Wednesday, April 9, 2014

பாராளுமன்றத் தேர்தலில் தமிழீழம்

தமிழினத்திற்கு விரோதியாக தமிழனையே நிறுத்துவதுதான் 60 ஆண்டுகளாக சிங்களர்களின் ராஜதந்திரமாக இருந்து வருகிறது. அதில் இன்னும் ஒருபடி மேலே போய் ஷோபாசக்தி, லீனா மணிமேகலை, சந்தோஷ் சிவன் என்று தமிழ்நாட்டு சினிமாத் துறையினரையும் உசுப்பேற்றியுளளார்கள். சந்தோஷ் சிவனின் டெரரிஸ்ட், தற்போது வெளிவந்த இனம், லீனாமணிமேகலை - ஷோபா சக்தி இணைந்து எடுத்த செங்கடல் போன்ற படங்கள் இதற்குச் சான்று.

ஈழத்திலும் அப்படி சிங்களவர்களை அடிதாங்கி நிற்கும் தமிழர்கள் பலரைப் பார்க்கலாம். கொழும்பு, மலையகம், தெற்குப் பகுதி போன்ற சிங்களர்கள் பகுதியில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் இந்த மனப்போக்கை கொண்டிருப்பார்கள். இப்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் அந்தப் போக்கு உருவாகி வருகிறது. சோத்துக்கும், இடத்துக்கும் சிங்களன் தான் கருணைகாட்ட வேண்டும் என்கிற நிலை வரும்போது இந்தக் கேவலங்கள் நிகழுவதை என்னவென்று சொல்ல?உதாரணமாக சமீபத்தில் நடந்த தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழப் பிரதிநிதிகள் ராஜபக்சேவின் கையால் பதவிப் பிரமாணம் ஏற்றதில் உச்சிகுளிர்ந்து நின்றதைச் சொல்லலாம்.

முத்தையா முரளிதரன் போன்ற விஐபிக்கள் இலங்கை அரசுக்கும் அதன் ராணுவத்துக்கும் ஆதரவாக பெரும் பிரச்சாரமே செய்து வருகிறார்கள். இவர் தமிழன் தான். ஆனால் தமிழர்கள் யாராவது ஆட்டோகிராப் கேட்டால் கூட அலட்சியமாக இருப்பாராம். தன் வாழ்நாளில் இதுவரை ஒருமுறை கூட தமிழர்கள் பட்ட துயரத்துக்காக ஒரு வார்த்தை உதிர்த்தில்லை. ஜாலியாக கிரிக்கெட் விளையாடி சம்பாதித்துக்கொண்டே இருந்தார். இலங்கையின் தமிழினப் படுகொலையை மூடி மறைப்பதில் முரளிதரன்களின் பங்கு அபாரமானது! வடக்கு இலங்கையில் உண்மையில் என்ன நிலை நிலவுகிறது.. அங்குள்ள மக்கள் உண்மையாகவே சுதந்திரமாக இருக்கிறார்களா என்று அறிய தன்னிச்சையாக பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று வந்த பின், இந்த முத்தையா முரளிதரனையும் ஒரு தமிழர் என்ற முறையில் சந்தித்தார்.

அப்போது தமிழர் நிலை பற்றி முரளிதரன் "என்னைப் பொருத்தவரை கடந்த 30 ஆண்டுகளாக பிரச்சினைகள் இருந்து வந்தன. அதிலிருந்து அகல முடியவில்லை யாராலும். போர்க்காலத்தில் ஐநா பிரதிநிதிகளுடன் நானும் அந்தப் பகுதியைப் பார்த்திருக்கிறேன். மக்களுக்கிடையிலான உணர்வுகளை நேர்ப்படுத்தும் பாலமாக கிரிக்கெட் இருக்கிறது. ஆனாலும் வசதிகள் வேண்டும். இப்போது சாலைகள் போடப்பட்டுள்ளன, பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன. வர்த்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. வடக்கு முன்னேறி வருகிறது. இலங்கை ராணுவத்துக்கு நன்றி. இவையெல்லாம் நடக்க பெரும் முயற்சிகள் எடுத்தவர்கள் ராணுவத்தினர்தான். இந்த நாட்டில் 20 மில்லியன் மக்கள் உள்ளனர். வடக்கில் ஒரு மில்லியன் மக்கள்தான். ஆனால் இப்போது மற்றவர்களை விட அவர்கள் மட்டும்தான் கூடுதல் கவனம் பெற்றுவருகின்றனர்!" என்று மிகுந்த அப்பாவி போல் பேசியிருக்கிறார்.

தனி ஈழம் குறித்தும் அதன் விடுதலை குறித்தும் பாஜக கட்சியின் போடும் இரட்டை வேடம் மிக வெளிப்படையானது. தமிழ்நாட்டில் தெற்கே போகப் போக இவர்களுக்கு ஈழ ஜூரம் அடிக்கும். வடக்கே போகப் போக 'யாரது ஈழத்தமிழர்கள்?' என்பார்கள். அக்கட்சியின் சிவகங்கை வேட்பாளர் எச்.ராஜா சமீபத்தில் பேட்டியொன்றில் ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவேற்றதில் என்ன தவறு என்று கேட்டிருக்கிறார். இனவெறி மிக்க ராஜபக்சே மத்தியப் பிரதேசத்தில் உள்ள புத்தர் கோயிலுக்கு சென்ற ஆண்டு வந்தபோது சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை வழங்கியவர் பாஜகவின் முதலமைச்சர். அப்போது அதை எதிர்த்து மத்தியப் பிரதேசம் வரை போய் முழங்கிய வைகோ அண்ணன் தான் இப்போது அதே பாஜக கூட்டணியில் அவர்களுக்கு ஆதரவாக முழங்குகிறார்.

உங்கள் கூட்டணியிலுள்ள வைகோவின் தேர்தல் அறிக்கையில் தனி ஈழம் பற்றி இருக்கிறதே அது பற்றி சொல்லுங்கள் என்று எச்.ராஜாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது.."பா.ஜ.க வைப் பொருத்தவரை ஒரு நாட்டை பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பேச்சு வார்த்தையின் மூலம் தான் தீர்வு காண முடியும். என்பது எங்கள் நிலை. சம தர்மம், சம உரிமை என்பது தான் எங்கள் கொள்கை. ஆனால் 2004 வரை பேச்சுவார்ததைகள் தான் நடந்து வந்தது. அதன் பிறகு சோனியா காந்தி தலைமையில் வந்த ஆட்சி தான் ராணுவத்தை அனுப்பியது. இலங்கை ராணுவத்துடன் இந்திய ராணுவமும் அனுப்பப்பட்டது. அதனால் தான் கோத்தபய ராஜபக்சே இது இந்திய போர் என்று சொன்னார்."

கலைஞரோ முள்ளிவாயக்கால் படுகொலையின் போது இங்கிருந்து உண்ணாவிரத நாடகமாடி தன் முகத்திரையை கிழித்துக் கொண்டார். ஜெயலலிதாவோ தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கும் மறைமுக எண்ணத்தில் பாஜகவை எதிர்த்தே பேசுவதில்லை. வைகோ, ராமதாஸ், திருமாவின் வீர உரைகள் என்னவானதென்று நமக்குத் தெரியும். கம்யூனிஸ்ட்டுகளோ தீவிரவாதம் என்ற ஒரு சொல்லில் சிங்களர்களின் அனைத்து அரசு பயங்கரவாதங்களையும், இனப்படுகொலையையும், மறைக்கும் அறிவு ஜீவிகள்!!. அவர்களுக்கு அது அமெரிக்கா சொல்வதுபோல் ஒரு போர்க்குற்றம் மட்டுமே. மொத்தத்தில் தேர்தலில் தமிழர்கள் ஈழத்தை ஆதரிப்போருக்கு என்று வைத்துப் பார்த்தால் நிற்கும் எல்லோரும் அயோக்கியர்களே என்பது தெளிவாகும்.

முரளிதரன், டக்ளஸ் தேவானந்தா, கருணா போன்ற தமிழர்கள் இருக்கிறவரை தமிழினம் கேவலமாய்ச் சாகும் நிலை மாறப்போவதில்லை. இந்தியாவை மாற்றி மாற்றி ஆளும், தமிழர்களை தன்னுடைய நாட்டு இனமாகக் கருதாத காங்கிரஸூம், பாஜகவும் தமிழர்களை ஈழத்தில் அழிக்க வகையாக துணைபோகும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத் தேர்தலுக்குப் பின்தான் தமிழர் நிலைக்கு ஏதாவது வழியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.