Wednesday, May 5, 2010

மே 17ன் சவக்குழிகள்.

மே 17ன் சவக்குழிகள்

16 மே 2009.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே விடுதலைப் புலிகளுடனான போரில் சிங்கள அரசு வெற்றியடைந்ததாக அறிவிக்கிறார். கொழும்புவிலும் மற்ற சிங்களப் பகுதிகளிலும் மக்கள் வெடிவெடித்து சந்தோஷமாகக் கொண்டாடுகின்றனர்.
17 மே 2009.
விடுதலைப் புலிகள் போரில் தங்களது தோல்வியை அறிவிக்கின்றனர். பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மன் போன்றோர் பற்றி தகவல்கள் இல்லை.
18 மே 2009.
நந்திக் கடல் பகுதியில் பிரபாகரனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக காண்பிக்கப்படுகிறது. மே 17ம் தேதி நடந்த சண்டையில் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கருணா போன்றவர்கள் சடலத்தைப் பார்த்து உறுதிப் படுத்துகிறார்கள். வினோதமாக துப்பாக்கி அல்லது குண்டுக் காயங்கள் இல்லாமல் நடு நெற்றியில் கோடரியால் பிளக்கப்பட்டு இறந்திருக்கிறார் பிரபாகரன். அவர் எவ்வாறு இறந்தார் / கொல்லப்பட்டார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.

13 மே 2009.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ‘குடிமக்களின் மீது நடத்தப்படும் கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களை நிறுத்தும்படி” அறைகூவல் விடுக்கிறார்.
29 ஏப்ரல் 2009.
சிங்கள ராணுவத்திடம் சரணடைந்து கைது செய்யப்பட்ட விடுதலைப்புலித் தலைவர்களான தயா மாஸ்டரும், ஜார்ஜூம், புலிகள் குழந்தைகளை வலுக்கட்டாயமாக ராணுவத்தில் சேர்த்ததாகவும், அவர்களது வலையத்திலிருந்து தப்ப முயன்றவரகளைச் சுட்டதாகவும் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள்.
27 ஏப்ரல் 2009.
இலங்கையில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் ஆரம்பித்து, மதியம் 12 மணிக்குள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வந்து இலங்கைத் தமிழர் வாழ்வை இரவு 10 மணிக்குள் தான் புணரமைத்து விடுவதாகக் கொடுத்த வாக்குறுதியின் பேரில் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.
3 பிப்ரவரி 2009.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நார்வே போன்ற நாடுகள் கூட்டாகச் சேர்ந்து விடுதலைப் புலிகளை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும்படி ‘வேண்டுகோள்’ விடுத்தன.
2 ஜனவரி 2008.
இலங்கை அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி விடுதலைப் புலிகளுடனான நான்காம் ஈழப் போரை ஆரம்பித்தது.
ஜனவரி 2006 – டிசம்பர் 2008.
இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் ‘அடையாளந்தெரியாத’ பதினொரு கப்பல்கள் அவை கொண்டு வந்திருந்த ஆயுதங்களுடன் வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில் கடலில் மூழ்கடிக்கப்படுகின்றன. சர்வதேச எல்லைப் பகுதியில் அனுமதியின்றி வந்தது முதற்கொண்டு பல்வேறு காரணங்கள் காட்டப்பட்டு அமெரிக்க கடற்படை, இலங்கை கடற்படை மற்றும் இந்திய கடற்படையினர் இந்த மூழ்கடிப்பைச் செய்தனர். இது விடுதலைப் புலிகளுக்கு வந்த ஆயுதமா என்பது ஒரு விடை தெரிந்த கேள்வி. இது சீனாவிலிருந்து வடகொரியா வழியாக புலிகளுக்காக அனுப்பப்பட்டதா என்பது விடை புரியாத கேள்வி.

மேற்சொல்லப்பட்ட காலக் குறிப்பு ஒரு பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'பயங்கரவாதி' திரைப்படத்தின் நிகழ்வுகளின் வரிசைக்கிரமமான குறிப்புகளாகும். இத்திரைப்படம் தமிழ்நாட்டில் ஆறுகோடித் தமிழர்கள் முன்வரிசையில் அமர்ந்து கைதட்டி ரசிக்க உலகின் 500 கோடிப் பேர் பார்த்து மகிழ்ந்த படம். இப்படத்தில் நிஜமாகவே 37 ஆயிரம் பேர் இறந்து போனார்கள். பல்லாயிரம் பேர் வன்புணரப்பட்டார்கள். பல்லாயிரம் பேர் காணாமல் போனார்கள். மக்களின் ரசனையை ஊக்குவிக்க பான் கி மூன், பராக் ஒபாமா, நம்பியார், பிரணாப் முகர்ஜி, எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன் (மலையாள நடிகர்கள்), சோனியா, மன்மோகன் சிங், தமிழினத் தலைவர் டாக்டர். கலைஞர் கருணாநிதி போன்ற பல நட்சத்திரங்கள் வந்து மக்களின் ரசனை தொய்வின்றி செல்லும்படி பார்த்துக் கொண்டனர்.

வரலாற்றின் கோர நிகழ்வுகளில் ஒன்றான இறுதி வன்னிப் போர் நடந்து ஓராண்டாகியும் வரலாறு எனக்கென்ன என்று ‘தேமே’வென போய்க்கொண்டிருக்கிறது. வரலாறு ஒரு குருட்டுப் பைத்தியம். அது எங்கு போகும், என்ன ஆகும் என்று யாருக்கும் தெரியாது. வரலாற்றை நாம் படிப்பது ஒரு பிண ஆராய்ச்சி (Postmortem) போன்றதே. நாம் பிணத்தை உயிர்ப்பிக்க இயலாது. ஆனால் எதிர்காலத்தைப் பற்றி புரிந்துகொள்ள கொஞ்சநஞ்சம் இவ்வாராய்ச்சி உதவி செய்கிறது. இங்கே கொஞ்சம் பிண ஆராய்ச்சி செய்வோம்.

உலகில் மார்க்சியம் வீழ்ந்து பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் ‘விடுதலை இயக்கங்கள்’ எல்லாம் ‘பயங்கரவாத இயக்கங்களாக’ ஆக்கப்பட்ட தன்மை நிகழ்ந்திருக்கிறது. இப்போதைய காலத்தில் விடுதலை இயக்கம் என்ற ஒன்று இருப்பது சாத்தியமற்றது. அப்படி இயக்கம் இருந்தால் அது போலியாக காந்திய வழியில் கொடிபிடித்து பார்லிமெண்ட்டின் வாசலில் உண்ணாவிரதம் வரை இருக்க ‘அனுமதி’ எப்போதும் இருக்கிறது. ஏற்கனவே இவ்வியக்கத்துக்குள் ஆயிரம் பிரிவுகள் இருக்கும். எனவே எவ்வளவு தீவிரமான போராட்டமும் 15 நாட்களைத் தாண்டுவது கடினம் (அவரவர் வேலையை விட்டுவிட்டு 15 நாட்கள் எப்படி தொடர்ந்து வந்து கொடிபிடித்து உட்காருவதாம் ?). உதாரணத்திற்கு சமீபத்தில் இடதுசாரிகள் தலைமையில் எதிர்க்கட்சிகள் நடத்திய விலைவாசி உயர்வுக்கு எதிரான பந்த்தை பார்த்துக்கொள்ளுங்கள். இந்த பந்த்தின் விளைவாக எப்படி விலைவாசி சரிபாதியாகக் குறைந்தது என்பது நமக்குத் தெரியும். இதில் மேற்கொண்டு எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து என்ன செய்யப் போகிறார்கள் என்று நாடே 'ஆர்வமாய்' காத்திருக்க, நடுவில் டெலிபோனை ஒட்டுக்கேட்ட குழப்பம், லலித் மோடியின் நாலாயிரம் கோடி என்று வந்து எல்லோர் கவனமும் திசை திரும்பி விட்டது.

பிரபாகரன் செய்த தவறால் இன்று தமிழரின் சுயநிர்ணய உரிமை கேள்விக்குள்ளாகிப் போனது என்று புலம்புவர்கள் மறக்காமல் சேர்த்துச் சொல்வது ‘இனி தீவிரவாதம் சாத்தியமில்லை’ என்பதும். ஆம் சாத்தியமில்லை. ஏனென்றால் பிரபாகரன் போல் ஒரு மன உறுதிமிக்க, பிடிவாதமுள்ள, ஈவிரக்கமற்ற தலைமை இனித் தோன்றுவது கடினம். சாத்தியமும் இல்லை. டி.வி., சினிமா, கல்வியறிவு, கல்வியறிவு தந்த சுயநல வெளிச்சம், தனிமனிதச் சுதந்திரங்கள், இன்பங்கள் என்று எல்லோரும் தமக்குள் தாமே புணர்ந்து கொள்ளும் மனிதர்களாக மாறிய பின் ‘பேச்சுவார்த்தை’ யில் பைசா கோபுரத்தையே நிமிர்த்த வைக்கும் சாத்தியப்பாடுகளே அதிகம் யோசிக்கப்படும். இந்த யோசனைகளில் ஆயிரத்தில் ஒன்று செயல்படுத்தப்படும். அந்த ஒன்றும் எளிதாக பேச்சில் மயக்கப்படும். இன்னும் ஆழமாகப் பார்த்தால் யாரை எதிர்த்து அவ்விஷயம் பேசப்படுகிறதோ, அது அவராலேயே உண்டாக்கப்பட்டதாய் இரட்டை வேடம் கொண்டிருக்கும். ஆனால் புரட்சி பேச இயலாத, கல்வியறிவில்லாத ஆப்கானிஸ்தானில் 15 வயது பையன் மனித வெடிகுண்டாக வெடித்துச் சிதறுவான். புலம் பெயர்ந்த, படித்த, வாழும் வசதி படைத்த, தமிழர்கள் நாடு கடந்த தமிழீழ அரசை கட்டமைப்பார்கள். முதலாளித்துவத்தை எதிர்க்க முதலாளிகளிடமே (முக்கியமாக அமெரிக்காவிடம்) போய் அண்டி நிற்பார்கள். இதை என்னவென்று நினைப்பது ?

பின் என்ன மார்க்ஸிஸ்ட்டுகளிடம் போய் நிற்கவா முடியும்? அவர்கள் மாவோயிஸ்டுகள் முதல் புலிகள் வரை எல்லாரையும் இடது கையால் கழுவித் தள்ளுவார்கள். ‘இடது’சாரிகள் இல்லையா. முதலாளித்துவம் தனக்கு பல நிலைகளிலும் இயங்கு தளங்கள் வைத்திருக்கிறது. ஈராக்கில், ஆப்கானிஸ்தானில் வைக்கப்பட்ட பொம்மை அரசுகள் முதல், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்கிற மனிதநேய அமைப்பு வரையிலான பல்வேறு விதமான அவதாரங்களை வைத்திருக்கிறது. இடதுசாரிகளுக்கு ஒரே ஒரு உருவம் தான். தொழிலாளியாகவும், இடதுசாரியாகவும் இருந்தால் மட்டுமே அவர் 'சுத்த' இடதுசாரியாகக் கொள்ளப்படுவார். வேறெந்த உருவத்தையும் அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. தமிழ்த் தேசியம் பேசி ஏகாதிபத்தியத்தை எதிர்த்தாலோ, விவசாயிகளுக்கு நிலம் கொடுக்க ரன்பீர் சேனாக்களுக்கு எதிராக ஆயுதம் எடுத்தாலோ அவர் இடதுசாரிகளைப் பொறுத்தவரையும் ‘பயங்கரவாதியே’. தமிழ்நாட்டுத் தமிழன் முத்துக்குமார் ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக சாவதைக் காணச் சகிக்காமல் நம் மடத்தமிழர்களின் சொரணையைத் தட்டியெழுப்ப தீக்குளித்தான். அதற்கு ஒரு அனுதாப அறிக்கை கூட விடவில்லை நம் தமிழ்நாட்டு இடதுசாரித் தோழர்கள். முத்துக்குமார் அவர்களுக்கு ஏனோ எதிரியாகிப் போனான். என் நெருங்கிய நண்பர் தீவிர இடதுசாரித் தொழிற்சங்கவாதி. அவரிடம் எவ்வளவோ முறை இதுபற்றிக் கேட்டுப் பார்த்தும், அவரின் ஒரே பதில் ‘முத்துக்குமாரின் போராட்ட முறை இடதுசாரிகளுக்கு உடன்பாடானது அல்ல’. சேகுவாராவின் போராட்ட முறை, ஸ்டாலினின் செயல் முறை, பகத்சிங்கின் வீரம், வாஞ்சி நாதனின் தியாகம் எல்லாம் இடதுசாரிகளுக்கு உடன்பாடாய் இருக்கும் போது முத்துக்குமார் மட்டும் எப்படி உடன்பாடில்லை ? ஒரு வேளை அவர்களையெல்லாம் 50 ஆண்டுகள் கழித்து அங்கீகரித்தது போல் முத்துக்குமாருக்கு அஞ்சலி செலுத்தவே 50 ஆண்டுகள் ஆகும் போலிருக்கிறது.

இனி, என்ன நடக்கும்? இலங்கையில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தங்கள் வலைகளை விரித்துள்ளன. சீனா சிங்களர்களின் நண்பனாகவும், அமெரிக்கா அதில் குளறுபடி செய்ய பொன்சேகாவை மட்டும் தனது நண்பனாகவும், இந்தியா சிங்களர்கள் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் அவர்களின் நண்பனாகவும் அதே சமயம் தமிழர்களின் எதிரியாகவும் அங்கே தற்போது செயல்படுகின்றன. 2006 ஆண்டில் இந்தியாவுடன் இலங்கைக்கு சம்பூரில் அனல்மின் நிலையம் கட்டித்தருவதற்கு ஒப்பந்தம் கையெழுத்திட்ட கையோடு சிங்கள அரசு சம்பூரில் வாழ்ந்த தமிழர்களை குண்டுபோட்டு அழித்து விரட்டியடித்தது. அவ்விடத்தில் இந்திய முதலாளிகள் அனல்மின் நிலையம் கட்டி வருகிறார்கள். இன்னும் 20 ஆண்டுகளில் இலங்கையில் தமிழர்கள் தங்களது இருப்பிடம், அடையாளங்கள், வாழ்க்கை அனைத்தையும் தொலைத்த சிறுபான்மையினமாகச் சிதறுண்டு போவார்கள். யாழ்ப்பாணம் கூட தன் பெயரை சிங்களத்தில் மாற்றிக் கொண்டுள்ள நிலைமை இப்போதே வந்திருக்கிறது. இனி வரும் நாட்களில் தமிழர் பகுதி என்ற ஒன்று பெயருக்குக்கூட இருக்குமா என்பது கேள்விக்குறியாகும். ஈழத்தமிழர்கள் சிங்கக் கூட்டங்களுக்கு மத்தியில் விடப்பட்ட வெள்ளாடுகள் போல் சுயம் இழந்து சிங்களர்கள் நடுவே பயந்து பயந்து வாழும் நிலை ஏற்படும். 20 ஆண்டுகளில் இலங்கை முழுக்க சிங்கள அரசாக விளங்கித் திகழும். அப்போது அது இந்தியாவுடனான தனது 2000 ஆண்டுகாலப் பகையுணர்வை வெளிப்படையாகக் காட்டும். அன்று இந்திய முதலாளிகள் இலங்கையில் அதுவரை தாங்கள் செய்த முதலீடுகளில் பெரும் நஷ்டத்தை அடைவார்கள். நைந்து போன தமிழினத்தை அப்போது அவர்கள் தங்கள் அரசியல் பண்ணுவதற்காகத் தேடுவார்கள். ஆனால் தமிழர்களை ஒன்றாகத் திரட்ட முடியாத நிலையில் அவர்களின் எண்ணிக்கை அன்று அருகிப் போயிருக்கும். இவை அனைத்தையும் உட்கார்ந்து சாட்சியாக டி.வி.யில் வரும் மெட்டி ஒலி சீரியலைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருப்பார்கள் தமிழ்நாட்டில் இருக்கும் நம் தமிழர்கள். தமிழர்களின் ஒற்றுமை உணர்வு லட்சணம் சரித்திரம் படைத்ததல்லவா.

சரி. என்னதான் செய்வது ? தமிழர்களால் இனி ஒன்றும் செய்ய இயலாது என்பது தான் நிஜம். புலம் பெயர்த் தமிழர்கள் தற்போது பெயரளவில் மட்டுமே தமிழர்கள். இன்னும் பத்தாண்டுகளுக்குப் பின் வரும் சந்ததிகள் அமெரிக்க, கனடிய, ஆஸ்திரேலிய உச்சரிப்புடன் நான் இலங்கையில் பிறந்தேன் என்று வேண்டுமானால் சொல்லக் கூடும். அதைத் தாண்டி அவர்களுக்கும் தமிழீழத்துக்குமான தொடர்பு அறுபடப் போவது நிச்சயம். ஒருவேளை... ஒருவேளை, புலம் பெயர்த் தமிழர்கள் பிடிவாதமாய் தங்கள் தமிழ் அடையாளங்களை தொலைக்காமல் வைத்திருக்க வலிந்து முயற்சி எடுத்தால், ஒருவேளை, இலங்கையில் சி்ங்கள அரசும், இந்திய அரசும் செய்யும் தமிழர் இன அடையாள அழிப்பு வேலைகளை எதிர்க்க உள்ளூரில் இருந்து யாராவது உறுதியுடன் நின்றால்(இது மீண்டும் ஒரு இனப்போராட்டமாகத்தான் வரும்), ஒருவேளை, அப்படி நிற்பவருக்கு தமிழர் கூட்டமைப்பு முதல் டக்ளஸ் வரை சண்டையில்லாமல் பெரும்பாலான தமிழர் அமைப்புகளும் உடன் நின்று ஆதரவு தந்தால், ஒருவேளை, இந்திய எல்லைப் பகுதி கன்னியாகுமரியோடு முடிந்துவிட்டது என்று கோடு போட்டு விட்டதால் வேறு நாடான இலங்கையில் வாழும் தமிழர்கள் ‘யாரோ எவரோ’ என்று தமிழ்நாட்டில் வாழும் 6 கோடித் தமிழர்களும் நினைக்காமல், ஐ.பி.எல் மேட்ச் இலங்கைப் போரைவிட முக்கியம் என்று நினைக்காமல் இருந்தால், ஒருவேளை..ஒருவேளை, ஈழத் தமிழர் மீண்டும் தளிர்த்தெழ வாய்ப்பு வரலாம்.

“வரலாறே எள்ளி நகையாடாதே. உனக்கும் எனக்கும் இருக்கும் போட்டியில் தமிழர்கள் என்னை ஜெயிக்கவைப்பார்கள் என்று நான் (இன்னும்)நம்புகிறேன். சிங்களர்கள் இப்போது ஜெயித்திருக்கிறார்கள்.. இனிமேல் தமிழர்கள் கதையை அவர்கள் சீக்கிரம் முடிப்பார்கள் என்று நீ கெக்கலிக்கிறாய். பார்க்கலாம். ஜெயிப்பது நீயா ? இல்லை நானா என்று?”

நாடற்றுப் போய் அனாதையாய் வாழும் நிலையை உணர்ந்ததுண்டா நீங்கள்... உணருங்கள்.. 20 லட்சம் பேருக்கு நிகழ்ந்தது ஒரு நாள் 6 கோடிப் பேருக்கும் நிகழாது என்று எந்த வரலாறும் பத்திரம் எழுதிக் கொடுக்கவில்லை... படியுங்கள் பின் வரும் வலைப் பூவை..
http://tamilnathy.blogspot.com/2010/05/blog-post_9826.html

ஒரு நாள்..
நாங்கள் உயிர் வாழாதிருந்தாலும்..
நீங்கள் உயிர் வாழப்போவதில்லை..
உத்திரவாதம் இது.

இசங்களின் எச்சங்களும்...
அரசுகளின் தொழில்நுட்ப கூச்சல்களும்..
கைக்கூலிக் கொலைகார வீரர்களும்..
அம்பானி, கும்பானிகளும்..
ஐபிஎல் கோடிகளும் தான் யதார்த்தம்.
பக்சேவோ பரந்தாமன்..
மன்மோகனோ, கலைஞனோ எட்டப்பன்.
இனி மார்க்ஸூம், எங்கெல்ஸூம் கூட
வழிசொல்ல வழியில்லை.. பாவம்
அவர்களே தொலைக்கப்பட்டுவிட்டனர்..
பணம், பலம்..பலமே வாழ்வு..
இனி பார்க்கலாம் நீயா..நானா.

எனக்கு உன் இனத்தின் மீது வெறுப்பில்லை தான்.
அதனாலே தான் உன்னைக் கொல்லும் போது..
நான் சிரிக்கப் போவதுமில்லை..
அழப்போவதுமில்லை.

No comments: