Friday, March 15, 2013

அமெரிக்காவை அடிவருட கமல் எடுத்திருக்கும் 'விஸ்வரூபம்'



டைட்டில்ஸ்:
விஸ்வரூபம் படம் பல சர்ச்சைகளுக்குப் பின் கடந்த பிப்.7 அன்று தமிழ்நாட்டிலும் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கமல் இருந்த வீட்டை விட்டுவிட்டு நடுத்தெருவிற்கு வரப்போகிறேன் என்று ரீல் விட்டது போய் அவர் இருக்கும் ஏரியாவையே வாங்கும் அளவுக்கு அவருக்கு துட்டு சம்பாதித்துத் தந்துவிட்டிருக்கிறது இந்தப் படம். இவ்வளவு பெரும் பணத்தை நோக்கிய பாய்ச்சலில் உண்மையில் அவர் ‘கலைஞனாக’ மட்டுமே இந்தப் படத்தில் தெரிகிறாரா? இது ஹாலிவுட் படங்களை தூக்கிச் சாப்பிடும் மேக்கிங் கொண்ட படமா ?  இப்படம்

பேசும் அரசியல் என்ன ? இது முஸ்லீம்களுக்கு எதிரான படமா? இல்லையா? நம் தமிழ் இனமே 2009ல் லட்சக்கணக்கில்  அழிக்கப்பட்டபோதும், மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் ‘கம்’முனு கமுக்கமாக இருந்த கமல் எங்கோ இருக்கும், ஆப்கானிஸ்தான் பிரச்சனையை கையில் தேடி எடுத்தது ஏன் ? திரையில் அவர் காட்டும் நாத்திகவாதம் போன்ற முகமூடிகள் எதுவரை ? என்பது போன்ற கேள்விகளுக்கு விரிவாக பதில் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

விஸ்வரூபம் – உருவான கதை..
சில வருடங்களுக்கு முன்பு...
கமலின் மன்மதன் அம்பு படம் தோல்வியடைந்த நிலையில் அடுத்ததாக அவர் பெரிய பட்ஜெட்டில் தமிழ்க் ‘கலைச் சேவை’ செய்ய எந்தத் தயாரிப்பாளரும் குனிய வராத நிலை. செல்வராகவன் முதல் மனைவியான சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின்பு கீதாஞ்சலி என்கிற பணக்காரப் பெண்ணை காதலித்துக் கொண்டிருந்த நேரம், செல்வராகவனின் முந்தைய ஆயிரத்தில் ஒருவன் தோல்வியடைந்த நிலையில் கீதாஞ்சலியின் உறவினர்களான பி.வி.பி என்கிற பெரும் கோடீசுவரத் தயாரிப்பாளர்கள், கீதாஞ்சலியின் தயவில் செல்வராகவனின். அடுத்த படமான ‘இரண்டாம் உலகத்தில்’ கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க செல்வராகவன் இயக்க என்று பிரமாண்டமாக தயாரிக்க ஒப்புக் கொண்டார்கள். ஆரம்பத்தில் இதற்கு பெரிய தொகைகள் அட்வான்ஸாக வழங்கப்பட்டு ஸ்டோரி டிஸ்கஷன்கள் நடைபெற்றபோது கமலின் சிறுமூளை எக்ஸ்ட்ராவாக வேலை செய்ய, அவருக்கும் செல்வராகவனுக்குமிடைய மனஸ்தாபங்கள் படம் ஆரம்பிக்கும் முன்பே முளை விட, ஒரு கட்டத்தில் கமல் எதிர்பார்த்தபடி செல்வராகவன் கோபித்துக் கொண்டு போய்விட்டார். கமலை அணுகிய பி.வி.பி காரர்களைப் பார்த்து “கவலையே படாதீர்கள் அவர் போய்விட்டால் என்ன ? என் கால்ஷீட் உங்களுக்குத் தான். நானே ஒரு கதை வைத்திருக்கிறேன். அதை வைத்து விஸ்வரூபம் எடுப்போம்..” என்று சொல்ல அவர்கள் தமிழ்த் திரையின் ஜாம்பவானே சொல்லும்போது ‘சரி’ என்று ஒத்துக்கொண்டார்கள். செல்வராகவனுக்கு கீதாஞ்சலி மீண்டும் ரெகமண்ட் செய்து அதே தயாரிப்பாளர்களுக்கு இரண்டாம் உலகத்தை கமல் இல்லாமல் இயக்கிக் கொடுக்க சம்மதிக்க அதன் வேலைகளும் ஆரம்பித்து விட்டன.

விஸ்வரூபம் படத்தை கமல் எடுக்க எடுக்க சுமார் 50 கோடிகள் ஆனபின்பு பி.வி.பி “படம் எப்ப சார் முடியும்?” என்று கேட்க, கமலோ சர்வசாதாரணமாக “இப்பத்தான் இண்டர்வெல்லே முடிஞ்சிருக்கு” என்று சொல்ல கமலின் இந்தப் புது அவதாரத்தைப் பார்த்த அவர்களும் கடுப்பாகி பஞ்சாயத்துக்குப் போய்விட்டார்கள். உண்மையில் கமல் ஒரு படத்து பட்ஜெட்டிலேயே இரண்டாவது பாகத்தையும் சேர்த்து எடுத்து விட்டார் என்கிறார்கள். பிவிபிகாரர்களுக்கு செட்டில் செய்ய எடுக்கப்பட்ட படத்தை போட்டுக்காட்டி வேறு சில தயாரிப்பாளர்களை குனியவைத்து பணம் ரெடிசெய்து பிவிபியையும் கழட்டி விட்டுவிட்டு ராஜ்கமலின் ஏகபோக தயாரிப்பாக உருமாறி விஸ்வரூபம் வெளிவந்திருக்கிறது. ஒரு மாதத்தில் ஆன கலெக்ஷன் 200 கோடியாம். படம் எடுக்க ஆன செலவு 40 கோடி போக கமலுக்கு கிடைக்கும் லாபம் மட்டுமே 160 கோடி.. இதில் ரசிகமகா ஜனங்களே நீங்கள் கவனிக்க வேண்டியது கமல் எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்பதல்ல. மாறாக இப்படம் ஒரு கலைச் சேவை என்று காட்டப்படும் பிம்பம் எவ்வளவு தவறானது என்பதே.

விஸ்வரூபம் – கதை..
விஸ்வா என்கிற பெண்மை நிரம்பிய நடனக் கலைஞனாக நியூயார்க்கில் நடனம் கற்றுத் தரும் ஆசிரியர் கமல். தன்னை விட வயதான கமலை அமெரிக்கா வருவதற்காகவே திருமணம் செய்துகொண்ட நிருபமா அமெரிக்கா வந்த பின் தன்னுடன் ஆபிசில் வேலை செய்யும் பாஸூடன் கள்ளக் காதலாகி, அதன் ஈர்ப்பில் கமலிடமிருந்து விவாகரத்து வாங்க ஏதாவது காரணம் கண்டுபிடிப்பதற்காக அவருடைய நடவடிக்கைகளை கவனிக்க ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை நாடுகிறார். அப்போது தான் தெரிகிறது அவர் அல்கொய்தாவால் தேடப்படும் இந்திய சீக்ரட் ஏஜண்ட் என்று.

அந்த நேரத்தில் தோன்றும் ப்ளாஷ்பேக்கில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து தப்பிய காஷ்மீரியாகச் வேஷமிட்டுச் செல்லும் (காஷ்மீரி தெரியாத) கமல்ஹாசனை “ஓமர்” என்கிற (தமிழ் நன்றாகப் பேசும்) அல்கொய்தா தளபதி சந்திக்கிறான். அங்கு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு பயிற்சி தரும் நம் கமல் அல்கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடனையும் பார்க்கிறார். அல்கொய்தாவால் கடத்தப்பட்ட வெள்ளை இன தூதரக உறுப்பினர்களை ஒரு கிராமத்தில் ஆப்கானிஸ்தான் மக்களிடையே அங்கே பதுக்கி வைக்க கமல் கொடுக்கும் ரகசிய சிக்னல் மூலம் உறுப்பினர்களை மீட்க வரும் நேட்டோ படையால் அந்தக் கிராமமே சின்னாபின்னமாக, கடைசியில் உண்மையில் கமல் யார் என்று பார்ப்பவர்களுக்குத் தெரியவருகிறது. அவர் இந்திய உளவுத்துறை ‘ரா’ வின் ஸ்பெஷல் அதிகாரி. காஷ்மீரியாக வேடமிட்டு ஒசாமையே நெருங்கிவிட்ட சூராதி சூரர்; பிற்பாடு அமெரிக்காவில் மீண்டும் தொடரும் அல்கொய்தா கதையில் தங்களின் எதிரியான அமெரிக்காவை டர்ட்டி பாம்ப் எனப்படும் சீசியம் அணுகுண்டினால் நியூயார்க் நகரையே அழித்துவிட நினைக்கும் அதே தீவிரவாதிகளின் செயலை கமல் எப்படி திறமையாக முறியடித்து ‘ஜெய்ஹிந்த்’(ஜெய்அமெரிக்கா?) என்கிறார் என்பது மீதிக் கதை. ஹாலிவுட்டில் வருடத்துக்கு ஒரு படமாவது ‘நியூயார்க்-குறிவைக்கும் எதிரி-ஹீரோ-நகரையே-காப்பாற்றுவது’ என்கிற இந்த கதையமைப்போடு வருவது சகஜம் தான். ஆனால் இந்தியாவிலிருந்து கொண்டு அமெரிக்காவுக்கு சலாம் போடும் நம் கமலின் ‘கலைத் தாகம்’ தான் காணச் சகிக்கவில்லை. கமலின் ‘வெற்றி விழா’ படம் பார்த்திருக்கிறீர்களா... அது விஸ்வரூபத்தின் ஆதிகாலத்திய 0.01வது வெர்ஷன் என்று சொல்லலாம்.

விஸ்வரூபம் – ஒரு கலைப்படைப்பாக..
விஸ்வரூபத்தை கமலே இயக்கியிருக்கிறார். இப்படத்தில் மட்டுமே அவரது முந்தைய படங்கள் போல வேறு ஒரு இயக்குனரின் பெயரை டம்மியாகப் போட்டுவிட்டு இவரே ஸ்டார்ட் கட் சொல்லி பின் அந்த டைரக்டர் கடுப்பாகி கிளம்பிவிட பிறகு தவிர்க்க இயலாமல் இவர் ‘இயக்குனர்’ என்று பெயர் போடும் அசம்பாவிதம் (உ.ம். சாஷி 2000, விருமாண்டி, ஹேராம்) நடைபெறவில்லை. நேரடியாகவே தானே டைரக்டர் என்று போட்டுக்கொண்டார். அடுத்த ஹாலிவுட் படம் அவருக்குத் தானே கிடைக்கவேண்டியிருக்கிறது.

திரைக்கதையமைப்பில் பெரிய சுவாரசியம் கமல் பெண் தன்மையுள்ள அப்பாவி டேன்ஸர் அல்ல மாறாக பத்துப் பேரை ஒரே நேரத்தில் கொன்றுவிட முடிந்த உளவுத்துறை ஹீரோ என்று காட்டப்படுவது வரை இருக்கிறது. அதற்குப் பின் அவர் காஷ்மீரி என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஆப்கானிஸ்தானில் போய் நிற்பது ஜேம்ஸ்பாண்ட் சம்பந்தமேயில்லாத ஏதோவொரு மூன்றாவது உலக நாட்டில் வில்லனை துப்பறியச் செல்வது போல நமது உணர்வுக்கும் வாழ்வுக்கும் சம்பந்தமில்லாத ஏதோ துப்பறியும் பட விவகாரமாகவே இந்திய, தமிழ் பார்வையாளருக்குத் தோன்றும். ஆகவே படம் துவங்கி அரைமணி நேரத்திற்குப் பின் பார்வையாளர்கள் ஆயாசமடைந்து விடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் பார்வையாளர்கள் படத்தில் தொடரமுடிகிற பரிச்சயமான ஒரே நபர் கமல்ஹாசன் மட்டுமே. மற்ற எல்லோரும் வில்லன்களாகவும், அல்லது அவனுடன் தொடர்புள்ள யாரோவாகவுமே புரிந்துகொள்ளப்படுவார்கள். அதிலும் கமல்ஹாசன் அங்கு போய் செய்யும் துப்பறியும் ‘குருதிப்புனல்’ வகை துரோக வேலைகள் வீரசாகசமாகவோ அல்லது கொடும் நம்பிக்கைத் துரோகமாகவோ மனதில் பதிவதில்லை. கதை நகர்த்தல் தெளிவாக இல்லாமல், கமல் நல்லவரா கெட்டவரா என்று நம்மை முடிவுக்கு வரவிடாமல் குழப்புவது போலவே குழப்பமாக இருக்கிறது. இதில் இரண்டாம் பாகம் ஒன்று வேண்டுமென அவர் முன்பே முடிவு செய்துவிட்டதால் ஆப்கானிஸ்தானில் நடக்கும் இந்தக் கதை பாதியிலேயே அம்போவென விடப்பட்டு மீண்டும் அமெரிக்காவிற்கு கதை போகிறது. ஆப்கானிஸ்தானில் ஒமராகவும் அவரது துணையாளாகவும் வருபவர்களே பின்பு அமெரிக்காவிலும் அவரைத் துரத்துகிறார்கள். அவர்களே இவர்கள் என்று எளிதில் தெரியாதபடி இருக்க ராகுல் போஸின் குரலை மாற்றியது, ஜெய்தீப்பின் முடிவெட்டு, தாடியை எடுத்தது என்று மெனக்கெட்டிருக்கிறார் கமல். ஒரே நேரத்தில் பத்து மேக்கப் போட்டு மெனக்கெட்டவராயிற்றே!

இதில் சீசியம் அணு எண், அணு எடை, கதிரியக்கம், பாரடே ஷீல்ட், டர்ட்டி பாம்ப் என்று டெக்னிக்கல் விஷயங்களிலும் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் இதற்கே எப்.பி.ஐ காரன் வாயைப் பிளப்பது போல் காட்டியதுதான் காமெடி. அதிலும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் சிலவற்றில் ஜேம்ஸ்பாண்டிடம் யாராவது ஒரு இளம்பெண் அவரது அழகிலும், சாகசத்திலும் மதிமயங்கி “யார் நீங்கள்” என்று வியந்து கேட்க, அவர் பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட் என்று ஸ்டைலாகக் கூறுவது போலவே கமலையும் இந்தப் படத்தில் ஒரு எப்.பி.ஐ. ஆபீசர் ஆச்சரியப்பட்டு கேட்கிறார். இன்னொரு எப்.பி.ஐ. ஆபிசர் ‘உங்க கடவுளுக்கு நாலு கை இருந்தால் அவரை எப்படி சிலுவையில் அறைவீர்கள்’ என்று சம்பந்தமேயில்லாமல் கேள்வி கேட்கிறார். எப்.பி.ஐ மேல் என்ன கடுப்போ கமலுக்கு தெரியவில்லை.

படத்தின் ஆரம்பத்திலேயே வரும் ஷாட்டில் ஒரு மாடியிலிருந்து புறாவை கமல் கீழே பறக்க விட அது கீழ்நோக்கிய ஷாட்டில் அமெரிக்க கொடியைத் தாண்டி பறந்து விழ. அடுத்த ஷாட்டில் அதே புறா வால்ஸ்ட்ரிட்டின் எருமையின் காலிலிருந்து மேலே எழும்பி பறந்து போகிற மேல் நோக்கிய ஷாட்டில் திரும்பவும் அமெரிக்க கொடி பறக்கிறது. அதாவது புறாக்களால் கீழே விழ இருந்த அமெரிக்க அரசின் மானத்தை அம்பி கமல் காப்பாற்றி மேலேற்றிவிட்டார் என்கிற அர்த்தத்தில்.

படத்தின் ஒலிப்பதிவை ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி என்பவர் பொறுப்பேற்க க்ரிஸ் எம். ஜேகோப்சன் என்கிற வெளிநாட்டவர் சவுண்ட் எடிட்டராக செய்திருக்கிறார்.  படத்தில் ஹாலிவுட் அளவுக்கு ஒலியின் தரம் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்கள். நன்றாகவே இருக்கிறது தரம்.

இசையமைத்திருப்பவர்கள் ஷங்கர்-லாய்-இஷான் என்கிற மூவர். கமல் ஆடும் முதல் பரதநாட்டியப் பாடல் நன்றாக இருக்கிறது. மற்ற மூன்று பாடல்களும் மோசமில்லை. படத்துக்கு பலமே சேர்க்கின்றன. ஆனால் பிண்ணனி இசை தான் சொதப்பல். காரணம் கமலுக்கே தமிழ்நாட்டில் இருந்து போன ஒரு சிபிஐ ஆள், ஆப்கானிஸ்தானில் யாரோ ஒரு இளைஞன், யாரோ ஒரு டாக்டர் போன்றவர்களின் மரணங்களுக்காக என்ன எக்ஸ்ப்ரஷன் காட்டுவான் என்று சிறிது குழம்பி நின்று வரும்போது இசையமைப்பாளர்களும் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். கடைசியில் கமலும், அவர்களும் சேர்ந்து தீவிரவாத-பயங்கரவாத இசையில் போய் நின்று கொள்கிறார்கள். ஆடியன்ஸும் மனிதாபிமானம் என்ற அளவிலோடு பார்க்க முடிகிறதே தவிர அந்தக் காட்சிகள் மனதை ஒன்றும் செய்துவிடுவதில்லை.

காட்சிகள் மனதைப் பாதிக்கும், பயமுறுத்தும் இடங்களும் உண்டு. தூதரக அதிகாரி கழுத்து அறுபடும் இடம், தூக்கிலிடப்படும் இடம் என்று சில இடங்களில் முஸ்லீம்களின் மனத்தில் குற்ற உணர்வையும், முஸ்லீம் அல்லாதவர்களின் மனத்தில் முஸ்லீம்களின் மேல் பய உணர்வையும்,  ஆழ்மனத்தில் வெறுப்புணர்வையும் படம் தோற்றுவிக்கிறது. இது கமலின் ஆழ்ந்த அமெரிக்க மனநிலையை காட்டுகிறது.

படத்தின் ஒளிப்பதிவு சானு ஜான் வர்கீஸ் (மலையாளி போல் தெரிகிறது) இவர் தான் டேவிட் படத்திற்கும் ஒளிப்பதிவாளர். ஒளிப்பதிவில் நம்மவர்களின் தரம் உலகப் படங்களுடன் ஒப்பிடும் அளவுக்கு வளர்ந்து ரொம்ப நாளாகிவிட்டது. வர்கீஸின் ஒளிப்பதிவும் கச்சிதம். ஆனால் அவர் கமலைத் தாண்டி எந்த புது முயற்சியும் செய்துவிடவில்லை.

எடிட்டர் மகேஷ் நாராயணனைச் சொல்லி குற்றமில்லை. கமல் சொன்ன பகுதிகளை இரண்டாம் பாகத்திற்கு விட்டது போக மற்ற பகுதிகளை ஏதோ தன்னால் முடிந்த அளவு ஜம்ப் இல்லாமல் எடிட் செய்திருக்கிறார். செய்த வரை அவருக்கு சபாஷ்தான்.

ஆர்ட் டைரக்ஷனை இளையராஜா என்பவரும் நான்ஸி டெர்ரின் என்பவரும் கவனித்திருக்கிறார்கள். நியூயார்க்கில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு உள்ளூரில் நான்ஸி அம்மணியையும் இந்தியாவில் மற்றும் ஆப்கானிஸ்தான் போல் சென்னை ஈசிஆர் ரோட்டில் செட் போட்டு எடுத்த காட்சிகளுக்கும் இளையராஜா ஆர்ட் டைரக்டர் போல் தெரிகிறது. இளையராஜாவின் திறமை பளிச்சிடுகிறது. ஆப்கானிஸ்தானின் ஹெலிகாப்டர்கள் தாக்குதல்கள் லாஜிக்கலாக கவனித்தால் படுசுமார். நியூயார்க் நகரில் நடக்கும் திராபையான கார் துரத்தல் காட்சி சோபிக்கவில்லை. அதே போல எப்.பி.ஐ சம்பந்தமான காட்சிகளும், வசனங்களும் வலுவாக இல்லை. ஒன்று எப்.பி.ஐயை மட்டம் தட்டும் நோக்கில் காட்சி வைக்கப்படுகிறது. இல்லையென்றால் எப்.பி.ஐக் காரன் கமலையோ, நிருபமாவையோ புகழ்வதாக காட்சி வைக்கப்படுகின்றது.

கிராபிக்ஸூக்கும் பெரிய டீம் வேலை செய்திருக்கிறது. நாசரின் மகனை கிரேனில் தூக்கிலிடும் காட்சியில் பத்து பேர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதை நூறு பேர் போல காட்டியது கிராபிக்ஸ் வேலையே. படத்தை மெருகேற்ற இவையெல்லாம் உதவியிருக்கின்றன. வில்லனாக நடித்த ராகுல் போஸின் டபுள் மேக்கப் கன கச்சிதம். ராகுல் போஸின் நடிப்பும் கூட அருமை. ஹிந்தி சினிமாவில் பெரிய ஆளாக இருக்கும் ராகுல் போஸ் தமிழிலும் நுழைந்திருக்கிறார். இவரை வைத்து தமிழில் யாராவது நல்ல படங்கள் எடுக்க முயற்சி செய்யலாம்.(விஸ்வரூபம் நல்ல படமா ?)

மொத்தத்தில் தொழில்நுட்ப ரீதியாக இது தமிழில் ஒரு வலுவான படமே. கமலுக்கு இதில் வெற்றியே கிடைத்திருக்கிறது பெரும் பொருட்செலவில். ஆனாலும் இப்படம் ஒரு டெக்னிக்கல் மாஸ்டர் பீஸ் அல்ல. உதாரணமாக ஆப்கானிஸ்தான் என்றதும் நமக்கு மலைக்குகைகளை மட்டும் காட்டிவிட்டார்கள். ஆப்கானிஸ்தான் மக்கள், அவர்கள் வாழ்க்கை முறை, அதில் போர் செய்திருக்கும் கோலம், சீரழிந்த அவர்களது வாழ்க்கை முறை என்று எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதையெல்லாம் நுட்பமாகப் பதிவு செய்வதும் கமலின் நோக்கமல்ல. அவரது நோக்கமெல்லாம் இந்தியாவில் இருக்கும் ஒருவருக்கு ஆப்கானிஸ்தான் என்றால் ஞாபகம் வரும் வறண்ட மணல் பகுதி, நிறைய குகைகள் இருக்கும் மலைகள், ஒசாமா பின்லேடன், பர்தா அணிந்த பெண்கள், அபின் செடிகள், காலி துப்பாக்கி ரவைகளை எடைக்கு எடை வாங்கும் கடை(எதுக்கு?) என்பவற்றை காட்டினாலே போதும் என்று நினைத்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் என்ன அல்ஜீரியா என்றாலும் நாம் நம்பித்தானே ஆவோம்.

கமல் என்கிற கலைஞன் தனது 55 வயதிலும் இளைஞனாக வேடமிட்டு இவ்வளவு திறமையாக ஒரு படம் எடுத்திருப்பதை நிச்சயம் நாம் பாராட்டுகிறோம். ஆனால் ஒரு சராசரி ரசிகராக அவர் ஒரு ‘சகலகலா வல்லவன்’ தான்.. ‘உலக நாயகன்’ தான் என்று பெருமையடித்துக் கொள்வதை செய்வதற்கு மனது ஒப்பவில்லை.

தொழில் நுட்பத்திலும், இயக்கத்திலும் கமல் இன்னும் கொஞ்சம் 10 சதவீதம் சிரமப்பட்டால் உலகப்படங்களின் நேர்த்தியை, தரத்தை அடைந்துவிட முடியும் தான். ஆனாலும் அவர் ஒரு இன்ஞ்ச் கீழேயே இருப்பதன் காரணம் ஹாலிவுட் உலகத்தை அப்படியே காப்பியடிக்க அவரும், மணிரத்னமும் சதா முயன்று கொண்டேயிருப்பது. சமீபத்தில் பாலா இயக்கிய பரதேசி படம் கேன்னஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பெரிய பாராட்டுதல்களைப் பெற்றது என்கிறார்கள். பாலாவிடம் இது போன்ற ஹாலிவுட் பின்தொடர்தல் என்பது இல்லை. அவர் உலக சினிமாக்கள் பார்ப்பவரே என்றாலும் உலகச் சினிமாவை, அதன் உயரத்தை, நம் தமிழ் கலாச்சாரத்தின் வழியாகவே தொட முயல்கிறார். அதிலேதான் அவர் வெற்றியும் பெறுகிறார்.

கமலின் இன்னொரு பலவீனம் இவ்வளவு சாதித்த பின்னும் இன்னும் ஒவ்வொரு படத்திலும் தான் ஒரு ‘சகலகலாவல்லவன்’ என்று காண்பிக்க முயல்வது. அதற்காக டி.ராஜேந்தர் போல கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நெறியாள்கை அப்புறம் இவற்றுடன் சேர்த்து ஹீரோவாக நடிப்பு, இன்னும் 4 ரோல், பத்து வகை மேக்கப் என்று தேவையில்லாமல் தனது ஆற்றலை சிதறவிடுகிறார். திரைக்கதையில் இயக்குனர் கமலின் தலையீடு எப்போதும் இருப்பதால் அவரின் படங்கள் பெரும்பாலும் திரைக்கதையில் நடிகர் கமலையே தொடர்வதாக இருக்கும். தொடர்ந்து எல்லா சீனிலும் அவர் நடித்துக் கொண்டே இருப்பார் என்னும் விதமாக கதை அமைக்கப்படும் போது அது கதைக்கான படமாக இல்லாது கதாபாத்திரமான ஹீரோ கமலைத் தொடரும் படமாகவே ஆகிவிடும் (உதா. மஹாநதி, விருமாண்டி, அன்பே சிவம், அவ்வை சண்முகி..). இதில் விதிவிலக்காக அன்பே சிவம் போன்ற படங்களின் கதையமைப்பே இயல்பில் ஹீரோவையும் அவருடனான துணை கதாபாத்திரமான மாதவனையும் பின் தொடர்ந்து போவதாக இருந்ததால் கமலின் மிக நேர்த்தியான படங்களில் ஒன்றாக அன்பே சிவம் ஆனது.

விஸ்வரூபம் – ஒரு நுணுக்கமான அரசியல் தந்திரமாக..
விஸ்வரூபத்தின் நுணுக்கமான சாணக்கியத்தனமான அரசியலை புரிந்து கொள்ள நிறைய கவனம் வேண்டும். படத்தில் நிறைய நாத்திகவாத வரிகள் வருகின்றன. கடவுள் கிட்ட கேக்கணும்னு ரூபா சொல்லும்போது ‘எந்தக் கடவுள்’ அப்படின்னு பேசறதுலருந்து, அய்யராத்துப் பொண்ணே நீ கறியை டேஸ்ட் பண்ணு என்று சொல்லுமிடத்திலிருந்து ஆங்காங்கே நாத்திகவாத வரிகள் வந்து கமல் ஐயர்களையே திட்டத்தான் செய்கிறார் பாருங்கள் என்கிற வாதத்திற்கு உபயோகமாக இருக்கிறது. ஆனால் கமலை வெறுக்கும் பிராமணர்கள் எவ்வளவு பேர்? மிகக் குறைவு. காரணம் அவருடைய பிராமண நாத்திகவாதம் ஒரு விதத்தில் பிராமண மக்கள் ரசிக்கும்படியே தான் இருக்கிறது என்பதால் தான்.

ஒரு காட்சியில் கமல், ஆண்ட்ரியா போன்றோர் டி.வி பார்த்துக் கொண்டிருக்க டி.வியில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை ஒபாமா அறிவிக்க எல்லோரும் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள். கமல் கேட்பார் ஏன் ஒருத்தரைக் கொன்னதைப் போய் கொண்டாடுறாங்க ? இது தப்பில்லையா ? அதுக்கு ஆண்ட்ரியா சொல்வார் அசுரனை கிருஷ்ணன் வதம் பண்ணினா சந்தோஷம்னு சொல்வாரே அது போலத்தான் என்பார் (அசுரன்=ஒசாமா=தீவிரவாதி, கிருஷ்ணன்=ஒபாமா=தேவர்). அப்போது கமலின் மாமா சொல்வார் “சந்தோஷமா என்று தீவிரவாதியின் மகன்-மகள் புள்ளைகளைக் கேளுங்கள். அவர்களுக்கு அவன் நல்ல தகப்பன் இல்லையா என்று”.

ரொம்ப லாஜிக்காக தத்துவம் கலந்து எழுதப்பட்டது போல் தோன்றும் இந்த விவாதத்தில் ஒசாமா நல்லவனா கெட்டவனா என்பது ஏற்கனவே முடிவாகிப் போய்விட்டது(அசுரன்). அதன்படி தீவிரவாதி கெட்டவன். கேள்வியை அவன் நல்லவனா கெட்டவனா என்று கேட்பதில் நிறுத்தாமல் அவன் கொலை செய்யப்பட்டது சரியா தவறா என்கிற விவாதத்தில் போய் நிறுத்திவிட்டதன் மூலம் அவன் கெட்டவன் தான் என்பதை மறைமுகமாக அழுத்துகிறார் கமல். பகத்சிங் அன்றைய ஆங்கிலேயரால் தீவிரவாதி என்று தூக்கிலிடப்பட்டவன். இன்று நமக்கு அவன் யார் ? ஒசமா பின்லேடன் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளின் மக்களிடத்தில் எவ்வாறாக அறியப்படுகிறான்? சந்தேகமேயில்லாமல் அவர்களுக்கு அவன் ஒரு பகத்சிங். கமல் தீவிரவாதம் சம்பந்தமான விவாதங்களை சாமர்த்தியமாக தவிர்க்கிறார். தீவிரவாதம் = படுமோசமான கொலைகாரர்கள் என்று மட்டுமே அடையாளப்படுத்துகிறார்.

காஷ்மீரி என்கிற தீவிரவாதியாக அவர் ஆப்கானிஸ்தானில் நுழைவதன் பிண்ணனியை பார்ப்போம். கமலின் அப்பா காஷ்மீரி என்கிற ஆப்கானிஸ்தான் வரை புகழ்பெற்ற ஒரு தீவிரவாதி அதாவது போராளி. அவர் பெயரைச் சொன்னதுமே தீவிரவாதிகளின் தலைவரான ஓமரே ஆச்சரியப்படுகிறார். அப்படிப்பட்ட பெரிய போராளி காஷ்மீரி தன் மனைவியை கர்ப்பிணியாக்கி அம்போவென விட்டுவிட்டுப் போனவராக சித்தரிக்கப்படுகிறார். ‘அப்பன் இல்லாதவன்’ என்று ஆக்கப்பட்ட அவருடைய மகனான கமல் தானே தன் அம்மாவின் மானத்தைக் காக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். இப்படி வலிந்து சொல்லப்படும் ஒரு கதை ஏன் முன் வைக்கப்படுகிறது ?  நீங்கள் நினைப்பது போல் பொழுது போக்குக்காகவா ?

தீவிரவாதிகள் அனைவரும் கூட்டாக, தனியாக தொழும் காட்சிகள் படம் முழுக்க. குண்டு வைத்து அத்தோடு சேர்ந்து சாகப் போகும் தீவிரவாதி அதன் பக்கத்திலேயே பாய்விரித்து தொழுகிறான். சீசியம் என்கிற கதிரியக்கத் தனிமத்தை வெறும் கையாலேயே எடுத்தால் ஆறேழு மாதங்களில் சாவு நிச்சயம் என்று தெரிந்தும் பங்க்கர்களில் வாழ்ந்து கொண்டு உயிரையும் விடத் தயாராயிருக்கும் முஸ்லீம் ஜிகாதி. இடத்தையே வெடிவைத்துத் தகர்க்க சுற்றிலும் குண்டு வைத்துக் கொண்டு தொழுது கொண்டிருக்கும் முஸ்லீமைச் சுற்றி வளைத்து எஃப்பிஐ நின்றவுடன் பாய்ந்து சென்று ரிமோட் கண்ட்ரோலை எடுத்து, அவனைத் துளைத்த துப்பாக்கிக் குண்டுகளையும் தாண்டி சிரித்தபடியே பட்டனை அமுக்கி தானும் தன்னைச் சுற்றியுள்ள அனைவரும் வெடித்துச் சிதறும்படி செய்து மாண்டுபோகிறான். மனித வெடிகுண்டு முஸ்லீம் இளைஞன். கழுத்தை அறுக்கும் முஸ்லீம். தூக்கில் இடும் முஸ்லீம். பேசிக் கொண்டிருக்கும் போதே திருப்பி நிறுத்தி பின்மண்டையில் சுட்டுக் கொல்லும் முஸ்லீம். கழுத்தில் கயிற்றை இறுக்கிக் கொல்லும் முஸ்லீம். இப்படி படம் முழுவதும் முஸ்லீம்கள் மிகக் கொடும்பாதகமான செயல்களைச் செய்கிறார்கள்.

இவர்களை இப்படி மானாவாரியாகக் காட்டிவிட்டு இஸ்லாம் சகோதரர்கள் பிரியாணி கிண்டிப் போடவேண்டும் என்று கமல் எதிர்பார்ப்பது அவர்களை எல்லாம் எவ்வளவு முட்டாள்கள் என்று அவர் நினைத்திருப்பார் என்பதைக் காட்டுகிறது. “ஏன்யா ஒரு படத்துல கதைப்படி முஸ்லீம்கள் இப்படி செய்யிற மாதிரி வந்தா என்ன தப்பு?” என்று சுதந்திரம் பற்றி பேச நீங்கள் விரும்பினால் இதற்கு பதில் சொல்லுங்கள்; அந்த முஸ்லீம்கள் எல்லோரும் செய்யும் செயல்களுக்கு முன்போ பின்போ தொழுவதையும் ஏன் காட்டுகிறார் கமல்?

இவ்வளவு விரிவாக தலீபான் தீவிரவாதம் பற்றிப் பேச விரும்பும் கமல். தலீபானின் தோற்றம் என்ன ? அதன் வளர்ச்சி என்ன? அது அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு எவ்வாறு போராடியது என்று எந்த வரலாறும் பேச விரும்பவில்லை. மாறாக பின்லேடனைத் தேடும் அமெரிக்கனுக்குத் தெரியும் தலீபானாகவே நமக்கும் காட்டுகிறார். சரி காட்டிவிட்டுப் போகட்டும். ரொம்பத் தைரியம் தான். அப்படிப்பட்ட தைரியசாலி ரொம்ப வருஷமில்லை ரெண்டே வருஷம், அதாவது 2009ல் நம்ப தமிழ்நாட்டிலிருந்து 10 கி.மீ தொலைவில் இலங்கையில் நடந்த பயங்கரவாதத்துக்கு எதிரான  போர் என்கிற பெயரில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானோரைப் பற்றி ஏன் படம் எடுக்கவில்லை அல்லது விரும்பவில்லை. தமிழ்நாட்டைப் பற்றி யோசித்தால் கற்பனை வறண்டுவிடுமோ ? காஷ்மீரிலிருந்து ஆப்கானிஸ்தான் செல்லும் தமிழ் பேசும் காஷ்மீரி என்று கற்பனை பண்ண முடிந்த அவருக்கு தமிழ் பேசும் கமல் தமிழ்நாட்டிலிருந்து பத்து கி.மீ கடலுக்குள் போனான் என்று கதை யோசிப்பதில் கடும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதன் காரணம் எனக்கு விளங்குகிறது.

காரணம் கமல் மட்டுமல்ல. இந்திய அரசும் ஒரு காரணம். ஏன் அமெரிக்க அரசும் ஒரு காரணம். என்னவென்றால், குற்றப் பத்திரிக்கை என்ற பெயரில் ராஜீவ் காந்தி கொலையை மையமாக வைத்து ஒரு படம் எடுத்தார் ஆர்.கே.செல்வமணி. அப்படம் சென்சாரிலேயே கிழித்தெறியப்பட்டது. ஆர்.கே.செல்வமணி அதற்குப் பின் படமே எடுக்கவில்லை. கமல் உணர்ச்சி வசப்பட்டு ஈழத் தமிழனாக உருமாறி ‘புலி’ரூபம் இலங்கையில் எடுத்திருந்தாரென்றால் (ராகுல் போஸ் கேரக்டரை அவர் செய்வார் இதில்) அப்படமும் சென்சார் போர்டு தூண்டிலில் சிக்கி  திணறிக் கொண்டிருக்கும் இன்னேரம். கமல் ரசிகர்கள் அப்போது  போராட வருவார்களா?  சந்தேகமே. மேலும் அவருமே சிங்களன் ராஜபக்சே போல ‘இவனுங்க எதுக்கு அவன் நாட்டுல போய்கிட்டு தனி நாடு கேட்குறானுங்க’ன்னுட்டு கூட நினைத்திருக்கக் கூடும். அப்படிப் போனவுக 1800ல போன மலையகத் தமிழருங்க மட்டுமே அய்யா. அவுகளைத் தவிரவும் சுமார் 20 லட்சம் தமிழங்க, தமிழ் மூதாதையருங்க,  மூவாயிரம் வருஷத்துக்கும் முன்னால இருந்தே இலங்கைல வாழறாங்கய்யான்னு நாம் சொன்னாலும் யாருக்குப் புரியுது. அட விடுங்கய்யா நேத்து கூட நாலு பேரைச் சுட்டான் இலங்கைக் கடற்படைக் காரன். அதை விடவா உங்களுக்கு பரபரப்பான கதைக் களம் வேணும்? (இந்த மீனவர்கள் கதைக் களத்தை வைத்து எடுத்த ‘கடல்’ படத்துல அவுங்க மீனவங்களுக்கு வெச்ச ஆப்பை பாத்தீங்களா? இவுக ராஜபக்சேக்கு ஆதரவா கதையெழுதுறாக.. வில்லன் பாதிரியார் ஒரு மீனவனை கொன்னுட்டு அந்த டெட்பாடியை நடுக்கடல்ல கொண்டு போய் போட்டுட்டு வந்து இலங்கைக் கடற்படை சுட்டான்னு சொல்றாங்களாம்... என்னா கதை.. என்னா கதை..).

கமல் இந்த மாதிரியெல்லாம் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எனவே இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜி-7 நாடுகள் என்ற பெயரில் அநியாயங்கள் பல புரியும் நாடுகளின் கூட்டமைப்புக்கு ஆமாம் சாமி போடும் படம் தான் எடுக்க விரும்பினார். அப்படி அவர் எடுத்த விஸ்வரூபம் அமெரிக்காவில் நூறு நாளை நோக்கி வெற்றி நடை போடுகிறது. அமெரிக்காவின் அடிபொடி இந்தியாவும் தியேட்டருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்து படத்தை ஓட்டுகிறது. அமெரிக்கா-இந்தியாவின் நோக்கம் தலீபான்கள், பொதுவாக முஸ்லீம்கள் பயங்கரவாதிகள். அவர்களை ஜாக்கிரதையாக கவனிக்க வேண்டும் என்கிற உணர்வை ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊட்டவேண்டும். ஊட்டிவிட்டார்கள்.

இஸ்லாம் மதத்துடன் அமெரிக்கா கூறும் தீவிரவாதம் இணைந்து காணப்படுவது தற்செயலானது அல்ல. அமெரிக்கா இதற்கு முன்பு ஏப்பம் விட்ட நாடுகளையும் இப்போது ஏப்பம் விட மிரட்டிக் கொண்டிருக்கும் நாடுகளையும் பாருங்கள். ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், எகிப்து, லிபியா, சிரியா, ஏமன், சௌதி அரேபியா, பாகிஸ்தான்... எல்லாமே இஸ்லாமிய நாடுகள். எல்லாமே எண்ணெய் வளம் கொண்ட நாடுகள். அமெரிக்காவின் ஹிட்லிஸ்ட்டில் இவை தவிர மற்ற நாடுகளும் உண்டு.

இறையாண்மை, இறையாண்மை என்று கூக்குரலிடும் மோகன்கள், சோனிக்கள் அமெரிக்காவின் இந்த மாதிரியான இறையாண்மையை பார்க்க மறுத்து அவர்களோடு ஈஷிக்கொண்டு ஏன் நிற்கிறார்கள்? கழுத்தை அறுக்கும் தீவிரவாதி மோசமானவன் என்றால் பட்டினி போட்டே நாளைக்கு நூறுபேரைக் கொல்லும், 3 ஆண்டுகளில் 3 லட்சம் பேரை ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானத்திலும் கொன்ற இந்த அமெரிக்க அரசும் அதன் நயவஞ்சக அரசியலும் எவ்வளவு மோசமானது? கொடூரமானது?  தீவிரவாதிகளின் கொடூரச் செயல்கள் தீமையை எதிர்க்க இயலாமல் நிற்கும் அவர்களின் கையறு நிலையைக் காட்டுகிறதேயன்றி அவர்களின் வெறித்தனத்தை அல்ல. தீவிரவாதிகள் தங்களின் இழிந்த வாழ்வு நிலையை உணராத, உணர இயலாத மக்களாலேயே அத்தகைய கையறு நிலைக்கு ஆளாகிறார்கள்.

இது போல தலீபான்கள் ஆங்கிலம் பேசுவதை எதிர்ப்பது, பெண்கள் உடலின் பாகங்களை மூட வேண்டும் என்று பேசுவது, அன்னிய கலாச்சாரம் தங்களுள் ஊடுருவாமல் தடுப்பது என்று தங்களின் அமெரிக்க எதிர்ப்பின் அடையாளமாகச் செய்திருக்கும் செயல்களை வெறுமனே அடிப்படைவாதம் என்று பார்க்க விரும்பும் கமலின் செயல் சரியானது அல்ல. இன்றைய காலகட்டத்தில் மிகவும் கலாச்சார மற்றும் மதத் தாக்குதலுக்குள்ளாகும் மதம் இஸ்லாமிய மதமாகும். எனினும் அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றிணைய அவர்களுடைய ஆழமான மத நம்பிக்கையாலும் முடியவில்லை என்பது இஸ்லாமியர்கள் அனைவரும் ஆய்ந்து தெளியவேண்டிய விஷயமாகும்.

நைஜீரியர்கள் என்றால் தீவிரவாதிகளா?

கடைசி காட்சியில் நியூயார்க்கில் குண்டு வைப்பவன் தற்போது வெளிவரும் பல ஹாலிவுட் படங்களைப் போலவே ஒரு நைஜீரியன். அவனுக்கும் இந்தியாவுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும், கமலுக்கும் என்ன சம்பந்தம் ?

நைஜீரியா ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு ஏழை நாடு. நாடென்னவோ ஏழை நாடு ஆனால் அதன் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு வளங்கள் அதிகம். அமெரிக்காவுக்கு தன்னுடைய நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி (44 சதவீதம்) யைத் தருகிறது நைஜீரியா.
வழக்கம் போல முதலில் அந்நாட்டு மக்களின் நோய்களைப் போக்க மருத்துவத்தை ப்ரீயாகத் தந்து உள்ளே நுழைந்தது அமெரிக்கா; கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆக்கிரமிப்பை செய்தது. அந்நாட்டில் உட் புரட்சிகளை ரெடி செய்து நடத்தி தங்களுக்குத் தேவையான ஆளை 1999ல் அங்கு பதவியமர்த்தியது. அதன் பின் இப்போது 2009ல் உள்நாட்டு புரட்சிக்காரர்களை அடக்க பாதுகாப்பு(??) படையை அனுப்ப ஹிலாரியம்மா ஏற்பாடு பண்ணினார்.(மேலும் விவரம் வேணும்னா இதைப் படிங்க http://concernedafricascholars.org/african-security-research-project/?p=83) இப்படி நைஜிரியாவுக்குள் ஒட்டகம் கூடாரத்துக்குள் ஒதுங்க இடம் கேட்ட கதையாய் அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்ய கடைசியில் அங்கிருந்து போராடும் அமைப்புகளுக்கு உள்நாட்டில் கூட போராடமுடியாத நிலை. அரசு ராணுவமே அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து தான் செயல்படுகிறது. எனவே தான் ஒரு நைஜீரியாக்காரன் அமெரிக்காவில் வந்து அமெரிக்காவுக்கு குண்டு வைக்க நினைக்கிறான். இவ்வளவு பெரிய விஷயத்தை கமல் எப்படி ஹாலிவுட் படங்களைப் போலவே மறைத்து, கூலாக பாட்டுக் கேட்டுக் கொண்டு பாம் வெடிக்கும் ஒரு ‘பயங்கர’மான தீவிரவாதியை மட்டும் நமக்குக் காட்டுகிறார் ?

இத்தனைக்குப் பின்பும் சப்பைக் கட்டு காட்சிகளுக்கு குறைவில்லை. க்ளைமாக்ஸ் காட்சியில் கமல் செய்யும் காமெடியை கவனியுங்கள். நைஜீரியன், தற்கொலைப் படை குண்டு வைப்பவனாக, அணு குண்டை ரெடி செய்துவிட்டு அது வெடிக்கும் முன் அதனருகே உட்கார்ந்து தொழுகை செய்வான். அதே நேரத்தில் அவன் வீட்டுக்கு வெளியிலேயே வாசலில் எஃப்.பி.ஐயுடன் அவனைப் பிடிக்க வழிபார்த்து காத்துக் கொண்டிருக்கும் கமல் என்கிற காஷ்மீரியும் தொழுகை செய்வார். அவர் தவறாத இஸ்லாமியர் என்று இஸ்லாமியரைப் பெருமைப் படுத்துகிறாராம்.

இப்படி அரசியல் என்கிற தளத்தில் படம் முழுவதும் வண்டி வண்டியாய் விஷத்தை அள்ளித் தெளித்திருக்கும் கமலின் விஸ்வரூபத்தின் முன் டெக்னிக் விஷயங்களில் விஸ்வரூபம் பெற்ற பாராட்டு ஒன்றுமேயில்லை. இவ்வளவு விஷங்களையும் விதைத்த கமலின் படம் தடை செய்யப்பட்டது என்ன காரணத்தாலென்றாலும் அது வரவேற்கப்பட்டிருக்க வேண்டியதே. அல்லது வெளியிடப்பட்டாலும் அதன் ரகசிய நச்சுக் கொடுக்கை நாம் இனம் கண்டு மக்களுக்கு வெளிப்படுத்தி பின்னர் அவர்கள் இப்படத்தைப் பார்த்தால் யதார்த்தத்தை எவ்வளவு தூரம் திரிக்க முடியும் என்பதை கண்டுகொள்வார்கள். படம் நிறுத்தப்பட்ட போது இதற்கு ஆதரவு தெரிவித்து இணையத்திலும், பேஸ்புக்கிலும் மிக உணர்ச்சி வசப்பட்டு அமெரிக்காவில் இருந்து பணம் அனுப்பிய அமெரிக்கோ-இந்தியர்கள் அதிகம். அவர்கள் இவ்வளவு விளக்கங்களையும் படித்து விட்டு இனியும் கமலுக்கு பணம் அனுப்புவார்களா?

இப்போது நீங்கள் சொல்லுங்கள் விஸ்வரூபம், விஷமான ரூபமா ? இல்லையா?


No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.