Saturday, December 24, 2011

முல்லைப் பெரியார் அணை பிரச்சனை – கேரளாவின் அடாவடித்தனம்!

முல்லைப் பெரியார் அணை பிரச்சனை கேரளாவின் அடாவடித்தனம்!
14-டிசம்பர்-2011
முல்லைப் பெரியார் அணை பிரச்சனை மறுபடியும் மலையாளிகளால் பெரிதாக்கப்பட்டு, கேரள எல்லைகளில் தமிழர்கள் தாக்கப்பட்டு, பரபரப்பாகியிருக்கும் இச்சூழலில் இந்த அணை பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துக் கொள்வோம்.
பெரியாறு தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலுள்ள சிவகிரி மலைகளில் கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர்கள் உயரத்தில் உற்பத்தியாகி வடக்காக 48 கி.மீ பாய்ந்து தேக்கடி ஏரியில் மேற்கு நோக்கிச் செல்லும் முல்லையாற்றுடன் கலக்கிறது. அங்கிருந்து கேரளாவினுள் வடக்காகப் பாய்ந்து இடுக்கி வழியாகச் சென்று அரபிக் கடலில் கலக்கிறது.
முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே சுமார் பத்து அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் முதலில் வருவது தமிழ்நாட்டில் அமைந்துள்ள பழைமையான முல்லைப் பெரியாறு அணை. இது முல்லையாறும், பெரியாறும் கலக்குமிடத்தில் கட்டப்பட்டுள்ளது. இவ்வணையைத் தாண்டி தான்  பெரியாற்றின் போக்கில் கேரளாவினுள் புத்ததான்கெட்டு, மேட்டுப்பட்டி, மூணாறு (ஜாலி ட்ரிப் அடிப்பீங்களே), இடுக்கி என்று வரிசையாக சுமார் 10 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவ்வணைகளுக்கு நீர் இன்னும் நிறைய வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் பொறுப்பில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணை இல்லாது போக வேண்டும்.
 கேரளா மலைப்பாங்கான நாடு. அங்கு மழை அதிகம். ஆறுகளும், ஏரிகளும் அதிகம். சுமார் 44 ஆறுகள் கேரளாவில் ஓடுகின்றன. 1880களில் தமிழ்நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் நதிகள் குறைவு. அவையும் தென்மேற்கு பருவமழையை நம்பியே இருக்கின்றன. சிவகிரி மலையில் உற்பத்தியாகி வடக்கு, மேற்காகச் சென்று கடலில் கலக்கும் பெரியாறு மற்றும் முல்லையாறு கலக்கும் இடத்தில் அணை கட்டி அதில் தேங்கும் நீரில் சிறிது பகுதியை மலையைக் குடைந்த பாதை வழியே தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் எண்ணம் பிரிட்டிஷாருக்குத் தோன்றியது. அதன் விளைவே முல்லைப் பெரியாறு அணை.

முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாடு கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், 1887-1895களில், பெரியாற்றின் குறுக்கே பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பொறியியலாளர் பென்னி குயிக் என்பவரின் மேற்பார்வையில் (அன்றைய தொகை 62 லட்சம் ரூபாய்கள் செலவில்) கட்டப்பட்ட அணை. இதன் சிறப்பம்சம் இது மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 2700 அடி உயரத்தில் உள்ளது.. அவ்வுயரத்திலிருந்து ஒரு சிறிய கணவாய் வழியாக முல்லைப் பெரியாறு தேக்கும் நீர் தேக்கடியில் சேருகிறது. பின் அங்கிருந்து 5000 அடிகள் நீளத்திற்கு மலையினுள் குடையப்பட்ட நீர்வழி வழியாக தமிழ்நாட்டின் சுருளியாற்றில் நீர் வந்து சேர்கிறது. வைகை அணை இந்நீரைத் தேக்குகிறது. தேக்கடி இருக்கும் உயரத்திலிருந்து நீர் திருப்பிவிடுவது மிக எளிது என்பதால் இது கைகூடியுள்ளது. பிரிட்டிஷ் காலத்துக்குப் பின் இவ்வணை கேரள வரம்பிற்குள் இருந்தாலும் ஒப்பந்தப்படி தமிழக அரசால் இன்றும் பராமரிக்கப்படுகிறது.
வைகை நதிக்கு திருப்பிவிடப்பட்ட முல்லைப் பெரியாறு தண்ணீரால் மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, போன்ற மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களும், 10 லட்சம் விவசாயிகளும் பயன் பெறுகிறார்கள். சுமார் 60 லட்சம் பேருக்கு குடிநீரும் கிடைக்கிறது. இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து தண்ணீர் தேவைகளும் இத்தண்ணீரால் தீர்கின்றன.
ஆனால் துரதிர்ஷடவசமாக மலையாளிகளின் நோக்கம் முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதாகவே இருக்கிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 125 வருடங்களாகிறது. இது கட்டப்பட்ட போது சுண்ணாம்பு மற்றும் ஜல்லிகளால் குழைத்து கட்டப்பட்டது. 50 வருடங்கள் தான் இந்த அணை தாங்கும். எனவே இதை இடித்துவிட்டு வேறு அணையை கொஞ்சம் கீழே கட்டவேண்டும் என்று. இது உண்மையல்ல. உலகெங்கும் மிகப் பழைய அணைகள் காலாகாலமாக இன்னும் நீர் தேக்கியபடி நிற்கின்றன. நம் ஊர் கல்லணை கூட சுமார் ஆயிரம் ஆண்டுகளாக தற்போதைய தொழில் நுட்ப அறிவால் வலுவாக்கப்பட்டு உறுதியாக நிற்கிறது. எந்தக் கட்டிடமும் தொடர்ந்த பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப வலுவூட்டல்களாலேயே காலம் காலமாக நிற்கும். இது தான் யதார்த்தம்.
இன்னொரு அணைகட்டச் சொல்லும் கேரளாவின் பின்னாலிருக்கும் நயவஞ்சகம் என்னவென்றால் முல்லைப் பெரியாறிலிருந்து வைகை அணைக்கு தண்ணீர் திருப்ப பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட கணவாய் புது அணையை விட உயரத்திலிருக்கிறது. இவர்கள் சொல்லும் மாற்று இடத்தில் முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே அணையைக் கட்டினால் நீரை தேக்கடியில் தேக்கி வைத்து, வைகை அணைக்கு கொண்டு வரவே இயலாது. முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட்டால் அதிலிருந்து வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் தண்ணீர் பெறும் தமிழ்நாட்டின் 10 லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரம் பாழாய் போகும். மேலும் இவர்கள் கட்டுவதாகச் சொல்லும் புது அணையை முழுக்க முழுக்க மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப் போவதால் தண்ணீர் தேங்கவே தேங்காது. முழுதும் திறந்து விடப்படும். அப்போது தான் மின்சாரம் தயாரிக்கமுடியும். போதாததற்கு நீரை ஆற்றின் போக்கில் கீழே சமதளத்தில் தேக்க ஏற்கனவே இடுக்கி அணையை கட்டிவிட்டார்கள்.
இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 50 கி.மீ கீழே 1973ல் கட்டப்பட்டது. இதுதான் ஆசியாவிலேயே பெரிய வளைவு அணை’(Arch Dam). முல்லைப் பெரியாரைப் போல் 7 மடங்கு பெரிது இடுக்கி அணை. 70 டி.எம்.சி கொள்ளளவு. முல்லைப் பெரியாரின் கொள்ளளவோ 16 டி.எம்.சி மட்டுமே. அதிலும் 10 டி.எம்.சி தண்ணீரைத் தான் பாசனத்திற்கு திறந்துவிட முடியும்.
இடுக்கி அணையின் கொள்ளளவு மிக மிக அதிகம் ஆதலால் அணை நிரம்பவில்லை. எனவே முல்லைப் பெரியாறு அணை ரொம்ப வீக், அங்கு நிலநடுக்கம் வந்தது என்று பத்திரிக்கைகள் மூலம் புரளி கிளப்ப ஆரம்பித்தது கேரள அரசு. இப்பிரச்சனையில் இந்திய நீர்வள ஆணையம் தலையிட்டு ஆய்ந்து பரிந்துரை செய்ததன்படி முல்லைப் பெரியாறு அணையை 18 கோடி ரூபாயில் தமிழ்நாடு அரசு பலப்படுத்தியது.

பெரியாற்றில் செல்லும் மொத்த நீர் சுமார் 5 ஆயிரம் மில்லியன் கனமீட்டர்கள். இதில் கேரளாவிற்கு விவசாயம், தொழில், குடிநீர் அனைத்திற்கும் 2021ல் தேவை எப்படியிருக்கும் என்று பார்த்தால் கூட 2300 மில்லியன் கனமீட்டர்கள் தான். மீதித் தண்ணீர் அனைத்தும் (சுமார் 2 ஆயிரம் மி.க.மீ நீர்) கடலில் வீணாகக் கலக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கி தமிழ்நாட்டிற்கு கொடுத்தால் கூட வெறும் 126 மி.க.மீட்டர் தான் வரும். இதைத் தரக் கூட மனமில்லாததுதான் கேரளா. இத்தனைக்கும் கேரளாவிற்கு 700 டன் அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து தான் செல்கிறது.

 
தமிழ்நாடு அரசு 1981 முதல் 1994 வரை அணையை பலப்படுத்தும் வேலைகளை செய்தது. அணைக்கு 12 ஆயிரம் டன் எடையுள்ள கான்கிரீட் தொப்பி(cap), கேபிள் ஆங்கரிங் என்கிற முறை மூலம் அணையின் உட்புறம் போடப்பட்ட கான்க்ரீட் கம்பிவடங்கள், தாங்கு அணையை வெளிப்புறம் மேலும் கான்க்ரீட் போட்டு உறுதிப்படுத்தல் போன்ற வேலைகள் செய்து அணை மிகப் பலமாய் ஆக்கப்பட்டது. இதைத் தவிர முல்லைப் பெரியாறு அணையுடன் கூடிய பேபி டேம் எனப்படும் சிறிய அணையையும் தமிழ்நாடு அரசு பலப்படுத்த ஆரம்பித்தது. இது நடந்தால் சுப்ரீம் கோர்ட் சொன்னபடி பழையபடி அணையில் 152 அடி நீர் தேக்கிக் கொள்ளலாம் என்கிற நிலை. உடனே கேரள அரசு வேலை செய்யவந்த தமிழக அதிகாரிகள் மேல் வழக்குகள் போட்டு வேலையை நடத்த விடாமல் செய்தது.
இரு அரசுகளும் கோர்ட்டுக்குப் போனதில் கோர்ட் நியமித்த நிபுணர் குழு 2000ஆம் ஆண்டு மீண்டும் அணையை சோதித்தது. அதன் அறிக்கையை வைத்து நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு அணையின் நீர் மட்டத்தை 146 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையை தடையின்றி பலப்படுத்தவும் தீர்ப்பு வழங்கியது.
இப்போது 2011ல் மீண்டும் இணையதளம், சினிமா, கிராபிக்ஸ், பத்திரிக்கை, மியூசிக் ஆல்பம் என்று பல விதங்களில் முல்லைப் பெரியாறு பற்றி கேரள மக்களிடையே பீதியைக் கிளப்புகிறது கேரள அரசு. தமிழக ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் தங்களது கேரள அணி கேரளா பக்கம் நின்று பேசுவதும், தமிழ்நாட்டு அணி தமிழ்நாட்டுக்கு ஆதரவாகப் பேசுவதாகவும் இரட்டை வேடம் போடுகின்றன. காங்கிரஸ், பா.ஜனதா, இவற்றுடன் சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியும் இதில் அடக்கம்.

சென்ற நான்கு தினங்களாக கட்சிகளை நம்பாமல் மக்கள் தேனி, கம்பம், பகுதி மக்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து லட்சம் பேர் திரண்டு முல்லைப் பெரியாறு நோக்கிப் படையெடுக்க கேரள அரசு ஸ்தம்பித்தது. தடியடி நடத்தி காவல் துறை மக்களை விரட்டியது. இன்று லேட்டாக நம்ப விஜயகாந்தும், மு.க.ஸ்டாலினும் பேரணி நடத்துகிறார்கள் கண்துடைப்புக்கு. அம்மாதான் அரசு என்பதால் அம்மா நோட்டீஸ் விட்டு கோர்ட்டு பக்கம் நமக்கு வரும் ஞாயத்தை அடக்கமாகப் பேசுகிறார். மக்கள் தன்னிச்சையாக கிளர்ந்தெழ ஆரம்பித்துவிட்டார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம். எந்தக் கட்சியும் நியாயமாகவும், மனசாட்சியோடும் இல்லாமல் பூசிமெழுகினால் அவர்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்பதையும் கட்சிகள் புரிந்துகொள்ள இது உதவும். சுப்ரீம் கோர்ட் வேறு முல்லைப் பெரியாறு அணையை 120 அடிதான் தேக்கவேண்டும் என்கிற கேரளாவின் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது நேற்று. 
  
தமிழர்களாகிய நாம் இவ்விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. ஒன்று படுவோம். அநீதியை தட்டிக் கேட்போம். இதில் தமிழன், மலையாளி என்கிற பாகுபாடு தவிக்க இயலாமல் பேசப்பட்டே ஆகவேண்டும். ஒன்றாக இணக்கமாக வாழும் எண்ணம் இருக்கும் பட்சத்தில் நாம் வேறுவேறாக இருந்தாலும் சகோதரத்துவத்துடன் பழகுவோம். ஆனால் அது இல்லாத பட்சத்தில் அந்த வேறுபாடும் பேசப்பட்டே ஆகவேண்டும்.
பின்வரும் வீடியோ முல்லைப் பெரியாறு அணைபற்றி தமிழக சிவில் இன்ஜினியர்கள் அமைப்பு உருவாக்கியுள்ள ஆவணப்படம்.

No comments: