Friday, June 7, 2013

ஸ்ரீசாந்த் அப்படி என்ன பெரிய தவறு செய்துவிட்டார்?

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சமீபத்தில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா என்கிற மூன்று ராஜஸ்தான் ராயல் அணியின் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் செய்த ஸ்பாட் பிக்சிங் என்பது என்ன? இவ்வீரர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது குறிப்பிட்ட சில ஓவர்களில் வேண்டுமென்றே லூஸ் பால்கள் போட்டு ரன்களை எதிரணியினருக்கு அதிகப்படுத்திக் கொடுப்பார்கள். இதில் இவர்களுக்கு என்ன லாபம்?

இவர்கள் அணியினருக்கு லாபம் இல்லை. ஆனால் சூதாட்டம் நடத்தும் புக்கிகளுக்கும் அதனால் இவர்களுக்கும் லாபம். உதாரணமாக ஸ்ரீசாந்த்தின் நெருங்கிய நண்பனான ஜிஜூ ஜனார்தனன் என்பவர் 'புக்கி'(bookie) எனப்படும் சூதாட்டத் தரகராக இருந்துள்ளார். 

இவர் போட்டி நடக்கும் போது நிமிடங்களில் பல கோடிகள் பெட் வைக்கப்படும் சூதாட்டத்தை போன் மூலமே நடத்துவார். பெரும் பெரும் தலைகள் கம்பெனி முதலாளிகள் கலந்துகொள்வார்கள். உதாரணமாக ஜனார்தனன் அடுத்த ஓவரில் எதிரணியின் ஆட்டக்காரர் 14 ரன்களுக்கு மேல் எடுக்கப்போகிறார் என்று நிறைய பணம் பந்தயம் கட்டுவார். அதற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல கோடிகள் பெட் வைக்கப்படும்.  ஆனால் ஜிஜூவுக்கும், ஸ்ரீசாந்துக்கும் மட்டுமே தெரியும் ஸ்ரீசாந்த் வீசப்போகும் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே எளிதான பந்துகளைப் போட்டு எதிரணிக்கு 14 ரன்களுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்று.

ஸ்ரீசாந்த் அடுத்த ஓவரில் வேண்டுமென்றே சொதப்பலான பால்கள் போட்டு 14 ரன்னுக்கு மேல் கொடுக்கப்போகிறார் என்பது ஜிஜூவுக்கு எப்படித் தெரியும் ? ஓன்றுமில்லை. அது ஒரு கோட் வேர்ட். ஸ்ரீசாந்த் தனது இடுப்பில் வெள்ளை நிற டவலை சொருகியிருந்தால் அந்த ஓவரில் 14 ரன்களுக்கு மேல் கொடுப்பார் என்பது ஜிஜூவுக்குத் தெரியும். எனவே அதை வைத்து அவர் உறுதியாக பெட் கட்டுவார். பல கோடிகள் லாபம் சம்பாதிப்பார்.

அந்த லாபத்தில் ஒரு பங்கு ஸ்ரீசாந்துக்கு அதாவது சுமார் 40 லட்சங்கள் ஒரு ஓவருக்கு கிடைக்கும்.

இவ்வளவு அருமையான ஒரு டெக்னிக்கை கையாண்டு பல்லாயிரம் கோடிகள் லாபம் சம்பாதிக்கும் ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களான ஸ்ரீசாந்த்தும், அங்கீத் சவானும் சில கோடிகள் சம்பாதிப்பதில் என்ன பெரிதாய் தவறு நேர்ந்திருக்கிறது ? ஒன்றுமில்லை ராஜஸ்தான் ராயல்ஸூக்குப் பதில் கொல்கத்தா டேர்டெவில்ஸ் ஜெயிப்பார்கள். ரசிகர்களுக்கு அதிலென்ன பிரச்சனை? அவர்களுக்குத் தேவையான த்ரில்லான அந்த நான்கு மணி நேரம் அவர்களுக்குப் பொழுது நன்றாகப் போய்விடுகிறது. யார் தோற்றால் என்ன ? ஜெயித்தால் என்ன ?

உலக நாடுகளில் ஏற்கனவே கிளப் விளையாட்டுக்கள் என்கிற பெயரில் பெரும்பணம் சம்பாதிக்கும் விளையாட்டு நிறுவனங்களின் செயலை கமர்ஷியலாக லலித் மோடி கிரிக்கெட்டில் 50 ஓவர்களை20 ஓவர்களாக சுருக்கி ஐ.பி.எல் 20-20 என்று அறிமுகப்படுத்தினார்.

9 அணிகள் ஒரு வருடத்திற்கு 90 கிரிக்கெட் மேட்ச்சுகள். இவற்றால் விளையும் வருமானம் சில ஆயிரம் கோடிகள். இந்த லாபம், வருமானம் யாருக்குப் போகிறது ? ஐ.பி.எல் என்னும் தனியார் நிறுவனத்துக்கு. அதன் ஓனர்கள் அல்லது உறுப்பினர்கள் யார் ? அம்பானி, மல்லையா என்கிற வெளிப்படையான முதலாளிகள் முதல் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா போன்ற பினாமி முதலாளிகள் தான் ஐ.பி.எல்லின் உரிமையாளர்கள்.

இவர்களுடைய நோக்கம் நீதி, நேர்மை வழுவாது கிரிக்கெட் என்னும் விளையாட்டின் உன்னத தருணங்களை மக்களுக்கும், ரசிகர்களுக்கும் கொண்டு சேர்ப்பதல்ல. மாறாக எல்லோருக்கும் ஒரு நான்கு மணி நேர முடிவு தெரிய டென்ஷனாகும் ஒரு பரபரப்பான த்ரில் சினிமாவைக் காட்டுவது. அதை சினிமாவாக இல்லாமல் லைவ்வாக கிரிக்கெட்டாக காட்டுகிறார்கள்.

நீங்களே சொல்லுங்கள். ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்க ஒரு சாதாரண ரசிகருக்கு இருக்கத் தேவையான தகுதி என்ன? போர், சிக்ஸ், சிங்கிள்ஸ், அவுட், ரன் அவுட், டக் அவுட் அவ்வளவுதான். அதைத் தாண்டி கிரிக்கெட் என்கிற விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி எந்த அறிவும் இருக்கவேண்டிய அவசியமில்லை. ஐ.பி.எல்லில் கடைசி ஐந்து அல்லது ஆறு ஓவர்களின் முன்னேயே விளையாட்டின் முடிவு தெரிந்துவிடும்படியான போட்டிகள் எத்தனை? குறைவு. மாறாக கடைசி ஓவரில், கடைசி பாலில், கடைசி ரன்னில் பார்வையாளரின் பி.பி.யை எகிறவைக்கும் க்ளைமாக்ஸ் கொண்ட ஆட்டங்களே அதிகம். ஏன்? இது வேண்டுமென்றே செய்யப்பட்டு வருகிறது என்று ஏன் ஒருத்தரும் சி.பி.ஐயிடம் போய்க் கேட்கவில்லை?

அதனால் தான் இன்று இல்லத்தரசிகள் முதல், இரும்புப் பட்டறை வைத்திருப்பவர் வரை எல்லோரும் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்ஸின் ஸ்கோர் கேட்கிறார்கள். 'பட்டைய கிளப்பிட்டான்' என்று சந்தோஷப்படுகிறார்கள். அல்லது 'சே..சொதப்பிட்டான் ' என்று சலித்துக் கொள்கிறார்கள். இதன் ஒரே காரணம் அந்த அணியின் பெயரில் சென்னை என்று ஒரு வார்த்தை வருவதால். அதைத் தவிர அவர்களுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தமில்லை.

இப்படி சென்னைக்கு சம்பந்தமேயில்லாதவர்கள் நடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸூக்காக பேஸ்புக் முதல், ட்விட்டர் வரை வாய் கிழிய மார்தட்டிப் பேசுபவர்கள் பல்லாயிரம் பேர். இதே போல் தான் மற்ற அணியினருக்கும் அந்தந்த மாநிலத்தின் ரசிகர்கள் தான் ஓனர்கள் போல் நினைப்பு. ஸ்ரீசாந்த் முதல் யாரோ பெயர் தெரியாத புக்கிகளை ஏதோ கொலைக் கேஸில் பிடித்தவர்களைப் போல முக்காடு போட்டு கூட்டிச் சென்ற இதே சிபிஐ மெய்யப்பன் மற்றும் அவருடைய மாமனார் சீனிவாசனின் வீட்டு வாசலில் பவ்யத்தோடு நிற்கிறது வாலாட்டியபடியே. இதைப் பற்றியெல்லாம் நம் மக்களுக்கு என்ன கவலை?

அவர்களுக்குத் தேவை நான்கு மணி நேர பரபரப்புச் சினிமா. அடுத்த நாளில் அதைப் பற்றி ரசித்துப் பேச கிடைக்க ஓரு டாபிக். இதில் ஹஸ்ஸி, சேவாக் என்று விளாசும் ஸ்டார்களின் மீதான ரசனைகள் தனி. இன்று ஊழல் வந்த போதும் அதை ஒரு டாபிக்காக மட்டும் பேச ஒரு ஆள் வேண்டும். அது ஸ்ரீசாந்த் மற்றும் அவரது உடந்தையாளர்கள். ஸ்ரீசாந்த் பெண்கள் கூட சல்லாபம் செய்யும் பேர்வழி என்று கோரமான வில்லனாக ஸ்ரீசாந்த் ஆக்க்படுகிறார். ஏனென்றால் ஏமாற்றப்பட்டதாக உணரும் ரசிகர்களின் கோபத்துக்கு ஒரு வடிகால் வேண்டுமே அதற்காகத்தான். மாறாக நீதி கிடைக்கவேண்டுமென்று அல்ல.

2008ல் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல்லில் ஐந்நூறு கோடி முதல் ஆயிரம் கோடிவரை ஊழல் புரிந்தார், மேட்ச் பிக்சிங்குகள் செய்தார் லலித் மோடி என்று 2010ல் புகார் கிளம்பியது. சிபிஐ கிளம்பியது. லலித் மோடி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் வெளிநாட்டுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அவ்வளவு தான் கேஸ் போட்டு அது...நடந்..து கொண்டே இருக்கிறுது. இருக்கும் ஜெ அம்மையாரின் வழக்குகள் போல. சி.பி.ஐக்காரர்கள் அப்போது கிளம்பியவர்கள் இன்னும் வந்து சேரவில்லை போல அதற்குள் அடுத்த ஊழல் பிரச்சனை ஸ்பாட் பிக்சிங். இந்த முறை சீனிவாசன் தைரியமாக அறிவிக்கிறார் தான் பதவி விலக முடியாதென்று. யாருக்கு வரும் இந்த தில்லு? உங்களுக்கோ எனக்கோ வருமா ?

இன்று 2013. இன்று வரை அந்த ஊழல் புகார்கள் என்ன ஆனது ? இந்தப் போட்டிகளை எப்படி நிஜமான விளையாட்டுக்கள் என்று நம்புவது என்பது பற்றி எந்த முட்டாள் ரசிகனுக்கும் கவலை இல்லை. அவனது சொந்தப் பணமான 500 ரூபாயை செலவழித்து டிக்கெட் வாங்கி இந்த மோசடி மேட்ச்களை பார்க்கிறோமே என்று யாருக்கும் வருத்தமும் இல்லை. இந்த ஸ்பாட் பிக்சிங்கில் இதுவரை 17 புக்கிகளை கைது செய்துள்ளதாம் போலீஸ். புக்கிகள் என்பவர்கள் தரகர்கள் மட்டுமே. பச்சையாகச் சொன்னால் புரோக்கர். கமிஷனுக்காக வேலைகள் செய்பவர். ஆனால் உண்மையில் சூதாட்டம் ஆடுபவர்கள் பலநூறு கோடிகளை சில்லறையாக எறிபவர்களே. அவர்களில் ஒருவர் கூட சி.பி.ஐயின் காமாலைக் கண்ணில் இதுவரை பிடிபடவில்லை. இனியும் பிடிபட மாட்டார்கள் என்பதுவே நிஜம்.

இதில் பல லட்சம் பேர் நம்ம வீட்டு டி.வியில் சாயங்காலம் வீட்டுக்குப் போனால் நைட் தூங்கறவரைக்கும் விறுவிறுப்பான என்டர்டெய்ன்மன்ட். அது எப்படி இருந்தா எனக்கென்ன? என்று நினைக்கும் மனப்பாங்குள்ள எளிமையான ரசிகர்கள். அவர்களுக்கும் டாஸ்மாக்கின் வாசலில் காலை ஏழு மணிக்கே வந்து நின்று கை நடுங்க சரக்கடிக்கும் குடிகாரனுக்கும் பெரிய வித்தியாசமில்லை. டாஸ்மாக்கோ, கடாமார்க்கோ, கள்ளச் சாராயமோ எனக்கு அந்த நேரத்துக்கு கிடைச்சாப் போதும். அவ்வளவுதான்.

இப்படி தவறுகள் ஐ.பி.எல்லை ஆரம்பித்த லலித் மோடியிலிருந்து அதன் தற்போதைய உரிமையாளர்கள், கறுப்புப் பணமுதலைகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வரை எல்லோரிடமும் கொட்டிக் கிடக்கும் போது, சில பல லட்சங்களுக்காக ஸ்ரீசாந்த் மற்றும் ஒரு மூவரை மட்டும் கட்டம் கட்டி இவர்கள் தான் கிரிக்கெட்டுக்கு களங்கம் கற்பிப்பவர்கள், இவர்களை ஒழித்தால் போதும் ஐ.பி.எல் தூய்மையான கங்கை நதியாக மாறிவிடும் என்று படம் காட்டும் ஊடகங்களும் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

அது ஸ்ரீசாந்த் வெறும் ஒரு பலியாடு மட்டுமே என்பதை.
ஆனால் ஓநாய்களோ...

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.