Friday, November 23, 2012

தெய்வநாயகம் என்கிற மனிதநேய மருத்துவர்

பிரபல நெஞ்சு நோய் நிபுணரும், அமைதி இயக்கம் என்கிற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தவருமான டாக்டர் சி.என். தெய்வ நாயகம் அவர்கள் கடந்த திங்களன்று காலமானார். அவருக்கு வயது 70.

தெய்வநாயகம் அவர்களை சில வருடங்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவருக்கு தண்டுவடத்தில் டி.பி. நோய் தாக்கி நடக்க இயலாமல் போனபோது,

அவருக்காக சரியான மருத்துவர்களைத் தேடியலைந்த போது தான் முதன்முதலாய் சந்தித்தேன்.

மிகப் பெரிய மருத்துவ பதவிகளை வகித்த அவர் வெறும் 50 ரூபாய் மட்டுமே வாங்கிக் கொண்டு தனது சேவை அமைப்பின் க்ளினிக்கில் அம்பாசடர் பல்லவா ஹோட்டல் அருகில் இருந்த கட்டிடத்தில் இலவசமாக மருத்துவம் செய்து கொண்டிருந்தார்.

அவர் நினைத்தால் அவருக்கு லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுக்க பெரிய பணக்கார நோயாளிகள் கூட்டம் இருக்கிறது. ஆனாலும் அவர் சேவை செய்வதையே விரும்பினார். பணக்காரர்களும் கார் போட்டுக் கொண்டு, விமானங்களில் வெளிநாடுகளிலிருந்து அங்கு வந்து காத்து நிற்பார்கள். அவர்களுக்கும் அதே 50 ரூபாய் தான்.

இந்த 50 ரூபாயும் வெறும் பதிவுக் கட்டணமே. அதற்குப் பின்னர் எத்தனை முறை நீங்கள் சென்றாலும் இலவசமாகத் தான் பார்ப்பார்.

1942, நவம்பர் 15ல் பிறந்த தெய்வநாயகம், சென்னை மருத்துவக் கல்லூரியில் 1965ல் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் ஸ்காட்லாந்து, அயர்லாந்து போன்ற நாடுகளில் 18 மாதங்கள் பயிற்சி பெற்றார். FRCS பட்டமும் பெற்றார். அவர் உலக அளவில் புகழ் பெற்ற எடின்பர்க்கில் உள்ள ராயல் ஸ்கூல் ஆப் பிசிசியன்ஸ் (Royal School of physicians)ல் உறுப்பினராவார். பிரிட்டனின் மருத்துவ ஆய்வுக் கவுன்சிலில் ஆய்வு அதிகாரியாகவும் இருந்தார்.

1970 முதல் 2000 வரை சென்னை மருத்துவக் கல்லூரியில் நெஞ்சு நோய்த் துறையின் உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியராகப் பணியாற்றினார்.

இந்திய நெஞ்சு நோய் கழகம் என்கிற அமைப்பையும் லங் இந்தியா என்கிற இதழையும் நடத்தி வந்தார்.

சென்னை மருத்துவமனையில் கடுமையான எதிர்ப்பை மீறி எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும் பிரிவை உண்டாக்கினார்.
மருத்துவத்தில் அவருடைய முக்கிய பங்கு அல்லோபதி மருத்துவத்துடன் நமது நாட்டின் பாரம்பரிய சித்த மருத்துவத்தையும் கலந்து வெற்றிகரமாகப் பயன்படுத்தியதாகும். இதற்காக எம்.பி.பி.எஸ் மருத்துவரான அவர் சித்த மருத்துவப் படிப்பையும் படித்துத் தேர்ந்தார்.

சென்னை சானேட்டோரியத்தில் உள்ள அரசு சித்த மருத்துவமனையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சித்த மருந்து ஆய்வு ஒன்றைச் செய்தார். அதில் சுமார் 80 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சித்த மருந்தான ரஸகந்தி மெழுகு எவ்வாறு நோயைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ந்ததில் 90 சதவீத நோயாளிகள் நோயின் கடுமையிலிருந்து விடுபட்டு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பினர். அவர்கள் எல்லோரும் வாழ்நாள் முழுதும் அந்த மருந்தை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். மற்றபடி சாதாரணமாக வாழ ஆரம்பிக்கலாம். நோய் அவர்களை கொல்வதிலிருந்து காத்துக் கொள்ள முடியும்.

தனது கண்டுபிடிப்புக்களை ஐ.நாவில் இருக்கும் மருத்துவ அமைப்பின் வருடாந்திர மாநாட்டில் சென்று சமர்ப்பித்தார். எல்லோரும் சித்தமருத்துவத்தை வியந்து பார்க்க வைத்தார். வழக்கம் போல நமது அரசின் தொடர் உதவிகள் இல்லாததில் அந்த முயற்சியை மேலும் பரவலாக்கி நாடு முழுவதும் கொண்டு செல்ல முடியாமல் போனது.

அவரது சித்த மருத்துவ சேவையினால் அவர் தேசிய சித்த மருத்துவக் கவுன்சிலின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மிகக் கண்டிப்பாகவும், கறாராகவும் பேசக் கூடியவர். எளிமையாக வேட்டி, சட்டை அல்லது குர்த்தா அணிந்திருப்பார். செயின் இணைக்கப்பட்ட கண்ணாடி அணிந்திருப்பார்.

நடக்க இயலாமல் போன எனது நண்பரை ஆட்டோவில் வைத்துக் கூட்டிப் போய் அவரை அலேக்காகத் தூக்கிச் சென்று அவரது க்ளினிக்கில் பெஞ்ச்சில் படுக்க வைத்திருந்தோம். நண்பரின் முறை வந்ததும் மிக சகஜமாகப் பேசி அவரது ஸ்கேன் மற்றும் அனைத்து ரிப்போர்ட்களையும் ஒரு முறை பார்த்தார்.

பின்பு தனது பரிசோதனையின் மூலம் கால் செயலிலழந்து போனதை பரிசோதித்தார். பரிசோதித்து விட்டு சர்வ சாதாரணமாகச் சொன்னார். 'டி.பி. கட்டி ஸ்பைனல் கார்டுல இருந்து போகிற நரம்புகளை அழுத்திட்டு சில எலும்புகளை அரிச்சுட்டு இருக்கு. சரிபண்ணிடலாம்.'

நடக்கவே இயலாது எனக் கைவிடப்பட்ட எனது நண்பர் அவரது அல்லோபதி மற்றும் சித்த மருத்துவ முறையால் ஒரு வருடத்தில் திரும்பவும் எழுந்து நடந்தார். அதற்குப் பின் நிறைய பேரை அவரிடம் போய்ப் பார்க்க அழைத்துச் சென்றிருக்கிறேன்.

மக்கள் டி.வியில் தினமும் மக்களின் மருத்துவ கேள்விகளுக்கு பதில் சொல்லும் தொடரை நடத்தி வந்தார். இயற்கை உணவு மற்றும் மருந்துகளையும், பக்க விளைவுகளில்லாத சித்த மருந்துகள் பற்றியும் விரிவாக சாதாரண மக்களுக்கும் புரியும்படி விளக்குவார்.

அவர் வாழ்க்கையில் நடந்ததாக பின்வரும் நிகழ்வைச் சொல்வார்கள். அவர் மிகச்சிறந்த மருத்துவ நிபுணராக அறியப்பட்ட காலம் அது. அப்போது குடியரசுத் தலைவராக இருந்தவர் வெங்கட்ராமன்.

ஒரு நாள் காலை தெய்வநாயகம் அவர்களின் க்ளினிக்கிற்கு அரசு மாளிகைக் கார் வந்து நிற்கிறது. க்ளினிக்கில் சில பேஷண்ட்டுகள் இருக்கிறார்கள்.

அவசரமாக காரில் வந்த அதிகாரி ஒருவர் வெங்கட்ராமன் அவர்களுக்கு உடல் நிலை சிறிது சரியில்லை எனவும் உடனே மருத்துவரை அழைத்து வர கார் அனுப்பினார்கள் என்றும் சொன்னார்.

அதற்குப் பதிலளித்த தெய்வநாயகம், தனது பேஷண்ட்டுகளை சிறிது நேரத்தில் பார்த்து முடித்துவிட்டு உடனே வருவதாகக் கூறினார். அதிகாரியோ குடியரசுத் தலைவர் விஷயம் நீங்கள் எல்லாவற்றையும் போட்டுவிட்டு உடனே வந்தாக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்.

"ஐயா, உங்களது குடியரசுத் தலைவருக்கு உடல் நலமில்லை என்றாலும் தலை போகும் அவசரமில்லை. இதோ எனது பேஷண்ட் வயிற்று வலி என்று துடித்துக் கொண்டிருக்கிறார். இவரை கவனித்து விட்டுத் தான் என்னால் வரமுடியும்" என்று உறுதியாகக் கூறி தனது பேஷண்ட்களை கவனித்து அனுப்பி விட்டே வெங்கட்ராமனைச் சென்று கவனித்தார்.

டாக்டர் தெய்வநாயகம் போன்ற மனித நேயம் நிரம்பிய மனிதர்கள் மருத்துவர்களாய் இருந்த காலம் போய் மணிக்கு ஒரு ஆப்பரேஷன் என்று கல்லா கட்டும் மருத்துவர்களே பெருகியிருக்கிறார்கள்.

சித்த மருத்துவத்தை ஆங்கில மருத்துவத்துடன் கலந்து செய்ததன் மூலம் சித்த மருத்துவத்துக்கும் அங்கீகாரம் பெற்றுத் தந்த அந்த நல்ல மனிதரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் மூன்று மகள்களுக்கும் மற்றும் குடும்பத்தினர், அமைதி இயக்கத்தினர் எல்லோருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.