இந்தா வர்றேன். அந்தா வர்றேன் என்று 15
நாட்களாய் இழுத்தடித்த தலைவா தியேட்டருக்கு ஒரு வழியாய் வந்தே விட்டது. இதே
கேப்பில் இது தியேட்டரை விட்டு ஓடவும் கூடும் என்கிற சந்தேகம் வரத்தான்
செய்கிறது. பாரிவேந்தர் கல்லூரி மாணவர்கள் இயக்கம் விடுத்த வெடிகுண்டு
மிரட்டல்(? அதெப்படிங்க எந்த தீவிரவாதிகள் குண்டு வைக்கிறோம்னு சொன்னாலும்
அவங்களையே போய் விரட்டிப் பிடிச்சுடுற காவல்துறைக்கு இந்த வெடிகுண்டு
மிரட்டல் விடுத்தவங்களை மட்டும் கண்டுபிடிக்கவே முடியலையாம்..). உடனே
தியேட்டர் அதிபர்கள் கதிகலங்கி படத்தை போடமாட்டோம்னு மிரட்டல்.
உடனே அம்மாவிடம் விரட்டல். அம்மா கொடநாட்டில் அலட்டல். விஜய் அன் கோ
உண்ணாவிரத அரட்டல். என்று பத்திரிக்கைகள் பூராவும் சந்தி சிரித்துப் போனது
விஜய்யின் தலைவா பட விவகாரம். அது உங்களுக்கு நன்றாகத் தெரியுமென்பதால்
விமர்சனத்துக்குப் போவோம்.
தலைவா விஜய் ப்ளாஷ்பேக்கில் சிறு
குழந்தையாய் பம்பாய் தாராவி பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு
ஓட்டப்பட்டவர். கமல் ப்ளாஷ்பேக் இல்லாமல் தூத்துக்குடியிலிருந்து
பம்பாய்க்கு ஓடிவந்தவர். விஜய்யின் அப்பா சத்யராஜ் வெள்ளைச் சால்வையை
போர்த்தியபடி தாராவி மக்களுக்கு நல்லதெல்லாம் செய்து தீய ரவுடிகளிடமிருந்து
அம்மக்களைக் காப்பாற்றுகிறார். விஜய்யோ நாசரின் பாதுகாப்பில் வாட்டர் கேன்
சப்ளை செய்யும் கம்பெனி நடத்தியபடி சைடில் நடனமாடிக் களிக்கிறார்.
அமலாபாலுடன் ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறும் சுரேஷ் ஹோட்டல் ஆரம்பிக்க
அங்கே விஜய் வாட்டர் சப்ளை செய்யப் போக காதல் சப்ளையாகி விட அமலா பால்
விஜய்யுடன் காதல் நடனமாட ஆரம்பிக்கிறார்.
இந்தியாவுக்கே வந்திராத விஜய் காதல்
விஷயமாக அப்பாவை திடீரென்று பார்க்க கிளம்பி பம்பாய் வந்திறங்க அப்பா
நாயகன் வேலுநாயக்கனின் பார்ட் 2வாக நிற்பதைப் பார்த்து ஆடிப்போகிறார்.
வேலுநாயக்கனுக்கு ஒரு செல்வா போல 'அண்ணா' (திராவிட இயக்கங்களின் தலைவர்
பெயரை ஒரு ரவுடி தாதாவுக்கு வைக்க ரொம்பத்தான் தில் வேணுங்கோ டைரக்டர்
விஜய் சார்)வுக்கு ஒரு ரங்கா நம் பொன்வண்ணன். அண்ணாவுக்கு ஒரு எதிரி. பழைய
பகையின் மகன். அண்ணாவை அவன் போட்டுத் தள்ள. அவ்விடத்திற்கு தேவர் மகனாக
வந்து விடுகிறார் விஜய். தாராவி மக்களெல்லாம் இனி அடுத்த பெரிய தேவர் இனி
நீ தான் நம் தலைவா என்று உடனே கொண்டாடி விடுகிறார்கள். 'அந்தி மழை மேகம்'
டைப் பாட்டு.. டான்ஸ்..நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவுமே தப்பில்லை
டயலாக் மாதிரி.. 'கத்தியெடுத்தா அது உன்னை காக்கும் மற்றும் கொல்லும் ஆனா
கீழ போடமுடியாது' என்று டயலாக் கூட உண்டு. அப்புறம் தளபதி விஜய் தலைவா
விஜய்யாக மாறி ஸ்டைலாக நாலு பேர் பின்புறம் கூட நடக்க நடந்து வந்து வில்லனை
எப்படிச் சாய்க்கிறார் என்பது மீதிக் கழுதை.. சாரி கதை.
இயக்குனர் விஜய் பல படங்களைக்
காப்பியடிப்பதில் வித்தகர் என்பது அவரது மதராஸப் பட்டினம், தெய்வத்
திருமகள் போன்ற படங்களிலிருந்து குவார்ட்டரடித்தால் ஏறும் மப்புபோல
தெளிவானது. அதே வித்தையை இங்கேயும் செய்திருக்கிறார் அவர். ஆனால் 50 கோடி
செலவு செய்து நாயகனையும், தேவர் மகனையும் சேர்த்து சாண்ட்விச் செய்து
காட்டினால் யாருக்குங்கோ பிடிக்கும்னு அவர் கொஞ்சமாச்சும்
யோசிச்சிருக்கலாம். ஒரு வேளை அந்தப் படமெல்லாம் வந்து ரொம்ப வருஷமாச்சேன்னு
நெனச்சிட்டாரோ என்னமோ. போகட்டும் அப்படியே செய்திருந்தாலும் அதை இப்படி
ஓவராக பில்டப் கொடுத்து 'தலைவா' என்று பெயர் வைத்திருக்கலாமா? போக்கிரி -
பார்ட் 2 என்று பெயர் வைத்திருந்தால் கூட விஜய்யின் வாங்கன்னா வணக்கம்னா
பாட்டு, முற்பாதியில் ஒரு ஆட்டம், ஒரு டூயட், நாலு பைட் சீக்வன்ஸ் என்று
படம் ஏதோ ஒரு வழக்கமான விஜய் பட வரம்புக்குள் நின்றிருக்கும்.
படத்தின் டயலாக்குகளும், காட்சிகளும்
அபத்தமோ அபத்தம். பத்துப் பேரை வெட்டிச் சாய்க்கும் ஒரு நாளில் விஜய்
தலைவாவாகிறார். தலைவனாக வேண்டுமென்றால் பத்துப் பேரை வெட்டிச் சாய் என்று
அர்த்தம் போலும்? அவர் சட்டத்தை மதிப்பதில்லை, அறவழியில் போராடுவதில்லை.
பழிக்குப் பழி தீர்க்கிறார். கட்சி ஆரம்பிக்கவில்லை. கொள்கைகள் என்று
எதுவுமில்லை. சமூகத்தை என்ன செய்து திருத்துவது என்று ஒரு இழவு கூட
யோசித்ததில்லை. இப்போதிருக்கும் நாட்டுப் பிரச்சனைகள் எதைப் பற்றியும்
மறந்து கூட கருத்துச் சொல்வதில்லை. ஆனால் 'தலைவா'வாக ஆகவேண்டும் என்று ஆசை
மட்டும் இருக்கிறது விஜய்க்கு.
சந்தானம் பாவம் என்ன செய்வார். அவர்
கடமையை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் சிரிப்புத் தான் வரவில்லை தலைவா.
ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என்று எதுவுமே எடுபட மறுக்கிறது. இசை
ஜீ.வி.பிரகாஷ்குமார். இரண்டு பாட்டுக்களை தேற்றுகிறார். தளபதி தளபதி என்கிற
பாடல் படத்தின் அபத்தத்தின் உச்சகட்ட வெளிப்பாடு.
விஜய்யை வளர்த்துவிட்டவர் அவரது அப்பா
எஸ்.ஏ.சந்திரசேகர் என்பார்கள். விஜய்யின் எதிர்காலத்தை இருட்டாக்கப்
போகிறவரும் அவராகவே இருக்கலாம். தேவையில்லாமல் கட்சி, காங்கிரஸ், திமுக
என்று சுற்றி, ரசிகர்களை ஆதரவாளர்கள் என கற்பனை செய்யவைத்து, 'நாங்க
சப்போர்ட் பண்ணி தான் போன தடவை எலெக்ஷன்ல இந்தம்மா ஜெயிச்சாங்கன்னு'
ஏடாகூடமா உளறி என்று ஏகத்துக்கு பண்ணியிருக்கிறார். ஜாக்கிரதைங்கண்ணா.
தலைவலியே வா என்று வருந்தி அழைத்துக் கொண்டதுதான் தலைவா என இப்போது நன்கு
புரிந்திருக்கும் விஜய்க்கு. தலைவாவா தலைவியா என்கிற இந்தப் போட்டியில்
தலைவி அம்மா இப்படி ஒரு சுமாரான படத்தையே போட்டு இப்படி வறுத்தெடுத்து
தன்னுடைய பவரை காட்டிக் கொள்ளவேண்டிய அளவுக்கு சிறுபிள்ளைத் தனமாகத் தான்
இருக்கிறார் என்பது அவரால் ஆளப்படும் மக்களாகிய நாம் வருத்துத்துடன்
தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம்.
சராசரி விஜய் ரசிகர்களாய்ச்
செல்பவர்களுக்கும், இந்த தலைவா பாலிடிக்ஸ் எதுவும் தெரியாமலே அப்பாவியாய்ப்
படம் பார்க்கச் செல்லும் குடும்பஸ்தர்களுக்கும், குடும்பஸ்த்ரீக்களுக்கும்
இந்தப் படம் வழக்கமான ஒரு விஜய்யின் மாசாலாப் படம் தான். ஆனால் மற்ற
யாருக்கும் தலைவாவைப் பிடிக்கக் காரணம் பெரிதாய் எதுவுமில்லை. எனவே
தலைவாவின் கெத்து எடுபடுமா ? சந்தேகம் தான்.