Saturday, August 8, 2009

மன்ஹட்டன் ப்ராஜக்ட்

மே 11, 1945.
இலக்குக் கமிட்டி, விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹீமர்(RobertOppenheimer) தலைமையில் அமெரிக்காவில் லாஸ்அலோமோஸில் (Los Alomos)கூடுகிறது. தங்களது முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பால் உருவான அதிக ஆற்றலுள்ள ஒரு நவீன ஆயுதம் அது; அதன் ஆற்றல் அவர்களுக்கே இன்னும் தெரியாது. அதன் ஆற்றலை, அழிவுசக்தியை ஆய்வகத்தில் சோதிப்பது சாத்தியமில்லை. எனவே ஒரு சோதனைக் களம் வேண்டும். இலக்கு வேண்டும். அதைத் தீர்மானிக்கத் தான் இந்த இலக்குக் கமிட்டி. அவ்வாயுதத்தின் அளவிடப்படாத வீரியத்தால், தாக்குதல் இலக்கை பின்வரும் அளவுக் காரணிகளைக் கொண்டு தீர்மானிக்கிறார்கள்.
1. இலக்கு 3 சதுர மைல்களை விட பெரிதாயிருக்கவேண்டும். பரிசோதனையின் படி ஆயுதத்தின் வீரியம் 3 சதுர மைல்களையும் தாண்டும்.
2. இலக்கில் ஏற்படும் அழிவு பெரிதாய், முழுமையாய் மக்கள் செறிவாய் இருக்கவேண்டும். எனவே இலக்கு மக்கள் தொகை மிகுந்த நகரமாயிருந்தால் நல்லது.
3. தாக்குதல் தீர்மானிக்கப்படும் நாள் வரை இலக்கு வேரெதுவும் தாக்குதல்களுக்கு உட்படாதிருக்கவேண்டும். இது அதன் அழிவுசக்தியை மட்டும் தனித்து அளக்க உதவும்.

அவர்கள் நாள் முழுவதும் உட்கார்ந்து விவாதித்து நான்கு இலக்குகளை தேர்ந்தெடுத்தார்கள். அவை க்யோட்டோ, ஹிரோஷிமா, யோகஹாமா மற்றும் கோகுரா. இந்நகர இலக்குகளை தாக்குதல் தினம் வரை நேசப்படைகளின் சாதாரண வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களிலிருந்து 'பத்திரமாக' விலக்கி வைக்க உத்தரவிடப்பட்டது.

ஜூலை 26 1945.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், மற்றும் சில நேசநாடுகளின் தலைவர்கள் கூட்டாக சேர்ந்து ஜப்பானுக்கு சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தனர். அந்த எச்சரிக்கைக் கடிதத்தில் அவர்களின் புதிய ஆயுதம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஜப்பான் சரணடைய மறுத்தது; பாவம் விவரம் புரியாமல்.

ஆகஸ்ட் 6 1945.
விடியற்காலை 2 மணிக்கு டினியன்(Tinian) தீவு ராணுவ தளத்திலிருந்து கிளம்புகிறது ஒரு அமெரிக்கப் போர் விமானம். பால் திபெத் (Paul Tibbet) என்கிற அமெரிக்க கமாண்டர் விமானத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். கடல்படை காப்டன் வில்லியம் பார்சன்ஸ் கூடவே மாரீஸ் ஜாப்ஸன் என்கிற துணை கமாண்டெர். இருவரும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அவர்கள் செயது கொண்டிருக்கும் பணியின் கணத்தால் அமைதியாக இயங்குகின்றனர். சின்னப் பையன்(Little Boy) பக்கத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறான்.
இவோ ஜிமா தீவை அடைந்து அதை மேலிருந்து சுற்றிவிட்டு அங்கிருந்து கிளம்பி ஜப்பானை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது.

காலை 8.00 மணியளவில் ஜப்பானின் ரேடார்கள் அத்துமீறி நுழைந்த அந்த அமெரிக்க விமானத்தை இனங்கண்டு கொண்டன. மூன்று விமானங்கள் தானே ஏதாவது உளவு பார்த்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டார்கள். தாக்கினாலும் பெரிய சேதம் ஒன்றும் நிகழ்ந்துவிடாது. போரில் ஏற்கனவே தோல்விமுகம் கொண்டிருந்த ஜப்பான் ராணுவம், எரிபொருள் மற்றும் விமானங்களை மிச்சம் பிடிக்க இதுபோன்ற சிறு தாக்குதல்களை எதிர்த்துத் தாக்கத் தீர்மானிக்கவில்லை.

காலை 8.15 மணிக்கு ஹிரோஷிமாவை வட்டமடித்த விமானம் யுரேனியம்-235 ல் செய்யப்பட்ட 60 கிலோ எடை கொண்ட, 10 அடியே உயரமுள்ள சின்னப்பையன் என்கிற அந்த அணுகுண்டை 9 கி.மீட்டர் உயரத்திலிருந்து கீழே விடுவித்தது. புவிஈர்ப்பு விசையால் கீழிறங்கிய 'சின்னப் பையன்', ஷிமா அறுவைசிகிச்சை மருத்துவமனையின் மேல் தரைக்கு மேலே 600 மீட்டர் உயரத்தில் வெடித்தது. வெடித்ததும் 13 ஆயிரம் டன் டி.என்.டியை வெடித்ததற்கு இணையான வெடிப்பை அது உண்டாக்கியது. அந்த ஆற்றல் பக்கவாட்டில் பரவாமல் கீழ்நோக்கி பரவியதால் சுற்றியிருந்த 5 சதுர கி.மீ பரப்பளவில் இருந்த அனைத்தையும்; சாதாரண செடிமுதல் உறுதியான இரும்புத் தூண்கள் வரை அது உருக்கி கருக்கி, சாம்பலாக்கி அழித்தது. மனித உயிர்களையும்.. வெடித்த இடத்திலிருந்து 45000 அடி உயரத்திற்கு வானில் குடைக் காளான் வடிவில் கரும் புகை வானைச் சூழ்ந்தது. இந்த நிகழ்வை, கூட வந்த விமானங்களிலொன்று பல்வேறு அளவீடுகள் மட்டும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது.

4000 டிகிரி வெப்பம்; சுற்றிலும் அனல்.வெடித்த இடத்தைச் சுற்றியிருந்த அனைவரும் அலறியடித்து ஓடினார்கள். ஆனால் ஒருவரை மற்றவருக்கு அடையாளம் தெரியவில்லை. ஏனென்றால் அனைவரின் முகங்களும், கைகால்களும், உடல்களும் வெப்பத்தில் கருகிப் போய், தோல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அனைவரும் சிறிது நேரத்தில் இறந்து போனார்கள். நகரத்தின் சுமார் 30% மக்கள், அதாவது எழுபதாயிரம் பேர் உடனே மரணமடைந்தார்கள். இன்னும் 30% பேர் சில வருடங்களில் சாவார்கள்.

டோக்கியோவிலிருந்து ஜப்பான் அதிகாரிகள் ஹிரோஷிமாவில் இருந்த ஒரு சிறிய ராணுவத் தளத்தைத் தொடர்பு கொள்ள முயன்று தகவில்லாமல் போகவே காரணம் அறிந்துகொள்ள ஒரு சிறிய விமானத்தில் ஒரு இளம் வீரரை அனுப்பினர். 3 மணிநேரம் விமானத்தில் பறந்து அந்த வீரர் ஹிரோஷிமாவுக்கு 100 கி.மீ தூரத்தில் வந்தபோது வானத்தில் தெரிந்தது காளான் புகைமண்டலம்.

ஆகஸ்ட் 7,8, 1945.
ஜப்பானிய அரசு செயலிழந்தது. ஒரு சின்ன விமானத்திலிருந்து வீசப்பட்ட ஒரேயொரு குண்டால் ஒரு நகரமே அழிந்தது என்ற அதிர்ச்சியிலிருந்து அவர்கள் விடுபடவில்லை. சேதத்தின் அளவீட்டைக் கூட அவர்களால் சரியாக எடுக்கமுடியவில்லை. அவர்கள் அந்த ஆயுதம் பற்றி இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

ஆகஸ்ட் 9, 1945.
அன்று காலை புறப்பட்ட மற்றொரு விமானத்தில் 6 கிலோ எடையுள்ள, புளுட்டோனியம்-239 த்தால் ஆன, 'குண்டு மனிதன்'(Fat Man) இருந்தான். கோக்குராவை இலக்காகக் கொண்டு பயணித்த அவ்விமானம் கோக்குராவை காலையில் அடைந்தபோது அங்கு மேகமூட்டமாயிருந்தது. எனவே அக்குழு அங்கிருந்து துணை இலக்காக லிஸ்ட்டில் இருந்த 'நாஹாசாகி'யை நோக்கிப் பறந்தது. அங்கும் மேகமூட்டமாயிருந்ததால் இலக்கு 'clear' ஆகவில்லை. ஆனால் அவர்கள் நம்பிக்கையைக் கைவிடவில்லை. பொறுமையாக வானில் சுற்றியபடியே இருந்தனர். கொஞ்ச நேரத்தில் மேகம் சிறிது விலகி இலக்கு தெரிய ஆரம்பித்தது. சரியாக காலை 11.00 மணிக்கு நாஹாசாகியின் மேல் குண்டு மனிதன் குதித்தான். இது குதித்த வேகத்தில் 12 ஆயிரம் டன் எடையுள்ள டி.என்.டியை வெடிக்கச் செய்த விளைவு உண்டானது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த குண்டைப் போடுவதற்கு சற்று முன்னால் ஜப்பானின் அணு விஞ்ஞானிக்கு இக்குண்டின் தீமைகள் பற்றிய கடிதம் ஒன்றையும் இதே விமானத்திலிருந்து வீசி எறிந்திருக்கின்றனர் இந்தக் குண்டை எறிந்தவர்கள். அந்த எச்சரிக்கைக் கடிதம் எல்லாம் முடிந்து செத்தவர்களுக்கு பால் வார்த்து திவசம் செய்து ஒரு மாதம் கழித்து கண்டெடுக்கப்பட்டு அந்த விஞ்ஞானியிடம் 'பத்திரமாக' வழங்கப்பட்டது.

நாஹாசாகியில் ஐம்பதாயிரம் பேர் குண்டு விழுந்த உடன் சிலமணி நேரங்களில் மாண்டுபோயினர்.

ஆகஸ்ட் 6, 2009.
நாஹாசாகியில் குண்டு வெடிப்பில் மாண்டுபோனவர்களின் புதைக்கப்பட்ட எலும்புகளிலிருந்தும், பாதுகாக்கப்பட்ட உடற்பாகங்களிலிருந்தும் உட்கதிர்வீச்சு எனப்படும் ஆல்பா கதிர்வீச்சு வெளிப்படுகிறது என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குண்டுவீச்சின் போது வெளியான புளூட்டோனியக் கதிர்வீச்சை அளவிலும் பண்பிலும் ஒத்துள்ளது என்கிற அதிர்ச்சியான தகவலும் வெளிப்படுகிறது. இவ்வளவு வருடங்களாக இந்த உட்கதிர்வீச்சு பற்றி விஞ்ஞானிகள் பெரிதாக எண்ணவில்லை. குண்டு வெடிப்பு நிகழ்ந்து 64 வருடங்கள் கழித்தும் கதிர்வீச்சு இவ்வாறு வெளிப்படுவதைக் கொண்டு நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன ?
அணுவைப் பிளப்பது பற்றி மனிதன் கற்றுக்கொண்டது ஒரு கடலில் மிதக்கும் பனிப்பாறையைக் கண்டுபிடிப்பது போல் தான்; மேம்போக்கானது; அந்தப் பனிப்பாறை கடலின் அடியில் மனிதகுலம் என்கிற டைட்டானிக் கப்பலையே கவிழ்க்கும் பெரும் மலையாக இருக்கும் என்பதை நாம் இன்னும் உணரவில்லை. அணு உலைக் கழிவுகளை கையாளுவதில் நாடுகள் காட்டும் அலட்சிய மனப்பான்மையைப் பார்த்தால் இது உங்களுக்குப் புரியும். சமீபத்தில் டெல்லி அருகே பயிற்சியில் ஈடுபட்ட ஒரு போர் விமானத்திலிருந்து தவறுதலாக பாய்ந்த குண்டு ஒன்று கிராமம் ஒன்றில் வயற்காட்டில் விழுந்து ஒரு ஏக்கர் நிலம் கரிந்து போனது. நல்லவேளையாக மனிதர்கள் யாரும் அருகிலில்லை. இதுவே ஒரு அணு ஏவுகணையாக இருந்திருந்தால்...

No comments: