Wednesday, March 27, 2013

சிங்கள-தமிழ் பிரச்சனையை வடஇந்தியர்-தமிழர் பிரச்சனையாக்க கரியவாசம் செய்த தந்திரம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் முன்பு காலத்தில் ஈழத்தமிழருக்கு எதிராகப் பேசியவரே என்றாலும் கடந்த சில வருடங்களாக ஈழத்தமிழருக்கு ஆதரவாக செயல்படுவது தெரிந்ததே. ஈழத்துக்கு ஆதரவாக மாணவர்களின் போராட்டத்தில் கூட அவர் வெளிப்படையாக மாணவர்களை ஆதரிக்கவில்லை.

சென்ற வாரம் ஈழமக்களின் துயரங்களை கேள்விப்பட்ட சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவி மனம் வருந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்குக் கூட அரசிடமிருந்து எதுவும் நிவாரணங்கள் சென்றதாகத் தெரியவில்லை. ஊடகங்களும் அந்தச் செய்தியை வெளியிடவில்லை. ஒருவேளை இனி ‘நாம் சாவது தேவையில்லை நம்மை சாகடிப்பவர்களை சாகடிப்போம்’ என்கிற போராட்ட உணர்வு எழுந்திருப்பதுவும் காரணமாக இருக்கலாம்.

அம்மையார் மற்றவர்கள் போராடுவதை விட தான் தன் அதிகாரத்தின் மூலம் செயல்களைச் செய்வதையே விரும்புகிறார் என்பதை காட்டும் விதமாக மூன்று நான்கு முறை இந்தியாவுக்கு “நட்பு”ரீதியில்(கொல்றதையும் செஞ்சுக்கிட்டு நட்பு என்னா நட்பு?) விளையாட வந்த சிங்களவர்களைத் தமிழக அரசே வெளியேற்றியது.

இப்போது ஐ.பி.எல் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் மாணவர்களைக் குறிவைத்து காசு பார்க்க நடத்தப்பட இருக்கும் வேளையில் அதில் இலங்கை வீரர்கள்-நடுவர்கள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டிகள் எதுவும் சென்னையில் நடக்க விடமாட்டோம் என்று அம்மா அதிரடியாக அறிவித்துவிட்டார். இதே அறிவிப்பை ஈழத்துக்கான மாணவர் போராட்டக் குழுவினரும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சென்று தெரிவித்திருக்கின்றனர். அவர்களுடைய அறிக்கையில் சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடும் ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டாமென்றும், அப்படி விளையாடினால் மைதானத்துக்குள் நுழைந்து போராடுவோம் என்றும் அறிவித்திருக்கின்றனர்.

ஐபிஎல் என்கிற தனியாருக்கு கொள்ளை லாபம் பெற்றுத் தரும் கிரிக்கெட் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமிலேயே வெட்கமில்லாமல் இரண்டு சிங்கள வீரர்களை வைத்திருக்கின்றனர். இது போல மற்ற அணிகளிலும் இருக்கும் இலங்கை வீரர்களின் எண்ணிக்கை பனிரெண்டு. இந்தப் பனிரெண்டு பேரும் சென்னையில் நடைபெறும் எந்தப் போட்டிகளிலும் விளையாட மாட்டார்கள் என பிசிசிஐயும் பிரச்சனை எதுக்கு என்று நினைத்து அறிவித்துவிட்டது. ஆனால் அவர்கள் மற்ற மாநிலங்களில் நடைபெறும் போட்டிகளில் விளையாடுவார்கள். ஏனென்றால் வட இந்தியர்களுக்கு தமிழன் இந்தியாவைச் சேர்ந்தவன் என்று கருதுவதில் கஷ்டம் இருக்கிறது.

இதை உறுதிப் படுத்தும் விதமாக இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் கரியவாசம் எனும் சிங்களர் வட இந்திய ஊடகங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற ஊடகங்களுக்கு நைஸாக அனுப்பிய மின்னஞ்சல் (ஈமெயில்) இப்போது அம்பலமாகியுள்ளது. அந்த ஈமெயிலில் அவர் இலங்கையின் சிங்களவர்கள் கி.மு. 300களில் வட இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலிருந்து (கலிங்கம்) வந்தவர்கள் என்றும், அசோகர் புத்தமதத்தை பரப்ப தனது மகள் சங்கமித்ரையையும், மகன் அரிஹத் மஹிந்தாவையும் அனுப்பினார் என்றும், அவர்கள் இலங்கையில் வந்திறங்கி பெருகியவர்களே இன்று சிங்களர்களாக இருக்கிறார்கள் என்றும், எனவே, இந்தியா 12 சதவீதமே இருக்கும் தமிழர்களின் உரிமைகளுக்காக கவனம் செலுத்துவதை விட 75 சதவீதமாய் இருக்கும் வட இந்தியர்களான சிங்களர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழராக இருந்தாலும் பிராமணரான சுப்பிரமண்ய சாமி இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா திருத்துவதை தடுக்க அமெரிக்கா சென்று அமெரிக்க தலைவர்களை சந்தித்து பேசிப் போராடி இலங்கைக்கு எதிரான வாசகங்கள் ‘இனப்படுகொலை’, ‘சர்வதேச விசாரணை’ வராமல் பார்த்துக் கொண்டார். இது இன்னும் இனப் பிரச்சனை அல்ல சும்மா போர்க்குற்றங்கள் தான் என்று பேசும் தமிழ்நாட்டு தேசியக் கட்சிகள் இப்போதாவது விழித்தெழுந்து கொள்வார்களா?

கரியவாசம் போன்ற இலங்கை நாட்டின் தூதர் எனப்படும் மிகப் முக்கியமான பதவியிலிருப்பவரே சிங்களர்களின் மூதாதையர்கள் வடஇந்தியர்கள் என்கிற கருத்தை முன்வைக்கும் போது நமக்குள் பல கேள்விகள் எழுகின்றன. ஒருவேளை இதனால் தான் இந்தியா சிங்களருக்குச் சாதகமாகவே இவ்வளவு காலமாக நடந்துவருகிறதா? இலங்கைக்கான இந்திய வெளியுறவுக் கொள்கை தமிழர்களைக் காப்பதற்குப் பதில் சிங்கள மூதாதையர்களான வட இந்தியர்களைப் பாதுகாக்கவே அமைக்கப்பட்டதா?  அதனால் தான் இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்தே தமிழர்களின் உரிமைகள் படிபடிப்படியாக பறிக்கப்பட்டு இன்று இன அழிப்பு உச்சத்திலிருக்கிறதா ? கி.மு. 300ல் போன சிங்களர்களுக்கு இலங்கை என்றால் அவர்களுக்கு 5000 வருடங்களுக்கு முன்பே அங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு இலங்கை சொந்தமில்லையா ? அவர்கள் இலங்கையின் மூதாதையர்கள் இல்லையா ?
தமிழர்களே யோசியுங்கள். இலங்கையின் சிங்களன்-தமிழன் பிரச்சனை இந்தியாவின் வட இந்தியன் -தென்னிந்தியன் பிரச்சனையாக மாற்றப்படுகிறதா ? அதனால் தான் மற்ற மாநிலங்களில் இலங்கை வீரர்கள் ஐபிஎல் மேட்ச் விளையாட அனுமதிக்கப்படுகிறார்களா?

No comments: