Tuesday, February 14, 2012

காதலர் தினம்… ? கழுதைகள் தினம்… ?


காதலர் தினம்… ? கழுதைகள் தினம்?

பிப்ரவரி 14. காதலர் தினம். கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் போர்க்காலத்தில் அரசனால் திருமணத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மீறி நிறைய காதலர்களுக்கு திருமணம் செய்து வாழவைத்து அரசனால் பிப்ரவரி 14 ஆம் தேதி கொல்லப்பட்ட வேலண்டைன் என்கிற பாதிரியார் தான் இன்றைய காதலர் தினத்தின் வரலாற்று மூலமாக கொள்ளப்படுகிறார்.

நம்ம ஊரில் நகை வியாபாரத்தைப் பெருக்க நகைக் கம்பெனிகள் அட்சய திரிதியில் நகை வாங்கினால் வருடம் பூராவும் செல்வம் கொழிக்கும்என்று திரித்து விட ஆரம்பித்து இன்று அட்சய திரிதியை நாளன்று ஆலூக்காஸ்கள் முதல் லலிதா வரை எல்லா நகைக் கடைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. இன்று அந்த முட்டாள்த் தனத்தை நினைத்து யாருக்கும் வருத்தமில்லை. மாறாக அன்று சீப்பாக நகை கிடைக்கிறதே என்று நகை வாங்கப் போகுபவர்களே அதிகம்.

இதே வேலை தான் காதலர் தினத்தைப் பரப்புவதிலும் நடந்திருக்கிறது 1990 களிலிருந்து. டைம்ஸ் ஆப் குண்டியாவிலிருந்து, தி குந்து நாளிதழ் வரை எல்லோரும் காதலர் தினத்துக்கு ஸ்பெஷல் எடிஷன் போடுகிறார்கள். அப்படி என்னய்யா காதல் மேல் உனக்கு வெறுப்பு என்று என்னுடன் சண்டைக்கு வராதீர்கள். காதலிப்பது தனி மனித உரிமை. அதை ஒரு நாளில் கொண்டாடுவது என்பது சகஜம் தானே என்று நீங்கள் கேட்பீர்கள்.

உங்கள் காதலை ஒரு கச்சாப் பொருளாக ஆக்குவதன் மூலம் காதலர் தினத்தன்று ஹோட்டலில் சிறப்பு பார்ட்டி, சிறப்பு வேலண்டைன் கார்டுகள், சிறப்பு சினிமாக் காட்சிகள், சிறப்பு பிங்க் கலர் ஜட்டிகள், பல்வேறு கம்பெனிகள் ஸ்பான்ஸர் செய்து நடத்தும் கலகல புரொக்ராம்கள் என்று பலவிதங்களாக கல்லா கட்டுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் கார்ப்பரேட்டுகளும், முதலாளிகளும் விளையாடும் இந்த விளையாட்டு உங்கள் வாழ்வையும் விளையாட்டாக்கிவிடும்.

காதல் என்பதே அலுத்துப் போகும் வரை அனுபவிப்பது வரைஎன்று புது விதமாக வரையறை செய்யப்பட்டிருக்கும் காலம் இது. சாரு நிவேதிதா சொல்லும் செக்ஸ் வறட்சி நிறைந்த தேசம் இது என்பதை நம்புவதே கடினம். சட்டசபையிலேயே மினிஸ்டர்கள் செல்போனில் ப்ளு பிலிம் பார்க்கும்படி முன்னேறிவிட்ட இன்று காதல், காமம் இவை இரண்டுக்கும் உள்ள மெல்லிய கோடு அழிக்கப்பட்டு விட்டது. இது நாள் வரை காதல் களியாட்டங்களாக இருந்த காதல் உறவு காமக் களியாட்டமாக உச்ச பட்ச வடிவெடுக்க இந்த நாள் தற்போது வழி கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்குப் பிறகு என்றும் காம தினம் தான்.  

மனிதனுடைய அடிப்படை உணர்வு(Instinct) அனுபவித்தலை எப்போதும் நாடும் குணமுடையது. மூன்று வயதுக் குழந்தை தனது குஞ்சைப் பிடித்து இன்பம் காணுவது இயல்பானது, மனிதன் மிருகமாயிருந்த காலத்திலிருந்து நம்மைத் தொடர்வது இந்த சுகஉணர்வு அனுபவித்தல் குணம். இதை மனிதனால் கட்டுப்படுத்த முடிவது கடினம். இது போன்ற களியாட்ட மனோபாவத்திலிருந்து சமூகத்தை சமூகநல விஷயங்களை நோக்கித் திருப்புவதற்கு நமது சமூக அமைப்பு மற்றும் அது விதிக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பு முறைகள் உதவி செய்கின்றன. உதாரணமாக குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்குள்ளேயே உடலுறவு கொள்வதை தவிர்க்க உண்டாக்கப்பட்ட சமூக அமைப்பு தான் தாய், தந்தை, மகள், சகோதரன் போன்ற உறவு முறைகள். இப்படித்தான் நாம் நமது மிருகத்தனமான இஷ்டப்படி வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து சமூக வயமாகியிருக்கிறோம்.

போஸ்ட் மாடர்னிசம் என்ற நவீன கோட்பாடு கோட்பாடு சிதைத்தலை’(deconstruction) அடிப்படையாகக் கொண்டது.
அது அதிகாரத்தைச் சிதைத்தல் என்ற பார்வையில் சமூக அமைப்பின் முதுகெலும்பான விஷயங்களையும் சிதைத்தது. போஸ்ட் மாடர்னிசம் இதயத்தைச் சிதைத்தலுக்கு சமமாக சுண்டு விரலின் காயத்தை வைத்தது. போஸ்ட்மாடர்னிசத்தின் விளிம்பு நிலைகளின் மேலான கவன ஈர்ப்பு, அதிகாரத்தின் ஒரு பக்கச் சார்பான பார்வையை ஓரளவு சமனப்படுத்தினாலும் மறுபுறம் அமைப்பை கலைத்துப் போட்டுவிட்டது.


இன்று, நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளன் என்று உரத்துச் சொல்வது அங்கீகாரம் வேண்டி என்பது போய் பேஷன் என்பதாக மாறியிருக்கிறது. காதல் வாழ்க்கைத் துணைத் தேடலுக்கு என்பது மாறிப் போய் நேரத்தை இன்பமாகக் கழிக்க’(time pass companion) என்பதாக மாறி நிற்கிறது. உடை என்பது எந்நேரமும் கிளர்ந்து விடும் காமத்திலிருந்து விடுபட உடலை எதிர்பாலிடமிருந்து மறைக்கஎன்பது மாறிப் போய் எதிராளியை காமம் கொள்ள வைக்கஎன்பதாக மாறி நிற்கிறது. குடித்தல் என்பது சந்தோஷம் கொள்ளும் சந்தர்ப்பங்களில் என்பது மாறிப் போய் சந்தோஷம் கொள்வதற்காகவே குடிப்பது என்பதாக மாறி நிற்கிறது. காமம் என்பது நம்மைப் பீடித்துக் கொள்ளும் விஷயம் எனவே அதை கட்டுக்குள், வரைமுறைக்குள் வைக்கவேண்டும் என்கிற எண்ணம் போய் கட்டுக்கடங்காமல், வரைமுறையற்ற காமம் அனுபவிக்க வேண்டும் என்று நிற்கிறது.

இவை எல்லாம் நிகழ முக்கிய காரணம் கட்டுப்பாடின்மையை நோக்கிச் செல்லும் கலாச்சாரம். நிறுவனக் கட்டுப்பாடும் இல்லாமல் சுய கட்டுப்பாடும் இல்லாமல் வாழ நம்மைத் தள்ளும் நுகர்வுக் கலாச்சாரம். சுய கட்டுப்பாடின்றி நுகர்வு வெறிக் குட்பட்ட சமூகத்தில் வாழும் ஒரு மனிதன் அதன் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் நிறுவனத்திடம் (அரசு, கார்ப்பரேட் etc) தனது வயிற்றுப் பிழைப்புக்கு அண்டி நிற்கும் பிச்சைக் காரத்தனத்தையும், வெளியில் சுயவாழ்க்கையில் அதன் இன்பக் கலாச்சாரங்களைத் தாண்டி யோசிக்க இயலாத மனோபாவத்தையும் கொடுத்துள்ளது. காதலர் தினத்தை எதிர்த்துப் பேசியதற்காக ஒரு அரசியல்வாதிக்கு பிங்க் கலர் ஜட்டி அனுப்பிய எத்தனை பேர் பெட்ரோல் விலை உயர்வுக்காக நடந்த ஸ்ட்ரைக் அன்று தன் எதிர்ப்பைக் காட்டி அலுவலகத்துக்குப் போகாமல் இருந்திருப்பார்கள்?

இது போன்ற மேற்கத்திய கலாச்சாரத்தின் ஊடுருவலை எதிர்த்து நிற்கவேண்டிய தேவையும் இந்திய (அல்லது அந்தந்த மாநிலத்திய) கலாச்சாரத்தின் தேவையாயிருக்கிறது. ஆனால் இங்கிருக்கும் பெரும்பாலான சிந்தனாவாதிகள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்களும் உட்பட பலருக்கு நமது கலாச்சாரத்தை இழிவான, மூடநம்பிக்கைகள் நிறைந்த, பிற்போக்குத் தனமான கலாச்சாரமாக மட்டுமே பார்க்க முடிகிறது. இவர்கள் எங்கே மேற்கத்திய கலாச்சாரத்துக்கு எதிரான நம் கலாச்சாரத்தை முன் நிறுத்தப்போகிறார்கள் ? அதனால் தான் பிஜேபி, சிவசேனா, போன்ற அடிப்படைவாதிகளும், பயங்கரவாதிகளும் கலாச்சாரத்தைக் காக்கவென்று சொல்லிக் கொண்டு காதலர் தின எதிர்ப்பு வன்முறைகளில் ஈடுபட்டு ஆதாயம் தேடுகிறார்கள். அதே சமயத்தில் உலகளாவிய (Globalisation) கலாச்சாரத்தை முன்னிறுத்தும் கார்ப்பரேட் அரசாங்கம் மற்றும் மேற்கத்திய சிந்தனையே உயர்ந்தது என்று துதி பாடும் சிந்தனையாளர்கள் காதலர் தின கொண்டாட்டங்களை எதிர்ப்போரை பிற்போக்குவாதிகள் என்று எளிதில் பிராண்ட் செய்யவும், காதலர் தினத்தை புரோமோட் செய்யவும் முடிகிறது.

எனவே, என்னதான் செய்யலாம்ங்கறே ?’ என்று நீங்கள் கேட்பீர்களேயானால், முதலில் காதலர் தினத்தை ஆர்ப்பாட்டமாக, கேளிக்கையாகக் கொண்டாடாதீர்கள். அப்படியே கொண்டாடினாலும் அதை பார்களிலும், பப்களிலும், ஹோட்டல் பெட்ரூம்களிலும் கொண்டாடாதீர்கள். உங்கள் காதலரை குடும்பத்தினருக்கு நண்பராக அறிமுகப் படுத்துதல், நண்பர்களுக்கு அறிமுகப் படுத்துதல், முக்கியமானவர்களுக்கு உங்கள் காதலைத் தெரிவித்தல் போன்ற காதலை உறுதிப்படுத்தும் விஷயங்களைச் செய்யுங்கள். காதல் என்பது நமது எதிர்கால வாழ்க்கையில் கூடவே வரப்போகும் ஒரு துணையைத் தேடும் முக்கியமான விஷயம், எனவே இது மாதிரி ஆட்டம் பாட்டம் என்பது தான் காதல் என்ற பார்வையைத் தவிருங்கள். 

முக்கியமாக காதல் என்றதும் தடவிக் கொள்ளுதல், பீச்சில் உடம்பு ஒட்டிக் கிடத்தல், தியேட்டரில் உறுப்புகளைத் தொட்டு இன்பங் கொள்ளுதல், பார்க்கில், பஸ்ஸில், தெருவில், ரயிலில், பொது இடங்களில் காம முன் விளையாட்டுக்கள் செய்தல், பாரில் இரண்டு பேரும் குடித்து விட்டு உடைகளை அவிழ்த்துப் போட்டு ஆடுதல், ஹோட்டல் அறைகளில் காதல் என்ற பெயரில் உடலுறவின் உச்சங்களை தேடல் என்பது போன்ற கேவலமான மேற்கத்திய பாணி விஷயங்களை நிறுத்துங்கள். உங்கள் காதலை பகிரங்கப் படுத்துங்கள். பொது இடங்களில் உங்கள் காமத்தை பகிரங்கப் படுத்தாதீர்கள்.

உங்கள் காதல் காமம் என்ற நிலையையும் இப்போதே சேர்த்துப் பயணிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தால் அதை அடிக்கடி செய்யாதீர்கள். அப்படிச் செய்ய ஆரம்பித்தால் அது இனிமேலும் காதல் இல்லை. அது இணைந்து வாழ்தலின் ஆரம்பம் என்பதை உணருங்கள். அதன் உடனடி நிகழ்வாக. திருமணம் போன்ற ஒப்பந்த முறை மணவாழ்க்கையாக மாற்ற விரைவாக முயலுங்கள். அப்படிச் செய்யாவிட்டால் விரைவில் உங்கள் காதலுடன் காமம் இணைந்த வாழ்க்கையானது வெறும் காமம் நிறைந்த வாழ்க்கையாக நாளடைவில்(நாட்கள், மாதங்கள், வருடங்கள்..) சிறுத்து பின் முடிவில் உடைந்து போகும்; அடுத்த காதலைத் தேடிப் போகும். அது தான் மனித மனத்தின் இயற்கை.

இறுதியாக ஒன்று. காமம் என்பது எத்தனை விதமான பெண்களுடன் / ஆண்களுடன் எத்தனை விதமாகப் புணர்ந்தாலும் தீர்ந்து விடாது. ஏனென்றால் அது ஒரு அன்றாடத் தேவை. அப்படிப் புணர்ந்து திரிந்தால் உங்கள் வாழ்க்கை காமத்தை வெல்வதிலேயே கழிந்து போகும். லட்சியங்களும், உன்னதங்களும், அறிவியலும், மெய்ஞானமும் உங்கள் கண்களில் தென்படாமலே வாழ்க்கை முடிந்து போகும். காதல் என்பது காமத்தின் முன்னோடி. காமத்தின் உயர்ந்த வடிவம். எனவே காதல் செய்யும் காலம் நீங்கள் உங்கள் வாழ்வின் இறுதி வரை உங்களைத் தொடரும் இணையை இன்று தேர்ந்தெடுக்கும் காலம் மட்டுமே என்று உறுதியாக எண்ணுங்கள்.


நாளை நம் சமூகம் ஒரு ஆரோக்கியமான காதல் கொள்ளும் சமூகமாக வளர இன்றைய காதலர்களான நீங்களே அதன் மாற்றத்தின் முதல் கல்லாக இருங்கள்.

நேர்மை நிரம்பிய, வாழ்வை உறுதியாக எதிர்கொள்ளும் இளைஞர்களாகவும், யுவதிகளாகவும் மாறப்போகும் உங்களுக்கு என் சார்பாக தமிழ்க் காதலர் தின வாழ்த்துக்கள்.

இதெல்லாம் சரிதான்.. ஆனாலும் எதிர் பாலின் தொடர்ந்த தூண்டுதல்களினாலும், சுற்றுப்புற சூழல்களாலும் என் மனம் ஆசைகளில் அலைபாய்கிறதே, கட்டுப் படுத்தவே முடியவில்லையே என்று சொல்ல நினைப்பவர்களுக்கு என் பதில்... 'ஒன்றும் செய்ய முடியாது.. விட்டு விடுங்கள்.. மேற்கத்திய பாணியில் என்ஜாய் பண்ணுங்கள்..'. ரொம்பவும் குற்ற உணர்ச்சி அடைவதும் நம்மை பாதிக்கவே செய்யும். அதனால் மேலே நான் சொன்ன அத்தனையையும் மறந்து விடுங்கள். என்ஜாய் பண்ணுங்கள் வாழ்க்கையை. மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு கிராமங்கள் வரை பழகும் உலக மயமாதல் வாழ்க்கையில் தனித மனிதனாக நானும் நீங்களும் எதுவும் கிழித்துவிடமுடியாது.

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.