Tuesday, October 19, 2010

எந்திரன் என்கிற ரோபாட்

எந்திரன் என்கிற ரோபாட்

ரஜினியின் முந்தைய வெற்றிப் படமான சிவாஜியை கூட நான் இன்னும் பார்த்திராத நிலையில் எந்திரன் படத்தை இவ்வளவு விரைவில் பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. நண்பனுடைய உதவி. எந்திரன் படத்தின் பின்னாலுள்ள பொருளாதார, அரசியல் காரணங்களை வைத்து ஏற்கனவே இணைய தளங்களில் தெளிவாக, விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. இருந்தும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைக் காவியத்தை (?) கண்டு களித்துவிட்டு விமர்சனம் எழுதாமல் இருக்கலாமா ? அதனால் இதோ விமர்சனம்.

கதை:
வசீகரன் என்னும் இளம் விஞ்ஞானி தன் காதலியைக் கூடப் பார்க்க மறந்து அச்சு அசலில் தன்னைப் போலவே இருக்கும்படியாக தயாரிக்கும் இயந்திர மனிதன் தான் சிட்டி என்று பெயரிடப்படும் எந்திரன் அதாவது ரோபோ. அவன் மனிதர்களை விட மிகுந்த திறமைசாலியாகவும், அறிவியல் விஷயம் முதல் பொருளாதார விஷயங்கள் வரை கரைத்துக் குடித்தவனாகவும் இருக்கிறான். தலையணை சைசில் இருக்கும் புத்தகத்தை இப்படியும் அப்படியும் ஆட்டி ஒரு செகண்டில் புத்தகம் முழுதையும் ஸ்கேன் செய்து படித்துவிடுகிறான். ஆனால் அவனுக்குத் தெரியாதது(?) நயவஞ்சகம், பொய் சொல்லுதல், துரோகம் செய்தல், வன்முறை போன்ற தீய விஷயங்கள். இவ்வுணர்வுகளையும், நல்லது கெட்டது பிரித்தறியும் அறிவையும், உணர்ச்சிகளையும் வசீகரன் ரோபோவுக்குள் உட்செலுத்த, ரோபோவுக்கு உண்டாகும் மனதில் வசீகரனின் காதலி ஐஸ்வர்யா ராய் குடிகொள்ள, ஆரம்பிக்கிறது வினை. இதைப் பயன்படுத்தி குளிர்காய நினைக்கும் வசீகரனின் குருநாதர், விஞ்ஞானக் கூடத்தின் தலைவர், வசீகரனை தொழில் முறை எதிரியாகப் பார்க்கிறார். தான் செய்ய இயலாததை செய்த வசீகரனை அவன் தயாரித்த எந்திரனைக் கொண்டே தோற்கடிக்க நினைக்கிறார். அதன் விளைவுகள் தான் படம்.

இந்தச் சினிமாவின் சில நல்ல அம்சங்கள்.
எந்திரன்கள் நம் வாழ்க்கைக்கு நல்லதா கெட்டதா என்று பார்வையாளர்களை சிறிது நேரம் குழம்பி யோசிக்க வைக்கிறது படம். இயந்திர ரோபோக்கள் நம் வாழ்வில் வந்தால் தீயணைப்பு வீரன், கண்ணிவெடி அகற்றும் ராணுவ வீரன் போன்ற ஆபத்தான வேலைகளை உயிரிழப்பின்றி செய்யவைக்க முடியும் என்று யோசிக்கிறது. அதே சமயம் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பிற்கு ரோபோ வாங்குவதாகவும் காட்டுகிறது (அல்க்வைதா கூட ரோபோ வாங்கி குண்டுவைக்கும் அளவு வசதியான தீவிரவாத இயக்கம் கிடையாது). நல்ல தொழில் நுட்பக் கலைஞர்கள். கிராபிக்ஸ் கலக்கல்கள் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும்படி கிராபிக்ஸ்கள் இருக்கின்றன. மற்றபடி நடிகர்களின் நடிப்பு ஆஸ்கார் வாங்கும் தேவை ஏற்படாததால் கதைக்குப் போதுமான அளவில் உள்ளது.

பாராட்ட வேண்டிய அம்சங்கள் குறைவென்றாலும் படத்தின் வெற்றிக்குக் குறைவில்லை. ஏற்கனவே செலவழித்த பணமான 150 கோடி ரூபாய்க்கு மேல், கூட 100 கோடியாக 250 கோடி வசூலாகி விட்டது. இன்னும் வசூலாகும். கலாநிதி மாறன் 800 கோடி எதிர்பார்த்தாகக் கணக்கியல் விவரங்கள் தெரிவிக்கின்றன.

கதையின் கதைகள்.
ஸ்பீல்பெர்க்கின் ஆர்ட்டிபீசியல் இன்டலிஜென்ஸ்’(2001); அம்மாவின் அன்பைத் தேட அசல் மனிதனாக விரும்பும் ரோபாட் பையன் பற்றியது. ராபின் வில்லியம்ஸ் நடித்த பைசென்டனியல் மேன்’ (1999); ஆண்டராய்டாக இருக்கும் ரோபாட் ஒன்று படிப்படியாக காதல் போன்ற மனித உணர்ச்சிகளைப் பெற்று காதலித்து, மனிதன் போலவே மாறுவதைப் பற்றிய கதை. ஐ, ரோபாட்’(2004); மனிதனைப் போல் சிந்திக்க கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு ரோபாட்டின் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் சம்பந்தப்பட்ட ஒரு துப்பறியும் வகைப் படம். அப்புறம் சன் டி.வி.யிலேயே தமிழாக்கம் செய்து பல தடவை காட்டப்பட்ட டெர்மினேட்டர். இவற்றை எல்லாம் ஒரு ஜாடியில் போட்டு, குலுக்கி எடுத்து அதில் ஐஸ்வர்யா ராயையும், விக் வைத்த ரஜினியையும் ஒட்ட வைத்து கிராபிக்ஸ் எண்ணெயில் பொறித்துப் படைக்கப்பட்டது தான் இந்தக் கதை. மேலே சொல்லப்பட்ட ஆங்கிலப்படங்களை நீங்கள் பார்த்தால் நமது தமிழ்ப் பதிப்பான எந்திரன் இவற்றைக் கலந்து செய்த கலவை தான் என்பது காங்கிரஸின் ஊழல்கள் போல சந்தேகமின்றி தெளிவாகத் தெரிய வரும்.

காப்பியடிப்பது ஒரு தப்பா ?  இல்லை. இதை இன்ஸ்பிரேஷன் என்று சொல்வோமே. சரி. ஆனால் இதை இன்ஸ்பிரேஷன் என்று கூட சங்கர் ஒத்துக்கொள்ள மாட்டாரே.. அது தான் மனதைக் கஷ்டப்படுத்துகிறது.

ஐஸ்வர்யா ராய். வயதாகிவிட்டது இந்த அம்மையாருக்கு. ஆனாலும் தியேட்டரில் விசில் பறந்ததை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். படம் முழுக்க ஆக்கிரமிப்பவர் இவரே. ரஜினி, ரோபாட் பொம்மை மற்றும் விஞ்ஞானி ரஜினி என்று சங்கர் செய்த இரண்டு பொம்மைகளாக வருகிறார். இதில் வில்லன் ரஜினி தான் ஸ்கோர் பண்ணுகிறார். 'ரோபோ', 'வெர்ஷன் 2.0' போன்ற பன்ச் டயலாக்குகள் தியேட்டரை அதிர வைக்கின்றன. இவருக்கு உதவியாளர்களாக கருணாஸூம், சந்தானமும் (காமடி பண்ணுவதற்காகவே) வருகிறார்கள். அப்புறம் ஒரு வில்லன். அவனுக்கு துருக்கியன் போல் ஆங்கிலம் பேசும் ஒரு தீவிரவாதக் கூட்டத்துடன் தொடர்பு. ரஹ்மானின் இசை. பாட்டுகள் படு ஹிட். ரசூல் பூக்குட்டி. மணிகண்டன் கேமரா. ஹாலிவுட் கிராபிக்ஸ் டீம் என எல்லாமே உயர் ரக ஆட்கள். யாரும் சொதப்பவில்லை. கச்சிதமாக வேலை செய்திருக்கிறார்கள்.

கிராபிக்ஸ் கலக்கல்:
இப்படத்தில் ரஜினிக்கு கொடுக்கப்பட்டதை விட செலவு கிராபிக்ஸ் விஷயங்களுக்குதான். ஹாலிவுட் கில்லிகள் இதற்காக அமர்த்தப்பட்டிருந்தனர். நம்ம ஊர் விட்டலாச்சார்யா ராமநாராயணன் பொறாமைப் படும் அளவிற்கு கிராபிக்ஸ் நன்றாக இருந்தது. ஆனால் பாருங்கள் தீயணைப்பில் உதவிக்கு வரும் அந்த ரோபோ, அதன் செய்கைகள் எல்லாம் ஐ.ரோபாட் செய்தது போலவே இருப்பது தற்செயல் தான். ஒரு காட்சியில் ரோபாட்டுகளின் மத்தியில் நிஜ ரஜினி இருப்பது தெரிய வர அதை கண்டுபிடிக்க ரஜினி ரோபாட் செய்யும் தந்திரம். இதை அப்படியே ஐ.ரோபாட்டில் உல்டாவாக சாதாரண ரோபாட்டுகளின் மத்தியில் புத்தியுள்ள ரோபாட்டை கண்டுபிடிக்க வில் ஸ்மித் தந்திரம் செய்யும் காட்சியோடு பொருத்தலாம். ரஜினி ரோபாட்டின் காதல் பை சென்டன்னியல் மேன்ரோபாட்டின் காதல் போல இல்லாமல் சுருக்கமாகவே இருக்கிறது. கடைசியில் டெர்மினேட்டர் பாணியில் ரோபாட் தன்னைத் தானே செயலிழக்கச் செய்வது ரொம்பவும் சோகம் தான் போங்கள்.

தியேட்டரில் ரசிகர்களின் எதிரொலிப்புகள் மிக்க ஆரவாரம். யாருக்கும் 2.45 மணி நேரம் போரடிக்கவில்லை. ஞாயிறு காலை 8.30 மணி ஷோவுக்கு, முன்பதிவு செய்து, 8.00 மணிக்கே கார், ஆட்டோ மற்றும் டூவீலர்களில் வந்திறங்கி சினிமா பார்க்க வந்தவர்கள். கொஞ்சம் மேல் தட்டு. ரோபாட் சமையல் செய்வது, பிட் அடிக்க உதவுவது, கையில் மருதாணி வைத்துவிடுவது, வீட்டை நொடியில் சுத்தம் செய்வது, பெண்களை ரவுடிகளிடமிருந்து காப்பது போன்ற அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளை ரோபாட் எளிதாக சமாளிப்பதை ஆனந்தமாக ரசிக்கிறார்கள். சங்கர் கதை சொல்லியிருப்பதோ கிராமத்து மக்களுக்கும் புரியும் படியான ரோபாட் கதை. அதனால் படம் நூறு நாட்கள் ஓட வாய்ப்புகள் இன்னும் அதிகம். ரோபாட் தொழில்நுட்பத்தை இவ்வளவு எளிமையாக விளக்கியது சங்கரின் திரைக்கதை சாமர்த்தியங்களில் பாராட்டப் படவேண்டிய ஒன்று. ஸ்வார்ம் இன்டெலிஜன்ஸ் (கூட்டு அறிவுத்திறன்) போன்ற டெக்னாலஜி விஷயங்களை வைத்து எடுத்த மசாலா க்ளைமேக்ஸே ஆனாலும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் திருவிழா ராட்டினத்தில் கிறு கிறுவென சுற்றி இறங்கிய பரபரப்பு கலந்த த்ரில் உணர்வு மட்டுமே எஞ்சியது.

கதைக்குள்ளிருக்கும் அரசியல்:
சங்கர் கதையில் பேசப்படும் அரசியல் நிறைய நெளிவு சுளிவுகள் கொண்டது. அவரது ஜென்டில் மேனிலேயே இத்தன்மை வெளிப்பட்டிருக்கிறது(ஏழைகளுக்கு படிப்பு உதவி என்ற போர்வையில்).

ரோபாட். மனிதனை உழைப்புடனான நெருங்கிய தொடர்பிலிருந்து பிரித்தெடுத்தலின் உச்சகட்டம். உழைக்கும் வர்க்கம் என்கிற கூட்டம் உருவாகாமலிருக்க அறிவியலின் துணை கொண்டு முதலாளித்துவ அமைப்பு தொடுக்கும் தாக்குதல். உழைப்பதற்கு இயந்திரங்கள் வந்ததும், கம்ப்யூட்டர் வந்ததும் மனித உழைப்பை, தேவையை எந்த அளவிற்கு அவை பாதித்திருக்கின்றன என்று நாம் பார்க்கிறோம். நிறைய படித்தவர்கள் கூட ஏதோ எல்லா மக்களும் ரோபாட்டிற்கு புரோக்ராம் செய்யும் அறிவுடனேயே பிறந்தது போன்று எந்திரன் வந்தால் நமக்கென்ன பாதிப்பு என்று பார்க்கிறார்கள்.  ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும், 50 ரூபாய்க்கு மளிகை சாமான்களும் வாங்கி சாப்பிட்டு வயிற்றைக் கழுவி உழைக்காமல் இருக்க மக்கள் ஒருபுறம் பழக்கப்படுத்தப் படுகின்றனர். சங்கரின் எந்திரன் தான் உடனிருந்தால் நீங்கள் சும்மா உக்காந்துதின்ன, உலகத்தை அனுபவிக்க, உழைப்பேயின்றி எல்லாம் நடக்கும் என்று உந்துகிறான். ராணுவத்தில் (தீவிரவாதிகளால், எதிரிநாட்டு வீரர்களால்.... ) புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்ற உபயோகப்படுத்தபடுவது முதல் (இந்திய ராணுவத்தினர் மட்டும் கண்ணிவெடிகளே புதைத்து வைப்பதில்லையா என்ன?), போர்க்களத்தில் சண்டையிடும் ராணுவ வீரனாவது வரை ராணுவத்திற்கு தோள் கொடுக்கிறான்.

படத்தில் ராணுவம் பற்றி நிறையவே வரிகள் உள்ளன. வசீகரனின் லட்சியம் இந்திய ராணுவத்தில் எந்திரனைச் சேர்ப்பது. அதன் மூலம் நம்மக்கள் சாகாமல் எதிரிகள் மட்டும் சாக நேர்வது. இதுவே அவன் லட்சியம். நாயகி ஐஸ்வர்யாராயின் அப்பா, ராணுவத்தில் பணிபுரிந்து கார்கில் போரில் இறந்து போக, அவர் நினைவாக கார்கில் வீரர்களின் வாழ்விழந்த மனைவிகளுக்கும், குடும்பங்களுக்குமான அமைதி இல்லம் அமைக்கிறார் ஐஸ்வர்யா. அதில் அடைக்கலமான ஒரு போர் வீரனின் மனைவி வயிற்றில் குழந்தை உருவாகியிருக்கும் போதே அவள் கணவன் கார்கில் போரில் ராணுவத்தில் இறந்திருக்க, குழந்தை பிரசவிக்கும்போது ஏற்படும் சிக்கலை எந்திரன் தீர்க்கிறான். பின்னர் வசீகரன் எந்திரனை ராணுவத்துக்கு அர்ப்பணிக்க ராணுவத்தினர் வந்து சோதனை செய்யும் போதுதான் எந்திரன் எல்லாவற்றையும் மறந்து காதல் வசனம் பேசுகிறான். இப்படிப் படம் முழுக்க ராணுவம் அணிவகுத்து நிற்கிறது. சங்கர் சினிமாவுக்கு வருவதற்கு முன் ராணுவத்தில் சேர முயன்று அவரால் முடியாமல் போனதோ என்னவோ? தெரியவில்லை. இல்லை. 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் ராணுவத்தில். சாப்பாடு, தங்குமிடம் இலவசம் என்கிற ரீதியான விளம்பரமா ? புரியவில்லை.

முதலில் நம் மக்களுக்கு ராணுவம் என்பது கார்ப்பரேட் அரசுகளின் கொல்லும் கொடுங்கருவி என்பதே தெரியாது. விஜயகாந்துகள் மற்றும் சரத்குமார்கள் போன்ற ஹீரோக்கள் ராணுவ உடையணிந்து தீவிரவாதிகளைக் கொன்று நாட்டைக் காப்பது(?) போல் தான் நிஜத்திலும் நடக்கிறது என்று நம்பிக்கொள்கிறார்கள்.

சமீபத்தில் ஜெயா டி.வி.யில் நடந்த விசுவின் அரட்டை அரங்கத்தில் ஒரு முன்னாள் ராணுவ வீரர் பேசினார். பொற்கோயிலுக்குள் ராணுவம் நுழைந்ததிலும், பின்னர் கார்கில் சண்டையிலும் இருந்திருக்கிறார். 13000 ஆயிரம் அடி உயரத்தில் பனியில் பட்ட கஷ்டங்களையும், சண்டைகளையும் சண்டையில் அவர் காயம் பட்டதால் ஏற்பட்ட ஊனத்தால் டாய்லெட் போக உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது எனவே தவழ்ந்து தான் எழுவேன் என்றதும் பார்வையாளர்கள் பெரும்பான்மையோர் கண்ணீர் சிந்தினர் விசு உட்பட. ஆனால் பேசியவர் கார்கில் மற்றும் பொற்கோயில் தாக்குதல் பின்னாலிருந்த அரசியல் காரணங்கள், அதில் அரசுகள் காண்பித்த கோரமுகங்களை அறிந்த மாதிரியே தெரியவில்லை. (இந்தியா பக்கம் 700 சொச்சமும், பாகிஸ்தான் பக்கம் 1500 சொச்சமும் வெட்டியான எல்லைத் தகராறில் செத்துப்போக, இரண்டு நாடுகளும் தங்கள் தங்கள் நாட்டு விதவைகளுக்கு 'பரம்வீர் சக்கராக்கள்' வழங்கி நாட்டுப் பற்றுத் தீயை பெட்ரோல் போட்டு ஊதிவிட்டன. கார்கில் போர் முடிந்தவுடன் வந்த பட்ஜெட்டில் ராணுவச் செலவு 30 சதவீதம் உயர்த்தப்பட்டது. ராணுவச் செலவு என்றால் ராணுவம் தயாரிக்க தேவையான குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பதும் அடக்கம். இவற்றைத் தயாரிப்பவை தனியார் கம்பெனிகளாயிருந்தால் காண்ட்ராக்ட் முழுக்க சொளையாய் பணம்...வேற யார்.. நம்ம டாடா, மகிந்திரா etc தான்... அப்புறம் வீரர்களை அடக்கம் செய்த சவப்பெட்டி ஊழல்..) தெரிந்திருந்தால் தன் வாழ்க்கை இப்படி அரசுகளின் நோக்கில் வீணாக சிதைக்கப்பட்ட பல கோடிப்பேரின் வாழ்வில் ஒன்று என்று அறிந்திருப்பார். இப்படி ராணுவத்தையும், போரையும் பெருமை பொங்கப் பேசிக்கொண்டிருக்கமாட்டார். இப்படித்தான் ஏதோ காஷ்மீரின் கார்கில் தன் ஊருக்குப் பக்கத்து ஊர் போல பலரும் தேசப் பெருமை பேசுகிறார்கள். அதில் சண்டை போட்ட இந்தியாவும் சரி, பாகிஸ்தானும் சரி இருவரும் அப்பிரதேசத்தின் உரிமையாளர்கள் அல்லர் என்பதல்லவா நிஜம்.

திரிபுரா, ஒரிஸ்ஸாவில் மாவோயிஸ்ட்டுகளை விரட்ட என்கிற பெயரில் பழங்குடியினரை விரட்டிக் கொல்வதும் சுமார் 1 லட்சம் பழங்குடியினர் பாக்சைட் மலைகளுள்ள தங்களின் வாழ்விடமான காட்டிலிருந்து ராணுவம் மற்றும் கூலிப்படையால் விரட்டப்பட்டு ரெடியாக கட்டிவைக்கப்பட்டிருந்த முகாம்களில் அநாதைகளாக கஞ்சிக்கு கியூவில் நின்று வாழ்வதும், காஷ்மீரில் கல்லெறிந்த கூட்டத்தை புகைக் குண்டு வீசிக் கலைக்காமல் துப்பாக்கியால் சுட்டு நாற்பது பேர் வரை நான்கு மாதங்களில் கொன்றதும், இலங்கையில் அமைதிப் படை என்கிற பெயரில் 4000 தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் அங்கு தமிழர்களுக்காகப் போராடிய விடுதலைப் புலிகளையே அழிக்கக் கிளம்பியதும், போன வருடம் விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லி இந்திய, சிங்கள ராணுவங்கள் சேர்ந்து 40ஆயிரம் தமிழர்களை கொன்று சாட்சிகள் இல்லாமல் அழித்ததும், அந்தப் போர் முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் ஒரு லட்சம் பேர் வரை அகதிகள் முகாமில் நம் தமிழர்கள் கம்பி வேலிக் கைதிகளாய் ராணுவப் 'பாதுகாப்பு'டன் வாழ்வதையும், ராமேஸ்வரத்தில் ரோந்து வரும் "நம்' இந்திய கடலோரக் காவல்படை கரையோரத்தில் வாழ்ந்த நம் தமிழ் மீனவப் பெண்களையே அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்துவிட்டுப் போக விஷயம் வெளியே வராமல் டெல்லியிலிருந்து ராணுவ அதிகாரிகள் வந்து பஞ்சாயத்து பண்ணி விஷயங்களை அமுக்குவதும் (ஒழுக்கம், கட்டுக்கோப்பு மிகுந்த ராணுவமாம்..!), இலங்கை கடற்படையினர் நம் மீனவர்களை மாதத்துக்கு பத்து பேர் என்று சுட்டு, கொடுமைப் படுத்தி, இத்தனை வருடங்களில் 400 பேர் வரை அப்பாவி மீனவர்களைக் கொன்று போட, அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பிரணாப் முதல் நிருபமா வரை இலங்கைக்கு ஜாலி ட்ரிப்கள் அடிப்பதும், இந்திய, இலங்கை, ராணுவங்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதும், நடுவில் எங்காவது வெள்ளம் வந்து லட்சக்கணக்கில் மக்கள் வீடிழந்து வாட அப்போது மட்டும் பிரதமர் ராணுவத்தை ஈடுபடுத்தலாமா என்று ஆலோசிப்பதும் (அதற்குள் வெள்ளம் வடிந்துவிடுவதும்)...

நிலமை இப்படி இருக்க ராணுவம் (போலிஸ்ஸும் சேர்த்துத் தான்) போன்றவற்றின் ரத்தவேட்டையாடும் கோரப் பற்களை, இம்மிருகங்கள் பண்ணும் அதிகாரத்தின் கொடுமைகளை, யாருக்குச் சொல்லி யார் விளங்க வைக்கமுடியும். இதில் எந்திரன், இன்னுமொரு தேசபக்தி பரப்பும் ஊதுபத்தி வியாபாரம். இந்த தேசபக்தி வியாபாரம் எல்லா மாநிலங்களிலும் எடுபடும் லட்டு போன்ற விஷயமாகி வி்ட்டது என்பதை எந்திரனின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி வெளியீட்டின் வெற்றிகள் உறுதிப் ப்டுத்துகின்றன. 
உன் விமர்சனத்தை எல்லாம் தூக்கி குப்பையில் போடு. உன்னால் 800 கோடி லாபம் ஒரு மாதத்தில் சம்பாதிக்கும் படத்தை ரஜினியை வைத்தே கூடத் தரமுடியுமா ?”. முடியாதல்லவா. பின்னே பொத்திகிட்டு போஎன்று நீங்கள் என்னைத் திட்டுவதிலும் கூட நியாயம் இருக்கிறது. "என்ன பிரம்மாண்டமான படைப்பு !! என்ன உழைப்பு !! அதற்கான கூலி அவருக்குக் கிடைக்கிறது (இவருக்கு மட்டும் உழைப்புக்கு 5000 மடங்கு அதிக கூலி எப்பிடிப்பா கிடைக்குது ?). உனக்கேன் இந்த வயித்தெரிச்சல். ?" என்கிறீர்களா. அதுவும் சரிதான். பணம் சம்பாதிக்க திறமை இருக்கிறது சங்கரிடத்தில். சம்பாரிக்கிறார். நம்மிடம் என்ன இருக்கு ப்ளாக் எழுதறதத் தவிர ? பணம் தானே முக்கியம் ? என்ன இருந்தாலும் இந்தப் பணத்தில் பெரும்பகுதி மக்களாகிய உங்களுக்குத்தானே திரும்பவும் வரப்போகிறது.. தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாசம் தான் இருக்கிறது.. தேர்தல் நேரத்தில் வீடு வீடாக கதவு தட்டி தானாக வருவது பணம் மட்டுமே. அதுவும் நல்லது தானே.

எனவே.. வாழ்க எந்திரன். வளர்க ராணுவம்.. வெல்க இந்தியா..
எல்லோரும் ரோபாடிக்ஸ் படிப்பதன்றி வேறொன்றுமறியேன் பராபரமே.

3 comments:

  1. ஐயோ கொல்றாங்களே...

    ReplyDelete
  2. //கதைக்குள்ளிருக்கும் அரசியல்//

    very good

    ReplyDelete
  3. Good writeup. Interesting.

    k swaminathan

    ReplyDelete

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.