இந்தியாவின் புதிய ரூபாய்க் குறியீடு
உலகின் பெரும்பான்மையான நாடுகள் தங்கள் நாட்டிற்கான தனித்தனியான பணம் மற்றும் காசுகளை அச்சடித்துக் கொள்கின்றன. இதற்கு காரணம் தனது நாட்டுப் பொருளாதாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், மற்ற நாடுகளுடான பொருளாதார உறவுகளுக்கும், தொடர்புகளுக்கும், பணம் மற்றும் பொருள் பரிமாற்றங்களுக்கும் ஒரு ஒப்பீட்டு அளவாகவும் அந்தந்த நாட்டின் பண மதிப்பு உபயோகப்படுகிறது.
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, போன்ற வல்லரசுகள் தங்களது நாட்டின் பெருமையைப் பறைசாற்ற தங்களது பணத்திற்கு தனியான குறியீடுகள் கொண்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் கியூபா, தாய்லாந்து போன்ற சிறு நாடுகளும் உண்டு. தற்போது இந்த லிஸ்ட்டில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இந்தப் பெருமையை ஊடகங்கள் எல்லாம் ஆகா, ஓகோ எனப் புகழ்ந்து தள்ள, நம்ம ஊர்த் தினத்தந்தி அடுத்த நாளிலிருந்தே குறியீட்டை தலைப்புச் செய்தி முதல் தற்கொலைச் செய்திவரை போட்டு பெருமிதம் காட்ட ஆரம்பித்துவிட்டது.
ரூபாய்க் குறியீடு தேவைப்பட்டதற்கான அரசியல் காரணம் என்ன என்று புரியவில்லை. ஒருவேளை இந்தியா தெற்காசிய வல்லரசாக விரும்புவதன் ரகசியக் குறியீடாக இருக்கலாம். இக்குறியீட்டை மக்களே தேர்ந்தெடுத்தார்கள் என்று “காட்ட’ கடந்த 2009 மார்ச்சில் இதற்காக மக்களிடையே ஒரு போட்டி நடத்தி( நுழைவுக் கட்டணம் 500ரூ) ஏழு உறுப்பினர்களடங்கிய குழு போன வருடம் அக்டோபரிலும், டிசம்பரிலும் கூடி ஆராய்ந்து அதில் தேர்ந்தெடுத்த குறியீடே இது. இத்தேர்வில் நடந்த குளறுபடிகளும் மேம்போக்கான செயல்பாடுகளும் போட்டி எல்லாம் சும்மா கண்துடைப்புக்கே என்பது போல் இருந்தன.
இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய குறியீட்டை வடிவமைத்தவர் கெளகாத்தி ஐ.ஐ.டி.யில் உதவிப் புரொபசராக வேலை செய்யும் உதயகுமார் என்கிற தமிழர். இக்குறியீடு எளிமையானதாகவும் ஏற்கனவே இருக்கும் இந்தி, ஆங்கில எழுத்துக்களை ஒத்திருப்பதாலும் இது எளிதாக மனதில் பதிந்துவிடும் தன்மை கொண்டுள்ளது. ஆனாலும் உதயக்குமாருக்காக எவ்வளவு தூரம் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்று உறுதியாக கூறமுடியவில்லை. இக்குறியீட்டுக்காக அவர் சொன்ன கருத்தாக்கம் “இது நமது தேசியக் கொடியை குறிக்கிறது. இதன் வடிவமைப்பு தேவநாகரி எழுத்துமுறையில் (ஹிந்தியில் 'ர') என்கிற எழுத்தும் ரோமன் எழுத்துமுறையில் R என்கிற எழுத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் போடப்பட்டிருக்கும் இணை கோடுகள் சமத்துவத்தை பிரதிபலிக்கிறது. எழுத்துக்கள் மேலிருந்து தொங்குவது போன்ற கோடு கொண்ட எழுத்துமுறை தேவநாகரி மற்றும் இந்தி எழுத்துக்கள் தான். எனவே இது இந்தியாவை சிறப்பாகக் காட்டும் குறியீடு”. இக்குறியீட்டை வடிவமைத்த அவருக்கு அளிக்கப்பட்ட பரிசுத்தொகை 2.5 லட்சம் ரூபாய்.
இந்தியாவில் யாருமே பேசாத, இன்னும் அரசு மொழியாக இருக்கக்கூடிய, பிராமணர்கள் கடவுளின் மொழி என்று கூறுகிற, சமஸ்கிருத மொழியின் ஆதி மொழிதான் தேவநாகரி. இந்தியாவுக்கு சம்பந்தமே இல்லாத மொழி ரோமன் மொழி. இவற்றை இணைத்து தான் புதிய குறியீடு வடிவமைக்கப்பட்டுள்ளது.
செம்மொழியான தமிழ் மொழியாம் என்று ரஹ்மானை வைத்துப் பாட்டுப் போட்ட கலைஞர் குடும்பம் இதில் தொனிக்கும் “இந்தி = இந்தியா” என்கிற குறியீட்டு நிகழ்வை கவனிக்கவேயில்லை. கலைஞர் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளி போன்ற இந்தியல்லாத மொழி பேசும் யாரும், ஏன் கம்யூனிஸ்ட்டுகளும் இதைப் பற்றி கேட்கக் கூட இல்லை. இது தவிர இந்தக் குறியீடு தேர்ந்தெடுப்பில் குளறுபடிகள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இறுதிச் சுற்றிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5 குறியீடுகளில் 4 குறியீடுகள் மும்பையிலிருந்தும் (உதயகுமார் மும்பை ஐ.ஐ.டி) ஒன்று கேரளாவிலிருந்தும் வந்துள்ளன. இன்னொரு தகவலின் படி உதயகுமாரின் குறியீடு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 குறியீடுகளிலேயே இல்லை. தகவலறியும் சட்டம் மூலம் இந்தத் தேர்வு முறை பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டபோது கிடைத்த தகவல்களை ‘இந்திய ரூபாய்க் குறியீட்டைக் காப்போம்’ (http://www.saveindianrupeesymbol.org) என்கிற இணையதளம் தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் கிடைத்துள்ள சில குளறுபடிகள்.
1. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உதயகுமார் 4 டிசைன்கள் சமர்ப்பித்துள்ளார். அவருடைய டிசைன் இறுதிச் சுற்றில் 5ல் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. போட்டி விதிமுறையின் படி ஒருவர் இரண்டுக்கு மேல் டிசைன்கள் சமர்ப்பிக்கக்கூடாது. அப்படிச் சமர்ப்பித்தால் அவரது முதல் இரண்டு டிசைன்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் நிதியமைச்சகம் எந்த டிசைன் எந்த தேதியில் பெறப்பட்டது என்கிற தகவல்கள் எதையும் வைத்துக் கொள்ளவேயில்லை. ஒரு டிசைன் எப்போது சமர்ப்பிக்கப்பட்டது என்பது பற்றி சொல்ல வழியும் இல்லை.
2. இறுதிச் சுற்றுக்கான 5 பேரில் ஒருவர் போட்டிக்கு முன்னதாக நிதியமைச்சகத்துடனும் (Finance Ministry) RBI உடனும் தொடர்புள்ளவராக இருந்துள்ளார். நந்திதா காரியா மெஹ்ரோத்ரா (Nondita Correa Mehrotra) என்பவர் இறுதிச் சுற்றுக்காகத் தேர்வானவர்களில் ஒருவர். இவரே தான் இப்படிப் போட்டி நடத்தவேண்டும் என்று முதலில் ஐடியா சொன்னவரும் கூட.
3. வெற்றி பெற்ற குறியீட்டுக்கான கருத்து, டிசைனை காண்பிக்கும் போது நடுவர்கள் முன் சமர்ப்பிக்கப்படவில்லை (பின்னர் தயாரிக்கப்பட்டிருக்கலாமோ ?).
4. இதற்கு முந்தைய சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2644 பேர். இவர்களிலிருந்து 5 பேரை தேர்ந்தெடுத்ததில் எந்த விதமான மதிப்பெண் முறையும், தரப்படுத்தல் முறையும் பயன்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு நடுவரும் தனித்தனியே மதிப்பெண்கள் கொடுத்ததாகவும் அதிலிருந்து சராசரி எடுத்ததாகவும் பின்னர் நிதியமைச்சகம் கூறியது.
5. 7 நடுவர்கள் 17 மணிநேரம் செலவு செய்து 2644 பேரிலிருந்து 5 பேரைத் தேர்வு செய்துள்ளனர். அதாவது ஒரு குறியீட்டைப் பார்வையிட செலவிட்ட நேரம் வெறும் 20 செகண்டுகள் என்றாகிறது. இந்த 20 செகண்டில் குறியீட்டுக் கருத்தாக்கம் பற்றிய விளக்கத்தையும் படிக்கும் நேரமும் அடக்கம்.
6. செப்டம்பர் 2009, 29 மற்றும் 30 தேதிகளில் கூடிய கூட்டத்தில் 3 நடுவர்கள் கலந்துகொள்ளவே இல்லை. இரண்டு நாட்களும் வந்திருந்த நடுவர் ஒரே ஒருவர் மட்டுமே. முதல் நாள் வந்த மற்றவர்கள் அடுத்த நாள் வரவில்லை.
7. பண்பாட்டுத் துறை அமைச்சகத்தின் நடுவர் இறுதி செய்யப்பட்ட குறியீடு காட்சியளிக்கப்பட்ட தினத்தன்று வரவில்லை.
8. ஏழு நடுவர்களும் இத்தேர்வின் போது எந்தக் கட்டத்திலும் மொத்தமாக சந்தித்துக் கொண்டதே இல்லை.
9. இந்தப் போட்டியில் மொத்தம் கலந்து கொண்டவர்கள் எத்தனை பேர், எத்தனை குறியீடுகள் பெறப்பட்டுள்ளன, எத்தனை நிராகரிக்கப்பட்டன, என்ன காரணத்திற்காக என்பது பற்றிய தகவல்கள் எதுவும் நிதியமைச்சகத்திடம் இல்லை.
10. இப்போட்டிக்கான விளம்பரம் ஆங்கில மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. மாநில மொழிகள் எதிலும் விளம்பரங்கள் வெளியிடப்படவில்லை.
வட இந்திய ஊடகங்கள் இந்தக் குளறுபடிகளை பெரிதாக எடுத்து ஆராய்ந்த போதும் அவை அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட குறியீட்டை பெரிதாய் விமர்சனம் செய்யவில்லை. ஏனெனில் அது ஹிந்தி எழுத்து போல் இருப்பதே. நம்ம ஊர் ஊடகங்கள் எல்லாம் உதயகுமாருக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்ததோடு சரி.
தமிழையும் மற்ற பிராந்திய மொழிகளையும் புறக்கணிக்கும் வகையில் ‘இந்தி = இந்தியா’ என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்த இந்தக் குறியீட்டை புறக்கணிக்கவேண்டுமா ? இல்லையா ?
நான் முடிவு செய்துவிட்டேன். தமிழர்களாக நீங்களும் முடிவு செய்துகொள்ளுங்கள்.