Thursday, November 28, 2013

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த காமன்வெல்த்

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், பாலியல் வன்முறைகள், இனத்தை வன்கலப்பு செய்வது, சிங்களர்களை கொண்டு வந்து குடிவைப்பது என்று இன அழிப்பின் எல்லா விஷயங்களையும் கடந்த 60 வருடங்களாக சிங்கள அரசுகள் செய்த அளவில் சற்றுக் கூட அளவுகுறையாமல் செய்து அதன் உட்சபட்ச வெற்றியையும் ஈட்டியது் ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு. ஐக்கிய நாட்டு சபையில் அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளின் கள்ளத்தனமான மௌன அங்கீகாரத்தில் தான் இவற்றைப் புரிந்தது. இருந்தாலும் பிரிட்டன், கனடா போன்ற நாடுகளின் தலையீடு இருப்பதால் போர்க்குற்ற விசாரணை ஒன்றை சும்மா உப்புக்கு சப்பாணியாக நடத்தியும் முடித்தது. இத்தோடு நிற்காமல் 2009ல் தொடங்கி உலக திரைப்பட விழா, கிரிக்கெட் போட்டிகள், மற்றும் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை கோலாகலமாக நடத்துவதன் மூலம் பிண ஓலத்தை மறைக்கவும் முயற்சி செய்கிறது. இந்த கொலைபாதகச் செயல்கள் அனைத்திற்கும் சர்வதேச நாடுகளில் ஆதரவு தெரிவிப்பவர்களே அதிகம். இதில் கியூபா, சீனா, ரஷ்யா போன்ற கம்யூனிஸ்ட்டு நாடுகளும் அடக்கம். ஐக்கிய முண்ணணி தந்திரத்தின் பக்கங்களுக்குள் பாவம் இந்த கம்யூனிச நாடுகளும் சிக்கிக் கொண்டன. இவர்கள் இதற்கு சொல்ல இருக்கும், விரும்பும் காரணம் அனேகமாக அமெரிக்காவுக்கு எதிரான வியூகம் என்கிற சாக்கு தான். இந்தப் பிண்ணணியில் மேலும் தைரியம் பெற்ற ராஜபக்சேவின் அரசு காமன்வெல்த் மாநாட்டையும் நடத்தி மொத்தப் பாவத்தையும் பூசணிக்காயில் மறைக்க முயன்றது.

 இப்படியொரு நேரத்தில் காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற இருந்ததையொட்டி, இலங்கை அதை நடத்துவதையும் அதன் மூலம் மறைமுகமாக இந்தியா அதன் படுகொலைப் பாவத்தை கடலுக்குள் கரைப்பதையும் தெரிந்திருந்தாலும் தமிழ்நாட்டில் மக்கள் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லைதான். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திராவிட கட்சிகளல்லாத மற்றைய கட்சிகள் சமத்துவ கட்சி, பெரியார் திராவிட கழகம், சீமானின் நாம்தமிழர், வைகோவின் மதிமுக, திருமாவின் விடுதலைச் சிறுத்தைகள், நெடுமாறனின் அமைப்பு போன்ற பல கட்சிகள் சேர்ந்து ஆர்ப்பாட்டங்கள் பல நடத்தி, ரயில்களை மறித்து தமிழ்நாட்டு மக்களின் அடி ஆழத்தில் உள்ள அதிருப்தியை மத்திய அரசுக்கு கொஞ்சம் வெளிக்காட்டினர். இந்தப் போராட்டங்கள் தொலைக்காட்சிகளில் செய்திகளாக காட்டப்பட்ட வேளைகளில் தான் நம் தமிழ் மக்களும் ஈழப் படுகொலைகளை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டனர். கலைஞர் கருணாநிதி வழக்கம் போல 'துரும்பைக்' கூட கிள்ளிப் போடாமல் தனது டெசோ அமைப்பை வைத்து அறிக்கைகள் விட்டு மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை என்றதும் ஏமாற்றமளிக்கிறது என்று கையை கட்டி நின்றுகொண்டார். அம்மாவின் தீர்மானங்கள் தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க தொண்டர்கள் யாருக்கும் இதற்காக போராட வேண்டும் எனத் தோன்றாதது ஆச்சரியமான விஷயமல்ல. ஒரு மாநகராட்சி உணவகத் திறப்பு விழா முதல் , ஈழ ஆதரவு போராட்டத்தைக் கூட அம்மா மட்டுமே முன் நின்று நடத்தவேண்டும் என்பது அந்தக் கட்சியின் முக்கியமான கொள்கையல்லவா?

 முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக சட்டசபையின் முந்தைய தீர்மானத்தை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளவே கூடாது என்கிற தீர்மானத்தையும் முன்வைத்தார். உலக சமூகத்தின் பார்வையில் இது முக்கியமான ஒரு தீர்மானமே. ஆனால் மத்திய அரசு வழக்கம் போல இதையும் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டில் கிளம்பிய இத்தகைய எதிர்ப்பு அலைகளை மத்திய அரசு வழக்கம் போல அலட்சியமாக கடந்து சென்றது. மாநாட்டிற்குச் சென்று ராஜபக்சேயுடன் விருந்து சாப்பிடும் மூடில் இருந்த மன்மோகன் சிங் ஜெயலலிதாவின் தீர்மானம் தந்த அழுத்தத்தினால் வயிற்று வலி போன்ற காரணங்களால் வரமுடியவில்லை என்று ராஜபக்சேவுக்கு மிகுந்த வருத்தம் தெரிவித்து லீவ் லெட்டர் அனுப்பியதுடன் இந்தியா சார்பாக சல்மான் குர்ஷித்தை வேறு அனுப்பி வைத்தார். ஜெயலலிதாவின் கனவு பிரதமர் ஆவதோடு நின்றுவிட்டதால், அவர் இந்தியா தாண்டி உலகப் பிரச்சனைகளைப் பற்றி யோசிக்க விருப்பமில்லாமல் இது வெளியுறவுப் பிரச்சனை எனவே தீர்மானம் போடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எல்லை வைத்திருக்கிறார்.

 இது தெரியாமல் நெடுமாறன் ஐயா ஜெயலலிதா அம்மையாரின் பரம எதிரியான நடராஜனின் நிலத்தில் நடராஜனின் முக்கிய பணப்பங்களிப்பில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்கிற நினைவுச் சின்னத்தை கட்டினார். அதைத் திறக்க முற்படும் போது தான் அவருக்கு பிரச்சனை வருகிறது. நெடுஞ்சாலைத்துறை முந்திய நாள் அதிகாலையில் வந்து முள்ளிவாய்க்கால் முற்றத்தின் காம்பவுண்ட் சுவர் அரசின் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது எனவே இடிக்கிறோம் என்று நோட்டீசு கூட கொடுக்காமல் வந்து இடித்துவிட்டார்கள். நெடுமாறன், சீமான், வைகோ, நடராஜன் போன்ற யாருக்குமே தெரியவில்லை யார் இப்படி இடிக்கச் சொன்னதென்று. ஒருவர் மத்திய அரசின் சதி என்கிறார். இன்னொருவர் எனக்கும் அந்த விழாவுக்கும் சம்பந்தமில்லை என்கிறார். ஒருத்தர் ஜெயலலிதா ஈழத்தாயே தான் ஆனால் அவர் அரசு இப்படிச் செய்துவிட்டதே என்று திகைக்கிறார். ராஜபக்சே எதுவழியாகவோ புத்தர் போல சிரிக்கிறார்.

 ஆனால் பாருங்கள் இந்த காமன்வெல்த் மாநாட்டில் ஈழப்பிரச்சனையை வைத்து சிக்ஸர் அடித்தவர் பிரிட்டன் பிரதமர் கேமரூன். இவ்வளவு நாளும் ஏன் போர் நடந்த நேரங்களில் மக்கள் ஆயிரக்கணக்கில் முள்ளிவாய்க்காலில் வதங்கிய போதும் ஐ.நாவின் பான்கிமூன் இலங்கை வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டுச் சென்ற போதும் சும்மா இருந்தவர் திடீரென்று ஒருநாள் சேனல் - 4 டி.வியை பார்த்துவிட்டார் போலிருக்கிறது. உடனே வீராவேசமாக பேசியிருக்கிறார். காமன்வெல்த்தில் நிறைய பணம் ஸ்பான்ஸார் செய்த ஒரு பிரிட்டன் நாட்டு செல்போன் கம்பெனிக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன தொடர்பு என்று விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறார். ராஜபக்சேவின் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது மாறாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று சூடு கிளப்பிவிட்டிருக்கிறார். நம்பமுடியாத நிகழ்வுதான் இல்லையா?

 ஈழப்பிரச்சனையின் போக்கை தீர்மானிக்கும் கருவியாக இருந்த பிரபாகரனை இதே பிரிட்டன் உட்பட இந்த நாடுகள் எல்லோரும் சேர்ந்துதான் வேட்டையாடி அழித்தார்கள். முக்கிய காரணி பிரபாகரன் இறந்துவிட்டதால் இனிமேல் இதை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துக்கொள்ள முடியும். ஈழப்பிரச்சனையை அமெரிக்காவோ, பிரிட்டனோ, பிரான்சோ, கையில் எடுத்து இலங்கையை மிரட்ட முடியும். அதேபோல இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இலங்கையின் கூட நின்றுகொண்டு 'அதெல்லாம் ஓண்ணுமே நடக்கலை.. ஒரு அப்பாவி கூட சாகலை.. செத்தது யாரோ அவங்க எல்லாமே எல்.டி.டி.ஈ' என்று சாதித்து பின்புலத்தில் இலங்கையின் தொழில் வர்த்தக லாபங்களை தாங்கள் அடைந்துகொள்ள முடியும். பிரபாகரன் இருந்தவரை தமிழ்நாட்டு தமிழர்களுக்கு ஈழப்பிரச்சனையால் எதுவும் பெரிய பிரச்சனை வந்துவிடவில்லை. ஆனால் இனிமேல் இது உலக வல்லரசுகள் இந்திய கடல் பகுதியில் தங்களது ஆளுமையை ஏற்படுத்திக்கொள்ள, மற்ற நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்க இந்தப் பிரச்சனையை தங்கள் இஷ்டத்துக்கு எழுப்புவார்கள். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் ஒரு குறியீடாக மாற ஆரம்பித்திருக்கிறது. ஆனால் அது தமிழருக்கு விடிவுதரும் குறியீடாகுமா என்பது கேள்விக்குரியதே. ஏனென்றால் முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு இன்னும் தமிழர் தரப்பிலிருந்து சிங்களருக்கு ஒரு பதிலடி கொடுக்கப்படவில்லை. மாறாக சிங்கள ஆதிக்கத்திற்கு தமிழர்கள் அடிபணிந்து, கேவலப்பட்டு பரிதாபமாக நிற்கும் நிலையே உள்ளது. உள்நாட்டு அகதி முகாம்கள் எனும் சிறைகள் இன்னும் இருக்கின்றன. தமிழர் வசிக்கும் பகுதிகளில் சிங்களர்கள் அரசால் அழைத்து வரப்பட்டு குடியமர்த்தப்படுகிறார்கள். தமிழர்களை ராணுவம் வீட்டு வாசலில் நின்று கண்காணிக்கிறது. இப்படி ஈழத்தமிழர்கள் வாழ்வில் சீரழிவுகள் மட்டுமேயுள்ளனவேயன்றி முன்னேற்றங்களில்லை.

 இந்தியாவுக்குள்ளே வடக்கத்திய ஆரியர்களும் தெற்கத்திய திராவிடர்களும் இரு எதிர் பிரிவுகளாக இருப்பது போல இலங்கையில் எதிரெதிராக வைக்கப்படும் இனங்களில் சிங்களர்கள் ஆரியர்களாகவும், தமிழர்கள் திராவிடர்களாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது இந்திய ஆளும்வர்க்கத்துக்குள்ளே நடந்திருக்கிறது. இந்திய சுதந்திர காலத்திலிருந்து ஆளும் இந்திய வர்க்கம் தமிழனை மதராஸி என்று இழிவாகப் பார்க்கும் எண்ணம் கொண்டே இருந்திருக்கிறது . இலங்கை மீதான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு எதிரானதாக அமைக்கப்பட்டதை திராவிடர்களுக்கு எதிரான ஆரியர்களுக்கு ஆதரவான கொள்கையாக இது அமைந்ததுடன் ஒப்பிட்டால் இந்த சிங்கள-ஆரிய பாசம் புரியவரும். திராவிடத் தமிழர்களால் இதை மாற்றவே இயலாமல் போனது. தமிழர்கள் அரசியல் ராஜதந்திர ரீதியாக இது பற்றி பெரிதாகவும் கவலையுற்றதில்லை. இப்போதாவது நாம் இதைக் கருத்தில் கொள்ளவில்லையென்றால் பிற்காலத்தில் ராகுலின் பேரன் இந்தியாவை ஆளும்போது, விஜய் நம்பியாரின் பேரன் சுனில் நம்பியார் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் போது, இலங்கை சிங்களர்களின் தேசமாக முற்றிலும் ஆகியிருக்கும்.

 முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடந்த காமன்வெல்த்தில் ராஜபக்சே வெற்றிக் கொடி நாட்ட பின்னாலிருந்து மன்மோகன் சிங் கைதட்ட, கேமரூன் கடைசி வரிசையில் நின்றுகொண்டு விசிலடித்து கூட்டத்தை கலைக்கப் பார்க்கிறார். அம்மாவோ கோட்டைச் சுவருக்கு வெளிப்பக்கம் நின்று தீர்மானம் இயற்றுகிறார். நெடுமாறன் ஐயா போன்றவர்கள் இடிந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவரின் இடிபாடுகளில் நின்று அம்மாவை எப்படித் திட்டுவது என்று முழிக்கிறார்கள். இத்தகைய நாடகங்களின் முடிவுகள் ஈழத்தின் தீர்வுகளாய் ஆகாது. ஈழ ஆதரவு மற்றும் ஈழ எதிர்ப்பு நாடகங்கள் எல்லாவற்றையும் மக்கள் பொறுமையாக கவனித்தால் மட்டுமே யதார்த்தம் புரியும். மக்கள் கவனிப்பார்களா ? உண்மை வெல்லுமா ? நூற்றுக்கு தொன்னூறு சதவீதம் வாய்ப்பில்லை.

No comments: