Thursday, March 22, 2012

கூடங்குளம் மக்கள் நடத்தும் அநியாயமான(?!) போராட்டம்..

நமது பாரதப் பிரதமர் புரட்சி சிங், முப்பெரும் டாக்டர் பட்டம் பெற்ற அண்ணல் மன்மோகன் சிங் ஜி சொல்லியும் கேளாமல்...

நமது புரட்சித் தலைவி, அம்மா, சங்கரன் கோவிலில் அமோக வெற்றி பெற்ற புரட்சி நாயகி, போன மாதம் கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாகவும் பின்பு ஒரே மாதத்தில் பெங்களூர் கோர்ட் வழக்கில் வாய்தா கெடு தீர்வதற்குள் கூடங்குளம் மக்களுக்கு ஆப்பு கொடுக்கவும் மாபெரும் தமிழ் நாடு சட்டசபையில் தீர்மானம் போட்டுச் சொல்லியும் கேளாமல்..

அண்ணல் சூப்பர் ஸ்டார்  அப்துல்கலாம் அவர்கள் சூறாவளிச் சுற்றுப்பயணம் அணு உலைக்குள் நடத்தி, வெளிவந்து வாசலில் நின்றபடியே தயாரித்து அளித்த நாற்பது பக்க 'பாதுகாப்பானது உலை' என்கிற இன்ஸ்டென்ட் காபி, இன்ஸ்டென்ட் டீ போன்ற சூடான மணமான இன்ஸ்டன்ட் அறிக்கையைப் படித்தும் திருந்தாமல்...

அதற்குப் பின் மத்திய அரசின் ஐயாவும், மாநில அரசின் அம்மாவும் அனுப்பிய அணு உலையை கடனுக்கு சுற்றிப் பார்க்கும் குழுவின் அறிக்கையையும் மதிக்காமல்..

இன்று அம்மா கருணை கூர்ந்து அனுப்பியுள்ள, 10 ஆயிரம் போலீசார் மற்றும் ராணுவம் ஆகியவை துப்பாக்கி சகிதம் கூடங்குளம் ரோடுகளில் எல்லையில் நடப்பது போல் 'பரேட்' நடந்து காட்டியும், அஞ்சாமல்...

இப்படி...











உண்ணாவிரதம் இருந்து போராடுவது எவ்வளவு அநியாயம்..?

மக்களே ! நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.. உங்களில் பத்து பேரையாவது கவர்மென்ட் சுட்டாகனுமா இல்லையா ? அப்போதானே  செத்தவனுக்கு நஷ்ட ஈடு, கோர்ட், கேசுன்னு பிரச்சனையை திசை திருப்பி சத்தமில்லாமல் அணு உலையை முதலாளிங்க திறந்து பிசுனஸ் ஸ்டார்ட் பண்ண முடியும்.

கரண்ட்.. கட்.. கரண்ட்.. கட்ன்னுட்டு எல்லாரையும் பழி வாங்கி... ஏதோ கூடங்குளம் வந்தவுடனே உங்களுக்கெல்லாம் 25 பைசாவுக்கு ப்ரீயா கரண்ட் தரப்போற மாதிரி பீலா உட்ற அம்மாவும், ஐயாவும்... இவ்வளவு கரண்ட் கட் நாடு பூரா வந்தப்ப.. 8 மணி நேரம்... 12 மணி நேரம்னுட்டு சிறு தொழில்களும், மக்களும் ராத்திரிப் பகல்ன்னு கரண்ட் இல்லாம கஷ்டப்பட்டப்போ.. ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனுகளுக்கு மட்டும் ஒரு செகண்ட்ன்னா.. ஒரே செகண்ட் கூட கரண்ட் கட்டே பண்ணாம 24 மணி நேரமும் கரண்ட் விட்டுட்டு இருக்கிற ரகசியம் என்னாங்க ?  கூடங்குளம் மாதிரி அவியளுக்கு மட்டும் ரகசியமா ஒரு மாடங்குளம் திறந்திருக்கீகளோ ?

கூடங்குளம் மக்களுக்கு இரண்டு நாட்களாக மின்சாரம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. பால், குடிநீர், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. எதற்கு ? அவுங்க தான் உண்ணாவிரதம் இருக்காங்களே.. எதுக்கு இதெல்லாம் அவுங்களுக்குன்னுட்டு கவர்மென்ட் நினைச்சிட்டாங்க போல..

உதயகுமார் அமெரிக்காவோட ஆதரவுல போராட்டம் பண்றார்ன்னுட்டு கூசாம சொல்ற பிரதமர் ஐயா.. நீங்க போட்ட மிகப் பெரிய அணு உலை ஒப்பந்தம்  1..2.. 3 அது ஏதோ 50 லட்சம் கோடியாமே.. ரஷ்யா கூட போட்ட இந்த ஒப்பந்தமெல்லாம் அமெரிக்கா போட்ட ஒப்பந்தத்துக்கு கால் தூசி அளவு பணமாமே... அப்போ உதயகுமார் போராடினா... இந்த அணு உலை நின்னா...பின்னால எல்லா அணு உலையும் நின்னு போகுமில்லையா.. இதனால் எதிர்காலத்துல யாருக்கு பெரிய ஆப்பு...? அமெரிக்காவுக்கா..? ரஷ்யாவுக்கா..? கம்யூனிஸ்ட்டு தோழர்களே வழக்கம் போல 'அமைதி'க்கு வேண்டுகோள் வெச்சுட்டு அமைதியாயிட்டீங்க.. இனி உங்க பாஸ் மிச்சத்தை பாத்துக்குவாருன்னா..?

நம்ம தினமலம்.. போன்ற பத்திரிக்கைகளெல்லாம்.. வரிஞ்சுகட்டிட்டு அணு உலை வேணும்.. இடிந்த கரை மக்கள் ரவுடிகள்னு.. எழுதறத படிச்சா நமக்கு என்ன தோணும்?

இது அநியாயமான போராட்டம்னு தானே..
 கூடங்குளத்துக்கு வெளியே இருக்கும் மக்களே.. நீங்க யோசியுங்க.. யாரையாவது கவர்மெண்ட் சுட்டு  பலி எடுக்கிறதுக்குள்ள யோசியுங்க..

சற்று முன் உதயகுமாரிடன் பேசினோம்,,,, அங்கு மக்கள் கடல் மார்க்கமாக
குவிந்து கொண்டு இருக்கிறார்கள்... குழந்தைகளுக்கு தேவையான எதுவும்
சென்று சேரவில்லை... தண்ணீர் தடுக்கப்பட்டு இருக்கிறது.. கழிவறைகள்
மூலமாக சுகாதார கேடு வெகு சீக்கிரமாக பரவும் ஆபத்து அதிகமாக இருக்கிறது..
கிட்ட தட்ட 10000 மக்கள் 3 நாட்களாக ஒரு இடத்தில் குவிந்து
இருப்பதால்சுகாதார கேடுகள் மோசமடையும் என்று கவலை தெரிவித்தார்..
மருத்தவமனை இருக்கிறது, மருத்துவர்கள் இல்லை, மருந்துகள்
இல்லை...ஊடகங்கள் வட இந்திய ஊடகங்கள் மட்டுமே உள்ளே வந்து இருக்கின்றன...” என்றார்..... தமிழ் நாட்டு ஊடகங்கள் வாய் திறக்க மறுக்கின்றன. தோழர்களே அடுத்த முள்ளிவாய்க்கால் இது...

கூடங்குளம் ஆதரவாளர்கள் கவனிக்க.!
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மொத்த மின் உற்பத்தி
மொத்த நிறுவுதிறன் - 1000 Mw
உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் - 450 Mw (only 45% output)
இதில் தமிழகத்தின் பங்கீடு / ஒதுக்கீடு - 157 Mw (only 35% for TN)
இந்த மின்சாரம் நம்மை வந்தடையும் போது நமக்கு கிடைக்கும் மின்சாரம் 25% இழப்பு போக - 117 Mw
இந்த 117 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு தமிழகத்தின் ஒட்டு மொத்த பற்றாக்குறையும் சரி செய்ய முடியும், என்று நீங்கள் நம்பினால்
நாங்கள் அல்ல முட்டாள்கள்!!
போராடுவது மனித இனத்தைக் காக்கவே அன்றி.! ஆதாயத்துக்காக அல்ல..! உனக்கும் எனக்குமான போராட்டம் தான் இது...

Sunday, March 4, 2012

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாடு - சென்னை.


26-பிப்ரவரி-2012
அன்று காலை மதுரையிலிருந்து வந்து இறங்கிய நண்பர் பரபரவென்று குளித்துக் கிளம்பிய போது தான் தெரிந்தது சென்னையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மாநாடு காலை 9 மணிக்கு பீச்சில் உள்ள தூர்தர்ஷன் அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ள அண்ணா அரங்கில் கருத்தரங்கமும் மாலையில் தி.நகர் பேருந்து நிலையத்தின் பின்புறம் மாநாடுமாக நடக்க இருப்பது. “ஒரு போஸ்டர் இல்லை... ஒரு பேனர் இல்லை... என்னடா மாநாடு இது? யாரோ நாலு பேர் சயன்ட்டிஸ்ட் என்று வந்து உட்கார்ந்து ரம்பமாய் அறுக்கப்போகிறார்கள்” என்று யோசித்தபடியே நண்பருடன் கிளம்பினேன்.

மௌன்ட் ரோடில் புதிதாய் கருணாநிதி கட்டி உபயோகப்படாமல் போன தலைமைச் செயலக கட்டிடம் தாண்டி உள்ள சிக்னலில் திரும்பினால் போலீஸ் வேன் குறுக்காக ரோட்டின் நடுவே நின்றபடி உள்ளே யாரையும் விடாதே என்று மெகா போனில் எச்சரிக்கை விட்டுக்கொண்டிருந்தது. திரும்பிச் சுற்றி சேப்பாக்கம் வழியாக அப்பக்கம் போனால், அண்ணா சமாதியின் அருகில் உள்ள நுழைவிலும் போலீஸ் சாலையை மறித்து யாரையும் போகவிடவில்லை(மாநாடு நடந்தால் மக்கள் வரக்கூடாதா? ). கடைசியில் கூவத்தை ஒட்டிய சந்தில் நுழைந்து மேடு பள்ளம் ஏறி அரங்கத்தை வந்தடைந்தோம். வாசலில் ஒரு சின்ன கையடக்க ஜெனரேட்டர் சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்தால் 3000 பேர் கொள்ளக்கூடிய அந்த அரங்கத்தில் 2500 பேர் இருளில் உட்கார்ந்திருந்தார்கள். பவர் கட்.

வெளியில் நின்றிருந்த அந்தச் சின்ன ஜெனரேட்டரின் உயிரில் மேடையில் மங்கலான ஒரு விளக்கொளியும், மைக்கும் இயங்க குழுவினரின் கலைநிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பாடியவரின் குரலிலும், பாடலிலும் எழுச்சியும் அரசை நோக்கிய சாடலும் நிறைந்திருந்தது. நண்பரும் நானும் கடைசி வரிசையில் உள்ள காலி சீட்டுக்களில் அமர்ந்தோம்.

பின்பு நடந்த அணு உலை எதிர்ப்பு மாநாட்டு கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார் ‘மே 17’ இயக்கத்தின் திரு. அவர் பேசியபோது இந்தியாவின் பெருமுதலாளிகள் இந்தோனேஷியாவில் எண்ணெய்க் கிணறு தோண்டுமளவு வளர்நதிருப்பதாக குறிப்பிட்டார். அணு உலை மட்டுமல்ல எண்ணெய் தோண்டுவதாலும் கூட சுற்றுப்புறச் சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடலுக்கு அடியில் 2.5 முதல் 5 கிலோ மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்படும் எண்ணெய்க்குழிகளில் இருந்த 70 லட்சம் லிட்டர் வரை எண்ணெய் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் புவியின் ஆழத்தில் ஏற்படும் வெற்றிடம் மற்றும் அடுக்கு நகர்வுகள் சுனாமி, பூகம்பம் போன்றவை ஏற்படவும் ஒரு காரணமாய் அமைகின்றன. காவிரி ஆற்றுப் படுகையில் மட்டும் 18 இடங்களில் எண்ணெயும், 11 இடங்களில் இயற்கை வாயுவும் எடுக்கும் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அடுத்து பேசிய தமிழ்த் தேச மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் இருக்கும் உதயகுமாரின் இரு சகோதரர்கள் அங்கேயும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளார்கள் என்று குறிப்பிட்டார்.

அடுத்து பேசிய விடுதலைத் தமிழ்ப் புலிகள் அமைப்பின் குடந்தை அரசன் பேசிய போது அமெரிக்காவில் கடத்தப் பட்ட விமானத்தை அணு உலையைச் சுற்றி பறக்க விட்டு மிரட்டி அரசுடன் பேரம் பேசியதைக் குறிப்பிட்டு அணு உலை அந்த அளவிற்கு ஆபத்து நிறைந்தது என்பதை வலியுறுத்தினார்.
இந்தக் கணத்தில் மேடையேறிய உதயகுமார் மிக சாதாரணமாக வேட்டி சட்டையணிந்து வந்திருந்தார். கடைசி வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டார். பின் சில பேச்சாளர்கள் அவரை முன்னே அழைத்து தங்கள் இருக்கையில் அமர வைத்தனர்.

தமிழ்த் தேச தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த கருப்பசாமி பேசும் போது அணு உலை பாதுகாப்பானது என்று ஒரு பிரிவும் பாதுகாப்பற்றது என்று மற்றொரு பிரிவும் நின்று பேசுவதானது அணு உலையே வேண்டாம் என்று எழும் குரலை அமுக்கி விடவே என்று குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசிய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் பேசும் போது ஒரு கதையைக் கூறினார். விவசாயி ஒருவர் விளைந்த நெல்லை தீட்டி அரிசியாக்க ஆலைக்குச் சென்று கொடுத்தார். திரும்பி அரிசியாக வாங்கி வரும் போது வெளியில் வாசலில் இருந்த போர்டில் ‘தங்கப் பாண்டி தவிட்டாலை’ என்று போட்டிருந்தது. ‘ஏன் அரிசியாக ஆக்கிக் கொடுக்கும் ஆலையை அரிசியாலை என்று போடாமல் தவிட்டாலை என்று போட்டிருக்கிறீர்கள்?’ என்று இவர் கேட்க அந்த ஆலை அதிபர் சொன்னாராம் ‘இதில் தவிடும் தானே நாங்கள் பிரித்து தருகிறோம்’ என்று. அதே போல அணு குண்டுகள் செய்ய பயன்படும் புளுட்டோனியத்தை டன் கணக்கில் உற்பத்தி செய்யும் அணுகுண்டு உலையில் கரண்ட்டும் கிடைப்பதால் அணு மின் நிலையம் என்று கூறுவதும் இருக்கிறது.

பெண்கள் உரிமைப் பேரவையின் பானுமதி பேசும் போது தமிழகமே இருளில் மூழ்கிக் கொண்டிருக்கும் போது நெய்வேலியில் இருந்து கிடைக்கும் மின்சாரம் நம் தமிழ்நாட்டுக்கு தரப்படாமல் கேரளாவிற்கும், கர்னாடகாவிற்கும் விற்கப்படுவது கண்டிக்கப்பட வேண்டியது எனக் குறிப்பிட்டார்.

வின் டிவியின் டி.எஸ்.எஸ். மணி பேசும் போது தூத்துக்குடி பழைய காயலில் கன நீர் ஆய்வகம் என்ற பெயரிலும், தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் என்ற பெயரிலும், கூடங்குளத்தில் மஹேந்திரபுரியில் கன நீர் ஆய்வகம் என்கிற பெயரிலும் இயங்குபவை எல்லாம் உண்மையில் அணு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலைகளே என்று குற்றம் சாட்டினார். நண்பர் கல்பாக்கத்தின் பக்கத்தில் கூட இது போல ஒரு இடத்தில் அணுகுண்டுகள் செய்யும் தொழிற்சாலை இருப்பதாகக் கூறினார். எனக்கு நெஞ்சில் திடுக்கென்று அடித்துக் கொண்டது.

தலித் விடுதலைக் கட்சியைச் சேர்ந்தவர் பேசும் போது கன்னியாகுமரியில் சுனாமியின் போது 200 டன் எடையும் 200 அடி நீளம், 65 அடி அகலம் கொண்ட இரும்புப் பாலம் தூக்கி வீசப்பட்டது என்று குறிப்பிட்டார். ஆனால் அப்துல் கலாமோ சுனாமியால் அணு உலைக்கு எந்தப் பாதிப்பும் வராது என்று சாமி சத்தியம் செய்கிறார்.

பூவுலகின் நண்பர்கள் என்கிற அமைப்பைச் சேர்ந்தவர் பேசும் போது கூடங்குளம் 1000 மெகாவாட் திறனுள்ளது என்கிறார்கள். அதில் 700 மெகாவாட் தான் அதனால் சாதாரணமாக உற்பத்தி செய்ய முடியும். தமிழ் நாட்டுக்கு அதில் 20 சதவீதம் அதாவது 280 மெகாவாட் தான் இதிலிருந்து கொடுக்கப்படும். மீதி அனைத்தும் மற்ற மாநிலங்களுக்கு. இதே போலத் தான் கல்பாக்கத்திலிருந்து கடப்பாவிற்கு அணு மின்சாரம் கொடுக்கப்படுகிறது என்றார். சென்னை பல்கலைக் கழகத்திற்கு அருகேயுள்ள பழம்பெரும் காஸா மஹால் தீப்பிடித்து அங்கு இயங்கி வந்த அரசு அலுவலகங்கள் தீக்கிரையான போது அதை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பியது தமிழக அரசு. அந்தக் குழு காஸா மஹாலைச் சுற்றிப் பார்த்து விட்டு சேதம் பற்றிய ஆய்வு செய்யவும் அறிக்கை தரவும் ஒரு வார காலம் ஆகும் என தமிழக அரசிடம் தெரிவித்தது. ஆனால் நம் அப்துல் கலாமோ காலையில் போய் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பு என்ற பெயரில்  இருக்கும் கூடங்குளம் அணு உலையை சுற்றிப் பார்க்கிறார். மாலையிலேயே பத்திரிக்கையாளர் பேட்டியில் ஆய்வு முடிந்ததாகக் கூறி, அணு உலை மிக்க பாதுகாப்பாக இருப்பதாய் அறிவித்து 40 பக்க அறிக்கை தருகிறார். இந்த அறிக்கை எப்படிப் பட்டது என்று வினவினார் பேசியவர்.

டி.எஸ்.எஸ் மணி பேசும் போது நடுவில் சிறு சலசலப்பு. வந்தது விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவன் வந்து மேடையில் ஏறினார். சிறிது நேரத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வந்து சேர்ந்தார்.
சிறிது நேரத்திலேயே திருமா பேசினார். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து பார்லிமெண்ட்டில் உண்ணாவிரதம் இருந்ததாகவும், நாடாளுமன்றத்தில் அணு சக்தி கூடாது என்று வாதிட்டதாகவும் தெரிவித்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று போராடும் கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்று கேட்டார். ரஷ்யாவோ அமெரிக்காவோ யார் கொண்டு வந்தாலும் அணு உலை தீயது தான். கம்யூனிஸ்ட்டு கட்சியின் (சிபிஎம்) நேற்று நடந்த மாநாட்டில் போடப் பட்ட முக்கியமான தீர்மானம் தமிழ்நாட்டில் இன்னும் சாதிய ஒழிப்புக்காகப் போராட வேண்டும் என்பது. அறுபது வருடங்களுக்கு முன் பெரியார் போட்ட தீர்மானம் இது. கம்யூனிஸ்ட்டுகள் கடந்த பத்தாண்டு காலமாக போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகள் தங்கள் நாடுகளின் எல்லா அணு உலைகளையும் மூடிவிடப் போவதாக அறிவித்துள்ளன. கேரளாவில் தான் முதன் முதலில் கூடங்குளம் கட்டப்படுவதற்காக இடம் பார்க்கப் பட்டது. பின்னர் கேரள அரசின் எதிர்ப்பால் தமிழ்நாட்டில் கூடங்குளம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றார்.

பின்னர் பேசிய சீமான் தனக்கே உரிய பாணியில் அரை மணி நேரம் பேசினார். கூடங்குளம் ஆபத்தில்லாததுன்னு சொல்பவர்கள் பார்லிமண்டைச் சுற்றி பாதுகாப்பாக பத்து கட்டி வைத்துக் கொள்ள வேண்டியது தானே என்றார். அணு மின்சாரம் பாதுகாப்பானது என்றால் தெருவுக்கு தெரு அணு மின் உலை வைக்க வேண்டியது தானே என்று கோபமாகக் கேட்டார். மாலை நடக்க விருக்கும் மாநாட்டில் தொடர்ந்து பேசுவதாகச் சொல்லி சீக்கிரமே பேச்சை முடித்துக் கொண்டார்.

தமிழ்நாடு மக்கள் பீடம் – கண்ணன்., சிபிஐ எம்.எல் – சுப்பிர மணியன் போன்று இன்னும் பல அமைப்பினரும் பேசினர். கூட்டத்திற்கு வந்த கூட்டம் எல்லாம் காசு கொடுத்து கூட்டி வரப்பட்ட கூட்டமாகத் தெரியவில்லை. இடிந்த கரை மக்களின் போராட்டத்தில் மிஷனரிகளின் பங்கு சர்ச்சுகளின் வழியாகவும், போதனைகள் வழியாகவும் இருப்பதாகவும், அதே போல் சாதிய அமைப்புகளின் மூலமாகவும் ஆதரவுகள் திரட்டப்பட்டதாக நண்பரொருவர் கூறினார். இதில் உண்மையும் இருக்கிறது. ஆனால் நம் பிரதமர் சொல்வது போல் உதயகுமார் அமெரிக்காவிலிருந்து வரும் பணத்திற்காக அணு உலையை எதிர்த்துப் போராடுகிறார் என்பது எவ்வளவு தூரம் உண்மை ?

சிபிஎம் நண்பர் ஒருவரிடம் கூடங்குளம் அணு உலை பற்றி சிபிஎம்மின் நிலைபாடு பற்றிக் கேட்ட போது கூடங்குளத்தில் உள்ள இரண்டு அணு உலைகளைத் திறப்பதில் அவர்களுக்கு சம்மதம் என்றும், மற்ற 6 அணு உலைகளும் 1-2-3 ஒப்பந்தத்தால் கட்டுப்படுத்தப் படுவதால் அவற்றைக் கட்ட எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். சிபிஎம் அணு சக்திக்கு எதிரானது அல்ல. மாறாக அமெரிக்காவின் பிடியினுள் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி துறையை அடமானம் வைக்கும் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு மட்டுமே  எதிரானது என்று ஆணித் தரமாகக் கூறினார்.

உலகெங்கும் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் வலுக்கும் காலத்தில் இந்திய சிபிஎம் மட்டும் இன்னும் விவரம் தெரியாமல் ‘ஆக்கத்திற்கே அணு சக்தி’ என்கிற சிறுபிள்ளைத் தனமான வாசகங்களைக் கையாளுவது வேதனையாக இருக்கிறது. சிபிஐ கூட பரவாயில்லை. எல்லோரும் மக்களின் கோபத்தை வடிக்க ஆளும் வர்க்கம் பயன்படுத்தும் கருவி சிபிஎம் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதை எப்போது உணர்வீர்கள்? முன்பு ஈழப் பிரச்சனை (2009ல் ஈழப் படுகொலைகள் நடந்த போது வாயே திறக்காத சிபிஎம் இன்று ராமகிருஷ்ணன் இலங்கையில் மக்கள் கொல்லப்பட்டதையும் இன்னும் முகாம்களில் அல்லல் படுவதையும் கண்டித்து தீக்கதிர் நாளேட்டில் 2012 மார்ச்ல் முழங்குகிறார்); இப்போது கூடங்குளம்.. அணு சக்தி ஆக்கத்திற்கு பயன்படுத்தப் படுவதென்பது சிங்கத்தின் நகங்கள் நீளமாக இருக்கிறதென்பதால் அதை முதுகு சொறியச் சொல்வது போல இருக்கிறது.

அணு உலைக்கு யுரேனியம் தோண்டுவது முதல் கடைசியில் அணு உலை கழிந்த அணுக் கதிர் கழிவுகளை பூமிக்கடியில் 3 கி.மீ ஆழத்தில் புதைத்து அதை இளவு காத்த கிளி போல பல நூறு வருடங்கள் பார்த்துக் கொள்வது வரை எல்லாமே பணம் தின்னும் தனியார் காசு கொழிக்கும் ப்ராஜக்ட்கள் என்பதற் காகத்தான் அவை முன்னிறுத்தப் படுகின்றன. மக்களுக்கு ரொம்ப உபயோகமுள்ளது என்று நம்ப வைக்கப் படுகின்றன. மக்கள் பணங்களை பல்லாயிரம் கோடிகளைத் தின்று கோழி கழிவது போல கொஞ்சமே கொஞ்சம் கழியும் மின்சாரத்தை மக்களுக்கு அல்வா என்று கூறி விற்கும் கதை தான் இங்கு நடக்கிறது.

உதயகுமார் கட்சி சார்ந்தவர் அல்லர். தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர் தான். அவர் போராடுவது மனதுக்கு சந்தோஷமாக இருந்தாலும் என்ஜிஓக்களின் மீதான நம்பகத்தன்மை நமக்கு சமீப காலமாக வலுவிழந்து வருவதால் இவர் என்றைக்கு குடை சாய்வார் என்று உள்ளூர ஒரு பயமும் எழுகிறது. ஏனென்றால் அரசியல் அற்ற போராட்டம் என்பது ஏகாதிபத்தியத்தின் நாடக மேடையில் மக்களுக்காக நடத்தப் படும் புரட்சி எனும் நாடகமாகத் தான் இருக்க முடியும் என்பதை கடந்த காலத்தில் நிகழ்ந்த எவ்வளவோ நிகழ்வுகள் உறுதிப் படுத்தியுள்ளன. லிபியாவில் கடாபி கொல்லப்பட்டது கடைசியாய் நடந்த புரட்சி நாடகம்.

மேலும் உதயகுமார் என்னதான் உறுதியாகவே இருந்தாலும் இது போல அரசியல் பின்புலமில்லாத தலைவர்களை, இயக்கங்களை ஒரு என்கௌன்டர், ஒரு துப்பாக்கிச் சூடு, ஒரு தடியடியில் வேண்டுமென்றே அடிவயிற்றில் உதைத்து ஆறு மாதங்களுக்கு ஆஸ்பத்திரியில் அவதிப்பட வைக்கும் போலீஸ் பூட்ஸ் கால்கள் என்று இவர்களை தடுக்க ஏகப்பட்ட தடைகள் இருக்கின்றன. இதையும் தாண்டி இவர் ஜெயிக்க முடியுமா என்பது சந்தேகமே!

கூடங்குளம் மக்களின் எதிர்காலம் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அணு உலையின் சாதக பாதகங்களை அலசும் சுவ்ரத் ராஜூவின் கட்டுரையை  படியுங்கள். இன்னும் நிறைய விஷயங்கள் புலனாகும்.