Tuesday, December 16, 2014

மாலத்தீவிலிருந்து பாடம் கற்போமா குடிநீருக்கு?


மாலத்தீவு மூன்றரை இலட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட, 190 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட நாடு. மாலத்தீவின் முக்கியத் துறையாக சுற்றுலாத் துறை உள்ளது. 80 க்கும் மேற்பட்ட தீவுகள் ஹோட்டல்களுக்காகவும், Resort களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

மாலத்தீவின் தலைநகராக மாலே என்ற தீவு உள்ளது. ஒரு பக்கம் நோக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கம்பெனிகள் உருவாக்கம் போன்றவற்றால் 70களின் பிற்பகுதியில் மாலத்தீவின் மக்கள் தொகை அதன் தலைநகரான மாலேவில் அதிகரித்தது. மாலத்தீவின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகையை கொண்டதாக மாலே நகரம் மாறியிருக்கிறது.

கடல் நீர் மட்டம் அதிகரிப்பால் மாலத்தீவின் நிலத்தடி நீரின் ஒரு பகுதி ஏற்கனவே உப்புத் தன்மையுடையதாக மாறியிருக்கிறது. மாலே வின் குடிநீர் தேவை மற்றும் வீட்டு பயன்பாட்டு நீர் தேவைகளுக்கு ஒரு பகுதி நன்னீராக இருக்கிற நிலத்தடி நீரும், மழை நீர் சேமிப்பு திட்டங்கள் மூலமாக சேமிக்கப்படுகிற நீரும் பயன்படுத்தப்பட்டு வந்தது. வளர்ச்சி என்ற பெயரில் மாலே நகரை நோக்கி நடைபெற்ற கம்பெனிகளின் வருகையும், அதிகரித்த குடியேற்றங்களும் நடைபெற்றதால் மாலே நகரின் சூழல் மாறத் தொடங்கியது. முறையில்லாத கழிவு நீர் மேலாண்மையால் நன்னீர் பகுதியாக இருந்த நிலத்தடி நீரும் மாசுபடத் தொடங்கியது.

இந்நிலையில் மழைநீர் சேமிப்பு என்பது நீருக்கான முக்கிய ஆதாரமாக மாறியது. கடல் நீரை நன்னீராக மாற்றும் திட்டம் என்பது மிகுந்த செலவு மிக்கதாக இருப்பதால் சில resort களில் மட்டும் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. சுனாமிக்கு பிறகு மழைநீர் தொட்டிகள் பெருமளவு சேதமடைந்து விட்டதாகக் கூறி, எதிர்கால குடிநீர் தேவைக்கு அதனை சரிசெய்வதைக் காட்டிலும், கடல் நீரை குடிநீராக்குதல்தான் சிறந்த திட்டம் என்று குடிநீரை வியாபரமாக்கும் பெரும் நிறுவனங்கள் வரிசை கட்டி நின்றன.

அதற்கு பின்பான காலங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்பது ஒன்றே நாட்டின் முக்கிய நீர் வளமாக மாற்றப்பட்டது. நிலத்தடி நீர் முதன்மையானதாகவும், மழைநீர் சேமித்து பயன்படுத்தல் என்பது இரண்டாவதாகவும், கடல் நீர் பயன்பாடு மூன்றாம் நிலையாகவும் இருந்த நிலை மாறி கடல்நீரை குடிநீராக்கும் நிறுவனங்களின் கையை மட்டுமே எதிர்பார்த்த ஒற்றை வளமாக இந்த நிறுவனங்களால் மாற்றப்பட்டது.

நிலத்தடி நீர் வளத்தினை நாட்டின் சொத்தாக கருதாமல், பெரு நிறுவனங்களின் கட்டிடங்களையும், அவற்றின் முதலீடுகளையும் மட்டுமே சொத்தாக கருதி நீர் வளங்களை இழந்ததால் கடந்த வாரம் மாலத்தீவு சந்தித்த பிரச்சினை மிகக் கொடியது. கடந்த வாரத்தில் மாலத்தீவின் தலைநகர் மாலேவில் உள்ள அரசுக்கு சொந்தமான கடல் நீர் சுத்திகரிப்பு ஆலையில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஆலைப் பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு முடங்கிப் போனது. இதனால் மாலே நகரில் வசிக்கும் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலைக்கு சென்றனர். ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை உருவானது.

நாட்டின் மிக மோசமான பிரச்சினையாக அறிவிக்கப்பட்டு, அவசர நிலை ஏற்படுத்தப்பட்டது. மக்கள் தண்ணீருக்காக கடைகள் மற்றும் விடுதிகளை உடைத்து சூறையாடக் கூடும் என்று மாலத்தீவு அரசு அஞ்சியது. உடனடியாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறைகளை அறிவித்தது. கையில் இருந்த தண்ணீரை வைத்து ஒவ்வொரு குடும்ப அட்டையாக சோதித்து இரண்டு லிட்டர் தண்ணீர் கேன்களை வழங்கியது. மாலே நகருக்கு குடி பெயர்ந்த மாலத்தீவின் பிற பகுதி மக்கள் அது கூட கிடைக்கப் பெறாமல் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நிலைமையை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல், அண்டை நாடுகளிடம் கையேந்தி நின்றது மாலத்தீவு. இந்தியா, சீனா போன்ற நாடுகள் 2000 டன் தண்ணீர் பாட்டில்களை மாலே நகருக்கு கப்பல் வழியாக அனுப்பினர். அந்த தண்ணீர் கேன்களை வைத்து ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு லிட்டர், மூன்று லிட்டர் தண்ணீர் கேன்களை வழங்கியது. இரண்டு லிட்டர் தண்ணீருக்காக மக்கள் அனைவரும் வரிசையில் நின்று காத்துக் கிடந்தனர். இந்த சில நாட்களில் மாலத்தீவில் குடிக்கவும், உணவுப் பயன்பாட்டிற்கும் தண்ணீர் இன்றி மாலே நகர் மக்கள் அனுபவித்தவை ஏராளம். ஆலை சரிசெய்யப்பட்டாலும் இத்தோடு இந்த பிரச்சினை முடியப் போவதில்லை. அது தற்காலிக தீர்வு மட்டுமே. பெரு நிறுவனங்களின் மயக்க வளர்ச்சியை நம்பி தங்கள் மண்ணின் நீர் வளத்தினை இழந்த ஆப்பிரிக்க நாடுகள் படும் துன்பத்தை சொல்லி மாளாது.

கடல் நீரை குடிநீராக்குதல் என்பது ஆரோக்கியமான குடிநீரல்ல, நிலத்தடி நீரிலிருந்து கிடைக்கப் பெறுகிற எந்த சத்துப் பொருளும் அந்த நீரில் இருக்காது, அந்த நீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை பெருமளவு காக்காது என்றும், கடல் நீரின் சில பகுதிகளில் போரான், அல்கால் டாக்சின் போன்றவை இருப்பதால் அது ஆரோக்கியமான உடல் நிலைக்கு ஏற்றதல்ல என்றொரு வாதத்தினை சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் முன்வைக்கிறார்கள். கடல் நீரை குடிக்கிற தன்மையுடையதாக மாற்ற முடியுமே தவிர, ஒருபோதும் அதை நன்னீராக மாற்ற முடியாது என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது.

அதுவும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை அமல்படுத்துவதில் இந்த கம்பெனிகள் காட்டும் ஆர்வமென்பது அது தருகிற கொள்ளை லாபத்தை நோக்கித் தான் இருக்கிறது. மாலத் தீவு மக்கள் தங்கள் மாத வருமானத்தில் பெரும்பங்கு பணத்தை நீரை பெறுவதற்காக செலவழிக்கிறார்கள்.
கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கொள்ளை லாபம் ஈட்ட நினைக்கும் இத்தகைய நிறுவனங்களின் அடுத்த குறி என்பது சுமார் 1 கோடி மக்கள் வசிக்கிற சென்னை என்பதாகவே உள்ளது.

சென்னையின் நன்னீர் வளங்கள் மிக விரைவாக நிறுவனங்களால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தண்ணீர் என்பது இந்த நாட்டின் மிக முக்கிய வளம் என்பதை இந்த அரசுகள் சிந்தித்துக் கூட பார்ப்பதில்லை. முதலில் சென்னையின் குறுக்கே ஓடிய மிகப் பெரிய நதியினை அழித்தோம். பிறகு நிலத்தடி நீர் வளம் என்பது படிப்படியாக அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. பல்லாவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலுள்ள நிலத்தடி நீர் என்பது எதற்கும் பயன்படுத்த முடியாத நீராக மாற்றப்பட்டிருக்கிறது.

நிலத்தடி நீர் வளம் பெரு நிறுவனங்களின் கழிவுகள், வேதி குப்பைகள், முறைப்படுத்தப்படாத கழிவு நீர் மேலாண்மை போன்றவற்றால் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், சென்னையில் மக்களின் குடிநீர்த் தேவை என்பது பெரும்பாலும் என்பது சில தண்ணீர் கம்பெனிகளை சார்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த தண்ணீர் கம்பெனிகள் ஸ்டிரைக் என்று சொல்லி சப்ளையை நிறுத்தினாலே போதும் சென்னையை எப்படி ஸ்தம்பிக்க வைக்க முடியும் என்பதை கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். இந்த நிறுவனங்களை நம்பித் தான் நிலத்தடி நீரை அழித்துக் கொண்டிருக்கிறதா இந்த அரசுகள்!

நிலத்தடி நீர் ஆரோக்கியமில்லாத தண்ணீர், பாட்டிலில் இருப்பதுதான் சிறந்த தண்ணீர் என்று மிகப் பெரிய அயோக்கியத்தனமான விளம்பரப்படுத்தல் என்பது தமிழகம் முழுதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுற்றுலாப் பொருளாக இருந்த பாட்டில் தண்ணீரை பயன்பாட்டுப் பொருளாக்க பழக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். 7 கோடி மக்களை தண்ணீருக்கான சந்தையாக மாற்ற தண்ணீர் நிறுவனங்களிடையே கடும் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று காட்ட, அரசே பாட்டில் தண்ணீருக்கு மக்களை பழக்கப்படுத்த குறைந்த விலை என்ற Price Tag ஐ பயன்படுத்துகிறது. இந்த காண்ட்ராக்டும் தண்ணீர் நிறுவனங்களிடம் செல்ல வெகு நாள் பிடிக்காது.

தண்ணீர் வளங்களை காப்பதும், முழுமையான தண்ணீர் பயன்பாடு மற்றும் பகிர்வு வசதிகளை ஏற்படுத்துவதுதான் அரசின் கடமை. தண்ணீரை அவன் 20 ரூபாய்க்கு விற்றால் நான் பத்து ரூபாய்க்கு விற்கிறேன் என்பதல்ல அரசின் வேலை. தண்ணீர் என்பது அனைவருக்கும் பொதுவான பொருள். மனிதர்களுக்கு என்பதைக் கூட தாண்டி அது இந்த மண்ணில் வாழ்கிற அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது.

குடிநீர், வீட்டுப்பயன்பாடு, விவசாயம் என அனைத்துக்குமான நிலத்தடி நீரை மொத்தமாக தனியார் மயமாக்கும் மசோதாவை மத்திய அரசு தயாராக வைத்திருக்கிறது. மின்சார கட்டணத்தைப் போன்று நம் நிலத்து குழாய்களில் மீட்டர் பொருத்தப்பட்டு, பெருநிறுவனங்களுக்கு நாம் கட்டணம் கட்டப் போகிறோம் என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா? உண்மையில் இதற்கான விவாதம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் தொடங்கி விட்டது.

மேலும் சென்னையின் குடிநீர் தேவை என்பது கடல்நீர் சுத்திகரிப்பு என்ற ஒற்றை முகத்தை நோக்கி தள்ளப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. நமக்கே நமக்கான சொத்தான தண்ணீரை மாத வருமானத்தில் பாதியை செலவழித்து பண்டப் பொருளாக வாங்க நாம் தயாரா?
100,000 மக்களுக்கு தேவையான நீரை பக்கத்து நாடுகளிடம் கேட்டுப் பெற்றது மாலத்தீவு. சென்னையில் அந்த நிலை ஏற்பட்டால் 1 கோடி மக்களுக்கான நீரை யாரிடமிருந்து பெறப்போகிறோம்.

மாலத்தீவுகளுக்கு நீரை வழங்கிய நாடுகள் எதுவும் பரிதாபப்பட்டு அந்த நீரை வழங்கியிருக்கவில்லை. அந்த நாட்டின் இன்னொரு பகுதி வளங்களை கைக்கொள்ளும் திட்டத்துடன் தான் இந்த உதவியையே செய்ய முன்வருகின்றன. எனவே உலகின் எந்த வல்லாதிக்கத்தையும் நம்பி நம் வளங்களை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக் கூடாது.

மாலத்தீவிலிருந்தாவது பாடம் கற்போமா? தண்ணீரை தனியார்மயமாக்கும் எந்த திட்டங்களானாலும் அதை எதிர்த்து களம் காண்போம். நம் வளம் உரிமை, அதை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ள சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என உரக்கச் சொல்வோம். தண்ணீர் மசோதாவை எதிர்த்த போராட்டங்களுக்கு தயாராவோம்.

 மே 17 இயக்கம் முகநூல் பக்கத்திலிருந்து
https://www.facebook.com/mayseventeenmovement?fref=nf

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.