Monday, October 12, 2015

காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை ஒரு வழியாக கைவிட்டது அரசு!

காவிரி டெல்டா மாவட்டங்களி்ல் பூமிக்கடியில் பல கி.மீ ஆழத்தில் பெரிய நிலக்கரிப் படுகை உள்ளது. அந்தப் படுகையின் மேலே மீத்தேன் வாயு பெருமளவில் நிரவி நிற்கிறது. இதை எடுத்துத்தான் நமக்கு கேஸ் சிலிண்டர்களில் அடைத்து சமையல் எரிவாயுவாக விற்கிறார்கள்.
சரி. நல்லது தானே. அதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா?  இருக்கிறது. அந்த வாயுவை எப்படி எடுக்கிறார்கள். அந்த வாயுவை அப்படி எடுப்பதால் பாதிக்கப்படுவது என்னென்ன போன்ற விஷயங்கள் இதை ஒரு ஆபத்தான விஷயமாக்கி இருக்கின்றன.
மீத்தேன் வாயுவை மேலே கொண்டு வர பெரிய ஆழ்துளைக் கிணறுகள் போடுவார்கள். பின்பு அதில் மிகுந்த அழுத்தத்துடன் டன் கணக்கில் தண்ணீர், மண் கலந்த கலவையைக் கொண்டு அடிப்பார்கள். அதில் பாறைகளிடையே துளைகள் ஏற்பட்டு வாயுக்கள் வெளியே வரும். இந்தக் கலவையை தொடர்ந்து சுவாசித்தால் கேன்ஸர் கன்பர்ம். சுற்றுப் புறச் சூழலுக்கும் பெரும் கேடு. இந்த வாயு வெளியேற்றத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். இன்னும் மோசமாக நிலத்தடியில் உள்ள பாறைகளைத் துளையிட்டு பொருட்களை வெளியேற்றி வெற்றிடமாக்குவதால் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு அதிகரிக்கும். இவ்வளவு பிரச்சனைகள் உள்ள இந்தத் தொழில்நுட்பத்தை வெளிநாடுகள் ஏற்கனவெ 1957லிருந்து உலகெங்கும் பிரயோகித்து பல நாடுகளில் பாதிப்புகள் ஏற்ப்பட்டிருக்கின்றன. இப்போதுதான் இதற்கென உலக அளவில் ஒரு கண்காணிப்புக் குழுவை போட்டிருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு ஹரியானாவைச் சேர்ந்த கிரீன் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேஷன் என்கிற பன்னாட்டுதனியார நிறுவனத்திற்கு லைசென்சு வழங்கியிருந்தது. ஆனால் காவிரி டெல்டா விவசாயிகள் தங்கள் எதிர்காலம் பாழாகப் போவதை உணர்ந்து தொடர்ந்து போராட, அவர்களுக்கு சமூகவியல் ஆர்வலர்களும், இடதுசாரிகளும் விழிப்புணர்வு ஊட்ட கடைசியில் வேறு வழியின்றி அரசு இதை விசாரிக்க ஒரு குழுவை அமைத்தது.
இந்தக் குழுவின் முடிவுகள் இந்தத் திட்டத்தின் தீய விளைவுகள் கிடைக்கும் எரிவாயு நன்மையை விடப் பல நூறு மடங்கு தீயது என்று அறிக்கை கொடுத்ததைத் தொடர்ந்து அரசு மீத்தேன் எடுக்க இன்று தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் இந்த திட்டத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என அந்த தொழில்நுட்ப வல்லுனர் குழு அளித்த அறிக்கையின் படி அரசு முடிவெடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.