Monday, December 6, 2010

2G ஊழலும் இந்திய ஜனநாயகமும்

2G ஊழலும் இந்திய ஜனநாயகமும்

இந்தியாவில் வெள்ளையர்கள் இருநூறு வருடம் ஆண்டு கொள்ளையடித்த பணத்தை மொத்தமாகக் கூட்டி வரும் பணத்தை விட பல மடங்கு பணத்தை சிம்ப்பிளாக ஒரே ஊழலில் அள்ளியதாகக் கூறப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பார்லிமெண்ட்டையே 16 நாட்களாக உலுக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த ஊழல் பற்றிய விழிப்புணர்வை ஒவ்வொருவரும் முடிந்த அளவு மற்றவர்களுக்கு பரப்பவேண்டியது அவசியத் தேவை என்று கருதுகிறேன். நான் இந்த ஊழல் சம்பந்தமாக இதுவரை பார்த்ததில், படித்ததில் எனக்குப் புரிந்த விவரங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

2007 கடைசியில் இந்திய அரசு தொ(ல்)லை தொடர்புத்துறை 2-G அலைக்கற்றை(spectrum) உரிமத்தை(license) ஏலத்தில் விடுவதாக அறிவித்ததும், முந்தைய அலைக்கற்றை உரிமம் பெற்றவர்கள் பழைய உரிமத்தின் படி தங்களுக்கும் 2G அலைக்கற்றையில் பங்கு பெற உரிமம் இருக்கும்போது புதிதாக ஏலம் விடும் முடிவை அரசு எடுத்துள்ளது சட்டப்படி தவறானது என்று வாதாடியும் ராசாவின் தலைமையிலிருந்த தொலைதொடர்பு அமைச்சகம் ஜனவரி 2008 ல் தடாலடியாக (ராசாவுக்கு வேண்டப்பட்ட) 120 கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கியது 2001ன் விலையில். இதற்கு அவர்கள் மேற்கொண்ட முறை முதலில் கேட்டு வருபவருக்கே லைசென்ஸ் என்கிற கொள்கை. விளக்கமாகச் சொன்னால் பந்திக்கு முந்துபவருக்கே பாயாசம். முதலில் அறிவித்த ஏலத் தேதியை முன்னறிவிப்பின்றி திடீரென முன்தள்ளி(?), நம் டாட்டா முதல் ராசாவுக்கு வேண்டப்பட்ட கம்பெனிகளுக்கு மட்டும் தனியாக பந்தியின் தேதியும் நேரமும் சரியாக தெரிவிக்கப்பட அவர்கள் வந்து மூன்று மணிநேரத்தில் ஆயிரக்கணக்கான கோடிகளை கொட்டி அள்ளிக்கொண்டு போனார்கள் லைசென்ஸ்களை.

1-G, 2-G, 3-G மற்றும் 4-G.
செல்போன் தொழில் நுட்ப வளர்ச்சியின் மைல்கல்களே 1-G முதல் 4-G(G –Generation) வரை பெயர்கொண்ட இந்த தொழில்நுட்பங்கள். 1980களில் வந்தது முதல்-ஜி; அடிப்படையான தொலைபேசும் வசதி மட்டும் கொண்டது, ஒத்திசை அலைக்கற்றை (Anlog spectrum)ஐ அடிப்பைடயாகக் கொண்ட தொழில் நுட்பம்.
1991ல் அறிமுகமான 2-G டிஜிட்டல்(Digital) தொழில்நுட்பம் அதைவிட முன்னேறியது. கையடக்க செல்போன்கள், எஸ்.எம்.எஸ் (SMS), ஈமெயில்(email), துல்லியமான ஒலி போன்ற கூடுதலான வசதிகள். இந்த 2Gயில் தான் நமது அமைச்சர் ராசா செய்த ஊழல்கள் வருகின்றன.
2005ல் வந்த 3-Gல் மொபைல் டிவி, வீடியோ கான்பரன்ஸிங், எம்.எம்.எஸ்(MMS) ஜி.பி.எஸ்(GPS) போன்ற வசதிகள் இணைக்கப்பட்டன. 4-G 2012 வாக்கில் இங்கு வரும். அதில் மேலும் துல்லியம்; டி.வி. நிகழ்ச்சிகளை அதே துல்லியத்தில் பார்ப்பது, ஹை ஸ்பீடு இண்டர்நெட்(High speed internet) போன்ற வசதிகள்.

சரி. ஊழலுக்கு வருவோம். இதற்கு வித்து 1999லேயே பாலிசியாக போடப்பட்டது தொலைத் தொடர்புத் துறையின் வருமானப் பங்கீடு”(National Telecom Policy) கொள்கை மூலம். இதன்படி தொலைத் தொடர்புத்துறை நிறுவனங்கள் (பி.எஸ்.என்.எல் தவிர மற்ற எல்லாம் தனியார்) தங்களது வருமானத்தை அரசுடன் லைசென்ஸ் பணம் செலுத்தல் என்கிற வகையில் பகிர்ந்து கொள்ளும். அதாவது பிச்சைக் காசு கொடுக்கும். உமி நான் கொண்டு வரேன். கடலை நீ கொண்டு வா. ரெண்டு பேரும் ஊதி ஊதி திங்கலாம்ன்னு ஒரு பழமொழி உண்டு. கடலை - 2001லிருந்து 2008க்குள் 3 கோடியிலிருந்து 40 கோடியாக உயர்ந்துள்ள, பிஎஸ்என்எல் ஐ அமுக்கியதால் தனியார் பக்கம் போன, செல்போன் வாடிக்கையாளர்களிடமிருந்து பிரைவேட் கம்பெனிகள் அடைந்த லாபம். உமி - லைசென்ஸ்க்காக பிரைவேட் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தும் பிச்சாத்துப் பணம். நமது அரசு இந்த கடலை-உமி டீல் ரொம்ப நியாயமானது என்று மக்களை நம்ப வைத்திருக்கிறது. இந்தக் கடலையில் தான் ஆ.ராசா கைவைத்து சுமார் 1,76,0000 கோடி(கடைசியில் கூட 7 சைபர்கள் சேர்த்துக்கொள்ளவும் ) ரூபாய் பணத்தை தனது நண்பர்களான டாடா, அம்பானி, மிட்டல்களின் கம்பெனிகளுக்கு வழங்கிவிட்டார். இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் 1-G ஏலமும் இதே போன்ற பாணியில் விடப்பட்டது என்கிறார்கள். ராசாவும் "எனக்கு முந்தையவர் செய்ததைத் தான் நான் செய்தேன். பிரதமரைக் கேட்டுத் தான் செய்தேன்" என்று தைரியமாக ஸ்டேட்மண்ட் விடுகிறார்.

எப்படிச் செய்தார் ராசா ?
ஜனவரி 2008. ஏலம் விட்ட தேதியை ஒருவாரம் திடீரென முன்தள்ளி வைத்தார் தொலைதொடர்பு அமைச்சர் ராசா. பொதுவாக ஏலத் தேதியை பின்தள்ளி தான் வைப்பார்கள். இன்னும் பலபேருக்கு விஷயம் தெரிந்து அவர்களும் ஏலத்தில் முறையாக பங்குபெறவே பின்தள்ளி வைப்பார்கள். இங்கே ராசா முன்தள்ளி வைத்தார். மூடிவைத்த டெண்டர், நடுவர், முன்பணயத் தொகை என்று அம்பதாயிரம்-லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாதாரண கார்ப்பரேஷன் கக்கூஸ் காண்ட்ராக்ட்டுக்கே ஏகப்பட்ட வழிமுறைகள் கொண்ட நம் அரசில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட இந்த காண்ட்ராக்ட்டுக்கள் வழங்கவும் நிறைய பாலிசிக்கள் இருந்திருக்கின்றன. எல்லாவற்றையும் ஸ்டைலாக மீறியிருக்கிறார் ராசா.

2008ல் விடப்பட்ட ஏலத்தின் விதிமுறைகள் 2003ல் TRAIஆல் வகுக்கப்பட்டவை. அதன்படி ஏற்கனவே 1G உரிமம் பெற்றிருந்த ஆப்பரேட்டர்கள் 2-Gயிலும் உரிமம் பெற்றக் கொள்ள சரியான மதிப்பிடப்பட்ட தொகை செலுத்தவேண்டும். பின்னர் 2-G உரிமத்தில் அவர்களது லைசென்ஸ் தொகை மட்டுமல்லாது அவரவர் அலைக்கற்றை பயன்பாட்டு வீதப்படி அவர்களிடமிருந்து பணம் தொடர்ந்து வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் ராசா 1G-ஆப்பரேட்டர்கள்  2Gக்கு நுழைய 2008ல் விதித்த ஆரம்ப விலைகள் 2001 காலத்திய விலைகளாகவே இருந்தன. அந்தக் கணிசமான பணத்தோடு ஏர்டெல் போன்ற பகாசுரர்கள் அனாயசமாக 2-Gயையும் பெற்றார்கள். மற்றபடி பயன்பாட்டு வீதப்படி பணம் வசூலிக்கும் திட்டம் கைகழுவி விடப்பட்டது.

அடுத்ததாக. முதலில் வந்தவருக்கு முதலில் முன்னுரிமை என்கிற பாலிஸி(First come first served basis). இதன்படி லைசென்ஸ் கேட்டு வந்த எல்லா விண்ணப்பங்களும் தொலைதொடர்புத் துறையில் தேதியிடப்பட்டு குறித்து வைக்கப்பட்டிருக்கும். பின்னர், ஒவ்வொருவருக்கும் லைசென்ஸ் பெறுவதற்கான கடிதம் இந்த வரிசைக் கிரமத்திலேயே அனுப்பப்பட்டு, 15 நாட்களில் லைசென்ஸ் பெற அவர்கள் தவறினால், அந்த லைசென்ஸ்கள் அடுத்த தேதியில் கோரியவருக்கு தர வாய்ப்பளிக்கப்படும். இது ஒரு சரியில்லாத அனுகுமுறை என்பது ஒன்று. ஆனால் இதிலும் ராசா விளையாடியிருக்கிறார். மார்ச் 2006 முதல் செப்டம்பர் 2007 வரை வந்த விண்ணப்பங்கள் அனைத்திற்கும் ஒரே நாளில், அதாவது ஜனவரி 10, 2008 அன்று, ஒரே நேரத்தில் எல்லோருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன; அதே நாளில், ஒரு மணி நேரத்திற்குள் டி.டி(D.D) மற்றும் பேங்க் கியாரண்டியுடன் உடனே வந்து லைசென்ஸ் உரிமம் பெறும்படியும், இல்லாவிட்டால் வரிசையில் அடுத்தவர்களுக்கு லைசென்ஸ் தரப்படும் என்று. கடிதம் கிடைத்த ஒரு மணிநேரத்தில் எந்தக் கம்பெனியாலும் டி.டி மற்றும் தேவையான விஷயங்களுடன் ஆ.ராசாவின் அலுவலகத்திற்கு வரமுடியவில்லை ராசாவிடம் ஏற்கனவே மறைமுகமாக தகவல் பெற்றிருந்த 120 கம்பெனிகளைத் தவிர.
அதில் ராசாவின் இரண்டு பினாமிக் கம்பெனிகளும் அடக்கம். இவர்கள் மட்டும் வந்தார்கள்; லைசென்ஸ்களை வென்றார்கள். இவற்றில் ஒன்று ரியல் எஸ்டேட் கம்பெனியாம். நடுவில் TRAI, சட்ட அமைச்சகம், நிதியமைச்சகம் போன்றவற்றின் இந்த மாதிரி இஷ்டத்துக்கு ஏலம் நடத்தக்கூடாது என்ற அறிவுரைகளை ராசா கண்டுக்கவில்லையாம் (அவங்களும் கேக்காட்டி போறான்னு உட்டுட்டாங்களாம்!?).

நம்ம தலைப்பாக் கட்டு பிரதமரும் அறிவுறுத்தினாராம் ஆனாலும் ராசா கேட்கலையாம். பிரதமரும் கேக்காட்டி போறாருன்னு விட்டுட்டாராம். நம்ப முடிகிறதா? முதலில் பிரதமரை ஏன் கவனிக்கவில்லை என்று எகிறிய சுப்ரீம் கோர்ட் இப்போது ராசாவை மட்டும் கண்டிக்கிறது ஏன் பிரதமர் சொன்னதை கேக்கலை?”ன்னு. நான் சொன்னபடி கேட்கலைன்னா தமிழ்நாட்டுக்கு வண்டியைக் கட்டுங்க ராசான்னு ஏன் சொல்லலை நம்ப தலைப்பாக்கட்டு பிரதமர் ? ஒருவேளை அவரோட அம்மாவின் ஆணைப்படி நடந்தாரோ என்னமோ. இப்போது சுப்ரீம் கோர்ட் பிரதமர் ரொம்ப யோக்கியர் தான். ராசா மட்டுமே அயோக்கியர் என்று பிரதமர் தலைப்பாகையைக் காப்பாற்ற  'ராசா பிரதமரின் அறிவுரையை ஏன் கேட்கவில்லை?' என்று பல்டி ஸ்டேட்மண்ட் விடுகிறது. 

இந்த ஊழலில் ஈடுபட்ட டுபாக்கூர் கம்பெனிகளில் ஸ்வான்(swan) என்கிற கம்பெனி, லைசென்ஸ் பெறுவதற்கே தகுதியற்றது என்று கூறப்பட்டிருந்தும், 1537 கோடி ரூபாய்க்கு லைசென்ஸை வாங்கி அதில் 42 சதவீதத்தை மட்டும் 4200 கோடி ரூபாய்க்கு உடனே எடில்சாலட்(Etilsalat) என்ற கம்பெனிக்கு விற்றது. யூனிடெக்(Unitech wireless) கம்பெனி 1661 கோடி ரூபாய்க்கு லைசென்ஸ் வாங்கி அதில் 60 சதவீதத்தை மட்டும் 6200 கோடி ரூபாய்க்கு விற்றது. இப்படியாக ஏலம் எடுத்த மொத்தம் 122 கம்பெனிகளில் 85 கம்பெனிகள் தொலைதொடர்புத்துறை ஏலம் எடுக்கத் தேவையான குறைந்த பட்ச தகுதிகூட இல்லாத கம்பெனிகள். மொத்தமாக 2G ஏலத்தில் அரசுக்கு கிடைத்த லைசென்ஸ் பணம் 10,772 கோடி ரூபாய். ஆனால் உண்மையில் அதன் மதிப்பு 1,80,000 (ஒரு லட்சத்து எண்பதாயிரம்) கோடி ரூபாய். இவ்வளவுக்கு ஏலம் எடுத்து நடத்தினாலே கம்பெனிகள் பெரும் லாபமடையும் என்றிருக்க வெறும் பத்தாயிரம் கோடி ரூபாயைக் கட்டி நாமம் போட்டுவிட்டார்கள் மக்களுக்கு (வேறு யாருக்கு). இவர்கள் தான் ஏர்டெல், டெகோமோ, யுனிநார், ஐடியா என்று டிவிக்களில் கவர்ச்சி தரும் விளம்பரங்கள் கொடுத்து, இலவச டாக் டைம்கள் கொடுத்து ஏமாற்றுபவர்களும். என்ன ஒரு ஐடியா? (“What an idea?”). "பவர் டு யு. ஆப்பு டு பொதுசனமா?"

கார்ப்பரேட்கள் நடத்தும் நியூஸ் சேனல்களும், பத்திரிக்கைகளும் இதில் தங்களது முகமூடிகளை தாங்களே கிழித்துக் கொண்டன. கார்ப்பரேட்கள் நடத்தாத, மறைமுகமாக பங்கு வைத்திருக்காத பத்திரிக்கையோ, சேனலோ இன்று இல்லை. 2008ல் ஹிந்து நாளிதழ் ஸ்பெக்ட்ரம்மில் சொல்லப்படும் பணம் அவ்வளவு அதிகமில்லை ஜெண்டில்மேன் கொஞ்சம் கம்மிதான் என்று கட்டுரை வெளியிடுகிறது. ஸ்பெக்ட்ரம்மில் ஊழல் இடது சாரிகளின் அழுகை என்று கிண்டலாக தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது இந்தியன் எக்ஸ்பிரஸ். இன்றோ தினமணியின் மதி ஸ்பெக்ட்ரம் பற்றி வெளியிட்ட கார்ட்டூன்கள் கருணாநிதியையே எரிச்சலடையுமளவுக்கு பிரபலம். நீரா ராடியா, பர்கா தத்(NDTV), விர் சங்வி(ஹிந்துஸ்தான் டைம்ஸ்) என்று தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் டாடாவுக்கும், அம்பானிகளுக்கும், மிட்டல்களுக்கும் தரகுவேலை பார்த்ததும் வெளிவந்து மக்களுக்கு ஊடகங்கள் யார் என்று படம் போட்டு காட்டிக்கொண்டிருக்கிறது. (ஆனாலும் நம் மக்கள் சன் டி.வி, கே டி.வி. தாண்டி பார்ப்பதே இல்லை. ஆதித்யா, விஜய் டி.வி, தாண்டி யோசிப்பது கூட இல்லை. இவர்களை எங்கே போய்த் தட்டி எழுப்ப?). நான் கவனித்தவரை வின் டி.வியில் காலை நேரத்தில் 8 8.30க்கு வரும் செய்தியும் நிஜங்களும் நிகழ்ச்சியில் மட்டும் எஸ்.எஸ்.மணியும், சையது பாவ்கரும் இவர்கள் எல்லோரையும் விட்டு விளாசுகிறார்கள்(அவ்வப்போது வின் டிவியின் தேவநாதன் ஆயர்குலத் தலைவரை பாராட்ட வேண்டிய தேவையிருந்தாலும்).

இவ்வளவுக்குப் பின் இருக்கும் மத்திய, மாநில அரசியல் விளையாட்டு என்னவாக இருக்கும்? ஊகிப்பது சிரமமே. மன்மோகன், சோனியா, ராகுல் உட்பட எல்லோரும் வாய் திறப்பதில்லை ஸ்பெக்டரம் பற்றி. இதற்குக் காரணம் காங்கிரஸ்-திமுக கூட்டணி தர்மம்’(?) என்று நினைக்க முடியாது. ஏனென்றால் பாஜகவின் ஊழல்களை சிபிஐ தோண்டித் தோண்டி எடுக்கும் அதே வேளை, இந்த விவகாரத்தில் மட்டும் மங்குணியாட்டம் ஆடுவது ஏன்?  ஏனென்றால் காங்கிரஸ் தலைகளுக்கும் கட்டிங் போயிருக்க வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

தாத்தா கருணாநிதியின் கதை, வசனங்களோ மிக அருமை. ராசா தாழ்த்தப்பட்டதால் தான் அவர் மேல் பழிஎன்கிறார். தாழ்த்தப்பட்டவர் என்றால் ஊழல் செய்வதை கண்டுக்கக் கூடாதா தாத்தா ? அப்புறம் தனது சொத்து விவரங்களை வெளியிடுகிறார் நமது தாத்தா. ஏன். தள்ளாத வயதில் இவர் ஆயுசு முழுதும் ஓடியாடி கொஞ்சூண்டு சேர்த்த சொத்து விவரத்தை வெளியிடுகிறார் ? இவர் போட்ட அடித்தளத்தில் சும்மா புகுந்து வூடு கட்டி, ஓடியாடி பத்தே வருடத்தில் ஆயிரங்கோடிகளாக பணத்தை அள்ளி ஆசியப் பணக்காரர்கள் வரிசையில் நிற்கும் தன் பேரன்கள், மகன்கள், மருமகன்கள் விவரத்தைக் காட்டலாமே ! இதைக் கேட்டால் பத்திரிக்கையாளர்களுக்கு அஞ்சா நெஞ்சனின் தர்ம அடி வேறு விழும்.

பாராளுமன்றக் கூட்டுக் குழு (Joint Parliament Committee)
தற்போது இடது சாரிகளின் முன்னெடுப்போடு, கொஞ்சம் பின் தள்ளி எப்போது பின் வாங்கலாம் என்று நேரம் பார்த்தபடி பாஜக வர, எல்லா எதிர்க் கட்சிகளும் பாராளுமன்றத்தை 16 நாட்களுக்கும் மேலாக ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறார்கள். அவர்களின் நிபந்தனை 2-G அலைக்கற்றை ஊழலை விசாரிக்க பாராளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்பதே. பாராளுமன்றம் தொடர்ந்து இத்தனை நாள் நடக்காவிட்டால் அரசு கவிழ்ந்து விடுமா? வாய்ப்பில்லை. ஏனென்றால் அதற்கு மெஜாரிட்டி இருக்கிறது. ஆனால் மன்மோகன் அரசோ திட்டவட்டமாக கூட்டுக்குழு விசாரணை இல்லை என்று மறுக்கிறது. 

சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணிய சுவாமி 2008லேயே இந்த ஊழல் பற்றி வழக்கு தொடுத்திருக்க இவ்வளவு நாள் அரசு ஏன் அதன்மேல் நடவடிக்கையே எடுக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியிருக்கிறது. ஆனால் சுப்ரீம் கோர்ட் கூட ஒன்றும் செய்துவிட முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் வழக்கமாக அரசு தவறிழைக்கும் போது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அரசை நல்வழிப்படுத்தி வழிநடத்திய காலங்கள் உண்டு. ஆனால் 2008களில் சுப்ரீம் கோர்ட், ஹை கோர்ட் நீதிபதிகளின் ஊழல் விவகாரங்கள் செய்தித் தாள்களில் வந்து அல்லோகலப்பட்டது. அதையும் வழக்கமாக அரசியல்வாதிகளின் ஊழலுக்கு நியமிக்கும் கமிஷன் போல் நீதிபதிகள் ஊழலை விசாரிக்கவும் 'நீதிபதிகள் விசாரணை தீர்மானம் பற்றிய சட்டவரைவு'(Judges Inquiry Amendment Bill) ஒன்றை கண்துடைப்புக்கு வசதியாக அரசு இயற்றி, கமிட்டி போட்டு கைகழுவும் வேலையைச் செய்துவிட்டது. இப்போது எதை நம்புவது? பிரதமரை நம்ப முடியவில்லை; பாராளுமன்றத்தை நம்ப முடியவில்லை; சுப்ரீம் கோர்ட்டையும் நம்ப முடியவில்லை. இது மூன்றும் தான் இந்தியக் குடியரசின் மூன்று தூண்கள். தூண்கள் எல்லாம் எவ்வளவு உறுதியானது என்றால், 97-2008க்குள்(9 வருடங்களில்) கடனுக்கு உரம் வாங்கி, விதை வாங்கி, பூச்சிக் கொல்லி மருந்து வாங்கி, கடன்களை அடைக்க முடியாமல் கடைசியில் பூச்சிக் கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து செத்துப் போன விவசாயிகள் மட்டும் 3 லட்சம் (3 லட்சத்தில் 90%க்கு மேல் பூச்சிமருந்து தான்). அவ்வளவு உறுதி ! இப்படி எல்லா கீழ்த்தட்டு மக்களையும் இந்த மூன்று ஜனநாயகத் தூண்களும் கார்ப்பரேட்டுகளின் காலில் போட்டு நசுக்கிக் கொன்றேவிட்டன.(நடுத்தட்டு மக்களுக்கு..  அவ்வப்போது சில எலும்புத் துண்டுகள் மட்டும் போட்டால் போதும்).

சரி. பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை என்பது என்ன? அது எவ்வளவு சக்தியுடையது ? அது இதுவரை நடந்த ஊழல்களில் விசாரித்து என்ன சாதித்திருக்கிறது என்பதைப் பார்த்தால் இது மொத்தமும் ஒரு நாடகமோ என்று தோன்றும். தோன்றுவது என்ன.. நாடகமே தான்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு என்பது ஏதாவது ஒரு பிரச்சனை அல்லது ஊழல் சம்பந்தமாக விசாரிக்க நாடாளுமன்ற மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்களில் சிலரை உறுப்பினர்களாகக் கொண்டு உருவாக்கப்படும் குழு ஆகும். இதன் உறுப்பினர்கள் 15லிருந்து 30 வரை இருந்திருக்கின்றனர். இவர்கள் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அல்லது சுயேச்சை உறுப்பினர்களாக இருக்கலாம். பாராளுமன்றத்தில் ஏதாவது அவையில் இது தொடர்பாக கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான நடவடிக்கையாக இக்குழு அமைக்கப்படலாம்.

நாடளுமன்ற கூட்டுக் குழுவின் அதிகாரங்கள் என்ன?  தடயங்கள் மற்றும் அறிக்கைகளை நிபுணர்களிடமிருந்து, பொது அமைப்புகள், தனிப்பட்ட மனிதர்களிடமிருந்து பெறுதல். தாங்களே அதுபோல அமைப்புகளின் உதவியோடு அறிக்கைகளை தயாரித்தல். வாய்மூலம் மற்றும் எழுத்து மூலமான வாக்குமூலங்களை மற்றும் ஆவணங்களைப் பெறுதல். இக்குழுவின் அழைப்பை சாட்சிகள் மறுத்தால் அது அவையை அவமதித்ததாகக் கருதப்படும். அதன் விசாரணை ரகசியமாக வைக்கப்படும். தேவைப்பட்டால் பத்திரிக்கை அறிக்கைகள் கொடுக்கப்படலாம். இவ்விசாரணைக்கு பொதுவாக அமைச்சர்கள் அழைக்கப்படுவதில்லை. ஆனால் தேவை ஏற்ப்பட்டால் சபாநாயகரின் அனுமதியுடன் அமைச்சரை விசாரணைக்கு அழைக்கவும் இடமிருக்கிறது. அரசு நினைத்தால் ஒரு ஆவணத்தை கூட்டுக்குழு விசாரணைக்கு தர மறுக்கலாம். சபாநாயகரின் வார்த்தையே இதில் இறுதியானது. கவனிக்கவும் சபாநாயகர் என்ன முடிவு எடுப்பாரோ அது இறுதியானது. இந்தக் கூட்டுக்குழு யாரையும் தண்டிக்க முடியாது.

ஒருவேளை கூட்டுக்குழுவின் விசாரணை முடிவதற்குள் அதன் பதவிக்காலம் முடிந்துவிட்டால் அக்குழு அதுவரை செய்த விசாரணை பற்றிய அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும். அவ்வறிக்கை அடுத்து நியமிக்கப்படும் கூட்டுக்குழுவினால் எடுத்துக்கொள்ளப்படும்.

இதுவரை நான்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைகள் நடந்துள்ளன. அவற்றால் என்ன சாதிக்கமுடிந்தது என்று பார்க்கலாம்.

முதல் குழு போபர்ஸ் ஊழலுக்காக நியமிக்கப்பட்டது. பி.சங்கரானந்த் தலைமையில் நியமிக்கப்பட்ட இக்குழு 50 அமர்வுகள் நிகழ்த்தியது. ஏப்ரல் 26, 1988ல் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் குழுவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிகம் இருந்ததால் இது ஆளும்கட்சிக்குச் சாதகமாக அறிக்கை வழங்கியதாக எதிர்க்கட்சிகள் இவ்வறிக்கையை மறுத்தன. கூட்டுக்குழு அறிக்கை பயனின்றிப் போனது.

இரண்டாவது குழு ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை ஊழலை விசாரிக்க நியமிக்கப்பட்டது. காங்கிரஸைச் சேர்ந்த ராம் நிவாஸ் மிர்தா தான் தலைவர். அப்போதைய பாராளுமன்ற அமைச்சராக இருந்த குலாம் நபி ஆஸாத்தின் தீர்மானத்தின் பேரில் ஆகஸ்ட், 1992 ல் நியமிக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவோ நடைமுறைப்படுத்தவோ இல்லை.

மூன்றாவது குழு 2001ல் நடந்த சந்தை ஊழல்களை விசாரிக்க நியமிக்கப்பட்டது. ஏப்ரல் 2002ல், பிரமோத் மகாஜன் கொண்டு வந்த தீர்மானத்தின் மேல் இக்குழு நியமிக்கப்பட்டது. பிரகாஷ் மணி திரிபாதி என்கிற ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் தலைவராக இருந்தார். 105 அமர்வுகள் மேற்கொண்டது இக்குழு. டிசம்பர் 2002ல் சமர்ப்பிக்கப்பட்ட இதன் அறிக்கையில் பங்குச் சந்தையின் பல விதிகளை மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவை அனைத்தும் பின்னால் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன.

கடைசியாக நியமிக்கப்பட்ட கூட்டுக்குழு ஆகஸ்ட் 2003ல், பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களில் இருக்கும் (உயிருக்கு ஆபத்தான) பூச்சிக்கொல்லிகளின் அளவு பற்றி விசாரித்தது. சரத் பவார் தலைமை தாங்கிய இக்குழு 17 அமர்வுகள் நடத்தியது. இதன் முடிவுகள் பிப்ரவரி, 2004ல் தாக்கல் செய்யப்பட்டன. இம்முடிவுகள் குளிர்பானங்களில் கலந்துள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் அளவை உறுதி செய்ததோடு, குடிநீர் பற்றிய புதிய கட்டுப்பாடுகளையும் விதித்தன. எல்லா அறிக்கைகளையும் போல் இவ்வறிக்கையும் பார்லிமெண்ட்டை ஒட்டியிருக்கும் பொறிகடலைக் கடையில் பொட்டலம் கட்ட போடப்பட்டது.

இந்த ஸ்பெக்டரம் ஊழலில் அரசின் ஆடிட்டர் ஜெனரலின் ஆடிட்டிங் குழுவின்(CAG) விசாரணையே போதுமானது என்று உதார் விட்டுக்கொண்டிருக்கிறது மன்மோகன் அரசு. சிஏஜிக்கு கணக்குகளை ஆடிட் செய்ய மட்டுமே இயலும். ஆனால் யாரையும் விசாரிக்க, ஆதாரங்கள் திரட்ட உரிமையில்லை. கூட்டுக்குழுவின் அறிக்கையின் லட்சணமோ மேலே கூறியது போல் இருக்கும் போது எதிர்க் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு கூட்டுக் குழு விசாரணை என்று ராகம் பாடுவதன் அர்த்தமென்ன ? உண்மை இது தான். ஊழல் செய்தவர்களை தண்டிக்க, வளைத்துப் பிடிக்க சட்டமோ, அதிகாரத்தின் வழிமுறைகளோ இல்லை. குறைந்த பட்சம் நாடாளுமன்றத்தில் கூட்டுக் குழு விசாரணை செய்வதன் மூலம் தேர்தல் லாபம் பார்க்க இயலும். இதுவே நடைமுறையில் சாத்தியமானது. இதைத்தான் எதிர்க் கட்சிகள் (இடது சாரிகள் உட்பட?) எல்லோரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றபடி, அண்ணன் ராசா, ராசாவின் குடும்பம், டாடா, அம்பானி, மற்றும் மித்தால்களால் லவட்டப்பட்ட 1,76,000 கோடி ரூபாய் போனது போனது தான். அது என்றும் திரும்ப மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. வேண்டுமானால் IPL, காமென்வெல்த் கேம்ஸ் போன்ற சர்க்கஸ்களை நடத்த ஸ்பான்ஸர்கள் கிடைப்பார்கள்(கொச்சி அணி திரும்பவும் ஐபிஎல்லில் வருகிறதாமே! எத்தனையாயிரம் கோடி?). வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. 

சுப்ரீம் கோர்ட்டு சும்மாக்காச்சுக்கும். பார்லிமண்ட்டும் பிரதமரும் பிர்லாவுக்கு மட்டும். அப்புறம் நீங்களும் நானும் புலம்பி ஆகப் போவது என்ன? அடுத்த வாரம் பெட்ரோல் விலை 2 ரூபாய் கூடப் போவுதாமே !. சந்தோஷப்படுங்க.
----------------------------------------

ஸ்பெக்ட்ரத்தின் 'மூலக்கதை' ஆரம்பத்திலிருந்து தெரிந்துகொள்ள வினவு தளத்தின் பின்வரும் கட்டுரையைப் படியுங்கள்.
http://www.vinavu.com/2010/12/08/spectrum-scandal/

2 comments:

  1. மிக எளிமையாக ஸ்பெக்ட்ரம் பற்றின விளக்கம். நாம் விளங்கிக்கொண்டு என்ன புண்ணியம்.
    இந்த அமைப்பில் மாற்றம் வந்தால் அன்றி வேறு ஒன்றும் நடக்க போவதில்லை.

    ReplyDelete
  2. நமக்குப் புரிந்த அளவு சுமார் ஒரு 4 கோடிப் பேருக்கு வேண்டாம் ஒரு 4 லட்சம் பேருக்கு புரிந்தால் கூட ஒருவேளை ஏதாவது நடந்தாலும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன். முடிந்ததைச் செய்வோம். நடப்பது நடக்கட்டும்.

    ReplyDelete

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.