Sunday, March 3, 2013

2.57 லட்சம் கடன் வாங்கினால் திரும்பக் கட்டவேண்டியதில்லை

இப்படியொரு புதிய திட்டம் இந்திய அரசில் சைலன்ட்டாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. நிறைய பேருக்கு தெரியாத இந்தத் திட்டத்தின்படி அரசு சாரா வங்கிகளில் ரேஷன் கார்டை மட்டும் காட்டி நீங்கள் வருடா வருடம் 2.57 லட்ச ரூபாய் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் அதை திருப்பித் தரவேண்டியதில்லை. அந்த வருட இறுதியில் ‘வசூலிக்காத தொகை’(Revenue Forgone) என்று பேங்க்கில் கணக்கெழுதி அதை அவர்களே

தள்ளுபடி செய்துவிடுவார்கள். அடுத்த வருடம் திரும்பவும் புதிதாக இதே போல நாம் கடன் வாங்கிக் கொள்ளலாம். நம் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் பதவியேற்றதிலிருந்தே புரட்சிகரமான இத்திட்டம் செயல்பாட்டில் இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. சும்மா சும்மா மக்குமோ.. என்று அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்திட்டத்தால் ஏழைகள், விவசாயிகள், சிறுதொழில் செய்பவர்கள், பெண்கள் என்று பல கோடிப்பேர் பயனடைவார்கள்.

ஓ.. சாரிங்க. தவறுதலா மாத்தி எழுதிவிட்டேன். இந்தத் திட்டம் மேலே சொன்ன மாதிரி நமக்கு இல்லீங்க. அம்பானி, டாடா, மிட்டல், எஸ்ஸார், விப்ரோ போன்ற பணக்கார ஏழைங்களுக்காக, உலகப் பணக்காரங்க லிஸ்ட்ல முன்னுக்கு வரத்துடிக்கும் புரட்சி மிகு கார்ப்பரேட் முதலாளிகளுக்காக, போடப்பட்ட ஸ்பெஷல் திட்டமாம். சர்க்குலேஷனை மாத்தி என்கிட்ட சொல்லிட்டாங்க. இந்த கார்ப்பரேட் அரசு திட்டத்தின்படி வருடா வருடம் கார்ப்பரேட்களிடமிருந்து வசூலிக்கவேண்டிய வரி மற்றும் கடன்களை வசூலிக்காத தொகை (Revenue Forgone - கவனிங்க வசூலாகாத தொகையில்லை... அரசு வேண்டுமென்றே வசூலிக்காமல் விட்ட தொகை) என்று பெயரிட்டு தள்ளுபடி செய்துவிடுவார்கள். பட்ஜெட்டில் வரவு செலவில் இந்தத் தொகை செலவுக் கணக்காக சேர்ந்து விடுவதால் பட்ஜெட் வரவு செலவு கணக்கு க்ளீனா டேலியாகிவிடும். எந்த ஆடிட்டரும் குத்தம் சொல்லமுடியாது. ஆமா.

போன வாரம் நம்ம ப.சி அய்யா உலகப் பொருளாதாரப் புளி..சாரி.. புலி... போட்ட பட்ஜெட் கணக்குல அப்படி இந்த 2013 ஆம் வருஷம் கார்ப்பரேட்டுக்கிட்ட இருந்து தள்ளுபடி செஞ்ச பணம் 2.57 லட்சம் தான். மறுபடியும்.. சாரிங்க (ராத்திரி சரக்கு ஓவராயிடுச்சு). அது 2.57 லட்சம் கோடி(2,57,00.00.00,000 ரூபாய்). எம்மாடியோவ் (புளிச்ச ஏப்பம்). இந்தத் திட்டம் 2006ல இருந்தே இருக்குதாம் சத்தமில்லாம. அவ்வளவு பெரிய பட்ஜெட் கணக்குல இத்துனூன்டு ரெண்டு வரியை எவன் கவனிக்கப்போறான்னு நெனச்சிருக்காங்க. அவங்க நினைச்ச மாதிரியே இன்னிக்கு வரைக்கும் இ.காங், சோ.காங், ரா.காங், பா.ஜா. அத்.ஜா, அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, சரிகமப, போன்ற எந்தக் கட்சிகளுக்கும் இது கண்ணுலேயே படலையாம் (காமாலைக் கண்ணுபோல). ஒருத்தரும் ஏன்யா இப்படி வரியையும், விலைவாசியையும் ஏத்தி மக்கள் உசிரெடுக்கிற, இந்த பணக்கார பிச்சைக்காரனுங்களுக்கு இப்படி சைலன்டா குடுக்கிறேன்னு கேக்கவே இல்லீங்க (கம்யூனிஸ்டுகள் மட்டுமே இதுல மனுஷங்க. இந்த மொள்ளமாரித்தனத்தை வெளிய கொண்டு வந்ததே அவங்க தான். பாவம் அவங்களுக்கு சப்போர்ட் பண்ண உங்க யாருக்கும் மனசு வரலை. மாத்தி மாத்தி அம்மாவையும், அய்யாவையும் தொங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் அவங்களுக்கு வந்தது யாரால? எல்லாம் உங்களால தான். ‘உண்டியலடிக்கிறவன்’ தானேன்னு கம்யூனிஸ்ட்டுகளை நக்கலா பேசமட்டும் தானே தெரியும் உங்களுக்கு. நீங்க என்னவோ பிர்லா, அம்பானி பார்ட்டிகள் போல லட்சம் கோடி கவர்ன்மெண்ட்டுகிட்ட இருந்து ப்ரீயா வாங்கறா மாதிரி).

வசூலிக்கப்படாத வருமானம் (Revenue Forgone) இதுவரை..
2005-2006 ல்  2,06,700 கோடிகள்
2006-2007 ல்  2,35,191 கோடிகள்
2007-2008  ல்  2,78,644 கோடிகள்
2008-2009 ல்  4,14,099 கோடிகள்
2009-2010  ல்  5,02,299 கோடிகள்
2010-2011 ல்  2,01,166 கோடிகள்
2011-2012 ல்  2,50,003 கோடிகள்
2012-2013 ல்  2,57,000 கோடிகள் (இது தான் இந்த வருஷத்து கணக்கு) எல்லாமே லட்சம் கோடிகளில். (அவ்வையே...லட்சம்ன்னா என்ன.? கோடின்னா என்ன? லட்சம்கோடின்னா என்ன?)

இந்தப் பணத்தை மட்டும் இந்த கார்ப்பரேட் ஏழைங்க கிட்ட இருந்து வசூல் பண்ணியிருந்தா பஸ் டிக்கெட்டை கி.மீ.க்கு 12 காசு, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 1.59 காசு (அப்பா.. ‘புள்ளி 59’ என்னா கணக்கு சுத்தம்?), காஸ் விலையை சிலிண்டருக்கு 15 ரூபாய் அப்படின்னு கவர்மென்ட் பிச்சைக்காரத்தனமா விலைகளை உயர்த்தவேண்டிய அவசியம் வரவே வராது. ஏன்னா இப்படியெல்லாம் விலையை உயர்த்தினாலும் கூட இப்போ அரசுக்கு ஏதோ சில பத்தாயிரம் கோடிகள் தான் தேறுது. அது மாதிரி 20 மடங்கு பணத்தை இப்படி கார்ப்பரேட் ஏழைங்களுக்கு ‘தொழில் வளர்ச்சிக்கு’ன்னுட்டு கவர்ன்மெண்ட் அள்ளிக் குடுத்தாலும் பாருங்க பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கும் 9க்கும் நடுவுலயே முக்கிக்கிட்டு இருக்கு. ஒருவேளை நாட்டில யாரும் சரியா உழைக்கிறதே இல்லை போல இருக்கு. வேலை பார்க்குற 60 கோடி தடிப்பசங்களும், தடிப்பசங்கிகளும் டெய்லி நல்லா தின்னுட்டு தின்னுட்டு தூங்குறானுங்க போல இருக்கு.

ஒளிர்கிறது இந்தியா. ஜெய் அம்பானி... சாரி.. ஜெய்ஹிந்த்

ஆதாரங்கள்:
http://exim.indiamart.com/budget-2007-08/statement-revenue-foregone.html
http://indiabudget.nic.in/ub2010-11/statrevfor/annex12.pdf
http://indiabudget.nic.in/ub2013-14/statrevfor/annex12.pdf
http://indiabudget.nic.in/ub2012-13/statrevfor/annex12.pdf

No comments: