Friday, May 28, 2010

ஈழத்தமிழரை விட FICCI -பதவியை பெரிதாகக் கருதும் கமல்ஹாசன்.

மே 23, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி.
இடம்– சென்னை, ஆழ்வார்ப்பேட்டை, கமல்ஹாசன் அலுவலகம் முன்.

மே 17, 2009 ல் இலங்கையில் உச்சகட்டத்தை அடைந்து முடிவடைந்த ஈழப் படுகொலைகளின் மற்றும் சிங்களத்திற்கு எதிரான இனப்போராட்டத்தில் முழுதும் தோற்று இறந்த நம் தமிழர்களின் நினைவாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய இயக்கம்தான் மே 17 இயக்கம்.

கமல்ஹாசனை FICCI என்ற வணிக அமைப்பின் பொழுதுபோக்குப் பிரிவின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதன் மூலம் ஈழப் படுகொலைகளைப் புரிந்த இலங்கை அரசை கண்டிக்கவும், அதை மறைக்க FICCI போன்ற வணிக கூட்டுறவு முயற்சிகளையும், சினிமா ஆட்டபாட்டங்களையும் மேற்கொள்வதை சுட்டிக் காட்டவும் வற்புறுத்தியிருந்தனர். கமல்ஹாசனை ஞாயிறு, காலையில் அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு கொடுக்கப் போவதாக மே 17 இயக்கத்தினர் அறிவித்திருந்தனர்.

FICCIக் காரர்கள் யார் ? இந்தியா-இலங்கை மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசுப் பிரமுகர்கள், தனியார் பிரமுகர்கள், எம்.பி.க்கள், அம்பாசிடர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என்று பலரும் அங்கத்தினராயிருக்கும் ஒரு இயக்கம். அதன் நோக்கம் என்ன ? இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக வாய்ப்புகளை வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அதிகரித்துக்கொள்ள அரசுடன் ‘இணைந்து’ எடுக்கும் ஒரு முயற்சியாகும். எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் பினாமிகளும் உள்ளுக்குள் இருப்பதால் அரசுடன் ‘இணைந்து’ தொழில் நடத்துவது ரொம்ப வசதி. ஸ்பெக்ட்ரம் விவகாரம் போல்.

இந்தப் பல்தொழில் வித்தகர்கள் தங்களது 11வது கூட்டத்தை இலங்கையில் நடத்தவேண்டும் என்று தீர்மானித்தார்கள். ஏன் ? முன்பு சொன்னது போல இலங்கை போர்க் குற்றங்கள், கொலை பாதகங்கள் புரிந்த அரசு என்பதிலிருந்து காப்பதன் ஒரு முயற்சி. இரண்டாவது, போரில் அழிந்த பகுதிகளை புணரமைக்கும் சாக்கில் தங்களுக்கு ஆலைகளும், சந்தையும் மலிவான முதலீடுகளில் தேடிக் கொள்ளும் முயற்சி. FICCI கணவான்கள் எல்லாவற்றையும் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு செய்பவர்கள். ஆகவே இந்த இரண்டு நாள் கருத்தரங்கின் முத்தாய்ப்பாக கடைசி நாளன்று திரைப்பட விழா ஒன்றும் சேர்த்துக்கொண்டு அதற்கு அழகழகான நடிகர், நடிகைகளையும் அழைத்துள்ளனர். IIFA நடத்தும் இந்தத் திரைப்பட விழாவை சென்ற வருடம் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1 கோடிப் பேர். தற்போது இதை இங்கு நடத்துவதன் பலன் என்ன ? சினிமா என்றதும் சுமார் 2 கோடிப் பேர், 85வயது கிழம் வரை, வாயைத் திறந்தபடி கவனிக்கும் என்பது. அத்துடன் இரண்டு நாள் கருத்தரங்கில் ‘படியாத’ பேரங்களை சினிமாவின் கரங்களால் மூன்றாவது நாள் கண்டிப்பாகப் படியவைத்துவிடும் சாமர்த்தியமும் இதில் உண்டு. எப்படி என்கிறீர்களா ? நீங்கள் எல்லாம் கம்பெனி வைக்கவே லாயக்கில்லை. இன்னும் விவரம் வேண்டுமா ? பின்வரும் வலைப்பூவில் கவிஞர் தாமரையின் கட்டுரையை படியுங்கள்.
http://tamilnathy.blogspot.com/2010/05/blog-post_21.html


ஏற்கனவே FICCI ன் மற்ற பிரிவுகளுக்கு ஈமெயில் மூலம் இது மாதிரி விழாவை இந்த வருடம் இங்கு நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள்கள் விடுத்து எந்தப் பதிலும் வரவில்லை. எனவே பின்னர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் ஞாயிறன்று சந்தித்து மனு கொடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர் மே 17 இயக்கத்தினர். கவனிக்கவும் ‘மனு கொடுப்பதாக’த் தான் கூறியிருந்தனர். கமல்ஹாசனை மறித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகச் சொல்லவில்லை.

காலையில் நண்பரும், நானும் கமல்ஹாசனின் அலுவலகத்தை அடைந்த போது அதன் முன் சுமார் 30 பேர் கூடியிருந்தனர். அவர்களைச் சுற்றி வளைத்து சுமார் 15 போலீசார் நின்றிருந்தனர். மனுக் கொடுப்பதற்கே இவ்வளவு பாதுகாப்பா ? என்று வியந்தேன். பின்னர் தான் தெரிந்தது அது எங்களுக்கு அல்ல கமல்ஹாசன் அவர்களுக்கு என்று. சுமார் 15 பத்திரிக்கையாளர்கள் கேமராக்கள் சகிதம் நின்று கொண்டிருந்தனர். மே 17 இயக்கத்தின் சார்பில் அய்யனார் மற்றும் எஸ்.எஸ்.மணி, திரு போன்றவர்கள் தலைமை தாங்கி நின்றிருந்தனர். சில இளைஞர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தபடியும், கமலிடம் வேண்டுகோள் விடுக்கும் அட்டைகளை தூக்கிப்பிடித்தபடியும் நின்றிருந்தனர். சொற்ப அளவிலேயே நின்ற மே 17 இயக்க ஆதரவாளர்களாகிய நாங்கள், போலீசாரும், நிருபர்கள் கூட்டமும் சேர்த்து ஒரு பெரிய கூட்டம் கூடியது போன்ற பிரமையை ஏற்படுத்திவிட்டோம்.

கமல்ஹாசனின் அலுவலக வெளிப்புற இரும்புக் கதவு உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. வெளியே நாங்கள் எல்லோரும் நின்று கொண்டிருந்தோம்.கமல்ஹாசன் இன்னும் அலுவலகம் வரவில்லை. பத்தரை மணியாகிவிட்டது. போலீஸ் அதிகாரி பொறுமையிழந்து போய் மே 17 எஸ்.எஸ்.மணியிடம் வந்து என்ன செய்யப் போறீங்க என்று கேட்க அவரும் யோசித்தார் என்ன செய்யலாம் என்று. அப்போது படக்கென்று அலுவலகத்தின் ‘திட்டி வாசல்’ கதவு லேசாகத் திறந்து மேனேஜர் எட்டிப் பார்க்க போலீஸ் அதிகாரி உள்ளே போனார். போனவர் போன வேகத்தில் வெளியே வந்து அய்யனாரிடம் “நீங்க வேணும்னா மனுவை எங்கிட்ட குடுத்துட்டுப் போங்க..நான் மேனேஜர் கிட்ட குடுத்துர்றேன்” என்றார்.

அந்நேரம் வாசலில் ஒரு பெரிய கார் வந்து நிற்க அதிலிருந்து கமல்ஹாசன் இறங்கினார். உடனே பத்திரிக்கையாளர் கூட்டம் அவரைச் சுற்றிச் சுழன்று படமெடுக்க ஆரம்பிக்க அவர் காரிலிருந்து இறங்கியதும் திட்டிவாசல் திறக்க, அவர் விடுவிடுவென்று அலுவலகத்திற்குள் போய்விட கதவு மூடிக்கொண்டது. இடம் பரபரப்பாகியது. அய்யனார் மற்றும் மணி இருவரும் காவல் துறை அதிகாரியிடம் இரண்டு பேரை மட்டும் உள்ளே அனுமதிக்குமாறும் தாங்கள் கமல்ஹாசனை சந்தித்து மனுவை கொடுத்தவுடன் திரும்பி விடுவோம் என்றும் சொன்னார்கள். காவல் துறை அதிகாரி உள்ளே திரும்பப் போய்விட்டு வந்தார். இம்முறை அவருடன் வெளியே வந்தவர் கமல்ஹாசனின் மேனேஜர். வந்தவர் உடனே அய்யனாரிடம் இருந்து மனுவை வாங்கிக் கொண்டு உள்ளே மறைந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் வெளியே வந்து கமல்ஹாசன் மனுவைப் பெற்றுக் கொண்டதாக மட்டும் தெரிவித்தார். அவ்வளவுதான்.
சடங்கு முடிந்தது. பத்திரிக்கைக்காரர்களுக்குத் தான் ஏமாற்றம். கமல்ஹாசன் ஒரு போஸ் கூடக் கொடுக்காமல் போய்விட்டாரே என்று வருத்தம். போலீஸ் அதிகாரி அவ்வளவுதான் கிளம்புங்க என்கிற மாதிரி எல்லாரையும் கலைந்து போகச் சொல்ல, அய்யனார் அவர்கள் பத்திரிக்கைகளுக்கு ஒரு பேட்டி வழங்கினார். அதில் FICCI அதன் தொழில் முனைப்புகள். அதை எவ்வாறு ஈழப் படுகொலைகளை மறைக்க பயன்படுத்துகிறார்கள் என்று விளக்கினார். பத்திரிக்கையாளர்கள் படபடவென படம் எடுத்துக் கொண்டு அப்பாடா வேலை முடிந்தது எனக் கலைந்தார்கள்.

அன்றிரவு என்.டி.டிவி-ஹிண்டு சானலில் மே 17 இயக்கத்தின் ‘திரு’வை பேட்டி கண்டார்கள். இதில் முரணான விஷயம் என்னவென்றால் எந்த ஈழப்படுகொலைகளை ஹிண்டு மறைத்ததோ, அதே படுகொலைகளை முன்வைத்து போராடும் திருவை ஹிண்டு பேட்டி காண்கிறது இப்போது.

கமல் மறுநாளே ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தான் எப்போதுமே தமிழர்களின் நலனில் அக்கறையுள்ளவன் என்றும், இந்த விழா சம்பந்தமாக FICCIன் பொழுதுபோக்குப் பிரிவு உறுப்பினர்களை கலந்து கொள்ள வேண்டாம் என ஏற்கனவே கேட்டுக்கொண்டதாகவும், தானும் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். ஏதோ ஒரு ‘சிறிய குழுவினர்’ தன் வீட்டின் முன்வந்து மனுக் கொடுத்ததால் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் இது ஏற்கனவே தான் எடுத்திருந்த முடிவு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அவர் தனது FICCIன் பொழுதுபோக்குப் பிரிவின் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை. மாறாக FICCI ன் சிறு பிரிவுகள் சொல்வதால் இந்தியாவும்-இலங்கையும் இணைந்து நடத்தும் இந்த விழாவை FICCI நடத்தாமல் இருக்கப் போவதில்லை என்று விளக்கியிருந்தார். என்னே அவர் FICCI பற்று.. சாரி.. தமிழ்ப் பற்று என்று வியந்தேன். இந்தப் பதவியை அவர் துறப்பது அவருக்குப் பெரிய காரியமல்ல; பெரிய நஷ்டமுமல்ல. அப்படிப் பதவியை துறந்து ஒரு அறிக்கை விட்டிருந்தால் அது FICCI மட்டுமல்ல பக்சேக்களுக்குக் கூட, கொஞ்சம் அதிர்ச்சியளித்திருக்கும். கமல் என்கிற தமிழனின் பெருமையை உலகத் தமிழர்கள் நன்றியோடு பேசியிருப்பார்கள். அளிக்கப்பட்ட ஆஸ்கார் விருதினை வாங்காமல் செவ்விந்தியர்களின் மீதான ஒடுக்குமுறைகள் ஒழிய வேண்டும் என்று மேடையிலேயே கோரிக்கை விடுத்த மார்லன் பிராண்டோவா அவர். ‘உலக நாயகனாயிற்றே’!.

இந்தப் பக்கம் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு ‘அரட்டை அரங்கத்தை’ ஸ்கிப் செய்ய வேண்டியிருந்ததால் சென்னைத் தமிழர்களால் அந்தக் கூட்டத்திற்கு வரமுடியாமல் போனதற்கு என்ன காரணம் என்பதையும் யோசிப்போம். சரி விட்டுத் தள்ளுங்கள் சாதாரணத் தமிழர்கள். யோசிப்பதில் குறைபாடு உள்ளவர்கள். சரி அய்யா ! நன்கு யோசிக்கும் திறன் கொண்ட நெடுமாறன் அய்யா, வை.கோ, சீமான் மற்றும் இன்னும் மார்க்ஸ், திருமா போன்றவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் ?

இங்கே தான் தமிழனின் ஒற்றுமையில்லாத கேணத்தனம் வெளிப்படுகிறது. ‘நான்கு எருதுகள் ஒரு சிங்கம்’ கதையை இவர்களுக்கு எப்படிச் சொல்லிக் கொடுத்தாலும் ஏறாது போலிருக்கிறது. ஏற்கனவே சிங்களவர்கள் இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து நாறடித்துக் கொண்டிருப்பது நமக்குத் தெரியும். நெடுமாறன், வை.கோ. போன்றவர்கள் இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். மே 17 இயக்கத்தின் அன்றைய போராட்டத்தில் நெடுமாறன், வைகோ இன்னும் மற்றவர்களின் ஆதரவாளர்கள் வந்திருந்தால் இன்னும் கூட்டம் கூடியிருக்கும். கமலே நேரடியாக வந்து மனுவை வாங்கியிருப்பார். ஒருவேளை பதவியை ராஜினாமாவும் செய்திருப்பார். நெடுமாறன், வைகோ, தா. பாண்டியன், இடது சாரிகள் போன்றவர்கள் நேரடியாக பங்கு பெற்றிருக்க வேண்டியதில்லை. ஆதரித்துப் பேசவேண்டியது கூட இல்லை. ஆனால் இது போல சிங்கள இனவெறிக்கு எதிராக போராடும் சிறு குழுக்கள் தங்களுடன் வந்து நின்றால் தான் பார்ப்போம் என்று கண்டுக்காமல் இருப்பது தவறானதாகும்.

இதேபோல முத்துக் குமரனின் நினைவு நாள்ப் பொதுக்கூட்டத்தில் வைகோவும், நெடுமாறனும் தவிர மற்றவர்களைக் காணவில்லை. திருமாவும், ராமதாஸும் துரோகிகள் கூடாரத்தில் இருப்பதால் கப்சிப். தா.பாண்டியனைக் காணவில்லை. ஆனாலும் வைகோ நிதானமாக துரோகிகளை நேருக்கு நேர் திட்டாமல் மறைமுகமாகச் சாடினார். எல்லோரும் ஒரே விஷயத்துக்காகப் போராடுபவர்கள். போராடும் விஷயங்களில் மாற்றுக் கருத்துகள் இருப்பது குற்றமல்ல. அதற்காக ஒரு இயக்கத்தினரின் போராட்டத்தை மறைமுகமாகவேனும் ஆதரிக்காமல் இருப்பது தமிழர்களின் ஒற்றுமையின்மையை உண்மை தான் என்று நிரூபிப்பது போலாகும். வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் கண்டுக்காமல் இருப்பது போல் இருந்தாலும் நெடுமாறனின் 'தென்செய்தி' மற்றும் வைகோவின் 'சங்கொலியில்' மே 17 சம்பந்தமான செய்திகளை வெளியிட்டிருக்க வேண்டும். யாரும் யாரிடமும் கேட்டுச் செய்யவேண்டியதல்ல இந்த உதவி. ஹிண்டுவைத் தவிர தமிழ்த் தொலைக் காட்சிகளில் திருமாவின் தமிழன் தொலைக் காட்சியில் மட்டுமே லேசாக இதைக் காட்டினார்கள். திருமா தமிழருக்குச் செய்த துரோகங்களின் முன்பு இது சிறிய விஷயம். என்றாலும் பரவாயில்லை. இது தான் ஒற்றுமை உணர்வு. அரசியல் எண்ணத்தில் பிளவுபட்டிருக்கலாம். எதிரியாகக் கூட மாறியிருக்கலாம். தவறல்ல. ஆனால் அதே லட்சியத்துக்காக போராடும் சக தோழனை, அவன் கேட்காவிட்டாலும் அவனை ஆதரிக்கவேண்டும் என்பது தானே இன உணர்வு.

தமிழ்த் தலைவர்கள் சிந்திப்பார்களா ?

No comments:

Post a Comment

Please don't write junk comments.. bad words..hate msgs..marketing messages. thank you.