Friday, April 6, 2012

‘எங்கேயும் எப்போதும்’ – சினிமாவின் வழியே தெரியும் தமிழ்ச் சமூகம்

எங்கேயும் எப்போதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பில் வெளிவந்து பெரும் வெற்றியையும்,   மீடியாக்களின் பலத்த பாராட்டுதல்களையும், மக்களிடையே பெரும் வரவேற்பையும் ஒரு சேர பெற்ற படம். படத்தை இயக்குனர் முதல் படத்தின் ஒரு ஜோடிகள் வரை அனைத்தும் புதுமுகங்கள்.

படத்தின் மீதான தனிமனித மதிப்பீடுகள்  ‘நல்லாருக்கு’, ‘கருத்தும் இருக்கு’ போன்றவற்றை தாண்டி சமீபத்தில் மனித உரிமைகள் அமைப்புகள் சேர்ந்து இப்படத்தின் இயக்குனருக்கு, பரமக்குடியில்‘சிறந்த சமூகக் கருத்தைக் கொண்ட படத்தை இயக்கியவர்’ என்கிற விருதைக் கொடுத்திருக்கின்றன. படத்தின் கதாநாயகிகளுள் ஒருவரான அஞ்சலி சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவை எல்லாம் சமூகத் தளத்தில் மேம்போக்காக பார்க்கும் போது மக்கள் மனத்தில் எழும் ஒப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட தேர்வுகள் என்ற அளவில் அவற்றை நாம் மதிக்கிறோம். படத்தை வேறு சில கோணங்களில் அலசும் போது சினிமாவின் தேர்வுகள், அது காட்டும் சமூகம் தொடர்பாக நமக்கு எழுந்த சில கேள்விகளை கீழே விவாதித்திருக்கிறோம்.

முதலில் கதை. கதை: ஒரு விபத்திலிருந்து பின்னோக்கிச் செல்லும் ஞாபகச் சூழலில் இரு காதல்களை விவரிக்கிறது. இயக்குனருக்கு இது முதற்படம்; அதுவும் நிச்சயமாய் வெற்றிப்படமாய்க் கொடுத்தே ஆகவேண்டிய சூழலில், முதற்பட இயக்குனர்கள் தமிழில் தவறாமல் எடுக்கும் கருக்களான ‘காதல்’ அல்லது  ‘த்ரில்லர்’ வகைகளில் இதை காதல் கதையாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் சரவணன். காதல் கதை என்று வந்து விட்டதால் விவரிக்கப்படும் காதல்கள் இதுவரை வந்த எந்தப் படங்களிலும் பார்த்திராத ‘வித்தியாசக்’ காதல்களாய் காட்டப்படவேண்டியது முக்கியமான தேவையாகிறது. அப்படி இரு வித்தியாசக் காதல்களை விவரிக்கிறது படம்.

இந்த வித்தியாசத்தை காதலர்களின் குணாதிசயத்தில் புகுத்தியுள்ளார் சரவணன். முதல் காதலில் அனன்யா திருச்சியிலிருந்து மெட்ரோ சென்னைக்கு வரும் கிராமியத் தனமான பெண். கிராமங்களே அடையாளம் சிதைந்து போன இந்தக் கால உலகமயமாதல் சூழலில் சென்னைக்கும், திருச்சிக்கும் பெரிய வித்தியாசமில்லை என்றாலும் ‘பரந்து’ விரிந்த சென்னையில் தான் கடத்தப் பட்டுவிடுவோம் என்கிற பீதியுடன் வரும் அனன்யா சென்னையைப் பற்றி கொண்டிருக்கும் கிராமியத்தனமான எண்ணங்களை லேசான நகைச்சுவை கலந்து சுவராசியமாகச் சொல்லியபடி செல்கிறது முதல் காதல். இரண்டாவது காதலில் திருச்சியில் வசிக்கும் ஜெய் என்கிற ‘கூச்ச சுபாவம் அதிகமுள்ள’ வாலிபனை மிகுந்த தைரியம் கொண்ட பெண் அஞ்சலி காதலிக்கிறார். காதலிக்கும் ஆண் பெண்ணின் வீடு தேடி சைட் அடிக்கும் வழக்கத்திற்கு மாறாக ‘நான் உன்னை நாலு தடவை உன் வீட்டுப் பக்கம் வந்து பார்த்தேன்’ என்று தைரியமாக அவனுடைய அறையில் திடீரென்று நுழைந்து சொல்லும் மணிரத்னம் பட கதாநாயகிகள் வகைப் பெண்ணாக இருக்கிறார் அஞ்சலி.

அனன்யா பஸ்ஸில் பக்கத்து சீட்டில் நெருக்கியபடி உட்காரும் ஆணிடம் இருந்து பதறியபடி இறங்குகிறார்; ஹோட்டலில் சாப்பிடும் தட்டில் முகம் பார்த்து பொட்டை அட்ஜெஸ்ட் செய்கிறார். அஞ்சலியோ காபி டேவில் 70 ரூபாய்க் காப்பியைக் குடிக்க ஜெய் கோல்ட் காபி என்றால் குளிர்ந்த காபி என்று தெரியாமல் பேரருடன் சண்டை போடுகிறார். இப்படி அனென்யாவை ‘கட்டுப் பெட்டித் தனம்’, கிராமிய அறியாமை மற்றும் ஜெய்யின் குணாதிசயத்தை ‘பெண்ணின் ஆதிக்கத்துக்கு அடங்கும் ஆண்’ என்று உருவாக்கியதன் மூலம் இந்த ‘வித்தியாசக் காதல்கள்’ சொல்லப்படுகின்றன. முதல் காதல் பழம் பெரும் பெண்ணை நவீன வடிவத்தில் காட்டியது என்றால் இரண்டாம் காதல் நவீன மாடர்ன் பெண்ணைக் காட்டியது.

இங்கு மாற்றம் என்பதும் புதுமை என்பதும் பால்களின் தற்போதைய குணத்தை, பழைய நடவடிக்கையை மாற்றிக் காட்டுவதில் நிறுவப்படுவது கவனிக்க வேண்டியது. ஆண்கள் மட்டுமே செய்து கொண்டிருந்த வேலைகளை பெண்களும் செய்வார்கள் என்பது தான் உலகளாவியம் இன்றைய சமூகங்களுக்குக் காட்டும் கவர்ச்சிகரமான புரட்சி மாற்றம். இந்தியாவின் முதல் விமானப் படைப் பெண், முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர், முதல் பெண் கமாண்டோ என்பது முதல், பெட்ரோல் பல்க்கில் முதன் முதலில் பெட்ரோல் போட்ட பெண், முதல் பெண் சபாநாயகர், முதல் பெண் ஜனாதிபதி வரை எல்லோரும் இதில் அடக்கம். இவர்கள் எல்லாம் பத்திரிக்கைகளின் அட்டைப் படம் முதல், டி.வி.க்களின் சிறப்புப் பார்வை வரை வந்து போனார்கள். உண்மையில் ஜெய்யின் இந்த பணிவு போலியானது, அனன்யாவின் மிரட்சி யதார்த்தம் குறைவானது. இந்தக் கவர்ச்சிகரமான வித்தியாசங்கள் படத்தை ரசிக்கும் எந்த வர்க்கத்து குடும்பத்தினருக்கும் போதுமானதாக இருக்கிறது.

அடுத்ததாக விபத்துக்குள்ளாகும் பஸ்ஸில் பயணப்படும் மாந்தர்கள். ஒரு கல்லூரி மாணவன், கல்லூரி மாணவி (மாணவியைப் பார்த்தவுடனே காதல் அரும்பு விட ஆரம்பித்த பையன்), எங்கோ போட்டிக்குப் போய்விட்டு வெற்றிக் கோப்பையுடன் வரும் பள்ளி மாணவிகள்(?!) குழு, மனைவியை ஊருக்கு பஸ் ஏற்றி விட வந்துவிட்டு கடைசி விநாடியில் அவளைப் பிரிய மனமின்றி அவளுடனேயே தானும் பஸ் கிளம்பும் கணத்தில் ஏறிவிடும் கணவன், துபாயில் சுமார் 5 வருடம் வேலை செய்துவிட்டு, பிறந்து 5 வயதான பெண் குழந்தை(?!) அப்பாவிடம் ‘நெஜமா வர்றீங்களாப்பா’ என்று அரைமணிக்கு ஒரு தடவை கேட்டுக் கொண்டிருக்க ‘ஆமாண்டா செல்லம்’ என்று சொல்லிக்கொண்டு அவளை முதன் முறையாக பார்க்கச் செல்லும் அப்பா, யு.கே.ஜி படிக்கும் சுட்டி(டி.வி. வகை)ப் பெண் குழந்தையுடன்(?!) (ஏம்மா என் மானத்தை வாங்கறே என்று நெற்றியிலடிக்கும் குழந்தை) பயணம் செய்யும் அம்மா, பொறுமையின்றி போன் செய்யும் கணவருக்கு ‘வெய்ட் பண்ணுங்க நான் வந்து தோசை வார்த்துத் தர்றேன்’ என்று சொல்லும் வயதான மாமி, உடல் ஊனமுற்ற வயதான பெண்மணி என்று பலருடன் கதாநாயகன்களும், நாயகிகளும்.
இவர்களின் குடும்ப உரையாடல்களை பார்வையாளனுக்கு காட்டுவதன் மூலம் இவர்களில் கடைசியில் இறந்து போகும் நபர்களின் மீதான பார்வையாளனின் அனுதாபம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. பொழுது போக்கு சினிமாவில் இவை போன்ற விஷயங்கள் இல்லாமலிருந்தால் தான் நாம் அதிசயப்படவேண்டும். இது இயக்குனரின் நேர்த்தியான திரைக்கதை உத்திகளுள் ஒன்று.

படத்தின் முதற்பாதியில் நர்ஸாக பணிபுரியும் அஞ்சலி ஜெய்யை உடல் உறுப்புக்களை தானம் செய்ய வலியுறுத்தும் இடம் அழுத்தமாக இல்லை. உடல் உறுப்புக்களைத் தானம் செய்தல் என்கிற மனிதாபிமான விஷயத்தை வலியுறுத்துகிறார்கள் என்பது நல்ல விஷயமே. இது போன்ற நல்ல ஆனால் மொன்னையான மனிதாபிமான. சமூக விஷயங்களே தமிழ்ப் படங்களில் பெரிதும் முன்வைக்கப்படும் சமூக விஷயமாக இருக்கிறது.

அப்படியே சில படங்களில் முன் வைக்கப்படும் அரசியலும் மேம்போக்கான சாடலையே கொண்டுள்ளது. (லஞ்சம்-இந்தியன், ஊழல்-அன்னியன், கறுப்புப் பணம்-சிவாஜி – இவை மூன்றிலும் அரசியல்வாதிகளே குற்றவாளிகள் என்பதும் கவனிக்கத்தக்கது). 
‘எங்கேயும் எப்போது’மில் தொழிலாளர் நலனுக்காகப் போராடிவரும் இடது சாரி இயக்கங்களை மிக வெளிப்படையாகக் காமெடி செய்வது போல வரும் காட்சி படத்தின் கதையோடு முக்கிய தொடர்பில்லாதது எனினும் இப்படத்தை அரசியலுக்கு எதிராக எண்ணம் கொண்ட படமாக மாற்றி விடுகிறது. மன்மோகன் சிங் முதன் முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவருக்கு கொடுக்கப்பட்ட முக்கியமான ஸர்ட்டிபிகேட் ’இவர் ஒரு அரசியல்வாதி இல்லை’; மாறாக ‘ஆக்ஸ்போர்டில் படித்து பல டாக்டர் பட்டங்கள் வாங்கிய மெத்தப் படித்தவர், மிஸ்டர் க்ளீன். உலக வங்கியில் (அதிகாரியாக)பணியாற்றியவர்’ என்கிற பிம்பம். (அப்பிம்பம் இப்போது எப்படி கிழிந்து தொங்குகிறது என்று நமக்குத் தெரியும்). ‘எனக்கு அரசியலே பிடிக்காது’... ‘அரசியல் சாக்கடை’ என்கிற சாமானிய மக்களின் பதங்கள் அரசியலிலிருந்து மக்கள் தங்களை தாங்களே விலக்கிக் கொள்ள உபயோகப்படுகின்றன. படத்தில் வரும் இக்காட்சியும் அதை ஆமோதிக்கிறது.

மக்கள் இப்படி அரசியலற்றுப் போவதன் பின் விளைவு என்ன? அரசு, கேள்வி கேட்க யாருமின்றி, மக்கள் கேள்வி கேட்க எழ மாட்டார்கள் என்கிற துணிச்சல் அதிகமாகி. எதேச்சதிகாரமாக, சர்வாதிகாரமாக மாறும் சூழல் உருவாகும். சர்வாதிகாரம் மக்களை கூட்டம் கூட்டமாகக் கொல்லவும் தயங்காது. சத்தீஸ்கரில், ஒரிஸ்ஸாவில் பழங்குடி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பது இப்படித் தான். கூடங்குளத்தில் வெறுமனே திரு.உதயகுமாரும் மற்றும் ஒரு பத்து பேரும் மட்டும் இன்றைக்கு போராடியிருந்தால் இந்நேரம் உதயகுமாரைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். அவருக்குப் பின் இடிந்த கரை மக்கள் திரண்டு உறுதியாக நிற்கின்றனர். அதுவே இவ்வளவு பெரும் ராணுவம் கொண்ட அரசையும் கொஞ்சம் தயங்க வைக்கிறது.

இன்னொரு விஷயத்தையும் பார்ப்போம். படத்தின் முக்கியமான திருப்பு முனை சாலை விபத்து. இரு பேருந்துகளும் தங்கள் ஊரிலிருந்து கிளம்பும் கணம் முதல் சாலை விபத்து நடக்கும் கணம் வரை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறது படம். விபத்திற்கு பெரும் காரணம் கடும் வேகத்தில் ஓட்டுதல், ஒருவரே நீண்ட தூரத்திற்கு ஓட்ட வேண்டிய நிலை, ஒருவரை ஒருவர் விரோதிகளாக பார்க்கும் ஓட்டுனர்களின் போட்டி மனப்பான்மை, ஓட்டுனர்களின் மன அழுத்தம் (எதிரே லைட் போட்டு அணைக்க மறந்து கடந்து செல்லும் ஒரு ஓட்டுனரை இந்த ஓட்டுனர் கடும் கெட்டவார்த்தைகளில் பேசுவது சாதாரணம் ), வேலைப் பளு, குறைவான சம்பளம் போன்ற எதையும் இயக்குனர் எடுத்துக் கொள்ளவில்லை. மாறாக  தார்ப்பாய் அவிழ்ந்தது என்கிற அரசியலற்ற ஒரு காரணம். போன வருடம் விபத்துக்குள்ளான கே.பி.என் தனியார் பஸ்ஸில் பயணம் செய்த 24 பேர் இறந்து போனார்கள். விபத்தின் காரணம் பஸ் 100 கி.மீ.க்கு மேல் வேகமாகச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று குறுக்கே வந்த ஏதோ ஒன்றிற்காக பிரேக் பிடிக்க முயன்று முடியாமல் போய் பஸ் பள்ளத்தில் பாய்ந்த்ததால் தான்.

அதே போல் சராசரியாக பஸ்ஸில் பயணம் செய்யும் பயணிகள் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் தனியார் பஸ் கட்டணக் கொள்ளை, அத்துவானக் காட்டில் நிறுத்தி கொள்ளையடிப்பது போல அநியாய விலைக்கு உணவுப் பொருள் முதல் குடிநீர் வரை விற்கும் மோட்டல்களில் நிறுத்துவது; கூட்டம் சேராவிட்டால் பாதி தூரம் வரை வந்து விட்டு மீதிப் பணத்தை கொடுத்து வேறு பஸ் பிடிக்கச் சொல்வது; திருவிழா, வார விடுமுறைகளில் ஐநூறு ஆயிரம் என்று கட்டணம் வசூலிப்பது; ஆபத்தான வேகங்களில் செல்வது; அரசுப் பேருந்துகளில் மக்கள் ஏறக்கூடாது என்பதற்காகவே மோசமாக பராமரிப்பது; ஒழுகும் பஸ் கூரைகள்; கடிக்கும் மூட்டைப் பூச்சிகள்; உடைந்த, மக்கர் செய்யும் இருக்கைகள்; வேண்டுமென்றே மெதுவாக ஓட்டுதல்; நினைத்த இடங்களில் நிறுத்தி பயண நேரத்தை வேண்டுமென்றே அதிகமாக்குதல்; குறைவான அரசு பஸ்களையே விட்டு 12 மணிக்கு மேல் பஸ்கள் விடுவதை நிறுத்தி விடல்; டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், ஏ.சி கோச்கள் 5 மடங்கு அதிக கட்டணத்துடன் என்று சாதாரண மக்களிடம் பணம் பறிப்பது; டோல் கேட்கள் என்கிற பெயரில் தனியார்களுக்கு ரோட்டையும் குத்தகைக்கு விட்டு சாலையில் போகும் மக்களிடம் பணம் பறிப்பது; மோசமான பேருந்து நிலையங்கள், அவற்றின் மோசமான கழிப்பறை வசதிகள்.. என்று நீளும் இவ்வளவு பிரச்சனைகளில் ஒன்றையாவது பற்றி இந்தப் படம் பேசியதா?, அல்லது போகிற போக்கில் காண்பித்தாவது சென்றதா ?  என்றால் இல்லை என்று தான் பதில் கிடைக்கிறது.

இப்போது முதல் பாராவின் செய்தியைப் பாருங்கள். இப்படத்தின் இயக்குனருக்கு மனித உரிமை அமைப்புகள் சேர்ந்து ‘சிறந்த சமூகக் கருத்தை கொண்ட படத்தை இயக்கியவர்’ என்று கொடுத்து கௌரவித்திருக்கின்றன என்றால் விருதுகள் அப்படி சம்பிரதாயமாகி விட்டனவா? ... இல்லை மக்களாகிய உங்களின் மனம் எந்தப் பிரச்சனையையும், அரசியலையும் பேச விரும்பாமல் மொன்னையாகிவிட்டதா..?

‘எங்கேயும் எப்போதும்... சந்தோஷம் சங்கீதம்...’
இதுவே இன்றைய சமூகத்தின் குறிக்கோள். படத்தின் குறிக்கோளும் அதுவே.
இது தான் எங்கேயும் எப்போதும் காட்டும் நம் தமிழ்ச் சமூகம்.