அனைத்து மாநிலங்களிலும் ஏதாவது இப்படி லூசுத்தனமான விஷயங்கள் அரங்கேறுகின்றன.  

தருண் சாகர் பேசிய விஷயங்கள் பற்றிய விவாதம் இருக்கட்டும். இப்படி பொது இடத்தில், அதுவும் மாநிலத்துக்கான சட்டங்களை நிறைவேற்றும் ஆண் மற்றும் பெண் உறுப்பினர்கள் நிறைந்த சபையில், இப்படி டண்டணக்கா..டணக்கா என்று ஆட்டியபடி (கையைத் தான்) பேசுவதெல்லாம் ஈவ்டீசிங் இல்லைனா பப்ளிக் ஹாராஸ்மென்ட் கேஸ்ல உள்ளே போடப்படவேண்டிய கேஸ்தானே.

சட்டசபை என்பது மத ரீதியான, சாதீய ரீதியான பாகுபாடுகள் எதுவும் இல்லாமல் மக்களின் நலனுக்காக செயல்படவேண்டிய அவை. அங்கே வந்து மதப் பிரச்சாரம் செய்யவேண்டிய தேவையென்ன என்பது தான் கேள்வி.

Thursday, August 11, 2016

ஒரு காஷ்மீரியின் கடிதம்.

டியர் விராத் கோலி,
   நானும் கடந்த வாரம் கிரிக்கெட் பயிற்சி முடித்து வரும்போது இந்திய ராணுவத்தால் இடது கண்ணில் சுடப்பட்டேன். ஆனால் இந்தியா கூறியது கவலைப்படாதீர்கள் என்று. இந்திய ராணுவமோ சொல்கிறது ரப்பர் தோட்டாக்கள் ஆபத்தானவையல்ல என்று.
 
  எனக்காகப் பேசுவதற்கு யாருமேயில்லை. ஒரு காஷ்மீரியாக எனக்கு அமைதியாய் இருப்பதைத் தவிர வேறு பலமில்லை. கோலி, நீங்களும் விரைவில் உடல் தேறிவருவீர்கள் என்று நம்புகிறேன். நீங்களும் நானும் பாய்ந்து வரும் கிரிக்கெட் பந்தை இனிமேல் பார்க்கவே முடியாமல் போகலாம்.
  ஆனால் ராணுவம் கூறுவது போல் நாம் ஒன்றும் செத்துப் போய்விடவில்லை தானே?!

 ஷாஹீல் சாஹூர்.
 காஷ்மீர்.
 
காஷ்மீரில் கடந்த வாரம் புர்கன்வானி என்கிற இளைஞரை தீவிரவாதி என்று சுட்டுக் கொன்றது இந்திய ராணுவம். அமைதியான வழியில் கருத்துக்களை எடுத்துச் சென்ற அவரை என்கவுண்டர் செய்த இந்தியாவை எதிர்த்து காஷ்மீரெங்கும் மக்கள் போராடவே ராணுவத்தை அனுப்பி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த இந்தியா, ஆயுதமின்றித் தெருவில் இறங்கிப் போராடிய மக்களை ரப்பர் குண்டுகளைக் கொண்டு கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளியது. ஆபத்தில்லாத புல்லட் என்று சொல்லப்பட்டாலும் அவை கோரமாக மக்களின் உருவத்தைச் சிதைத்தன. கண்களைக் குருடாக்கின. உயிரையும் குடித்தன.

அதைக் கண்டித்து நாடெங்கும் கண்டனக்குரல்கள் எழுந்த நிலையில் பேஸ்புக்கில் தளம் ஒன்று இவ்வாறு அமிதாப், ஷாருக்கான், ஹ்ரிதிக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் பிரபலங்களின் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து கீழே உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு எழுதிய கடிதம் போல செய்தி வெளியிட்டிருந்தது.

நிஜம் தானே. சாதாரண மக்களுக்கு ஏதாவது என்றால் நாம் கவனிக்கிறோமா ?