Saturday, December 24, 2011

உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்னும் மோசடி.

உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்னும் மோசடி.

என்னப்பா இது. மக்களுக்கு உணவு தருவதை உத்திரவாதப்படுத்த நம்ம பொருளாதாரப் புலி
அண்ணன் மன்மோகன் கொண்டு வந்த திட்டத்தை நீ பாட்டுக்கு மோசடின்னா இன்னா அர்த்தம்
என்று நினைப்பவர்கள் மட்டும் கீழே தொடர்ந்து படிக்கவும். சட்டம் வேற பார்லிமண்டுல நிறைவேறப்
போற நேரத்துல இப்படி சொல்லலாமா ?

உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்றால் என்னன்னு சொல்லிருக்காங்கன்னு முதல்ல பாத்துக்குவோம்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுடைய வீட்டிலும் உணவுப் பொருள் பற்றாக்குறை இல்லாது கிடைத்து
அவர்கள் எல்லோரும் மூன்று வேளை வயிறார, சத்தான உணவு சாப்பிட வழி செய்வதே உணவுப்
பாதுகாப்பு சட்டம் ஆகும்.

பேச்செல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா செயல்ல என்னவா இருக்கு ? அது தான் இங்க பிரச்சனையே.
இப்போ பார்லிமண்ட்டில் நிறைவேறப் போகிற உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி கிராமத்துல 95 சதவீதம்
பேரும், நகரத்துல 55 சதவீதம் பேரும் ரேஷன் அட்டை (Public Distribution system Card) தரப்போறாங்களாம்.
சரிதானேன்னு நீங்க நினைக்கலாம். இதுக்கு முன்னாடி நாட்டுல மொத்தத்துல 65 சதவீதம் பேருக்கு கொடுத்த
ரேஷன் கார்டுகளைப் புடுங்கி பாதியா கட்பண்ணிடுறதுக்கு இது குறுக்கு வழி. இன்னும் சரியா சொன்னா இப்போ
பதிஞ்சிருக்கிற 12 கோடி ரேஷன் கார்டுகளை 6 கோடியா கட் பண்றது தான் அது. என்ன காரணம் சொல்லுறாங்க
இதுக்குன்னா போலி ரேஷன் கார்டு அதிகமாயிடுச்சாம். உண்மைதானே. நாமெ எல்லாருமே ஆளுக்கு 4 ரேஷன்
கார்டு வைச்சுக்கிட்டு அதுல கார், பங்களா வீடெல்லாம் கட்டிட்டோம்ல. போலி ரேஷன் கார்டுகள் இருக்கிறது
உண்மைதான். ஆனா நாட்ல பாதிப்பேரு ப்ராடுன்னு சொல்றதுக்கு என்ன அர்த்தம் அந்த அலுவாலியாவுக்கே வெளிச்சம்.

சரியோ தப்போ நம்ம தமிழ்நாட்டுல இலவச அரசி, ரூபாய்க்கு 2கிலோ போன்ற திட்டங்கள் ஏதோ ஒரு விதத்துல
ஏழைகளை காப்பாத்தவே செய்யுது. அது தான் நம்ம அம்மா கூட இத்திட்டத்தை எதுத்து சத்தம் போடறாங்க.
அவங்க எதை மனசுல வச்சிக்கிட்டு எதுத்து சத்தம் போடுறாங்கன்றது வேற விஷயம். ஆனா மத்திய அரசு இதையெல்லாம்
கண்டுக்கவே கண்டுக்காதுன்றது தான் உண்மை. ஏனா மன்மோகன் அப்பன் உலக வங்கி (world bank) சொல்லிட்டான..
மகனே ஏழை மக்களுக்கு அரிசி கூட கொடுக்க தேவையில்லை.. காசா குடுத்துடு.. அவங்க வேணா அம்பானி
கிட்டயோ, ஸ்பென்சர்லயோ, அண்ணாச்சி கிட்டயோ போய் அந்தக் காசுல அரிசி வாங்கித் தின்னட்டும்னு. ரேஷன்
கடையெல்லாம் கூட ஊழல் இருக்கறதால அத மூடிடுன்னு சொல்லுது. ஆனா உடனே அந்த அளவுக்கு போறதுக்கு மோகன்
அண்ணன் யோசிக்கிறாரு. ஏதாவது பிரச்சனையாயிடுமில்லியா. எல்லோரும் பார்லிமண்ட் வாசலுக்கு வந்து
பார்லிமண்ட் கேன்ட்டீன்ல் 5 ரூபாய்க்கு கிடைக்கிற புல் மீல்ஸை லவட்டிட்டா என்ன பண்றது?

சரி இந்த திட்டப்படி கிராமத்துல 95 சதம் பேருக்கு ரேஷன்ல அரிசி கிடைக்குதேன்னு சந்தோஷப் படாதீ்ங்க.
இந்த 95ல 60 சதம் பேரை கண்டுபிடிச்சு அவுக உண்மையிலேயே ஏழையா இருந்தாத்தான் அரிசி குடுப்பாகளாம்.
அதே மாதிரி நகரத்துல 65 சதவீதம்ல 44 சதவீதம் (தலை சுத்துதா?) பேரை மட்டும் செலக்ட் பண்ணி அவுகளுக்குத்
தான் அரிசி குடுப்பாகளாம். மத்தவக எல்லாம் அவுக சித்தப்பா ரிலையன்ஸ் இருக்காரில்லை, அங்க போய்
வாங்கிக்க வேண்டியது தான். நல்ல அரிசியா கிடைக்குமாமே.

சரி இந்த சதவீதமெல்லாம் எப்புடிப்பா கணக்கு பண்றாங்க. ஒரு பிகர் கணக்குப் பண்றதுக்குள்ளே நமக்கு முழி
பிதுங்குதுன்னு நினைப்பவர்களுக்கு சொல்றேன். வறுமைக் கோடு, வறுமைக்கோடு அப்படின்னு ஒரு கோடு
இருக்கு. எங்க இருக்குன்னு கேக்காதீங்க. அது சும்மா மன்மோகன் அண்ணாச்சியும், அன்னை சோனியாவும்
ஏற்கனவே இருந்ததை அழிச்சுட்டு போட்ட புது கோடு. அந்தக் கோட்டுக்கு அந்தப்பக்கம் உள்ளவங்கள்ளாம்
நல்லா சம்பாரிச்சி, மூணு வேளை தின்னுட்டு பெருசா ஏப்பம் விடுறவங்க. கோட்டுக்கு இந்தப்பக்கம் உள்ளவங்க
சோறு சரியா திங்காத வெத்து வயிறு புரண்டு குர்ருன்னு ஏப்பம் விடுறவங்க.

இந்தக் கோட்டுக்கும் வறுமைக்கும், உணவுப் பாதுகாப்புக்கும் இன்னாபா சம்பந்தம்னு சண்டைக்கு வராதீங்க.
சொல்றேன். இந்த கோட்டுக்கு கீழே இருக்கிறவுகள குறி வைச்சுதான் உணவுப் பாதுகாப்பு சட்டம், ரேஷன்
கடை எல்லாம் அரிசி, பருப்பு எல்லாம் தரும். மத்தவுகளுக்கு கிடையாது. இதுல டெக்னிக் என்னன்னா
கோட்டை எங்கன போட்டா ஒரு ஊருக்கு நாலு பேரு கூட வறுமைக் கோட்டுக்கு கீழே வரமாட்டங்கன்னு பாத்து
அஙகன கோட்டைப் போட்டுட்டாரு நம்ம கில்லாடி அண்ணாச்சி மன்மோகன். அதுக்கு ஒரு துப்புக் கெட்ட.. சாரி
திட்டக் கமிஷன்.

இந்த திட்டக் கமிஷன் என்னா சொல்லுச்சுன்னா ஒரு நாளைக்கு 32 ரூபா நகரத்துல செலவழிக்க முடிஞ்சவங்களும்,
கிராமத்துல 20 ரூபா செலவழிக்க முடிஞ்சவங்களும் வறுமைக் கோட்டுக்கு மேல இருக்காங்கன்னு சொல்லிடுச்சு.
அதாவது தாம்பரத்துல 32 ரூபாயோட டவுன் பஸ்ல ஏறி சென்டரல் வந்துட்டு ஒரு டீ, வடை சாப்பிட்டுட்டு கைல
பைசா இல்லாம திரும்பி வீட்டுக்கு போனீகன்னா நீங்க வறுமைக் கோட்டுக்கு மேல. புரிஞ்சதா?
வீடு போறப்போ திருட்டு ரயில்ல போனா அந்தச் செலவு மிச்சம். அப்போ மிச்சப்படுற காசுனால நீ்ங்க அம்பானிக்கு
அடுத்த ஆளா ஆயிடுவீங்க. எப்படி புள்ளி விவரம் ?

சரி இப்படி திருட்டுத் தனமா மானிய விலை அரிசி வாங்குற ஆளுகளைக் குறைக்கறாங்கன்னா ஏதாவது காரணம்
இல்லாமயா? நாட்டு மக்கள் தொகை கூடிட்டே போகுதுல்ல.. அரிசி பத்தாக்குறை இருக்கும்ல.. என்று அக்கறைப்
படும் அம்பியா நீங்கள். உங்களுக்கு ஒரு விவரம். கடந்த பத்து வருஷத்துல நாட்டுல கவர்மெண்ட் குடோன்கள்ல
சரியா பராமரிக்காம, எலி திங்க விட்டு, சரியான ஏசி பண்ணாத குடோன்ல வச்சி புழுத்துப் போன அரிசி எவ்வளவு
தெரியுமா? ஏழு லட்சம் டன். சும்மா நான் சொல்லலை. நம்ம தேசிய உணவுக் கழகம்(Food Corporation of India)
ஷர்மான்னு ஒரு ஆள் RTI சட்டத்துல(தகவல் அறியும் சட்டம்) கேட்ட கேள்விக்கு சொன்ன புள்ளி விவரம் இது.
இப்போ புரியுதா ஏன்டா இந்த தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்தோம்னு காங்கிரஸூக்காரன் எல்லாம்
புலம்புறது ஏன்னு ? இந்த ஏழு லட்சம் டன் அரிசியை வைச்சு நாட்ல எல்லோருக்கும் சும்மாவே வருஷம் பூராச்
சோறு போடலாம் தெரியுமா.

அதுக்குத் தான் நம்ம தேசபக்த அம்பானி அண்ணாச்சி கவருமென்ட் கிட்ட உள்ள குடோன் எல்லாத்தியும் சீப்பா
வாடகைக்கு எடுத்து அவுரு தனியார் மார்க்கெட்டுல வுடுற அரிசியை நல்லா ஏசில வச்சி பாதுகாத்து கொடுத்து
கிட்டு இருக்காறே அவர் கடையில அரிசி வாங்கி திங்க வேண்டியது தான. என்ன நான் சொல்றது?

ஏ.. ஆளை விடப்பா எவன் எந்தக் கோட்ல நின்னா என்ன..எக்கேடோ கெட்டா என்ன.. பார்லிமண்டை ஒழுங்கா நடக்க
விடப்பா.. பார்லிமண்ட் ஸ்டால்ல டீ, வடையெல்லாம் டெய்லி விக்காம வீணாப் போகுதுன்னு நம்ம மன்மோகன்,
பாஜக இத்துவானி..சாரி அத்துவானி அப்புறம் லொள்ளு பிரசாத்து, மம்தாஜி, பிரகாஷ் காரத்து ஜி எல்லாரும் கூடிப் பேசி
பார்லிமண்டை நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. இதென்ன ஸ்கூலா ? ஒரு நாளைக்கு நடக்காட்டியும் பாடம் போச்சேன்னு
பதற்றதுக்கு. நாளைக்கு ஏதாவது மாசோதா.. மசாலா இல்லை.. மசோதா.. எல்லோரும் வீட்ல டெய்லி ஒரு பாட்டில்
அக்காபீனா தண்ணிய வாங்கியே ஆகனும்னு நிறைவேறினால். அப்படியா.. தண்ணி நல்லா இருக்குமான்னு கேக்குற
கோஷ்டியாச்சே நாம எல்லாம். இதை என்னத்துக்கு கண்டுக்கணும்கிறேன்.


தேவைப் பட்டா கீழே இருக்கிற சுட்டியைக் கூட படிங்க..

முல்லைப் பெரியார் அணை பிரச்சனை – கேரளாவின் அடாவடித்தனம்!

முல்லைப் பெரியார் அணை பிரச்சனை கேரளாவின் அடாவடித்தனம்!
14-டிசம்பர்-2011
முல்லைப் பெரியார் அணை பிரச்சனை மறுபடியும் மலையாளிகளால் பெரிதாக்கப்பட்டு, கேரள எல்லைகளில் தமிழர்கள் தாக்கப்பட்டு, பரபரப்பாகியிருக்கும் இச்சூழலில் இந்த அணை பற்றி கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துக் கொள்வோம்.
பெரியாறு தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலுள்ள சிவகிரி மலைகளில் கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர்கள் உயரத்தில் உற்பத்தியாகி வடக்காக 48 கி.மீ பாய்ந்து தேக்கடி ஏரியில் மேற்கு நோக்கிச் செல்லும் முல்லையாற்றுடன் கலக்கிறது. அங்கிருந்து கேரளாவினுள் வடக்காகப் பாய்ந்து இடுக்கி வழியாகச் சென்று அரபிக் கடலில் கலக்கிறது.
முல்லைப் பெரியாறு ஆற்றின் குறுக்கே சுமார் பத்து அணைகள் கட்டப்பட்டுள்ளன. அதில் முதலில் வருவது தமிழ்நாட்டில் அமைந்துள்ள பழைமையான முல்லைப் பெரியாறு அணை. இது முல்லையாறும், பெரியாறும் கலக்குமிடத்தில் கட்டப்பட்டுள்ளது. இவ்வணையைத் தாண்டி தான்  பெரியாற்றின் போக்கில் கேரளாவினுள் புத்ததான்கெட்டு, மேட்டுப்பட்டி, மூணாறு (ஜாலி ட்ரிப் அடிப்பீங்களே), இடுக்கி என்று வரிசையாக சுமார் 10 அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவ்வணைகளுக்கு நீர் இன்னும் நிறைய வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் பொறுப்பில் இருக்கும் முல்லைப் பெரியாறு அணை இல்லாது போக வேண்டும்.
 கேரளா மலைப்பாங்கான நாடு. அங்கு மழை அதிகம். ஆறுகளும், ஏரிகளும் அதிகம். சுமார் 44 ஆறுகள் கேரளாவில் ஓடுகின்றன. 1880களில் தமிழ்நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் நதிகள் குறைவு. அவையும் தென்மேற்கு பருவமழையை நம்பியே இருக்கின்றன. சிவகிரி மலையில் உற்பத்தியாகி வடக்கு, மேற்காகச் சென்று கடலில் கலக்கும் பெரியாறு மற்றும் முல்லையாறு கலக்கும் இடத்தில் அணை கட்டி அதில் தேங்கும் நீரில் சிறிது பகுதியை மலையைக் குடைந்த பாதை வழியே தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் எண்ணம் பிரிட்டிஷாருக்குத் தோன்றியது. அதன் விளைவே முல்லைப் பெரியாறு அணை.

முல்லைப் பெரியாறு அணை தமிழ்நாடு கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், 1887-1895களில், பெரியாற்றின் குறுக்கே பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பொறியியலாளர் பென்னி குயிக் என்பவரின் மேற்பார்வையில் (அன்றைய தொகை 62 லட்சம் ரூபாய்கள் செலவில்) கட்டப்பட்ட அணை. இதன் சிறப்பம்சம் இது மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 2700 அடி உயரத்தில் உள்ளது.. அவ்வுயரத்திலிருந்து ஒரு சிறிய கணவாய் வழியாக முல்லைப் பெரியாறு தேக்கும் நீர் தேக்கடியில் சேருகிறது. பின் அங்கிருந்து 5000 அடிகள் நீளத்திற்கு மலையினுள் குடையப்பட்ட நீர்வழி வழியாக தமிழ்நாட்டின் சுருளியாற்றில் நீர் வந்து சேர்கிறது. வைகை அணை இந்நீரைத் தேக்குகிறது. தேக்கடி இருக்கும் உயரத்திலிருந்து நீர் திருப்பிவிடுவது மிக எளிது என்பதால் இது கைகூடியுள்ளது. பிரிட்டிஷ் காலத்துக்குப் பின் இவ்வணை கேரள வரம்பிற்குள் இருந்தாலும் ஒப்பந்தப்படி தமிழக அரசால் இன்றும் பராமரிக்கப்படுகிறது.
வைகை நதிக்கு திருப்பிவிடப்பட்ட முல்லைப் பெரியாறு தண்ணீரால் மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, போன்ற மாவட்டங்களில் உள்ள 2 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களும், 10 லட்சம் விவசாயிகளும் பயன் பெறுகிறார்கள். சுமார் 60 லட்சம் பேருக்கு குடிநீரும் கிடைக்கிறது. இம்மாவட்டங்களில் உள்ள அனைத்து தண்ணீர் தேவைகளும் இத்தண்ணீரால் தீர்கின்றன.
ஆனால் துரதிர்ஷடவசமாக மலையாளிகளின் நோக்கம் முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதாகவே இருக்கிறது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டு 125 வருடங்களாகிறது. இது கட்டப்பட்ட போது சுண்ணாம்பு மற்றும் ஜல்லிகளால் குழைத்து கட்டப்பட்டது. 50 வருடங்கள் தான் இந்த அணை தாங்கும். எனவே இதை இடித்துவிட்டு வேறு அணையை கொஞ்சம் கீழே கட்டவேண்டும் என்று. இது உண்மையல்ல. உலகெங்கும் மிகப் பழைய அணைகள் காலாகாலமாக இன்னும் நீர் தேக்கியபடி நிற்கின்றன. நம் ஊர் கல்லணை கூட சுமார் ஆயிரம் ஆண்டுகளாக தற்போதைய தொழில் நுட்ப அறிவால் வலுவாக்கப்பட்டு உறுதியாக நிற்கிறது. எந்தக் கட்டிடமும் தொடர்ந்த பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப வலுவூட்டல்களாலேயே காலம் காலமாக நிற்கும். இது தான் யதார்த்தம்.
இன்னொரு அணைகட்டச் சொல்லும் கேரளாவின் பின்னாலிருக்கும் நயவஞ்சகம் என்னவென்றால் முல்லைப் பெரியாறிலிருந்து வைகை அணைக்கு தண்ணீர் திருப்ப பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட கணவாய் புது அணையை விட உயரத்திலிருக்கிறது. இவர்கள் சொல்லும் மாற்று இடத்தில் முல்லைப் பெரியாறு அணைக்குக் கீழே அணையைக் கட்டினால் நீரை தேக்கடியில் தேக்கி வைத்து, வைகை அணைக்கு கொண்டு வரவே இயலாது. முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட்டால் அதிலிருந்து வருடத்தில் பெரும்பாலான மாதங்களில் தண்ணீர் பெறும் தமிழ்நாட்டின் 10 லட்சம் விவசாயிகள் வாழ்வாதாரம் பாழாய் போகும். மேலும் இவர்கள் கட்டுவதாகச் சொல்லும் புது அணையை முழுக்க முழுக்க மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப் போவதால் தண்ணீர் தேங்கவே தேங்காது. முழுதும் திறந்து விடப்படும். அப்போது தான் மின்சாரம் தயாரிக்கமுடியும். போதாததற்கு நீரை ஆற்றின் போக்கில் கீழே சமதளத்தில் தேக்க ஏற்கனவே இடுக்கி அணையை கட்டிவிட்டார்கள்.
இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 50 கி.மீ கீழே 1973ல் கட்டப்பட்டது. இதுதான் ஆசியாவிலேயே பெரிய வளைவு அணை’(Arch Dam). முல்லைப் பெரியாரைப் போல் 7 மடங்கு பெரிது இடுக்கி அணை. 70 டி.எம்.சி கொள்ளளவு. முல்லைப் பெரியாரின் கொள்ளளவோ 16 டி.எம்.சி மட்டுமே. அதிலும் 10 டி.எம்.சி தண்ணீரைத் தான் பாசனத்திற்கு திறந்துவிட முடியும்.
இடுக்கி அணையின் கொள்ளளவு மிக மிக அதிகம் ஆதலால் அணை நிரம்பவில்லை. எனவே முல்லைப் பெரியாறு அணை ரொம்ப வீக், அங்கு நிலநடுக்கம் வந்தது என்று பத்திரிக்கைகள் மூலம் புரளி கிளப்ப ஆரம்பித்தது கேரள அரசு. இப்பிரச்சனையில் இந்திய நீர்வள ஆணையம் தலையிட்டு ஆய்ந்து பரிந்துரை செய்ததன்படி முல்லைப் பெரியாறு அணையை 18 கோடி ரூபாயில் தமிழ்நாடு அரசு பலப்படுத்தியது.

பெரியாற்றில் செல்லும் மொத்த நீர் சுமார் 5 ஆயிரம் மில்லியன் கனமீட்டர்கள். இதில் கேரளாவிற்கு விவசாயம், தொழில், குடிநீர் அனைத்திற்கும் 2021ல் தேவை எப்படியிருக்கும் என்று பார்த்தால் கூட 2300 மில்லியன் கனமீட்டர்கள் தான். மீதித் தண்ணீர் அனைத்தும் (சுமார் 2 ஆயிரம் மி.க.மீ நீர்) கடலில் வீணாகக் கலக்கிறது. முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி வரை நீர் தேக்கி தமிழ்நாட்டிற்கு கொடுத்தால் கூட வெறும் 126 மி.க.மீட்டர் தான் வரும். இதைத் தரக் கூட மனமில்லாததுதான் கேரளா. இத்தனைக்கும் கேரளாவிற்கு 700 டன் அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து தான் செல்கிறது.

 
தமிழ்நாடு அரசு 1981 முதல் 1994 வரை அணையை பலப்படுத்தும் வேலைகளை செய்தது. அணைக்கு 12 ஆயிரம் டன் எடையுள்ள கான்கிரீட் தொப்பி(cap), கேபிள் ஆங்கரிங் என்கிற முறை மூலம் அணையின் உட்புறம் போடப்பட்ட கான்க்ரீட் கம்பிவடங்கள், தாங்கு அணையை வெளிப்புறம் மேலும் கான்க்ரீட் போட்டு உறுதிப்படுத்தல் போன்ற வேலைகள் செய்து அணை மிகப் பலமாய் ஆக்கப்பட்டது. இதைத் தவிர முல்லைப் பெரியாறு அணையுடன் கூடிய பேபி டேம் எனப்படும் சிறிய அணையையும் தமிழ்நாடு அரசு பலப்படுத்த ஆரம்பித்தது. இது நடந்தால் சுப்ரீம் கோர்ட் சொன்னபடி பழையபடி அணையில் 152 அடி நீர் தேக்கிக் கொள்ளலாம் என்கிற நிலை. உடனே கேரள அரசு வேலை செய்யவந்த தமிழக அதிகாரிகள் மேல் வழக்குகள் போட்டு வேலையை நடத்த விடாமல் செய்தது.
இரு அரசுகளும் கோர்ட்டுக்குப் போனதில் கோர்ட் நியமித்த நிபுணர் குழு 2000ஆம் ஆண்டு மீண்டும் அணையை சோதித்தது. அதன் அறிக்கையை வைத்து நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு அணையின் நீர் மட்டத்தை 146 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணையை தடையின்றி பலப்படுத்தவும் தீர்ப்பு வழங்கியது.
இப்போது 2011ல் மீண்டும் இணையதளம், சினிமா, கிராபிக்ஸ், பத்திரிக்கை, மியூசிக் ஆல்பம் என்று பல விதங்களில் முல்லைப் பெரியாறு பற்றி கேரள மக்களிடையே பீதியைக் கிளப்புகிறது கேரள அரசு. தமிழக ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் தங்களது கேரள அணி கேரளா பக்கம் நின்று பேசுவதும், தமிழ்நாட்டு அணி தமிழ்நாட்டுக்கு ஆதரவாகப் பேசுவதாகவும் இரட்டை வேடம் போடுகின்றன. காங்கிரஸ், பா.ஜனதா, இவற்றுடன் சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியும் இதில் அடக்கம்.

சென்ற நான்கு தினங்களாக கட்சிகளை நம்பாமல் மக்கள் தேனி, கம்பம், பகுதி மக்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து லட்சம் பேர் திரண்டு முல்லைப் பெரியாறு நோக்கிப் படையெடுக்க கேரள அரசு ஸ்தம்பித்தது. தடியடி நடத்தி காவல் துறை மக்களை விரட்டியது. இன்று லேட்டாக நம்ப விஜயகாந்தும், மு.க.ஸ்டாலினும் பேரணி நடத்துகிறார்கள் கண்துடைப்புக்கு. அம்மாதான் அரசு என்பதால் அம்மா நோட்டீஸ் விட்டு கோர்ட்டு பக்கம் நமக்கு வரும் ஞாயத்தை அடக்கமாகப் பேசுகிறார். மக்கள் தன்னிச்சையாக கிளர்ந்தெழ ஆரம்பித்துவிட்டார்கள் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம். எந்தக் கட்சியும் நியாயமாகவும், மனசாட்சியோடும் இல்லாமல் பூசிமெழுகினால் அவர்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்பதையும் கட்சிகள் புரிந்துகொள்ள இது உதவும். சுப்ரீம் கோர்ட் வேறு முல்லைப் பெரியாறு அணையை 120 அடிதான் தேக்கவேண்டும் என்கிற கேரளாவின் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது நேற்று. 
  
தமிழர்களாகிய நாம் இவ்விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. ஒன்று படுவோம். அநீதியை தட்டிக் கேட்போம். இதில் தமிழன், மலையாளி என்கிற பாகுபாடு தவிக்க இயலாமல் பேசப்பட்டே ஆகவேண்டும். ஒன்றாக இணக்கமாக வாழும் எண்ணம் இருக்கும் பட்சத்தில் நாம் வேறுவேறாக இருந்தாலும் சகோதரத்துவத்துடன் பழகுவோம். ஆனால் அது இல்லாத பட்சத்தில் அந்த வேறுபாடும் பேசப்பட்டே ஆகவேண்டும்.
பின்வரும் வீடியோ முல்லைப் பெரியாறு அணைபற்றி தமிழக சிவில் இன்ஜினியர்கள் அமைப்பு உருவாக்கியுள்ள ஆவணப்படம்.

கூடங்குளம். அணு உலை. சில விவரங்கள்.

கூடங்குளம். அணு உலை. சில விவரங்கள்.
07-டிசம்-2011
நியூஸ் பேப்பர்ல டெய்லி கூடங்குளம் போரட்டம், அணு உலை பாதுகாப்பானது என்று மன்மோகன் சிங் விளக்கம், அப்துல்கலாம் அவர்களின் நேரடி ஆய்வு, மக்களின் தொடர் உண்ணாவிரதம் என்று பார்த்திருப்பீர்களே.. உங்களுக்காக கொஞ்சம் கூடங்குளம் அணு உலை பற்றிய விவரங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
கூடங்குளம் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில் அருகே உள்ள ஊர்.
1988ல் ராஜீவ் காந்தி ரஷ்யாவுடன் உடன்படிக்கை செய்து கூடங்குளத்தில் அணுஉலைகள் அமைப்பது என்று முடிவானது.
நடுவில் ரஷ்யா உடைந்து, ராஜீவ் காந்தி அரசியல் படுகொலையாகியதில் ப்ராஜக்ட் கிடப்பில் போடப்பட்டு பின் 2001ல் திரும்பவும் அக்ரிமண்ட் போடப்பட்டது.
கூடங்குளத்தில் 8 அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றைக் கட்ட ஆகும் செலவு 13,615 கோடி ரூபாய். இவற்றிலிருந்து வருடத்திற்கு 9000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அதில் பாதி கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு விற்கப்படும்.
கூடங்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.பி.உதயகுமார் என்பவர் தலைமையிலான  
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கூடங்குளத்தைச் சுற்றி 20 கிமீ சுற்றளவில் வாழும் சுமார் 3 லட்சம் மக்களுடன் இணைந்து கூடங்குளம் உலையை மூடக் கோரி போராட்டம் நடத்திவருகிறது.
ஒரு சாதாரண அணு உலை வருடத்திற்கு 25-30 டன் கதிரியக்க எரிபொருள் கழிவை வெளியேற்றுகிறது. இக்கழிவுகளும் ஆபத்தானவை. கதிரியக்கம் கொண்டவை. இவற்றை உறுதியான காரீயக் கலன்களில் அடைத்து வைப்பதுடன் சில வருடங்களுக்கு தண்ணீரால் குளிர்வித்துக் கொண்டே இருக்கவேண்டும். அதற்குப் பின் இவற்றை 2000 அடி ஆழத்தில் புதைத்து கதிர்வீச்சு வெளியாகிறதா என்று 20 ஆயிரம் வருடங்கள்(ஆமாங்க 20 ஆயிரம் வருஷம் தான்...20 வருஷ வாழ்க்கைக்கே இந்தப் பாடு. இதில் 20 ஆயிரம் வருஷத்துக்கு எங்கே போக..) கல்பாக்கத்திலும், கூடங்குளத்திலும் இந்தமாதிரி வருஷம் வருஷம் வெளியாகும் அணுஉலைக் கழிவை எங்கே கொண்டு புதைக்கிறாங்க, என்ன செய்யறாங்கன்னு இதுவரை தகவலே வெளிய வரலை. ஜெய்ராம் ரமேஷை கேட்டால் இன்னும் நமக்கு அந்தப் பிரச்சனை வரவேயில்லைன்னு சொல்றார்.
அணு உலைகளைச் சுற்றி வாழும் மக்களிடம் சர்வே எடுத்ததில் அவர்களுக்கு பலவித நோய்கள் குறிப்பாக ரத்தப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் எனத் தெரியவந்திருக்கிறது.

சாதாரண இயக்க நிலையில் அணு உலையிலிருந்து அதிக அளவு கதிரியக்கம் வெளியேறாது. அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் கதிரியக்கம் மற்றும் மாசுகள் அதிகம் தான். ஆனால் அணு உலை சம்பந்தமான அணு எரிபொருள் தேடுதல், எடுத்தல், அரைத்தல், செறிவூட்டுதல், போன்ற இதர செயல்களையும் கணக்கிலெடுத்தால் அணுப் பொருட்களினால் அடையும் மாசு மிக அதிகம்.

அணு உலையில் யுரேனிய அணு உருகும் போது சீசியம் உருவாகிறது. 1986ல் செர்னோபிலில் அணு உலை வெடித்த போது 100 டிரில்லியன் டிரில்லியன்(1க்கு அடுத்து 26 சைபர்கள் போட்டுக்கொள்ளவும்) அளவு சீசியம் அணுக்கள் ரஷ்யாவின் வடக்குப் பகுதி முழுவதும் பரவின. சதுர மீட்டருக்கு நூறு கோடி சீசியம் அணுக்கள் நீரிலும், நிலத்திலும் கலந்தன. கதிரியக்கமுள்ள இந்த சீசியம் சிதையும் போது அது மனிதர்கள், விலங்குகள், தாவரங்களை கடுமையாக பாதிக்கும், கொல்லும். 2046ம் ஆண்டு வரை இக்கதிரியக்கம் செர்னோபிலைச் சுற்றி இருக்கும். அங்குள்ள தாவரங்கள் சீசியம் அணு பொட்டாசியம் அணு போலவே இருப்பதால் சீசியத்தை உறிஞ்சிக் கொண்டன. தாவரத்திலிருந்து சீசியம் அவற்றை சமைத்து உட்கொண்ட மனிதர்கள், விலங்குகளுக்கு பரவியது. புகுஷிமாவில் குடிதண்ணீரிலும், காய்கறிகளிலும் கதிரியக்கம் கலந்ததும் இதே போலத் தீங்கிழைத்தது.ஜெர்மனி தனது நாட்டிலுள்ள 17 அணு உலைகளையும் 2022க்குள் முழுதும் மூடிவிடத் திட்டமிட்டுள்ளது. இவ்வணுவுலைகளின் மூலம் நாட்டின் 23 சதவீத மின் தேவை நிறைவேற்றப்பட்டு வந்தாலும், புகுஷிமா நிகழ்வுக்குப் பின், நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாற்று ஆற்றல் மூலங்களான காற்றாலை, உயிரினத் தொகுதி (bio-mass), நீர், மற்றும் சூரிய சக்திகளில் இருந்து 20.7 சதவீதம் மின்சாரம் கிடைத்து வந்துள்ளது. அம்மின்சாரத்தை விற்காமல் தனக்கு உபயோகப்படுத்திக் கொள்வதன் மூலம் ஜெர்மனி தனது மின்சாரத் தேவையை சரி செய்யும். மேலும் மாற்று ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தி 2013க்குள் ஜெர்மனியின் 30 சதவீத மின் தேவையை ஈடுகட்டமுடியும் என்று கணக்கிட்டுள்ளனர்.

கூடங்குளம் அணுஉலையைச் சுற்றி முப்பது கிலோமீட்டர் தூரத்திற்குள் சுமார் மூன்று லட்சம் பேர் வசிக்கிறார்கள். புகுஷிமாவில் அணு உலைகளில் இரண்டில் வெடிப்பு நிகழ்ந்த போது அது அதைச் சுற்றி 30 கி.மீக்குள் இருந்த மக்களைக் கடுமையாக பாதித்தது. புகுஷிமாவில் நேரடியாக இறந்தவர்கள் யாருமில்லை இதுவரை. இனி வரும் வருடங்களில் அதன் கதிரியக்கத்தால் புற்றுநோய் மற்றும் பல்வேறு விதமான நோய்களுக்கு இறப்போர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும். ஆனால் அது புகுஷிமாவின் கணக்கில் சேராது. புரிகிறதா ?

கீழே அணு உலை ஆதரவாளர்களின் சில வாதங்களும் அதற்கு நாம் கண்ட பதில்களும்..
அணுஉலை ஆதரவாளர்:- கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுவுலையின் சுவரானது 6 மீட்டர் அடர்த்தி (thickness) கொண்டது,,, கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத அளவு பாதுகாப்பானது...முற்றிலும் திடமான இந்திய கான்க்ரீட் கவுன்சில்'ஆல் பரிசோதிக்க பட்ட பின்னரே அந்த concrete நிரப்பப்பட்டு உள்ளது,,, ஏவுகணை தாக்கினாலோ, விமானம் விழுந்தாலோ அணுவுலைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.
எதிர்ப்பாளர்: - கூடங்குளம் மட்டுமில்லை. செர்னோபில், ஜப்பானில் சமீபத்தில் வெடித்த புகுஷிமா அணு உலைகள் கூட இது மாதிரி 6 மீட்டர் அடர்த்தி கொண்ட சுவர்களால் ஆனவை தான். அவையெல்லாம் ஏன் வெடித்தன ? நம்மால் அணு உலையை வேலை செய்யாமல் நிறுத்த முடியும். ஆனால் உள்ளே  நிகழும் அணு வினையை நிறுத்தவே முடியாது. அதிலிருந்து வெளியாகும் வெப்பத்தை குளிர்வித்துக் கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் புகுஷிமாவின் கதி ஏற்படும்
அணு உலை ஆதரவாளர்:- திருநெல்வேலி மாவட்டமானது ஒரே நில தட்டில்
அமைந்து உள்ளதால், நிலநடுக்கம் வர வாய்ப்புகள் குறைவு, வந்தாலும் பூமி தட்டு பிரியவோ ஒன்று சேரவோ வாய்ப்பு இல்லை, ஏனெனில் நான் கூறியபடி ஒரே நிலதட்டில் உள்ளது நெல்லை மாவட்டம்..
எதிர்ப்பாளர்:- நிலநடுக்கம், சுனாமி பற்றி நமக்கு எவ்வளவு தெரியும் ?  நிலநடுக்கத்தின் அளவு ஒரே தட்டில் அதிகமாக வாய்ப்பு இல்லை என்று எதை வைத்து உறுதியாகக் கூற முடியும்?  வேகமாக மாறி வரும் பருவ சூழல்கள் மற்றும் புவியின் நிலைப்புத்தன்மையை  துல்லியமாக அறிவதில் நமக்கு உள்ள திறமைகள் போதுமா ?
அணு உலை ஆதரவாளர்:- சுனாமி வந்தாலும் அதை தடுக்க, அலை தடுப்பு பாறைகள் கடலுக்கு நீண்ட தூரத்திற்கு போடப்பட்டு உள்ளன, அணுஉலை கடல் மட்டத்திலிருந்து 13 மீட்டர் மேலேயே கட்டப்பட்டு உள்ளது,,, சுற்றி பாதுகாப்பு சுவரும் கட்டப்பட்டு உள்ளது.
இந்தியாவின் தென்மேற்கு பகுதியான இந்தோனேசியா சுமத்ரா தீவிலிருந்து
அதிகம் சுனாமி வர வாய்ப்பு இருந்தாலும், அங்கே இருந்து வரும் பேரலைகளோ இலங்கையில் மோதி விடும்... ஏற்கனவே சுனாமி தாக்கிய போது கூடங்குளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை, சுனாமி வந்த பின்னரும் ஏற்கனவே சென்னையில் அமைந்துள்ள கல்பாக்கம் அணு உலையிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சில் மாற்றம் இல்லை..
எதிர்ப்பாளர்: -  சுனாமி வந்த போது கல்பாக்கத்தில் கதிர்வீச்சு ஏற்பட்டு பலபேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அந்தச் செய்தி அரசு வெளியில் பரவாமல் அமுக்கியதாகவும் குற்றச்சாட்டு உள்ளதே. சுமத்ரா தீவில் மட்டும் தான் அடுத்த நிலநடுக்கம் வருமா என்ன ? இங்கே பக்கத்திலே மொரிஷியஸில் கூட நிலநடுக்கம் வந்ததே. இது தவிர மனிதத் தவறுகளாலேயே அடிக்கடி கதிர்வீச்சு வெளிப்பட்டு விடுகிறது. சாதாரண விபத்து என்றால் விபத்துக்குள்ளான இடம் மட்டும் பாதிக்கப்படும். அணு உலையில் விபத்து என்றால் கதிரியக்கம் செல்ல முடிந்த தொலைவு வரை எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும். 
 அணு உலை ஆதரவாளர்:- அணுவை பிரிக்கும் செயலானது கட்டுபடுத்த முடியாமல் போனால், உடனே அணு உலை தானாக செயல் இழந்து விடும்,அணுவை தன்னுள் அடக்கிவிடுமாறும் தயாரிக்க பட்டு உள்ளது.
எதிர்ப்பாளர்: - நம்மால் அணு உலையை வேலை செய்யாமல் நிறுத்திவிட முடியும். ஆனால் உலையின் உள்ளே நிகழும் அணு வினையை நிறுத்தவே முடியாது. அணு உலை வேலை செய்யாமல் நிறுத்தப்பட்டாலும் அதிலிருந்து வெளியாகும் வெப்பத்தை தொடர்ந்து குளிர்வித்துக் கொண்டே இருக்கவேண்டும். புகுஷிமாவில் நிறுத்தப்பட்ட அணுஉலையை குளிர்விக்க முடியாததால் தான் வெப்பம் அதிகமாகி உலை வெடித்தது.
அணு உலை ஆதரவாளர்:- உலை வெப்ப நீக்க முறையானது , உலகிலேயே மிக
நவீனமானது...,அதே போல அனைத்து நாடுகளிலும் அணுஉலைக்கு தேவையான coolant/குளிர்விப்பான் ஒன்றே ஒன்று மட்டுமே பயன்படுத்தப்படும் ஆனால் இங்கு நான்கு coolant/குளிர்விப்பான் பயன்படுத்த படுகிறது... ஒரு குளிர்விப்பான் செயல் இழந்தாலும் மற்ற மூன்றில் ஒன்றை பயன்படுத்தலாம், இந்த நான்கு குளிர்விப்பான்களுக்கும் நான்கு
generator'
கள் உபயோகப்படுத்த படுகின்றன...
எதிர்ப்பாளர்: -  புகுஷிமாவில் கூட ஒன்றுக்கு இரண்டு குளிர்விப்பான்கள், இரண்டு எமர்ஜென்ஸி ஜெனரேட்டர்கள் இது தவிர 8 மணி நேரத்தற்கு வரும்படியான
பேட்டரிகளும் இருந்தன.  ஆனாலும் அவர்களால் உடனே உலையை குளிர்வித்து விட முடியவில்லை.
அணு உலை ஆதரவாளர்:- வெளியேறும் புகை மிக மிக குறைவானதாக இருந்தாலும் அது சுற்று சூழலை எந்த விதத்திலும் பாதிக்காத வாறு புகைபோக்கி உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட படி 100 மீட்டர் உயரம் வரை உயர்த்தி கட்டப்பட்டு உள்ளது.
எதிர்ப்பாளர்: - வெளியேறும் புகையில் என்ன என்ன இருக்கும் என்று கேட்டுப் பாருங்கள். பின் அதன் அருகில் நீங்கள் குடியிருக்க முடியுமா என்பது விளங்கும். பொதுவாக அணு உலை மட்டுமல்ல, அனல் மின் நிலையங்கள், வேதிப் பொருள் தொழிற்சாலைகள், வெளியிடும் புகை மிக மிக ஆபத்தான சூழல் கேட்டை விளைவிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த, நெறிப்படுத்த அரசு தவறிவிட்டது. தனியாரிடம் எல்லா பொறுப்புக்களையும் கொடுக்கும் அரசு அவற்றை எப்படி கண்காணித்துச் சரிசெய்யும் என்று நாம் எதிர்பார்க்கலாம்

இத்தோடு அணு இழ்ப்பீட்டு மசோதா என்ற ஒன்றை வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு  சார்பாக நிறைவேற்றியுள்ளது நமது அரசு. அதன் படி அணு உலையை நமது நாட்டில் நிறுவும் வெளிநாட்டு கம்பெனியோ, அல்லது அந்த நாட்டு அரசோ அணு உலையில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பாளர்கள் அல்ல. ஒருவேளை நஷ்ட ஈடு கொடுக்கும் நிலை வந்தால் 500 கோடி ரூபாய்க்கு மேல் தரவேண்டியதில்லை. அணு உலை செய்தது வெளிநாட்டுக் கம்பெனி, தொழில் நுட்பம் வழங்கியதும் அவர்களே, அதற்கு எரிபொருளும் வெளிநாட்டிலிருந்து தான் வரவேண்டும். ஆனால் விபத்து ஏற்பட்டால் மட்டும் அவர்கள் பொறுப்பில்லை. எப்படி இருக்கிறது கதை ? 'ஏழைகளின் உயிர்.. மயிர் போல..' என்பது இந்தியா என்கிற ஏழை நாட்டிற்கும் பொருந்தும் போலும்.

கூடங்குளம் போராட்டத்தை நாம் எல்லோரும் ஆதரிப்போம். மக்களின் நலன் பற்றி கவலைப் படாமல் பெரும் கம்பெனிகள், அவை ரஷ்யாவோ, அமெரிக்காவோ, சீனாவோ எங்கிருந்து வந்தாலும் சரி அரசின் துணை கொண்டு வந்து தங்கள் (பல்லாயிரம் கோடி ரூபாய்கள்) சுய லாபங்களுக்காக அணு உலை அமைப்பதில் தீவிரம் காட்டுவதை எதிர்த்து நிற்போம். மக்களின் உரிமைகளை, நமது பாதுகாப்பான வாழ்வை மீட்டெடுப்போம்.

அணுசக்திக்கு மாற்று எரிபொருள் தேடலைப் பற்றி அறிந்துகொள்ள பின்வரும் கட்டுரைகளைப் படியுங்கள்..
அணு உலைகளுக்கு மாற்று வெளிவராத உண்மைகள் - பாகம் 1
அணு உலைகளுக்கு மாற்று வெளிவராத உண்மைகள் - பாகம் 2
http://www.thenseide.com/cgi-bin/Details.asp?selNum=22&fileName=Dec1-11&newsCount=2

குடி: கெளடில்யன் முதல் டாஸ்மாக் வரை

குடி: கெளடில்யன் முதல் டாஸ்மாக் வரை
06-டிசம்-2011
”ITS MY LIFE – இது என் வாழ்க்கை. நான் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன். என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்? ITS NONE OF UR BUSINESS…”
கேட்க ரொம்பப் புரட்சியாய் தெரியும் இந்த வாசகம் எதற்குத் தெரியுமா ? மஹாராஷ்ட்ராவும் டில்லியும் தங்கள் மாநிலத்தில் குடிப்பவர்களின் வயது 25 என்று ஆக்கிவிட்டதை எதிர்த்துத்தான் இந்தப் புரட்சி வாசகம். வாசகத்தை வழங்கியது நம்ப டைம்ஸ் ஆப் இண்டியா(அமெரிக்கா?)’. இது தான் கார்ப்பரேட்கள் இன்றைய இளைஞர்களுக்கு வழங்கும் சுதந்திரப் பார்வை. தண்ணியடிக்கிறது ஏன் இஷ்டம். நீ (கவர்மெண்ட் தான்) யார் அதைக் கேக்குறது ?’
குடித்துவிட்டு மன்மோகனை மானாவாரியாகத் திட்டினாலும் மெளனமாகக் கடந்து செல்லும் அதே காவல்துறை, நான்கு பேர் சேர்ந்து குடிக்காமல் ஸ்டெடியாக ரோட்டில் நின்று வால்மார்ட்டுக்கு வால்பிடிக்கும் மன்மோகன் என்றால் நம்மைப் பிடித்து ஒரு பத்து நாள் உள்ளே வைப்பார்கள். ஏன் இந்த வித்தியாசம் ?
குடித்திருப்பவன் பலமற்றவன். தனது இயலாமையை மறக்க அவன் குடிக்கிறான். இயலாமையை மறைக்க அவன் ப.சி முதல் பக்கத்துவீட்டு பால்காரன் வரை திட்டுகிறான். அதனால் ப.சிக்கும் பங்கமில்லை, பால்காரனுக்கும் உபத்திரவம் இல்லை.
மக்கள் ஒன்றும் செய்ய இயலாதவர்களாக இருப்பது அரசுக்கு நல்லது. அப்போது தான் அதை நீங்கள் எதிர்த்துக் கேள்வி எழுப்ப மாட்டீர்கள்; போராட விரும்ப மாட்டீர்கள். பெட்ரோல் விலையை என்ன பெட்ரோமாக்ஸ் விலை பத்தாயிரம் ரூபாய் என்றாலும் பேசாமல் வாங்கிப் போவீர்களா இல்லையா ? குவார்ட்டர் கிடைத்தால் பத்தாதா ? வேறென்ன வேண்டும் ?
விடுதலை டவுசர், அறிவுக் கொழுந்து, பகுத்தறிவுப் புலி, சுதந்திரமான சுப்பாண்டி என்கிற பெயர்களாலும் படித்த, அறிவுள்ள ஆண்களும், பெண்களும் குடிக்கின்றனர். என்னிக்காவது குடிச்சால் பரவாயில்லை. என்னிக்குமே குடிப்பவர்களாக இருந்தா என்ன பண்றது. செத்த அன்னிக்கு பீர் ஊத்த வேண்டியதுதான்.
அரசே ஏற்று நடத்தி மக்களை நாசமாவும் ஆக்கி காசும் பார்க்கும் இந்தக் குடி அடிமை டெக்னிக் ஒன்றும் புதியதல்ல. சாணக்கியனின் அர்த்த சாஸ்திரம் தான் இவர்களுக்கு கைடு(Guide).
அதிகமாக குடிப்பதை தண்டனைக்குரிய குற்றமாகவும், அதனை கண்காணிக்கசுராதயக் ஷாஎன ஒரு கண்காணிப்பாளரையும் அவருக்குகீழ் அதயாக் ஷாஎனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைத்து குடி குறித்த கண்காணிப்பு வலையை விரிக்க வேண்டும் என்கிறான். மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு என மது வணிகத்தை அரசுடைமையாக்கினான். அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்கும் பணி, மேலே சொன்ன குழுவுக்கு உரியது. இக்குழு சமுகமெங்கும் கண்காணித்து மது குடிப்பதை ஒழுங்கமைக்க வேண்டும். மது அருந்தும் உயர்குடியினர் (nobels) கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று வீட்டில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். மது அருந்துவதற்கு என அரசு கட்டியுள்ள கட்டிடங்களில் மட்டுமே மது அருந்த வேண்டும். குறிப்பிட்ட விழாக்காலங்களில் மது காய்ச்சவும் குடிக்கவும் தடை விதிக்க வேண்டும். ஆனால், அந்நாட்களில் வீடுகளில் குடிக்கலாம்…” – இது அர்த்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட குடி நெறிமுறைகள்.
சோழர்கள் காலத்தில் குடிப்பவர்களிடமிருந்து பூச்சி வரி வசூலிக்கப்பட்டது.
1793-94 ல் தஞ்சை மாவட்டத்தில் ஆங்கிலேய அதிகாரிகளால் வசூலிக்கப்பட்ட கள் வரி 1088 ரூபாய்(700 சக்கமா).
1859ல் பூனாவின் பெரிய சாராய தாதாவான துபாஷ் ஆங்கிலேய அரசு நம் மக்களிடம் விற்பதற்காக 10 ஆயிரம் பேரை வைத்து சாராயம் காய்ச்ச ஆரம்பித்தான்.
1898ல் ஸ்காட்லாண்டைச் சேர்ந்த மெக்டொவல்ஸ் தென்னிந்தியாவில் சரக்கு தயாரிக்க ஆலையை நிறுவியது.
1902-03 ல் அதே தஞ்சை மாவட்டத்தில் கள் வரியாக கிடைத்தது 9,28,000 ரூபாய்.
2010-11 களில் தமிழ்நாட்டில் டாஸ்மாக்கின் குடியால் வந்த வருமானம் 14,965 கோடி ரூபாய்.
2011 – 12-ல் 2 ஆயிரம் இலட்சம் பீர் பெட்டிகளும், 1,100 இலட்சம் விஸ்கி பெட்டிகளும், 540 இலட்சம் ரம் பெட்டிகளும், 280 இலட்சம் பிராந்தி பெட்டிகளும், 20 இலட்சம் வோட்கா பெட்டிகளும், 60 இலட்சம் ஜின் பெட்டிகளும் இந்தியாவில் விற்கும் என கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு பெட்டியில் 48 ‘குவார்ட்டர்அல்லது 24 ‘ஆஃப்அல்லது 12 ‘ஃபுல்இருக்கலாம்.
இந்தியாவில் இப்போது 35 கோடிப் பேர் குடிகாரர்கள்.
நாம ஸ்..ஷ்..டெடியாத் தான் போய்க்கிட்டு இருக்கோம்.
மேலும் தெளிய படியுங்கள்... http://www.vinavu.com/2011/11/19/drunk/

Saturday, November 12, 2011

உங்களுக்கு 250 பேஸ்புக் நண்பர்கள் இருக்கலாம்... ஆனால் 2பேர் மட்டுமே நெருங்கிய நண்பர்கள்.

உங்களுக்கு 250 பேஸ்புக் நண்பர்கள் இருக்கலாம்... ஆனால் 2பேர் மட்டுமே நெருங்கிய நண்பர்கள். 
- வென்ஸி லூங்க்(Wency Leung)


உங்களுக்கு கணக்கிலடங்கா பேஸ்புக்(facebook) நண்பர்களும், டிவிட்டர் பின்தொடர்பவர்களும் (twitter followers) இருக்கலாம்.
ஆனால் அவர்களில் எவ்வளவு பேர் உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் ?

சமீபத்தில் அமெரிக்காவில் 2000 பேருக்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பெற்ற ஒரு ஆய்வின்படி ஒவ்வொருவருக்கும் சராசரியாக 2.03 நெருங்கிய நண்பர்களே உள்ளனர்.

இந்த ஆய்வை நடத்திய கார்னல் பல்கலைக்கழகத்தைச்(Cornell University) சேர்ந்த டாக்டர் மாத்யூ ப்ராஷ்ஹியர்ஸ் இன் (Mathew Brashears) கூற்றுப்படி,இந்த 2.03 பேர் தான்( 2 பேர் தான்) நீங்கள் ஆத்மார்த்தமான நண்பராகக் கருதும் நபர்கள்; உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படும் போது நீங்கள் நாடும் முதல் நபர் இவரே. இந்த நெருங்கிய நண்பர்களின் எண்ணிக்கை 1985ல் மூன்றாக இருந்தது. இப்போது 2 ஆகக் குறைந்திருக்கிறது

ஒரு இணையதள ஓட்டெடுப்பில், டாக்டர் ப்ராஷ்ஹியர்ஸ் கடந்த ஆறுமாதங்களில் ஒருவர் தனது முக்கியமான விஷயங்களை பறிமாறிக்கொண்ட நபர்களைப் பட்டியலிடும்படி கேட்டுக்கொண்டார். பதிலளித்தவர்களில் 48 சதவீதம் பேருக்கு ஒரே ஒரு நெருங்கிய நண்பரே இருந்தார். 18 சதவீதம் பேருக்கு நெருங்கிய நண்பர்கள் 2பேர் இருந்தனர். 29 சதவீதம் பேருக்கு நெருங்கிய நண்பர்கள் எண்ணிக்கை 2பேருக்கு மேல் இருந்தது. 4 சதவீதம் பேருக்கு நெருங்கிய நண்பர்களே இல்லை.

இம்முடிவுகளிலிருந்து மனிதனது சமூக வட்டங்கள் குறுகுகின்றன என்று நினைக்கவேண்டியதில்லை. மாறாக நாம் நமது நண்பர்களையும், அறிமுகமானவர்களையும் வெவ்வேறாக வகைப்படுத்துகிறோம் என்று பொருள் கொள்ளலாம். சமூக தொடர்புத் தளங்கள் நம்மை மிக அதிகமான நபர்களுடன் தொடர்புகொள்ள வாய்ப்பளித்திருந்தாலும், மிக நெருக்கமான விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள நாம் மிகச் சிலரையே தேர்ந்தெடுக்கிறோம்.

இதன் பொருள் நாம் சமூகத் தனிமை அடைகிறோம் என்பதல்ல. பதிலாக நம் நண்பர்கள் நமக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள்; நமக்கு அறிமுகமானவர்களோ அறிவுரைகள்(மட்டும்) வழங்குகிறார்கள்.

ஒரு விஞ்ஞானியின் கருத்துப்படி நமது மூளையின் செயல்பாட்டுத்திறன் நமது நட்புத்தொடர்புகளின் எண்ணிக்கையை பாதிக்கிறது. 2010 ல் வெளிவந்த ஒரு மனிதருக்கு எவ்வளவு நண்பர்கள் தேவை?(How many friends does one person need ?) என்கிற புத்தகத்தில், அதன் ஆசிரியரும் பரிணாம உயிரியல்(Evolutionary Biologist) ஆராய்ச்சியாளருமான ராபின் டன்பர் (Robin Dunbar) சொல்லியிருப்பதன் படி, நமது மூளையால் ஒரே நேரத்தில் அதிக பட்சம் 150 உறவுத்தொடர்புகளை(relationships) மட்டுமே நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும்.

இதற்கு மேல், எவ்வளவு அதிக நண்பர்கள் நமக்கு உண்டோ அவ்வளவு குறைவாகத் தான் நமக்கு அவர்களைப் பற்றித் தெரிந்திருக்கமுடியும். இந்த 150-நண்பர்கள் என்கிற வரையறையானது ஒரு அலைவரிசையில் அமைக்கப்படும் நமது உறவுத் தொகுப்புகளை கணக்கில் கொண்டு சொல்லப்படுகிறது. இக்கற்றையின் ஒரு புறத்தில் 5 பேர் வரைகொண்ட நம் நெருங்கிய நண்பர்கள் வருவார்கள்; இவர்களிடம் வாரத்தில் ஒரு முறையாவது நாம் பேசிவிடுகிறோம். இன்னொரு முனையில் ஒரு நூறு பேர் வரை கொண்ட அறிமுகமானவர்கள்; இந்த 100 பேரிடம் நாம் வருடத்தில் ஒரு முறைதான் பேசுகிறோம். அல்லது அடிக்கடி நமக்கு தேவையேயில்லாத / சம்பந்தமில்லாத விஷயங்களைப் பற்றி மட்டுமே  பேசுகிறோம்.

மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உங்கள் வாழ்க்கையின் நண்பர்களைப் பற்றி சரியாக பிரதிபலிக்கிறதா ?
---------------------
இக்கட்டுரை பின்வரும் இணையதளப் பத்திரிக்கைக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. 
http://www.theglobeandmail.com/life/the-hot-button/you-may-have-250-facebook-friends-but-only-two-are-close-pals-says-study/article2230818/

- தமிழில் அம்பேதன்.
 

Tuesday, October 18, 2011

மைக்ரோசாப்ட் கொள்ளைக்காக புரட்சித் தலைவி வழங்கும் இலவச மடிக்கணினி!


ஓட்டுக்கட்சித் தலைவர்களை தெய்வமாகப் பார்க்கும் பக்த மனப்பான்மைக்கும், அதே தலைவர்களை தமது வியாபார நலன்களின் கூட்டாளிகளாகப் பார்க்கும் கார்ப்பரேட் மனப்பான்மைக்கும் இடையேயான கள்ளக்காதலின் விகாரமான வெளிப்பாடுகளில் ஒன்று தான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு இலவசங்களை வாரி வழங்குவதாக தேர்தலில் போட்டியிடும் அரசியல் தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள். இந்த கவர்ச்சித் திட்டங்கள் மக்களின் தாலியறுத்து சாராயம் விற்ற காசில் தூக்கியெறியப்படும் எலும்புத் துண்டுகள் என்பது ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் இவையே பன்னாட்டுக் கார்பொரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க வகைசெய்யும் அட்சய பாத்திரங்களாகவும் விளங்குகிறது.
இந்தவகையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில் கருணாநிதியுடன் போட்டியில் முந்துவதற்கு, ஜெயலலிதா அறிவித்த இலவசத் திட்டங்களில் முக்கியமானது மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்புகள் (மடிக்கணினி) வழங்கும் திட்டம்.
கடந்த செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாளில் ஜெயலலிதா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இந்தத் திட்டத்தின்படி இந்த ஆண்டு 9,12,000 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மொத்தம் 70 லட்சம் மடிக்கணினிகளை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக கணினிகளை கொள்முதல் செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசின் எல்காட் கார்ப்பரேஷனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்காக முதல்கட்டமாக 9,12,000 மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்காக எல்காட் (ELCOT) நிறுவனம் ஜூன் 4, 2011 அன்று வெளியிட்ட டெண்டரின்படி – லினக்சு (LINUX) மற்றும் விண்டோசு (Windows Starter Edition) இயங்குதளங்கள், விண்டோசுக்கு கட்டாயமாகத் தேவைப்படும் ஆண்டிவைரஸ் மென்பொருள் ஒரு ஆண்டு உரிமத்துடன், 320 GB ஹார்ட் டிரைவ், 1.3 மெகாபிக்சல் ஒளிபடக் கருவி (Webcam), Wi-Fi வலையிணைப்பு வசதி, 8X டிவிடி எழுதி (DVD Writer) போன்ற வசதிகளுடன் கணினி வழங்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலான கணினிக்கு 15,000 ரூபாய் வரை விலை ஆகலாம் என்று மதிப்பிடப்பட்டது. அதிகமான எண்ணிக்கையில் கொள்முதல் செய்ய இருப்பதால் செலவு 10,000 ரூபாய் வரை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இதில் விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது வெளிச் சந்தையில் சுமார் 2000 ரூபாய்களுக்குக் கிடைக்கிறது. இதனோடு சேர்த்து, லினக்ஸ் இயங்குதளத்தை இரட்டைத் துவக்க முறையில் (Dual boot) அளிப்பதால், கணினி பயன்பாட்டுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் உள்ளடக்குவதாக இருக்கும். மேலும், அலுவலகத் தேவைக்கான மென்பொருட்களையோ கல்விக்கான மென்பொருட்களையோ தனியே காசு கொடுத்து வாங்காமல் இலவசமாகவே லினக்ஸ் இயங்குதளத்தில் நிறுவிக் கொள்ள முடியும்.
இந்நிலையில், எல்காட் நிறுவனம் தனது ஜூன் 4-ம் தேதியிட்ட டெண்டரில் திருத்தங்கள் செய்து ஆகஸ்டு 20-ம் தேதி  மறுடெண்டர் ஒன்றை வெளியிட்டது. மாற்றியமைக்கப்பட்ட டெண்டரில் லினக்ஸ் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு மைக்ரோசாப்டு விண்டோஸ் (Full Edition) மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. இது முன்னர் குறிப்பிடப்பட்டிருந்த ஸ்டார்ட்டர் எடிஷனை விட சுமார் 5000 ரூபாய் விலை கூடுதலானது. விண்டோஸ் இயங்குதளத்தின் அதிக விலைக்கு ஈடு கொடுக்க முதல் டெண்டரில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கியமான கருவிகள் சிலவற்றை இரண்டாவது டெண்டரில் எல்காட் நீக்கிக் கொண்டது.  இவ்வாறு நீக்கப்பட்டவை – வெப்கேம் மற்றும் Wi-Fi வசதி, கூடவே 320 GB ஹார்ட் டிரைவ் 160 GB ஆகக் குறைக்கப்பட்டிருந்தது.
“விண்டோஸ் தான் பயன்படுத்த எளிதானது. லினக்ஸ் கற்றுக்கொள்வது கடினம்” என்று விண்டோஸ் இயங்குதளத்தை மட்டுமே பயன்படுத்திப் பழக்கமாகி விட்டவர்களுக்குத் தோன்றலாம். முதன்முதலில் கணினி பயன்படுத்த போகும் மாணவர்களுக்கு இவை இரண்டையுமே கற்பதற்கு சம அளவிளான உழைப்பும் முயற்சியுமே தேவை. அது மட்டுமல்லாமல், லினக்ஸ் போன்ற கட்டற்ற இலவச மென்பொருட்களை பள்ளிகளிலும் அரசு அலுவலங்களிலும் எந்தச் சிக்கலும் இன்றி வெற்றிகரமாகப் பயன்படுத்தும் முன்மாதிரி ஏற்கனவே சில இந்திய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உலகளவிலும் சில நாடுகளில் அதிக செலவு பிடிக்கும் விண்டோஸ் இயங்குதளத்தைக் காட்டிலும் லினக்ஸ் உள்ளிட்ட இலவச மென்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.
2007-ஆம் ஆண்டு கேரள அரசு, எதிர்கால கணினித் துறையின் முன்னோடி என்று போற்றப்படும் தனது தகவல் தொடர்பு கொள்கையில் ‘அரசுத் துறைகளில் சுதந்திர கட்டற்ற மென்பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்’ என்று அறிவித்தது. கணினி அறிவை மக்களிடையே பரப்பவும், மென்பொருள் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கும் வழிகாட்டலாக அந்தக் கொள்கை ஏற்படுத்தப்பட்டு நடைமுறைபடுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டின் எல்காட் நிறுவனம், 2007-ஆம் ஆண்டு அப்போதைய எம்.டி உமாசங்கரின் வழிகாட்டலில் அனைத்து அரசு அலுவலகங்களிலும், பஞ்சாயத்துகளிலும், பள்ளிகளிலும் கட்டற்ற சுதந்திர மென்பொருட்களை பயன்படுத்துவது என்று முடிவு செய்து மைக்ரோசாப்டின் ஆதிக்கத்தை உறுதியாக வெளியேற்றியது. 30,000 அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் லினக்சில் பயிற்சி பெற்றனர். இந்த முடிவின் மூலம் தமிழ்நாடு அரசு ஆண்டு தோறும் 400 கோடி ரூபாய்கள் மிச்சப்படுத்துகிறது.
லினக்ஸ் பயன்பாட்டில் எல்காட்டின் வெற்றிக்கதை
மேற்சொன்ன “முன்மாதிரிகளை பின்பற்றி மாணவர்களுக்கு வழங்கும் மடிக்கணினிகளில் லினக்சு மட்டும்தான் நிறுவப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் அரசின் செலவைக் குறைப்பதோடு மட்டுமில்லாமல், வைரஸ் தொல்லை இல்லாத பயன்பாட்டுச் சூழலையும் ஆயிரக்கணக்கான கட்டற்ற மென்பொருட்களை பயன்படுத்திக் கற்றுக் கொள்ளும் வசதிகளையும் மாணவர்களுக்கு அளிக்கலாம்” என்று கணினித் துறைசார் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.
இணையப் பயன்பாட்டின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில் Wi-Fi,  வெப்கேமரா போன்ற முக்கியமான வசதிகள் இல்லாத மடிக்கணினியை மாணவர்களுக்குக் கொடுப்பது தொலைதொடர்பு பாடங்களை பெறுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கு சமமாகும். மட்டுமல்லாமல், விண்டோஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்துவதில் வைரஸ் போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த மடிக்கணினிகளை வாங்கும் ஏழை மாணவர்கள் மேல் வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள் வாங்க வேண்டிய சுமையும், தொடர்ந்து விண்டோஸ் இயங்குதளத்திற்கான அப்டேட்ஸ்களை செய்ய வேண்டிய சுமையும் விழுகிறது.
விண்டோஸ் இயங்குதளத்தின் தன்மையின் படியே, தொடர்ந்த பயன்பாட்டில் அது தனது இயங்கு திறனை இழந்து விடுமென்பது இத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆக, மாணவர்களின் கல்வி உதவிக்காக என்று சொல்லிக் கொடுக்கப்படும் ஒரு பொருள் தீராத தலைவலியாக மாறப் போவது தான் எதார்த்தமான உண்மை. மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்குச் செல்லாமல் விண்டோஸைக் கட்டிக் கொண்டு மாரடிக்கப்போகிறார்கள். இதில் பழுது பார்க்கும் செலவும் ஆண்டி வைரஸ் மென்பொருட்களின் லைசென்ஸுகளை புதுப்பிக்கும் செலவும் வேறு மாணவர்களின் தலையில் இறங்கப் போகிறது.
ஈழத்தாயின் மனதையே மாற்றி விடுமளவிற்கு ஜூன் 4க்கும் ஆகஸ்டு 20க்கும் இடையில் என்ன தான் நடந்திருக்கும்?  அதைச் சொல்வதற்கு முன் மைக்ரோசாப்டு விண்டோஸ் இயங்கு தளத்தின் விலை ஏன் இவ்வளவு அதிகமாக இருக்கிறது, லினக்ஸ் முதலான கட்டற்ற மென்பொருட்கள்தான் பரவலான மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கான வழி என்று ஏன் சொல்கிறோம் என்பதைப் பற்றி சுருக்கமாக பார்த்து விடுவோம்.
ணினித் துறையில் மென்பொருட்களை வணிக முறையில் கொள்ளை லாபம் வைத்து விற்பதற்கு  மைக்ரோசாப்டு முதலான முதலாளித்துவ ஏகபோக நிறுவனங்கள் கண்டுபிடித்த உத்திதான் closed source எனப்படும், மூலநிரல் பூட்டப்பட்ட மென்பொருள் உரிம முறை. மென்பொருள் விற்பவர்கள் பைனரியை மட்டும் வாங்குபவருக்கு கொடுத்து விட்டு, மூலநிரல் வடிவத்தை தம்மிடமே வைத்துக் கொள்வதன் மூலம் மென்பொருள் பயன்பாடு, எதிர்கால மாற்றங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ச்சியாக பணம் கறக்கும் உத்தியை வளர்த்தெடுத்தனர். இதன் மூலம் கணினித் தொழிலில் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தமது ஏகபோகத்தை நிலைநாட்டிக் கொண்டன.
1980களில் ஆரம்பித்த இந்த ஏகபோக போக்குகளுக்கு எதிராக மக்கள் நலன் நோக்கில் சுதந்திரச் சிந்தனை கொண்ட மென்பொருள் வல்லுனர்கள் ஆரம்பித்த முயற்சிகளின் ஒரு பகுதிதான் லினக்ஸ் என்ற இயங்குதளம். இந்த முறையில் மென்பொருள் மூலநிரல் எல்லோருக்கும் கிடைக்கும்படி பொதுவில் (இணையத்தில்) வெளியிடப்படுகிறது. இங்கே யாரும் மூலநிரலுக்கு உரிமை பாராட்டுவதில்லை – சொந்தம் கொண்டாடுவதில்லை – அறிவுச் சொத்தை பணம் காய்ச்சி மரமாக நினைப்பதில்லை – ஏகபோகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கருதுவதில்லை. உலகெங்கிலும் உள்ள மென்பொருள் தன்னார்வ வல்லுனர்கள் மூலநிரலை எடுத்துத் தமக்குத் தேவையான வசதிகளைச் சேர்த்து இணையத்தில் எல்லோருக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்கின்றனர்.
இவ்வகையான மென்பொருட்களில் ஏற்படும் பிழைகளை உடனுக்குடன் சரிசெய்து மேம்படுத்திக் கொள்கின்றனர். இதற்காகவே உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான இலவச மென்பொருள் தன்னார்வலர்கள் லாப நோக்கமற்று தங்கள் உழைப்பைச் செலுத்தி வருகிறார்கள். விற்பனையின் மூலம் கொள்ளை லாபம் என்ற நோக்கம் இல்லாமல் தமது தேவைகளுக்காக உழைத்து அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்ற அடிப்படையில் இத்தகைய மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்படவும், வளர்க்கப்படவும் செய்யப்படுகின்றன.
இந்த முறையில் உருவாகும் ஆயிரக்கணக்கான மென்பொருட்களில் முக்கியமான சில – லினக்சு இயங்குதளம், பயர்பாக்ஸ், குரோமியம் போன்ற இணைய உலாவிகள், மைஎஸ்கியூஎல் டேடாபேஸ், அப்பச்சே வெப்சர்வர், சாம்பா போன்றவை.
ஒரு முதலாளி இருக்க வேண்டும். அவருக்கு தொழிலாளிகள் இருக்க வேண்டும். அவர்களுக்குள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற போன்ற போட்டிகள் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் தானே உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் இருக்கும்? இதன் மூலம் தானே தரமான பொருட்கள் உருவாக முடியும்? என்று நீட்டி முழக்கும் முதலாளித்துவ ஆதரவாளர்களுக்கு சமூகம்  அளித்த பதில் தான் லினக்ஸ் உள்ளிட்ட இலவச மென்பொருட்கள். இப்படி எந்த லாப நோக்குமே இல்லாமல் வெறும் சமூக நோக்கில் உருவாக்கியளிக்கப்படும் இந்த மென்பொருட்கள், மைக்ரோசாப்ட் போன்ற கார்பப்ரேட்டுகள் வழங்கும் மென்பொருட்களை விட பன்மடங்கு மேம்பட்ட தரத்தில் இருக்கிறது. மைக்ரோசாப்டின் மென்பொருட்களுக்கு ஏற்படும் வைரஸ் தாக்குதல் போன்ற அசம்பாவிதங்கள் லினக்ஸில் ஏற்படுவதில்லை. அதற்காக தனியே ஆயிரக்கணக்கில் தண்டம் அழவும் தேவையில்லை.
1991-ல் வெளியிடப்பட்ட லினக்சு 20 ஆண்டுகளில் இயங்குதள பயன்பாடுகளில் பெரிய அளவு இடத்தைப் பிடித்திருக்கிறது. பழைய யூனிக்சு இயங்கு தளங்கள், சன் சோலாரிஸ் இயங்கு தளம் இவற்றிற்கான மாற்று சந்தையில்  மைக்ரோசாப்டு விண்டோசுக்கு போட்டியாக லினக்ஸ் முந்துகிறது.
இப்படி சரிந்து வரும் தனது ஏகபோகச் சந்தையைத் தக்க வைத்துக் கொள்ள மைக்ரோசாப்டு சட்டரீதியாகவும் சட்ட விரோதமாகவும் தொடர்ந்து முயன்று வருகிறது. இது ஒரு எல்லையைக் கடந்து, மேற்கத்திய ஏகாபதிபத்திய நாடுகளிலேயே சகிக்க முடியாத கட்டத்தை அடைந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சந்தை ஏகபோகத்தை எதிர்த்து தீர்ப்பு அளித்துள்ளன. மறுபுறம் லினக்ஸ் மேலே சொன்ன திறந்த முறையில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு இன்று முழுமையான ஒரு பயனர் இயங்கு  தளமாகவும் கிடைக்கிறது.
டிவிடி எழுதும் செலவை மட்டும் கொடுத்து லினக்சு வாங்கிக் கொண்டால் அதில் இயங்குதளம் மட்டுமின்றி, அலுவலக மென்பொருள், மென்பொருள் நிரலாக்கக் கருவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கட்டற்ற மென்பொருட்கள் மூலநிரலுடன் நிறுவிக் கொள்ளலாம். பொதுவான பயன்பாடுகளான இணைய பயன்பாடு, மின்னஞ்சல் அனுப்புதல், அலுவலக ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பணிகளில் லினக்சு விண்டோசை விட சிறப்பாக செயல்படுகிறது. கூடவே, விண்டோஸின் சாபமான வைரஸ் தாக்குதல் போன்ற நச்சுநிரல்களின் தொல்லையும் இல்லை.
கணினித் துறையைப் பொறுத்த வரை கணினி இயங்கும் சூழலை கட்டுப்படுத்தும் நிறுவனம் மற்ற எல்லா மென்பொருட்களையும் கட்டுப்படுத்தும் வல்லமையையும் பெறுகிறது. உதாரணமாக, விண்டோசு இயங்குதளம் பயனர் கணினிகளில் பெருமளவு பயன்படுத்தப்படுவதால், அதில் பயன்படுத்தப்படும் அலுவலக மென்பொருட்கள், தகவல் பகிர்வு மென்பொருட்கள், நிரல் உருவாக்க கருவிகள் சந்தைகளிலும் மைக்ரோசாப்டு தனது ஏகபோக ஆதிக்கத்தை பரப்ப முடிகிறது.
இந்த ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக கணினி நிறுவனங்களை போட்டி இயங்குதளங்கள் நிறுவி கணினிகளை விற்கக் கூடாது என்று மிரட்டுவது (சொன்னதைக் கேட்கா விட்டால், விண்டோசு உரிமத் தொகையை 4 மடங்காக ஏற்றி விடுவேன்!), அரசாங்கங்கள் கட்டற்ற மென்பொருள் பயன்படுத்த முயற்சிக்கும் போது, அமெரிக்க வெளியுறவுத் துறையின் துணையுடன் அந்த அரசுகளின் மீது அழுத்தம் கொடுப்பது, லஞ்சம் கொடுப்பது போன்ற எதுவும் கைகொடுக்காவிட்டால், இலவசமாகவே விண்டோஸ் இயங்குதளத்தைக் கொடுத்து விடுவது. இயங்குதளத்தை இலவசமாகக் கொடுப்பதன் மூலம், பிற பயன்பாட்டு மென்பொருட்களில் கொள்ளை லாபம் அடித்துக் கொள்வது என்று சந்தையைத் தக்க வைத்துக் கொள்ள அயராது பாடுபடுகிறது மைக்ரோசாப்டு.
அமெரிக்க அரசு வியட்நாம் அரசை 3 லட்சம் விண்டோசு உரிமங்கள் வாங்க கட்டாயப்படுத்தியதையும், துனீசியா நாட்டில் அந்நாட்டு அதிபரின் மனைவி நடத்தும் சமூக சேவை நிறுவனத்துக்கு மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் உதவி அளித்ததன் (விண்டோசு உரிமங்கள் அளித்ததன்) மூலம் அரசுக் கொள்கையை தனக்குச் சாதகமாக மைக்ரோசாப்டு மாற்றிக் கொண்டதையும் கடந்த ஆண்டு வெளியான விக்கிலீக்ஸ் கேபிள்கள் அம்பலப்படுத்தின.
இந்தியாவைப் பொறுத்தளவில் மைக்ரோசாப்ட் அத்தனை சிரமப் படத் தேவையே இல்லை. இந்திய ஆளும் வர்க்கக் கும்பல் அமெரிக்கா கண்ணைக் காட்டினால் கடலில் கூட பாய்ந்து விடத் தயாராக இருக்கும் போது அவர்களுக்குக் கவலையென்ன. கடந்த ஜூலை மாதம் ஹிலாரி கிளிண்டன் ஜெயலலிதாவைச் சந்தித்தது நினைவிருக்கிறதல்லவா? அந்தச் சந்திப்பைப் பற்றி எழுதிய ஜூ.வி ரிப்போர்ட்டர் போன்ற கிசுகிசு பத்திரிகைகள் என்னவோ பக்கத்திலேயே குத்தவைத்து உட்கார்ந்து வேடிக்கை பார்த்தது போல, ‘அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் லிப்ட் ஏறிப் போய் அம்மாவைப் பார்த்தார்கள், ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று அம்மா சொன்னதை கைகட்டி வாய் பொத்தி கேட்டுக் கொண்டு போனார்கள்’ என்றெல்லாம் மாற்றி மாற்றி சொறிந்து கொண்டதை நாம் மறந்திருக்க மாட்டோம்.
சீமான் போன்ற புதிய கோமாளிகள் முதல் பழம் பெருச்சாளிகளான தமிழனவாதக் குழுக்கள் வரை ‘ஈழம் காத்த தாயே…’ என்று ஆரம்பித்து விதவிதமான ‘அம்மா’ புகழ்பாடி ஊரெல்லாம் சுவரொட்டி அடித்து புளகாங்கிதம் அடைந்து கொண்டார்கள்.
அந்தச் சந்திப்பில் உண்மையில் நடந்தது என்ன? தனக்கு தேர்தல் நிதி அள்ளிக் கொடுத்த ‘மைக்ரோசாப்டு நிறுவனத்தின் நலன்கள் தமிழ்நாட்டில் காப்பாற்ற வேண்டும்’ என்று ஹிலாரி கிளின்டன் சொன்னதை ஜெயலலிதா கைகட்டி வாய் பொத்தி கேட்டுக் கொண்டார் என்பதுதான் நடந்ததுள்ளது. இதைத் தான் இந்த மடிக்கணினி டெண்டர் மாற்றங்கள் சுட்டிக் காட்டுகின்றன.   இதன் மூலம் 5 ஆண்டுகளில் கிடைக்கப் போகும் வருமானம் 3000 கோடி ரூபாய் மைக்ரோசாப்டுக்கு டீச்செலவுக்குச் சரியாகப் போகும் சிறுதொகையாக இருக்கலாம், ஆனால், மூலநிரல் பூட்டப்பட்ட மென்பொருளில் பயிற்றுவிக்கப்படும் தமிழ்நாட்டின் மாணவர்களும் அவர்கள் மூலம் தமிழ்நாட்டு சமூகமும் எதிர்காலத்தில் மைக்ரோசாப்டுக்கு கப்பமாக கட்டப் போவது லட்சக்கணக்கான கோடி ரூபாய்களான சுமையாக இருக்கப் போகிறது.
இது ஒருபக்கமிருக்க, ஒரு நாட்டு அரசின் டெண்டரைக் கூட தலையிட்டு கட்டுப்படுத்தும் வல்லமை அமெரிக்காவுக்கு இருப்பதும், இறையாண்மை மாநில உரிமையெல்லாம் கிழிந்த காகிதமாக பறக்கவிடப்படுவதும் வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. இன்னொரு பக்கம் ‘புரட்சித் தலைவி’  அசைக்க முடியாத இரும்புப் பெண்மணி என  தினமலர்-இந்து-தினமணி-துக்ளக்குகள் கட்டி வந்த கதையும் அம்பலமாகியிருக்கின்றது
கவர்ச்சித் திட்டங்கள் ஊரை ஏமாற்றும் எத்து வேலைகள் தானென்றும், இவையெல்லாம் மக்களின் தாலியறுத்த காசில் எறியப்படும் எலும்புத்துண்டுகளென்றும் நாம் சொல்லி வந்தோம். கருணாநிதி பத்தடி பாய்ந்தால் அம்மா பதினோரடியாவது பாய வேண்டுமல்லவா? எனவே இதிலும் அம்மா ஒருபடி மேலே செல்கிறார். மக்களின் வரிப்பணத்தை அள்ளிக் கொடுத்து அமெரிக்காவிலிருந்து கழுதை விட்டைகளை இறக்குமதி செய்து மக்களின் தலையில் கட்டப்பார்க்கிறார்.
_________________________________________________________
- குமார்
தகவல்மூலம் - http://www.tehelka.com/story_main50.asp?filename=Ws101011MICROSOFT.asp


வினவு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை இங்கு மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://www.vinavu.com/2011/10/18/laptop-scam/