Monday, January 31, 2011

முத்துக்குமார் - 2 ஆம் ஆண்டு நினைவு.

முத்துக்குமார் - 2 ஆம் ஆண்டு நினைவு.

2009 சனவரி 29ம் தேதி காலை 10.40க்கு சென்னை பாஸ்போர்ட் ஆபிஸான சாஸ்திரி பவன் முன்னே..

ஈழமக்களுக்காக அழுத தன் இதயத்தை, தன்னை எரித்து நிறுத்திக் கொண்ட முத்துக்குமாரின் நினைவுதினம்.

அன்பு முத்துக்குமார்..
உனக்கு முகமறியா நண்பனான நான், உன் நினைவு நாளையொட்டி உனக்குத் தெரிவிக்கவேண்டும் என்று நினைத்த விஷயங்கள் கீழே...

இந்த இரண்டு வருடங்களில்...
எத்தனையோ பேரை கொல்லத் துணைபோன கிழவர் சாகவில்லை இன்னும்.
அவருக்கு கால்பிடித்து விடும் சிறுத்தை இறையாண்மை மாநாடு நடத்தியிருக்கிறது.
இரண்டு நாள் முன்பு போன வாரம் சிங்கள ராணுவப் பொறுக்கி நாய்களால் தூக்கிலிடப்பட்டு செத்துப் போன மீனவர் ஜெயக்குமாருக்காக மக்கள் போராடியதால் கொஞ்சம் அசைந்த மத்திய அரசு லேசாக தனது பிட்டத்தை உயர்த்தி நிருபமா ராவை வெளித்தள்ளியிருக்கியிறது இலங்கைக்கு. ஏ கிளாஸ் ஸ்டார் ஹோட்டலில் தங்கி, பிட்சா சாப்பிட்ட நம் நிருபமா சேச்சி  அண்ணன் மாவீரன் ராஜபக்சேவுடன் ஒப்பந்தம் போடப்போகிறார். என்னவாக இருக்கும் அந்த ஒப்பந்தம்? 'ஒரு மாதத்திற்கு 6 மீனவர்களுக்கு மேல் கொல்லப்படக் கூடாது. அதுவும் துப்பாக்கியால் சுடப்படக்கூடாது. கழுத்தில் தூக்குப் போடுதல் ஓகே. தண்ணீரில் மூழ்கடித்துக் கொல்லுதலும் பரவாயில்லை...' என்கிற ரீதியில்.

போகட்டும். வருடக்கணக்காக டெல்லிக்குப் போக கையில் காசின்றி கஷ்டப்பட்ட நம் இனமானத் தலைவர் கலைஞர் இலங்கைத் தமிழருக்காக லட்டர் அன்றி வேறு எதுவும் செய்ய இயலாமல் போன இந்தத் தள்ளாத வயதில் சீட்டு பேரத்திற்கு மட்டும் தனி விமானம் கிடைத்து அன்னை சோனியாவின் அருளாசியும் கிடைத்தாகப் போஸ் கொடுக்கிறார் கலைஞர் டி.வி.யில்.

சிபிஎம் நண்பர்கள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு தடவை நாடாளுமன்றத்தையே நிப்பாட்டி மக்களிடம் தாங்கள் ஊழலுக்கு முழு எதிரிகள் என்று 'பவர்' காட்டியாகிவிட்டது.  இந்தத் தடவை நாடாளுமன்றம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்களாம். பிரகாஷ் காரத் சொலகிறார். என்னே தேச அக்கறை ! பட்ஜெட் தொடர் நடக்காவிட்டால் நாட்டில் யாரும் பொருள் எதுவும் விற்கவே மாட்டார்களா என்ன? ஒரு தீவிர கம்யூனிஸ்டு நண்பர் சொன்னார் 'காங்கிரஸ் உழைக்கும் வர்க்கத்தை சமாளிக்க வைத்திருக்கும் கைக்கூலிகள் இடது, வலது கம்யூனிஸ்டுகள்' என்று. உண்மைதானோ. பாருங்கள்; பெட்ரோல் விலை உயர்வுக்குப் போராடியாகி விட்டது; ஸ்பெக்டரம் ஊழலில் ஊழல் வெளிவந்து நாறிய அளவிற்கு அதை எதிர்த்து பிலிம் காட்டியாகி விட்டது. போனால் போகட்டும் என்று முந்தா நாள் மீனவர்களைப் படுகொலை செய்வதை நிறுத்து என்று ஆர்ப்பாட்டம் நடத்தியாகிவிட்டது. பின் என்ன சாதிக்க வேண்டும்? இவர்கள் இந்தமுறையாவது உனக்கு அஞ்சலி என்று ஏதாவது சொல்வார்களா என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம். எனது மடத்தனம்.

பாமக ஐயாவோ திமுகவா, அதிமுகவா என்று 'கல்லா-மண்ணா' விளையாட்டு விளையாடிக் கொண்டே இருக்கிறார். இன்னும் முடிவு எடுத்தபாடில்லை. இதில் ஈழம் பிசினஸ் எல்லாம் ஓரங்கட்டிவிட்டார் (தொகுதி உடன்பாட்டை பாதிக்குமே).


அடுத்து வைகோ. இவர் ஒபாமாவுக்கு புத்தகம் எழுதுகிறார். ஈழம் பற்றிய சி.டி. வெளியிடுகிறார். புரியவேயில்லை இவருடைய பங்கு. (சிடியைப் பார்த்துவிட்டு உனக்கு மீண்டும் எழுதுகிறேன்). அப்புறம் நெடுமாறன் ஐயா. இவருக்கு அரசியல் லாபம் இல்லை என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் முக்கியமான நேரங்களில் இவர் பேசாமல் போவதும். ஈழப் பிரச்சனை தவிர நாட்டின் பிற பிரச்சனைகளில் எதுவும் கருத்து சொல்லாமல் இருப்பதுவும் என்ன சமூகப் பங்களிப்பு என்பது புரியவில்லை.

திருமா, வைகோ, நெடுமாறன் மற்றும் ராமதாஸ் என்று இவர்கள் அனைவரும் நீ மூலக்கொத்தளத்தில் எரிந்து கொண்டிருந்த போது சுடுகாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் காற்றில் மிதந்த உன் பிணவாடையை நுகர்ந்த பின்பும் உன் லட்சியத்தை நயவஞ்சகமாக உன் சிதையில் உன்னுடன் சேர்த்து எரித்தவர்களா என்று சந்தேகம் தோன்றுகிறது. திருமாவும், ராமதாஸூம் இதில் பச்சைப் பொய்யர்களாக வெளிப்படையாகவே உருமாறியிருக்கிறார்கள். மற்றவர்கள் பற்றிப் பார்ப்போம் பின்னால்.

நீ இறந்ததால் ஈழப் பிரச்சனையில் என்ன மாற்றம் வந்தது ? டாடாவும், ஏர்டெல்லும் பிசினெஸ் காண்ட்ராக்டுகள் கோடிக்கணக்கில் லவட்டினர். அதைக் கொண்டாட நடத்தப்பட்ட திரைப்பட விழாவில் இந்தி நடிகர்களும், நம்ம அஸின் சேச்சியும், பரத் அம்பியும் ஒரே குத்தாட்டம் போட்டார்கள்.  'உலகத் தமிழ் மாநாடு' என்று நடத்த லைசென்ஸ் பெற்றிருந்த சிங்கப்பூர் தமிழர் தன்மானத்தோடு ஈழப் படுகொலை நடந்து இப்போ போய் மாநாடா என்று மறுக்க நம்ம அரசியல் சாணக்கியர் தாத்தா கலைஞர் 'செம்மொழி மாநாடு' என்று சிம்பிளாக பெயர் மாற்றி லைசென்ஸை பிடுங்கிக் கொண்டு 500 கோடி செலவு செய்து ஈழத் துரோகத்தை மறைக்க நாடகம் போட்டார்.

அப்புறம் விக்கிலீக்ஸ் ஈழ்ப்பிரச்சனை பற்றியும், இந்தியாவின் கருப்புப் பண முதலைகள் லிஸ்ட் பற்றியும் தகவல் வெளியிடப்போவதாக செய்தி வந்து ராஜபக்சேவுக்கும், சோனியா, மன்மோகனுக்கும் வயிறு கலங்கியதாகக் கேள்வி.

உண்மையில் மக்கள் எல்லோரும் உன்னை மறந்தே போய்விட்டார்களா என்று உனக்கே சந்தேகம் வந்திருக்கும். இல்லை நண்பனே! இன்றைய இளைஞர்கள் பலர் மறக்கவில்லை. அவர்களின் இறுக்கி மூடிய கைகளுக்குள்ளே நீ ஊட்டிய தீ உறைந்திருக்கிறது. மாணவர்கள் மறக்கவில்லை. வழக்கறிஞர்கள், டாக்டர்கள் என்று யாரும் மறக்கவில்லை. அது பரவுகிறது பூமிக்கு அடியில் பெருகும் நெருப்புக் கோளமாக. சிறுகச் சிறுக.  வெளியில் அது தீப்பிழம்பாக வெடிக்கும் காலம் இன்னும் வரவில்லை.

அது ஒரு நாள் வரும். அன்று உனக்கு நான் சொல்லாமலேயே புதிய உலகின் தீர்ப்புகள் உன்னை எட்டியிருக்கும்.
அன்புடன்,
உன் உடன்பிறந்தோனாய் இல்லாது போனதற்காக வருந்தும் ஒரு நண்பன்.

No comments: