Tuesday, March 15, 2011

தெருநாய்களும் கோடீஸ்வரர்களும் - பி. சாய்நாத் - பாகம் 1


தெருநாய்களும் கோடீஸ்வரர்களும் பி.சாய்நாத் - பாகம் 1.
பின் வருவது பத்திரிக்கையாளரும், இடது சாரி பொருளியலாளரும், பேராசிரியருமான பி.சாய்நாத் அவர்கள் கடந்த நவம்பர் 2010ல், சென்னையில் ஒரு கூட்டத்தில் பேசிய ஆங்கில உரையின் தமிழாக்கம்.

நன்றி. இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மூன்று மணி நேரத்திற்கு இந்த அரங்கை வாடகைக்கு எடுத்திருப்பதாகச் சொன்னார்கள். இந்த மூன்று மணி நேரத்தில், 51 இந்தியக் குழந்தைகள் பட்டினியாலும், உணவுப் பற்றாக்குறையாலும் இறந்து போய்விடுவார்கள். அதுபோல் 4 அல்லது 5 மடங்கு பேர் வகை-4(Grade 4) ஊட்டக்குறைவை அடைவார்கள். இந்த மூன்று மணி நேரத்தில் 6 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வார்கள், 36 48 விவசாயிகள் தற்கொலை முயற்சி செய்வார்கள். இதே மூன்று மணி நேரத்திற்குள் இந்திய அரசு 171 கோடி ரூபாய்களை வருமானவரி விலக்காக நாட்டின் பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்திருக்கும். அது தான் இந்த மூன்று மணி நேரத்தில் நடக்கப் போவது. மூன்று மணி நேரத்திற்கு 171 கோடிகள் வீதம் கொடுத்தால் வருடத்திற்கு 500 ஆயிரம் கோடிகள் ஆகும். இந்த அரசு நாட்டின் மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் தேசிய பொது விநியோக அமைப்பை (Public Distribution System PDS– பொ.வி.அ ரேஷன் கடை) உருவாக்கப் பணமில்லை என்று மிகத் தெளிவாகக் கூறிவிட்டது. இந்த அரசு அனைவருக்குமான பகிர்வு முறையை பகுதியளவாவது(partially) முறைப்படுத்துவதைக் கூட மறுக்கிறது (வேறு காரணங்களால் எனக்கு இதில் உடன்பாடில்லை எனினும்). பொது விநியோக முறை(ரேஷன் கடைகள்) என்றழைக்கப்படும் உணவுப் பொருட்கள் வழங்கும் முறையை 150 மாவட்டங்களுக்கு கொண்டுவர பணமில்லை என்கிறார்கள்.

தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் போல பொது விநியோக முறையான ரேஷன் கடைகளை நாடு முழுதும் கொண்டு வர எவ்வளவு செலவாகும்?  45,000 முதல் 50,000 கோடிகள். இதில் அதிகபட்சத் தொகையை நாம் எடுத்துக் கொள்வோம். நாடு முழுதும் அனைத்து வார்டுகளிலும் ரேஷன் கடைகள் வைத்து மலிவு விலையில் அரிசியும், கோதுமையும் மட்டும்(இவை மட்டும் போதாது எனினும்) அனைத்து மக்களுக்கும் தருவதற்கு 80 முதல் 90 ஆயிரம் கோடிகள் வருடந்தோறும் செலவாகும். அதே 80 முதல் 90 ஆயிரம் கோடிகள் தான் வருடந்தோறும் தனியார் நிறுவனங்களுக்கு அரசு அளிக்கும் வருமானவரி விலக்கும்(income tax exemption). இந்த வருட(2010) பட்ஜெட்டில் கார்ப்பரேட் தனியார் நிறுவன வருமான வரி விலக்கு 80 ஆயிரம் கோடிகள். போன வருட பட்ஜெட்டில் இது 69 ஆயிரம் கோடிகள். 1991 லிருந்து வருடா வருடம் இந்த விலக்குப் பணத்தின் அளவு கூடிக்கொண்டே இருந்திருக்கிறது..

நிதிநிலை அறிக்கையை(பட்ஜெட்) இணையத்திலேயே(Internet) நீங்கள் வாசிக்கலாம். என் நண்பர் அதில் ஒரு பகுதி பற்றிக் குறிப்பிட்டார் என்று நினைக்கிறேன்; கைவிடப்பட்ட(?) வருமான அறிக்கை’. அது மிகவும் எளிமையான அறிக்கை. அது சொல்கிறது இவை இவைதான் நாங்கள் ரத்து செய்த வருமானங்கள். இது மானியமல்ல(subsidy). மானியம் என்பது வேறு; மானியம் என்பது கார்ப்பரேட் தனியார் நிறுவனங்களுக்கு அவர்கள்(அரசு) அளிப்பது; சிறப்புப் பொருளாதார மண்டலங்களில்; மின்சாரத்தில்: தண்ணீரில்; வங்கிக் கடன்களில்; வட்டியில்லாக் கடன்களில்; இவை எல்லாவற்றிலும் தரப்படுவது; அதுதான் மானியம் என்று அழைக்கப்படுவது. அது எவ்வளவு என்றால் நூறு முதல் ஆயிரங்கோடிகள். ஆனால் இது மானியமல்ல; சும்மா தள்ளுபடிக் கணக்கு; வாராக் கடன்; மூன்று விஷயங்களில் இது தனியார் நிறுவனங்களுக்குத் தரப்படுகிறது. 80 ஆயிரம் கோடிகள் கார்ப்பரேட் தனியார் நிறுவனங்களின் வருமானவரியில், சரக்கு வரியில் 170 ஆயிரம் கோடி, சுங்க வரிவிதிப்பில் 249 ஆயிரம் கோடியாக,  ஆக மொத்தம் 4 லட்சத்து 99 ஆயிரம் கோடிகள் (வருடத்துக்கு) வாராக் கடனாக அரசால் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்பதை எனது நண்பர் முன்பே தமிழில் விளக்கியுள்ளார்.

அதாவது மணிக்கு 57 கோடிகள் அல்லது நிமிடத்துக்கு 1 கோடி. ஆனால் ஏழைகளுக்குத் தர பணமில்லை; நம் பிரதமர் சுப்ரீம் கோர்ட்டிடம் பட்டினி பற்றிக் கவலைப்பட்டால் போய் கிணற்றில் குதியுங்கள் என்கிற ரீதியில் ஆணித்தரமாகக் கூறிவிட்டார்; இது அவர்களின் பிரச்சனையில்லையாம்.  எனக்கு ரொம்ப சுவாரசியமாகப் படுவது என்னவெனில் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் பற்றி கவலைப்படும் நம் பிரதமர், உணர்ச்சி பொங்க இந்த ஒப்பந்தம் பாராளுமன்றத்தில்(பார்லிமண்ட்) நிறைவேறாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மிரட்டினார். அந்த உணர்ச்சி வேகம் பசியால் வாடும் மக்களைப் பற்றிப் பேசும் போது மட்டும் காணாமல் போய்விடுகிறது. அணுசக்தி ஒப்பந்தத்திற்காகப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராயிருக்கும் அவர் பசி, பட்டினிப் பிரச்சனையில் ஒரு பிரதமராகச் செயல்படக்கூடத் தயாராயில்லை.

இந்த மகிழ்ச்சியற்ற விஷயத்திலிருந்து வேறு விஷயத்திற்கு விலகிச் செல்வோம். நான் மும்பையைச் சேர்ந்தவன் என்று சொல்லியிருக்கிறேன். அடுத்த முறை மும்பைக்கு வரும் திட்டமிருந்தால் உங்களை வரவேற்கிறேன். வந்தால் எங்களது புதிய, புதுமையான சுற்றுலா தலத்திற்குப் போகாமல் இருந்து விடாதீர்கள். சொல்லப் போனால் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களும், புகைப்படக்காரர்களும் அதிக அளவில் மொய்த்த சுற்றுலாத் தலம் இது. இது மியூசியம்(அருங்காட்சியகம்) இல்லை. இதை ஒரு நினைவுச் சின்னம் போல் கருதலாம். இது வேல்ஸ் நாட்டு இளவரசரின் அருங்காட்சியகம் போன்ற எதுவும் இல்லை. உண்மையில் இந்தியாவில் அருங்காட்சியகங்கள் வளருவது சிரமம் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் இந்தியாவில் இருப்பது உயிரோட்டமுள்ள கலாச்சாரம். மற்ற சமூகங்களில் இறந்து போன விஷயங்களே அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. இந்தியாவில் அருங்காட்சியகத்தில் என்ன இருக்கிறதோ அது தெருக்களில் உருவாக்கப் பட்டுக்கொண்டும் இருக்கிறது.
ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பது மிக மிகச் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு நினைவுச் சின்னம். முகவரி ஆல்ட்மான்ட் ரோடு. தயவு செய்து அங்கு செல்லுங்கள். ஒரு தனி மனிதர் உலகிலேயே மிக விலையுயர்ந்த வீட்டை, 2 பில்லியன் டாலர்கள் செலவில் கட்டியிருக்கிறார். அவர் தான் இந்தக் கிரகத்திலேயே 4வது பெரிய பணக்காரர்; உங்களுக்கு நன்கு தெரிந்தவர். இரண்டு நாட்களுக்கு முன்பு போர்ப்ஸ் பத்திரிக்கை(Forbes magazine) 2014 ல் திரு. முகேஷ் அம்பானி கிரகத்திலேயே பெரிய பணக்காரராக இருப்பார் என்று முன்னறிவித்திருக்கிறது. இந்த வீட்டைப் பற்றி உங்களுக்கு விளக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை. ஒரு எழுத்தாளராக என்னுடைய திறமையையும் விஞ்சி நிற்கிறது இந்த வீடு. நீங்களே அதை நேரில் பார்த்தால் தான் அது புரியும். அது 27 மாடிகளே கொண்டது. ஒரு குடும்பத்திற்கான வீடு. அந்த 27 மாடிகளும் 60 மாடிகள் உயரத்திற்கு சமம்; அதாவது ஒவ்வொரு தளத்தின் கூரையும் சாதாரண அடுக்குமாடி வீடுகளின்(அபார்ட்மெண்டஸ்) கூரை உயரத்தைப் போல இரு மடங்கு உயரம். 27 மாடிகள். ஒவ்வொரு மாடித் தளமும் ஒவ்வொரு விதமான அழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தளம் பிரெஞ்சுக் கலையழகுடன்;  இன்னொரு தளம் ராஜஸ்தான் ஹவேலி(அரண்மனை) போன்று. இந்த வீடு சொல்லப் போனால் மோசமான ரசனையுடைய நினைவுச் சின்னம். இதுவரை இவ்வீட்டில் மூன்றே மூன்று ஹெலிபேட்கள் (Helipads) தான் இருக்கின்றன. அவர் இன்னுமொரு ஹெலிபேட் வைக்க அனுமதி கோரியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அப்போது தான் அந்த வீடு முழுமையடையும். வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனியாக ஒரு ஹெலிபேட். இந்த வீட்டின் மதிப்பு தோராயமாக 2 பில்லியன் டாலர்கள். உண்மையான மதிப்பு யாருக்கும் தெரியாது. மும்பையில் இது கட்டப்பட்டிருக்கும் பகுதியில் சதுர அடியின் விலை அமெரிக்காவில் மன்ஹட்டன் வணிக மாவட்டப் பகுதியின் சதுர அடி விலையை விட அதிகம். நினைவிருக்கட்டும். இது ஒரு குடும்பத்திற்கான வீடு. அல்டாமெளன்ட் ரோடு பகுதியில் நிலத்தின் விலையானது நியூயார்க்கின் பல பகுதிகளில் உள்ள விலையை விட அதிகம்.

27 மாடிகள், மூன்று ஹெலிபேட்கள், கொண்ட வீடு உள்ள அதே மும்பை நகரத்தின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் சேரிகளிலும், தெருக்களிலும் வசிக்கிறார்கள். இதைத் தவிர கட்டிடங்களில் வசிப்பவர்களில் 76 சதவீதம் பேர் ஒரே ஒரு அறை(room) மட்டுமே கொண்ட வசிப்பிடத்தில் 15 மனிதர்களாக வசிக்கின்றனர். பெரும்பாலும் ஆந்திரா, உத்திரப் பிரதேசத்திலிருந்து வந்தவர்கள். டாக்சி ஓட்டுனர்கள், டெய்லர்கள்(தையற்காரர்கள்), தினக் கூலிகள்; 10-15 பேர் 10 அடிக்கு 12 அடியுள்ள ஒரு அறையைப் பகிர்ந்து கொள்கின்றனர். அந்த அறை வெறும் தூங்குமிடம் மட்டுமே. இப்படிப்பட்ட ஒரு மாநகரத்தில், 2030ல் உலகின் அதிகபட்ச மக்கள் தொகை கொண்ட நகரமாகப் போகும், ஏற்கனவே இந்தியாவில் மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடித்துவிட்ட இந்த மும்பை நகரத்தில் தான், இந்தியாவின் 49 பில்லியனர்களில் 21 பேர் வசிக்கும் இந்த நகரில் தான், திரு.அம்பானி தனது அடக்கமான வீட்டைக் கட்டியிருக்கிறார்.

நீங்கள் நினைக்கலாம் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் விஷயம் பொருளாதார ஏற்றத் தாழ்வு பற்றித் தானே என்று. ஆம் சரியே. ஆனால் இது விவசாய நெருக்கடியுடன், உணவு நெருக்கடியுடன் தொடர்புடையதா? உண்மையில் தொடர்பு இருக்கிறது. ஆகஸ்ட் 13, 2010ல் வந்த இந்து நாளிதழைப் பார்த்தீர்களென்றால் அதில் ஒரு வங்கி அதிகாரியின் கட்டுரை இருக்கும்; அதில் விவசாயக் கடன்கள்’(Agricultural Credits) மொத்தமும் விவசாயம் நடக்கும் கிராமங்களில் தரப்படாமல் நகரங்களில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது என்பது புள்ளி விவரங்களுடன் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இது விவசாயக் கடன் என்று அழைக்கப்படுகிறது. மஹாராஷ்டிராவில், 2008 ல், 50 சதவீதத்திற்கும் மேல் விவசாயக் கடன்கள் நகர்க் கிளைகளிலும்(Urban branches), பெருநகர்க் கிளைகளிலும்(Metro Branches)  பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. 50 சதவீதத்திற்கும் குறைவான விவசாயக் கடன்களே விவசாயப் பிரதேசங்களிலும், கிராமப் பகுதிகளிலும் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளன. சரியா?

யார் இந்தக் கடன்களைப் பெறுகிறார்கள்? பம்பாய் நகரம் மிக வித்தியாசமான ஒரு விவசாயத்தைக் கொண்டுள்ளது. அரிசி, கோதுமை, பயிர்களுக்குப் பதிலாக அது ஒப்பந்தப் பணிகளை’(Contracts) வளர்க்கிறது. கட்டிட ஒப்பந்தங்கள்(building contracts), சுபாரி ஒப்பந்தங்கள். மேலும் பல.. எல்லாவற்றிற்கும் ஒப்பந்த முறை இருக்கிறது. இவை எல்லாம் தனியார் ஒப்பந்தங்கள் எப்போதுமே. அரசு ஒப்பந்தங்கள் ஒருபோதும் இல்லை. ஆனால் 50 சதவீத விவசாயக் கடன் நகர்ப்புற மும்பாயில், நகர்ப்புற வங்கிக் கிளைகளால் வழங்கப்பட்டுள்ளது. சரி இந்த விவசாயக்கடனை நகர்ப்புறத்தில் பெற்றது யார்? இன்னும் நன்றாக நெருங்கிப் பார்த்தீர்களென்றால் இரண்டு தனியார் நிறுவனங்களே 50 சதவீதத்தின் பெரும் பங்கைக் கடனாகப் பெறுவதும் தெரியும். அந்த நிறுவனங்கள் எவை என்பதை உங்கள் ஊகத்திற்கே விடுகிறேன். ஏனென்றால் இன்னும் சில தினங்களில் அதை நாங்கள் வெளியிடப் போகிறோம். ஒரு குறிப்பு தருகிறேன். அந்த இரண்டில் ஒன்றை நடத்துபவர் ஒரு பண்புள்ள மனிதர்; அவருடைய வீடு பம்பாயிலேயே மிகப் பெரிய வீடு. இது தான் அந்தத் தொடர்பு.

எது விவசாயத்திற்குச் செல்ல வேண்டுமோ அது நகரத்திற்குச் செல்கிறது; இது ஒரு விஷயம். இதன் முக்கிய விடயம் என்னவெனில் இந்திய அரசின் மிக அடிப்படையான ஒரு விஷயம் மாறியிருக்கிறது; அதன் செயல்பாடுகளில் ; தத்துவங்களில்; உயிர்த் துடிப்பில். அதை உங்கள் சார்பாக நான் அளக்க முற்படுகிறேன். 1960 1970களில் இந்தியாவில் பெரும் மக்கள் திரண்ட விவசாயிகளின் எழுச்சிகளும் புரட்சிகளும் நிரம்பிய காலம். அதன் விளைவால் 2 பில்லியன் (1பில்லியன்=பத்து கோடி) ஏக்கர்கள் நிலம் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் பகிர்ந்தளிக்கப்பட்டது. மற்ற மாநிலங்களிலும் கொஞ்சம் குறைந்த அளவில் நிலங்கள் பகிரந்தளிக்கப்பட்டன. நாம் எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்று பாருங்கள் பின்னே.

1960-70 களில் பெரும் மக்கள் கிளர்ச்சிகள் நடந்ததென்றால், 1990-2000 களில் பெரும் மக்கள் தற்கொலைகள் நடந்திருக்கின்றன. என்ன மாறியிருக்கிறது ? அடிப்படையில் என்ன மாறியிருக்கிறது? 60-70களை ஞாபகப்படுத்திக் கொள்ளுமளவு நீங்கள் வயதானவராயிருந்தால் உங்களால் அந்த வித்தியாசத்தை உணரமுடியும். அன்றைய விவசாயிகளின் கிளர்ச்சிகளுக்கும்; கடந்த 12 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொள்ளும் 2 லட்சம் விவசாயிகளுக்கும் உள்ள வித்தியாசம். உண்மையில் இத்தொகை 2 லட்சத்தை விட அதிகம். 2009ன் தற்கொலைக் கணக்கீடு இதில் சேர்க்கப்பட வில்லை. அந்தக் கணக்கீடு வருகின்ற ஜனவரியில் தான் வெளிவரும். அத்துடன் விவசாயிகளின் தற்கொலை வீதம் வருடத்துக்கு 12000 13000 பேரிலிருந்து (பத்து வருடங்களுக்கு முன்னால்), 16,500 பேராக அதிகரித்து விட்டது இப்போது. எனவே மிக அடிப்படையான ஒன்று மாறி நகர்ந்திருக்கிறது. அரசு செயல்படும் விதம் மட்டுமல்ல; எதிர்ப்புக் குரல்களின் வகைகளிலும்; எதிர்ப்பு வெற்றியடைகிறதா அல்லது தோல்வியடைகிறதா என்பதிலும்; மக்கள் ஒன்று சேர்கிறார்களா இல்லையா என்பதிலும்; அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்களா அல்லது லஞ்சத்தால் மாசுபடுத்தப்படுகிறார்களா அல்லது நசுக்கப்படுகிறார்களா என்பதிலும்; இவை எல்லாவற்றிலும் மிக அடிப்படையான ஒன்று மாறியிருக்கிறது. என்ன அது?   

முதலாவதான அடிப்படை மாற்றம்: 1990 களுக்கு முன் இந்திய அரசு இயந்திரம், அதனுடைய சாதியப் பண்புகளுடனும் கூட, வெவ்வேறு வர்க்கங்களுக்கிடைப்பட்ட(மேல்தட்டு - கீழ்தட்டு) முரண்பாட்டை மத்தியஸ்தம் செய்யும் வேலையையும் செய்து வந்தது. அதனாலேயே 1950 1980 களில் ஏற்றத் தாழ்வு, முக்கியமாக வருமான ஏற்றத்தாழ்வு பெரிதும் குறைந்தது. 50கள், 60கள், 70கள் மற்றும் 80களில் வருமான ஏற்றத் தாழ்வு குறைந்தது. ஆவடி காங்கிரஸ் என்றழைக்கப்படும், காங்கிரஸ் கட்சியின் சோசியலிசப் பாதை என்று சொல்லப்பட்ட காலத்திலிருந்து 1980களின் நடுப்பகுதி வரை வருமான ஏற்றத்தாழ்வு தொடர்ந்து குறைந்தது. ஆனால் 90களிலிருந்து அது அதிகரிக்கிறது. ஏதோ அடிப்படையான ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அது என்னவெனில், அரசு(The State)  மோதும் பல்வேறு வர்க்கங்களுக்கிடையே மத்தியஸ்தம் செய்வதை இனி தன் கடமையல்ல என்று பார்க்க ஆரம்பித்ததுவே. அது வெளிப்படையாக, அம்மணமாக, ஒரு வர்க்கத்தின் சார்பாளராக, அதாவது கார்ப்பரேட் தனியார் நிறுவனங்களின் சார்பாளராக தன்னை காட்ட ஆரம்பித்துவிட்டது. மக்களின் நலன், மத்தியஸ்தர் என்கிற நடிப்புகளையும்,முகமூடிகளையும், வேஷங்களையும் கலைத்து விட்டது.
உதாரணமாக இதைக் கவனியுங்கள்; அமெரிக்காவுடனான அணு சக்தி உடன்பாட்டிற்காக பதவியை ராஜினாமா செய்யத் தயாராயிருந்த அதே பிரதமர் நாட்டின் பட்டினிப் பிரச்சனைக்காக வாயே திறக்கவில்லை, மாறாக சுப்ரீம் கோர்ட்டை கம்முன்னு கிட என்கிறார். அதே பிரதமர் பல லட்சக்கணக்கான பேர் வேலையை விட்டு விரட்டப் பட்டதை உங்களிடம் சொல்கிறாரில்லை. செப்டம்பர் 2008 லிருந்து பல லட்சக்கணக்கானோர் வேலை இழந்து வருகின்றனர். உங்களுக்கு அந்தப் புள்ளி விவரத்தைத் தருகிறேன்.

இதற்கு பொருளாதாரச் சரிவைத்(Economic Recession) தான் பார்க்கவேண்டும் என்பதில்லை. உலகப் பொருளாதார நெருக்கடிக்கு முன்பே நாம் போவோம். அதிகத் தொழில்வளர்ச்சியடைந்த மஹாரஷ்ட்டிரா மாநிலத்துக்குப் போவோம். அத்வானியின் மாநிலம்; அம்பானி தத்தெடுத்த மாநிலம்; 'யார்ட்ஸ்லி' தத்தெடுத்த மாநிலம். மஹாராஷ்ட்டிராவின் பொருளாதார அறிக்கை என்ன சொல்கிறது என்றால், இந்தியாவின் பணக்கார மாநிலத்தில், இந்தியாவின் தொழில்வளர்ச்சி உச்சமடைந்த மாநிலத்தில், மஹாராஷ்ட்டிராவில், 20 லட்சம் பேர் 2008 பொருளாதாரச் சரிவுக்கு முந்தைய 36 மாதங்களில் வேலை இழந்துள்ளனர். பொருளாதார நெருக்கடிக்கு மூன்று வருடங்களுக்கு முன்பே ஒரு நாளைக்கு 1800 பேர் வேலை இழந்தனர் என்றால் பொருளாதாரச் சரிவுக்குப் பின் எவ்வளவு பேர் வேலை இழந்திருப்பார்கள்? அதையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறது மஹாராஷ்ட்டிர அரசின் அந்த அறிக்கை. தெளிவாக ? அவ்வளவு தெளிவாக இல்லை. பதினோறாம் பக்கத்தின் அடியில் 'ஒரே ஒரு வரியில்' தெளிவாகச் சொல்லியிருக்கிறது. மொத்த வேலைவாய்ப்பு 4.3 கோடியிலிருந்து 4.1 கோடியாக குறைந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறது. அதாவது 20 லட்சம் பேர். அதாவது ஒரு நாளைக்கு 1800 வேலைகள் பறிபோயிருக்கின்றன. இதுதான் இந்தியாவிலேயே தொழில்மயத்தில் முதலிடம் வகிக்கும் மஹாராஷ்ட்டிராவின் கதி. மற்ற மாநிலங்களின் கதி என்ன?  அதற்குள்ளும் போவோம். எதுவோ மிக அடிப்படையான ஒன்று மாறியிருக்கிறது.

உங்களது பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிச் சேனல்களிலும் 45 லட்சம் முதல் 70 லட்சம் வரையிலான வேலை வாய்ப்புகள் 2008லிருந்து பறிபோயுள்ளன என்கிற ரீதியிலான தலைப்புச் செய்திகளை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ஒரு மாநிலத்தில் மட்டும் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் பொருளாதாரச் சரிவு நிகழ்ந்த 2008க்கு முன் இழக்கப்பட்டன என்று நான் சொன்னேன். தொழிலாளர் அமைச்சகம் 2009ல் ஒரு ஆய்வு நடத்தியது. அதில் 2008ன் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் அதாவது அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மட்டும் 5 லட்சம் வேலைகள் இந்தியாவில் பறிபோயிருக்கின்றன. அப்போதைய துணி மற்றும் ஏற்றுமதித் துறை அமைச்சகத்தின் அப்போதைய செயலாளர் திரு. மேனனோ அல்லது திரு. பிள்ளையோ சொன்னார்கள் மே 2009க்குள் 15 லட்சம் வேலை இழப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு என்ன நிகழும் எனப் புரிந்துகொள்ள முயலுங்கள். பாரிய அளவிலான வேலை இழப்புக்கள் புதிதாகப் பசிக் கொடுமையில் தள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஏற்கனவே பட்டினியால் வாடிக்கொண்டிருப்பவர்களுடன் சேர்த்து அதிகரிக்கிறது. சரியா !

எவ்வாறு ஊடகங்கள் இந்த விஷயத்தில் நடந்துகொண்டன? இந்த அரசு இயந்திரத்தின் இந்த மாற்றம், அதன் செயல்பாடு, ஒரு புறம் மிக விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் இன்னொரு புறத்தில் மிகக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் இருந்தது. அரசு தனது லட்சியத்திலிருந்தும், சட்டங்களிலிருந்தும் விலகிப் போய்விட்டது. இந்திய மேல்தட்டு வர்க்கம் அரசை அதன் விடுதலைப் போராட்ட மதிப்புகளிலிருந்தும், அரசியலமைப்பின் சத்தியங்களிலிருந்தும் விலகிப் போக வைத்துவிட்டது. ஊடகமும் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் சொல்வது போல் ஊடகம்(media) தனது மாதிரி உலகில்’(Model Universe) மாறியிருக்கிறது. அதனுடைய மாதிரி உலகம் யாருக்கோ சார்பாக மாறியிருக்கிறது. ஏதாவது மாதத்தின் ஏதாவது நாளில் தொலைக்காட்சியைப் போட்டால், ஏதாவது ஊடகம் தொழிலதிபர்களுக்கு பரிசுகள்வழங்கிக் கொண்டிருக்கிறது. தொழிலதிபர்களுக்கு சான்றிதழ் வழங்கும் இந்த வேலை ஊடகங்களுக்கு ஏன் ?

ஊடகங்கள் சிறந்த பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசளிக்கின்றனவா? சிறந்த செவிலியர்களுக்கு அவர்கள் சேவையைப் பாராட்டி தொடர்ந்து பரிசளிக்கின்றனவா ? அல்லது சிறந்த ஊழியர்களுக்கு ? அல்லது சிறந்த தொழிலாளிகளுக்கு ? இல்லை. ஆனால் ஒவ்வொரு மாதமும் ஏதாவது சேனல் (தொலை ஊடகம்), ஒவ்வொரு சேனலும் ஏதாவது மாதங்களில் யாராவது தொழிலதிபர்களுக்கு பரிசுகள் வழங்கிக் கொண்டே இருக்கிறது. சரி. பரிசளிப்பில் யார் முதலாவதாக வருகிறார்கள் ? ஊடகங்கள் அவர்களுடைய முக்கிய இலக்கை நோக்கி தாழ்மையுடன் வேண்டி இந்தப் பரிசுகளை  ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும். அவ்வளவு பெரியவர்கள் அவர்கள். கடைசியாகப் போன சுற்றில் பரிசை வென்றவர் யார் என்று ஊகிக்க முடிகிறதா ? முகேஷ் அம்பானி. அவர் ஏன் அங்கே போனார் ஏனென்றால் பரிசுகளை வழங்குபவர் நாட்டின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. முகேஷ் அம்பானி எப்போது வேண்டுமானாலும் நிதியமைச்சரை சந்திக்க முடியும். ஆனால் இங்கே ஒரே மேடையில் 2 மணிநேரம் அவருடன் கழிக்கக் கிடைக்கிறது. எனக்குப் புரியவில்லை. தொழிலுக்கும், தொழிலதிபர்களுக்கும் மகுடங்கள் சூட்டுவதில் நமக்கு என்ன வேலை ?

ஊடகத்தின் அபத்தத்தை விளக்க பின்வரும் எடுத்துக்காட்டு உதவும். நான் இதழியல்(journalism) ஆசிரியர். நான் SEJ (எஸ்.இ.ஜெ) மற்றும் சாபையர்(Sapphires)ல் இதழியல் பாடம் நடத்துகிறேன். ஒருவேளை என்னிடம் இப்பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள், (இவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பொறுப்பு என்னுடையது) வருடம் முழுதும் எனக்கு பரிசுகள் அளிக்கிறார்கள் என்று வையுங்கள்; என்றால் அதில் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தமல்லவா. நீங்கள் என்ன சூழ்நிலை இது ? மாதா மாதம் இந்த மாணவர்கள் தங்களது விடைத்தாளை திருத்தும் ஆசிரியருக்கு பரிசுகள் வழங்குகிறார்களே என்று நினைப்பீர்களா இல்லையா. இது அதைப் போன்ற ஒன்றுதான். கொஞ்சம் வேறுபட்டது. என்ன வேறுபாடென்றால் ஊடகங்கள் நிறுவனங்களுக்கு ஆதரவானவை என்பது அல்ல. ஊடகங்கள் தனியார் கார்ப்பரேட்டுக்கு ஆதரவானவை என்பது அல்ல. ஊடகங்களே நிறுவனங்கள்; ஊடகங்களே தனியார் கார்ப்பரேட்டுகள்; என்பது தான். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் நாம் இந்த கார்ப்பரேட் உலகின் ஒரு அங்கம். இந்த அமைப்பில் முன் வரிசையில் நிற்கும் போர் வீரர்கள் நாம். தனி மனிதன் போக இயலாத இடங்களுக்கு நாம் துணிவுடன் செல்வோம் (முதலில் சாகுபவர்களும் முன்வரிசைக் காரர்களான நாம் தான்).

நான் ஏற்கனவே சொன்னது போன்று அடிப்படையான விஷயங்கள் இடம் பெயர்ந்திருக்கின்றன. பெருவாரியான மக்கள் பங்குபெற்ற நிலப் புரட்சியிலிருந்து பெருவாரியான மக்களின் தற்கொலைகளுக்கு இடம் பெயர்ந்திருக்கிறோம். பட்டினித் தற்கொலைகளினால் அப்போதைய ஆட்சியிலிருந்த அமைச்சர்கள் கூட்டம் போட்டு பட்டினி பற்றியும் உணவுப் பாதுகாப்பு சட்ட முன்வரைவு (Food Security Bill) பற்றியும்  பேச உட்கார்ந்த போது கூட்டத்தில் கூறப்பட்ட முதல் வரி என்ன தெரியுமா ? கூட்டக் குறிப்புகளில் அது பதியப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் விவாதங்கள் மிக்க பாதுகாப்பு ரகசியங்கள் கொண்டது. வெளியிடப் படக்கூடாதது என சிவப்பு நாடா போடப்பட்டது. ஆனால் இந்த நாட்டின் சிறந்த மற்றும் விரும்பத்தக்க விஷயங்களிலொன்று என்னவென்றால் ரகசியம் என்று குறியிடப்பட்ட ஒரு ஆவணம் 5 நிமிடங்கள் கழித்து எல்லோருக்கும் கிடைக்கும். இது இந்தியாவின் ஜனநாயகத்தின் பலங்களில் ஒன்று என்று நான் கருதுகிறேன். கசிவுகளுக்கே என் ஓட்டு.

சரி. இந்தக் கூட்டக் குறிப்பின் முதல் வரி என்ன? அந்த முதல் வரி சொல்கிறது முன்மொழியப்பட்டிருக்கும் சட்ட வரைவு உணவுப் பாதுகாப்பிற்கான சட்ட வரைவாகும். இது இன்னும் பெரிய பிரச்சனையான ஊட்ட உணவுப் பாதுகாப்புடன் தொடர்புடையது அல்ல. நான் விளையாட்டிற்காகச் சொல்லவில்லை. இந்த ஆவணம் இணையதளத்தில் கிடைக்கிறது; நீங்கள் விரும்பினால் சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஊட்ட உணவுப் பாதுகாப்பு பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. அதாவது உங்களுக்கு 2100 கலோரிகள் கல்லோ, மண்ணோ கிடைத்தால் போதும். அதில் ஊட்டச் சத்து இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. அதிகாரம் நிரம்பிய நிபுணர்கள் கொண்ட அமைச்சர்கள் குழு உங்களிடம் எழுத்துபூர்வமாகச் சொல்வது என்னவென்றால், அவர்களுடைய விவாதத்தில் முதலில் அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டது என்னவென்றால் இது வெறும் உணவுப் பாதுகாப்பு தான் ஊட்டஉணவுப் பாதுகாப்பு அல்ல என்பதை. உணவுப் பாதுகாப்பு பற்றிய சட்ட வரைவின் விவாதம் இந்த லட்சணத்தில் தான் ஆரம்பித்திருக்கிறது.

அந்த அமைச்சர்களில் ஒரு கணவானை நான் பத்திரிக்கையாளராக எனது 30 வருட அனுபவத்தில் பல முறை பேட்டி கண்டிருக்கிறேன். நானோ அல்லது அவரோ அவரைப் பேட்டி காணும் அந்த துரதிருஷ்டமான நிகழ்வை 26 வருடங்களாக அனுபவித்திருக்கிறோம். அக்கூட்டத்தில் குறிப்பில் இடம் பெறாத (off the record) கருத்துக்களாக அவர் சொன்னது இது: என்ன இது பசி, பட்டினி என்று பேசிக்கொண்டு ? இந்தியா எங்கேயோ முன்னேறிப் போய்விட்டது. என்னுடைய தொகுதிக்கு வாருங்கள்; வந்து யாராவது பசியாயிருக்கிறார்களா என்று எனக்கு காட்டுங்கள். மஹாராஷ்ட்ராவில் உள்ள 'புனே' தான் அவருடைய தொகுதி. அங்கு இருக்கும் மூன்று தாலுக்காக்களில் தான் அதிகபட்ச BPM அட்டைகள் (மொழி பெயர்ப்பில் தவறு இருக்கலாம் மொ.ர்) உள்ளன. ஏனென்றால் அவர் மிகச் சக்தி வாய்ந்த அரசியல்வாதி அவரால் தொகுதிக்கு அதிகபட்ச BPM அட்டைகளைக் கொண்டு வர முடியும். நாம் இப்போது பசி என்றால் என்ன?’ என்கிற அவரது கேள்விக்குப் பதிலளிக்க முயல்வோம்.

பசி என்பது உணவு நெருக்கடியா? பசி என்பது வெறும் ஏட்டு விவாதமா? சரி. அப்படியே பசியை நடைமுறையில் இல்லாத ஏட்டு விவாதமாகக் கொண்டால் கூட அதன் முடிவுகள் ஏமாற்றமளிப்பவையே. இதை அளவு ரீதியாக, புள்ளி விவரக் கணக்குகள் கொண்டு பார்த்தாலும் முடிவுகள் ஏமாற்றமளிப்பவையே. நண்பர்களே UPA(United Progressive Alliance) கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த 4 வருடங்களுக்கு நமக்கு பசி பற்றிய புள்ளி விவரத் தகவல்கள் உள்ளது. அதாவது 2005, 2006, 2007 மற்றும் 2008 வருடங்களை நான் எடுத்துக் கொள்கிறேன். 2004 ஐ ஏன் எடுக்கவில்லை ? ஏனென்றால் அது தேர்தல் நடந்த வருடம்; பாதி NDA(National Democratic Alliance) பாதி UPA ஆண்டது. எனவே கடந்த நான்கு வருட UPA அரசின் கணக்கீடுகளை மட்டும் கொள்வோம். சராசரியாக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு கிடைக்கக் கூடிய உணவு தானியங்களின் அளவு என்ன ? 436 கிராம்கள் உணவு தானியங்கள், பருப்பு வகைகள் எல்லாம் சேர்த்து. ஒரு நபருக்கு. ஒரு நாளைக்கு. வெறும் 436 கிராம்கள். இவை தான் தனி நபருக்கு ஒரு நாளைக்கு இந்தியாவில் கிடைக்கும் உணவு அளவின் சராசரி. இதுவே ஒரு அவமானத்தை உண்டாக்கும் புள்ளி விவரம்.

1991 ல், பொருளாதாரச் சீர்திருத்தம் ஆரம்பித்த போது, ஒவ்வொரு இந்தியரின் தனி நபர் உணவு கிடைக்கும் அளவு 510 கிராம்கள். 2005 முதல் 2008 வரையிலான நான்கு வருட சராசரி அளவு 436 கிராம்கள். இது 50 வருடங்களுக்கு முந்தைய உணவு கிடைக்கும் அளவை விட மோசமானது. 50 வருடங்களுக்கு முந்தைய நிலை என்ன ? 1955, 1956, 1957 மற்றும் 1958. அந்த நான்கு வருடங்களுக்கான தனி நபரின் ஒரு நாளைய உணவு சராசரி 440 கிராம்கள். இந்த 4 கிராம்கள் வித்தியாசமானது உண்மையில் பல லட்சம் டன்கள் உணவு தானியங்கள் வித்தியாசத்தைக் குறிக்கிறது. இதை நன்கு புரிந்து கொள்ளுங்கள். இது குழப்பமாக இருக்கிறதா ? தனிநபர் ஒரு நாளைய உணவு தானியத்தில் ஒரு நபருக்கு 4 கிராம்  X    365 நாட்கள்   X    110 கோடி இந்தியர்கள். இம்மூன்றையும் பெருக்கினால் எத்தனை டன்கள் வருமோ அவ்வளவு வித்தியாசம். 1955 ல் 2008 ஐ விட இத்தனை லட்சம் டன்கள் அதிகம் விளைவிக்கப்பட்டிருக்கிறது. 2008 ல்  அமெரிக்காவுடன் போட்ட அணு ஒப்பந்தத்தால் சூப்பர் பவர் (Super Power) ஆகி இந்தியா ஒளிர்கிற நேரத்தில் தான், அதன் குடிமகன்கள் 1955 1958 களைக் காட்டிலும் குறைந்த உணவு தானியங்களே தினமும் கிடைக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. 1950 களில் இந்தியா காலனியாதிக்கத்திலிருந்து மீண்டு 10 15 ஆண்டுகள் முன் செல்லும் அதே வேளையில் தான் பிரித்தானியர்கள் காலத்தில் உருவாக்கிய பஞ்சங்களின் விளைவுகளையும், 1942 44 ல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் உட்பட சந்தித்தது.

அப்படியிருந்தும் 1955 58 ல் இந்தியாவின் செயல் திறன் நன்றாக இருந்தது. இந்திய அரசின் வருடாந்திர வரவு-செலவு திட்ட அறிக்கைகளிலிருந்தும் (Annual Budget Report), பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வுகளிலிருந்தும் மேற்கூறிய புள்ளி விவரங்களை நீங்கள் எடுக்கலாம். A – 17 என்ற பெயருடைய ஒரு அட்டவணை இருக்கிறது. அதைப் பாருங்கள். அதில் எல்லாம் இருக்கிறது. எனவே பசியை புள்ளி விவர, அளவுகளில் அளந்தாலும் எண்கள் ஏமாற்றமளிக்கின்றன. 510 கிராம்கள் ஒரு நாளைக்கு 1991ல். 422 கிராம்கள் ஒரு நாளைக்கு 2006ல். இப்போது 432 கிராம்கள் ஒரு நாளைக்கு 2008ல்.

திரும்பவும் ஏட்டு விவாதத்திற்கே வருவோம். பசியென்பது என்ன ? அதே நான்கு வருடங்களில் 2005 முதல் 2008 முடிய வறுமையை ஆய்வு செய்ய அரசு நியமித்த மூன்று குழுக்கள் ஆய்வு செய்து அறிக்கைகள் தந்துள்ளன. அக்குழுக்கள் டாக்டர்.டெண்டுல்கர் குழு, N.C.  சக்சேனா தலைமையிலான பி.பி.எல் நிபுணர் குழு(BPL Committee) மற்றும் முறைசாரா தொழில்களுக்கான தேசிய ஆணைக் குழு(National Commission for Enterprises in unorganized sector). மூன்று வேறுபட்ட குழுக்கள்; மூன்று வேறுபட்ட சித்தாந்தப் பார்வைகள்; ஆனால் மூன்று குழுக்களும் ஒரே முடிவிற்கு வந்தனர். ஒவ்வொரு ஆணையமும் கிராமப்புற வறுமை’(Rural Poverty) அளவீட்டை இந்திய அரசின் தற்போதைய அளவீடுகளிலிருந்து மிக அதிகமாக உயர்த்தியே குறித்தன.
இருப்பதிலேயே குறைந்த பட்ச அளவாக வலதுசாரி சிந்தனை கொண்ட, பழமைவாத டெண்டுல்கரின் அறிக்கையில் கிராமப்புற வறுமையை 42% என்று குறித்தார். நான் உறுப்பினராக அங்கம் வகித்த பி.பி.எல் நிபுணர் குழு 50% க்கு மேல் குறித்தது. நான் 50% என்பதை ஒப்புக்கொள்ளவில்லை. எனது விலக்க அறிக்கை குறிப்பில் இதை நீங்கள் பார்க்கலாம். அது பின்னிணைப்பு I ல் குறிக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக தேசிய தொழில் நிறுவனங்களுக்கான ஆணையத்தின் அறிக்கயை நீங்களே இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த அறிக்கையின் முதல் பக்கத்தில் சொல்லப்படுவது; 8.36 கோடிப் பேர் ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் கீழே தான் செலவு செய்து உயிர்வாழ்கிறார்கள். ஆனால் அது அவர்களை ஏழை என்றாக்கிவிடாது. இந்திய அதிகார வர்க்கத்தின், இந்திய கல்வியாளர் குழுமம் மற்றும் அரசியல்வாதிகளின் புத்திசாலித்தனம் என்னவெனில், நீங்கள் ஒரு நாளைக்கு 20 ரூபாய் செலவழிக்கிறீர்கள் என்றால் நீங்கள் ஏழை இல்லை. வறுமைக் கோட்டிற்கு(Poverty Line) கீழே வாழும் ஏழையாகத் தகுதி பெற நீங்கள் வாழும் இடத்தைப் பொறுத்து, நீங்கள் ஒரு நாளைக்கு 11 ரூபாய்க்கும் கீழே அல்லது 8 ரூபாய்தான் செலவழிக்க வேண்டும்.  நீங்கள் சென்னை வாசியாக இருந்தால் நீங்கள் ஒரு நாளைக்கு 17 ரூபாய் செலவழிக்க முடிந்தால், இத்தொகைக்கு ஒரு தண்ணீர் பாட்டிலும், ஒரு டீயும் வாங்கலாம், ஒரு நாளைக்கு ஒரு பாட்டில் தண்ணீரும் ஒரு டீயும் குடிக்க முடிந்தாலே நீங்கள் ஏழைகள். இந்திய அரசின் கூற்றுப்படி, சென்னையில், நீங்கள் ஒரு நாளைக்கு 17 ரூபாய் செலவழிக்க முடிந்தாலே நீங்கள் ஏழைகள் இல்லை. 17 ரூபாய் தான் வெட்டுப்புள்ளி.

ஆனால் இந்த மூன்று குழுக்களும் வறுமை மிக அதிகமாக, அதிலும் கிராமப்புற வறுமை தோராய அளவீட்டைக் காட்டிலும் மிக அதிகம்  என்பதில் உடன்படுகின்றன. அர்ஜூன் சென் குப்தாவின் அறிக்கை 8.36 கோடி இந்தியர்கள் அதிகபட்சம் 20ரூபாய் ஒரு நாளைக்கு செலவு செய்ய இயலுபவர்களாக இருக்கின்றனர் என்கிறது. யார் இந்த மக்கள்? தலித்துகளிலும், ஆதிவாசிகளிலும்  88%  பேர் ஒரு நாளைக்கு 20 ரூபாய் செலவழிக்கும் மக்கட் பிரிவில் வருகிறார்கள். முஸ்லீம்களில் 85% பேர் இந்த 8.36 கோடியில் உள்ளனர். நாட்டின் சாதி, வர்க்க மற்றும் மத முகங்களை வறுமையிலும் நீங்கள் பார்க்கலாம்.

எவ்வளவு நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசியதை பார்த்திருக்கிறீர்கள்? இந்த அறிக்கை வெளிவந்த போது இதைப் பற்றிக் குறிப்பிட்ட, அப்போதிருந்து பதவியை இழந்த, ஒரே மனிதர் நமது ஐக்கிய மந்திரி சபையின் அமைச்சர் (union cabinet minister), மணிசங்கர் ஐயர். அவர்தான் இதைப் பற்றி முதன் முதலாக 15 ஆகஸ்ட் 2007ல் எழுதினார். எனக்கு அப்போது இநத் அறிக்கை வந்தது பற்றி தெரிந்திருக்கவில்லை. பிரதமர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி கையெழுத்திட்டிருக்கிறார். மணிசங்கர் ஐயர் மந்திரி சபை அமைச்சர் என்பதால் அந்த அறிக்கையைப் பார்த்து அதைப் பற்றி ஆகஸ்ட் 15ல் தி இந்து பத்திரிக்கையில் எழுதினார். அடுத்த வாரம் நான் எழுதினேன். எவ்வளவு பத்திரிக்கைகளில் இதைப் பற்றி ஏதாவது விவாதங்கள் நடந்ததை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் ?

 எனவே, மறுபடியும், நாம் பேசிக் கொண்டிருக்கும் இந்தப் பசி என்பது என்ன? இதை இப்போது ஏட்டு விவாதமாகவே பார்க்க முயற்சி செய்கிறேன். மக்களின் அனுபவங்களிலிருந்து இதைப் பார்க்க முயற்சிக்கிறேன். பசி என்பது நான் 49 டிகிரி வெயிலில் தெலுங்கானாவில் நிற்கும் போது, தெலுங்கானாவின் கிராமங்களில் செய்தி தவறாகப் பரவுகிறது. நான் ரொம்ப செல்வாக்கு நிறைந்த ஆசாமி என்றும் நான் அரசிடம் சொன்னால் அது நடக்கும் என்று. இது மிகப் பெரிய மாயை. ஆனால் மக்களின் நிராதரவான நிலையில் அக்கிராமத்தின் தாய்மார்கள் எல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். இது நடந்தது மே 28 அல்லது மே 29. நலகொண்டா மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளிலும் உள்ள வெப்பத்தை நீங்கள் நினைத்துப் பாருங்கள். பசி என்பது என்னவென்றால் அங்கிருந்த குழந்தைகளின் தாய்மார்கள் அனைவரும் வெயிலின் வெப்ப அலை’(heat wave) உச்சத்திலிருக்கும் வேளையில் சார், தயவு செய்து உங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அரசை கோடை விடுமுறையிலும் பள்ளியைத் திறக்கச் செய்யுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டனர். அரசு பள்ளிகளை கோடையில் சீக்கிரமாகவே மூடிவிடுகிறது ஏனெனில் குழந்தைகள் வெயில் தாக்கு’(heat stroke) காரணமாக இறந்து விடுகின்றன. ஆனால் அந்தக் குழந்தைகளின் அன்னையரோ பள்ளிகளைத் திறக்க விரும்புகின்றனர் ஏனென்றால் குழந்தைக்கு ஒரு வேளை உணவு உத்திரவாதமாகக் கிடைக்குமில்லையா ! குழந்தைக்கு நல்ல சாப்பாடு ஒருவேளைக்கு உத்திரவாதம். அவர்கள் குழந்தை வெயில் தாக்கு காரணமாக இறக்கும் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராகின்றனர். ஆனால் அது பசியினால் மெல்ல மெல்லச் சாவதை பார்ப்பதற்கு அவர்கள் தயாராயில்லை. இது தான் பசி. பட்டினி.

பசி என்பது பள்ளி ஆசிரியர்கள் என்னிடம் சொன்னது;  இதை என்னிடம் சொன்ன முதல் ஆசிரியர் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். அன்றிலிருந்து பல பள்ளி ஆசிரியர்கள் என்னிடம் இதையே சொல்லியிருக்கிறார்கள்; இதில் மும்பாயின் நகர விளிம்புகளில் உள்ள பள்ளிக்கூடங்களின் ஆசிரியர்களும் உண்டு. பசி என்பது என்ன ? பசி என்பது பள்ளி ஆசிரியர்கள் என்னிடம் சார்.. நீ்ங்க கொஞ்சம் பார்த்துக்கோங்க சார்.. கலெக்டர் கிட்டே சொல்லுங்க சார்... திங்கட்கிழமை மதிய உணவு அளவை இரு மடங்காக்கச் சொல்லுங்கள் சார்.. என்று கேட்பது. ஏன் திங்கட்கிழமை மதிய உணவு மட்டும் இரு மடங்காக்கபட வேண்டும் ? மும்பாயில், முகேஷ் அம்பானியின் நகரத்தில், ஆசிரியர்கள் சொல்கிறார்கள் சார்... திங்கட்கிழமை மதிய உணவு அளவை இரு மடங்காக்கச் சொல்லுங்கள். தெலுங்கானா, ராம்நாதபுரம், மும்பாய் என்று எல்லா இடங்களிலும் ஆசிரியர்கள் சொல்கிறார்கள் திங்கட்கிழமை மதிய உணவு அளவை இரு மடங்காக்க வேண்டும் என்று. ஏன் ? ஏனெனில் எந்தப் பள்ளி ஆசிரியரும் மத்தியானம் 1 மணிக்கு முன் வகுப்பு நடத்த முடிவதில்லை. ஏனெனில் குழந்தையால் பாடத்தைக் கவனிக்க இயலாது ஏனென்றால் குழந்தை மூன்று நாட்களாகப் பட்டினியாய் இருந்திருக்கும். கடைசியாய் குழந்தைக்குக் கிடைத்த நல்ல உணவு வெள்ளிக் கிழமை மதியம் 12 மணியாய் இருந்திருக்கும். வீட்டில் குழந்தை சாப்பிட கிட்டத்தட்ட ஒன்றும் கிடைப்பதில்லை. வயிறு எரியும். இதனால் திங்கட்கிழமை காலை வேளைகளில் குழந்தைகள் பாடத்தை கவனிப்பது சிரமமாயுள்ளது. எந்த ஆசிரியரும் திங்கட்கிழமை மதியம் 1 மணி வரை பாடம் எடுக்க விரும்புவதில்லை. ஏனென்றால். அதன் பின் குழந்தை மதிய உணவு சாப்பிட்டுவிடும். எனவே அவர்கள் திங்கட்கிழமை மதிய உணவு வயிறு முட்ட ஆகும் படி, இருமடங்காக்கப்பட வேண்டும் என்கின்றனர் ஏனெனில் குழந்தைகள் சனி, ஞாயிறுகளில் வீட்டில் கிட்டத்தட்ட எதுவுமே சாப்பிடாத நிலை தான். இதைக் கேட்டபோது நான் திடுக்கிட்டு உறைந்துதான் போயிருந்தேன், சில மாதங்களுக்கு முந்தைய எனது வெளிநாட்டுப் பயணம் வரை. சில மாதங்களுக்கு முன்பு உலகின் செழிப்பான நாடுகளில் ஒன்றான பின்லாந்துக்குச் (Finland) சென்றிருந்தேன்.  மனிதர்களின் வளர்ச்சிக் குறியீட்டு எண்ணில் முதலிடத்தில் உள்ள நாடு இது. பின்லாந்தின் பல மாவட்டங்களில் திங்கட்கிழமை மதிய உணவுதான் பலமானது. ஏனெனில் அங்கு கூட தங்கள் குழந்தைகள் வார இறுதியில் குறைவாய்ச் சாப்பிடும் ஏழை மக்கள் வாழ்கின்றனர் என்பதால். தெலுங்கானாவில் உள்ள குழந்தைகளைக் கேளுங்கள்; அவர்களின் மதிய உணவு வீட்டில் சாப்பிடும் உணவை விட நன்றாகவும், சத்து மிகுந்ததாகவும் இருக்கிறது என்று சொல்வார்கள்    

நாம் எங்கே போயிருக்கிறோம் ?  என்ன செய்திருக்கிறோம்? சுய உதவிக் குழு’(SHG – Self Help Groups) உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட அந்த மதிய உணவை ரத்து செய்து விட்டு அதை கார்ப்பரேட் உலகினர் பாக்கெட்டாகத் தயார் செய்ய கொடுத்துவிட்டோம்.   முன்பே தயார் செய்யப்பட்ட பாக்கெட்டுகளாக மதிய உணவை மாற்றியதன் மூலம் ஏழை தொழிலாளர்களான சுய உதவிக் குழுவினருக்கு சென்ற பணத்தைக் கூட அம்பானிக்கும், பிரிட்டானியாவிற்கும் அல்லது யாரோ ஒரு கம்பெனிக்கு திருப்பி விட்டுள்ளோம். இது தான் பசி. நீங்கள் அங்கு போய் அந்த உணவின் சாம்பார் தண்ணீராய் இருப்பதைப் பாருங்கள். அப்போது புரியும் பசி என்றால் என்னவென்று. பசி என்பது எதிர்பார்க்காத விலை உயர்வும் அதனால் துவரம் பருப்பின் விலை கிலோ 100 ரூபாய் என்று ஆனதும். அது தான் பசி. 2005 லிருந்து 2008 வரையிலான இந்த எதிர்பாராத விலை உயர்வு தான் 1973-74 க்குப் பின் நிகழ்ந்த மிக மோசமான விலைவாசி உயர்வாகும்.

சில மாதங்களுக்கு ஒரு முறை எங்கள் கட்டிடத்தை சுத்தம் செய்ய வரும் பெண்ணுடன் இந்த விலை ஒப்பிடுதலை செய்து கொள்வேன். அப்பெண்மணியின் செலவுகள் என்ன?  என்னுடைய செலவுகள் என்ன ? அப்போது உங்களால் வர்க்கப் பிரிவினையை உண்மையாகவே புரிந்து கொள்ள முடியும். எனது செலவுக் கணக்குகளையும், அவரது செலவுக் கணக்குகளையும் நான் பார்த்ததில், எனக்கு முக்கியமான பொருட்கள், எனக்கு வசதி தரும் விஷயங்களும், விலை குறைந்து போயுள்ளன. ராய்காட் என்கிற கிராமத்திலிருந்து வரும் ஏழை விவசாயப் பெண்ணான அவருக்கு வேண்டிய விஷயங்கள் அனைத்தின் விலையும் அப்படியாக வில்லை. அறுவடைக் காலங்களில் அவரது நிலத்திலிருந்து எங்களுக்கு அரிசி கொண்டுவருவார். அவரது நிலம் மட்டுமே அவரது குடும்பத்தை நடத்த உதவ முடியாது என்பதால் அவர் மும்பையில் வீட்டு வேலைகளையும் செய்கிறார். அவர் வேலை செய்யும் எல்லா வீடுகளுக்கும் அவருடைய வயலிலிருந்து சிறிய அரிசிப் பைகளில் அரிசி கொண்டு வந்து தருவார். அவருடைய வாழ்க்கையில் இப்போது 300 முதல் 500 சதவீதம் செலவீனம் உயர்ந்திருக்கிறது.

எனக்கு, கம்ப்யூட்டர்கள்(கணிணிகள்); கை பேசிகள்(செல்போன்கள்); இன்றைக்கு எனது செல்போன் நான் முதன் முதலில் வாங்கிய கம்ப்யூட்டரை விட 300-400 மடங்கு ஏன் 400-500 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. 1991 ல், நான் வாங்கிய
52000 ரூபாய் விலையுள்ள PC AT கம்ப்யூட்டர், 20 MB ஹார்ட் டிஸ்க்(வன் வட்டு) மட்டுமே கொண்டது. இன்றைக்கு 52000 ரூபாய்க்கு நீங்கள் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரே வாங்கலாம், 1 TB(=1000000 MB) சேமிக்கும் வன் வட்டும், 8 GB RAM, மற்றும் ஒரு 21 இன்ச் மானிட்டர் திரையுடன். சரியா ?  இது எனது தேவையை விட பல மடங்கு அதிகம். எனது இன்றைய கை பேசி சில வருடங்களுக்கு முன்பு நான் வைத்திருந்த கம்ப்யூட்டரை விட பல மடங்குகள் சக்தியுள்ளது. அப்புறம் கார்கள்; 1980களில் எங்களது பத்திரிக்கையாளர்கள் சங்கத்தினர் 200 ரூபாய் பயணச் சலுகை பெறுவதற்காக வேலை நிறுத்தம் செய்திருக்கிறோம். அன்று வேலை நிறத்தம் செய்த எங்களுக்கு இன்று அலுவலகக் கார் கொடுக்கபட்டிருக்கிறது. சில வேளைகளில் கார் ஓட்டுனர்களும் கூடக் கிடைப்பார்கள். எங்களுக்கு கார் தருவார்கள்; எங்கள் கார் ஓட்டுனருக்கு 4000 ரூபாய் சம்பளமும் தருவார்கள். நாங்கள் 250 ரூபாய்க்கு பயணப் படிக்கு வேலை நிறுத்தம் செய்த ஒரு காலமும் இருந்திருக்கிறது.

அப்பெண்மணி, அவர் வீட்டு வேலைக்கு வந்த காலத்தில் பம்பாயில் குறைந்த பட்சம் பேருந்துக் கட்டணம் 5 பைசா அல்லது 10 பைசா. இன்று அவர் பேருந்தில் ஏறினாலே 5 முதல் 10 ரூபாய் செலவழித்தாக வேண்டும். அவருடைய செலவு எத்தனை மடங்காயிருக்கிறது என்று பாருங்கள். ஏ.சி.(குளிர் சாதன வசதி), கம்ப்யூட்டர்கள், கைபேசிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், இணையம் (Internet) இவை எல்லாவற்றிலும் விலை ஒன்றுமேயில்லை என்கிற அளவுக்கு வீழ்ந்துள்ளது; அது இங்கிருக்கும் பார்வையாளர்கள் எல்லோருக்கும் ரொம்ப வசதியானது. அந்தப் பெண்மணிக்கோ, அவருடைய முக்கியமான தேவைகள் அனைத்தும்; மின்சாரம், தண்ணீர், உணவு எல்லாம் 300 முதல் 500 சதவீதம் உயர்ந்திருக்கின்றன. அந்தப் பெண்மணிக்கு ரிலையன்ஸிடமிருந்து 700 ரூபாய் மின் கட்டணத் தொகை என்று மின் உபயோகச்சீட்டு(Electricity Bill) வருகிறது.  
அவர் வீட்டில் இரண்டு பல்புகள்(மற்ற சில அத்தியாவசிய உபகரணங்களுடன்) இருக்கின்றன. எவ்வளவு மாறியிருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். நடுத்தர வர்க்கத்தினரை எதிர்கொள்ளும் சவால் இது தான்; நடுத்தரவர்க்கத்தினரான நாம்  நமது வசதிகளினால் நம்மை உணர்வேயில்லாமல் செய்து கொள்வதையும் மற்ற பிரச்சனைகளிலிருந்து நம்மைச் சுயநலமாகத் துண்டித்துக் கொள்வதையும் கடந்து நிற்பது. இது மிகப் பெரிய சவால். தொழிற் சங்கங்களில் அங்கம் வகிக்கும் உங்களைப் போன்ற பெரும்பான்மையானோருக்கு நான் சொல்வதெல்லாம் உங்களுக்கும் எனக்கும் இருக்கும் தார்மீக உணர்வின் பெரிய சவால் இது என்பதே.

பசி என்பது தான் என்ன? 74 வயது ஆண்களும் 65 வயது விதவைப் பெண்களும் NREGS(National Rural Employment Guarantee Scheme- தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் - தே.ஊ.வே.தி) திட்ட வேலைக் களத்தில்(Site), 47 டிகிர சென்டிகிரேட் வெயிலில் வந்து, கல் உடைக்கும் வேலை கேட்டு  கெஞ்சி நிற்பது. அவர்களில் சில பேரால் நேராக நிமிர்ந்து நிற்பதே கடினம். நிற்பதற்கே இயலாத அவர்கள் தே.ஊ.வே.தி அதிகாரியிடம் வந்து சார், எங்களுக்கு ஏதாவது வேலை கொடுங்கள்”( தெலுங்கில் - ஆ நூறு ரூவாக்கு பணி யேந்தி சார் - அர்த்தம்: நூறு ரூவாய்க்கு வேலை கொடுங்கள் சார்) என்றபடி கெஞ்சிக் கொண்டு நிற்கிறார்கள். ஏன் ? விலைவாசி உயர்வு அவர்களை அழித்துவிட்டது.

ஆந்திர மாநிலத்தில், நலகொண்டா மாவட்டத்தில், நாங்கள் ஒருவரை பேட்டி கண்டோம்;  சரியோ தவறோ பேட்டி கண்டதால் அவரை பிரபலமாக்கி விட்டேன் நான்; அதன் மூலம் அவருக்கு பெரும் சித்ரவதைகளே பரிசாகக் கிடைத்தன. அவர் பெயர் கடசு ராமுலு. 74 வயது. 47 டிகிரி சுடும் வெயிலில் ஒரு தே.ஊ.வே.தி வேலைக் களத்தில் அவரைக் கண்டோம். அவர் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவரை நீங்கள் ஏன் வேலைக்குப் போகிறீர்கள் என்று கேட்டோம். அவர் சொன்னார் எனது ஓய்வூதியம்(pension) 200 ரூபாய்.  துவரம் பருப்பு கிலோ 100 ரூபாய். 200 ரூபாய் ஓய்வூதியத்தில் நான் என்ன சாப்பிடுவது ஐயா?”. டாக்டர் மன்மோகன் சிங் அவர்களே! அது தான் பசி. அதாவது 74 வயது மனிதன் கல்லுடைக்கப் போவது.

இத்துடன் நீண்ட வரிசையில் நிற்கும் வயதான பெண்மணிகளையும், விதவைகளையும் நீங்கள் பார்க்கலாம். தே.ஊ.வே.தி தனித்த, விதவையான பெண்களுக்கு வேலை தர விரும்புவதில்லை. நீங்கள் குழுவாகத் தான் வரவேண்டும். ஒரு விதவைப் பெண் அவள் வாழும் கிராமத்திலேயே அன்னிய மனுஷி தான். அவளுடைய அம்மாவின் கிராமம் தான் அவளது கிராமம். இது அவளது கிராமம் கிடையாது. விதவையான அவளுக்கு என்று ஒரு கூட்டம்(குப்பா) கிடையாது. அதனால் தே.ஊ.வே.தில் வேலையும் கிடைக்காது. எந்த தே.ஊ.வே.தி வேலைக் களத்திற்குச் சென்றாலும் மிக வயதான பெண்கள் 10-12பேர் வரிசையில் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். சில பேர் அதிகாரியின் பின்னாலே சென்றபடி வேலை தாருங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.ஐயா.. எங்களால் வேலை செய்ய முடியும் ஐயா.. எங்களால் வேலை செய்ய முடியும் என்று கெஞ்சுவார்கள். கொஞ்சம் இரக்க சுபாவம் கொண்ட அதிகாரிகள் அவர்களுக்கு மண்ணில் தண்ணீர் ஊற்றும் வேலையைக் கொடுப்பார்கள்; தண்ணீர் மண் மேல் விட்டால் குழி தோண்டும் போது இலகுவாக இருக்கும். இது தான் பசி.

பசி என்பது என்ன? ராயலசீமாவில் அனந்தப்பூர் மாவட்டத்தில் தே.ஊ.வே.தில் வேலை பார்ப்பவர்களை ஆய்வு செய்தபோது் அவர்களில்  5ல் ஒரு பங்குப் பேர் 60 வயதுக்கு மேற்ப்பட்டவர்களாக இருந்தனர். குடும்பத்தில் பசிக் கொடுமை வளரும் போது, உணவுச்சட்டியில் உணவு குறையும் போது வாழ்வின் விளிம்பிற்கு முதலில் தள்ளப்படுவது யார் என்று நினைக்கிறீர்கள்? பெண்கள்; வயதானவர்கள்; குறிப்பாக விதவையான மூதாட்டிகள்; அவர்கள் ஒதுக்கப்படுவதன் காரணம் அவர்கள் வேலை, உற்பத்தி செய்ய லாயக்கற்றவர்களாக கருதப்படுவதால். அவர்கள் ஆண் செய்யும் வேலையைப் போல் இருமடங்கு வேலை செய்பவர்களாக இருந்தாலும் கருத்தளவிலும், சமூகப் பார்வையிலும் பெண்கள் கீழாகவே மதிப்பிடப் படுகிறார்கள். நாட்டின் 67% விவசாய வேலையைப் பெண்களே முடித்துக் கொடுக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் வேலை செய்யும் திறனற்றவர்கள். எனவே, விலைகள் உயரும் போது, உணவுத் தட்டுப்பாடு வரும் போது, வீட்டின் உணவுச் சட்டி சுருங்குகிறது. இதில் முதலில் வெளியேற்றப்படுபவர்கள் விதவை மூதாட்டிகளும், வயதானவர்களும். வீட்டின் பெண்கள் குறைவாக, மேலும் குறைவாக, மேலும் மேலும் குறைவாக உணவை சாப்பிட நேரும் துயரம் நடக்கிறது. மாண்புமிகு பிரதமர் அவர்களே... அது தான்... அது தான் பசி.

பசி என்பது பால் உற்பத்தி செய்யும் பால் பண்ணைகளில் வேலை செய்யும் குழந்தைகள் ஒரு சொட்டு பால் கூட குடிப்பதில்லை என்பது. விதர்பா மாவட்டம் முழுதும், மத்திய பிரதேசம் முழுதும் நான் பண்ணை வீடுகளைச் சென்று பார்த்திருக்கிறேன். 90களில் ஒரு பண்ணை வீட்டுக்கு நீங்கள் சென்றால் உங்களுக்கு விருந்தோம்பலாக பரிமாறப்படுவது என்ன தெரியுமா? இந்த பத்தாண்டுத் தொடக்கம் வரை(2001) மக்கள் உங்களுக்கு ஒரு குவளை நிறைய பால் தந்து உபசரிப்பார்கள். பிறகு 2003-2004 களில் அவர்கள் சாய்’(டீ / தேனீர்) கொடுக்க ஆரம்பித்தனர். ஏனெனில் தேனீருக்கு பால் குறைவாகத் தான் தேவைப்படும். இப்போது அவர்கள் விருந்தினருக்கு வெறும் கருப்புத் தேனீர்’(black chai - tea)தான் கொடுக்கிறார்கள். இதற்கு பாலே தேவையில்லை. ஏனென்றால் அந்த வீட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு துளி பாலும் சந்தையில் விற்கப்பட வேண்டும்; அப்போது தான் வீட்டிற்குத் தேவையான மற்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும். இந்தக் கோமாளிகள், பொருளாதார வல்லுநர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் கோமாளிகள் சொல்கிறார்கள் உற்பத்திப் பொருட்களின் விலை கூடுவதால் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று. அவர்களுக்குத் தெரியாது 77% இந்திய விவசாயிகள் உணவுத் தானியங்களை சந்தையில் வாங்குபவர்களாக இருக்க வேண்டி இருப்பதால் விலை உயர்வு விவசாயிகளையும் மிகப் பாதிக்கும் என்பது.

பெரும்பாலும் தே.ஊ.வே.தியில் பயன் பெறுவது விவசாயக் கூலிகள் இல்லை. சிறு மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளே. ஏனென்றால் பருவக் காலத்தில் அவர்களுக்கு வயலிலே வேலை இருக்கும். வயலில் வேலை இல்லாத காலத்தில் அவர்கள் தே.ஊ.வே.தி  வேலைக்குச் செல்கிறார்கள். விவசாயக் கூலிகளால் நூறு நாள் வேலையைக் கொண்டு உயிர்பிழைப்பது கடினம் என்பதால் அவர்கள் கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து விடுகிறார்கள். நூறு நாள் போக மீதி 265 நாட்களில் அவர்கள் சாப்பாட்டுக்கு என்னதான் செய்ய முடியும்? நான் வேலை செய்த நாட்களில் பண்ணைகள் என்றாலே பசுக்களும், பாலும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இப்போது தின வேளையில் பால் குடித்தே அறியாத பண்ணை வீட்டுச் சிறுவர்களைக் கொண்ட சந்ததி வளர்ந்து கொண்டிருக்கிறது. அது தான் நண்பர்களே... பசி.

பசி என்பது பிரதமர் அவர்களே, உணவை உற்பத்தி செய்பவர்களுக்கே, விவசாயிகளுக்கே உணவுப் பாதுகாப்பு இல்லாதது. அது தான் பசி. உணவு இறையாண்மை(??) பற்றிய விவாதங்களை நாம் மறந்து விடுவோம்; அது சத்துணவுப் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை விடச் சிக்கலானது. உணவு உற்பத்தியாளர்கள் பட்டினி கிடக்கிறார்களே அது தான் பசி. பசி என்பது லட்சக்கணக்கான விவசாயிகள் உணவுப் பயிரிலிரு்து பணப்பயிருக்கு மாறியது; இந்தப் பயிர் மாற்றத்தின் விளைவாக அவர்கள் செய்யும் தற்கொலைகள்.

பசி என்பது வீழும் விவசாயியின் வருமானங்கள். இன்றைக்கு ஒரு இந்திய விவசாயப் பண்ணை வீட்டின் மாத வருமானம் என்பது 503 ரூபாய்கள். இதில் 60% சாப்பாட்டிற்கே செலவிடப்படுகிறது. சராசரி இந்திய விவசாயப் பண்ணை வீட்டின் மாத வருமானத்தில் சாப்பாட்டிற்கே 60 சதவீதம் செலவழிந்து விடுகிறது. 18%  எரிபொருள், உடை மற்றும் காலணிகளுக்கு. இந்த அளவீடுகள் யாருடையவை?  இந்திய அரசின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 59வது சுற்று -  விவசாய வீடுகளின் சூழ்நிலை அளவீட்டு அறிக்கை(situational assessment report) தரும் தகவல்கள் தான் இவை. பசி என்பது 1991 2002களில் இரட்டிப்பாகி விட்ட விவசாயிகளின் கடன் சுமை. 26% லிருந்து 48.6% வரை எல்லா விவசாயக் குடும்பங்களும் கடன்களில் உழலுகின்றன. அது தான் பசி.     

பசி என்பது ராஜஸ்தானில், மத்தியப் பிரதேஷில், சத்தீஸ்கரில் வசிக்கும் ஆதிவாசிக் குடும்பங்களில், மலைவாழ்க் குடும்பங்களில் வருடா வருடம் நான் காண்பது. ஆதிவாசிக் குடும்பங்கள் பசியை எப்படிச் சமாளிக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? குடும்பத்திற்குப் பகிர்ந்தளிக்கப் போதுமான உணவு அவர்களிடம் இல்லை. எனவே அவர்கள் பசியைப் பகிர்ந்தளிக்கின்றனர். அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களுக்கு தே.ஊ.வே.திக்குச் சென்று வேலை செய்ய தேவையான பலம் உடலில் இல்லை. தே.ஊ.வே.தியின் முரண்பாட்டைப் பாருங்கள். நீங்கள் 9 மணி நேரம் வேலை கேட்கும் நபர்கள் 9 மணி நேரம் கூட உயிர்வாழத் தெம்பில்லாத நோஞ்சான்கள் ஆக வாழ்கின்றனர். பின்னர் நீங்கள் அவர்கள் சரியாக வேலை செய்யாததாகக் கூறி அவர்களுக்குக் குறைவாகக் கூலி கொடுக்கிறீர்கள். தே.ஊ.வே.தியில் வேலை செய்யும் எந்தப் பெண்ணும் 65 ரூபாய்க்கு அதிகமாக வாங்கவே முடியாது. யாருமே நூறு ரூபாயும் வாங்கிவிட முடியாது. 85 ரூபாய் தான் சராசரி அல்லது வாடிக்கை. நீங்கள் இந்த மாதிரி அளவீடுகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். பின்னர் பசியில் வாடுபவர்களையும், நோயுற்றவர்களையும், ஊட்ட உணவின்றி நோஞ்சான்களாய் போனவர்களையும் மிகக் கடினமான வேலைகளைச் செய்யச் சொல்கிறீர்கள். பின்னர் அவர்கள் சரியாக வேலை செய்யாததற்காக அவர்களைத் தண்டிக்கிறீர்கள்.

இந்த ஆதிவாசிகள் என்ன செய்கிறார்கள்? அவர்களுக்கு முழு 100 ரூபாயும் வேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா ? ஒரு நாள் இரண்டு சகோதர்கள் வயிறு முட்டச் சாப்பிடுவார்கள். நன்றாகச் சாப்பிடுவார்கள். சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்வார்கள். அடுத்த நாள் இவர்கள் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடாமல் பட்டினியாய் இருப்பார்கள்; குடும்பத்தில் வேறு இருவர் அன்றைக்கு நன்றாகச் சாப்பிட்டு விட்டு வேலைக்குச் செல்வார்கள். இது பசி இல்லையா ? எனது தொகுதிக்குச் சென்று பாருங்கள். பசியை காட்டுங்கள் என்று கூறும் உணவு மற்றம் விவசாயத்துறை அமைச்சர் என்றாவது சென்று இவர்களைப் பார்த்திருக்கிறாரா? சுப்ரீம் கோர்ட்டை வாயைப் பொத்தச் சொல்லும் உங்கள் பிரதமர் இந்த மாதிரியான பசியை அனுபவித்திருக்கிறாரா? இவர்கள் எல்லாம் கேட்கிறார்கள் நாம் பேசிக் கொண்டிருக்கும் பசி என்பது என்ன என்று. பசி என்பது பசித்திருக்கும் ஒரு சமூகம்; அங்கே நமது இந்திய அரசின் பசி பற்றிய கணக்கீடோ மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு கணக்கீட்டாக இருக்கிறது. இது தான் பசி.
------------------------
பாகம் 2ல் அவரது உரையின் தமிழாக்கத்தின் மீதிப் பகுதி வரும்...  
ஆங்கிலத்தில் இவ்வுரையைப் படிக்க - http://ambedhan.blogspot.com/2010/11/slumdogs-vs-billionaires-p-sainath.html

பாகம் 2 ஐ படிக்க - http://ambedhan.blogspot.com/2011/04/2.html

3 comments:

  1. அற்புதமான கட்டுரை.. எத்தனை எத்தனை விஷயம் புரிய வைத்தது.. ஒவ்வொரு இந்தியரும் படிக்க வேண்டியது..

    என்ன ஒரு அவலம்.?.. 60 வயதுக்கு மேல் இனி அனைவரையும் அரசே கவனித்துக்கொள்ளணும் என சட்டம் வரணும்.. அனைவருக்குமான முதியோர் இல்லம் மிக சிறந்த தரத்தோடு அரசே நடத்தணும் இலவசமாக..

    அங்கே அவர்களால் முடிந்த வேலையை பொழுதுபோக்காக மட்டுமே செய்யணூம்..

    இதை செய்ய தவறினால் முன்னேறிய நாடாக நாம் சொல்லிக்கொள்ள வெட்கப்படவேண்டும்

    ReplyDelete
  2. உணவுத் தட்டுப்பாடு வரும் போது, வீட்டின் உணவுச் சட்டி சுருங்குகிறது. இதில் முதலில் வெளியேற்றப்படுபவர்கள் விதவை மூதாட்டிகளும், வயதானவர்களும். //

    ஹ , அதிக வேலை செய்தாலும் அவதிப்படுவது பெண்கள்தான்.. நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல நாடய்யா இது... வாழ்க..

    ReplyDelete
  3. சுப்ரீம் கோர்ட்டை ‘வாயைப் பொத்தச்’ சொல்லும் உங்கள் பிரதமர் இந்த மாதிரியான பசியை அனுபவித்திருக்கிறாரா? இவர்கள் எல்லாம் கேட்கிறார்கள் நாம் பேசிக் கொண்டிருக்கும் பசி என்பது என்ன என்று. பசி என்பது பசித்திருக்கும் ஒரு சமூகம்; அங்கே நமது இந்திய அரசின் பசி பற்றிய கணக்கீடோ மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு கணக்கீட்டாக இருக்கிறது. இது தான் பசி.//


    திகார் சிறையில் உள்ளவருக்காவது பசித்திருக்க , பசி பற்றி அறிய வாய்ப்புண்டா?....

    இப்படி மக்கள் கொலைப்பட்டினியில் வாழ்வதை விட அனைவரையும் சிறைக்கு அனுப்பி நிம்மதியா 3 வேளை சாப்பாடாவது கொடுக்கலாமே அரசே..

    " அப்ப கூலி வேலை யார் செய்வா?.. "

    " ஓஹ். ஆமால்ல அது வேற இருக்கே..அடிமைகள் வேணுமே நமக்கு.

    கோபமா வருது .. வந்து என்ன செய்ய?..

    ReplyDelete

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.