Monday, November 25, 2024

தளபதி ஜெயம். போராளியின் இறுதி வெடி !





எல்லாம் முடிந்துவிட்டது.

முன்னால் கடல்.
பின்னால் நிலம்.

இதுதான் நான் இறுதியாக காணப்போகும் விடியும் வானம்.
நிலம் பூராவும் எதிரிகள். கந்தகமணம். சிறு பற்றைகள். அவற்றுக்கப்பால் நம் நிலம்பூராயும் எதிரிகள்.
எதிரிகள் பேசும் சத்தம் கேட்கிறது.

வானம் வெளித்ததும் அவர்கள் முழுமையாக பிடித்துவிடுவார்கள்.
சிலவேளை இறுதியாய் இருப்பது நாம் இருவராக இருக்கலாம்.
எங்கள் தரப்பின் துப்பாக்கி வேட்டுகள் பூராகவும் ஒய்ந்துவிட்டது.
திடீரென ஏற்பட்ட புவி அதிர்வில் உதிர்ந்த கோட்டைபோல் ஆகிவிட்டது எங்கள் தேசம்.

அருகே கபிலன். அவன் கட்டாய ஆட்சேர்ப்பில் வந்த பிள்ளை. ஆனால் கடைசிவரை என்னோடு வந்துவிட்டான். நீ போய்விடு என்றால் அடம்பிடித்துவிட்டான். என்னோடு ஒரு வருடமாகத்தான் இருந்தான். சரணடைய மறுத்தே விட்டான். எத்தனையோ போராளிகளை சந்தித்தேன். இவன் வாழ வேண்டிய பிள்ளை.
‘அண்ண உங்களுக்கு என்ன முடிவோ அதுவே எனக்கும் என்கிறான்.’
கபிலன் அறிவான பிள்ளை. ஒரு முழுமையான போராட்ட வாழ்வில் என் இறுதி கணம் கபிலன் அருகில் முடியப்போகிறது. எம்மை உயிரோடு எதிரி பிடிக்க முடியாது. இரண்டு குப்பிகள், இரண்டு கைத்துப்பாக்கி. இதுபோதும்.

நளாவும் வீரச்சாவு என்று அறிந்தேன். முக்கியமான அந்தத்தாயுடன் சேர்ந்து நளா வெடித்துச்சிதறிவிட்டாள். பிள்ளைகளோடு எவ்வளவு பிரியமாக இருந்தாள் ? அவளால் இதை எப்படிச்செய்ய முடிந்தது ? அவள் தியாகங்களுக்கு உலகில் உதாரணம் கிடையாது. தாயை விட்டுவிட்டு போர்க்களம் சென்ற பிள்ளைகள் இருந்தார்கள். தன் குழந்தைகளை விட்டுவிட்டு களமுனை சென்று வெடிக்கும் தாயை யாரும் அறிந்ததுண்டா ? தன் வீரச்சாவவைக்கூட மக்கள் அறியார் என்று தெரிந்தும், போராட்டம் இன்றோ நாளையோ வீழ்ந்துவிடும் என்று அறிந்தும் அவள் தன் மண்ணுக்காக வீழ்ந்தாள். அவளை இந்த இறுதி நேரத்தில் நினைக்கவேண்டும். என் மனம்போல இருந்தாள்.

பிள்ளைகளை உறவுகளுடன் விட்டுவிட்டு களமுனையில் கடைசிவரை நின்ற தாயாக நளா இருப்பாள். அது யாருக்கும் தெரியாமல் இருக்கும். இப்போது நடக்கும் எந்தக்காவியத்தையும் சொல்பவர்கள் உயிரோடு இருக்கப்போவதில்லை. நானே ஒருமுறை , ‘நீ பிள்ளைகளோடு வெளியேறு’ என்றபோது, மறுத்துவிட்டு கோள்சறோடு களமுனை சென்றாள்.
அன்பு நளா ! உன் திண்மை என்னிடம் இல்லை. உனக்கு என் நன்றி. நான் போராளியாக மட்டும் இருந்தேன். நீ தாயாக, போராளியாக, மனைவியாக.. என் விழுப்புண்கள் வலிதரும்போது தாதியாக.. உன் மனபலம் எந்த இரும்பையும் நொருக்கும். எந்த வலியையும் தாங்கும். நான் வலியால் துடிக்கும்போது ‘ஒருதளபதி இப்படி துடிப்பதா’ என்பாய். ஒருபோதும் உனக்கு வலித்தபோதும் நீ துடித்ததில்லை. எத்தனை மகத்தான துணையாக இருந்தாய் ?
உன் உடல் எங்கு சிதறியதோ நானறியேன். ஆனால் இந்த நிலத்தில் மிக அருகில் எங்கோ வெடிகுண்டு கட்டி வெடித்தாய் என்பது மட்டும் தெரியும்.
சூரியன் வரமுதல் உன்னை என் ஆன்மா சந்திக்கும். மறுமுறை பூரணவாழ்வு கிடைத்தால் உன்னோடு வாழவேண்டும். நாம் குறைந்த நாட்கள் வாழ்ந்து, நிறைய நாட்கள் போராளியாக இருந்தோம்.

ஓ.. என் பிள்ளைகள் ! ஆகரன் ! சிந்துசை ! நீங்கள் இப்போது வவுனியா அகதி முகாமில் இருப்பீர்கள். என் பிள்ளைகள் என்று இராணுவம் கண்டுபிடிக்காமல் இருக்கவேண்டும். நீங்கள் கேட்ட பரிசுப்பொருட்களை தமிழீழம் கிடைத்தததும் வேண்டித்தருவேன் என்றேன். உங்கள் அடிமைப்பட்ட இனத்தின் தந்தையால் அதை செய்ய முடியவில்லை. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆனால் அப்பாவையும், அம்மாவையும் நினைத்தபடியே இருப்பீர்கள். உங்களை அனாதையாக்கிவிடப்போகிறோம். இந்த பாவப்பட்ட பெற்றோரை பற்றி என்ன நினைப்பீர்களோ தெரியவில்லை.
எப்போதும் உங்களை பேரன்போடு வருடும் உங்கள் அம்மா நேற்று மாலை இறந்துவிட்டார். உங்கள் அப்பா இன்னும் சிறிய நேரத்தில்.

அப்பா, அம்மாவின் கனவுகளை மறக்க மாட்டீர்கள். எப்படியும் உங்களை என் தம்பி லண்டன் அழைத்துவிடுவான். நீங்கள் உறுதியோடு வளருங்கள். நம் மக்கள் உங்களை கைவிட மாட்டார்கள். அந்த நம்பிக்கையில்தான் நாம் போகிறோம்.

ஓ.. எத்தனை தியாகங்கள் ? எத்தனை உயர்த வீர புருசர்கள் ? எத்தனை தியாகங்களால் தேசம் உருவானது. இதோ.. இதோ.. எல்லாம் முடியப்போகிறது. இந்த முடிவு வேறொன்றின் தொடக்கம் ஆகலாம். ஆனால் இந்த உலகு அதர்ம அச்சிலே சுழல்கிறது. அதை மாற்றும் மனிதன் வருவான். காலம் எல்லாவற்றையும் உருவாக்கும்.
இந்தப்போராட்டம் உயிர்களை கொல்லத்தோன்றியதில்லை. கொலைகளை நிறுத்தத்தோன்றியது.

அவர்கள் தமிழர்களை தேடித்தேடி வேட்டையாடியபோது விரும்பா பிறப்பாகத்தானே பிறந்தது. இத்தனை இளைஞர்களின் உயிர்களும் இந்தத்தோல்விக்காகவா கொடுக்கப்பட்டது ? இத்தனை இறப்புகளும் நம் விடுதலைக்காகவே விதைக்கப்பட்டது. எப்படி இது தோற்றது?
காலம் ஆராய்ந்து கருத்திடட்டும். அது காலத்தின் வேவல.

நான் நம்மக்களுக்காக உண்மையாய் இருந்தேன். இந்த மரண நொடிவரை. என்னைப்போலவே உயிர்கொடுத்த என் வீரர்களும். இது நம் கடன். அதை நாம் தவமாக செய்தோம்.

இங்கினியாகலையில் காடையர்கள் 150 இளைஞர்களை வெட்டியதில் ஆரம்பித்தார்கள். அதன்பின் எத்தனை கொலைகளை மக்கள் சந்தித்தார்கள். ?ஆண்டாண்டுகாலம் வாழ்ந்த எங்கள் மண்ணில் எங்கள் மக்கள் முப்பது ஆண்டுகளாக துரத்தப்பட்டும், கொல்லப்பட்டதால்தானே ஆயுதம் ஏந்தினோம். ! அன்று அந்தக்கொலைகளை தடுத்திருந்தால் இந்த கொலைத்தொழிலை நாம் விரும்பி ஏற்றிருப்போமா ?
எனக்கு அந்த நாள் நினைவுக்கு வருகிறது..

வவுனியா எல்லைக்கிராமத்தில் நாம் இருந்தோம். எப்போதும் பதட்டத்துடனே ஐயா, அம்மா இருப்பார்கள். காடையர்கள் எப்போது வருவார்கள் ? வந்தால் மொத்த உயிரும் சிரச்சேதம் செய்யப்படும் என்று தெரியும். எமக்கு பாதுகாப்பென்று அன்று யாருமில்லை. நம்முயிரை எப்போதும் பறிக்கும் உரிமை சிங்களக்காடையருக்கு இருந்தது. முதலில் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது ? மனிதர்களை மனிதர்கள் கொல்ல எப்படி முடிகிறது ? சிங்களவர்களுக்கு நாம் என்ன செய்தோம் ? என்று புரியவில்லை.

ஒருநாள் அருகே இருந்த கிராமத்தில் புகுந்து வெட்டிவிட்டு சென்றுவிட்டனர். அம்மா கண்ணீரோடு இருந்தார். அப்போதுதான் அம்மாவிடம்
‘ஏன் அம்மா சிங்களவர் எம்மை கொல்கிறார்கள் ? ’
என்று கேட்டேன். அம்மாதான் கொலைகாலக்கதைகளைச்சொன்னார்.

என் மனமெங்கும் வேதனையும், கொடும் கோபமும் இருந்தது. இதற்கு சிறுவனான என்னால் எப்படி தடுக்க முடியும் என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டிருந்தேன்.
இந்தச்சம்பவம் நடைபெற்று சரியாக ஒருமாதம் கழிய எம் கிராமம் தாக்கப்பட்டது. என் அப்பா படுகாயத்தோடு தப்பியிருந்தார். மாட்டுப்பட்டவர்கள் வீடுகள் கொழுத்தப்பட்டு தலைகளை வேலிகளில் குத்திவிட்டு சென்றனர். பட்ளிக்கூடத்தால் வந்த எனக்கு கிடைத்த காட்சி மனிதத்தலைகளும், எரிந்த வீடுகளும். எங்கள் வீடும் எரிந்திருந்தது. முதல்நாள் என்னோடு விளையாடிய பத்துவயதான சிவதாசன் தலை வேலியில் குத்தப்பட்டிருந்தது. பிள்ளைத்தாச்சியாக இருந்த வக்சலா அக்காவின் வயிறு கிளிக்கப்பட்டு சிசுவை எடுத்து தடியில் குத்தி வைத்திருந்தார்கள். ஆண்களின் உடலங்கள் அங்கம் அங்கமாக வெட்டப்பட்டிருந்தது.

இந்தக்காட்சிதான் என்னை ஆயுதம் ஏந்த தள்ளியது. வன்னியில் மாத்தையா அண்ணரின் தொடர்புள்ளவர்களோடு தொடர்பை கடுமையான பிரயத்தனத்தில் ஏற்படுத்தி புலிகள் இயக்கத்தில் இணைந்தேன்.

எனது நோக்கம் எங்கள் மக்களை காப்பதே. அதைவிடுத்து எந்த மாற்றமும் என்னிடம் இருந்தால் மரணம்தான். என்று நானே முடிவெடுத்திருந்தேன்.
இயக்கத்தினுள் நடந்த சூறாவளிக்காலத்தில் என் மனம், உடல் வதங்கியகாலம். என் விரல் நகங்கள் பிடுங்கப்பட்டபோதும் நான் உண்மையான என் கனவில் உறுதியாக இருந்தேன். போராட்டம் என்பது எவ்வளவு கடுமையானது என்பதை சொல்லித்தந்தது அந்த நாட்கள். உயிரையும் கொடுத்து காக்க வேண்டியவரே தவறு செய்திருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும் ?

எந்த நிலையிலும் இறுதிவரை களமுனையில் போராடிச்சாவதே என் நோக்கம். நான் பார்த்த இனக்கொலைக்காட்சி எப்போதுமே என் மனதில் இரும்புத்திரையாக நிற்கும். அதனாலே உறுதியோடு இருந்த என் நிலையால் 1994 இல் மீண்டும் இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டேன்.

அதைவிட கொடுமையான காலத்தை நான் சந்தித்ததில்லை. இதோ இப்போது நாம் முற்றாக அழியும் நிமிடங்களானாலும் நாம் நம் மக்களுக்காக இறக்கின்றோம் என்ற நிம்மதி உண்டு. போராடப்புறப்பட்டவர்களின் ஆசைகளால் ஏற்படும் தவறுகளால் இழந்த உயிர்களும், தவறும் இலட்சியச்சியத்தை விட கொடிய விசம் வேறொன்றுமில்லை.

எந்தச்சூழலிலும் என்கிராமத்தில் நான் கண்ட காட்சிதான் எத்தடையையும் தாங்கி இந்த மக்கள் இலட்சியத்தில் என்னால் இந்த நிமிடம்வரை நிற்க முடிந்தது.

எங்கள் மக்களுக்கு என்ன சொல்வது ?! உங்கள் இயக்கம் உங்களை விட்டுப்போகிறது. உங்களில் இருந்துதோன்றிய இந்த வீரர்களில் சில தவறுகளும் பல தியாகங்களும் நிகழ்ந்தன. எந்த சமூக அமைப்பிலும் குழப்பமானவர்கள் இருப்பார்கள். அவர்களின் செயல்களால் உங்களுக்காக உயிர்கொடுத்த அந்த உன்னதங்களை மறந்து விடாதீர்கள்.
உங்களை மீண்டும் ஒரு அனாதை நிலையில் விட்டுவிட்டு நாம் செத்துப்போகிறோம். நீங்கள் பட்ட துயர்களுக்கு உண்மையானவர்கள் உண்மையாக இறுதிவரை போராடினோம். எங்களை மீறிய முட்கள் உங்களை குத்தியதை நாம் அறிவோம்.
உங்களின் நல்வாழ்வுக்காக உண்மையோடிருந்த உங்கள் பிள்ளைகளின் ஏக்கங்கள் ஒருநாள் உங்களுக்கு நிம்மதியான வாழ்வைத்தரும். நீங்கள் ஒற்றுமையாக காத்திருங்கள். உங்கள் பிள்ளைகளை அறிவானவர்களாக வளர்த்தெடுங்கள். வரலாறு உங்கள் கைகளில் ஒருநாள் வந்துசேரும்.

மனிதனை மனிதன் கொல்வது கொடிது. இந்த கொடிய காலம் எங்கள் கரங்களில் திணிக்கப்பட்டது. கொலைவெறியற்ற சிங்களம் உருவானால் மட்டுமே தமிழர்கள் பாதுகாப்பாக வாழமுடியும். அதன் வழிமுறைகளை கண்டுபிடிக்க உங்கள் குழந்தைகள் முயலட்டும்.
எங்கள் மரணத்தின் பின்னாவது உலகம் உங்களை காக்கும்.

விடமாட்டார்கள் ! எங்கள் மக்கள் விடமாட்டார்கள் ! நம் தமிழக உறவுகள் கொதித்தெழுவார்கள் ! புலம்பெயர் உறவுகள் சேர்ந்தெழுவார்கள்.
இந்த இழப்பு. இன்னொன்றை பிறப்பிக்கும். நிச்சயம் நம் மக்களின் கொடிய வாழ்வு முடிவுக்கு வரும்.
எங்கள் மக்களே ! சென்று வருகிறோம். மண்ணே ! உன்மடியில் நீண்ட ஓய்வெடுக்கப்போகிறேன்.
‘’கபிலன் ! கபிலன் ! வானம் வெளிக்கிறது.. தயாராகு… இதோ நான் தயாராகிவிட்டேன் . குப்பியை வாயில் கடித்ததும் காதுக்குள் பிஸ்ரலால் சுட்டுவிடு. அடுத்த நொடி உடல்மட்டும் மிஞ்சும்.’’

வலப்பக்கத்தில் தென்னைமரம் ஒன்று நின்றது. காகம் ஒன்று பதட்டத்தோடு குறுக்கே பறந்து சென்றது. அலை வீசிய கடல் அழுதுகொண்டிருந்தது. எங்கள் கடலில் எதிரிகளின் போர்க்கப்பல் தெரிந்தது. எங்கும் துப்பாக்கி இயங்கிக்கொண்டே இருந்தது. அவை இராணுவத்தின் துப்பாக்கிச்சத்தங்கள்தான். அவர்கள் வீரர்கள் வாழ்ந்த காற்றுக்கும் சுட்டுக்கொண்டிருந்தார்கள்.

மேகங்கள் ஒன்றையும் காணவில்லை. அதிகாலைக்குருவிகளின் சத்தம்கூட இல்லை. அவை எங்கு பறந்து போயினவோ தெரியவில்லை. தங்களோடு வாழ்ந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று பறவைகள் அழுதிருக்கும். மனிதர்களை நினைத்து அவை குளம்பிப்போயிருக்கும். ‘இவர்கள் அறிவற்றவர்கள்’ என்று அவை நினைத்திருக்கும். மனிதனை மனிதன் கொல்வதை பார்க்கும் பறவைகளால் வேறெதை நினைக்க முடியும். ?!

அண்ணருக்கு என்ன ஆனதோ தெரியவில்லை. வரலாறு ஒரு பெருமகனை இழந்துகொண்டிருக்கிறது. வரலாற்றில் இருந்து மனிதர்கள் கற்காவிட்டால் அவை மீண்டும் மீண்டும் நிகழும்.

‘’ கபிலன்…. கபிலன்.. சத்தம் அருகே கேட்கிறது. நிலம் வெளிக்கிறது, தயாராகு ! நாம் உயிருடன் பிடிபடக்கூடாது.. நாமிருவரும் இந்த மண்ணில் வாழும் நிமிடங்கள் இவைதான். ‘’

இருவரும் தயாரானார்கள்.
குப்பி கொடுப்பில் வைக்கப்பட்டது.
வலக்கையில் இருந்த பிஸ்ரல் காதோரம் வந்தபோது, இடக்கை அருகே இருந்த அறுகம்புல்லோடு சேந்த தாய்மண்ணை அள்ளி நெஞ்சில் வைத்துக்கொண்டு தளபதி ஜெயம் 1994 இல் தலைவரால் மீண்டும் வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியை தன் காதோரம் வைத்து விசையை அமத்தினார்.

பட்ட்டீர்ர்….பட்ட்டீர்ர்.. !

‘புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் ‘

என்று கூற அதன்பிறகு அந்த நிலத்தில் யாரும் இருக்கவில்லை.

பிரிகேடியர் ஜெயம் வீரவணக்கம்-விம்பகம் | ஈழவிம்பகம்\ Eelam Images

———————————————————————-

இக்கட்டுரை ஜெனரல் ஜெயம் அவர்களின் போராட்டத்தின் கடைசி நாள் பற்றியது. விடுதலைப் புலிகளின் ராணுவத்தில் ஜெனரலாக இருந்தவர். ஆஸ்லோ பேச்சுவார்த்தைகளில் விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர். இவரது மனைவி நளா. இவரும் ஒரு போராளி. தங்களது இரு குழந்தைகளான சிந்துசை மற்றும் துவாரகனை இயக்கமும் மக்களும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டு இருவரும் போராடி வீரமரணம் அடைந்தார்கள். 

ஜெனரல் ஜெயம் பற்றிய சிறு வரலாற்றுக் குறிப்பு கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
https://eelamhouse.com/?p=2173

Tuesday, June 14, 2022

பெரியார் தமிழின எதிரியா ?








சமீபத்தில் யூ ட்யூபில் சீமானிய தமிழ்த் தேசியர்களின் சேனலான பேசு தமிழா பேசுவில் திராவிட இயக்கத்தைச் சார்ந்த அருண் துரை என்பவரை பேட்டி கண்டிருந்தார்கள்.

அந்தப் பேட்டியை பார்த்ததும் எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை இங்கே பகிர்கிறேன்.

பேட்டியானது திராவிட இயக்கத்தை 'அம்பலப்படுத்துவோம்' என்பதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. 

திகவின் வழக்கறிஞர் அருண் துரை நிதானமாகவே பேசினார். தமிழ்த்தேசிய தம்பிகள் அளவுக்கு புள்ளி விவரங்களை அவர் தரவில்லை தான். ஆனால் திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்கையும், திராவிட இனக்குழு என்பது வேறு என்பதையும், இன்று தமிழ்த் தேசியம் திராவிடத்தை எதிரியாகச் சித்தரிக்கிறது என்பதையும் தெளிவாகவே சொல்லி, அப்படிச் செய்யாதீர்கள் அது இனவெறி வெறுப்பு வாதத்தை நோக்கியே செல்லும் என்றும் அறிவுறுத்தினார்.

அருண் துரையை நோக்கி பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்று எந்த வருடம் கேட்டார் சரவணன், தமிழ்நாடு திராவிடருக்கே என்று எந்த வருடம் மாற்றினார், மொழிவாரிக் கோரிக்கை முதன் முதலில் எழுப்பியது தெலுங்கர்கள், 1909லேயே கேட்டுவிட்டார்கள் என்பது போன்ற கேள்விகளைக் கேட்டு அதற்கு அருண் துரை பதிலளிக்கவில்லை என்றதும் அவரை முட்டாளாக்கி நிறுத்தி சந்தோஷப் பட்டுக் கொண்டனர் பேசு தமிழா பேசுவினர்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த ஆண்டு எது என்றால் நான் இணையத்தில் தேடிப் பார்த்து தான் 1956 என்று சொல்லுவேன். அவ்வளவு தான் எனது மனதில் பதிந்த புள்ளி விவரங்கள்.  ஆனால் வரலாறை முழுவதுமாக தேதி வாரியாக நியாபகம் வைத்திருப்பது முக்கியமல்ல. அந்த வரலாறு எதை நோக்கியது என்கிற அறிவை வரலாற்றிலிருந்து நாம் எந்தெந்த விஷயங்களை கருத்தில் கொண்டு பெறுகிறோம் என்பதும் முக்கியம்.


உதாரணமாக விடுதலைப் புலிகளை ராஜீவ் காந்தியின் படுகொலையிலிருந்து எடுத்துப் பார்ப்போம். அது புலிகள் செய்தனரா  என்பதே கேள்வி. முன்னாள் புலியாக இருந்த சிவராசன் சிஐஏ கைக்கூலியாக செயல்பட்டு அந்த அரசியல் படுகொலையைச் செய்தான் என்பது போன்ற தகவல்களை விட்டுவிட்டு பாஜக புலிகளை பயங்கரவாதிகள் என்று எப்படி இன்றும் முத்திரை குத்த முடிகிறது ? குறிப்பிட்ட வரலாற்றுத் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றில் ஒருவரை ஹீரோவாகவோ வில்லனாகவோ இன்று மாற்றி விட முடியும். புலிகளும், காஷ்மீர் தீவிரவாதிகளும் இப்படி வில்லனாக மாற்றப்பட்டவர்கள் தான்.

அத்தகைய தகவல் தொழில்நுட்ப உலகில் நாம் இருக்கிறோம். விரல் நுனியில் லட்சக்கணக்கான தகவல்களை நாம் பெற முடியும். அதை வைத்து யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் காட்டிவிட முடியும். இந்தப் பேட்டியில் அது போன்ற ஒரு முத்திரை குத்துதல் விஷயம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று தான் பல திராவிட எதிர்ப்பு விஷயங்களும் இவர்களால் கையாளப்பட்டிருக்கும் என்பது உறுதி.

இச்சேனலில் பிரதான ஊடகவியலாளராக பேட்டி எடுக்கும் மகிழன் என்பவர் ஒரு தமிழ்தேசிய அறிவு ஜீவியாக இங்கே புகழப்படுகிறார். அவரும், சரவணன் என்னும் இளைஞரும் துடிப்பாக கேள்விகள் கேட்டதை, குறிப்பாக, சரவணன் அருண் துரையை கேள்வி கேட்டதற்கு திராவிட முகமூடியை கிழித்ததாக பின்னூட்டத்தில் பாராட்டி சந்தோஷப்படுபவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள வேண்டும். 

எவ்வளவோ புத்தகங்களை எடுத்துப் படித்த மகிழனும், சரவணனும் அதைப் பயன்படுத்தும் விதம் அறிவியல் பூர்வமாக இல்லை.

திராவிடம் என்பது தீது. அது தமிழை அழிக்கவே உருவாகியது. 

இந்த முன்முடிவோடு வரலாற்றைப் படிப்பதும், அதிலிருந்து நூறு ஆதாரங்களைத் திரட்டுவதும், அதை வைத்து கேள்விகள் கேட்டு, திராவிடம் தமிழருக்கு துரோகம் செய்தது, தமிழ்த்தேசியமே சிறந்தது என்பது போன்ற தோற்றம் காட்ட நினைப்பதும் வஞ்சகமான நோக்கம் கொண்டதாக மட்டுமே இருக்கிறது. அறிவை நோக்கிய தேடலாக இல்லை.  இது ஆராய்ச்சி செய்யச் செல்பவர் முதலில் முடிவை ரெடி பண்ணி வைத்து விட்டு அப்புறம் அதற்கேற்ற தகவல்களாக தேடுவது போல இருக்கிறது. கொலையை இவன் தான் செய்திருப்பான் என்று முடிவு செய்துவிட்டு பின்பு அதற்கென்று ஆதாரங்களை ரெடி பண்ணுவது போலத் தான் நீங்கள் செய்வதும் இருக்கிறது.

திராவிடம் என்பது ஒரு இனக்குழு அடையாளம். 

பின்பு அந்தப் பெயர் ஒரு சமூக அரசியல் இயக்கமாக உருவெடுக்கும் போது பயன்படுத்தப்பட்டது. அந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டதன் நோக்கம் ஆரம்ப கால மதராஸ் மாகாணத்தில் தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளி எனப் பல மொழி பேசுபவர்களும் இருந்ததால். இப்படி  வெவ்வேறு மொழி பேசுபவர்களும் மொழி வேற்றுமையைத் தாண்டி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற நோக்கமே திராவிடம் என்கிற சமூக இயக்கப் பெயராக அமையக் காரணம். சரி உங்களுக்கு திராவிடம் என்று பெயர் வேண்டாம் அது தமிழம் என்று தான் வந்திருக்க வேண்டும் என்கிறீர்களா. சரி வைத்துக் கொள்ள வேண்டியது தான். பிரச்சனை தீர்ந்தது. அதை விடுத்து திராவிடம் என்பது தீரா விடம் என்பது போன்று அதன் தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்தையுமே  திட்டமிட்ட சதி என்ற கதையாடல் தான் நெருடுகிறது.

திராவிட இயக்கத்தின் முன்னோடியான பெரியாருக்கு கன்னடரை முன்னிலைப் படுத்த வேண்டும் என்று கூட தோன்றியிருக்கலாம். பெரியார் ஒரே சீராக சிந்தித்தார் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நிலை நிறுத்த முயல்வார்கள். அருண் துரை கூட அப்படித் தான் பேசினார்.  ஆனால் அது உண்மையல்ல தானே. அவர் ஒரு மனிதர். பல வகையான காலச்சூழலில் வெவ்வேறு வகையான முடிவுகளை அவர் எடுத்திருக்கிறார்.  

பெரியார் தீவிர மொழிப் பற்றாளர் இல்லை. ஒரு கட்டத்தில் வெள்ளையன் நம்மை ஆளட்டும் எனவே வீட்டில் எல்லோரும் ஆங்கிலம் பேசுங்கள். அவனது கலாச்சாரத்தை பின்பற்றினால் நம் எல்லோரும் சாதி ஏற்றத் தாழ்விலிருந்து வெளியேறிவிடலாம் என்று சொல்லியிருக்கிறார். சுதந்திரமடைந்த இந்தியாவில் திராவிட நாடு என்று ஒரு பெரும் பகுதியாக ஆரியர் அற்ற பகுதியாக ஹிந்தி பேசாத தென்மாநிலங்களை பிரித்துக் கொள்ளலாம் என்று கருதியிருக்கிறார்.  கீழ் வெண்மனியில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய மக்களை இவன்கள் ஏன் போராடுகிறான்கள் என்று இழிவாகக் கேட்டிருக்கிறார். அதே பெரியார் பிற்காலத்தில் தெளிவு பெறுகிறார். திராவிட நாடு என்ற கருத்தில் மொழி வாரியாகப் பிரிந்த மாநிலங்கள் சுயநலமோடு பிரிந்து போனதை வருத்தமாகத் தெரிவிக்கிறார்.  அதன் பின் தனித் தமிழ்நாடு என்று பேசி, இந்தியா மாநிலங்களோடு சுதந்திரம் தரப்பட்டதை பிராமண ஆதிக்கத்திடமே மீண்டும் மாட்டிக் கொண்டோம் என்று எதிர்த்தார். 


பெரியாருடைய நோக்கமெல்லாம் பார்ப்பனீய எதிர்ப்பு, கடவுள், மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமத்துவம், சமூக நீதி, பெண்ணியம் என்ற விஷயங்களை மையமாகக் கொண்டே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவர் பல இடங்களில் தனது நிலை பிறழ்ந்த முடிவுகளை எடுத்தவராக இருந்திருக்கிறார். எல்லோரும் இந்தி பேசுங்கள் என்றெல்லாம் கூட சொல்லியிருக்கிறார். அவர் பிறழ்ந்த இடங்களை வைத்து அவரை எதிரி என்று முடிவு செய்யக் கூடாது.


பெரியாரின் பிறழ்வுகளையெல்லாம் எடுத்து அவரை ஆய்வு செய்து இன்று விலாவரியாகப் பேச நேர்ந்திருப்பது தமிழ் தேசிய அமைப்புக்களால் தான். இது ஒரு நல்ல விஷயம். பெரியார் மாபெரும் தலைவர் தான். அவரும் தவறான பல முடிவுகளை எடுத்திருக்கிறார் என்று அறிந்து கொள்வது நிச்சயம் வரலாற்றுத் தெளிவுக்கான விஷயம் தான். திராவிட மாடல் பேசுபவர்கள் தங்களது கடந்த காலத் தவறுகளையும் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். பெரியார் அப்படியெல்லாம் சொல்லவே இல்லை என்று மறுதலிப்பது சரியல்ல. அது பூசி மெழுகி பெரியார் ஹீரோ என்பதாக நிலைநிறுத்த மட்டுமே பயன்படும். பெரியார் ஹீரோ தான். தவறு செய்யாத ஹீரோ அல்ல. தவறுகள் பல செய்த ஹீரோ தான்.


இதையெல்லாம் தெரிந்தும் நான் அவரை வெறுக்கவில்லை. அவரது வாழ்வின் போராட்ட நோக்கத்தில் குறை காணவில்லை. பெரியாரே பொய்யென்று சொல்ல விரும்பவில்லை. நீங்கள் அப்படி சொல்ல விரும்புகிறீர்கள். அதாவது பெரியார் ஹீரோவே அல்ல அவர் ஒரு பயங்கரமான வில்லைன் என்று எதிரான விஷயத்தை நிறுவ முயல்கிறீர்கள். அதன் மூலம் திராவிடம் என்கிற அடையாளத்தை அழிப்பதே சீமானின் தமிழ் தேசிய தம்பிகளின் முதல் மற்றும் முற்றான அறிவியல் ஆய்வாக இருக்கிறது. 


அப்படி ஒரு முன்முடிவோடு வரலாற்றை அனுகினால் நீங்கள் ஆயிரம் புத்தகம் படித்தாலும் அறிவு வெளிச்சம் பெறமுடியாது. மாறாக சீமானிசம் என்பதன் இனவெறிப் பக்கங்களுக்கு பல புதிய தகவல்களை திரட்டித் தருபவர்களாகவே நீங்கள் சுருங்கிப் போவீர்கள்.


திராவிட இயக்கம் ஒன்றாக இருந்த மொழிவாரி மாநிலங்கள் காலத்தில் தொடங்கி, அவை தம்தம் மொழியே தமக்குப் பெரிது என்று குறுகிய மனப்பான்மையோடு போன பின்பும் திராவிட இயக்கமாக தமிழ்நாட்டில் தொடர்ந்தது. ஏன் ? தமிழன் இளிச்சவாயன் என்று அர்த்தமல்ல.

தமிழன் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை இயல்பாகவே உள்ளுணர்ந்தவன் என்பதால்.


உங்கள் நோக்கம் திராவிட இயக்கத்தின் மூலவரான பெரியாரின் பிம்பத்தை உடைப்பது. அதன் மூலம் திராவிடம் பொய் என்று நிருவுவது. அதைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு வரலாறைப் பாருங்கள். எந்த ஒரு சமூக இயக்கமும் பொய்களாலேயே கட்டப்பட்டு காலம் காலமாக நிலவி வர முடியாது. திராவிடம் திட்டமிட்டு பொய்யாகக் கட்டப்பட்டு உருவானது என்பது மிகைப்படுத்தலான வெறுப்பு வாதத்தின் வெளிப்பாடே.


பெரியாருக்குப் பின்பு வந்த அண்ணா, கலைஞர் போன்றவர்கள் சமூக இயக்கமாக இருந்த திராவிட இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார்கள். அதிகாரத்தை கைப்பற்றினார்கள்.


அப்படி தமிழக அதிகாரத்தை கைப்பற்றியது  ஆரியரல்லாத ஒரு இடைத்தர சாதி இனக்குழு. தமிழர் தான் அவர்கள். என்றாலும் இடைச்சாதி என்று இங்கே குறிப்பிடக் காரணம், ஆரியம் என்ற உயர் சாதியினரிடமிருந்து விடுதலை பெற போராடக் கிளம்பி அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தவர்கள் இடைநிலைச்சாதியினரே. தலித்துக்கள் அல்ல.


எனவே திராவிடம் என்பது சாதீய நோக்கில் பார்த்தால் இடைநிலைச் சாதியினரின் அதிகாரக் கைப்பற்றலாகக் கருதலாம். அதனால் விளைந்த நன்மைகள் தான் அனைவருக்கும் கல்வி, வேலை என்கிற சமூக கோட்பாட்டின் படி தாழ்த்தப்பட்டவர் வரை அனைவருக்கும் கல்வியும், வேலையும், சமூக அடையாளமும் பெற்றுத் தரப்பட்டது.


அதே சமயம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய திராவிட இயக்கம் தனது கொள்கைகளிலிருந்து பெருமளவு சமரசம் செய்து கொள்ளவும் செய்தது. அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார். கலைஞர் அறிஞராக திராவிட இயக்கச் சிந்தனைகளுக்கு ஓரளவு உயிரூட்டினாலும், அவர் காலத்தில் வந்த கார்ப்பரேட் உலகில், சுயநலமிக்க அரசியல்வாதியாக சீரழிந்து போனதில் ஈழத்தில் நம் இரத்த உறவுகளையே அதிகாரத்திற்காக காட்டிக் கொடுக்கும் நிலைக்குப் போனார். 


இது திராவிட மாடல் மெது மெதுவே சீரழிந்து வந்து கடைசியில் முடிந்து போன வரலாற்றைக் காட்டுகிறது. சமூக நீதிக் கோட்பாட்டிலிருந்து பணம் சம்பாதிக்கும் அரசியலாக திமுக சுருங்கிய போதிருந்தே அதன் அழிவு ஆரம்பமாகிவிட்டது. இப்போது ஸ்டாலின் திராவிட மாடல் என்பது செத்த பாம்பிற்கு உயிர் கொடுப்பது போலத் தான். கட்சியில் உள்ள பெரும்பான்மை தொண்டர்கள் ஊழல் மிகுந்தவர்களாகவும், சமத்துவக் கொள்கை என்றால் என்ன என்று கூடத் தெரியாதவர்களாகவும், ரவுடிகளாகவும், பொறுக்கிகளாகவும் இருப்பதே திராவிட மாடலின் இன்றைய பலவீனமாந நிலைக்குச் சான்று. 


இவர்களை எல்லாம் அம்பலப்படுத்துவதில் தமிழ்த்தேசியம் தன்னை மெருகேற்றிக் கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் கலைஞர் செய்த துரோகத்திலிருந்து பின்னோக்கி ஆரம்பித்து திராவிடமே துரோகம் என்கிற முதிர்ச்சியற்ற வரலாற்றுப் பார்வையே இந்தக் கார்ப்பரேட் உலகில் மாறிக் கொண்ட இந்துத்துவா பாசிசத்தின் எடுபிடியாளாக தமிழ்த்தேசியர்களை போய் நிறுத்திவிடும் என்று எண்ண வைக்கிறது.


இந்துத்துவா பாசிசம், ராஜீவை அழிதத்தன் மூலம் காங்கிரஸை அழித்தது. பார்ப்பனீயம் இப்போது பாஜகவாக ஆட்சியில் அமரந்துவிட்டது. அடுத்து அது தமிழ்நாட்டில் ஆட்சி பெற முதலில் அங்கே இருக்கும் பிரதேச அரசியல் போக்கை காலி செய்ய வேண்டும். அதற்கு  எதிரெதிரான இரு குழுக்களை எடுத்து, அதில் ஒன்றை மறைமுகமாக ஆதரித்து இன்னொன்றை வீழ்த்துவது. இருவரில் ஒருவர் வீழ்ந்த பின், அந்த இன்னொருவரை அதிகார பலம் கொண்டு எளிதில் வீழ்த்துவது.


இத்தகைய அரசியலை வடமாநிலங்கள் பலவற்றிலும் பாஜக பின்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மேவங்கத்தில் மம்தா பானர்ஜீ கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக நிறுத்தப்பட்டு கம்யூனிஸ்ட்டுகள் அழிக்கப்பட்டார்கள். இனிமேல் மம்தாவை அழிப்பது பாஜகவுக்கு பெரிய காரியமல்ல. ஜெகன்மோகன், கேஜ்ரிவால், பஞ்சாப் ாண் ஆத்மி என்று இன்னும் வரிசையாக பாஜகவின் புதிய பி டீம்களை அடுக்கலாம்.


அதில் தமிழ்நாட்டில் இருந்து உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பது நாதகவோ என்கிற சந்தேகம் எனக்கு உண்டு. ஏனெனில் புதிய தமிழ்த்தேசியர்களின் போக்கு ஆரியத்தை விட திராவிடம் தான் முக்கிய எதிரி, அதாவது துரோகி என்பதாக வழிகாட்டுகிறது. ஆரியத்தை விட திராவிடம் தீது என்கிற இடத்தில் தான் பாஜகவின் போர்த் தந்திரத்திற்கு தமிழ்த் தேசியர்கள் பலியாகி விட்டதாகக் கருத வேண்டியிருக்கிறது.


வரலாற்றுப் பார்வையில் மிக முற்போக்கான சீர்திருத்தக் கொள்கைகள் கொண்ட திராவிடம் வழக்கொழிந்து அழியப் போகும் நிலையில் அதன் அடுத்த கால் தடமாக தமிழ்த்தேசியம் உருவாகியுள்ளது என்று முன்வைக்கும் போது தான் தமிழ்த்தேசியத்திற்கான வரலாற்றுத் தொடர்ச்சி முழுமை பெறும்.


இது தான் நான் நாதக அறிவு ஜீவி தம்பிகளுக்கு சொல்ல விரும்புவது. நன்றி.

Sunday, March 6, 2022

அப்பாவின் கனவில் அம்மா.


 

போன மாதம் ஒரு நாள் 

அப்பா திடீரென்று சொன்னார்.

அம்மாவை எரித்திருக்கக் கூடாதுடா என்று.


ஏன்ப்பா என்று கேட்டேன்.


என் கனவில் 

அவ வரவே மாட்டேன் என்கிறாள் 

என்றார்.


அப்பா சொன்னது உண்மையாக இருக்கலாம்.


என் கனவிலும் அம்மா

வரவேயில்லை.

------------------

Sunday, August 1, 2021

சென்னை பயணிகள் செல்லும் மின்சார ரயில்களை வேண்டுமென்றே காவு கொடுக்கும் திமுக அரசு



சென்னையில்  ஒரு நாளைக்கு 10 லட்சம் ஏழை, நடுத்தர மக்கள் போகிற எலெக்ட்ரிக் ட்ரெய்ன்கள்ல, வேணும்னே ஆண்கள் இந்தந்த டைம்ல போகமுடியாது என்று சொல்லி கண்டிஷன் மேல் கண்டிஷனா போட்டு, எலெக்ட்ரிக் ட்ரெய்ன்ல போற மக்கள் வயிற்றில் அடிக்கிறாங்க திமுக அரசு. 

மின்சார ரயில்களில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் டிக்கெட். போகவர 10 ரூபாய் தான் ஆகும். இப்போது அப்படி முடியாது. ரிட்டர்ன் டிக்கெட் தர மாட்டார்கள். ரிட்டர்ன் வரும்.நேரம் ஆண்கள் அனுமதிக்கப்படும் நேரமாக இருந்தாலே மட்டுமே டிக்கெட் கிடைக்கும். வழக்கம் போல  பெண்கள் மட்டும் போகலாம்னு சொல்வாங்க. அப்போ ஆண்களும் பெண்களுமாக குடும்பமாகப் போனால் அவ்வளவு தான் தொலைஞ்சீங்க.

கேட்டா கொரோனாவாம். காரணம் சொல்றாங்க.

இதே நேரத்தில்தான், மெட்ரோ ட்ரெய்ன்களில் நல்லா புல்லா ஏசி போட்டுட்டு நாள் பூரா எல்லாரும் தாராளமா போகலாமாம். அங்கே மட்டும் கொரோனா வரவே வராதாம். மெட்ரோவில் குறைந்த பட்ச ஒன்வே டிக்கட் மட்டுமே 30 ரூபாய். போய வரனும்னா 60.ரூபாய். 

படிச்ச மிடில் க்ளாஸ் மக்கள், படு கூட்டமாக நிரம்பி வழிந்து செல்லும் பஸ்களில் போக முடியாத நிலையில், இந்த மெட்ரோ ரயில்களில், வேற வழி இல்லாமல் போறாங்க. தினசரி ரெகுலராக போகும் செலவு அதிகம்.
5 ரூபாய் கொடுத்து எலெக்ட்ரிக் ரயில்களில் போன மக்கள் இனி 20-30 ரூபாய் கொடுத்து போகனும் ஒவ்வொரு தடவையும்.

சென்னையில், ஒரு நாளைக்கு 2-3 லட்சம் பேர் தான் அதிக பட்சம் மெட்ரோவுல போறாங்க. ஆனால், எலெக்ட்ரிக் ரயிலில் போறவங்க ஒரு நாளைக்கு பத்து லட்சம் பேர்.

இப்படி ஏன்யா ஏழை மக்கள் போற ட்ரெய்ன்களை கவர்மென்ட் பஸ் மாதிரி அழுக்கா அசிங்கமாக வெச்சுருக்கீங்கன்னு யார் கேக்குறது ?

புதுசா தரைக்கடியில் தோண்டி பாதைகள் போடுறாங்க. பெரும் செலவு. ஏற்கனவே இருக்கிற மின்சார ரயில்கள் இருக்கும் போது  எதுக்கு வெட்டிச் செலவு பண்றீங்கன்னு யாரும் கேக்கறதில்லை. மெட்ரோ ட்ரெய்ன்களுக்கு வருஷா வருஷம் நானூறு கோடி பட்ஜெட்டில் ஒதுக்கி செலவு புதுசா செய்றாங்க. 

ஆனால் பாமரர்கள் செல்லும் மின்சார ரயில்களுக்கு ? பட்ஜெட்டில் பேச்சே இல்லை. எலெக்ட்ரிக் ட்ரெய்ன்களையும் ஏழைகள் மாதிரி அழுக்காவே ஓட்டுறானுங்க.

எடப்பாடி ஆட்சில தான் இப்படின்னு பாத்தா, விடியல் தரும் ஸ்டாலின் ஆட்சியும் அதே கதை தான்.

நாங்க தான் மெட்ரோ இங்கே கொண்டு வந்தோம்னு பெருமை வேற பேசுவாங்க திமுககாரங்க.



இதில் ஒரு வினோதம் என்னன்னா மின்சார ரயில்கள் போகும் அதே பீச்-தாம்பரம் வழித்தடத்தில் , அதே சென்ட்ரல்-எண்ணூர் வழித்தடத்தில் தான் மெட்ரோ ரயில்களின் வழித்தடமும் இருக்குது..இதற்கு என்ன பொருள் ? கொஞ்சம் கொஞ்சமாக எலெக்ட்ரிக் ரயில்களை காலி செய்து மக்களை மெட்ரோவை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று நிர்ப்பந்திக்க முன்கூட்டியே ப்ளான் போடப்பட்டது போலவே இருக்கிறது.

ஸ்டாலினிடம் இதையெல்லாம் கேட்டால்  மின்சார ரயில் ஒன்றிய அரசின் கீழ் வருதுன்னு சொல்லி ஈசியா தப்பிப்பாரு. மெட்ரோவுக்கு மாநில அரசும் ஒன்றிய அரசும் சேர்ந்து தான் பட்ஜெட் திட்டம் போடுறாங்க.

மெட்ரோ ரயில்களை படிப்படியாக தனியார் மயமாக்கும் வேலையும் நடந்து வருகிறது. ரயில்வேயையே தனியாருக்கு விக்கிறவங்க இதை மட்டும் விட்டுடுவாங்களா ? திமுக  அரசும் இதில் உடந்தை. ஜிஆர்டி, முத்தூட் என்று பெரிய போர்டுகள் வைத்து விளம்பரமா , இல்லை ரயில் நிலையத்தின் பெயரே இதுதானா என்று புரியாத அளவிற்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் ஒவ்வொரு தனியார் நிறுவனப் பெயரை தாங்கி நிற்கின்றன. எல்லாம் தனியார் மயம். 

இதுதான் திமுக ஆளும் லட்சணம். கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக செயல்படாமல் திமுகவோ , ஸ்டாலினோ மாநில.ஆட்சியில் நீடிக்கவே முடியாது. கூர்ந்து  பார்த்தால் இந்த உண்மை தெரியவரும்.

 MRTS என்று பீச் முதல் வேளச்சேரி வரை ஓடும் பழைய மெட்ரோ ரயில்களின், ரயில் நிலையங்களின் நிலை காயலான் கடைபோலத்தான்.

இனி, ஏற்கனவே 10 ஆயிரம் பிச்சைச் சம்பளம் வாங்குகிற உழைக்கும் மக்கள்  அதில் கால்வாசியை மெட்ரோவில் வேலைக்கு போய் வர பாஸ் , டிக்கெட்டுக்கு கட்டி அழவேண்டும்.

சென்னை எலெக்ட்ரிக் ரயில்கள் மெது மெதுவாக விரைவில் அழிக்கப்படும். டில்லி மின்சார ரயில்களுக்குக் கூட இதே நிலைமைதான் என்று கேள்வி.

இன்றைக்கு எலெக்ட்ரிக் ட்ரெய்னில போய்விட்டு வந்து தான் இதை எழுதுகிறேன்.

தொழில் தொடங்குவோருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டால் தமிழ்நாடு வல்லரசாகிவிடும் என்று நினைக்கும் முதல்வர் எப்படி தனியாரை பகைத்து மின்சார ரயிலையே நம்பி போகும் சாமான்ய மக்களுக்கு நல்லது செய்வார் ? 

அதிமுக சொல்ல வேண்டாம் , அது.பாஜக அடிமை. ஆனால் திமுகவும் கண்டிப்பாக மின்சார ரயிலுக்கு உயிர் தர மாட்டார்கள் என்று தான் தோன்றுகிறது.

ஏனென்றால் ஏழைகள் மின்சரா ரயில்களில் போனால் என்ன போகாவிட்டால் யாருக்கு என்ன ? அவர்களால் இந்த அரசுக்கு ஒரு புண்ணியமும் இல்லையல்லவா ?

31-7-2021
அம்பேதன்.