Sunday, March 3, 2013

அப்பா.. எங்கள் அப்பா..


சென்ற வாரம் லண்டனிலிருந்து வெளிவரும் சேனல்-4 ன் சிங்கள அரசின் போர்க்குற்றங்கள் பற்றிய ஆவணப்படத்தின் மூன்றாவது பாகம் வெளியாகியது. இப்படத்தில் சரணடைய வந்த 12 வயதேயான பாலச்சந்திரனை முகாமில் பிடித்து வைத்து விசாரித்து சித்திரவதைகள் செய்து பின்  ஈவிரக்கமின்றி சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்ற தகவல் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியானது.

இதையொட்டி உலகெங்கும் எழுந்த கண்டனக்குரல்களை சிங்கள அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் அசால்ட்டாக அமுக்கி விட்டன. சும்மான்னாச்சுக்கும் இனி வரப்போகும் ஐ.நா கூட்டத்தில் இலங்கை மீது அறிக்கை என்கிற பெயரில் சில கேள்விகள், தகவல்கள் வீசப்படும். அவற்றிற்கு இலங்கை அடிபணிவது என்பது கனவிலும் நடக்காது. இலங்கையை ஆளும் சிங்கள இனவாத அரசு, இந்தியாவை ஆளும் சோனியாவின் அரசுடன் சேர்ந்து அத்தீவில் தமிழர்களை கூண்டோடு இல்லாமல் செய்யும் நாள் விரைவில் வர இருக்கிறது.

சிறுவன் பாலச்சந்திரனின் அநியாயமான படுகொலை வீடியோ வெளியானதையொட்டி  அறிவு மதி எழுதியிருக்கும் கவிதையொன்றை வைத்து ஒரு காணொளி வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. தாஜ்நூர் என்பவர் இசையமைத்துள்ளார். நான்கு நிமிடங்கள் ஓடும் இதை கௌதமன் இயக்கியுள்ளார்.

இறந்து போன பாலச்சந்திரன் தன் தந்தையும் விடுதலைப் புலிகளின் தலைவருமான பிரபாகரனை நோக்கிப் பேசுவதாக எழுதப்பட்ட கவிதை இது. பிரபாகரன் இறந்து போன போராளிகளின், மக்களின் அனாதைக் குழந்தைகளை வளர்க்க மாஞ்சோலை போன்ற இளம் சிறார்கள் இல்லங்களை நடத்தி வந்தார். அவற்றின் மீது கூட சிங்கள ராணுவம் குண்டுகள் வீசி அக்குழந்தைகளை கொன்றது. பிரபாகரனும், போராளிகளும் சிங்கள ராணுவத்திற்கும், சிங்கள அரசிற்கும், சிங்கள ஆளும் வர்க்கத்திற்கும் சிம்ம சொப்பனமாய் இருந்தார்களேயொழிய சாதாரண சிங்கள மக்களை இலக்காய் கொள்ளாத பெருந்தன்மை கொண்டிருந்தார்கள். இந்த நாற்பதாண்டு கால போராட்ட வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தமிழர்கள் மீதான தொடர்ந்த தாக்குதல்களின் எண்ணிக்கையும் சிங்களர்களின் மீது எப்போதாவது நிகழும் எதிர்வினைகளையும் கணக்கிட்டுப் பார்த்தால் மட்டுமே இந்த உண்மை விளங்கும். உலக ஊடகங்கள், ஐ.நா. உட்பட இந்த உண்மைகளை விடுதலைப்புலிகள் ஈவிரக்கமற்றவர்கள் என்று காட்டுவதற்காக மறைத்தே வந்திருக்கின்றன. இந்த உண்மைகளை, யதார்த்தத்தை மக்களுக்கு உணர்த்துவதன் மூலம் இந்த கவிதை இனஉணர்வற்ற தமிழர்களைக் கூட கோபம் கொள்ள வைக்கும்.

என் அப்பாவும், உன் அப்பாவும் நைசாக தங்கள் வாழ்க்கையை மட்டும் சுயநலமாகப் பார்த்ததன் விளைவாகத் தான் இன்று பாலச்சந்திரனும் அவனது தந்தை பிரபாகரனும் போர்க்களத்தில் செத்துப் போனார்கள். பிரபாகரனுடன் சேர்ந்து போராட வர மறுத்த எவ்வளவோ ஈழத்தமிழ்க் குடும்பங்கள் உண்டு. அதற்காக தங்கள் பிள்ளைகளை ரகசியமாய் புலிகளுக்குத் தெரியாமல் காட்டில் அனுப்பிய குடும்பங்களும் நிறைய உண்டு. ஆனால் அவர்களை விடுதலைப் புலிகள் ஏதும் செய்யவில்லை. அவர்களுக்காகவும் சேர்ந்து தான் அவர்கள் போராடினார்கள். ஈழத்தமிழருக்கும், தமிழருக்கும் விடுதலைப் போராளிகளாய்த் தெரியும் அவர்கள் தான் சிங்கள அரசாலும், இந்திய சோனியா அரசாலும், ஐ.நா.வாலும் டெர்ரரிஸ்ட்டுகளாய் பட்டியலிடப்பட்டார்கள்.

தமிழனின் இனம் இன்று இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்கப்படுகிறது. அங்கிருந்து அவன் விரட்டப்படுகிறான். இதுவே நாளை உலகெங்கிலும் இருக்கும் தமிழனுக்கும் நிகழும். அப்போதும் இந்திய அரசு தனக்கு பிடிக்காத மாநிலமான தமிழ்நாட்டு மக்களுக்காக எந்தக் குரலும் எழுப்பாமல் கள்ள மௌனம் சாதிக்கும். இது தான் தமிழின், தமிழனின் தலைவிதி.

இதை மாற்ற மத்திய அரசில் தமிழன் கை ஓங்க வேண்டும். இலங்கையுடனான வெளியுறவுத் துறைக்கு மலையாளி, கன்னடியன், தெலுங்கர்களல்லாமல் தமிழனே தூதராக வரவேண்டும். ஐ.நா.விலும் இலங்கை சம்பந்தமான உறவுகளைப் பேண தமிழனே நியமிக்கப்பட வேண்டும். அதைச் செய்தால் தான் இந்திய அரசு என்கிற நயவஞ்சக நரியை தமிழன் தன் கட்டுக்குள் கொண்டு வந்து தமிழனைக் காக்க முடியும்.

அந்த வீடியோவை பார்க்க இங்கே க்ளிக்கவும்.

No comments: