Saturday, December 24, 2011

கூடங்குளம். அணு உலை. சில விவரங்கள்.

கூடங்குளம். அணு உலை. சில விவரங்கள்.
07-டிசம்-2011
நியூஸ் பேப்பர்ல டெய்லி கூடங்குளம் போரட்டம், அணு உலை பாதுகாப்பானது என்று மன்மோகன் சிங் விளக்கம், அப்துல்கலாம் அவர்களின் நேரடி ஆய்வு, மக்களின் தொடர் உண்ணாவிரதம் என்று பார்த்திருப்பீர்களே.. உங்களுக்காக கொஞ்சம் கூடங்குளம் அணு உலை பற்றிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
கூடங்குளம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் அருகே உள்ள ஊர்.
1988ல் ராஜீவ் காந்தி ரஷ்யாவுடன் உடன்படிக்கை செய்து கூடங்குளத்தில் அணுஉலைகள் அமைப்பது என்று முடிவானது.
நடுவில் ரஷ்யா உடைந்து, ராஜீவ் காந்தி அரசியல் படுகொலையாகியதில் ப்ராஜக்ட் கிடப்பில் போடப்பட்டு பின் 2001ல் திரும்பவும் அக்ரிமண்ட் போடப்பட்டது.
கூடங்குளத்தில் 8 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றைக் கட்ட ஆகும் செலவு 13,615 கோடி ரூபாய். இவற்றிலிருந்து வருடத்திற்கு 9000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அதில் பாதி கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு விற்கப்படும்.
கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.பி.உதயகுமார் என்பவர் தலைமையிலான  
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கூடங்குளத்தைச் சுற்றி 20 கிமீ சுற்றளவில் வாழும் சுமார் 3 லட்சம் மக்களுடன் இணைந்து கூடங்குளம் உலையை மூடக் கோரி போராட்டம் நடத்திவருகிறது.
ஒரு சாதாரண அணு உலை வருடத்திற்கு 25-30 டன் கதிரியக்க எரிபொருள் கழிவை வெளியேற்றுகிறது. இக்கழிவுகளும் ஆபத்தானவை. கதிரியக்கம் கொண்டவை. இவற்றை உறுதியான காரீயக் கலன்களில் அடைத்து வைப்பதுடன் சில வருடங்களுக்கு தண்ணீரால் குளிர்வித்துக் கொண்டே இருக்கவேண்டும். அதற்குப் பின் இவற்றை 2000 அடி ஆழத்தில் புதைத்து கதிர்வீச்சு வெளியாகிறதா என்று 20 ஆயிரம் வருடங்கள்(ஆமாங்க 20 ஆயிரம் வருஷம் தான்...20 வருஷ வாழ்க்கைக்கே இந்தப் பாடு. இதில் 20 ஆயிரம் வருஷத்துக்கு எங்கே போக..) கல்பாக்கத்திலும், கூடங்குளத்திலும் இந்தமாதிரி வருஷம் வருஷம் வெளியாகும் அணுஉலைக் கழிவை எங்கே கொண்டு புதைக்கிறாங்க, என்ன செய்யறாங்கன்னு இதுவரை தகவலே வெளிய வரலை. ஜெய்ராம் ரமேஷை கேட்டால் இன்னும் நமக்கு அந்தப் பிரச்சனை வரவேயில்லைன்னு சொல்றார்.
அணு உலைகளைச் சுற்றி வாழும் மக்களிடம் சர்வே எடுத்ததில் அவர்களுக்கு பலவித நோய்கள் குறிப்பாக ரத்தப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் எனத் தெரியவந்திருக்கிறது.

சாதாரண இயக்க நிலையில் அணு உலையிலிருந்து அதிக அளவு கதிரியக்கம் வெளியேறாது. அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் கதிரியக்கம் மற்றும் மாசுகள் அதிகம் தான். ஆனால் அணு உலை சம்பந்தமான அணு எரிபொருள் தேடுதல், எடுத்தல், அரைத்தல், செறிவூட்டுதல், போன்ற இதர செயல்களையும் கணக்கிலெடுத்தால் அணுப் பொருட்களினால் அடையும் மாசு மிக அதிகம்.

அணு உலையில் யுரேனிய அணு உருகும் போது சீசியம் உருவாகிறது. 1986ல் செர்னோபிலில் அணு உலை வெடித்த போது 100 டிரில்லியன் டிரில்லியன்(1க்கு அடுத்து 26 சைபர்கள் போட்டுக்கொள்ளவும்) அளவு சீசியம் அணுக்கள் ரஷ்யாவின் வடக்குப் பகுதி முழுவதும் பரவின. சதுர மீட்டருக்கு நூறு கோடி சீசியம் அணுக்கள் நீரிலும், நிலத்திலும் கலந்தன. கதிரியக்கமுள்ள இந்த சீசியம் சிதையும் போது அது மனிதர்கள், விலங்குகள், தாவரங்களை கடுமையாக பாதிக்கும், கொல்லும். 2046ம் ஆண்டு வரை இக்கதிரியக்கம் செர்னோபிலைச் சுற்றி இருக்கும். அங்குள்ள தாவரங்கள் சீசியம் அணு பொட்டாசியம் அணு போலவே இருப்பதால் சீசியத்தை உறிஞ்சிக் கொண்டன. தாவரத்திலிருந்து சீசியம் அவற்றை சமைத்து உட்கொண்ட மனிதர்கள், விலங்குகளுக்கு பரவியது. புகுஷிமாவில் குடிதண்ணீரிலும், காய்கறிகளிலும் கதிரியக்கம் கலந்ததும் இதே போலத் தீங்கிழைத்தது.



ஜெர்மனி தனது நாட்டிலுள்ள 17 அணு உலைகளையும் 2022க்குள் முழுதும் மூடிவிடத் திட்டமிட்டுள்ளது. இவ்வணுவுலைகளின் மூலம் நாட்டின் 23 சதவீத மின் தேவை நிறைவேற்றப்பட்டு வந்தாலும், புகுஷிமா நிகழ்வுக்குப் பின், நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாற்று ஆற்றல் மூலங்களான காற்றாலை, உயிரினத் தொகுதி (bio-mass), நீர், மற்றும் சூரிய சக்திகளில் இருந்து 20.7 சதவீதம் மின்சாரம் கிடைத்து வந்துள்ளது. அம்மின்சாரத்தை விற்காமல் தனக்கு உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலம் ஜெர்மனி தனது மின்சாரத் தேவையை சரி செய்யும். மேலும் மாற்று ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி 2013க்குள் ஜெர்மனியின் 30 சதவீத மின் தேவையை ஈடுகட்டமுடியும் என்று கணக்கிட்டுள்ளனர்.

கூடங்குளம் அணுஉலையைச் சுற்றி முப்பது கிலோமீட்டர் தூரத்திற்குள் சுமார் மூன்று லட்சம் பேர் வசிக்கிறார்கள். புகுஷிமாவில் அணு உலைகளில் இரண்டில் வெடிப்பு நிகழ்ந்த போது அது அதைச் சுற்றி 30 கி.மீக்குள் இருந்த மக்களைக் கடுமையாக பாதித்தது. புகுஷிமாவில் நேரடியாக இறந்தவர்கள் யாருமில்லை இதுவரை. இனி வரும் வருடங்களில் அதன் கதிரியக்கத்தால் புற்றுநோய் மற்றும் பல்வேறு விதமான நோய்களுக்கு இறப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். ஆனால் அது புகுஷிமாவின் கணக்கில் சேராது. புரிகிறதா ?

கீழே அணு உலை ஆதரவாளர்களின் சில வாதங்களும் அதற்கு நாம் கண்ட பதில்களும்..
அணுஉலை ஆதரவாளர்:- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுவுலையின் சுவரானது 6 மீட்டர் அடர்த்தி (thickness) கொண்டது,,, கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத அளவு பாதுகாப்பானது...முற்றிலும் திடமான இந்திய கான்க்ரீட் கவுன்சில்'ஆல் பரிசோதிக்க பட்ட பின்னரே அந்த concrete நிரப்பப்பட்டு உள்ளது,,, ஏவுகணை தாக்கினாலோ, விமானம் விழுந்தாலோ அணுவுலைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.
எதிர்ப்பாளர்: - கூடங்குளம் மட்டுமில்லை. செர்னோபில், ஜப்பானில் சமீபத்தில் வெடித்த புகுஷிமா அணு உலைகள் கூட இது மாதிரி 6 மீட்டர் அடர்த்தி கொண்ட சுவர்களால் ஆனவை தான். அவையெல்லாம் ஏன் வெடித்தன ? நம்மால் அணு உலையை வேலை செய்யாமல் நிறுத்த முடியும். ஆனால் உள்ளே  நிகழும் அணு வினையை நிறுத்தவே முடியாது. அதிலிருந்து வெளியாகும் வெப்பத்தை குளிர்வித்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் புகுஷிமாவின் கதி ஏற்படும்
அணு உலை ஆதரவாளர்:- திருநெல்வேலி மாவட்டமானது ஒரே நில தட்டில்
அமைந்து உள்ளதால், நிலநடுக்கம் வர வாய்ப்புகள் குறைவு, வந்தாலும் பூமி தட்டு பிரியவோ ஒன்று சேரவோ வாய்ப்பு இல்லை, ஏனெனில் நான் கூறியபடி ஒரே நிலதட்டில் உள்ளது நெல்லை மாவட்டம்..
எதிர்ப்பாளர்:- நிலநடுக்கம், சுனாமி பற்றி நமக்கு எவ்வளவு தெரியும் ?  நிலநடுக்கத்தின் அளவு ஒரே தட்டில் அதிகமாக வாய்ப்பு இல்லை என்று எதை வைத்து உறுதியாகக் கூற முடியும்?  வேகமாக மாறி வரும் பருவ சூழல்கள் மற்றும் புவியின் நிலைப்புத்தன்மையை  துல்லியமாக அறிவதில் நமக்கு உள்ள திறமைகள் போதுமா ?
அணு உலை ஆதரவாளர்:- சுனாமி வந்தாலும் அதை தடுக்க, அலை தடுப்பு பாறைகள் கடலுக்கு நீண்ட தூரத்திற்கு போடப்பட்டு உள்ளன, அணுஉலை கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் மேலேயே கட்டப்பட்டு உள்ளது,,, சுற்றி பாதுகாப்பு சுவரும் கட்டப்பட்டு உள்ளது.
இந்தியாவின் தென்மேற்கு பகுதியான இந்தோனேசியா சுமத்ரா தீவிலிருந்து
அதிகம் சுனாமி வர வாய்ப்பு இருந்தாலும், அங்கே இருந்து வரும் பேரலைகளோ இலங்கையில் மோதி விடும்... ஏற்கனவே சுனாமி தாக்கிய போது கூடங்குளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை, சுனாமி வந்த பின்னரும் ஏற்கனவே சென்னையில் அமைந்துள்ள கல்பாக்கம் அணு உலையிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சில் மாற்றம் இல்லை..
எதிர்ப்பாளர்: -  சுனாமி வந்த போது கல்பாக்கத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டு பலபேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அந்தச் செய்தி அரசு வெளியில் பரவாமல் அமுக்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளதே. சுமத்ரா தீவில் மட்டும் தான் அடுத்த நிலநடுக்கம் வருமா என்ன ? இங்கே பக்கத்திலே மொரிஷியஸில் கூட நிலநடுக்கம் வந்ததே. இது தவிர மனிதத் தவறுகளாலேயே அடிக்கடி கதிர்வீச்சு வெளிப்பட்டு விடுகிறது. சாதாரண விபத்து என்றால் விபத்துக்குள்ளான இடம் மட்டும் பாதிக்கப்படும். அணு உலையில் விபத்து என்றால் கதிரியக்கம் செல்ல முடிந்த தொலைவு வரை எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும். 
 அணு உலை ஆதரவாளர்:- அணுவை பிரிக்கும் செயலானது கட்டுபடுத்த முடியாமல் போனால், உடனே அணு உலை தானாக செயல் இழந்து விடும்,அணுவை தன்னுள் அடக்கிவிடுமாறும் தயாரிக்க பட்டு உள்ளது.
எதிர்ப்பாளர்: - நம்மால் அணு உலையை வேலை செய்யாமல் நிறுத்திவிட முடியும். ஆனால் உலையின் உள்ளே நிகழும் அணு வினையை நிறுத்தவே முடியாது. அணு உலை வேலை செய்யாமல் நிறுத்தப்பட்டாலும் அதிலிருந்து வெளியாகும் வெப்பத்தை தொடர்ந்து குளிர்வித்துக் கொண்டே இருக்கவேண்டும். புகுஷிமாவில் நிறுத்தப்பட்ட அணுஉலையை குளிர்விக்க முடியாததால் தான் வெப்பம் அதிகமாகி உலை வெடித்தது.
அணு உலை ஆதரவாளர்:- உலை வெப்ப நீக்க முறையானது , உலகிலேயே மிக
நவீனமானது...,அதே போல அனைத்து நாடுகளிலும் அணுஉலைக்கு தேவையான coolant/குளிர்விப்பான் ஒன்றே ஒன்று மட்டுமே பயன்படுத்தப்படும் ஆனால் இங்கு நான்கு coolant/குளிர்விப்பான் பயன்படுத்த படுகிறது... ஒரு குளிர்விப்பான் செயல் இழந்தாலும் மற்ற மூன்றில் ஒன்றை பயன்படுத்தலாம், இந்த நான்கு குளிர்விப்பான்களுக்கும் நான்கு
generator'
கள் உபயோகப்படுத்த படுகின்றன...
எதிர்ப்பாளர்: -  புகுஷிமாவில் கூட ஒன்றுக்கு இரண்டு குளிர்விப்பான்கள், இரண்டு எமர்ஜென்ஸி ஜெனரேட்டர்கள் இது தவிர 8 மணி நேரத்தற்கு வரும்படியான
பேட்டரிகளும் இருந்தன.  ஆனாலும் அவர்களால் உடனே உலையை குளிர்வித்து விட முடியவில்லை.
அணு உலை ஆதரவாளர்:- வெளியேறும் புகை மிக மிக குறைவானதாக இருந்தாலும் அது சுற்று சூழலை எந்த விதத்திலும் பாதிக்காத வாறு புகைபோக்கி உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட படி 100 மீட்டர் உயரம் வரை உயர்த்தி கட்டப்பட்டு உள்ளது.
எதிர்ப்பாளர்: - வெளியேறும் புகையில் என்ன என்ன இருக்கும் என்று கேட்டுப் பாருங்கள். பின் அதன் அருகில் நீங்கள் குடியிருக்க முடியுமா என்பது விளங்கும். பொதுவாக அணு உலை மட்டுமல்ல, அனல் மின் நிலையங்கள், வேதிப் பொருள் தொழிற்சாலைகள், வெளியிடும் புகை மிக மிக ஆபத்தான சூழல் கேட்டை விளைவிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த, நெறிப்படுத்த அரசு தவறிவிட்டது. தனியாரிடம் எல்லா பொறுப்புக்களையும் கொடுக்கும் அரசு அவற்றை எப்படி கண்காணித்துச் சரிசெய்யும் என்று நாம் எதிர்பார்க்கலாம்

இத்தோடு அணு இழ்ப்பீட்டு மசோதா என்ற ஒன்றை வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு  சார்பாக நிறைவேற்றியுள்ளது நமது அரசு. அதன் படி அணு உலையை நமது நாட்டில் நிறுவும் வெளிநாட்டு கம்பெனியோ, அல்லது அந்த நாட்டு அரசோ அணு உலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பாளர்கள் அல்ல. ஒருவேளை நஷ்ட ஈடு கொடுக்கும் நிலை வந்தால் 500 கோடி ரூபாய்க்கு மேல் தரவேண்டியதில்லை. அணு உலை செய்தது வெளிநாட்டுக் கம்பெனி, தொழில் நுட்பம் வழங்கியதும் அவர்களே, அதற்கு எரிபொருளும் வெளிநாட்டிலிருந்து தான் வரவேண்டும். ஆனால் விபத்து ஏற்பட்டால் மட்டும் அவர்கள் பொறுப்பில்லை. எப்படி இருக்கிறது கதை ? 'ஏழைகளின் உயிர்.. மயிர் போல..' என்பது இந்தியா என்கிற ஏழை நாட்டிற்கும் பொருந்தும் போலும்.

கூடங்குளம் போராட்டத்தை நாம் எல்லோரும் ஆதரிப்போம். மக்களின் நலன் பற்றி கவலைப் படாமல் பெரும் கம்பெனிகள், அவை ரஷ்யாவோ, அமெரிக்காவோ, சீனாவோ எங்கிருந்து வந்தாலும் சரி அரசின் துணை கொண்டு வந்து தங்கள் (பல்லாயிரம் கோடி ரூபாய்கள்) சுய லாபங்களுக்காக அணு உலை அமைப்பதில் தீவிரம் காட்டுவதை எதிர்த்து நிற்போம். மக்களின் உரிமைகளை, நமது பாதுகாப்பான வாழ்வை மீட்டெடுப்போம்.

அணுசக்திக்கு மாற்று எரிபொருள் தேடலைப் பற்றி அறிந்துகொள்ள பின்வரும் கட்டுரைகளைப் படியுங்கள்..
அணு உலைகளுக்கு மாற்று வெளிவராத உண்மைகள் - பாகம் 1
அணு உலைகளுக்கு மாற்று வெளிவராத உண்மைகள் - பாகம் 2
http://www.thenseide.com/cgi-bin/Details.asp?selNum=22&fileName=Dec1-11&newsCount=2

1 comment:

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.