Tuesday, August 27, 2013

தலைவா.. தலைவலியே வா!

இந்தா வர்றேன். அந்தா வர்றேன் என்று 15 நாட்களாய் இழுத்தடித்த தலைவா தியேட்டருக்கு ஒரு வழியாய் வந்தே விட்டது. இதே கேப்பில் இது தியேட்டரை விட்டு ஓடவும் கூடும் என்கிற சந்தேகம் வரத்தான் செய்கிறது. பாரிவேந்தர் கல்லூரி மாணவர்கள் இயக்கம் விடுத்த வெடிகுண்டு மிரட்டல்(? அதெப்படிங்க எந்த தீவிரவாதிகள் குண்டு வைக்கிறோம்னு சொன்னாலும் அவங்களையே போய் விரட்டிப் பிடிச்சுடுற காவல்துறைக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவங்களை மட்டும் கண்டுபிடிக்கவே முடியலையாம்..). உடனே தியேட்டர் அதிபர்கள் கதிகலங்கி படத்தை போடமாட்டோம்னு மிரட்டல். உடனே அம்மாவிடம் விரட்டல். அம்மா கொடநாட்டில் அலட்டல். விஜய் அன் கோ உண்ணாவிரத அரட்டல்.  என்று பத்திரிக்கைகள் பூராவும் சந்தி சிரித்துப் போனது விஜய்யின் தலைவா பட விவகாரம். அது உங்களுக்கு நன்றாகத் தெரியுமென்பதால் விமர்சனத்துக்குப் போவோம்.

தலைவா விஜய் ப்ளாஷ்பேக்கில் சிறு குழந்தையாய் பம்பாய் தாராவி பகுதியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஓட்டப்பட்டவர். கமல் ப்ளாஷ்பேக் இல்லாமல் தூத்துக்குடியிலிருந்து பம்பாய்க்கு ஓடிவந்தவர். விஜய்யின் அப்பா சத்யராஜ் வெள்ளைச் சால்வையை போர்த்தியபடி தாராவி மக்களுக்கு நல்லதெல்லாம் செய்து தீய ரவுடிகளிடமிருந்து அம்மக்களைக் காப்பாற்றுகிறார். விஜய்யோ நாசரின் பாதுகாப்பில் வாட்டர் கேன் சப்ளை செய்யும் கம்பெனி நடத்தியபடி சைடில் நடனமாடிக் களிக்கிறார். அமலாபாலுடன் ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறும் சுரேஷ் ஹோட்டல் ஆரம்பிக்க அங்கே விஜய் வாட்டர் சப்ளை செய்யப் போக காதல் சப்ளையாகி விட அமலா பால் விஜய்யுடன் காதல் நடனமாட ஆரம்பிக்கிறார்.

இந்தியாவுக்கே வந்திராத விஜய் காதல் விஷயமாக அப்பாவை திடீரென்று பார்க்க கிளம்பி பம்பாய் வந்திறங்க அப்பா நாயகன் வேலுநாயக்கனின் பார்ட் 2வாக நிற்பதைப் பார்த்து ஆடிப்போகிறார். வேலுநாயக்கனுக்கு ஒரு செல்வா போல 'அண்ணா' (திராவிட இயக்கங்களின் தலைவர் பெயரை ஒரு ரவுடி தாதாவுக்கு வைக்க ரொம்பத்தான் தில் வேணுங்கோ டைரக்டர் விஜய் சார்)வுக்கு ஒரு ரங்கா நம் பொன்வண்ணன். அண்ணாவுக்கு ஒரு எதிரி. பழைய பகையின் மகன். அண்ணாவை அவன் போட்டுத் தள்ள. அவ்விடத்திற்கு தேவர் மகனாக வந்து விடுகிறார் விஜய். தாராவி மக்களெல்லாம் இனி அடுத்த பெரிய தேவர் இனி நீ தான் நம் தலைவா என்று உடனே கொண்டாடி விடுகிறார்கள். 'அந்தி மழை மேகம்' டைப் பாட்டு.. டான்ஸ்..நாலு பேருக்கு நல்லது செய்யனும்னா எதுவுமே தப்பில்லை டயலாக் மாதிரி.. 'கத்தியெடுத்தா அது உன்னை காக்கும் மற்றும் கொல்லும் ஆனா கீழ போடமுடியாது' என்று டயலாக்  கூட உண்டு. அப்புறம் தளபதி விஜய் தலைவா விஜய்யாக மாறி ஸ்டைலாக நாலு பேர் பின்புறம் கூட நடக்க நடந்து வந்து வில்லனை எப்படிச் சாய்க்கிறார் என்பது மீதிக் கழுதை.. சாரி கதை.
 
இயக்குனர் விஜய் பல படங்களைக் காப்பியடிப்பதில் வித்தகர் என்பது அவரது மதராஸப் பட்டினம், தெய்வத் திருமகள் போன்ற படங்களிலிருந்து குவார்ட்டரடித்தால் ஏறும் மப்புபோல தெளிவானது. அதே வித்தையை இங்கேயும் செய்திருக்கிறார் அவர். ஆனால் 50 கோடி செலவு செய்து நாயகனையும், தேவர் மகனையும் சேர்த்து சாண்ட்விச் செய்து காட்டினால் யாருக்குங்கோ பிடிக்கும்னு அவர் கொஞ்சமாச்சும் யோசிச்சிருக்கலாம். ஒரு வேளை அந்தப் படமெல்லாம் வந்து ரொம்ப வருஷமாச்சேன்னு நெனச்சிட்டாரோ என்னமோ. போகட்டும் அப்படியே செய்திருந்தாலும் அதை இப்படி ஓவராக பில்டப் கொடுத்து 'தலைவா' என்று பெயர் வைத்திருக்கலாமா? போக்கிரி - பார்ட் 2 என்று பெயர் வைத்திருந்தால் கூட  விஜய்யின் வாங்கன்னா வணக்கம்னா பாட்டு, முற்பாதியில் ஒரு ஆட்டம், ஒரு டூயட், நாலு பைட் சீக்வன்ஸ் என்று படம் ஏதோ ஒரு வழக்கமான விஜய் பட வரம்புக்குள் நின்றிருக்கும்.

படத்தின் டயலாக்குகளும், காட்சிகளும் அபத்தமோ அபத்தம். பத்துப் பேரை வெட்டிச் சாய்க்கும் ஒரு நாளில் விஜய் தலைவாவாகிறார். தலைவனாக வேண்டுமென்றால் பத்துப் பேரை வெட்டிச் சாய் என்று அர்த்தம் போலும்? அவர் சட்டத்தை மதிப்பதில்லை, அறவழியில் போராடுவதில்லை. பழிக்குப் பழி தீர்க்கிறார். கட்சி ஆரம்பிக்கவில்லை. கொள்கைகள் என்று எதுவுமில்லை. சமூகத்தை என்ன செய்து திருத்துவது என்று ஒரு இழவு கூட யோசித்ததில்லை. இப்போதிருக்கும் நாட்டுப் பிரச்சனைகள் எதைப் பற்றியும் மறந்து கூட கருத்துச் சொல்வதில்லை. ஆனால் 'தலைவா'வாக ஆகவேண்டும் என்று ஆசை மட்டும் இருக்கிறது விஜய்க்கு.

சந்தானம் பாவம் என்ன செய்வார். அவர் கடமையை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் சிரிப்புத் தான் வரவில்லை தலைவா. ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என்று எதுவுமே எடுபட மறுக்கிறது. இசை ஜீ.வி.பிரகாஷ்குமார். இரண்டு பாட்டுக்களை தேற்றுகிறார். தளபதி தளபதி என்கிற பாடல் படத்தின் அபத்தத்தின் உச்சகட்ட வெளிப்பாடு.

விஜய்யை வளர்த்துவிட்டவர் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்பார்கள். விஜய்யின் எதிர்காலத்தை இருட்டாக்கப் போகிறவரும் அவராகவே இருக்கலாம். தேவையில்லாமல் கட்சி, காங்கிரஸ், திமுக என்று சுற்றி, ரசிகர்களை ஆதரவாளர்கள் என கற்பனை செய்யவைத்து, 'நாங்க சப்போர்ட் பண்ணி தான் போன தடவை எலெக்ஷன்ல இந்தம்மா ஜெயிச்சாங்கன்னு' ஏடாகூடமா உளறி என்று ஏகத்துக்கு பண்ணியிருக்கிறார். ஜாக்கிரதைங்கண்ணா. 
Actor Vijay Politics Jayalalitha Admk
தலைவலியே வா என்று வருந்தி அழைத்துக் கொண்டதுதான் தலைவா என இப்போது நன்கு புரிந்திருக்கும் விஜய்க்கு. தலைவாவா தலைவியா என்கிற இந்தப் போட்டியில் தலைவி அம்மா இப்படி ஒரு சுமாரான படத்தையே போட்டு இப்படி வறுத்தெடுத்து தன்னுடைய பவரை காட்டிக் கொள்ளவேண்டிய அளவுக்கு சிறுபிள்ளைத் தனமாகத் தான் இருக்கிறார் என்பது அவரால் ஆளப்படும் மக்களாகிய நாம் வருத்துத்துடன் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம்.

சராசரி விஜய் ரசிகர்களாய்ச் செல்பவர்களுக்கும், இந்த தலைவா பாலிடிக்ஸ் எதுவும் தெரியாமலே அப்பாவியாய்ப் படம் பார்க்கச் செல்லும் குடும்பஸ்தர்களுக்கும், குடும்பஸ்த்ரீக்களுக்கும் இந்தப் படம் வழக்கமான ஒரு விஜய்யின் மாசாலாப் படம் தான். ஆனால் மற்ற யாருக்கும் தலைவாவைப் பிடிக்கக் காரணம் பெரிதாய் எதுவுமில்லை. எனவே தலைவாவின் கெத்து எடுபடுமா ?  சந்தேகம் தான்.

Tuesday, August 6, 2013

ராஜீவ்காந்தியை தாக்கியதற்காக வருத்தப்படவில்லை - விஜிதாமுனி டி சில்வா(vijithamuni de silva)

இலங்கையில் தமிழர்களும் மனுசங்கதான் அவங்களுக்கு ஏதாவது குடுங்க என்கிற அளவில் ஏதோ போனாப்போகுது என்கிற சில உரிமைகளை மட்டும் தரும்விதமாக, முக்கியமாக  நிலத்தின் மீதான உரிமைகள், பாதுகாப்பு, வரி வசூலிப்பு போன்ற அரசின் தன்னாட்சியை உறுதிப்படுத்தும் உரிமைகள் எதையும் ஜாக்கிரதையாகத் தமிழர்களுக்குத் தராமல் நைசாக போடப்பட்டது தான் அரசியல் சட்டப்பிரிவு 13வது திருத்தம். அதற்குப் போடப்பட்டது தான் ராஜீவ்-ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தம்.

இப்படி ஒரு மேம்போக்கான ஒப்பந்தத்தை போட்டதற்கே காங்கிரஸ்காரர்கள் ராஜீவ் காந்தியை ஈழத் தமிழரின் விடிவெள்ளி என்று இன்னும் கூத்தாடுகிறார்கள். இந்திய காங்கிரஸ் அரசு கூட இன்னும் அதையே தான் பாவம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியா அமெரிக்காவும் இலங்கையும் திரிகோணமலையை அமெரிக்காவுக்குத் தருவது சம்பந்தமாக பேசுவதை சகிக்க முடியாமல் இலங்கையை 'என்னை மீறி யாருடன் நெருக்கம் வைத்தாலும் ஜாக்கிரதை' என்று அப்போது வலியுறுத்த செய்தது தான் ராஜீவ்காந்தி திடீரென்று இலங்கைக்குள் அத்துமீறி இந்திய ஹெலிகாப்டர்களை பறக்கவைத்து சும்மா உணவு போட்ட சம்பவம்.

இவ்வாறான ராஜீவின் மிரட்டலைக் கண்டதும், எப்போதும் தங்களை ஆக்கிரமிப்பவராக இந்தியாவைப் பார்க்கும் சிங்களர்கள், ராஜதந்திரமாக இந்தியாவை வைத்தே தமிழர்களை அழிக்க திட்டத்தை மாற்றிக் கொண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்துக்கு இசைந்தனர். ராஜீவ்காந்தியின் நெருக்குதலால் போடப்பட்ட இந்த அம்சங்களில் பலவற்றை சிங்களர்கள் வெறுத்தனர். இந்திய இலங்கை ஒப்பந்தம் இலங்கையை பல் மத, பல்லின நாடு என்று விவரித்ததை சிங்களர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை சிங்கள நாடு மட்டுமே என்பது அவர்கள் வாதம். மேலும் அது தமிழர் வசிக்கும் பகுதிகளை வடக்கு, கிழக்கு தமிழ் மாகாணங்களாக அங்கீகரித்ததுடன் அவற்றை இணைப்பது பற்றியும் விவரித்தது. தமிழர்களை மைனாரிட்டி இனமாகக் கருதும் சிங்களர்களுக்கு இவ்வாறு தமிழ் மாகணங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது மிகப் பெரிய தவறாகத் தோன்றியது. 

இவ்வொப்பந்தத்தின் 13வது சட்டத்திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பையே மாற்றம் செய்யக் கூடியதாக அமைந்தது. அதன் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரப் பரவல் சாத்தியப்படலாம் என்கிற நிலை எழுந்தது. இத்தனைக்கும் 13வது சட்டத்திருத்தம் வரிவசூலித்தல், போலீஸ் துறை, நிலத்தின் மீது உரிமை போன்ற அதிகார உரிமைகளை தமிழருக்குப் பெற்றுத் தரவில்லை. சுயநிர்ணய உரிமைகளைப் பற்றி பேச்சே இல்லை (ஒரு இன மக்கள் ஒரு அரசால் மரியாதையாக நடத்தப்படாத பட்சத்தில் அந்த அரசைவிட்டுப் பிரிந்து தனியாகப் போகும் உரிமையே சுயநிர்ணய உரிமை).
இப்படிப்பட்ட ஒரு டுபாக்கூர் ஒப்பந்தத்தை போட்டபோது இலங்கையின் அரசியல் சாணக்கியத்தனம் வேலை செய்தது. அவர்கள் சரி அதை நிறைவேற்ற இந்தியாவே அமைதிப் படை கொண்டு வந்து ஆயுதங்களை போராளிகளிடமிருந்து வாங்கி அமைதியை நிலைநாட்டட்டும் என்றுவிட்டனர். விடுதலைப் புலிகள் போன்ற சில உண்மையான போராட்டக் குழுக்கள் தவிர மற்ற எல்லாப் போராட்டக்குழுக்களையும் இந்திய அரசு உருவாக்கி மறைமுகமாக வளர்த்து வந்திருக்கிறது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன.  எனவே இப்போது தான் கொடுத்த ஆயுதங்களை தானே வாங்கிப் போடவேண்டும் என்கிற நிலை இந்தியாவுக்கு. இதை பெரும்பாலான தமிழர் விடுதலை இயக்கங்கள் எதிர்த்தன. விடுதலைப் புலிகளும் கூட எதிர்த்தனர். சிங்களர்களோ கடுமையாக எதிர்த்தனர். இந்தியாவின் ஆதிக்க மனோபாவம் என்கிற வெறுப்பு சிங்களர் மத்தியில் மேலும் கிளர்ந்தது. சிங்கள அரசு ரகசியமாக தமிழர் விடுதலை இயக்கத்தினருக்கு ஆயுதங்கள் கொடுத்து ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளவும், இந்தியப் படையுடன் சண்டையிடவும் தூண்டிவிட்டது. விடுதலைப் புலிகளை தனது முக்கிய குறிக்கோளாகக் கொண்ட இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளுடன் நேருக்கு நேர் மோதும் நிலை ஏற்பட்டது. சிங்களர்கள் நைசாக ஒதுங்கிக் கொண்டனர். இந்திய ராணுவம் ஒழுங்கு நடத்தையில் உலகில் மிக மோசமான ராணுவங்களில் ஒன்றாகும். அமைதிக்கு அனுப்பப்பட்ட இந்திய ராணுவத்தின் சீக்கியப் பிரிவுப் படையினர் தமிழர்களைக் கொன்று, சித்திரவதை செய்து, தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்பு இந்திய ராணுவம் விடுதலைப் புலிகளிடம் அடிவாங்கி ஓடிவந்தது தனிக்கதை.

இப்படி போதுமான அதிகாரம் வழங்க முயலாததால் ஈழத்தமிழருக்கும், இந்தியா நம்மை நிர்ப்பந்திக்கிறது என்று சிங்களவர்களுக்கும் இவ்வொப்பந்தத்தின் மீதான, இந்தியாவின் மீதான வெறுப்பு இருந்தது. இந்நிலையில் தான் இதைக் கையெழுத்திட்டு இந்தியா திரும்ப இருந்த ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் இலங்கை ராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கிளம்ப இருந்த போது முன் வரிசையில் நின்று கொண்டிருந்த விஜிதாமுனி டி சில்வா என்கிற சிங்கள கடற்படை வீரன் தான் பிடித்திருந்த துப்பாக்கியைத் திருப்பிப் பிடித்து ராஜீவ் காந்தியின் தலையைச் சேர்த்து ஓங்கி அடித்தான். ராஜீவ் காந்தி அதைக் கவனிக்காமல் இருந்திருந்தால் அங்கேயே மூளை தெறித்து இறந்திருப்பார். ஆனால் சுதாரித்துக் கொண்ட ராஜீவ் தலை குனிந்து அந்தத் தாக்குதலில் இருந்து தப்பித்தார். அடி அவர் தோள் மேல் விழுந்தது. அவர் இறந்திருந்தால் இந்நேரம் இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டு இருபது வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும்.
அவனை இலங்கை ராணுவ கோர்ட் விசாரித்தது. அவனது செய்கையை கொலை முயற்சியாகக் கருதாமல் தாக்குதல் முயற்சியாக மட்டுமே கருதி சாதாரணமாக விசாரித்து ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதில் 21/2 வருடங்களிலேயே சிறையை விட்டு வந்த விஜிதாமுனி டிசில்வா இலங்கை ஒப்பந்த எதிர்ப்புக் குழுவில் முக்கிய தலைவராக இருந்து வருகிறான். இலங்கையில் இசைத்தட்டு சி.டிக்கள் விற்கும் கடையொன்றை நடத்தி வரும் இவனிடம் சமீபத்தில் பேட்டி காணப்ப்ட்டது.

அப்போது பேட்டியில் அவன் கூறிய சில விஷயங்கள் கவனிக்கப்படவேண்டியவை: "ராஜீவ் காந்தி ஒப்பந்த்தில் கையெழுத்திட இலங்கையை நிர்ப்பந்தப்படுத்தியதை தடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அவரை தாக்கினேன். அவரைக் கொல்லவேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் தாக்கினேன். ஏனென்றால் இலங்கையை சிதைக்கும் எண்ணம் கொண்டவர் ராஜீவ். என்னுடைய இந்தச் செயலுக்காக இப்போதும் நான் சந்தோஷப்படுகிறேன். தாக்குதலுக்குப் பின் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் நான் செய்ததற்காக வருத்தப்படவேயில்லை. தான் தாக்கப்படலாம் என்று ஊகித்திருந்தார் ராஜீவ். இதற்காகவே தன்னுடன் பாதுகாவலரையும் அணிவகுப்பில் அழைத்து வந்திருந்தார். ஆனாலும் நான் தாக்கியது குறி தவறிவிட்டது." .. இவ்வளவையும் நஞ்சாகக் கக்கிவிட்டுப் பேசும் விஜிதாமுனி டிசில்வா 'நான் எப்போதும் இந்தியாவுக்கு எதிரானவன் அல்ல. நான் நிறைய சி.டிக்கள் இந்தியர்களுக்குத் தான் விற்றுள்ளேன். எனக்குப் பிடித்தவை இந்தியப் பாடல்கள் தான்' என்றும் கூறிக் கொள்கிறான்.

இவ்வளவுக்குப் பின்னும் இந்திய பூகோளவியல், வரலாற்று ஆய்வாளர்கள் காலையில் எழுந்து இந்து பேப்பர் படிக்கிறார்கள்.  இந்தியாவுக்கு என்ன பிரச்சனை ? ஒன்றுமேயில்லை என்று பேசிக்கொள்கிறார்கள். சிங்களன் இந்திய மீனவர்களை, தமிழ் மீனவர்களை அடித்தால் ஒற்றை வரியில் கண்டனக் கடிதங்கள் மட்டுமே வாசிக்கிறார்கள். அமெரிக்கா கிட்டே வந்தால் உறுமிய இ்தியா இன்று சீனாவும் இலங்கையும் பிண்ணிப் பிணைந்து நட்பாகிவிட்டாலும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

ராஜீவ் காந்தியை விஜிதாமுனி துப்பாக்கியின் வலுவான பின்பக்கத்தால் அடித்த அடி மிகப் பலமானது. உயிரையும் கொல்லக்கூடிய அளவு வலுவானது. அன்று அவன் அடித்த அடியில் அவர் செத்திருந்தால் இன்னேரம் ஈழத்தில் தமிழர்கொடியும் சேர்ந்து பறந்திருக்கும். ஆனால் இப்போதோ இலங்கையை இன்னும் இந்தியா நயவஞ்சகமாக ஆதரிப்பது இந்திய உயர்சாதி ஆளும் வர்க்கம் சிங்களர்கள் நம் இனம் தானோ என்று நம்புவதைப் போலவே இருக்கிறது. தமிழர்கள் அன்னியர்கள் என்கிற பார்வையில் சும்மா பேச்சுக்கு கண்டிப்பது போல் கண்டிப்பதாகவே இந்தியாவின் நடவடிக்கைகள் இருக்கிறது. இவ்வளவு பெரிய நாடான இந்தியாவிடம் இவ்வளவு வருடங்களாக அசால்ட்டாக மிரட்டி, நயந்து பேசி, உள்ளுக்குள்ளேயே அடித்துக் கொள்ள வைத்து இப்படி எல்லா ராஜதந்திரங்களும் செய்து  இன்றைக்கு அமெரிக்கா, சீனா, இந்தியா மூவரிடமும் எல்லாவித உதவிகளையும் பெற்று ஜாலியாக ஐ.நா. சபையில் காலாட்டிக் கொண்டிருக்கிறது.  விஜிதாமுனி டி சில்வா நல்லவன் தான் போலிருக்கிறது. உள்நாட்டிலேயே நமக்கு இருக்கும் போன்மோகன்களையும், போனியாக்களையும், போகுல் பூந்திகளையும் நாம் என்ன செய்து தாண்டி வரப் போகிறோம்.. ?