Sunday, May 27, 2012

எ செப்பரேஷன் (A Separation) - விமர்சனம் (ஈரானியத் திரைப்படம்)



2011ம் வருடத்தில் வந்த பிறமொழிப் படங்களுக்கான படங்கள் போட்டியில் சிறந்த பிறமொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதை கடந்த பிப்ரவரி மாதம் பெற்றது இந்த பெர்சிய மொழித் திரைப்படம். இது தவிர சுமார் 53 விருதுகளை உலகெங்கும் சென்று இந்த ஈரானியப் படம் வென்றுள்ளது.

ஈரான். அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கும் வேளையில், இன்னும் 4 மாதங்களில் ஈரான் நாட்டின் மீது தாக்குதல் தொடுக்கப் போகும் அமெரிக்க நாட்டின் ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுகளில் இப்போது தான் ஆஸ்கார் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு ஈரானிய நாட்டுத் திரைப்படம் ஆஸ்கர் விருது பெறுகிறது.


இது மிகத் தற்செயல் போலத் தோன்றினாலும் அமெரிக்காவின் இத்தகைய அரசியல் பிண்ணணி காரணங்களுக்காக (அந்த நாட்டை நாங்கள் குண்டு வீசி அழித்தாலும் நாங்கள் அவர்களின் கலைகளை மதிக்கும் மாமனிதர்கள் என்கிற பிராண்ட் விளம்பரத்திற்கு) இப்படம் விருது பெற்றிருக்குமா என்பது நாம் தனியே யோசித்துப் பார்க்க வேண்டிய விடயம்.

இந்த அரசியல் காரணம் தவிர்த்து இப்படத்தை பார்த்தாலும் ஆஸ்கர் விருதுக்கு தகுதியுள்ள படமாகவே இதைக் கருதலாம் தான்.

பேமிலி ட்ராமா எனப்படும் குடும்பச் சித்திரம்வகை சார்ந்த படம் இது. இத்துடன் ஒரு த்ரில்லர் போன்ற பரபரப்பில் திரைக்கதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அஸ்கர் பர்ஹாடி(Asghar Farhadi).

தன்னுடைய கணவனான ;’நாடேர்ரிடம் (பெய்மன் மோடி - Peyman Moadi) இருந்து விவாகரத்து கோரும்சிமின்’ (லைலா ஹடாமி - Laila Hatami) கோர்ட்டில் நீதிபதியிடம் பேசுவதாக ஆரம்பிக்கிறது படம். ஈரானில் இப்போது வாழும் சூழல் சரியில்லை என்றும் எனவே தன்னுடைய ஒரே மகளின் எதிர்காலம் சிறந்ததாக அமைய வெளிநாடு சென்று தன் 11 வயதுப் பெண் குழந்தை டெர்மேவை வளர்க்க விரும்பும் சிமின் தன்னுடன் வர மறுக்கும் தனது கணவன் நாடேரிடம் இருந்து விவாகரத்து கோருகிறார். நாடேரோ அல்ஜீமர் என்கிற மூளைச் செல்கள் இறப்பு நோயால் அவதிப்படும் அவனது தந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிறான். நாடேரைத் தனது பிள்ளையென்று கூட அறிந்து கொள்ளாத நிலையில் இருக்கும் தந்தையை ஏதாவது மனநல காப்பகத்தில் விடவேண்டியது தானே என்கிறாள் சிமின்.

அவருக்கு நான் தான் அவர் பையனென்று அடையாளம் காணத்தெரியாது.. ஆனால் எனக்கு அவர் தான் அப்பா என்று தெரியுமில்லையா?’. அவரை எப்படி நான் விட்டுச் செல்லமுடியும் என்கிறான் நாடேர்.

நீதிபதியோ விவாகரத்து கோர கணவர் குடிகாரர், பெண்ணை அடிப்பவர் என்பது போன்ற தீவிர காரணங்கள் வேண்டும் என்கிறார். சிமின் அதை மறுத்து தன் கணவர் மிக நல்லவர் என்கிறாள். குழந்தையை தன்னுடன் அனுப்பி விடும்படி கோருகிறாள். இருவருமே தங்களது குழந்தை டெர்மேவின் மேல் மிகுந்த பாசம் கொண்டுள்ளனர். நீதிபதியோ அதற்கு குழந்தையிடமும் கருத்து கேட்கப்படவேண்டும் என்கிறார். எனினும் விவாகரத்து பெற கொஞ்ச நாட்கள் கழித்து வரும்படி நீதிபதி கூறுகிறார். சிமின் தற்காலிகமாக தனது தாய் வீட்டிற்குச் செல்கிறார்.

நாடேர்-சிமின்-டெர்மே குடும்பம் ஒரு உயர்-மத்திய-தர வர்க்க (Upper-middle class) ஈரானியக் குடும்பம். பாங்க் ஒன்றில் க்ளார்க்காக வேலை செய்யும் நாடேர் தனியே தன் குழந்தையையும், தந்தையையும் பார்த்துக் கொள்ள விழைகிறார். தனது கணவர் சிரமப்படக் கூடாதென்று சிமின் ஒரு கஷ்டப்படும் குடும்பத்தைச் சேரந்த பெண்ணான ரஸீயாவை (சாரா பயாட் - Sareh Bayat) வீட்டு வேலைக்காக சிபாரிசு செய்கிறாள். கர்ப்பிணியான ரஸீயா தனது கணவனுக்குத் தெரியாமல் (இஸ்லாமிய முறைப்படி இது சட்ட விரோதம்) நாடேர், அவனது தந்தை மற்றும் டெர்மே இம்மூவரும் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டிற்கு வந்து வீட்டு வேலை செய்கிறாள்.  வயதான, அல்ஜீமர் நோயால் யாரையும் அடையாளம் காணக்கூட இயலாத நாடேரின் தந்தையையும் கவனித்துக் கொள்கிறாள்.. ஒரு நாள் சுய நிதானமில்லாத நாடேரின் தந்தை திறந்திருந்த வாசல் வழியே வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். அவரைத் தேடி ஓடுகிறாள் நஸீயா. அதைத் தொடர்ந்து நடக்கும் சங்கிலித் தொடர் நிகழ்வுகளே இத் திரைப்படம்.

ஒரு நல்ல திரைக்கதையின் நல்ல அம்சங்களில் ஒன்று அது கதையின் போக்கில் பார்வையாளனை சில கணங்களாவது படத்தின் பழைய காட்சிகளில் ஏதாவது ஒன்றை திரும்ப எண்ணிப் பார்க்க வைத்து விடுவது. இப்படத்தில் பிற்பாதியில் பல இடங்களில் முற்பாதியில் அவர் என்ன சொன்னார் ? என்ன நடந்தது ? என்று பார்வையாளர் தனக்குள் குழம்பி படத்துக்குள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வைக்கிறது.

நடிகர்கள் எல்லோரும் கனகச்சிதமாகச் செய்திருக்கிறார்கள். மிக இயல்பான நடிப்பு. அவற்றை நடிப்பு என்றே நாம் உணர இயலாத அளவுக்கு மிகையில்லாத நடிப்பு. படத்தை இரண்டாவது முறையாக நீங்கள் பார்க்க நேர்ந்தால் ஆரம்பக் காட்சிகளில் படத்தின் பாத்திரங்கள் ஒவ்வொருவருடைய பார்வை, சிறு முகக் குறிப்புகள் போன்ற ஷாட்கள் கூட அப்பாத்திரத்தின் இயல்பை வெளிப்படுத்த இயக்குனர் செய்திருக்கும் நுணுக்கமான வேலை என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.

படத்தின் ஒளிப்பதிவு மஹ்மூத் கலாரி (Mahmoud Kalari). படம் முழுவதும் க்ளோசப் ஷாட்கள் நிரம்பி வழிகின்றன. சில இடங்களில் பார்வையாளர் நடிகரை பின்தொடர்ந்து சென்று வேவு பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துவதன் மூலம் அக்காட்சி பிற்பாதியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை நமக்கு மறைமுகமாக உணர்த்துகிறார். படம் பார்ப்பவர்களை நீதிபதியின் ஸ்தானத்தில் நாடேர் மற்றும் சிமினின் வழக்கை புலன் விசாரணை செய்யும் எண்ணத்தோடு பார்க்க வைப்பதில் இயக்குனர் வெற்றிபெற்று விடுகிறார். எனவே படத்தின் முடிவையும் கூட நம்மிடமே விட்டுவிடுகிறார்.

யதார்த்த வாழ்வின் நிகழ்வுகளை அப்படியே காட்சியமைப்பதிலும் இயக்குனர் மிளிர்கிறார். குழந்தை தாயின் வயிற்றில் காதை வைத்து கரு சிசு நகர்வதைக் கேட்பது, பெட்ரோல் பல்க்கில் டெர்மே டிப்ஸை திரும்பக் கேட்பது, மாடிப்படியில் தள்ளிவிட்ட காட்சியை மகளுக்கு விவரிக்கும் நாடேர் தான் குற்றமற்றவன் என்பதை விளக்குவது என்று பல இடங்கள்.

படத்தின் மிக நுணுக்கமான மற்றும் அழுத்தமான விஷயம் கதை, திரைக்கதை. இயக்குனரே கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

கதையில் வரும் மாந்தர்கள் எல்லோரும் நல்லவர்களே. ஆனால் வெவ்வேறு தருணங்களில் தனது குறைபாடுகளை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள். நேர்மையாக வாழ்வதை தனது மகளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கும் நாடேர் வழக்கிலிருந்து தப்பிக்க பொய் சொல்வது, மாமனார், மகள் மற்றும் கணவன் மீது மிகுந்த மதிப்பு, பாசம் வைத்துள்ள சிமின் அவர்களை விட்டுவிட்டுச் செல்ல விரும்புவது, அம்மா தன்னை விட்டு எப்போதும் சென்று விடமாட்டாள் என்பதை நன்கு உணர்ந்த டெர்மேஅதனாலேயே இருவரையும் இணைக்க அப்பாவுடனேயே இருப்பது, தந்தைக்காகப் பொய் சொல்வது, ரஸீயா மத உணர்வு மிக்கவளாக இருப்பது அதே சமயத்தில் கணவனுக்குத் தெரியாமல் வேலைக்கு வருதல், மனிதாபிமான அடிப்படையில் நாடேரின் தந்தைக்குப் பணிவிடை செய்வது என்று இருந்தாலும் தவிர்க்க இயலாமல் குழந்தை விஷயத்தில் பொய் சொல்வது.. என்று கதையின் போக்கை பார்வையாளர்கள் ஊகிக்கவே முடியாதபடி படம் முழுவதும் நிகழ்வுகள் நகர்வதால் ஒரு த்ரில்லர் பார்த்த உணர்வு பார்வையாளனுக்கு ஏற்படுகிறது.

இதில் சரி எது, தவறு எது என்று தீர்மானித்து முடிவு தரவேண்டிய பொறுப்பும் பார்வையாளரிடம் வரும் போது படத்தின் தாக்கத்திலிருந்து விடுபட நெடுநேரமாகிறது.

படம் மேல் தட்டு மற்றும் கீழ்த்தட்டு குடும்பத்தினரிடையேயான சிக்கலான ஊடாடலை பதிவு செய்கிறது. படத்தின் முடிச்சு நாடேர்-சிமினின் விவாகரத்து விஷயம். ஏன் அது நிகழ்கிறது என்று நமக்குள் கேட்டுக் கொண்டால் அதற்கு விடை, பெரிய காரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை என்பதே. பெரிய காரணங்களில்லாத மேல்தட்டு சிக்கல்களில், கடைசியில் இழப்பு நேர்வது கீழ்த்தட்டு மாந்தர்களுக்கே என்கிற யதார்த்த உண்மையும் படத்தில் பதிவாகிறது.

இறுதிக் காட்சியில் மீண்டும் அவர்களது விவாகரத்து வழக்கு வருகிறது. அதில் மூவரும் கறுப்பு உடை அணிந்திருப்பதன் மூலம் குடும்பத்தில் யாரோ காலமானது குறிப்பாக உணர்த்தப்படுகிறது. டெர்மேயின் முடிவை கேட்கிறார் நீதிபதி.

டெர்மே என்ன பதில் சொல்லியிருப்பாள் ?

Wednesday, May 16, 2012

'நடந்த கதை' - குறும்படம். விமர்சனம்.

நடிப்பு - கருணாகர், அருள் சங்கர், தர்மா, துரை சத்தீஷ், ஏழுமலை, பழனி,மணிவண்ணன்,சுபாகரன், லில்லி ஆசிரியர், கோவிந்தன், வீரராகவன், ஓவியன், நிறைமதி, கோகுல், தமிழ்ப் பிரியன், சுந்தரேசன்.
ஒலிப்பதிவு - R. சரவணன்           ஒலிக்கலவை - T.P. தர்மபிரகாஷ்
இணை ஒளிப்பதிவு - மணி   ஒளிப்பதிவு - இராசா மதி.
வரைகலை - செந்தில் 
கதை - அழகிய பெரியவன் (குறடு சிறுகதை)
படத்தொகுப்பு - A. L. ரமேஷ்  
இசை - மரியா மனோகர்
தயாரிப்பு - அருள் சங்கர்
திரைக்கதை, வசனம், இயக்கம் - பொன் சுதா.
வெளியீடு - நண்பர்கள் குழுமம்.
ஓடும் நேரம் - 21 நிமிடங்கள்.
வெளிவந்த ஆண்டு - 2010.

படம் முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும் நவம்பர் 2011ல் தான் யூ ட்யூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பு சி.டி.க்களாக கிடைத்திருந்திருக்கக் கூடும்.தமிழ்நாடு முற்போக்கு கலைஞர் மற்றும் எழுத்தாளர் சங்கத்(தமுகஎச) தின் சிறந்த சமூக குறும்படத்திற்கான 2010 ஆம் ஆண்டு விருதைப் பெற்ற படம் இது. இது மட்டுமல்ல, இது போன்று மொத்தம் 16 விருதுகளைப் பெற்றிருக்கிறது இப்படம்.

இக்குறும் படத்தின் முக்கியமான விருதுத் தகுதி இது சமூகப் பிரச்சனையான ஜாதியை களமாகக் கொண்ட படம் என்பது தான். அழகிய பெரியவனின குறடு என்கிற சிறுகதையை குறும்படமாக எடுத்திருக்கிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம். தமிழ் சினிமாவில் கதைகளையும், நாவல்களையும் படமாக்குவது என்பது அத்திப் பூத்தாற் போல நடக்கும் விஷயம் தான். தீண்டாமை என்கிற சமூகப் பிரச்சனையை மட்டுமே கதைக் களமாகக் கொண்டிருப்பதில் (ஒரு சைடு ட்ராக் காதல் கூடக் கிடையாது !) திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய இயக்குனர் பொன்.சுதா நேரமையாக இருந்திருக்கிறார். அவரை இதற்காகப் பாராட்ட வேண்டும்.

கதை. எளிமையான கதை. தாழ்த்தப்பட்ட சக்கிலிய சமூகத்தில் 'கீழத் தெருவில்' பிறந்த வீரபத்ரன் சிறுவயது முதலே தன் வாழ்வில் செருப்புப் போட்டு நடக்க ஏங்கி ஆசைப்படுவதையும் முடிவில் ராணுவத்தில் சேர்ந்ததன் மூலம் அந்த ஆசையை எப்படி நிறைவேற்றிக் கொண்டான் என்பதையும் காட்டும் படம். செருப்புப் போட்டு நடக்க ஆசைப்படுவது என்பது கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடியாமல் இருந்த காலங்கள் உண்டு. இன்று செருப்புப் போட்டுக் கொள்ள அவர்களுக்குத் தடையில்லை என்றாலும் தற்காலத்தில் தீண்டாமையும் 'நவீனமாகி' செருப்பு போட்டுட்டு போலாம் ஆனா மேலத் தெரு வழியா போகும் போது செருப்பை கால்ல மாட்டாம கையில தூக்கிக்கிட்டு போகனும் அப்படின்னு வேற வடிவம் எடுத்திருக்கு. செருப்புத் தைக்கிறவங்களா இன்னும் இருக்கிறவங்க சக்கிலிய சாதிக்காரங்கதான். இல்லையா ?

படம் துவக்கத்தில் கதாபாத்திரம் பேசுவதாய் சாதி பற்றிய ஆழமான சில வரிகளோடு பிரமாதமாய் ஆரம்பிக்கிறது. படத்தின் ஹீரோவாக (பல்வேறு வயதுகளில்)வரும் எல்லோருடைய நடிப்பும் பரவாயில்லை. ராணுவத்தில் சேரும் இளவயது வீரபத்திரனும் நடிப்பில் தேறிவிடுகிறார். சில இடங்களி்ல் சொதப்புகிறார். முதன் முதலாக ஷூ வை கையில் வாங்கியவுடன் அவர் காட்டும் உணர்வுகள் பொருந்தவில்லை. படத்தி்ன் மற்ற எல்லாப் பாத்திரங்களும் துணைப் பாத்திரங்களாகவே ஒற்றைத் தன்மையுடன் இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஹீரோ சிறு வயதிலிருந்து வளரும் போது ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஒரு வில்லன் உயர் ஜாதியில் வளர்ந்திருக்கலாம். இது கதையைச் சொல்வதில் சுவராசியத்தை கூட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது.

படத்தின் ஜாதி சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் சீரியலை ஞாபகப்படுத்தும் அளவு சிறிது நாடகத்தன்மை கொண்டிருக்கின்றன. மேல் ஜாதிக்காரர்களாக வரும் எல்லோரும், அவர்கள் நடிப்பும் நாடகத்தையே ஞாபகப்படுத்துகின்றன. இராசா மதியின் ஒளிப்பதிவு கச்சிதமாக இருக்கிறது. வீரபத்ரனை குழந்தையாக அறிமுகப்படுத்தும் காட்சியில் உட்கார்ந்திருக்கும் சிறு குழந்தையும் அவன் அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் அனைவரும் 'செருப்பில்லாத கால்களாக' மாற்றி மாற்றி வந்து போகும் அந்தக் காட்சி பிரமாதமான காட்சியமைப்பு. அதை மனதில் உருவகித்த இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். மற்றொரு இடம் மேலைத் தெருவில் அப்பாவுடன் நடந்து போகும் வீரபத்ரன் முதன் முதலாக பார்க்கும் காலணிகள்; அவனுடைய மன ஓட்டங்கள்; அதைப் பிரதிபலிக்கும் ஷாட்கள்; ரமேஷின் எடிட்டிங் இங்கு கச்சிதம். மரியா மனோகரின் இசை படத்திற்கு புதிதாக எதுவும் சேர்த்துவிடவில்லை என்றாலும் படத்தைக் காலி செய்யவில்லை. ஓ.கே. ரகம். ஒலிப்பதிவும் படத்திற்கு தேவையான அளவு அமைந்து உள்ளது.

அழகிய பெரியவனின் கதையில் யதார்த்தம் எவ்வளவு அழகியலுடன் வெளிப்படுத்தப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் படத்தில் அந்த அழகியல் இல்லை. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கதாபாத்திரங்களைத் தவிர வேறு யாரும் மாந்தர்கள் நடமாடுவதே இல்லை. இது ஒரு வகையான புனைவுத் தன்மையை கொடுக்கிறது. இயக்குனரும் நிறைய காட்சிகளில் பாரதிராஜாவின் பன்ச் போன்ற புனைவுகளை கொடுத்திருக்கிறார் (உ.ம். மரத்தில் தொங்கும் செருப்புகள், கடைசியில் வீட்டுக்கு வீடு வாசலில் ராணுவ வீரர் ஓட ஓடத் தோன்றும் செருப்புகள்). சமூகப் பிரச்சனையை தனி மனிதனின் கோணத்தில் அலசிய விதத்தில் இப்படம் ஒரு வித்தியாசமான படம் தான்.

கதையின் கரு பற்றி கொஞ்சம் பேசவேண்டும். தான் பிறந்த ஊரில் செருப்பணிந்து நடக்கக்கூடாது என்கிற ஆதிக்க ஜாதியின் கொடுமையை எதிர்க்க சமூக ரீதியாக வழியில்லாத ஹீரோ ராணுவம் என்கிற மற்றொரு ஆதிக்க கருவியின் பால் தஞ்சமடைகிறான். ராணுவ வீரனான தான் 'யார் எதிர்த்தாலும் சுட்டுக் கொல்வேன்' என்கிறான். அவனை தெருவுக்குள் பூட்ஸ் காலுடன் நுழைய விட மறுக்கும் ஆதிக்க சாதி அவன் 'சுடுவேன்' என்றதும் தான் பயப்படுகிறது. இது 'பேய்க்குப் பயந்து பிசாசை கட்டிக் கொண்ட கதை' எனலாமா? ஆதிக்க சாதி, ஜாதி ஏற்றத் தாழ்வுகள் சமூகப் பிரச்சனையாக பல்லாயிரம் வருடங்களாக இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு தீர்வு என்பது மந்திரத்தில் வைத்தது போல் சடக்கென்று நிகழ்ந்துவிடாது என்பது தான் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை கதையாளர் ராணுவத்தின் மூலம் மாற்றி விட ஆசைப்படுவதை கதை காட்டுகிறது.
ராணுவம் என்பது என்ன? எல்லையை பத்து, 20 வருடங்களுக்கு ஒரு முறை எப்போதாவது 'நடத்தப்படும்'(நடப்பது அல்ல நடத்தப்படுவது) சண்டையில் பாதுகாப்பது தவிர ராணுவம் மொத்தமும் மக்களை, அது சொந்த மக்களோ, அன்னிய மக்களோ, அவர்களை அடக்கி ஒடுக்கவே பயன்படுகிறது. காஷ்மீரில் ராணுவம், கூடங்குளத்தில் ராணுவம், ஒரிஸ்ஸா காடுகளில் ராணுவம் என்று ராணுவம் சொந்த மக்களை கொல்லப் பயன்படுவதே அதிகம். இப்படிப்பட்ட ராணுவம் தான் சாதிய பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பதாக கதை முடிகிறது. ராணுவம் பற்றிய (பாக்யராஜ் படங்களில் வருவது போல) ஜனரஞ்சகமான பார்வை இருப்பதால் தான் இந்த மாதிரி தீர்வுகளுக்கு எழுத்தாளர் போக நேரிடுகிறது. இந்திய ராணுவத்திலும் சாதியம் இருக்கிறது என்பது ஓர் உண்மை.

நமது இந்திய ராணுவம் ஆரம்பத்தில் வெள்ளையர் ஆட்சியில், இந்திய மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இந்திய அடிமைகளை வைத்தே வீரர் படை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. அதே அமைப்புடன் தான் இன்னும் இருந்து வருகிறது. வெள்ளையர்கள் தான் படைப்பிரிவுகளை சாதிய அடிப்படையில் பிரித்தனர். போராடும் 'வீரமான' சாதியைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்படும் சாதிக்காரர்களின் சாதிகளின் பெயர்களில் படைப்பிரிவுகள் (உ.ம். ஜாட், கூர்க்கா, ராஜ்புத், சீக்கியர்கள் ) அமைந்திருந்தன. இந்தியா சுதந்திரமடைந்ததும் சாதீய, இன முறைப்படி படைப்பிரிவுகளை அமைக்க வேண்டாம் என விதிமுறைகள் மாற்றப்பட்டன. ஆனாலும் பொற்கோயிலில் ராணுவம் நுழைந்த போது பயன்படுத்தப்பட்டது 'தமிழ்நாடு(தமிழர்) படைப் பிரிவு'. சீக்கியர்களின் அரசு மீதான கோபம் தமிழர்களின் மீதான கோபமாக அங்கே மாற்றப்பட்டது. அது இந்திய அமைதிப்படை 1987ல் இலங்கைக்குக் சென்ற போது வெடித்தது. இலங்கையில் தமிழர்களை கொன்று, வன்புணர்ந்து வெறியாட்டம் ஆடியது சீக்கியப் படைப் பிரிவு. இந்திரா காந்தி கொலைக்குப் பின் ராணுவத்தில் சாதீய, இன ரீதியான பிரிவுப் பெயர்கள் திரும்பவும் வைத்துக் கொள்ளப்பட்டன.

ஒரு பத்து நாட்களுக்கு முன்பு ப்ரணாப் முகர்ஜி ராணுவத்தில் இருக்கும் முஸ்லீம்களின் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூறி மாட்டிக் கொண்டார். ராணுவத்தில் ஜாதி இருக்கிறது. ஜாதிக் கொடுமைகள் நேரடியாக இனம் கடந்து இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள பறையன் என்பவன் தாழ்த்தப்பட்டவனா இல்லையா என்று வடக்கத்திய உயர் சாதியினனுக்குத் தெரியாது. ஆனால் ஒரு இனத்துக்குள்ளே இருக்கும் ஜாதி ஏற்றத் தாழ்வுகள் எல்லாம் அப்படியே இருக்க வாய்ப்பிருக்கின்றன. உதாரணமாக தமிழ்நாடு ரெஜிமண்டுக்குள் இருக்கும் எல்லா தமிழர்களுக்கும் ஒருவருடைய சாதி மற்றவருக்குத் தெரியும் ஆதலால் சாதி வேற்றுமை கண்டிப்பாக ஏற்படுகிறது.

இவவளவும் இருக்கட்டும். சரி,  படம் 'மிக'ச் சிறந்த படமா என்றால்  இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நல்ல படம். மோசமான படமில்லை. அந்தப் பதினாறு விருதுகளும் இது சாதிய பிரச்சனையை கையாண்ட காரணத்திற்காகவே இந்தப் படத்திற்கு கிடைத்திருக்க நிறைய வாய்ப்புள்ளது. ஏனென்றால் இதைச் செய்யக் கூட  விரும்பாதவர்களே தமிழ் சினிமாவில் அதிகம்.