மத்திய அரசின் பழங்குடி மக்களுக்கு எதிரான ‘Green Hunt’ஐ கண்டித்து நடந்த கூட்டத்தில் அருந்ததிராய் பேச்சு.
04-06-2010, வெள்ளிக்கிழமை.
இடம்:சென்னை, தி.நகர், தேவநாயகம் பள்ளி மைதானம் - திருப்பதி தேவஸ்தானத்திற்கு எதிரில்.
அருந்ததி ராய் பேச வருகிறார் என்று கேள்விப்பட்டதும் ஆர்வத்துடன் கிளம்பினோம். மாலை 5.30 மணியளவில் ஆரம்பித்திருந்தது கூட்டம். நாங்கள் சற்று தாமதமாகச் சென்றிருந்தோம். உள்நாட்டு அடக்குமுறைக்கு எதிரான இயக்கம் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ம.க.இ.க தோழர்களின் தலைகள் நிறைய தெரிந்தன. தியாகு வரவேற்று பேசிக்கொண்டிருந்தார். சுமார் ஒரு 1500 பேருக்கு மேல் திறந்தவெளி மைதானத்தில் அமர்ந்திருந்தனர். மேடையில் அருந்ததிராயுடன், விடுதலை ராஜேந்திரன், தியாகு மற்றும் சாய்பாபா, கிலானி (டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர்கள்) போன்றோருடன் இன்னும் பலர் அமர்ந்திருந்தனர். பெரிய மின்விசிறியொன்று மேடை மொத்தத்திற்கும் காற்றை திருப்பிவிட்டுக் கொண்டிருந்தது. வெயில் காலமானாலும் மாலை நேரமாகிவிட்டதால் மைதானத்தில் இதமான சூழல் நிலவியது. தியாகுவிற்குப் பின் சாய்பாபா ஆங்கிலத்தில் பேசினார். தியாகு பின்னர் இப்பேச்சையும் அருந்ததிராய் மற்றும் கிலானியின் பேச்சுக்களையும் தமிழில் (அப்படியே அழகாக) மொழிபெயர்த்தார்.
தியாகு பேசுகையில் “இந்தக் காலத்தில் மாவோயி்ஸ்ட் என்பவனின் வரையறை அரசால் விரிவுபடுத்தப்படுகிறது. மாவோயி்ஸ்ட் என்பவன் காடுகளில் ஆயுதம் ஏந்தி பழங்குடியினரோடு கலந்து நின்று போராடுபவன் மட்டுமல்ல அவன் இங்கு நகரத்தில் கூட இருக்கலாம் என்று விரிவுபடுத்துகிறது. ‘யாராவது மாவோயிஸ்ட்டுகளை ஆதரித்துப் பேசினால் அவர்கள் சிறைத் தண்டனைக்குள்ளாவார்கள்’ என்கிற அரசின் எச்சரிக்கை இதற்கு எடுத்துக்காட்டு. நேற்று இலங்கையில் நடந்தது. இன்று லால்கரில் நடக்கிறது. நாளை உங்களுக்கு இது நடக்காது என்று என்ன நிச்சயம்.” என்று பேசினார்.
பேராசிரியர் சாய்பாபாவின் பேச்சிலிருந்து சில:
அமெரிக்காவில் தியோடர் ரூஸ்வெல்ட் ஜனாதிபதியாக இருந்தபோது அங்கிருந்த அந்நாட்டின் உண்மையான பழங்குடிகளான (தற்போதைய வெள்ளையர்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிலிருந்து சென்றவர்களே) செவ்விந்தியர்களை விரட்ட அமெரிக்காவை மீட்க(?) ‘சிவப்பு வேட்டை’(Red Hunt) என்கிற அழித்தொழிப்பு நடவடிக்கையை தொடங்கினார். அந்த சமயத்தில் செவ்விந்தியர்களை அவர் ‘நல்ல இந்தியன் என்பவன் செத்த இந்தியன்’(The good Indian is a Dead Indian) என்று கேலியாகக் கூறினார். அதேபோலத் தான் தற்போது லால்கார் பகுதியில் இந்திய அரசு நடத்தும் ‘பச்சை வேட்டை’யும்(Green Hunt) அப்பகுதியில் உள்ள 3.5 கோடி பழங்குடியினரை விரட்ட(கொல்ல) முயற்சிக்கிறது. உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஒரு பேட்டியில் இலங்கையில் விடுதலைப் புலிகளை அழிக்க சிங்கள அரசு செய்ததை மாவோயிஸ்ட்டுகளை அழிப்பதற்கு முன்-மாதிரியாக(Model) கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். சிவப்பு வேட்டையில் சொல்லப்பட்ட கைப்பற்று-கட்டுப்படுத்து-முன்னேற்று (Hold-Control-Develop) என்ற மந்திரமே பச்சை வேட்டையிலும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உலகளாவிய அடக்குமுறை இன்னும் தொடர்கிறது. சாய்பாபா பேசிய பின் அடுத்ததாக கலைக்குழுவினர் அரசின் அடக்குமுறையை எதிர்த்து ஒரு பாடல் பாட அதைத் தொடர்ந்து கிலானி பேசினார்.
பேராசிரியர் கிலானியின் பேச்சிலிருந்து சில:
லால்கார் பழங்குடியினர் ஒருவரிடம் நீதிமன்ற விசாரணையில் கேட்கப்பட்ட கேள்வி “மாவோயிஸ்ட்டுகள் ஏன் பள்ளிகளை வெடிவைத்து தகர்க்கிறார்கள் ?”
அதற்கு அவர் சொன்ன பதில் “அதைச் செய்வது மாவோயிஸ்ட்டுகள் அல்ல. நாங்களே தான். ஏனென்றால் இப்பள்ளிகளில் தான் அரசின் பாதுகாப்புப் படையினர் வந்து தங்குகின்றனர். எங்கள் வீடுகளையும், உடைமைகளையும் நாசமாக்குகின்றனர். எங்கள் வீட்டுப் பெண்களை இவ்விடத்தில் வன்புணர்ச்சி செய்து சீரழிக்கின்றனர். எனவேதான் நாங்களே இப்பள்ளிகளை சிதைத்துவிடுகிறோம்”. நீங்கள் அன்றாடம் செய்திகளில் படிக்கும் செய்திகளை இத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். சிலர் கணிப்பது போல் ஒரு புறம் மாவோயிஸ்ட்டுகளாலும் மறுபுறம் இந்திய அரசின் படைகளினாலும் சூழப்பட்டு சண்டையின் நடுவில் மாட்டிக் கொண்டவர்கள் பழங்குடியினர் என்கிற ‘சாண்ட்விச் கோட்பாடு’ம்(Sandwich Theory) உண்மையல்ல.
உண்மையில் டாடாக்களும், பிர்லாக்களுக்கும் ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், அஸ்ஸாம் மாநில அரசுகளுக்குமிடையே நூற்றுக்கணக்கில் கையெழுத்திடப்பட்ட MOUக்களின் பின்னே ஆரம்பித்தது தான் விளைவுகள்(மேற்கு வங்க சி.பி.எம். அரசு கார்பரேட் கம்பெனிகளுடன் தண்டகாரண்யா பகுதி வளங்களைச் சுரண்ட அனுமதிக்கும் எந்த ஒப்பந்தமும் போட அனுமதிக்கவில்லை என்பது இங்கே குறிக்கவேண்டிய ஒரு முக்கிய விஷயமாகும். தவறுதலாக மேற்குவங்க மாநிலத்தையும் குறிப்பிட்டுவிட்டேன். தவறு திருத்தப்பட்டுள்ளது. - மொ.ர்). இந்தக் கம்பெனிகளின் பணத்தால் ஒவ்வொரு கிராமத்திலும் ‘கிராம பாதுகாப்புக் குழு’(Village Defense Committee) ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பாதுகாப்புக் குழுக்கள் பயங்கர ஆயுதங்களுடன் கிராம மக்களை காட்டுமிராண்டித்தனமாக அடக்கி ஆள முற்பட்டனர். காஷ்மீரிலும் இதே போல் ஆரம்பிக்கப்பட்ட கிராம பாதுகாப்புக் குழுக்களில் முன்னாள் ராணுவ வீரர்களும், பெரும்பான்மை இந்துக்களும் இருந்தனர். இவர்களுக்கும் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கும் நடக்கும் சண்டைகளில் இவர்கள் கொல்லப்பட்டால் செய்திகளிலும், தொலைக்காட்சிகளிலும் ‘முஸ்லீம் தீவிரவாதிகள்’ ஒரு ‘இந்துவை’க் கொலை செய்ததாகச் செய்திகள் வெளிவரும். நாட்டின் 77% பேர் ஒரு நாளைக்கு வெறும் 20 ரூபாயில் உயிர்வாழும் இந்நாட்டில் தான் ஏழைகளிலும் ஏழைகளாய் இயற்கையோடு வாழும் பழங்குடியினரை குறிவைத்துக் கொல்கிறது இந்திய அரசு. காஷ்மீரில் மட்டும் 2005 ஆண்டுவரை 350 என்கெளண்டர் கொலைகள் மத்திய அரசின் ராணுவப் படைகளால் நடத்தப்பட்டுள்ளதாகவும், இது பற்றி விசாரிக்க மாநில அரசுக்கு அனுமதி வேண்டும் என்று கோரி காஷ்மீர் மாநில அரசு இந்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. அந்த அளவிற்கு மனித உரிமை மீறல்களை ‘தீவிரவாதிகளை அழிப்பது’ என்கிற போர்வையில் இந்திய ராணுவம் புரிந்துள்ளது. இந்த UPA அரசு POTA சட்டத்தை வாபஸ் பெற்ற அதே நாளன்று பாரளுமன்றத்தில் ஏற்கனவே இருந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மேலும் ஷரத்துகள் சேர்த்து கடுமையானதாக மாற்றப்பட்டது.
பின்னர் அருந்ததி ராய் பேசினார். இவ்வளவு பேர் கூடியிருக்கும் கூட்டத்தின் முன்பு தான் பேசியதில்லை என்றும், தான் ஒரு மேடைப் பேச்சாளரல்ல என்றும் தெரிவித்த ராய் தொடர்ந்து பேசினார். அமைதியாக, மெலிதான வார்த்தைகளுடன் அழுத்தமான, தெளிவான, ஆரவாரமற்ற உரை நிகழ்த்தினார்.
அருந்ததி ராயின் உரைச் சுருக்கம்:
இந்தப் போர் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க, மக்களை காக்க அரசால் நடத்தப்படும் போர் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் இது அரசு நடத்த விரும்பிய போர். இந்த அரசு மக்களின் அரசு (Welfare State) என்று சொல்லிக் கொண்டாலும் உண்மையில் இது பெரும்முதலாளிகளின் அரசாகும்(Corporate State). நூற்றுக்கும் மேற்பட்ட MOUக்கள் (Memorandum Of Understanding – புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்) பஸ்தார், லால்கார், தண்டகாரண்யா பகுதிகளில் டாடா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல் போன்ற கம்பெனிகளால் அந்தந்த மாநில அரசுகளுடன் போடப்பட்ட ஒப்பந்தங்கள். அக்காடுகளில், பழங்குடியினரின் இயற்கையான இருப்பிடமான அம்மலைகளில் பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள பாக்சைட், இரும்புத் தாது மற்றும் வைரங்கள் போன்றவை இருப்பதை சாட்டிலைட் மூலம் அறிந்து இவர்கள் அந்த இயற்கை வளங்களைச் சுரண்டி தங்கள் லாபத்திற்கு விற்க போடப்பட்டவை தான் இந்த ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்கள்.
இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானவுடன் ‘சால்வார் ஜூடும்’ அதாவது Peace Hunt என்று பெயரிடப்பட்ட குழுக்கள் டாடாவின் பொருட் செலவால் உருவாக்கப்பட்டன. இக்குழுக்களின் வேலை, மலேசியாவில் 1950 களில் வெள்ளை இனத் தளபதியான பிரிக்ஸ் என்ற பிரித்தானிய தளபதி கம்யூனிஸப் புரட்சியாளர்களை ஒடுக்க கையாண்ட ‘தரைச் சுத்திகரிப்புச் செயல்பாடு’(Ground Clearing Operation) என்கிற அழிப்பு உத்தியை தண்டகாரண்யா பகுதிகளில் செயற்படுத்தலாகும். இந்த உத்தியின்படி பயங்கர ஆயுதங்களுடன் கிராமம் கிராமமாகச் சென்ற சால்வார் ஜூடும் குழுவினர் அந்தக் கிராமவாழ் பழங்குடி மக்களை அடித்து, துன்புறுத்தி, பாலியல் கொடுமை செய்து, உடைமைகளை அழித்து, கிராமங்களை எரித்து அம்மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து அரசின் முகாம்களுக்கு துரத்தி விட்டனர். இவ்வாறு 650 கிராமங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அதாவது சுத்தமாக்கப்பட்டன. 50000 மக்கள் கொல்லப் பட்டனர். 3.5 லட்சம் மக்கள் காணாமல் போயுள்ளனர். ஜிந்தால்களும், மித்தால்களும் பாக்சைட்டையும் அலுமினியத்தையும் தோண்டி லாபம் பெறுவதற்காக இம்மக்கள் இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பம்பாயில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் நான் பழங்குடியினருடன் இணைந்த மாவோயிஸ்டுகளின் போராட்டத்தின் நியாயங்களைப் பேசினேன். அடுத்த நாள் அனைத்து செய்தி மற்றும் தொலைக் காட்சி ஊடகங்கள் அதை வெளியிட்டன. அதற்கு மறுநாள் இந்திய அரசு செய்தி நிறுவனமான பி.டி.ஐ (PTI) ‘அருந்ததிராய் தான் ஒரு மாவோயிஸ்ட் என்றும் முடிந்தால் இந்திய அரசு தன்னை கைது செய்யட்டும்’ என்று நான் சவால் விட்டுப் பேசியதாக ஒரு பொய்ச் செய்தி வெளியிட்டது. முந்தைய நாள் என்னுடைய உண்மையான பேச்சை வெளியிட்ட அதே ஊடகங்கள் அடுத்த நாள் இந்தச் செய்தியையும் பெரிதாக வெளியிட்டன. ஏனென்றால் இவ்வூடகங்கள் பெரும் நிறுவனங்களால்(Corporate) தான் நடத்தப்படுகின்றன. நான் கைது செய்யப்படுவதற்கு அஞ்சவில்லை. நான் ஒரு எழுத்தாளர். தனிப்பட்ட ஆளான எனக்கு என் மனத்தில் தோன்றும் சமுதாயக் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட உரிமை இருக்கிறது. நான் எப்போதும் அரசு அடக்குமுறைக்கு எதிர்ப்பக்கம் நின்று போராடும் மக்களின் பக்கம் தான். அதே சமயம் இம்மாதிரிப் பொய்யான விஷயங்களை வெளியிடும் ஊடகங்களை நான் கண்டிக்கிறேன். மாவோயிஸ்ட்டுகளின் விஷயத்தில் ‘இயற்கையான முறையில் இயற்கை வளங்களை தோண்டி எடுத்தல்’ என்னும் மாவோயிஸ்ட்டுகளின் கோட்பாட்டில் எனக்கு கேள்வி இருக்கிறது. பாக்சைட் தாதுவிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுப்பது மிகுந்த நஞ்சை வெளியேற்றும் ஒரு வேதியல் செயல்முறையாக உள்ளது. இது எப்படி இயற்கையானதாக இருக்கமுடியும் ?
இப்போராட்டம் இந்தியாவில், ராய்ப்பூர், பாஸ்கோ, கலிங்க நகர் போன்ற பகுதிகளில் இயற்கையுடன் இன்னும் இணைந்து வாழும் 3.5 கோடி பழங்குடி மக்களின் மாபெரும் போராட்டமாகும். முதலாளித்துவத்தை 5-6 ஆண்டுகளாக பழங்குடியினரால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில் இந்திய அரசியலில் இரு பூட்டுக்கள் திறக்கப்பட்டன. ஒன்று பாபர் மசூதி; இரண்டாவது சுதந்திரச் சந்தை. இவற்றைத் திறக்க இரண்டு அடிப்படை வாதங்கள் தேவைப்பட்டன. ஒன்று இந்துத்துவ அடிப்படைவாதம்: மற்றொன்று பொருளாதார அடிப்படைவாதம். இந்த வாதங்களை நிறைவேற்ற தீவிரவாதம் என்கிற போலி எதிரி தேவைப்பட்டது. ராணுவம் என்பது ஜனநாயக சக்தியல்ல. எல்லா நாட்டு ராணுவங்களும் மோசமானவை தான். இலங்கையில் சிங்களர்களால் நடத்தப்பட்ட போர்; ஒரு லட்சம் பேரைக் கொன்ற போர் ஒரு பெருமுதலாளியப் போரே (Corporate War).
ஆனால் சிங்கள அரசைப் போல் இந்திய அரசு அவ்வளவு நேரடியாகவும், கொடூரமாகவும் மக்களை உடனே கொல்லாது. ஏனென்றால் இவர்கள் கொல்வதில் நம்பிக்கையுள்ளவர்கள் அல்ல; மாமிசம் உண்ணாதவர்கள்; அந்தணர்கள். எனவே இவர்கள் மெதுவான இனப்படுகொலையில்(Slow Genocide) நம்பிக்கை வைத்துள்ளனர். லால்கார் பகுதியில் பணியாற்றும் சேவை அமைப்பின் மருத்துவர் ஒருவர் ‘இங்குள்ள பழங்குடி மக்களில் பலருக்கு உடலில் வாழத் தேவையான அடிப்படைச் சத்துக்கள் கூட இல்லாததால் ‘பற்றாக்குறை எய்ட்ஸ்’(Nutritional AIDS) என்ற வியாதியால் பலர் இறந்து போகிறார்கள் என்று கூறினார். ஆனால் நகரத்தில் வசிக்கும் நடுத்தர வர்க்கமாகிய நாமோ இது பற்றி எந்த அக்கறையுமில்லாதவர்களாக வாழ்கிறோம். ’என்னிடம் ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டார் ‘இந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர் யார்?’ என்று. அதற்கு நான் சொன்ன பதில் ‘இந்தியாவின் சுயநலமான நடுத்தர வர்க்கம்’(middle class). இந்நடுத்தர வர்க்கம் தான் தேசியம், நாட்டுப் பற்று என்று பேசி இயற்கை வளங்களை ‘தொழில் வளர்ச்சி’ என்கிற பெயரில் ஏகாதிபத்தியங்கள் சுரண்டுவதை ஆமோதித்து வரவேற்கிறது.
இந்தக் கம்பெனிகளுக்கு ஆதரவாக மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்க விமானப் படை தாக்குதல் நடத்தப் போவதாகப் பேசும் ப.சிதம்பரம் முன்பு என்ரான் மற்றும் வேதாந்தா சுரங்கக் கம்பெனிகளுக்கு வக்கீலாக இருந்தவர்; அக்கம்பெனிகளில் போர்டு டைரக்டராக இருந்தவர். காஷ்மீரில் இதுவரை கொல்லப்பட்ட மக்கள் 98000 பேர். நாடிழந்து, காணாமல் போனவர் எத்தனையோ. இதே போல ஈழத்தில் சென்ற வருடம் இந்தப் போரை நடக்க அனுமதித்து அமைதியாக படுகொலைகளை வேடிக்கை பார்த்த தவற்றை தமிழர்களாகிய நீங்கள் செய்திருக்கிறீர்கள். இந்திய அரசின் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான கொள்கை என்ன ? அழித்தொழிப்பு (Annihilation) தான். 4 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட பாக்சைட் மலைகளை நீங்கள் அப்படியே விட்டுவிட விரும்புவீர்களா ? அங்குள்ள அருவி நீர் வளத்தை நீங்கள் அப்படியே விட்டுவிடுவீர்களா ? அங்குள்ள காடுகளில் உள்ள மரங்களை நீங்கள் வெட்டாமல் விட்டுவிடுவீர்களா ? பழங்குடியினரையும் மாவோயிஸ்டுகளையும் அப்படியே விட்டுவிடுவீர்களா ? சொல்லுங்கள்.
இந்த மலைகளைக் குடைந்து சுரங்கம் தோண்டி பாக்ஸைட் தாது வளங்களை அள்ளி எடுக்க டாடா போன்ற இந்தப் பெருங்கம்பெனிகள் அரசுக்கு கொடுக்கும் ராயல்டி கட்டணம் எவ்வளவு தெரியுமா ? ஒரு டன்னுக்கு வெறும் 24 ரூபாய்.
அதிலிருந்து அவர்களின் லாபமோ 50000 ரூபாய். இதே போல இரும்புத் தாதுவும் எடுக்கப்படும். இதைத் தடுக்க தங்களின் இயற்கை வாழிடத்தை பாதுகாக்க எழுந்த பழங்குடியினரின் போராட்டத்துடன் இணைந்து வழிநடத்துவது தான் மாவோயிஸ்ட்டுகளின் போராட்டம். பெரும்பாலான நேரங்களில் மக்களின் போர்த்தந்திரம் ‘தத்துவங்களின்’ அடிப்படையில் தான் அமைந்திருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. சாலையில் காந்தியவாதியான ஒருவர் காடுகளில் மாவோயிஸ்ட்டாக இருக்கக்கூடும். காட்டில் இயற்கையோடு வாழும் ஒருவர் எப்படி ‘வேலைப் புறக்கணிப்பு’ என்று சத்தியாகிரகம் செய்ய முடியும் ? உண்ணாவிரதம் இருக்கமுடியும் ?
தாந்தேவாடாவின் இன்ஸ்பெக்டர் என்னிடம் கொல்லப்பட்ட 16 பேர் புகைப்படங்களைக் காட்டி இவர்கள் எல்லாம் மாவோயிஸ்ட்டுகள் என்று சொன்னார். அவர்களில் பெண்களும் இருந்தனர். நான் புகைப்படத்தை வைத்து இவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்று நான் எப்படி நம்புவது என்றேன். அதற்கு அவர் இவர்கள் எல்லாம் டெட்டால், டிங்ச்சர் போன்ற முதலுதவி மருந்துகள் வைத்திருந்தார்கள் மேடம். இவை எல்லாம் இவர்களுக்கு எப்படிக் கிடைத்தன ? இவர்கள் மாவோயிஸ்ட்கள் தான் என்றார். மாவோயிஸ்ட்டுகளுக்கான வரையறை எப்படி மாறியிருக்கிறது பாருங்கள். அந்த இன்ஸ்பெக்டர் பேசும் போது சொன்னார். ‘இந்தப் போரில் எப்படி ஜெயிப்பது என்று நம் அரசுக்குத் தெரியவில்லை. இம்மக்கள் எல்லாரும் சுயநலமற்றவரகளாக இருக்கிறார்கள். இவர்களை சுயநலமுள்ளவர்களாக மாற்றினாலே போதும். அதற்கு வீட்டுக்கு ஒரு கலர் டி.வி. கொடுத்தாலே போதுமானது’. அவர் கூற்று எவ்வளவு உண்மை என்பது உங்களுக்குத் தெரியும். ஏனென்றால் இம்மாநிலத்தில் ஒரு பெரும் தலைவர் இதைத்தான் உங்களுக்கு செய்திருக்கிறார் என்று சொன்னார்கள். இச்சுயநலம் தான் நம்மை வெறியாளர்களாக மாற்றியிருக்கிறது. தேர்தல் போன்ற எல்லா ஜனநாயக முறைகளும் எவ்வளவு சீர்கேடாகிப் போய்விட்டன என்பது உங்களுக்குத் தெரிகிறது. பின் ஏன் ஓட்டுப் போடுகிறீர்கள் ? ஓட்டுப் போடாதீர்கள்.
தற்காலத்தில் முதலாளித்துவம் இல்லாத ஒரே சமூகம் பழங்குடியினரின் சமூகம் மட்டுமே. முதலாளித்துவத்தால் இதை சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதனால் அவற்றை அழித்து நம்மைப் போல் முதலாளித்துவ சிந்தனை கொண்ட நகரங்களாக்கப் பார்க்கிறது. இது தான் ஆப்கானிஸ்தானத்தின் பழங்குடியினருக்கும் நடக்கிறது. இதற்கு எதிராக பழங்குடியினரின் எழுச்சி வெவ்வேறு தத்துவங்களின் கீழ் நடக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் தீவிரவாத இஸ்லாமியப் போராளிகளாலும், இந்தியாவில் தீவிரவாத கம்யூனிஸத்தாலும் என வெவ்வேறு விதங்களில் நடைபெற்றாலும் போராட்டம் என்பது ஒன்று தான். எதிரி ஒன்று தான்.