Thursday, May 19, 2011

தேர்தல் வந்தது. விடிவு வந்ததா ?

மே 13 2011.

காலையிலிருந்தே தேர்தல் முடிவுகள், ஓட்டு எண்ணிக்கை நிலவரங்கள் படபடப்பாய் சேனல்களில் மடங்கி மடங்கி கிரிக்கெட் ஸ்கோர் போர்டு போல 'லைவாக அப்டேட்'(live update) செய்யப்பட எல்லோரும் அன்றாட வேலைகளுடன்  இந்த ஸ்கோரையும் சேர்த்து கேட்டுக் கொண்டார்கள். தமிழ்நாட்டில் காலை 11 மணிக்கே பரபரப்பு புஸ்வானமாகிவிட்டது. அப்போதே பெரும்பாலான தொகுதிகளில் முண்ணணியில் 'அம்மா'தான் அடுத்து என்று கிட்டத்தட்ட உறுதியாகி விட வேட்டுக்கள் வெடித்து, லட்டுக்கள் கொடுத்து பின்னர் வெறுமனே ஓட்டு எண்ணிக்கை கணக்கு மட்டும் பார்க்கும்படி சுவாராசியமில்லாமல் போய்விட்டது.

கேரளாவில் கொஞ்சம் சுவாராசியம் அதிகம். 20-20 மேட்ச் போல இதுவா அதுவா என்று மாற்றி மாற்றி கடைசியில் கடைசி ஓவரில் உம்மன் சாண்டி சிக்சரடித்துவிட்டார். அசாமிலோ போன முறை தமிழ்நாட்டில் விஜயகாந்த்தால் ஓட்டு பிரிந்ததில் திமுக வந்தது போல இம்முறையும் காங்கிரஸ் வந்துவிட்டது - பங்களாதேஷ் மேட்ச் மாதிரி. அதற்கும் காங்கிரஸ்காரர்கள் 'தொடர்ந்து மூன்றாவது முறை' என்று ஆரவாரம் இந்திய அணி போல. மேற்கு வங்கத்திலோ அமெரிக்கா, காங்கிரஸ் மற்றும் குழுவினர் நடத்திய மேட்ச் பிக்ஸிங்கில் இடதுசாரிகள் பலமிழந்து போய் மீண்டும் தெருவில் நின்றார்கள்.

சரி. இந்தத் தேர்தல் முடிவுகள் வந்ததில் என்ன மாற்றம் வந்துவிட்டது ? மறு நாளே இதோ பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டது காங்கிரஸ் அரசு (ஏரோப்ளேன் பெட்ரோல் விலையை விட பத்து ரூபாய் அதிகமாம்.. அது எப்படி?). இதில் காமெடி என்னவென்றால் நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பதில் தான் "பெட்ரோல் விலை உயர்வுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை. பெட்ரோல் நிறுவனங்கள் தான் உயர்த்தியுள்ளன". பெட்ரோல் விலையை பெட்ரோலியக் கம்பெனியும், காய்கறி விலையை ரிலையன்ஸ் ப்ரெஷ்ஷூம், அரிசி விலையை அம்பானியும், ஆட்டு விலையை டாட்டாவும் நிர்ணயம் செய்ய விட்டு விட்டால் அரசு என்பது எதற்கு ? சும்மா தண்டத்துக்கு சம்பளம் கொடுத்து பிரதமர், அமைச்சர்கள், எம்பிக்கள்.. இவர்களுக்கு பார்லிமண்ட் கேண்டீனில் சிக்கன் 3 ரூபாய் சலுகை விலையில் என்று எல்லாம் எதற்கு ? எல்லோரையும் வீட்டுக்கு அனுப்புங்கள்.  அம்மாவோ பீச்சில் காணாமல் போன சிறுமியைக் கண்டுபிடித்து விட்டுக் கொடுத்துவிட்டு சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவதே முதல் கடமை என்கிறார். கருணாநிதி ஆட்சி காலத்தில் மட்டும் என்ன கொள்ளையர்களா ரோந்து சுற்றிக் கொண்டிருந்தார்கள் திருடர்களைத் தப்ப விட. அப்போதும் இதே போலீஸ் தானே. சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் முயற்சியில் பின்னால் சீமான், கொளத்தூர் மணி என்று ஈழ ஆதரவாளர்களையும் பிடித்து உள்ளே தள்ளும் வாய்ப்பும் இல்லாமலில்லை. சரி ஆட்சியின் மற்ற கடமைகள் எல்லாம் எங்கு போகும் ? பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசு பற்றி அம்மா எதுவும் வசைமாறி பொழியக் காணோம். ஆனால் புதுச்சேரியில் அமைச்சரவையில் பங்குதராத ரங்கசாமியை வசைமாறி பொழிகிறார். ரங்கசாமி நம்பிக்கை துரோகியாம். தான் ஒப்பற்ற, நிகரற்ற, இணையில்லா, தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து கூட தெரிவிக்காத வயித்தெரிச்சல்காரர் ரங்கசாமியாம். என்னத்தைச் சொல்ல. சரி இவ்வளவு நாளும் கலைஞர் பின்னால் டை படபடக்க நின்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்கள்(SEZ- Special Economic Zone) என்கிற பெயரில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்ட கார்ப்பரேட்டுகள் என்ன செய்யப் போகிறார்கள். ஜெயலலிதா வந்து எல்லாவற்றையும் ரத்து செய்துவிடுவாரா என்ன ? கார்ப்பரேட்டுகள் இப்போது கலைஞர் வீட்டு வாசலை விட்டு விட்டு இவர் வீட்டு வாசலில் வந்து தவம் கிடப்பார்கள். அவ்வளவு தான். பெட்டிகள் போகும் இடம் மாறும். வேறு என்ன மாறிவிடப் போகிறது ?

மக்களும் என்ன பெரிதாய் மாறிவிட்டார்கள் ? இது கேடுகெட்ட ஜனநாயகமாயிருந்தாலும் தங்களுக்காக போராடும் கம்யூனிஸ்ட்டுகளுக்கா ஓட்டு போட்டார்கள். அடித்து விரட்டினாலும் அம்மாவுக்கே ஓட்டு என்று போனார்களே ஏன்? விஜயகாந்த் ஈழப் பிரச்சனை பற்றி வாயை பெவிகால் போட்டு ஒட்டிக் கொண்டாலும், காங்கிரஸின் தேர்தல் பேரத்தில் இங்கேவா அங்கேவா என்று கால் மாற்றிக் கொண்டேயிருந்தாலும் மக்கள் என்னவோ சினிமாவில் போல் நிஜ வாழ்விலும் அவர் ஊழல் அரசியல்வாதிகளையும், தொழிலதிபர்களையும் லட்டியால் அடித்து ஜட்டியோடு நடக்கவிடப் போகிறார் என்கிற நம்பிக்கையில் தானே அவருக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். கேப்டன் எத்தனை ஊழலை ஸ்லோமோஷனில் வெடிக்கிறார் என்று பார்ப்போம். எனக்கென்னவோ இவரே ஜட்டியோடு நடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகம். கார்ப்பரேட்டுகள் 2ஜி என்ன 5ஜி ஊழலே செய்தாலும், அப்போதும் ராசா மாதிரி ஒரு கூஜா அமைச்சரை மட்டும் மோசமானவன் என்று சொல்லிவிட்டு நொங்கு தின்னவன் டாடாவையும், பிர்லாவையும், அம்பானியையும் பார்த்து இன்னும் ஆவென வாய் பிளந்து நிற்கும்(அட.. என்னமா வீடு கட்டியிருக்கான் பாத்தியா இந்த அம்பானி ! ) இந்த மக்களின் கும்பானி மனோநிலை மாறாத வரை  கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக இவர்கள் ஒரு நாளும் திரண்டு நிற்கப் போவதில்லை. போய்ப் பாருங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் வாசலில் சொகுசான வேலைக்காக தங்களது தன்மானத்தையும் அடகு வைக்க ரெடியாகும் மத்திய தர ஆபிசு செல்லும் வர்க்கத்தை.

சரி மக்களின் காரல் மார்கஸின், எங்கெல்ஸின் வழித் தோன்றல்கள் நம் கம்யூனிஸ்ட்டுகளின் கதி என்ன ? மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள், தீவிர கம்யூனிஸ்ட்டுகள், மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள் என்று பல விதமாக பிரிந்து நிற்கும் இவர்கள் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திடமிருந்து கற்றுக் கொள்ளாதது 'எதிரியுடன் மோதும் போது ஒற்றுமை' என்கிற பாடத்தை.. அவர்களை 'போலி'கள் என்று இவர்களும் இவர்களை 'வழி தவறியவர்கள்' என்று அவர்களும் என்று மாற்றி சொல்லிக் கொள்கிறார்கள். மாவோயிஸ்ட்டுகளை சிபிஎம் காட்டிக் கொடுக்கிறது. சிபிஎம் தோழர்களை மாவோயிஸ்ட்டுகள் கொல்கிறார்கள். எஸ்யுசிஐ கம்யூனிஸ்ட் தோழர்களும் சிபிஎம் காரர்களும் மே.வங்கத்தில் மாறி மாறி வெட்டிக் கொள்கிறார்கள். ஐயா உங்களுக்குள் நீங்கள் அடித்துக் கொள்ளுங்கள் மோதிக் கொள்ளுங்கள் ஆனால் முதலாளித்துவ வர்க்கத்திடம் மட்டும் உங்கள் இனத்தைவரை காட்டிக் கொடுக்காதீர்கள் என்று இவர்களுக்கு யார் சொல்வது ?

சிபிஎம் மே வங்கத்தில் தனது 34 ஆண்டு கால ஆட்சியை இழந்தது கார்ப்பரேட், அமெரிக்கா, மம்தா பானர்ஜி என்று பெரிய கூட்டுச் சதி என்றாலும் சிபிஎம் தவறுகளே  எங்கள் பக்கம் இல்லை என்கிற ரீதியில் அறிக்கை விடுகிறது.  மீசையில் மண் ஒட்டவில்லையாம். பிரகாஷ் காரத் போன தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் நடுவில் இரண்டு லட்சம் வாக்காளர்கள் தான் (?) எங்களுக்குக் குறைந்துள்ளார்கள் என்று கணக்கு காட்டி பெருமைப்படுகிறார் (தோல்வியை ஏற்று ராஜினாமா செய்கிற ஆளா இவர் ? ). தமிழ் நாட்டில் 11ல் 9 வென்ற பெருமையை எப்படிக் கொண்டாட முடியும் ? என்றாவது தனியாக நின்று மக்களை தம் பாதையில் வரவைக்க இவர்கள் முயன்றார்களா ? பின்னர் மக்களைக் காப்பாற்ற என்று இவர்கள் செய்யும் முயற்சிகளை (உதா. அணு ஒப்பந்த எதிர்ப்பு) அந்த மக்களே புரிந்து கொள்ளாத வினோதம் ஏன் நடக்கிறது ?

காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்றது திமுக எதிர்ப்பு அலையால் தான். ஈழத்தமிழர் பிரச்சனையால் அல்ல என்பதற்கு சாட்சியாக தெற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் வென்றிருக்கிறது. இன்னும் ஆபத்தாக பிஜேபி இரண்டாமிடத்தில் இருக்கிறது. ஈழப் பிரச்சனையை மக்களிடம் சேர்க்கும் முயற்சியில் சீமான் எதுவும் சாதித்திருக்கிறாரா என்று தெளிவாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் பெரிதாய் மாறிவிடவில்லை. கம்யூனிஸ்ட்டுகளின் கார்ப்பரேட், அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரங்களும் பெரிதாய் எடுபடவில்லையோ என்று தோன்றுகிறது. ஏனென்றால் (சிபிஎம்)கம்யூனிஸ்ட்டுகளும் ஈழத்தில் மக்கள் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்ட போது கள்ள மெளனம் சாதித்தவர்கள் தானே. இன்றைக்கு ஐநாவின் துக்கடா அறிக்கை  வெளியானவுடன் போராட்டம் என்று அறிவிக்கிறார்கள். எதையும் உணர்ச்சியற்று பார்க்கும் நீங்கள்(சிபிஎம்) உடனிருக்கும் மக்களின் மரணத்தைக் கூட ஐநா அறிக்கை விட்டால் தான் கண்டு கொள்வீர்கள் என்றால் உங்களை எப்படி மக்கள் நம்புவார்கள். நம்பினாலும் நம்புவார்கள். ஏனென்றால் அவர்களும் படுகொலைகள் நடந்த போது ஐபில் மேட்ச்களும், மானாட மயிலாடக்களும் பார்த்து ரசித்தவர்கள் தானே. எனவே மக்களின் மனோபாவம் பெரிதாய் மாறிவிடவில்லை. பெட்ரோல் விலை லிட்டர் 200 ரூபாய் என்று விற்றாலும் அவர்களின் மனம் மாறுமா என்பது சந்தேகமே.

மக்களை சரியாக படிப்பிப்பது யார் ? தங்களின் அன்றாட வயிற்றுப் பாடு மேலும் மேலும் சிக்கலாவதன் காரணம் சொத்துக்கள் இப்படி சில நூறுபேருக்கு மட்டும் குவிவது தான் என்கிற எளிய உண்மையை மண்டையிலடித்து புரிய வைப்பது யார் ? கம்யூனிஸ்ட்டுகளைத் தவிர வேறு யாரும் இந்தியாவில் இல்லை. அவர்கள் தான் அன்று முதல் இன்று வரை இதைத் தொடர்ந்து செய்பவர்கள். அவர்கள் எந்தக் கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி. எனவே இந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் தங்களின் மிகப் பெரும் கடமையாக உணரவேண்டியது இது...

'உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்பதுடன் சேர்த்து 'இந்திய கம்யூனிஸ்ட்டுகளே' ஒன்று சேருங்கள் என்கிற வாக்கியத்தையும் இனி கம்யூனிஸ்ட்டுகள் தினமும் உரத்து கூவி இந்தக் கார்ப்பேரட் கண்ணாடி மாளிகைகளையும் அதன் போலி சோனியாக்களையும், மன்மோகன்களையும் ஒன்றாய்ச் சேர்ந்து வீழ்த்தி விரட்ட மக்களை விழிப்பாக்க முயற்சிகள் செய்ய வேண்டும்.

மக்களை விழிப்படைய வைப்பதில் முக்கியமானது ஊடகம். இந்தக் காலத்தில் மக்கள் பெரும் சோம்பேறிகளாகி விட்டார்கள். செய்தியானது காலையில் எழுந்தவுடன் பெட் காபியுடன் படுக்கையறை டிவியில் விலாவரியாக வாசிக்கப்பட்டாலும் கவனிப்பதே இல்லை. ஊடகங்களின் மோடி மஸ்தான் வேலைகளில், ஆட்ட பாட்டங்களில் தான் அவர்கள் மயங்கிக் கிடக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் சரியான உண்மைகளை வெளிக் கொணர சரியான வழி தொலைக் காட்சி, சினிமா மற்றும் செய்தித்தாள் போன்ற ஊடகங்களே. நேற்று தற்செயலாக 'ஊமை விழிகள்' என்கிற படம் பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கா மசாலாவாக சொல்லப்பட்டிருந்தாலும் வெகுஜன மக்களுக்கு அப்படம் ஒரு 'கம்யூனிச சிவப்பின் அடையாள'மாக மாறி இருப்பதை உணர்ந்தேன். 'தோல்வி நிலையென நினைத்தால்' பாட்டு ஞாபகம் வருகிறதா ? எனவே இனியும் இடது சிந்தனை தொலைக்காட்சி ஊடகங்கள் வரவில்லை என்றால் கம்யூனிஸ்ட் கட்சிகள் அருங்காட்சியகத்திற்குச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்காக சிறு முதலாளிகளுடன் சமரசம் செய்து கொண்டால் கூட பரவாயில்லை தான்.

இன்னும் என்ன என்னவோ சொல்ல இருக்கிறது. வருத்தம் விட்டபாடில்லை. இனி இந்தியாவில் கம்யூனிஸ அடையாளம் மறையும் நாள் நெருங்கிவிட்டதோ என்று வருத்தமாய் இருக்கிறது.  மக்களின் துயரங்களுக்கு விடிவே கிடையாதோ ?

1 comment:

  1. மக்களின் துயரங்களுக்கு விடிவே கிடையாதோ ?
    een kidaiyathu ilavasa sappadu poda mudivakap pokirathu

    ReplyDelete

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.