Saturday, November 12, 2011

உங்களுக்கு 250 பேஸ்புக் நண்பர்கள் இருக்கலாம்... ஆனால் 2பேர் மட்டுமே நெருங்கிய நண்பர்கள்.

உங்களுக்கு 250 பேஸ்புக் நண்பர்கள் இருக்கலாம்... ஆனால் 2பேர் மட்டுமே நெருங்கிய நண்பர்கள். 
- வென்ஸி லூங்க்(Wency Leung)


உங்களுக்கு கணக்கிலடங்கா பேஸ்புக்(facebook) நண்பர்களும், டிவிட்டர் பின்தொடர்பவர்களும் (twitter followers) இருக்கலாம்.
ஆனால் அவர்களில் எவ்வளவு பேர் உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் ?

சமீபத்தில் அமெரிக்காவில் 2000 பேருக்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பெற்ற ஒரு ஆய்வின்படி ஒவ்வொருவருக்கும் சராசரியாக 2.03 நெருங்கிய நண்பர்களே உள்ளனர்.

இந்த ஆய்வை நடத்திய கார்னல் பல்கலைக்கழகத்தைச்(Cornell University) சேர்ந்த டாக்டர் மாத்யூ ப்ராஷ்ஹியர்ஸ் இன் (Mathew Brashears) கூற்றுப்படி,இந்த 2.03 பேர் தான்( 2 பேர் தான்) நீங்கள் ஆத்மார்த்தமான நண்பராகக் கருதும் நபர்கள்; உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படும் போது நீங்கள் நாடும் முதல் நபர் இவரே. இந்த நெருங்கிய நண்பர்களின் எண்ணிக்கை 1985ல் மூன்றாக இருந்தது. இப்போது 2 ஆகக் குறைந்திருக்கிறது

ஒரு இணையதள ஓட்டெடுப்பில், டாக்டர் ப்ராஷ்ஹியர்ஸ் கடந்த ஆறுமாதங்களில் ஒருவர் தனது முக்கியமான விஷயங்களை பறிமாறிக்கொண்ட நபர்களைப் பட்டியலிடும்படி கேட்டுக்கொண்டார். பதிலளித்தவர்களில் 48 சதவீதம் பேருக்கு ஒரே ஒரு நெருங்கிய நண்பரே இருந்தார். 18 சதவீதம் பேருக்கு நெருங்கிய நண்பர்கள் 2பேர் இருந்தனர். 29 சதவீதம் பேருக்கு நெருங்கிய நண்பர்கள் எண்ணிக்கை 2பேருக்கு மேல் இருந்தது. 4 சதவீதம் பேருக்கு நெருங்கிய நண்பர்களே இல்லை.

இம்முடிவுகளிலிருந்து மனிதனது சமூக வட்டங்கள் குறுகுகின்றன என்று நினைக்கவேண்டியதில்லை. மாறாக நாம் நமது நண்பர்களையும், அறிமுகமானவர்களையும் வெவ்வேறாக வகைப்படுத்துகிறோம் என்று பொருள் கொள்ளலாம். சமூக தொடர்புத் தளங்கள் நம்மை மிக அதிகமான நபர்களுடன் தொடர்புகொள்ள வாய்ப்பளித்திருந்தாலும், மிக நெருக்கமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள நாம் மிகச் சிலரையே தேர்ந்தெடுக்கிறோம்.

இதன் பொருள் நாம் சமூகத் தனிமை அடைகிறோம் என்பதல்ல. பதிலாக நம் நண்பர்கள் நமக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள்; நமக்கு அறிமுகமானவர்களோ அறிவுரைகள்(மட்டும்) வழங்குகிறார்கள்.

ஒரு விஞ்ஞானியின் கருத்துப்படி நமது மூளையின் செயல்பாட்டுத்திறன் நமது நட்புத்தொடர்புகளின் எண்ணிக்கையை பாதிக்கிறது. 2010 ல் வெளிவந்த ஒரு மனிதருக்கு எவ்வளவு நண்பர்கள் தேவை?(How many friends does one person need ?) என்கிற புத்தகத்தில், அதன் ஆசிரியரும் பரிணாம உயிரியல்(Evolutionary Biologist) ஆராய்ச்சியாளருமான ராபின் டன்பர் (Robin Dunbar) சொல்லியிருப்பதன் படி, நமது மூளையால் ஒரே நேரத்தில் அதிக பட்சம் 150 உறவுத்தொடர்புகளை(relationships) மட்டுமே நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும்.

இதற்கு மேல், எவ்வளவு அதிக நண்பர்கள் நமக்கு உண்டோ அவ்வளவு குறைவாகத் தான் நமக்கு அவர்களைப் பற்றித் தெரிந்திருக்கமுடியும். இந்த 150-நண்பர்கள் என்கிற வரையறையானது ஒரு அலைவரிசையில் அமைக்கப்படும் நமது உறவுத் தொகுப்புகளை கணக்கில் கொண்டு சொல்லப்படுகிறது. இக்கற்றையின் ஒரு புறத்தில் 5 பேர் வரைகொண்ட நம் நெருங்கிய நண்பர்கள் வருவார்கள்; இவர்களிடம் வாரத்தில் ஒரு முறையாவது நாம் பேசிவிடுகிறோம். இன்னொரு முனையில் ஒரு நூறு பேர் வரை கொண்ட அறிமுகமானவர்கள்; இந்த 100 பேரிடம் நாம் வருடத்தில் ஒரு முறைதான் பேசுகிறோம். அல்லது அடிக்கடி நமக்கு தேவையேயில்லாத / சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி மட்டுமே  பேசுகிறோம்.

மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உங்கள் வாழ்க்கையின் நண்பர்களைப் பற்றி சரியாக பிரதிபலிக்கிறதா ?
---------------------
இக்கட்டுரை பின்வரும் இணையதளப் பத்திரிக்கைக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. 
http://www.theglobeandmail.com/life/the-hot-button/you-may-have-250-facebook-friends-but-only-two-are-close-pals-says-study/article2230818/

- தமிழில் அம்பேதன்.
 

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.