Monday, August 9, 2010

கொசு விரட்டிகளும்.. மனித விரட்டிகளும்..


கொசு விரட்டிகளும்..  மனித விரட்டிகளும்..

மதிய நேரம். வீட்டில் உட்கார்ந்து தொலைக்காட்சியில் ஏதோ பழைய படத்தை பழக்க தோஷத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். நண்பர் அவரது கம்ப்யூட்டரில் வேலை செய்துகொண்டிருந்தார். எக்ஸ்கியூஸ் மி சார் என்று வாசலில் குரல்.
எட்டிப் பார்த்தால் இரண்டு கல்லூரி படிக்கும் வயது பையன்கள். அவர்களில் ஒரு பையன் கையில் இருந்த ஒரு பாக்ஸைத் திறந்து நீட்டியபடியே பேச ஆரம்பித்தான். ஏதோ மார்க்கெட்டிங் என்று உடனே இல்லை என விரட்டி விடாமல் எழுந்து சென்று என்னவென்று கையில் வாங்கிப் பார்த்தேன். சார்..நாங்க ரெண்டு பேரும் மெட்ராஸ் யுனிவர்சிடில படிக்கிறோம் சார். ஒரு ப்ராஜக்ட் விஷயமா இதைப் பண்றோம் சார் என்றான். தடியாக காதில் கடுக்கன் போல் மாட்டியிருந்தான். அவன் படிக்கிற பையன் என்று நம்ப முடியாமல் இருந்தது. அவன் கொடுத்த பாக்ஸைப் பிரித்தேன்.

உள்ளே நம் வீட்டில் வைத்திருக்கும் மின்சார கொசுவர்த்தி மாதிரி யான, அதே அளவிலான சாதனம் இருந்தது. ப்ளக்கில் மாட்டும் பின்கள்  நீட்டிக்கொண்டிருந்தன. அதில் டி.வி. ஸ்க்ரீன் மாதிரி
இருந்த இடத்தில் ஒரு லேபிள் மாதிரியான படம் ஒன்று இருந்தது. அதன் விஞ்ஞானத்தைப் பற்றி அப்பையன் விளக்க ஆரம்பித்தான். அவனைக் கையமர்த்தி விட்டு நான் மடமடவென அந்த அட்டையில் இருந்த கருவி பற்றிய குறிப்பை படித்தேன்.
அந்த அட்டையிலிருந்த விவரம் இது: இது அல்ட்ராசோனிக் கொசுவிரட்டியாகும். இதிலிருந்து வெளியாகும் அல்ட்ராசோனிக் ஒலியதிர்வுகள் கொசுக்கள், ஈக்கள், பல்லிகள், கரப்பான் போன்ற  வீட்டுப் பூச்சிகள் அனைத்தையும் வீட்டை விட்டே விரட்டிவிடும்.
இதை ப்ளக்கில் மாட்டிவிட்டு ஆன் செய்தால் விர்ரென்ற சத்தம் எழுப்புகிறது. கொசுக்களும் ஈக்களும் இந்த ஒலியைத் தாங்க முடியாமல் வெளியேறி விடுகின்றன. உடனே நான் இதுபற்றிக் கேள்விபட்ட விஷயத்தைப் பற்றி நண்பரிடம் சொன்னேன். கொசுக்கள் அல்ட்ராசானிக் ஒலியதிர்வுக்கு பயந்து ஓடியதாக இதுவரை கேள்விப் பட்டதில்லை. கொசுக்கள் நீல நிற ஒளியைக் கண்டால் நெருங்கும். அதை பயன்படுத்தித் தான் ஓட்டல்களில் ஈக்களைக் கொல்லும் கருவி வைத்திருக்கிறார்கள் என்றேன். உடனே அந்தப் பையன் சார் நீங்க வாங்கினா எங்களுக்கு ஒரு மார்க் வரும் சார் என்று தனது வியாபார உத்தியை செலுத்தினான். நான் இல்லைப்பா.. இதை வாங்குற மாதிரி இல்லை என்று உறுதியாக மறுக்க, வந்ததே கோபம் அவனுக்கு அதான் தெரியுமேஎன்றுவிட்டு என் கையில் இருந்த சாதனத்தை வாங்கிவிட்டு விடுவிடுவென படியில் உடன் வந்த நண்பனுடன் இறங்கினான். எனக்கு கொஞ்சம் பயமாகவும், பாவமாகவும் இருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் இவர்கள் போன்ற இளைஞர்கள் பலரை இதுபோன்ற ஏமாற்றுக் கருவிகள் விற்க இன்று நிர்ப்பந்தித்திருக்கிறது. நாளை இன்னும் நயவஞ்சகமாக ஏமாற்றி வாழ இப்போதே இவனை தயார் செய்கிறது. அந்தப் பையன்களை எதிர்த்த வீட்டு மேல் மாடியில் போய்க் கேட்டுவிட்டு சலித்த முகத்துடன் கீழே இறங்கும் போது பார்த்தேன். அவன் என்னை முறைத்துப் பார்த்தபடியே படியிறங்கினான்.

மனதின் ஒரு ஓரத்தில் ஒருவேளை அப்பொருள் உண்மையாக இருந்தால்என்று தோன்ற உடனே இணையதளத்தில் தேடினேன். வரிசையாக வந்து விழுந்த கட்டுரைகளைப் படிக்க படிக்க உண்மை விவரங்கள் தெரிந்தன. அத்தோடு மனித விரட்டிபற்றியும் அப்போதுதான் தெரிந்தது.

கொசுவிரட்டிகள் பல்வேறு தொழில் நுட்பங்களில் வந்திருக்கின்றன. வீட்டின் தோட்டங்களில் வவ்வால்கள் வளர்க்கும் இயற்கை முறை(தோல்வியுற்ற வழிமுறை) முதல், அல்ட்ராசானிக் விரட்டி, கொசுப்பிடிப்பான்கள் (நீல ஒளி கொண்டு கவரும் முறை) வரை பட்டியல் நீளுகிறது. கொசுவிரட்டி மருந்துகள், காயில்களில் DEET, இகாரிடின், பெர்மத்ரின் போன்ற செயற்கை வேதிப்பொருட்கள் உள்ளன. கொசுக்கள் இவ்வேதிப்பொருட்களின் வாசனைக்கு ஓடி விடுகின்றன.  இயற்கைப் பொருட்களான வேப்பெண்ணெய், எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெய், விளக்கெண்ணெய், சூடம் போன்ற பல பொருட்களுக்கும் கொசுவை விரட்டும் சக்தி உண்டு. நம் நாட்டு மற்றும் கைவைத்திய முறைகளில் இது போன்ற நிறைய இயற்கைப் பொருட்கள் கொசு விரட்டிகளாக உபயோகப்பட்டு வருகின்றன. செயற்கை வேதிப்பொருள்களிலான கொசுவிரட்டிகள் குழந்தைகளுக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட ஆஸ்த்துமா போன்ற நோய்களை உருவாக்க வாய்ப்பு உள்ளது.

கொசுக்கள் அல்ட்ராசானிக் மீயொலி ஒலியதிர்வுக்கு பயந்து ஓடுகின்றன என்பதை ஆய்வுகள் மறுக்கின்றன. நாய்கள் மட்டும் கேட்கக்கூடிய மீயொலி (அல்ட்ராசானிக் ?) விசில் சத்தங்களைக் கொண்டுதான் காவல்துறை நாய்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
ஆனால் கொசு உட்பட வேறு எந்த வீட்டுப் பூச்சிகளும் இதுபோல எந்த ஒலிக்கும் பயந்ததாகவோ, இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. ஆனாலும் இந்தக் மீயொலி கொசுவிரட்டிகள் விற்பனை இன்னும் இருக்கிறது. சில கொசு விரட்டிகள் வவ்வாலின் சிறகடிப்புச் சத்தம் கொடுத்து அதைக் கேட்டு கொசுக்கள் ஓடுவதாக விளம்பரம் செய்தாலும் அது உண்மையல்ல. இணையதளத்தில் கூட இம்மீயொலிச் சாதனங்கள் விற்கப்படுகின்றன. உதாரணத்திற்கு சில இணைப்புகள் கீழே:

 
மனித விரட்டி
இந்தத் தேடலின் போது தற்செயலாகக் கண்ணில் பட்டது தான் மனித விரட்டி சாதனம். இங்கிலாந்தில் கடந்த 2005ல் கண்டு பிடிக்கப்பட்ட இச்சாதனம், இளைஞர்கள் கூட்டம் கூடி சந்துகளில், கடை வாசல்களில் நின்று அரட்டையடிப்பது, ரவுடித்தனங்கள் செய்வது போன்ற குழுக் கிறுக்குத் தனங்களை தடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இச்சாதனத்திலிருந்து வரும் ஒலியானது இளைஞர்கள், குறிப்பாக டீன் ஏஜ் வயதினருக்கு மட்டுமே கேட்கக் கூடிய (17 KHz அதிர்வெண் உள்ள) மீயொலி இரைச்சலை வெளியிடுகிறது. கிங்...கென்று காதில் வலி ஏற்படுத்துமளவு 108 டெசிபல் அழுத்த அளவில் ஒலிக்கும் இந்த இரைச்சலைத் தாங்க இயலாமல் இளைஞர்கள் அவ்விடத்தை விட்டு அகலுகின்றனர். வயதானவர்களால் இந்த அதிர்வெண் ஒலிகளைக் கேட்க இயலாது. எனவே வயதானவர்கள் இவ்வொலிகளால் பாதிக்கப் படுவதில்லை.

மேற்கத்தியவர்களுக்கு பொறுமையும், சகிப்புத் தன்மையும் நம்ம ஊரில் இருக்கும் மனிதர்களை விட கொஞ்சம் குறைவுதான். அதனாலே பெரிய கடைகள், கடைகளின் பின்புற வாயில்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், வீடுகள் போன்ற இடங்களில் வெளிவாயில்களில் இது போன்ற கருவிகள் பொருத்தப்பட்டு இளைஞர்கள் கூடுவதையும், அரட்டை அடிப்பதையும், சுவர்க் கிறுக்கல்களையும் தடுக்கின்றனர். மீயொலியால் கொசுவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லாத அதே நேரத்தில் மனிதர்களை விரட்ட இந்த மீயொலி மனித விரட்டி மிகவும் நேர்த்தியாக செயல்படுகிறது. மேலும் இக்கருவியில் இளைஞர் மட்டுமின்றி கூடியிருக்கும் எல்லா வயதினரையும் விரட்டுவதற்கும் பட்டன் வசதி உள்ளது. இப்பட்டனை அழுத்தினால் வெளிவரும் 8 KHz அதிர்வெண் மீயொலி அளவு கேட்கும் எல்லோரையும் விரட்டும் கடுமை கொண்டது.

விடுவார்களா மனித உரிமை ஆர்வலர்கள்... ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற, இங்கிலாந்தில் சில இடங்களில் போராடி, இக்கருவிகளையும் அகற்ற வைத்தார்கள். கடைசியில் இங்கிலாந்து அரசு தலையிட்டு இக்கருவியை தடை செய்ய இயலாது என அறிவித்துவிட்டது. பிரான்சு போன்ற மற்ற சில ஐரோப்பிய நாடுகளில் இது மனித உரிமை மீறும் கருவியாக குறிக்கப்பட்டுள்ளது. நம்ம ஊர் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பட்டாசு தூள் பறக்கும் பண்டிகைகளையும், ஆடி, கார்த்திகை, பொங்கல் திருவிழாக்களையும் கணக்கில் கொண்டால் இந்தக் கருவிகள் எல்லாம் நம்மவர்களிடம் பைசாவுக்கு செல்லுபடியாகாது என்று தான் தோன்றுகிறது.

சகிப்புத்தன்மை. சக மனிதனின் சிறு சிறு தொல்லைகளை குழு நோக்கில் சகித்துக் கொள்ளும் தன்மை நம் மக்களுக்கு சற்று அதிகமாக இருக்கிறது என்பது நம் கலாச்சாரத்திலிருந்து வந்த விஷயம் என்று கருதுகிறேன். நல்ல விஷயம் இது. இது இல்லாததால் தான் குடும்பங்கள் முதல் நாடுகள் வரை சிண்டைப் பிடித்துக்கொண்டு சண்டையிடுகின்றன. இல்லையா ?

http://www.themosquitodevice.com/

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.